வியாழன், 29 நவம்பர், 2012

உள் பெட்டியிலிருந்து 11 2012


இப்போ என்ன சொல்ல வரீங்க....?

மூளையிருப்பவர்களுக்கு நினைவில் வைத்துக் கொள்வது எளிதாயிருக்கிறது.
இதயமிருப்பவர்களுக்கு மறத்தல் கடினமாயிருக்கிறது!

*********************************

பிரிந்து போன உறவுகளின், நட்புகளின் விதியை ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் திரும்ப நம் வாழ்வில் எப்போது பிரவேசிப்பார்கள் என்ற ஏக்கம் மனதில் எப்போதும்!
 
**********************************

தமிழ்ல சரியா வரலைதான்....


கடினமானவர்கள் இல்லை, வித்தியாசமாகத்தான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால் நிறைய நட்புகளை இழக்க மாட்டோம்! (Difficult - Different)
 
**********************************

நமது பிரிவு ஒருவர் வாழ்வில் எந்த இழப்பையும் / மாற்றத்தையும் ஏற்படுத்தாத பொழுதில் நமது இருப்பு அவர்கள் வாழ்வில் எந்த அர்த்தத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை!

**********************************
 
காலையில் ஆரம்பித்து மாலையில் முடிவதல்ல காதல். வேண்டாதபோது வரும். வேண்டும்போது விலகி விடும்!

**********************************


ரிப்பீட்டோ....

பெரிய விஷயங்களைப் பேசத் தொடங்குவதை விட சிறிய விஷயங்களைப் புரிந்து கொள்ளத் தொடங்குவது நல்லது!

***********************************
 
கவலையற்றவர்களாகவும் ஜோக்கடிப்பவர்களாகவும் நாம் இருப்பதன் மிகப் பெரிய மைனஸ் நாம் நிஜமாக ஒரு துன்பத்தில் இருக்கும்போது கூட யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, கவலைப் படுவதில்லை!
 
************************************

குறைந்தபட்சத் தேவைகள்; அதிகபட்ச விட்டுக் கொடுத்தல்கள். சந்தோஷ வாழ்வின் 2 படிகள்.
 
************************************

ஒருவன் லட்சம் லட்சியங்களை விரும்புவதை விட, ஒரு லட்சியத்தை லட்சம் வழிகளில் முயற்சிப்பது சிறந்ததாம்.

*************************************

தத்துபித்துவம்


டேஸ்ட் பண்ணினாலும் கரையும், வேஸ்ட் பண்ணினாலும் கரையும் ஐஸ்க்ரீம் மாதிரிதாங்க வாழ்க்கையும்! 


**************************************

ஜோக் 1

மிஸ்டர் X : மும்பை டு லண்டன்
,  விமானத்தில் பயண நேரம் எவ்வளவு மேடம்?

ரிசப்ஷன் : ஒன செகண்ட் சார்....


மிஸ்டர் X  : ஐயோடா.... டெக்னாலஜி எவ்வளவு முன்னேறி விட்டது? தேங்க்ஸ் மேடம்!****************************************

நம் வாழ்வில் சில உறவுகள் ஆசீர்வாதங்கள். சில பாடங்கள்!


*****************************************

சரிதானா?


ஒருவருக்கு அளவுக்கதிகமான மதிப்பை என் வாழ்வில் நான் தரும்போது அவர்கள் வாழ்வில் எனக்கான முக்கியத்துவத்தை இழக்கிறேன்.

 
*******************************************

மாற்றியும் சொல்லலாம்!


அன்பின் விசாலம் அறிவின் விலாசம்!


*******************************************

ஜோக் 2

சி பி ஐ இன்டர்வியூவுக்குச் சென்றார் மிஸ்டர் X .


இண்டர்வியூ நடத்துபவர் : காந்தியைக் கொன்றது யார்?


மிஸ்டர் X : வேலை கொடுத்துள்ளதற்கு நன்றி. நான் என் வேலையைத் தொடங்குகிறேன்!

 

*********************************************

என்னா தத்துவம்...?!


தன்னைத் துளையிடும் மரங்கொத்திக்கும் இடமும் நிழலும் தரும் மரம் போல மனிதனும் தனக்குத் தொல்லை தருபவர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். (ஸ்... அப்பாடா...)


***********************************************
வயதான விறகுதான் எரிக்க எளிது.

பழைய புத்தகங்கள்தான் படிக்க சுவாரஸ்யம்.
பழைய அரிசிதான் சாப்பிடச் சுவை. எனவே வயதாவதைக் குறித்துக் கவலைப் படத் தேவையில்லையாம்!


************************************************  
ஜோக் 3


ஹோட்டலில் மிஸ்டர் X : நோ... நான் இந்த ரூம்ல தங்க மாட்டேன். என் பணத்தைத் திருப்பிக் குடுங்க... எவ்வளவு சின்ன ரூம்? நாய் ரூம் மாதிரி இருக்கு.....!

வெயிட்டர் : யோவ்.......ரூமுக்குப் போய்யா! இது லிஃப்ட்!*************************************************
                      

புதன், 28 நவம்பர், 2012

'நல்ல' பாம்பு!

               
உங்கள் வீட்டுக்கு பாம்பு வந்திருக்கோ.... எங்கள் வீட்டுக்கு இன்று நாகராஜன் திக்(திக்) விஜயம். வெளியில் வேலையாய் இருந்த எனக்கு வீட்டிலிருந்து பதற்ற அழைப்பு வந்து ஓடினேன்.
   
எங்கள் ஏரியாவில் பாம்பு சகஜம். தெருவில். வீட்டுக்குள் அல்ல!

                                              
நண்பர் நாகராஜன் மோட்டார் ரூமுக்குள் தஞ்சம் அல்லது குடி புகுந்திருந்தார். (ஆசை, தோசை, வீட்டுக்குளேயே வந்திருக்கும் என்று பார்த்தீர்களா!)
                   
பாம்பை வீதில பார்த்திருக்கேன், புதர்ல பார்த்திருக்கேன், ஏன்,புத்துல கூடப் பார்த்திருக்கேன்... ஆனா வீட்டுக்குள்ளயே வந்து (இதுவரை சிங்கம் சூர்யா ஸ்டைலில் படிக்கவும்) இப்போதான் பார்க்கறேன்!


2, 3 பேர் கூடி நின்று கையை உதறிக் கொண்டிருந்தால் போதாதா? மெல்ல மெல்ல ஆர்வக் கூட்டம் அதிகமானது. அது வெளியில் வர இருக்கும் ஒரே வழியையும் மக்கள் கூட்டம் அடைத்து நிற்பது ஆபத்து என்பது புரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. வழக்கம் போல மோட்டார் ரூமுக்குள் ஏகப்பட்ட அடைசல்கள்.


ஆளாளுக்கு ஒரு ஐடியா எடுத்து விட்டுக் கொண்டிருந்தார்கள். இளங்கன்றுகள் தடிகளையும் குச்சிகளையும், ஸ்டம்புகளையும் உள்ள விட்டு ஆட்டியபடி செல்போனிலும் படமெடுக்க வசதியாக ஒரு கையில் ஃபோனை ஒரு கையிலும் வைத்துக் கொண்டு சத்தப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.
                                                       
ஒருவர் முனால் இருந்த பழைய சிமென்ட் மூட்டை, வெயிட்டான இரும்புத் தட்டு (எதற்கு இருந்தது என்றே தெரியாமல் இருந்ததை) எல்லாவற்றையும் வேகமாக எடுத்து வெளியில் எறிந்தார். "ஏய்...பார்த்து.. எங்கள் மேல் எறியறியே" என்ற கூச்சலும் இன்னும் என்னென்னமோ கமெண்ட்களுமாக அந்த இடமே சந்தை போல இருந்தது. இன்னொருவர் தைரியமாக அந்தக் குறுகலான இடத்துக்குள் நுழைந்து பார்த்து விட்டு "உள்ளே இல்லை சார்" என்று வெளியில் வந்தார்.

"அட, உள்ள நான் பார்த்தேன்... என்ன இல்லைங்கறீங்க?" என்று என் மனைவி சண்டைக்குப் போக, "hit ஸ்ப்ரே இருக்கிறதா" என்று கேட்டேன்.


இல்லை. பக்கத்துக்கடையில் ஓடிப் போய்க் கேட்டால் அங்கும் இல்லை.


சொல்ல மறந்து விட்டேனே... பாம்பார் யு டர்ன் அடித்து வீட்டுக்குள் வராமலிருக்க கடையிலிருந்து ஒரு கிலோ கல் உப்பு, மஞ்சள் பொடி வாங்கி வந்து வீட்டுக்குள் வரும் படி முழுதும் தூவி வைத்தோம்.


செக்யூரிட்டி மெல்ல, எப்போது ஜகா வாங்கினார் என்பது தெரியாமல் காணாமல் போயிருந்தார்! மற்றவர்களை அமைதிப் படுத்தி சற்றுத் தள்ளி இருக்கச் செய்தேன். சாம்பிராணி கப்  3 எடுத்து மூன்றையும் கொளுத்தி மோட்டார் ரூமுக்குள் வொயர் இல்லாத இடமாகப் பார்த்து வெவ்வேறு இடங்களில் போட்டேன். கொஞ்சம் கொஞ்சமாகப் புகை பரவ, இரண்டு மூன்று முறை தலையை மட்டும் வெளியே நீட்டிய பாம்பார், ஆட்களைக் கண்டு மிரண்டு மறுபடி உள்ளே ஓடுவதாக இருக்க, எல்லோரையும் கொஞ்சம் தொலைவுக்குப் போகச் செய்து அமைதியான (கையில் வீடியோ எடுக்க வசதியாக செல்ஃபோனுடன் மாடிப் படி மறைவில்) இன்னுமொரு 15 நிமிடக் காத்திருப்புக்குப் பின் வெளியில் வந்து சுவரோரமாகவே விரைந்து ஓடி மறைந்தார்!
 

'உள்ளே பாம்பே இல்லை' என்றவரை அழைத்து எடுத்த வீடியோவைக் காட்டியபோது பூட்சைக் கழற்றி விட்டு பார்க்க வந்தது சிரிப்பு.
               
'சாரைப்பாம்பைக் கண்டால் வளைந்து வளைந்து ஓடு, நல்ல பாம்பைக் கண்டால் நேராக ஓடு என்பார்கள். சாரைப்பாம்பு ரொம்ப நெளியாமல் ஓரளவு  நேராகவே விரைந்து செல்லும், நல்ல பாம்பு நெளிந்து நெளிந்துதான் செல்லும் சாம்பிராணி வாசனை அடித்தால் ஒரு நாகம், புழுங்கல் வாசனை அடித்தால் ஒரு நாகம் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியும்' என்றெல்லாம் தகவல் தந்தார் அவர்.

