வியாழன், 28 ஏப்ரல், 2011

ஒரு மின்னல் வேகப் போட்டி!

            
இந்தியர்களுக்கு மட்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களும் (ஞாபக சக்தி அதிகம் இருந்தால்) பங்கு பெறலாம். இந்தப் போட்டியில் பங்கு கொள்பவர்கள், தங்களுடைய பர்ஸ், பணப்பெட்டி, பணம் எதையும் கமெண்ட் பதிவு செய்து முடிக்கும் முன்பு, பார்க்கக் கூடாது. இது மிகவும் முக்கியமான கண்டிஷன். கமெண்ட் செய்து முடித்த பின், விடையை சரி பார்த்து, புதிய கமெண்ட் கூடாது!
  
இப்போ போட்டிக்குச் செல்வோமா?


   
இந்திய பணம் - பத்து ரூபாய் நோட்டில் - இரண்டு பக்கங்களிலும் சேர்த்து, மொத்தம் எவ்வளவு மிருகங்களின் படங்கள் உள்ளன? அவை யாவை?
          
அல்லது - பத்து ரூபாய் நோட்டில் மிருகப் படங்களே கிடையாதா? (௦0?)
                    
பின் குறிப்பு: உதாரணமாக - இரண்டு கரடி படங்கள் இருந்தால், அவைகளை இரண்டு என்றுதான் பதிய வேண்டும்.

பின் பின் குறிப்பு. கருத்துரைகள் - உடனே வெளியிடப்படாது. பதில் அல்லாத, 'இடக்கு மடக்கு' கமெண்டுகளை, உடனே வெளியிட முயற்சிக்கின்றோம்!
 
(ஹி ஹி - இந்தப் பதிவில், பத்து ரூபாய்ப் படம் இல்லைங்க! ஆனால் இங்கு உள்ள படங்கள் என்னென்ன என்பது பற்றியும் பின்னூட்டம் பதியலாம்!).    
                              
ஆரம்பியுங்க, உங்க அட்டகாச கமெண்டுகளை!
               

திங்கள், 25 ஏப்ரல், 2011

கு கு அனுப்பிய இருபத்தைந்து விஷயங்கள்.

           
குரோம்பேட்டைக் குறும்பன், 'எவனோ  ஒரு கோம்பைப் பய' பதிவைப் படித்துவிட்டு, எழுதி அனுப்பிய, அவர் தெரிந்துகொண்ட விஷயங்கள்!

****** ****** *****
1) எங்கள் ஆசிரியர் குழுவில் கிரிக்கட் பைத்தியங்கள் நிறைய பேர்கள் உள்ளனர்.

2) அவர்கள் ஐ பி எல் மாட்ச் பார்த்தபடி அரட்டை அடிப்பார்கள்.

3) மா ஆ மா என்றால் ஆட்ட நாயகன்.

4) ஆட்டத்தை பார்ப்பதுடன், விளம்பரங்களையும் ஆராய்கிறார்கள்.

5) ஹவேல்ஸ் கேபிள் நிறுவனம் ஐ பி எல் போட்டிகளின் விளம்பரதார்களில் ஒன்று.  

6) ஒயர்களில் சன்னமானது முதல் தடிமனானது வரை நிறைய உள்ளன.

7) சின்னப் பசங்களால தடிமனாக உள்ள ஒயரை சுலபமாக முறுக்க முடியாது.

8) அறிவு ஜீவி அடிக்கடி எங்கள் ஆசிரியர் குழுவுடன் அளவுலாவுகிறார்.

9) எளிதில் தீப்பிடிக்காத காப்பு உறை = flame retardant material.
     
10) இந்த காப்பு உறை தீ பிடிப்பதை ஒத்திப் போடும். தவிர்க்காது

11) ஆசிரியர் குழுவில் உள்ள யாருக்கோ அப்பாவி அல்லாத தங்கமணி வாய்த்திருக்கிறார்.

12) அவர் சீரியல் பார்ப்பவர்.

13) அவர் கேட்டால், மறுக்காமல் செயல் படுகிறார்கள் ஆசிரியர்கள்.

14) சாந்தி நிலையம் என்ற பெயரில் ஒரு சீரியல் இப்போ வந்துகிட்டு இருக்கு.

15) சாந்தி நிலையம் என்ற பெயரில் ஒரு திரைப் படமும் முன்பு வந்துள்ளது.

16) அந்தப் படத்தில் நல்ல பாட்டுகள் நிறைய உண்டு.

17) அதுதான் (எம் ஜி ஆர்) மஞ்சுளா நடித்த முதல் படம்.

18) இயற்கை என்னும் இளைய கன்னி - என்ற பாடல் இடம் பெற்ற படம் சாந்தி நிலையம்.