             
இடையிலேயே நெட் திறந்து பாம்பைப் பிடிக்க யாரைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்றெல்லாம் ஆராய்ந்தோம். பாம்பு இப்போது வெளியில் போனாலும் அது இந்த இடத்தைப் பார்த்து விட்டால் அப்புறம் அதே இடத்துக்கு வந்து கொண்டேயிருக்கும் என்று ஒருவர் அள்ளி விட்டார்!

             
ஆக, திக்விஜய நாகராஜா நல்ல பாம்பாகத்தான் இருக்க வேண்டும். இதுவரை யாரையும் கடிக்கவில்லையே! அப்புறம் ரொம்ப நேரம் இந்தச் சம்பவம் பற்றிப் பரபரப்பாகப் பேசிக் கொண்டே இருந்தார்கள். சொல்வதற்கு எல்லோரிடமும் ஒரு பாம்புக் கதை இருந்தது!


               

செவ்வாய், 27 நவம்பர், 2012

B. ஜெயச்சந்திரன்ஜெயச்சந்திரன்... இனிமையான குரல்வளம் கொண்டவர். இனிமையான, மென்மையான பல பாடல்கள் பாடியிருக்கிறார். சிலருக்கு இவரது குரலுக்கும் கே ஜே யேசுதாஸ் குரலுக்கும் வித்தியாசம் தெரியாது! அவரது குரலில் அமைந்த, எனக்குப்  பிடித்த சில பாடல்களிலிருந்து நீங்களும் ரசிக்க ஒரு பகிர்வு.
   
1) "தென்றல் ஒரு தாளம் சொன்னது..."

"ஏரிக்காற்றே.... ஏரிக்காற்றே நில்லடி...மங்கை எண்ணம் எங்கே சொல்லடி...."2) "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி..."

வைதேகிக் காத்திருந்தாள் படத்தில் இவருக்கு 3 பாடல்கள். மூன்றுமே முத்துக்கள். மதுரை சினிப்பிரியா தியேட்டரில் படம் பார்க்கும்போது 'ராஜாத்தி உன்னை' பாடலுக்கு தினம் ஒவ்வொரு ஷோவுக்கும் ஒன்ஸ்மோர் கேட்பார்கள். பெரும்பாலும் மறுபடியும் போடவும் போடுவார்கள்.

"ஆலையிட்ட செங்கரும்பா ஆட்டுகிறே என் மனசை... யாரை விட்டு தூது சொல்லி நானறிவேன் உன் மனசை..."3) "வெள்ளி நிலாவினிலே..."

"அடிக்கும்போது மிருகமடா... அணைக்கும்போது மனிதனடா... தெய்வம் நீயடா.. மனத் தேரிலேறி வா ராஜா...."4) "காதல் மயக்கம்..."

வைரமுத்து வரிகளுக்காகவே பாடலை ரசிக்கலாம். 'நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை' 'நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை...'

"பாதத்தில் வீழ்ந்த பௌர்ணமியே மார்பினில் தீண்டும் மார்கழியே"5) "பொன்னென்ன பூவென்ன கண்ணே.."6) "பாடி வா தென்றலே..."7) "மாஞ்சோலைக் கிளிதானோ..."
8) "தேவன் தந்த வீணை...."

"மேகம் பாடும் பாடல் கேட்டேன்...  நானும் பாடிப் பார்க்கிறேன்"9) "ராஜா மகள்..."

"பன்னீரையும் வெந்நீரையும் உன்னோடுதான் பார்க்கிறேன்..."


 

திங்கள், 26 நவம்பர், 2012

சங்கீத ஞானமு ...


எங்கள் ப்ளாக் இடப் பக்க பத்தியில், 

<<< ---------------- (இது சுட்டி - மாலை நாலரை மணிக்கு மேலே இங்கு சொடுக்குங்கள்.) 

நாங்கள் கொடுத்திருக்கின்ற சுட்டி மூலமாக, கடந்த இரண்டு நாட்களாக, எவ்வளவு பேர் கலாக்ஷேத்ரா ருக்மிணி அரங்கத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை, இணையம் மூலமாக பார்த்து, கேட்டு பயன் பெறுகின்றீர்கள் என்கிற விவரம் தெரியவில்லை. 

நிகழ்ச்சிகளை இணையம் மூலமாகப் பார்த்து கேட்டு பயன் அடைந்தவன் என்கிற வகையில், என் அனுபவங்கள் இங்கே, சுருக்கமாகப் பதிகின்றேன். 

இருபத்து நான்காம் தேதி மாலை நாலரை மணி முதல், விக்கிரமாதித்தனை விடாத வேதாளம் போல, அல்லது வேதாளத்தை விடாத விக்கிரமாதித்தனாக, தொடர்ந்து சுட்டியில் கிளிக்கிக் கொண்டிருந்தேன். 
   
வேதாளம் நான்கு ஐம்பது மணி ஆகும் பொழுது மனமிரங்கி, மரமிறங்கி (இணையமிரங்கி) வந்தது. 
               
ஆர் கார்த்திக் நாராயணன் பாட்டு. நன்றாகப் பாடினார். வீடியோ சில சமயங்களில் "ஹாண்ட்ஸ் அப்" ஆகி உறைந்து நின்றாலும், ஆடியோ கை (காது) விடவில்லை. 
                 
Free Sound Recorder (இதுவும் தரவிறக்கம் செய்ய ஒரு சுட்டி.) பயன் படுத்தி, அந்த கச்சேரியை (ஒலிப்)பதிவும் செய்து வைத்துக் கொண்டேன். 
               
பிறகு விதூசி சௌம்யா அவர்கள் நிகழ்த்திய சிற்றுரை. பிறகு, இந்துஸ்தானி சங்கீதம்.  பாடியவர் பெயர் ஆதித்யா காண்ட்வே (?) (இந்துஸ்தானி சங்கீதம் கேட்டு இரசிக்க நிறைய ஞானம் வேண்டும் என்று நினைக்கின்றேன். என்னிடம் அது இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்!) 

இருபத்தைந்தாம் தேதி, நாலரை மணிக்கு பாடியவர் வி சுபஸ்ரீ. இவர் சௌம்யா அவர்களின் சிஷ்யை என்று அறிவித்தார்கள். நன்றாகப் பாடினார். 
         
பிறகு ஆர் வேதவல்லி அவர்கள், காலப்ரமாணம் பற்றி உரை நிகழ்த்தினார் (எனக்கு சங்கீத ஞானம் கிடையாது என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேனே! ) 
     
ஏழு மணி முதல், ஒன்பதே கால் மணி வரையிலும் ஐஸ்வர்யா வித்யா ரகுநாத் பாட்டு. (ஆமாம் ஒருவர்தான் பாடினார். நான் கோஷ்டிகானம் என்று நினைத்திருந்தேன்.) நன்றாகப் பாடினார். முகாரி, தோடி இராகங்களைக் கூட சிரித்த முகத்துடன் பாட முடியும் என்று நிரூபித்தார். பக்க வாத்தியங்கள் பக்காவாக வாசிக்கின்ற டாக்டர் ஆர் ஹேமலதா வயலின்; ஜெ வைத்தியநாதன் மிருதங்கம். பக்கா வாத்தியக்காரர்கள். 
          
இன்று (26.11.2012) மாலை நாலரை மணிக்கு அர்ச்சனா & ஆரத்தி பாட்டு; பிறகு, திரு டி  என் கிருஷ்ணன் அவர்கள் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் பற்றி உரை. அதன் பிறகு கே பாரத் சுந்தர் அவர்களின் பாட்டு. சென்ற வருடம் பாரத் சுந்தர் மியூசிக் அகடமியில் பாடிய பாட்டு இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இன்று அதை மாற்றி, வேறு பாடல்கள் நுழையுமா என்று பார்க்க (கேட்க) வேண்டும். 
     
இன்றைய நிகழ்ச்சிகளை, இணைய ரசிகர்கள் தவற விடாதீர்கள். 
                    

ஞாயிறு, 25 நவம்பர், 2012

ஞாயிறு 177:: மணியான ஓவியங்கள் !

                 


 பொன்னியின் செல்வன் புத்தகம் - விகடன் பதிப்பகம் 

கல்கி  தீபாவளி மலர் 1952 

    (1924 ~ 1968)

சனி, 24 நவம்பர், 2012

பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 18/11 to 24/11


எங்கள் B+ செய்திகள்.
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 
 ==============================================================
                
1) 'அணைக்கும் கரங்கள்' என்ற தொண்டு நிறுவனம் மூலம் சிறைக் கைதிகளுக்க்குக் கல்வி கற்றுத் தருகிறார் பேராசிரியர் நோவா. 1979 இல் கல்லூரிப் பேராசிரியர்களுக்குப் பணி பாதுகாப்புக் கோரி போராட்டம் நடத்தி சிறைக்குச் சென்றபோது புதிய கைதிகள், பழைய கைதிகள், அறியாமல் அவசரத்தில் குற்றம் புரிந்தவர்கள், வெளியில் வந்ததும் வேறு வழியின்றி மீண்டும் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் ஆகியோருக்கு கல்வி கற்பிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி அன்றைய முதல்வர் எம் ஜி ஆருக்குக் கடிதம் எழுதி அனுமதி பெற்று சில பேராசிரியர்களுடன் சென்று கல்வி கற்பித்து வருகிறாராம். 

 மருத்துவம், தொழில்துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் பட்டம் பெற்று பல மாணவர்கள் உருவாகியுள்ளனராம். கல்வி ஏறாதவர்களுக்கு கைத்தொழிலும் கற்றுத் தருவதோடு, தண்டனைக் காலம் முடிந்து வெளிவரும் கைதிகளுக்கு இதுவரை 1,200 திருமணங்கள் நடத்திக் கொடுத்துள்ளதாம் இந்த அமைப்பு. தினமலர் மற்றும் கல்கி.

2) தன்னுடைய படிப்படியான முன்னேற்றத்தைச் சொல்கிறார் கோவை பழமுதிர்சோலை நிறுவனர் நடராஜ். குடும்பச் சூழ்நிலை காரணமாக பட்டறை, மில் என்று மாறி மாறி செய்த பல பணிகளில் பழக்கடையும் ஒன்று, தலையில் வைத்து, தள்ளு வண்டியில் விற்று, தரைக் கடை வைத்து என படிப்படியாக முன்னேறி மக்களின் தேவையறிந்து இன்றைய காலத்திற்கேற்ப  வசதிகளுடன் பழ விற்பனை செய்து வருவதைப் பற்றி வந்திருக்கும் செய்தி தினமலர் சொல்கிறார்கள் பகுதியில்.


3) விவசாயத்தை முறையாகச் செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர் கரூர் அருகே உள்ள தட்டாம்புதூரைச் சேர்ந்த அக்கா, தம்பியான வினோதா, முருகானந்தம் இருவரும்.  விவசாயத்தை விட்டு வேறு வேலைகளுக்குச் செல்லும் இந்நாளில் எம் பி ஏ முடித்த வினோதா 10,000 ரூபாய் சம்பளம் என்று வந்த வேலையை உதறி, விவசாயத்தில் இறங்கி காலத்துக்கேற்ற மாதிரி பயிரிட்டு, முதலில் லாபம் கிடைக்காததால் கிண்டல் செய்த ஊராரின் ஆச்சர்யத்துக்கும் பாராட்டுக்கும் ஆளாகியுள்ளனர். முருகானாந்தமும் கல்லூரிப் படிப்பு முடித்து முழு மூச்சாய் விவசாயத்தில் இறங்கி அக்காவுடன் இணைந்து இந்த வெற்றிக்குக் காரணமாகியுள்ளார். முதலில் முருங்கை தர்பூசணி, கடலை பயிரிட்டு, அதுவும் இயற்கை உரங்களையே பயன் படுத்தி, லாபம் பார்த்தவர்கள் தற்சமயம் மலை வேம்பு பயிரிட்டுள்ளனராம். தினமலர் சொல்கிறார்கள் பகுதியிலிருந்து.


4) இ மெயிலைக் கண்டு பிடித்தது ஒரு தமிழர். அமெரிக்கவாழ் தமிழரான சிவா அய்யாதுரை, அதுவும் அவர் இதைத் தனது 14 வது வயதில்-1977இல் - கண்டு பிடித்த கதையை விரிவாகச் சொல்கிறது தினமணிக் கதிர்க் கட்டுரை. அதே போல 1993 இல் கிளிண்டன் வெள்ளை மாளிகைக்கு வரும் பல்லாயிரக் கணக்கான இ மெய்ல்களை தரம் பிரித்து, அது அதற்குண்டான பிரிவில் சேர்க்க வழி செய்யும் மென்பொருளை உருவாக்க முடியுமா என்று பரிசு அறிவித்தபோது பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்ட போட்டியில் தனிமனிதனாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விவரங்களையும் தருகிறது இந்தக் கட்டுரை. தமிழகத்தின் சித்த மருத்துவம் எப்படி அறிவியல் பூர்வமாகச் செயல் படுகிறது என்ற ஆராய்ச்சியில் தற்சமயம் ஈடுபட்டு வருகிறாராம்.


5) ஜேம்ஸ் கிம்டன் - ஆங்கிலேயர். 1925 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் நார்த் வேல்ஸ் கான்வே ஊரில் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவர், வாழ்வதற்கே போராடி, பின்னர் துறவற சபை மூலம் படித்து ஓவிய ஆசிரியராகி, அப்புறம் கல்விப்பணிக்காக இலங்கை அனுப்பப் பட்டவர், சில பிரச்னைகள் காரணமாக பிறகு இந்தியா வந்து மதுரை நாகமலை புல்லூத்தில் 16 மாணவர்களுடன் 'பாய்ஸ் டவுன்' என்ற நிறுவனம் ஆரம்பித்து, தற்சமயம் 60 ஆண்டு காலமாக சேவையையே தன உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்வதை விளக்கமாகச் சொல்கிறது தினமணி ஞாயிறு இணைப்பு. கல்வி, தொழில், தொழுநோய் ஒழிப்பு என்று பல்வேறு வகைகளிலும் ஆதரவற்றோருக்கும் ஏழைகளுக்கும் சேவை புரிந்து வருகிறார் இவர்.


6) பொதுவாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பயனடைவோர் நிறையவே இருக்கிறார்கள் என்று தெரிகிறது. திருச்சியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மனைவி ஹேமமாலினி கணவரின் வருமானம் குடும்பத்துக்குப் போதுமானதாக இல்லாத நிலையில், தம்பியின் ஆலோசனையில் கணவரின் தயக்கத்தை தன்னுடைய தன்னம்பிக்கையால் வென்று, மிதியடித்  தொழில் தொடங்கி இன்னும் சில பெண்களுக்கும் முன்னுதாரணமாகவும், அவர்களுக்கும் கற்றுத் தந்தும் வெற்றிகரமாக நடத்தி வருமானம் வருவதையும் தினமலர் 'சொல்கிறார்கள்' பகுதியில் படிக்க முடிந்தது. திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளின் கழிவை கிலோ 25 ரூபாய் என்று 1000 கிலோ வாங்கி மேட் செய்வதையும்,  மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தான் பெற்ற பயிற்சிகள் இவற்றுக்கு எப்படி உதவின என்றும் சொல்கிறார்.


7) அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் பிரிட்டிஷ் கூட்டமைப்பும் இணைந்து, தமிழகம் மற்றும் லண்டன் கல்விக் குழுக்களிடையே இடையே வகுப்பறைகள் இணைப்பு என்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஜனவரியில் ஒப்பந்தமானதைத் தொடர்ந்து, லண்டன் கல்விக் குழுமம் சென்னையில் மேற்கொண்ட 5 நாள் ஆய்வில், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 7 அரசுப் பள்ளிகள் சர்வதேச வகுப்பறை விருதைப் பெற்றுள்ளனவாம். தினமலர் செய்தி.


8) ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை வெடித்து குழந்தை இறந்தது. ரத்தப்போக்கால் உயிருக்கு போராடிய பெண், ஆசிரியர் வழங்கிய ரத்ததானத்தால் உயிர் பிழைத்தார்.ராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன்வலசை சுரேஷ் மனைவி களஞ்சியராணி, 23. பிரசவத்திற்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் கர்ப்பப்பை வெடித்து ரத்தப்போக்கு அதிகமானது. ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. உயிருக்கு போராடிய இவருக்கு, உடனடியாக "பி பாசிடிவ்' ரத்தம் தேவைப்பட்டது. 

கர்ப்பப்பை வெடித்து குழந்தை பலி: உயிருக்கு : போராடிய பெண்ணை காப்பாற்றிய ஆசிரியர்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை வெடித்து குழந்தை இறந்தது. ரத்தப்போக்கால் உயிருக்கு போராடிய பெண், ஆசிரியர் வழங்கிய ரத்ததானத்தால் உயிர் பிழைத்தார்.ராமநாதபுரம் அருகே சுப்புத்தேவன்வலசை சுரேஷ் மனைவி களஞ்சியராணி, 23. பிரசவத்திற்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் கர்ப்பப்பை வெடித்து ரத்தப்போக்கு அதிகமானது. ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. உயிருக்கு போராடிய இவருக்கு, உடனடியாக "பி பாசிடிவ்' ரத்தம் தேவைப்பட்டது. 

மருத்துவமனையில் இந்த வகை ரத்தம் இருப்பு இல்லை என ஊழியர்கள் கைவிரித்தனர். ராமநாதபுரம் மெல்வின் கேட்டரிங் கல்லூரி மாணவர்கள், ரத்தம் கொடுக்க திரண்டனர். 

இவர்களுக்கு ரத்தவகை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டது.தகவலறிந்த குடும்பநல துணை இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறியபின், ரத்தவங்கியில் அவசர தேவைக்காக வைத்திருந்த ஒரு பாட்டில் "பி பாசிடிவ்' ரத்தம் வழங்கினர்.

மேலும் ஒரு பாட்டில் ரத்தம் தேவைப்பட்டது. மெல்வின் கல்லூரி ஆசிரியர் முரளி, உடனடியாக மருத்துவமனை வந்து அதேவகை ரத்தம் வழங்கினார். இதை செலுத்திய பின் களஞ்சிய ராணி, உயிர் பிழைத்தார்.

மருத்துவமனையில் இந்த வகை ரத்தம் இருப்பு இல்லை என ஊழியர்கள் கைவிரித்தனர். ராமநாதபுரம் மெல்வின் கேட்டரிங் கல்லூரி மாணவர்கள், ரத்தம் கொடுக்க திரண்டனர். இவர்களுக்கு ரத்தவகை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டது.தகவலறிந்த குடும்பநல துணை இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறியபின், ரத்தவங்கியில் அவசர தேவைக்காக வைத்திருந்த ஒரு பாட்டில் "பி பாசிடிவ்' ரத்தம் வழங்கினர்.
மேலும் ஒரு பாட்டில் ரத்தம் தேவைப்பட்டது. மெல்வின் கல்லூரி ஆசிரியர் முரளி, உடனடியாக மருத்துவமனை வந்து அதேவகை ரத்தம் வழங்கினார். இதை செலுத்திய பின் களஞ்சிய ராணி, உயிர் பிழைத்தார். முகப்புத்தகத்திலிருந்து.

9) ஜார்கண்ட் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, ஓவியத்தில் பல விருதுகள் பெற்று வரும், மாற்றுத் திறனாளியான மேத்தப் ஆலமுக்கு உறுதுணையாக இருந்து, இன்று தானும் ஒரு ஓவியராக இருக்கும் அவர் சகோதரி நஸ்ரிம் பற்றிய செய்தி தினமலரில். தந்தை பில்டிங் காண்டிராக்டர். மேத்தப் பிறந்ததிலிருந்து மனவளர்ச்சி குன்றியிருந்தாலும் அவர் சுவற்றில் சாக்பீஸ், கரி வைத்து கிறுக்கும் படங்களில்  ஒரு நேர்த்தியைக் கண்டறிந்து, 8 ஆண்டுகளுக்கு முன்னால் ஓவியர் ராம்சுரேஷிடம் ஓவியம் பயிலவைத்ததையும், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள வைத்து விருது பெற வைத்ததையும், ஓவியம் வரையும்போது அடிக்கடி தம்பிக்கு கவனம் சிதறும் என்பதால் அருகில் இருந்து கவனித்துக் கொண்டதையும், ஒருநாள் தம்பியின் அடத்தினால் தானும் வரைய ஆரம்பித்து, அப்புறம் சேர்ந்தே வகுப்புகளுக்குச் சென்றதோடு, யுவகலா பாரதி விருது இருவரும் வாங்கியதையும், பிறகு பெங்களூரில் உள்ள கர்நாடக சித்ரகலா பரிஷத் அமைப்பு நடத்திய ஓவியக் கண்காட்சியில் இவர்களது 22 ஓவியங்கள் விற்பனையானதையும், தனது தம்பிக்காகத் தானும் தனது 2 அண்ணன்களும் திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்திருப்பதையும் சொல்கிறார் நஸ்ரிம்.
சென்றவார தேநீர் செய்தியில் அப்போது சேர்க்க முடியாத படம் இப்போது முகப்புத்தகத்திலிருந்து எடுத்து...   


            

வியாழன், 22 நவம்பர், 2012

இந்த மாத PiT போட்டி - மரங்கள் - படங்கள்!

             
இந்த மாத PiT போட்டிக்கு தலைப்பு மரங்கள். என்னிடம் என்னென்ன மரங்கள் படங்கள் இருக்கின்றன என்று பார்த்தபோது கிடைத்தவற்றில் சில..!
                      