19) ஆசிரியர் குழுவில் ஒருவருடைய குரல் கர்ண கடூரமாக இருக்கும்.

20) (point edited - sorry Mr கு.கு)

21) ஆசிரியர் குழுவில் மரியாதையாகப் பேசத் தெரியாதவர் யாரோ ஒருவர் இருக்கிறார். (அடிச்சுட்டான், எவனோ கோம்பைப் பய etc, etc)

22) கிளியரசில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1950.

23) கிளியரசிலைக் கண்டு பிடித்தவர்கள், ஐவன் கோம்ப், மற்றும் கெட்சீ டெல்லெர்.   

24) ஐவன் கோம்ப் பிறந்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.  (மறைந்து பதினொரு ஆண்டுகள் ஆகிவிட்டன - நன்றி விக்கி)

25) 'எங்கள்' வலைப்பூ வாசகர்களில் ரொம்பப் பேருங்க பயந்த சுபாவம் உடையவர்கள். பிரச்னைகளில் எதிலேயும் மாட்டிக் கொண்டுவிடக் கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக இருப்பவர்கள்.
                            

சனி, 23 ஏப்ரல், 2011

படித்ததும், பார்த்ததும் நினைத்ததும் .. வெட்டி அரட்டை!

 நீண்ட நாட்களுக்குப் பிறகு குமுதம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு என்ன வாய்ப்பு...எப்படி இருக்கிறது என்று பார்க்க காசு கொடுத்து வாங்கியதுதான்! பழைய குமுதம் நினைவுக்கு வந்தது. புகழ் பெற்ற எழுத்தாளர்களின் கதைகள், (சுஜாதா, ரா கி ர, பி வி ஆர், போன்றோரின் சமூக நாவல் தொடர் ஒன்று, சாண்டில்யனின் சரித்திரக் கதையொன்று) ராஜேந்திரகுமார், எஸ் ஏ பி போன்றோரின் சிறுகதைகள், (சுந்தர பாகவதர் சிறுகதைகள்..!) ப்ளான் பட்டாபி போன்ற படக் கதைகள், அஞ்சு பைசா அம்மு, போன்ற தொடர் சிரிப்பு துணுக்குகள் என்று ஒரு பல்வேறு சுவைகளைக் கொண்ட புத்தகமாய் வெளி வந்த காலம் அது. இப்போது ஒன்றுதான் பிரதானம்...சினிமா...பக்கத்துக்குப் பக்கம்...வேறு ஒன்றும் பெரிதாக இல்லை. பாவமாக இருந்தது...நான் (வாங்கிய) என்னைச் சொன்னேன்!
                      

************************************************************************* 
      
கல்கியில் பொன்னியின் செல்வன் படமாவது பற்றி வாசகர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். பெரும்பாலனவர்கள்,  விஷப் பரீட்சை என்றே எழுதியிருந்தனர். வந்தியத் தேவன் விஜய், குந்தவை அனுஷ்கா என்றும் காதில் விழும் செய்திகள் கூறுகின்றன. எனக்கு குந்தவையையும் பிடிக்கும் அனுஷ்க்காவையும் பிடிக்கும் ஆனால் அனுஷ்காவை குந்தவையாய் பிடிக்கவில்லை! என் விருப்பத்தை யார் கேட்கிறார்கள்? நந்தினியாய் யாரோ..? ஆனால் ஒன்று... ஆதித்ய கரிகாலரைக் கொன்றது யார் என்ற விவாதம் இனி மறைந்து போகும். ஒவ்வொரு கேரக்டரையும் கொன்றது யார் என்றுதான் நமக்கே தெரிந்து விடுமே... "உனக்குப் பிடிக்கவில்லை என்றால் விடேன்.... கதையை படிக்காத எத்தனையோ பேருக்கு அந்தக் கதை போய்ச் சேருகிறதே..." என்கிறான் மகன். ஒரேயடியாய் போய்ச் சேர்ந்து விடக் கூடாதே என்பதுதான் கவலை.  
       
**************************************************** 
                                      
ஆனந்த விகடனில் சுகா எழுதும் தொடர் (மூங்கில் மூச்சு?) தொடர் சுவாரஸ்யமாக இருக்கிறது. ராமலக்ஷ்மி கூட இதைப் பற்றி அவர் பதிவில் குறிப்பிட்டிருந்ததாக ஞாபகம். வாலி எழுதும் தொடர் படிக்க வாங்கத் தொடங்கியது. விகடன் பரவாயில்லை. சில பல சுவாரஸ்ய பகுதிகள். படிக்கத் தூண்டுவதால் வாங்கவும் தோன்றுகிறது. பொக்கிஷம் என்று பழைய நினைவுகளை போடுகிறார்கள்.