சாலை தெரிந்திருக்கக் கூடாது!

வீட்டின் மொட்டை மாடியிலிருந்து ஒரு க்ளிக்!


திருக்கடவூர் நந்தவனம்...!


கடந்து சென்றபோது க்ளிக்கியது.... பாதையும் பெரிய இடைவெளியும் இருந்திருக்கக் கூடாது!செல் க்ளிக்! பறவை தெரிகிறதா? அதற்காக எடுத்தது!க்ளோசப் கொய்யா!

புயல் காற்றில் சாய்ந்தாடும் மரம்!

விழுந்த மரம்! நீலத்தினால் நீளமான உயரம்!


அலைந்து திரிந்து எடுக்காதாதாலேயே  எதுவும் சிறப்பாக இருக்காது. இதற்காக, அதாவது இந்தப் போட்டிக்காக என்று  தனியாக எடுக்காமல் எல்லாமே சேமிப்பிலிருந்து!  PiT தளத்தின்,  ஆல்பத்தில் போட்டிக்கு வந்திருக்கும் படங்களைப் பார்க்காமல் என் படத்தை இணைத்து விடுவேன். அப்புறம்தான் மற்ற படங்களைப் பார்ப்பேன்! முதலிலேயே பார்த்தால் என் படத்தை இணைக்கத் தோன்றாதே!!!

புதன், 21 நவம்பர், 2012

படித்ததிலிருந்து...

                   
பேட்டிகள், உரையாடல்கள்.

1) கே : தி. ஜாவுடன் உங்கள் தொடர்பு இளமைக் காலம் முதல் இருக்கும் போலிருக்கிறதே?


ப : ஆம்! நாங்கள் பள்ளிச் சிறுவர்களாக இருந்த நாள் முதலே நண்பர்கள். கும்பகோணம் டபீர் தெருவில் யக்ஞஸ்வாமி சாஸ்திரிகள் பெரிய வேத விற்பன்னர். அப்பய்ய தீட்சிதர் வம்சம். அவருக்குப் பக்கத்து வீட்டில் உமையாள்புரம் சுவாமிநாத பாகவதர் இருந்தார். இவர் தியாகராஜரின் நேர் சிஷ்யரான சுந்தர பாகவதரின் சீடர். மகாராஜபுரம் விஸ்வநாதையர் சுவாமிநாத பாகவதரிடம் சங்கீதம் கற்றுக் கொண்டார். சாஸ்திரிகள் முன்னிலையில் பாகவதர் 'ஓ...ரங்கசாயி' என்ற காம்போஜி கீர்த்தனையின் சரணமான ' வைகுந்த' என்ற வரிகளை பாவத்துடன் பாடிக் காட்டி அதன் தாத்பர்யத்தை விளக்கிய நிகழ்ச்சியை எங்களால் மறக்க முடியாது அப்பொழுது நானும் ஜானகிராமனும் அவர்களுக்கு விசிறிக் கொண்டிருந்தோம்.

                 
தஞ்சை ஸ்ரீ சுவாமிநாத ஆத்ரேயா பிப்ரவரி 2012 இல் சித்தார்த்தனுக்கு அளித்த பேட்டியிலிருந்து.
       
2) "....சித்திரங்களில் 'லோகு.ம' என்றுதான் முதலில் கையெழுத்துப் போட்டேன். அதை 'செல்வன்.ம' அல்லது ம.செல்வன்' என்று போடச் சொன்னார் அப்பா.  பொன்னியின் 'செல்வன்' அவருக்குள் ஏற்படுத்தியிருக்கக் கூடிய பாதிப்பு இது என நினைக்கிறேன்.


சாவி சார் தினமணிக் கதிரில் ஆசிரியராக இருந்தபோது 1969 தீபாவளி மலரில் " ஓவியர் மணியத்தின் செல்வன் 'மணியம் செல்வன்' வரைந்த ஓவியம் என்று குறிப்பிட்டு என் பெயரைப் பிரகடனம் செய்து விட்டார். அப்பாவின் மீது இருந்த நல்லெண்ணம் பத்திரிக்கை உலகுக்கு எனக்கு ஒரு 'கேட் பாஸ்' மாதிரி அமைந்தது நான் பெற்ற பேறு! அப்பாவின் ஓவியங்கள் சமூகம் புராணம், வரலாறு - 3 தளங்களிலும் நல்ல முன்மாதிரியாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் கடுமையான உழைப்பு மட்டுமில்லாமல், குறிப்பிட்ட ஓவியத்துக்குத் தேவையான விவரங்களை, கதையைப் படிப்பதோடு மட்டுமின்றி, அதற்கான களங்களைப் பற்றிய அறிவையும் தேடித் தொகுத்துக் கொள்வார்.

குறிப்பாக 1964 ஆம் ஆண்டில் வெளியான கல்கி தீபாவளி மலரில் 'ஷேக்ஸ்பியர் செல்வங்கள்' என்று நான்கு பக்க வண்ணமடலை வரைந்து தந்தார். புகழ் பெற்ற நாடக இலக்கியங்களான ஹாம்லெட்,ஒத்தெல்லோ, மிட் சம்மர் நைட்ஸ் ட்ரீம், ஐந்தாம் ஹென்றி இவற்றின் காட்சிகளை வெகு நுட்பமாக வரைந்தார் கன்னிமாரா நூலகத்தில்
போய் உட்கார்ந்துக் கொண்டு, அந்தக் கால மன்னர்களின் உடை, ஒப்பனை, மரபுகள் போன்ற அடிப்படையான விஷயங்களை  பார்த்துக் கொண்டு அதன்பிறகே ஓவியமாக்கியிருக்கிறார். அப்பாவின் ஓவியங்களில் உள்ள தனிச்சிறப்பு - ஒரு சிறு பகுதியையும் பயன்படாமல் விடமாட்டார் என்பது.   பண்பாடுகளை ஒட்டிய இந்த ஓவியத்திலும் அதை நன்கு உணர முடியும்.....

ஓவியர் மணியம் செல்வன் தன தந்தை பற்றிய பேட்டியில்...  
           
3) கே : நாங்கள் அல்லது இன்னொருவர். உங்களின் இலக்கியத்தனமான படைப்புகளைத் தொகுத்துத் தர விரும்புகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது உங்கள் எழுத்துகளில் எவற்றை எல்லாம் கொடுப்பீர்கள்? ஒரு பட்டியல் தாருங்களேன்.


ப : பட்டியலில் சிறுகதைகள் இருக்கும். சில கட்டுரைகள் இருக்கும். தனிமை கொண்டு (தனிப் புத்தகம்), ஜன்னல் (கசடதபற), காணிக்கை (கல்கி), செல்வம் (கலைமகள்), முரண் (சுதேசமித்திரன்), நகரம் (தினமணிக்கதிர்), எதிர் வீடு (கணையாழி), அகப்பட்டுக் கொள்ளாதவரை திருடவில்லை (குமுதம்), வீடு (தினமணிக்கதிர்), ஒரே ஒரு மாலை (ஆனந்த விகடன்), அம்மோனியம் பாஸ்பேட் (தினமணிக்கதிர்) பார்வை (தினமணிக்கதிர்) இவைகளை என் முதல் கதைத் தொகுப்பாகவும், Assorted Prose என்று உரைநடைப் பகுதிகள் எனப் பல நூல்களிலிருந்தும் எடுத்து மற்றொரு புத்தகமாகவும் வெளியிடலாம். இலக்கியதரம் என்கிற பாகுபாட்டை விட Representative of my writing என்கிற பாகுபாட்டில்தான் வெளியிடுவேன்.


கே : அசோகமித்திரனின் எந்தக் கதைகளை ரொம்ப ரசிக்கிறீர்கள்?


ப : உதாரணமாக 'வழி' ஒரு கதை. இன்னொன்று புலிக்கலைஞன் எலி விமோசனம், நிறைய கதைகள்...


1978 இல் 'படிகளுக்கு' சுஜாதாவின் பேட்டி.   
               
4) கே : எதுவரை படித்திருக்கிறீர்கள்?

ப: எஸ் எஸ் எல் சி வரைதான் படித்தேன். பிற்பாடு 
இசைத் துறையில் நாட்டமிருந்ததால் முதலில் எங்கள் சொந்த ஊருக்கு அருகிலுள்ள திருப்புணித்துராவிலும், பின்னர் திருவனந்தபுரம் சங்கீதக் கல்லூரியிலும் பாட்டு கற்றுக் கொண்டேன். சங்கீதம்தான் என் முழுநேரத் தொழில்.
 

கே : சாதாரணமாகக் கிறிஸ்த்தவர்களுக்கு கர்நாடக இசையில் அதிக ஈடுபாடு இருக்காது என்று சொல்லுவார்கள். உங்களுக்கு மட்டும் எப்படி இதில் 
ஈடுபாடு வந்தது?

ப : நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். ஆனால் என் தகப்பனாருக்கு கர்னாடக சங்கீதத்தில் அதிக விருப்பம் உண்டு. அவரே ரொம்ப நன்றாகப் பாடுவார். என்னை ஒரு சிறந்த பாடகனாக்க வேண்டுமென்று எண்ணி முதலில் எங்கள் கிராமத்தில் குஞ்சன் வேலு என்ற மாஸ்டரிடம் சிட்சை
சொல்லி வைத்தார். எர்ணாகுளத்தில் சிவராமன் நாயர் என்பவரிடம் சில நாட்கள் கற்றுக் கொண்டேன். சுவாதித் திருநாள் சங்கீத அகாடமியில் செம்மங்குடியிடம் ஒரு வருடம் பயின்றேன்.  சென்ற ஐந்தாறு வருடங்களாக செம்பை வைத்தியநாத பாகவதரிடம் கற்றுக் கொண்டேன்.

1975 இல் கே ஜே யேசுதாஸ் பேட்டியிலிருந்து.    
             
5) கே : ஆக,  எழுத்தை நீங்கள் ஒரு தொழிலாகவோ, வியாபாரமாகவோ நினைக்கவில்லை என்று சொல்லி வருகிறீர்கள்?


ப : எக்ஸாட்லி. ஒரு சங்கீதம் ஒரு ஓவியம் இது சம்பந்தப் பட்டவர்களெல்லாம் உலகத்தில் இருக்கிற சில பொருட்களை எடுத்துக் கொள்கிறார்களே தவிர, உலகத்துக்கு அதன் மூலம் ஏதாவது திருப்பித் தருகிறார்களோ? ஆனால் உலகத்தின் லட்சியம் எதுவோ, மனித வாழ்க்கைக்கும் அதன் ஆத்மாவுக்கும் எது தேவையோ, அதை அவர்கள் உற்பத்திப் பண்ணித் தருகிறார்கள். ஒரு சமயம் பிக்காஸோவை 'உங்கள் படத்துக்கு என்ன விலை?' என்று ஒருவர் கேட்டு விட்டார். பிக்காஸோ ஒரு ஒன்று போட்டு கை போகிறவரை சைபராகவே போட்டுக் காண்பித்தார்.  இதைப் பார்த்துப் பிரமித்த அந்த ஆள், 'இது உங்கள் பேராசைக்கு அடையாளம்' என்றார். பிக்காஸோ நிதானமாக, 'எனக்குப் பேராசையே கிடையாது. படம் எழுத ஆரம்பித்த காலத்தில் ஏதாவது என் படத்துக்கு விலை தருவார்களா என்று நினைத்துவிட்டு, ஒரு காலத்தில் தெருவில் படங்கள் போட்டு நான் கஷ்டப்பட்டிருக்கிறேன். இப்போது அதை நினைத்துக் கொண்டு ஒன்று போட்டு அதன் பக்கத்தில் கை ஓய்கிற வரைக்கும் சைபராகப் போடுகிறேன்" என்று சொன்னாராம்.     

               
1978 இல் ஜெயகாந்தன் பேட்டியிலிருந்து.
                         

திங்கள், 19 நவம்பர், 2012

கோவில் சுற்று!

                  
சமீபத்தில் நிகழ்த்திய (!) ஒரு ஆன்மீகப் பயணம்! மயிலை கபாலி கோவிலில் தொடங்கி அந்த ஏரியாவில் சில கோவில்களைச் சுற்றினோம்.
             
கபாலியையும் கற்பகாம்பாளையும் இவ்வளவு சுலபமாக சமீப காலங்களில் பார்க்க முடிந்ததில்லை! காலை 7 மணிக்கு, அதுவும் செவ்வாய்க் கிழமை என்பதாலோ என்னமோ கூட்டம் எதுவும் இல்லை. இருவரையும் கண்குளிர தரிசிக்க முடிந்தது. உள்ளே சுற்றி வந்த பறவையின் பெயர் போந்தாக் கோழி என்று நினைவு. 
அடுத்து அங்கிருந்து நேராக சாய்பாபா கோவில். 
இந்தக் கோவிலிலிருந்து திரும்பும்போது ஏதாவது ஒரு நல்ல கடையில் டிபனை முடித்துக் கொள்வோம் என்று எண்ணியிருந்தோம். ஆனால் கோவிலில் கொடுத்த திவ்யமான வெண்பொங்கல் அதற்குத் தேவையில்லாமல் செய்தது. வலது பக்கமாகச் சென்று ஷிர்டி பாபாவின் கால் பற்றி வணங்க முடிகிறது. 
 

என்  நண்பர் ஒருவர் அவரைப் பார்த்து பாபா சிரித்ததாகச் சொன்னார். இன்னொரு நண்பர் கண்  சிமிட்டுவது போல இருந்ததாகச் சொன்னார். என்னைப் பார்த்தும் சிரிக்கிறாரா, கண் சிமிட்டுகிறாரா என்று பார்த்தேன். ஊ ஹூம்! அருகில்  சென்று கால் தொட்டு வணங்கும்போது பாதத்தை நைசாக கிச்சு கிச்சு மூட்டியும் பார்த்தேன், அப்போதாவது சிரிக்கிறாரா என்று பார்த்தேன்!! ஊ.....ஹூம்! !  எட்டி உதைக்காமல் விட்டாரே என்று வேகமாகக் கிளம்பி விட்டேன்!     :))) 
                 
சுற்றி வரும்போது பின் ஹாலில் தியான மண்டபம் இருக்கிறது. அங்கு(ம்) அமர்ந்திருக்கும் பாபாவைப் பார்த்துக் கொண்டு தியானத்தில் அமரலாம். அந்த ஹால் வாசலில் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய மரங்களோடு நட்சத்திரப் பெயர்கள் எழுதி அந்தந்த மரத்தில் தொங்க விட்டிருந்தார்கள். எங்கள் நட்சத்திரங்களுக்கு என்ன மரம் என்று பார்த்துக் கொண்டோம். தரிசனத்தின்போது ஒலித்துக் கொண்டிருந்த அனுராதா ஸ்ரீராம் பாடிய 'அன்பே சாய்' பாடல்களால் கவரப் பட்டு அந்த சி டி ஒன்று வாங்கிக் கொண்டோம்! பிரமாதமான பொங்கல். கடைகளில் கூட அப்படிச் சாப்பிட்டதில்லை. தரமான தயாரிப்பு. என்ன, தொட்டுக் கொள்ள சட்னி சாம்பார் இல்லாததுதான் குறை! இதைச் சொன்னபோது எங்கள் சாய் பக்த நண்பர்கள் அங்கு மதியங்களில் வழங்கப்படும் சாப்பாடு பற்றி மிகவும் சிலாகித்துச் சொன்னார்கள். இங்கு தவிர ஈஞ்சம்பாக்கத்திலும் இருக்கும் பாபா கோவிலில் சாப்பாடு இன்னும் பிரமாதமாக இருக்குமாம்!

                 
வெளியில் வந்து டிபன்தான் சாப்பிடவில்லை, காபியாவது சாப்பிடுவோம் என்று அருகிலேயே அமைந்திருந்த 'கும்பகோணம் டிகிரி காபி' கடையில் காபி சாப்பிட்டோம். ஒரு காபி15 ரூபாய். நெளியாத அழகான பித்தளை டபராத் தம்ளர்களில் நுரை பொங்க காபி தருகிறார்கள். 
           
அங்கிருந்து பொடி நடையாக ராஜ் டிவி புகழ் (!) நவசக்தி கணபதியைத் தரிசனம் செய்து கொண்டு, லஸ் ஆஞ்சநேயரை அடைந்தோம். சிறிய கோவில். புகழ் பெற்ற கோவில். ஆஞ்சியும், ராமரும் அருகருகே அருள் பாலித்துக் கொண்டிருந்தனர். சுற்றி வரும்போது புளியோதரை கிடைக்குமா என்று ஜொள்ளு வழியப் பார்த்த/கேட்ட போது 'வடைதான் இருக்கு 8 வடை 10 ரூபாய்' என்றார் மடைப்பள்ளி மாமா! ஆவலாக வாங்கினால் தட்டை போன்ற ஆஞ்சி வடை! சற்றே அமர்ந்து ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கும்போது இரண்டு பக்தர்கள் புயலென உள்ளே நுழைந்து ஆஞ்சி உம்மாச்சியின் முன் தண்டனிட்டார்கள். உள்நாட்டு ஆணும், வடநாட்டு அல்லது வெளிநாட்டுப் பெண்ணும். (ஹிஹி... சரியா அனுமானிக்க முடியலீங்க) கைகள் நடுங்க, உடம்பு அதிர அந்த இரு 'ஜீன்ஸ் - டி ஷர்ட்' வாலாக்களும் ஒரு யோகம் போல நிறுத்தி, நிதானமாக கைகளை நெஞ்சுக்கு நேரே கூப்பி, கொஞ்சம் கொஞ்சமாக நடுங்கும் கரங்கள் அதிரும் உடம்புடன் நெற்றி வரைக் கொண்டு வந்து, மீண்டும் நெஞ்சுக்கு நேரிலிருந்து மறுபடி கூப்பி, சாமி கும்பிட்டது கண்களைக் கட்டி நிறுத்தியது சற்று நேரம். 
             
அங்கிருந்து மாதவப் பெருமாள் கோவில். அழகிய பெருமாள் தரிசனம். அருகிலேயே தாயார் சன்னதி. கேசவப் பெருமாள் கோவில் திறந்திருக்குமா என்று அங்கிருந்த பட்டரிடம் கேட்டோம். அப்போது மணி 11. 'வாய்ப்பில்லை, சிவன் கோவில்கள்தான் உச்சி கால பூஜைகளை முன்னிட்டு 12 மணி வரை திறந்திருப்பார்கள், நாங்கள் 11 மணிக்கு நடை சாத்தி விடுவோம்' என்றார்கள். இங்குதான் கொஞ்சம் புகைப் படம் எடுத்துக் கொண்டோம். கபாலி கோவில் குளம் ஒன்று எடுத்தோம். அப்புறம் இங்கு. ஏனோ அவ்வளவாகப் படம் எடுக்கத் தோன்றவில்லை. 


வெளியில் வரும்போது வழிமறித்த பெண்மணி 'சமையல் வேலைக்கு ஆள் வேண்டுமா' என்று கேட்டார். 


வீடுகளுக்கு வந்து சமைத்து வைத்து விட்டு வேண்டுமானாலும் வந்து விடுவாராம். உதவி செய்யுங்கள் என்றார். அதே ஏரியாவாக இருக்கும் பட்சத்தில் 'மாதம் 6,000 கொடுங்கள்' என்றார். கணவர் சமஸ்கிருதக் கல்லூரியில் வேதம் படிக்கும் மாணவர்களுக்கு சமையல் செய்பவராம். அவர் பெண் கடைசி வருடம் BE படிக்கிறாராம். மகளுக்கு நல்ல வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்பதாகக் கூறினார்.  படமெடுத்து ப்ளாக்கில் போடுவோம் என்றதும் தயக்கத்துடன் நின்று, அலைபேசி எண் கொடுத்தார்.

              
கேசவப் பெருமாள் கோவில் செல்ல முடியாது என்றாலும் அருகிலேயே இருந்த முண்டகக் கண்ணி அம்மன் ஆலயம் அடுத்து. முதலில் அரை லிட்டர் பால் வாங்கி அம்மனுக்குக் கொடுத்த பிறகு பாஸ் சற்றே யோசித்து இன்னொரு அரை லிட்டர் பால் வாங்கி அங்கிருந்த நாகப் பிரதிமைகளுக்கு விட்டார்.

கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து வெளியில் வந்ததும் அங்கிருந்து கேசவப் பெருமாள் கோவிலிலிருந்து தொடங்கியிருந்தால் எல்லாக் கோவில்களும் கவர் செய்திருக்கலாம் என்று நண்பர் ஒருவர் அப்புறம் சொன்னார்! 

வழியில் ஒரு பாலத்தைக் கடக்கும்போது டிராஃபிக்கில் வண்டி நின்றபோது பாலத்தில் ஒரு எருமை மாடு நின்றுக் கொண்டிருக்க, ஒரு பைக் காரர் 'வாகனங்களுக்கு மட்டும்' என்று போர்ட் போட்டிருக்கு... இது ஏன் வந்தது?' என்றார். இன்னொரு சாதாரண பைக்கர்,' அதுக்குப் படிக்கத் தெரியாதுல்ல... அதான்' என்றார். அருகிலிருந்த மற்றுமொரு ஸ்பெஷல் பைக்கர் சொன்னார்..'ஏங்க.. என்ன தப்பு? அதுவும் வாகனம்தானே? எமனோட வாகனம்!' என்றார். (உண்மையில் பத்திரிகையில் வருவது போலச் சொல்ல வேண்டுமென்றால் இங்கு 'என்றாரே பார்க்கலாம் என்று முடிக்க வேண்டும்!)