*************************************************  
          
 சினிமா, கவர்ச்சிப் படங்கள் என்று வியாபாரத்துக்காக தன்னை இறக்கிக் கொள்ளாத கல்கியிலும் பல்வேறு சுவாரஸ்ய பகுதிகள் உண்டு. பிரபலங்களை வாசகர்கள் சந்த்தித்திருந்தால் அல்லது அவர்கள் மறக்க முடியாத புகைப் படங்களைக் கேட்டு வாங்கிப் போடுகிறது. அவர்களுடைய முதல் பட்டுப் புடைவை நினைவை கேட்கிறது. பல்வேறு பத்திரிகைகளுக்கும் பயணப் பட்ட ஞானியின் 'ஓ பக்கங்கள்' உண்டு. நினைவுத் திறன் பற்றி லதானந்த் எழுதும் கட்டுரை உண்டு. இவர் ஒரு வலைப் பதிவரும் கூட. கல்கி சிறுகதைப் போட்டி அறிவித்திருக்கிறது தெரியுமோ... ஜூன் பதினைந்து கடைசி நாளாம்.

**************************************************   
                               

கணையாழி மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. எப்படி இருக்கிறது என்று வாங்கிப் பார்க்க வேண்டும்.

****************************************************  
                        

பாலிமெர் தொலைக் காட்சியில் தலைப்புச் செய்திகள் போடும்போது ஒரு வித்தியாசம் + சுவாரஸ்யம். தலைப்புச் செய்திக்குக் கீழே பெரிய எழுத்துகளில் அந்தச் செய்திக்கு ஒரு கமெண்ட் போடுகிறார்கள்! அறிவிப்பாளர் அதை வாசிக்க மாட்டார். பின்னர் விரிவான செய்தியிலும் அது வராது. உதாரணமாக ஜெயலலிதா ராஜபக்ஷே போர்க் குற்றங்களுக்காக உலக நீதிமன்றத்தில் தண்டிக்கப் பட வேண்டும் என்பதற்கு இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று செய்தி. கீழே கமெண்ட் "சோனியா விடுவாரா?"   
                          
******************************************    
                         
புட்டபர்த்தி சாய்பாபா உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. பக்தர்கள் ஏதாவது அவர் இதில் அற்புதம் நிகழ்த்தக் கூடுமா என்று பிரார்த்தனையுடன் இருக்கிறார்கள். கண்ணீர் மல்க பக்தர்கள் கூடுகிறார்கள். பேட்டியளிக்கிறார்கள் . உள்ளே அனுமதிக்காத அரசாங்கத்தை வசை பாடுகிறார்கள். அங்கு 144 தடை உத்தரவு போடப் பட்டுள்ளது. ஹெட்லைன்ஸ் டுடே சாய்பாபா பற்றி விரிவாக அலசுகிறது.  

 

******************************************************  
                 
       
மக்கள் தொலைக் காட்சியில் இரவு ஒன்பது முதல் பத்து வரை கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை என்று ஒரு நிகழ்ச்சி. அரட்டை என்பது தொலைபேசியில் பேசி மக்களைக் கொல்லும் நிகழ்ச்சிதான். ஆனால் இந்த சேட்டை கொஞ்சம் வித்தியாசம். தொலைபேசி அரட்டைக்கு நடுவில் நான்கைந்து முறை வருகிறது. ஏரல் இமான் அண்ணாச்சி என்பவர் நடத்துகிறார். மைக்கும் கையுமாக நல்ல வெள்ளை பேண்ட், ஷர்ட்டில் மக்களை கலாய்க்கிறார். ஷோ ரூம், ஸ்டம்ப், விக்கெட், ரன் அவுட் போன்ற வார்த்தைகளுக்கு தமிழில் என்ன என்று கேட்கிறார். வரும் பதில்கள் சுவாரஸ்யம். வ உ சி யார் என்றால் மக்களில் சில பேர் காந்தி வரை இழுத்தார்கள்! சரியாகச் சொல்ல முயன்ற ஓரிருவர் வ உ சி சிதம்பரம் பிள்ளை என்றார்கள். உங்கள் தொலை பேசி எண்ணை வேகமாக சொல்லச் சொல்வார். பெருமையாக வேகமாக சொல்லும் மக்களைப் பாராட்டி விட்டு "அண்ணே அதை அப்படியே தமிழ்ல சொல்லுங்கண்ணே" என்பார். அந்தத் திருநெல்வேலி ஸ்லேங்கும் இமான் அண்ணாச்சியின் உடனடி reaction களும் சுவாரஸ்யம். சில முறை பார்க்கலாம்.