சாய்பாபா கோவில் படங்கள் : நன்றி இணையம்.  
                 

சனி, 17 நவம்பர், 2012

பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 11/11/2012 முதல் 17/11/2012 வரை.


எங்கள் B+ செய்திகள்.
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....   
 =================================================================


1) மதுரை நாகமலைப் புதுக்கோட்டை ஜெயக்குமார் : தன்னுடைய ஊரைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்குக் கஷ்டப்படுவதைப் பார்த்தும், நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக உறிஞ்சுவதைப் பார்த்தும் கவலை கொண்டு, கடம்படி என்ற இடத்தில் 200 அடி போர் அமைத்துத் தண்ணீர் எடுத்து, தன் ஊரில் தெருவுக்குத் தெரு குழாய் அமைத்து விநியோகம் தொடங்கியவர், பின்னர் ஊரில் இருந்த 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியில் நீர் சேமித்து, அதைச் சுத்தப்படுத்திக் குடிநீராக்கி, அதில் வரும் 2000 லிட்டர் சுத்தமான குடிநீரை, கம்பியூட்டருடன் இணைக்கப்பட்ட நவீன சாதனம் மூலமாக மக்கள் பெற வழிவகைகள் செய்துள்ளார். பொதுத் தொலைபேசி போல காய்ன் பாக்ஸ் மற்றும் குழாய் உள்ள இந்த இயந்திரத்தில் இரண்டு ஒரு ரூபாய் நாணயம் போட்டு ஒரு குடம் நல்ல குடி தண்ணீரும், கைரேகை வைத்து 100 ரூபாய் செலுத்தி 50 குடம் தண்ணீரும் பிடித்துக் கொள்ளும் வசதி உள்ள இந்தத் திட்டத்திற்கு 6 லட்ச ரூபாய் செலவாம். 80 ஆயிரம் ரூபாய்  செலவில் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை வடிகட்டி  மாற்ற வேண்டியதிருக்குமாம். தினமலரிலிருந்து....

2) திண்டுக்கல்: சூரிய ஒளி, காற்று, மின் ஆற்றல்களை கொண்டு இயங்க கூடிய வகையில் ஆட்டோ ஒன்றை திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லூரி பேராசிரியர் மோசேதயான், மின்னணுவியல் துறை மாணவர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.
இந்த ஆட்டோ இயங்கும் போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆட்டோவை ஒரு முறை முழு அளவில் சார்ஜ் செய்தால், 96 கி.மீ., தூரத்திற்கு தற்போதைய ஆட்டோக்கள் இயங்கும் வேகத்தில் இயக்க முடியும் என்கின்றனர். 
    
நமது நாட்டில், ஆண்டுக்கு 300 நாட்கள் சூரிய ஒளி கிடைக்கும். காற்றலை சக்தியும் கிடைக்கும். சோலார் மின்தகடுகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காற்றாலைகள் மற்றும் மின்சக்சதியின் மூலம் சேகரிக்கப்படும். இச்சக்தி, ஆட்டோவில் இணைக்கப்பட்டுள்ள மின்கலத்தில் சேமிக்கப்படும். ""எஸ்ஆர்எம்'' மோட்டார் மூலம் ஆட்டோ இயங்குகிறது. இந்த ஆட்டோவில் ஆற்றல் குறைந்து விட்டால் பெட்ரோல் மூலமாகவும் இயக்க முடியும்.பேராசிரியர், மாணவர்கள் கூறியதாவது: எதிர்காலத்தில் மேலைநாடுகளை போல நம் நாட்டிலும் மின் சார்ஜர் நிலையங்கள் உருவாகிவிடும். இதை சிறு திட்டமாக துவங்கினோம். நாட்டுக்கு பயன்படும் வகையில் உருவாக்கி முடித்துள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆரம்ப நிலையில் வடிவமைத்து இருக்கிறோம். மேலும் சில மாற்றங்கள் செய்து வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யும்போது, அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள், என்றனர்.

3) மின்வெட்டை சமாளிக்க, தேவகோட்டை மாணவர்கள், "சூரிய ஒளி அடுப்பை' கண்டுபிடித்து சாதனை படைத்து உள்ளனர்.தினமும், 16 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் தட்டுப்பாடும் பெண்களை அச்சுறுத்துகிறது.இதற்குத் தீர்வுகாண, தேவகோட்டை லோட்டஸ் பள்ளி மாணவர்கள், "சூரிய ஒளி சமைப்பான்' என்ற பெயரில், சூரிய ஒளி அடுப்பை கண்டறிந்து உள்ளனர்.
மாணவர்கள் ரஞ்சனி, மணிமாறன், அபினேஷ், அட்சயா, பார்கவி ஆகியோர் ஆசிரியைகள் சண்முகவள்ளி, ஜாஸ்மின் வழிகாட்டுதல்படி, அடுப்பு தயாரித்து உள்ளனர். மரப் பெட்டிக்குள் கறுப்பு வண்ணமிட்ட துத்தநாகத் தகட்டை வைத்துள்ளனர். அதில், ஒளி ஊடுருவும் வகையில் கண்ணாடி தட்டும், ஒளியை பிரதிபலிக்கும் வகையில், முகம் பார்க்கும் கண்ணாடியை மேலேயும் இணைத்துள்ளனர். சமைக்கத் தேவையான பொருளை பாத்திரத்தில் போட்டு, கண்ணாடியால் மூடினர். 
சூரிய ஒளி அடுப்பு' கண்டறிந்து சாதனை

மின்வெட்டை சமாளிக்க, தேவகோட்டை மாணவர்கள், "சூரிய ஒளி அடுப்பை' கண்டுபிடித்து சாதனை படைத்து உள்ளனர்.தினமும், 16 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் தட்டுப்பாடும் பெண்களை அச்சுறுத்துகிறது.இதற்குத் தீர்வுகாண, தேவகோட்டை லோட்டஸ் பள்ளி மாணவர்கள், "சூரிய ஒளி சமைப்பான்' என்ற பெயரில், சூரிய ஒளி அடுப்பை கண்டறிந்து உள்ளனர்.

மாணவர்கள் ரஞ்சனி, மணிமாறன், அபினேஷ், அட்சயா, பார்கவி ஆகியோர் ஆசிரியைகள் சண்முகவள்ளி, ஜாஸ்மின் வழிகாட்டுதல்படி, அடுப்பு தயாரித்து உள்ளனர். மரப் பெட்டிக்குள் கறுப்பு வண்ணமிட்ட துத்தநாகத் தகட்டை வைத்துள்ளனர். அதில், ஒளி ஊடுருவும் வகையில் கண்ணாடி தட்டும், ஒளியை பிரதிபலிக்கும் வகையில், முகம் பார்க்கும் கண்ணாடியை மேலேயும் இணைத்துள்ளனர். சமைக்கத் தேவையான பொருளை பாத்திரத்தில் போட்டு, கண்ணாடியால் மூடினர். 

முகம் பார்க்கும் கண்ணாடி மூலம் சூரியஒளி பிரதிபலித்து, அடுப்புக்குள் செல்லும்போது, துத்தநாகத் தகட்டில் வெப்பம் அதிகரிக்கும். இதன் மூலம் சமையல், "ரெடி'. முதற்கட்டமாக, மாணவர்கள் அடுப்பில் வெந்நீர், காய்கறி, பருப்பை வேகவைத்து காண்பித்தனர்.நவ., 18ல் மானாமதுரையில், தேசிய இளம் விஞ்ஞானிகள் மாநாடு நடக்கிறது. அதில், இத்தயாரிப்பு வைக்கப்படும் என, கூறப்பட்டது.
முகம் பார்க்கும் கண்ணாடி மூலம் சூரியஒளி பிரதிபலித்து, அடுப்புக்குள் செல்லும்போது, துத்தநாகத் தகட்டில் வெப்பம் அதிகரிக்கும். இதன் மூலம் சமையல், "ரெடி'. முதற்கட்டமாக, மாணவர்கள் அடுப்பில் வெந்நீர், காய்கறி, பருப்பை வேகவைத்து காண்பித்தனர்.நவ., 18ல் மானாமதுரையில், தேசிய இளம் விஞ்ஞானிகள் மாநாடு நடக்கிறது. அதில், இத்தயாரிப்பு வைக்கப்படும் என, கூறப்பட்டது. 
4) 2001 இல் UPSC முடித்து 2002 இல் கிடைத்திருக்க வேண்டிய ஐ பி எஸ் பதவி ஓ பி சி  பிரிவில் இல்லை என்று சொல்லி மறுக்கப்பட்ட திரு லோகநாதன் பொதுப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதுச்சேரியில் டெபுடி கலெக்டர் பணி வழங்கப்பட, அதை எதிர்த்து கோர்ட்டில் 10 ஆண்டுகள் போராடி,  வெற்றி பெற்று, மீண்டும் பயிற்சிக்குச் சென்று, தன்னை விட 7,8 வயது குறைந்தவர்களுடன் எல்லாம் போட்டியிட்டு வென்று, ஐ பி எஸ் பதவி பெற்று, சர்தார் படேல் விருதும் பெற்றுள்ளார். சோர்ந்து போன தருணங்களில் தன்னுடைய மனைவியும் பெண்ணும் அளித்த ஊக்கத்தையும் குறிப்பிடுகிறார்.
5) செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் தன் முத்திரையைப் பதிப்பது சிறப்புதானே.....  அந்த வகையில் திருப்பூர் டீ மாஸ்டர் ஒருவரின் திறமை பற்றிய  பாசிட்டிவ் செய்தி இது. மக்கள் கடைக்குச் சென்றால் ப்ளாக் டீ, ஸ்ட்ராங் டீ, லைட் டீ என்றெல்லாம் கேட்பார்கள் அல்லவா? இவர் ஒரே கோப்பையிலேயே ப்ளாக் டீ, பால் டீ, ஸ்ட்ராங் டீ மூன்றையும் ஒன்றோடொன்று கலக்காமல் போட்டு அசத்துகிறாராம் திருப்பூர் பேக்கரி ஒன்றில் பணியாற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த டீ மாஸ்டர் பாலு. படத்துடன்  தினமலரில் வந்திருந்த இந்த செய்தியில் உள்ள படத்தை தனியாக எடுத்து இங்கு சேர்க்க முடியவில்லை!
                  