************************************************************

CNN IBN னில் ஒரு செய்தி. கேரளாவில் புனித வெள்ளியை தொடர்ந்து வரும் விடுமுறையை அனுபவிக்க மருத்துவர்கள் முன்யோசனையுடன் செயல்பட்டார்களாம்! புதன் வியாழன் இரண்டு நாட்களில் 21 சிசேரியன் ஆபரேஷன்கள். இன்னும் நாட்கள் இருக்கின்றன என்ற பிரசவ கேஸ்களைக் கூட அழைத்து அறுத்து விட்டதாக பரபரப்பு. நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறதாம்!

******************************************************

ஐ பி எல் கிரிக்கெட் மேட்ச் (22-04-2011) ராட்சச கெயில் சதத்தை நெருங்கிக் கொண்டிருக்க உடன் விளையாடிய நம்மூரு கவர்ச்சிப் பையன் கோஹ்லி பட்ட பாடு சுவாரஸ்யமாக இருந்தது. கெயிலின் சதத்துக்கு இரண்டு ரன்களே தேவை. அணி வெற்றி பெற பத்து ரன் தேவை என்ற நிலையில் இருந்த நிலையிலிருந்து கோஹ்லி அடித்து கொண்டிருக்க, ஆறு ரன்கள் தேவை என்ற நிலையில் கோஹ்லி தொட்ட ஒரு பந்து நான்கு ரன்னுக்கு சென்று விட, அவரின் குற்ற உணர்வும் பட்ட பாடும்...கெயிலிடம் சென்று பேசி விட்டு வந்து மிச்ச பந்துகளை தடுத்தாடிக் கொண்டிருந்தார். வெற்றிக்கும் கெயிலின் சதத்துக்கும் இரண்டு ரன்களே தேவை! பந்து வீச்சாளர் இந்த நிலையில் ஒரு வைட் பால் போட...கோஹ்லியின் டென்ஷன் எகிறியதை பார்க்கப்  பாவமாகவும் இருந்தது. புதுமையாகவும் இருந்தது, நெகிழ்ச்சியாகவும் இருந்தது. சக வீரர் சதம் அடிக்க வேண்டும் என்ற அவரின் பொறுப்புணர்ச்சி பாராட்டத் தக்கது. நம்மூரு தினேஷ் கார்த்திக் நினைவுக்கு வந்தார்.   
                
**********************************************************  
                              

வியாழன், 21 ஏப்ரல், 2011

எவனோ ஒரு கோம்பைப் பய!

                                 
ஆசிரியர் குழு ஐ பி எல் மாட்ச் ஒன்றில் மூழ்கி இருந்தது.
                  
'ஆஹா அடிச்சுட்டான்!', ' ஊஹூம் பிரயோஜனமில்லை' 'சூப்பர் ஷாட்', 'இவர்தான் இன்றைக்கு மா ஆ மா' (தப்பா நெனச்சுக்காதீங்க மேன் ஆஃப் தி மாட்ச் - M O M - இப்படி மா ஆ மா ஆயிடுச்சு!) - 'இந்த ஹாவல் கேபிள் கரண்ட் கண்டக்ட் செய்வதை விட அக்னி எதிர்ப்புக்குத்தான் அதிகம் பயன் படும் போல!' என்றெல்லாம் கமெண்ட் அடித்து, ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தோம். 'சின்னப் பையனால இந்த அளவுக்கு அந்த ஹெவி கேஜ் ஒயரை முறுக்க முடியுமா?' என்று கேட்டார் ஓர் ஆசிரியர்.

அறிவு ஜீவியும் வந்திருந்தார். அவர் சொன்னார், "சின்னப் பையனால ஒயரை அந்த அளவுக்கு முறுக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் இதில் அவர்கள் சொல்லும் செய்திதான் முக்கியமே தவிர, செயல் அல்ல."

"பிளாஸ்டிக் தீப்பிடிக்காமல் இருக்குமா?" என்று கேட்டார் மற்றொரு ஆசி.
               
'Flame retardant materials' பயன் படுத்தி கேபிள் வெளிப்புற உறை செய்தால் - எளிதில் தீப்பிடிக்காது. தீப்பிடிக்க சற்று தாமதமாகும். அரை நிமிடத்திற்கு மேல் ஆகும். அதற்காக - தீயிலேயே அதை போட்டு வைத்துவிட்டு, தீப்பிடிக்காமல் இருக்கிறதா என்று ஆராயக்கூடாது." என்றார் அறிவு.

அப்போ அங்கே வந்தார் ஒரு திருமதி. (அப்பாவி அல்லாத தங்கமணி) "கிரிக்கட் எல்லாம் கிடக்கட்டும். 'சாந்தி நிலையம்' என்ன ஆச்சு? அதைப் போடுங்க" என்றார்.

"சாந்தி நிலையமா? - அட! அதைப் போடுங்க. ரொம்ப நல்ல படம். நல்ல பாட்டுகள் நிறைய வரும். மஞ்சுளா நடித்த முதல் படம். இயற்கை என்னும் இளைய கன்னி, ஏங்குகிறாள், துணையை எண்ணி ஈ ஈ ..." என்று கர்ண கடூரமாகப் பாடினார் ஓர் ஆசிரியர்.

"ஐயோ நிறுத்துப்பா. நீ சொல்றது சினிமா; இவங்க சொல்றது சீரியல்" என்று சானலை மாற்றினார் இன்னொரு ஆசிரியர்.   
         
ஜவஹர் சொன்ன மூன்றெழுத்து நடிகை வந்து, 'அழகு, நம்ம கையிலதான் இருக்கு' என்றார். 'எங்க கையில என்ன இருக்கு? எல்லாம் அவன் செயல்!' என்றார் ஓர் ஆசிரியர்.

"அவன் யார்? எவன்?" என்று கேட்டார் ஒருவர்.

"எவனோ ஒரு கோம்பைப் பய! எப்படி காசு பண்றதுன்னு நல்லா தெரிஞ்சுகிட்டு நம்ம தலையில மொளகா அரைச்சுகிட்டு இருக்கான்." இது இன்னொருவர் சொன்னது.

அறிவு ஜீவி - தொண்டையை கனைத்துக் கொண்டார். எல்லோரும் அவரை ஆவலுடன் பார்த்தோம்.

"எவனோ ஒரு கோம்பைப் பய என்பது முக்கால் வாசி சரி. அறுபத்தொரு வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில், 'கிளியரசில்' கண்டுபிடிக்கப்பட்டது. நம் பாட்டிகள் கண்டுபிடித்த மஞ்சள் மற்றும்  பயத்த மாவு  வகையறாக்களை ஒதுக்கி வைத்துப் பார்த்தால், கிளியரசில் தான் பர்சனல் கேர் தயாரிப்புகளின் முன்னோடி. அதைக் கண்டு பிடித்தவர் எவனோ கோம்பை இல்லை, 'இவன் கோம்பே (Ivan DeBlois Combe) அல்லது 'ஐவன் டெப்லோயிஸ் கோம்ப்' என்ற உச்சரிப்புப் பெயர் கொண்ட மனிதர். இவர், 'கெட்சீ டெல்லெர் (Kedzie Teller) என்கிற இரசாயன நிபுணருடன் இணைந்து 1950 ஆம் வருடம் கண்டு பிடித்த தயாரிப்புதான் கிளியரசில் என்கிற, முகப்பரு போக்கும் க்ரீம்.  
    
எல்லா சருமப் பாதுகாப்பு கிரீம்களிலும் காணப்படும் வேதியியல் பொருள் அல்லது பொருட்கள் என்னென்ன என்று வாசகர்களுக்கு ஒரு அறிவியல் போட்டி வையுங்கள். வாசகர்கள் தங்கள் உபயோகிக்கும் அழகு கிரீம் பெட்டி மேலே எழுதியுள்ள பொருட்களைப் பார்த்து, பின்னூட்டத்தில் எழுதட்டும்" என்று சொன்னார் அன்னா அறிவு ஜீவி.

வாசகர்களே - பார்த்து எழுதுங்கள். அதாவது, பெட்டி மேல் இருக்கின்ற விவரங்களைக் காபி & பேஸ்ட் பண்ணுங்கள். அதைத் தவிர, இந்தப் பதிவின் மூலமாக, உங்களுக்கு வேறு சில முக்கியமான விவரங்களும் சொல்லியுள்ளோம். அவை என்னென்ன என்பதையும் பதியுங்கள். அதிக விவரங்கள் பட்டியல் இடுபவர்களுக்கு, அதிகப் பாயிண்டுகள் உண்டு!
            
மற்றும் ஒரு முக்கியமான தகவல். இவன் கோம்பே பிறந்தது - சரியாக நூறு வருடங்களுக்கு முன்பு. அவர் பிறந்த தேதி, ஏப்ரல் இருபத்தொன்று, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து பதினொன்று! (21-04-1911).
             
                         

திங்கள், 18 ஏப்ரல், 2011

தேர்தல் காட்சிகள்...

                           
இதுவரை இல்லாத அளவு வாக்குப் பதிவு. ரெகார்ட்! ஒரு செய்தி 77% என்கிறது. ஒரு செய்தி 80% என்கிறது. எப்படி இருந்தாலும் சாதனை அளவுதான். சில இடைத் தேர்தல்களில் இந்த அளவு வாக்குப் பதிவு நடந்தது உண்டு...அது 'வேறு'!  

இந்த முறை உண்மையான ஹீரோ, மிக மிக பாராட்டப் பட வேண்டியவர்கள் தேர்தல் கமிஷன்.
    