6) மகளிர் சுய உதவிக் குழுக்கள் பற்றிய நிறைய பாசிட்டிவ் செய்திகளில் இதுவும் ஒன்று.  சென்று குடும்பம் நடத்தப் பணம் போதாமல் இருந்தபோது  தஞ்சாவூர்க் கலைத் தட்டுகள் தயாரிப்பைக் கற்று, அந்தத் தொழிலில் இறங்கி, இப்போது 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யத்தக்க வகையில் தட்டுகள் தயார் செய்து விற்று, முன்பு கந்து வட்டிக்கு கடன் வாங்கும் நிலையில் இருந்து இப்போது மீண்டு வந்திருப்பதையும், தங்கள் ஓய்வு நேரங்கள் உபயோகமாகச் செலவாவதையும் பெருமையாக தினமலரில் பகிர்ந்திருக்கிறார் அந்தக் குழுவின் தலைவி லலிதா. வீட்டை அழகுபடுத்த நினைப்போர் மற்றும் சிலரே இந்தவகைத் தட்டுகள் வாங்குவார்கள்  இந்தத் தொழிலின் சிக்கல் என்றும் சொல்கிறார்.
              

வியாழன், 15 நவம்பர், 2012

அலுவலக அனுபவங்கள் - 150 ரூபாய்

                  
நகரின் மத்தியில், பரபரப்பான சாலையில் பெரிய வளாகத்துக்குள் அமைந்த அலுவலகம்! அதில் மூன்றாவது மாடியில் எங்கள் அலுவலகம். பெரிய ஹா........லில் கணக்கிலடங்கா நாற்காலி, மேஜைகளுக்கிடையே தேடினால் தலையலைகளுக்கு நடுவில் நாங்கள் கிடைப்போம். ஒரு வழக்கமான வேலைநாளில்...

எதிரே யாரோ நிற்பது போன்ற உணர்வினால் நிமிர்ந்தான் சிவா. 

"யாரு?"

"நீங்க.. நானு..." கையில் ஒரு துணிப்பையுடன் நின்றிருந்தவன் தயங்கித் தடுமாறினான்!

"சொல்லுங்க.. என்னைப் பார்க்கவா வந்தீங்க. ? நான் உங்களைப் பார்த்த ஞாபகம் இல்லையே...."

"என் பேரு தண்டபாணி சார்."

"சரி.... இருக்கட்டும்....என்ன வேணும் உங்களுக்கு? உங்க பில் ஏதாவது பெண்டிங்கா?"

"பில்'லா.. இல்லை சார். வந்து.... நான்..." தயங்கி சுற்றுமுற்றும் பார்த்தான், வந்தவன்.     லேசாகப் பொறுமையிழந்த சிவா, "என்ன வேணும், யாரைப் பார்க்க வந்தீங்கன்னு 'சட்'டுன்னு சொல்லுங்க மிஸ்டர் தண்டாயுதபாணி"

"தண்டபாணி சார்..... உங்களை... உங்களைத்தான் சார் பார்க்கணும்... இல்லை கேட்கணும்..."

"வெளியூர் பிரான்ச்சா?"

"இல்லை சார்....நான் இந்த ஆபீசே இல்லை.."

"பின்ன? டைம் வேஸ்ட் செய்யாமச் சொல்லுங்க தண்டாயுதபாணி" என்றான் மிஸ்டரைக் கைவிட்டு.

"தண்டபாணி சார்.... இந்தப் பக்கமா வந்தேன்... பார்த்தா நீங்கதான் நல்லவரா தெரியறீங்க.... ஒரு நூற்றைம்பது ரூபாய் இருந்தாக் கொடுங்க சார்..... ஊர் போய் மணியார்டர் செஞ்சிடறேன்.... உங்க அட்ரசும் எழுதிக் கொடுங்க சார்..... என் பணம் மொத்தமும் தொலைஞ்சு போச்சு..... ஊர் போகக் கூடக் காசில்லை.."

"எந்திரிய்யா... எந்திரிய்யாங்கறேன்.... என்னன்னு நினைச்சீங்க என்னை... இவ்வளவு பெரிய சிட்டியில, இந்த பில்டிங் தேடி வந்து, மூணு மாடி ஏறி, இத்தனை டேபிள், இத்தனை நாற்காலி, இத்தனை பேரைக் கஷ்டப்பட்டுத் தாண்டி வந்து என் கிட்டத்தான் கேக்கணுமா? என்னை இளிச்சவாய்னு நினைச்சியா..."

சிவா ஏன்  இப்படிக் கத்துகிறான் என்று  நாங்கள் நான்கைந்து பேர் அவன் பக்கத்தில் நெருங்கினோம். 'தண்டபாணி' எப்போதோ ஓடி விட்டிருந்தான். 

"நூற்றைம்பது ரூபாய் கேக்கறான்....  நூற்றைம்பது ரூபாய்.....எவனோ வேணும்னே அனுப்பியிருக்கான்..." இன்னமும்  கத்திக் கொண்டிருந்த சிவாவை ஆசுவாசப்படுத்தி கீழே அழைத்து வந்தோம். 

 வழக்கமான டீக்கடைக்குச் சென்று சூடான வடை எடுத்துக்  கடித்தவாறு, டீ ஆர்டர் செய்துவிட்டு, சிவா பக்கம் திரும்பி, அவன் இவ்வளவு உணர்ச்சி வசப்படும் அளவு என்ன நடந்தது என்று கேட்டோம். இன்று நடந்த சம்பவம் வேடிக்கையாக இருந்தாலும் சிவா உணர்ச்சிவசப்பட்டது சற்று அதிகப்படியாகத் தெரிந்தது. அதனால் காரணம் கேட்டோம்.

"நான் வேலைக்கு சேர்ந்த புதிது....." 


 


சூடான வடையைப் பேப்பரில் வைத்து அமுக்கி, அமுக்கி எண்ணெய் எடுத்தபடியே சிவா சொல்லத் தொடங்கினான்.
                        
"அது ஒரு சின்ன ஊர். வேலை முடிந்து கொஞ்சம் லேட்டாக ஒருநாள் திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு சின்ன பாலம் போல வரும். பெரும்பாலும் ஆள் நடமாட்டமில்லாத ஊர் அது. அந்தப் பாலத்தைத் தாண்டும் நேரம் ஒரு குரல் கொஞ்சம் சத்தமாகவே கேட்டது.
             
"முப்பதும் முப்பதும் எவ்வளவு?"
         
"அறுபது" பக்கத்தில் யாருமேயில்லாததாலும் ஏதோ என்னிடமே கேட்டது போலவும் இருந்ததால், என்னையும் அறியாமல் நான் பதில் சொன்னேன்.
          
"அறுபதும் அறுபதும்?"
         
"நூற்றி இருபது" 
           
"நூற்றி இருபதும் நூற்றி இருபதும்?"
         
"இருநூற்று நாற்பது" விளையாட்டு  போலவே உற்சாகமாகிச் சொன்னேன். 
            
"இருநூற்று நாற்பதுல தொண்ணூறு போனா?"
         
"நூற்றைம்பது" என் உற்சாகமான பதில்!
            
பாலத்துக்கடியிலிருந்து இரண்டு பேர் வெளிவந்தார்கள். 
           
"எடு நூற்றைம்பது ரூபாய்..."
           
"எதற்கு?"
          
" நீதானே சொன்னே?"
              
"நீங்க கேட்டதால்தானே சொன்னேன்?"
            
"நாங்க கேட்டா சொல்லிடணுமா" இது ஒருவன். "இப்பவும் நாங்கதாண்டா கேட்கறோம்... எடுக்கறியா இல்லை இன்னும் கணக்குப் போடறியா?" அவன் கையில் ஒரு கத்தி தெரிந்தது.
             
எடுத்துக் கொடுத்து  விட்டு வந்து விட்டேன். சின்ன வயசுலேயே ஒரு நூற்றைம்பது ரூபாய் மேட்டர்ல எனக்கும் என் சித்தப்பாவுக்கும் ஒரு மிஸ் - அண்டர்ஸ்டேண்டிங் நடந்தது ஞாபகம் வந்தது" சிவா கொஞ்சம் இடைவெளி விட்டான். வடையை முடித்து சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். 
             
"இதுக்காடா இவ்வளவு கோபம்" 
              
ஒரு ஊது ஊதி விட்டு சிவா தொடர்ந்தான். 
             
"அப்புறம் மதுரைல இருக்கறப்போ பஸ் ஸ்டேன்ட் பக்கத்துல சிங்கப்பூர்க் குடைன்னு வித்துகிட்டு இருந்தான். எதை எடுத்தாலும் 75 ரூபாய்னு  சொல்லி வித்துகிட்டு இருந்தான். கொஞ்ச நேரம்  வியாபாரத்தைப் பார்த்துகிட்டு இருந்தேன். அதுல ஏதோ ஃபிராடு இருக்கறா மாதிரி பட்டது. அவன் அடிக்கடி என்னை என்ன வேண்டும்னு கேட்டும் பேசாமப் பார்த்துகிட்டிருந்தேன். கொஞ்ச நேரத்துல ரெண்டு மூணு பேர் என்னைச் சுத்தி நின்னுட்டாங்க.... லேசா  பயம் வந்து  ஒரு குடையை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன்....
             
"நல்ல குடை சார்.. எடுங்க... ஸ்பெஷலு.. " என்றான் ஒரு தடியன். "நூற்றைம்பது ரூபாய்" என்றான் இன்னொரு தடியன்.
             
"75 ரூவாத்தானே சொன்னீங்க" என்றேன். இப்போது கடையில் கஸ்டமராக நான் மட்டும்தான் இருந்தேன்.
                
"அது வேற... இது 150 ரூபாய்" என்றான் அவன்.
            
"இது சரியில்லை.... கம்பி வேற மடங்கியிருக்கு.... வேற காட்டுங்க... 75 ரூவாலயே காட்டுங்க" என்றேன். 
           
"பிரிச்சுப் பார்த்து உடைச்சுபுட்டு வேற கேக்கறியா.... இதை நீதான் எடுக்கணும். எடு 150 ரூபாய்" என்றார்கள் அடாவடியாய். 
           