தமிழ் நாட்டில் தேர்தல் என்றால் புழுதி பறக்கும். ஒவ்வொரு வீட்டுச் சுவரும் மரியாதையான மிரட்டலுடன் நாசம் செய்யப் படும். வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் ஓசை வெள்ளம் இருக்கும். இவை எதுவும் இல்லாமல் அமைதியான தேர்தல் நடத்தியது நிச்சயம் சாதனை. பண மழையைக் கட்டுப் படுத்தியது மிகப் பெரிய சாதனை. இதை மீறி பண மழை பெய்தது வேறு விஷயம். பின்னே... தேர்தல் கமிஷன் நேற்று வந்தது. நம்மூர் அரசியல் நாகரீகம் பழம் தின்று கொட்டை போட்டு, பல்லாண்டுகள் பழமையானதாச்சே......தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறதா என்று அதிசயித்துப் போயிருப்பார்கள் வெளி மாவட்டங்கள், வெளி நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்திருப்பவர்கள்... ஆளும் கட்சி எதிர்க் கட்சி என்று பாகுபாடில்லாமல் கண்டிப்பு காட்டியது கமிஷன். பிரவீன் குமாருக்கு ஒரு ஜே... ஆங்கிலச் சேனல்கள் தமிழ்நாட்டின் மானத்தைக் கப்பலேற்றிக் கொண்டிருந்ததை தமிழ்நாட்டு சேனல்கள் கண்டு கொள்ளவுமில்லை, கவலைப்படவுமில்லை! குஷ்பூ அர்நாபிடம் பதில் சொல்ல முடியாமல் மழுப்பியது சுவாரஸ்யம்!    
        
தேர்தல் கமிஷனே புகைப்படத்துடன் கொடுத்த பூத் ஸ்லிப் மிகப் பெரிய மாற்றம், சாதனை. வாக்களிக்க அதுவே போதும் என்றதும் வீட்டுக் குப்பையில் தொலைத்த அடையாள அட்டைகளை தேட முடியாதவர்கள் முன்பு வீட்டில் முடங்கியது போல இல்லாமல் இப்போது வீறு கொண்டு கிளம்பி விட்டார்கள். தேர்தல் செலவு கணக்கு கேட்போம், அதிகமானால் பதவி பறிப்பு வரை போகும் என்றெல்லாம் அறிவிக்கப் பட்டதும் வேட்பாளர்கள் ஓரளவு அடக்கி வாசித்தார்கள். அப்படியும் தரப் பட்ட பணம், பிரியாணிகளை ஆங்கிலச் சேனல்கள் காட்டின.
     
கள்ள ஓட்டு அறவே இல்லை..நன்றி பூத் ஸ்லிப், கடையடைப்பு, கல்யாண மண்டபங்கள் அடைப்பு. கலவரமும் இல்லை. இது மிகப் பெரிய சாதனை. வாக்குச் சாவடியை கைப்பற்றினர் என்று செய்தி வரும்போதே 'பகீரெ'ன்றிருக்கும். அது இல்லாதது மிகப் பெரிய ஆறுதல். டாஸ்மாக் கடைகள் திங்கள் மாலை முதலே அடைக்கச் சொன்னது நல்ல மூவ்.
     
தேர்தல் அன்று பந்த் நடப்பது போல எல்லாக் கடைகளையும் மூட வைத்ததும் நல்ல நடவடிக்கையே. நூறு மீட்டற்றுக்குள், இருநூறு மீட்டருக்குள் என்றெல்லாம் சொல்லப் பட்டாலும் பெரும்பாலும் கடைகள் ஆறுமணி வரை மூடப் பட்டிருந்தன.
           
49 O இந்த முறை அதிகம் விழுந்திருக்கிறது என்கிறது செய்தி. இவை இன்னும் அதிமாகலாம். அரசாங்கம் அசிங்கப் பட வேண்டிய விஷயம். ஆனால் மாட்டார்கள். 49 O வுக்கு பட்டன் இருக்கும் என்று நான் கூட எதிர்பார்த்தேன்! ஆனால் வழக்கம் போல நோட்டில் எழுதி
கையெழுத்திட வேண்டுமாம். 49 O போடுபவர்களுக்கு கையில் மை வைக்க மாட்டார்களாம். நியாயம்தான். ஆனால் சேலம் பகுதியில் அமைச்சரின் மகள் எனக்கு அலெர்ஜியாகும் மை வைக்க விட மாட்டேன் என்றாராம். சரி என்று அதிகாரிகள் விட்டு விட்டார்களாம். அமைச்சரின் மகளாயிற்றே...!
              
வழக்கமான காட்சிகள் செய்தித் தாள்களில்...ஊனமுற்ற வாக்காளர்கள் வாக்களிக்க வருவது, மிக மிக முதிய வாக்காளர்கள் வாக்களிக்க வருவது...தலைவர்கள் வாக்களிப்பது.... இந்த முறை சீனியர் சிட்டிசன்கள் ஊனமுற்றவர்கள் வாக்களிக்க தனி வரிசை என்று சொன்னது ஒரு பாராட்டப் பட வேண்டிய விஷயம். (ஒரு வேளை முன்னமேயே இது சட்ட பூர்வமாக இருந்திருந்தாலும் நடைமுறைப் படுத்தினார்களே...) ஒரு 103 வயது மூதாட்டி எம் ஜி ஆர் இருந்திருந்தால் அவருக்குதான் ராசா என் வோட்டு என்றாராம். இன்னொரு மூதாட்டி கண் தெரியவில்லை உதவி செய்யுங்கள் என்று கேட்டும் கூட தேர்தல் அலுவலர்கள் உதவி செய்யவில்லையாம்.
                
வைகோ கலிங்கப் பட்டியில் வாக்களித்தாராம். சுவாரஸ்யமான கேள்வி..யாருக்கு வாக்களித்திருப்பார்? 49 O?!!
             
தங்கபாலுவின் மனைவி பெயர் பட்டியலில் விடுபட்டிருந்ததால் வாக்களிக்க முடியவில்லையாம். தேர்தல் கமிஷனை குறை கூறி இருந்தார். இவர் மயிலை தொகுதியில் வேட்பாளராக வேறு மனு தாக்கல் செய்து, மனுவில் கையெழுத்திடாததால் (!!) மனு நிராகரிக்கப் பட்டவர்! இன்டர்நெட்டிலேயே கூட உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் அறிவித்த போது இவர் என்ன செய்தாரோ...! சாதாரண பொது ஜனத்துக்கு இருக்கும் விழிப்புணர்வு கூட இவருக்கு இருந்திருக்காதா... ஆச்சர்யம்தான்!
            
அதிகபட்ச வாக்குப் பதிவு இருந்தால் தி மு க தான் ஜெயிக்கும் என்று பழைய வரலாறு காட்டியது சன். ஆனால் ஆளும் கட்சி என்பது தோற்பது வரலாறு என்றது எதிர் தொலை! தெரிய ஒரு மாதம் ஆகும். நீண்ட இடைவெளிதான்.
               
ஆளும் தி முக எங்களுக்கு தூக்கமில்லா இரவுகளைத் தந்தது என்றார் குரேஷி CNN IBN னில். அடுத்த தேர்தலிலாவது இலவச அரிப்புகள், மன்னிக்கவும் அறிவிப்புகள், பண விநியோகம் ஆகியவற்றுக்கு ஒரு முடிவு கட்டப் படும் என்று நம்ப முடியுமா?
              
ரஜினியின் குரலில் பெப் ஒன்றும் இல்லை. கட்டாயப் படுத்தி ரெண்டு கேள்வி கேட்டுக்கறேன் என்றிருப்பார்கள் போலும்.
             
கள்ள வோட்டு, கலவரங்கள் பற்றிப் பேசிய போது ஒரு நண்பர் வாக்களிக்கும்போது ஏற்படும் அந்த 'பீப்' ஒலி பற்றிப் பேசினார். எல்லா சின்னத்துக்கும் ஒரே மாதிரி 'ஒரே ஸ்வர' சத்தமா, 'வெவ்வேறு ஸ்வரங்களா' என்று ஆராய்ந்திருக்க வேண்டுமென்றார். இன்னொரு ஆசிரியர் கீழ் கண்டவாறு கூறினார்.     
               
எல்லா தொகுதிகளிலும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்து கொண்டிருக்கும் நேரத்தில் சில தொகுதிகளில் மட்டும் ஏன் வாக்குவாதங்களும் வாக்குப் பதிவு எந்திரங்கள் உடைத்தலும் நடக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தோம். உள்ளூர் பிரமுகர்களின் சக்தி நிரூபணம் முதல், கணக்கில் வராத கள்ளப் பணம் வரை பல்வேறு காரணங்கள் அலசப் பட்டாலும், நண்பர் ஒருவர் சொன்ன காரணம் எங்களை நிமிர்ந்து உட்காரச் செய்தது. நீங்களும் இந்த வழியிலேயே யோசனை செய்து உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்களேன்:
        
உங்கள் தகுதியை ஆராய்ந்து விட்டு, தேர்தல் அதிகாரி பதிவு எந்திரத்தைத் தயார் நிலையில் வைக்கிறார். நீங்களும் உங்கள் வேட்பாளர் பெயரை விட அவர் சின்னத்தைத் தேடிக் கண்டுபிடித்து ஓட்டுப் போடவும் செய்கிறீர்கள் உடனே ஒரு பஸ்ஸர் நீளமாக ஒலிக்கிறது. அந்த ஒலியில் ஒரு செய்தியை ஒளித்து, வெளியில் உட்கார்ந்திருப்பவர் துல்லியமாக இவர் இந்தக் கட்சி/ வேட்பாளருக்குத்தான் ஓட்டளித்தார் என்று புரியாத பாஷையில் கூவிக் கூவி சொல்ல முடியும்.     
             