எவ்வளவோ வாதாடிப் பார்த்தேன். மூன்று தடியன்களை மீறி எதுவும் பேச முடியவில்லை. 150 ரூபாய் கொடுத்து விட்டு வெறுப்புடன் கிளம்பினேன். குடையை என்னிடம் நீட்டினார்கள். லட்சியம்  செய்யாமல் நடந்து கொஞ்ச தூரம் சென்று விட்டு, அப்புறம் 'ரூபாயையும் கொடுத்து விட்டு சும்மா ஏன் போகணும்' என்ற ஒரு எண்ணத்தில் திரும்பி வந்து குடையைக் கேட்டேன். 'அதான் கொடுத்துட்டோமே' என்றார்கள். அங்கிருந்த ஒருவர் 'அவர் வாங்காம இல்லை போனார்?' என்று சொல்ல, அவரை உற்றுப் பார்த்தவர்கள் எனக்கு அருகிலிருந்த குப்பைத் தொட்டியைக் கை காட்டினார்கள். அங்கு ஒரு குடை கிடந்தது.  நான் பார்த்த குடை மாதிரி வேறு தெரியவில்லை. இந்த சமயம் எனக்காகப் பேசினவர் பக்கத்துல அதே 3 தடியன்களும் நின்றிருந்தார்கள். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியும் என்பதால் குடையையும் எடுக்காமல் பேசாமல் வந்து விட்டேன். இதுதான் என்னை ரொம்பவே கடுப்பேத்தின இன்னொரு150 ரூபாய் மேட்டர்..... இன்னிக்கி அவன் இவ்வளவு பேரையும் தாண்டி, வந்து என்கிட்டே வந்து கேட்டது மட்டுமில்லை, குறிப்பாய் 150 ரூபாய் என்று கேட்டதும் இது ஞாபகம் வந்து 'குபீர்'னு பத்திகிட்டு வந்திடுச்சி"    

    


சிகரெட் முடித்து, டீயைக் குடித்தபடியே சிவா சொல்லி முடிக்க, கடைக்காரரிடம் 'கணக்கில் எழுதிக் கொள்ள'ச் சொல்லி விட்டு சிவாவை ஆசுவாசப் படுத்தி, அவனுடன் உள்ளே ஸீட்டுக்குச் சென்றோம்!

             
படங்கள் : நன்றி இணையம் 
                    

திங்கள், 12 நவம்பர், 2012

அலேக் அனுபவங்கள் 14 :: தீபாவளி நாட்கள்.

         
முன் காலத்தில், ஆனந்தவிகடன் தீபாவளி மலர் வந்தவுடன், நானும் என்னுடைய அண்ணனும் முதலில் படிப்பது, அதில் சிறுவர் கதைப் பகுதியில் வருகின்ற 'காட்டிலே தீபாவளி' அல்லது 'கரடியார் வெடித்த கேப்பு' அல்லது 'கபீஷ் கொளுத்திய கம்பி மத்தாப்பூ' போன்ற கதைகளைத்தான்! (எழுதியவர் வாண்டு மாமா? ராஜி?) இங்கே அசோக் லேலண்டு தீபாவளி! - கதையல்ல நிஜம்! 
        
ஆயுத பூஜை போல - தீபாவளி நாட்களும் அசோக் லேலண்டில் இனிமையானவை, இனிப்பானவை. எழுபதுகளில், கம்பெனி சார்பில் ஒரு ஸ்வீட் பாக்ஸ் இலவசமாக கிடைக்கும். மேலும் குறைக்கப் பட்ட விலையில் ஒரு ஸ்வீட் பாக்ஸ் - வேண்டும் என்று எழுதித் தருபவர்களுக்கு, சம்பளத்தில் இருபது ரூபாய் பிடித்தம் செய்து கொண்டு, தீபாவளிக்கு ஓரிரு நாட்கள் முன்னதாக ஸ்வீட் பாக்ஸ் கொடுப்பார்கள். 
                  
எனது ஆபீசில், அனந்தநாராயணன் என்று பெயர் கொண்ட (காது கேளாதவர், பேச இயலாதவர்) நண்பர் ஒருவர் எங்களுடன் பணிபுரிந்து வந்தார். (இவருக்காகவே நான், காது கேளாதோரின் சைகை மொழியை, வேறு ஒரு நண்பரிடமிருந்து கற்றுக் கொண்டேன்)  இவர், தனக்கு வருகின்ற குறைந்த விலை ஸ்வீட் பாக்ஸ் கூப்பனை / விண்ணப்பத்தை எங்கள் அலுவலகத்தில் இருந்த தலைமை வரைவாளர் ஒருவருக்காக விட்டுக் கொடுப்பது உண்டு. தலைமை வரைவாளர், அதற்குரிய தொகையை சம்பளம் வந்தவுடன் அனந்தநாராயணனுக்குக் கொடுத்துவிடுவார். குறைக்கப்பட்ட விலையில் கிடைக்கின்ற தரமான ஸ்வீட் என்பதால், அதற்கு அவ்வளவு டிமாண்ட்! 
             
தீபாவளி மாதத்தில், பெஸ்டிவல் அட்வான்ஸ் தொகையாக ஒரு மாத சம்பளம் வழங்கப்பட்டு, பிறகு பத்து மாதங்களில் அந்தத் தொகை பிடித்தம் செய்யப்படும். 
                 
பெஸ்டிவல் அட்வான்ஸ் கையில் கிடைத்தவுடனேயே பெரும்பாலான டிபார்ட்மெண்ட்களில் இருக்கின்ற நண்பர்கள் செய்யும் ஒரு வேலை (நாங்களும் செய்ததுதான்!) என்ன தெரியுமா? ஆளுக்கு நூறு ரூபாய் போட்டு, தீபாவளி வெடி நிதி (Diwali Crackers Fund) ஒன்றை ஆரம்பிப்பார்கள். இருபது நபர்கள் ஒரு நிதி அமைப்பில் இருந்தார்கள் என்றால், இரண்டாயிரம் ரூபாய் மொத்த வசூல்.இந்த நிதி அமைப்பின் உறுப்பினர்களுக்கு, இந்தத் தொகையிலிருந்து அவசரத் தேவைகளுக்கு கடன் அளிக்கப்படும். 
                
நூறு ரூபாய் கடன் பெறுபவர்கள், மாதம் ஒன்றுக்கு, ஐந்து ரூபாய் வட்டி செலுத்த வேண்டும். (ஆரம்பத்தில் மாதத்திற்கு மூன்று ரூபாய் வட்டி என்று வைத்திருந்தோம். பிறகு நான்கு ரூபாய் ஆகி, பல வருடங்களுக்கு ஐந்து ரூபாய் வட்டியாகவே இருந்தது என்று ஞாபகம்) நூறு ரூபாய் கடன் கேட்பவர்களுக்கு, தொண்ணூற்றைந்து ரூபாய்தான் கடன் கொடுப்போம். அவர் மறுநாள் தொடங்கி, ஒரு மாதத்திற்குள் எப்பொழுது கடன் திருப்பிக் கொடுத்தாலும் நூறு ரூபாயாகக் கொடுக்கவேண்டும். 
                 
சொன்னால் நம்பமாட்டீர்கள் - இருபது உறுப்பினர்களில், மூன்று அல்லது நான்கு நபர்கள் மொத்தத் தொகையையும் கடனாக வாங்கிவிடுவார்கள். மாதா மாதம் வட்டித் தொகை செலுத்திக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு டிபார்ட்மெண்டிலும் குறைந்தது நான்கு தீபாவளி வெடி நிதிக் குழுவாவது இருக்கும். 
               
ஒரு முறை, நான், என்னுடன் இரயிலில் வந்த குரோம்பேட்டை நண்பர் ஒருவரிடம் கேட்டேன், 'நூறு ரூபாய்க்கு, ஒரு மாதத்திற்கு ஐந்து ரூபாய் வட்டி என்பது அதிகம் இல்லையா?' என்று. அவர் சொன்னார், "நாளை திங்கட்கிழமை, நமக்கு லீவுதானே, காலை நாலரை மணி சுமாருக்கு, ஸ்டேஷன் ஓவர் பிரிட்ஜ் மேலே வந்து கொஞ்சம் நின்று பாருங்கள்." 
                
சென்று பார்த்தேன். அவரும், அவருடைய நண்பர் ஒருவரும், அங்கு நின்றிருந்தனர். அவருடைய நண்பரிடமிருந்து, பத்துப் பதினைந்து பேர் பணம் வாங்கிச் சென்றனர். என்ன விஷயம் என்று பிறகு அவர்கள் சொன்னார்கள். வந்து பணம் வாங்கிச் சென்றவர்கள் எல்லோரும் நடைபாதை காய்கறி வியாபாரிகள். ஒவ்வொருவரும் தொண்ணூற்றைந்து ரூபாய்கள் பெற்றுக் கொண்டு, ரயிலிலோ பஸ்சிலோ கொத்தவால் சாவடி (அப்போ கோயம்பேடு மார்க்கட் கிடையாது) சென்று காய்கறி வாங்கி வருபவர்கள். காய்கறி வாங்கிக் கொண்டு வந்து,கடை வைத்து, விற்பனை செய்து, வீடு திரும்பும்போது, தொண்ணூற்றைந்து ரூபாய் கொடுத்தவருக்கு நூறு ரூபாய் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தை தங்கள் குடும்பச் செலவுக்காகக் கொண்டு செல்வார்கள். 
             
காலைக் கடன் கொடுத்து, மாலை வரவு வைக்கின்ற இவர்கள் கையில் இரண்டாயிரம் ரூபாய் இருந்தால், ஒரு வருடத்தில் அது குறைந்த பட்சம் முப்பத்தாறாயிரத்து நானூறு ரூபாய் ஆகிவிடுமே! 
 
               
அடுத்த தீபாவளி முன்பணம் பெறும் காலம் வரும்பொழுது, ஒவ்வொரு உறுப்பினர் கணக்கிலும், குறைந்தபட்சம் நூற்று அறுபது ரூபாய் இருக்கும். சிவகாசியிலிருந்து ஒரு லாரி லோடு வெடி வாணம் வாங்குகின்ற ஏஜெண்ட் - சென்னை ஒன்று பகுதியைச் சேர்ந்தவர் (பலர் இருப்பார்கள்), கம்பெனிகளில் இந்த மாதிரி தீபாவளி நிதி நடத்துபவர்களிடம், வெடிகள் வாணங்கள் பட்டியல் கொடுத்து, பட்டியல் நிரப்புகின்ற உறுப்பினர்களின் தேவைகளை ஒன்று சேர்த்து, வரவழைத்துக் கொடுத்துவிடுவார். ஒவ்வொரு நிதிக் குழுவும், உறுப்பினர்களில் யாராவது ஒருவர் வீட்டில் வெடிகளைக் கொண்டு வந்து, பட்டியல் பார்த்து, பிரித்து, கட்டி, மேலே உறுப்பினர் பெயரை எழுதி வைத்துவிடுவார்கள். அந்தந்த குழு உறுப்பினர்கள், அவரவர்களின் வெடி பாக்கிங்கை அங்கிருந்து பெற்றுச் செல்வார்கள். 
              
தீபாவளி முடிந்த மறுநாள், அலுவலகத்திற்கு வருகின்ற, (தீபாவளி கொண்டாடிய) எல்லோருமே அவரவர்களின் புது உடையணிந்து வருவார்கள். குடும்பஸ்தர்கள், தங்கள் இல்லங்களில் செய்த இனிப்பு, கார வகைகளை தாராளமாக எடுத்து வந்து, தங்கள் பகுதிகளில் பணிபுரிகின்ற தீபாவளி கொண்டாடாத மற்ற மதத்துத் தோழர்களுக்கும், குடும்பம் இல்லாத பேச்சிலர் மக்களுக்கும் கொடுப்பது உண்டு. ("வீட்டுல செஞ்ச பட்சணம்! - சாப்பிடுங்க!")