                             
இவைகளின் மொழி அறிந்த விக்ரமாதித்தன் போன்று சரியான கருவியுடன் உட்கார்ந்திருப்பவர் கணக்கிட்டுக் கொள்வதுடன் சம்பந்தப்பட்டவருக்குத் தெரிவிக்கும் பட்சத்தில் அவர் வந்து மறு வாக்குப் பதிவு நடக்கும்படி ஏடாகூடமாக ஏதாவது செய்ய முயற்சிக்கலாம்.
                 
இது சத்தியமாக நண்பர்களின் கற்பனையில் உதித்த விஷயமானாலும் நம்மை விட கற்பனையும் அறிவுத் திறனும் மிக்க சுஜாதா போன்றவர்கள் இந்த எந்திரங்களை வடிவமைக்கும் பொழுது இதெல்லாம் யோசிக்காமலா இருந்திருப்பார்கள்?    
                         

வியாழன், 14 ஏப்ரல், 2011

லஞ்ச பாரதம்...

               
வெளியே வந்து இன்ன குழந்தை என்று அறிவித்த தாதிக்கு முன்னூறு ரூபாய் முதல் லஞ்சம். 
   
பெயர் சேர்த்து பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பிறப்பு அலுவலகத்தில் ஐநூறு அடுத்த லஞ்சம்.    
    
நல்ல பள்ளியில் சேர்க்க நன்கொடை என்ற பெயரில் லஞ்சம்.
    
நல்ல மதிப்பெண் பெற விடைத்தாள் துரத்தி லஞ்சம். 
         
மதிப்பான கல்லூரியில் இடம் கிடைக்க மேனேஜ்மென்ட் என்ற பெயரிலொரு லஞ்சம்.  
     
கல்விக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை லஞ்சம்.
          
நல்ல வேலை கிடைக்க, நல்ல எதிர்காலம் கிடைக்க நாளும் கடவுளுக்கு லஞ்சம். 
                     
வீடுகட்ட வில்லங்க சான்றிதழ் பெற கார்ப்பரேஷனுக்கு லஞ்சம்.
                
தொல்லை இல்லாமலிருக்க கவுன்சிலருக்கு லஞ்சம். 
                
வாட்டர் கனெக்ஷன், மின் கனெக்ஷன் எல்லாவற்றிலும் கலெக்ஷன் லஞ்சம். 
               
ரேஷன் கார்ட் வாங்க லஞ்சம்...பான் கார்ட் வாங்க லஞ்சம். 
             
பாஸ்போர்ட் வாங்க போலீசுக்கு லஞ்சம்.
                   
விரைந்து விசா வாங்க அங்கும் லஞ்சம்.
            
பெண் பார்க்க ப்ரோக்கருக்கு லஞ்சம்..விரைந்து மணமுடிக்க ரெஜிஸ்டராருக்கு லஞ்சம். 
        
வெளியூர் சென்று வர விரைந்த பயணச் சீட்டுறுதிக்கு அரசாங்க அதிகாரபூர்வ தத்கால் லஞ்சம். 
            
வருமானவரி சரி செய்ய ஆடிட்டர் முதல் அதிகாரிகள் வரை லஞ்சம்.
                       
நல்ல கார் வாங்க சுங்கத்துறைக்கு லஞ்சம். 
                 
எட்டு  போடாமலிருக்க  எக்கச்சக்க லஞ்சம்.  
          
ஃபேன்சி நம்பர் வாங்க. கேஸ் சீக்கிரம் கிடைக்க லைன்மேனுக்கு லஞ்சம். 
                 
வழக்கில் மாட்டினால் போலீஸ் ஸ்டேஷனில் லஞ்சம்.
         
ஹெல்மெட் போடாவிட்டால் ஐம்பது ரூபாய் லஞ்சம்.
                   
ஆர்சி புக் இல்லாவிட்டால் ஐநூறு ரூபாய் லஞ்சம். 
           
வேண்டிய ஆளைப் பிடிக்க லஞ்சம்.
        
வேண்டாத ஆளை அடிக்க லஞ்சம்.
              
இறந்த பின்னும் சீக்கிரம் எரிக்க சுடுகாட்டில் லஞ்சம். 
                       
இறப்பு சான்றிதழ் பெற லஞ்சம். 
                
லஞ்ச வழக்கில் சிக்கினால் மந்திரிக்கு லஞ்சம். 
                 
கொடுத்த லஞ்சங்கள் போக, வாங்கும் லஞ்சம்? 
                   
காய்கறிக்காரன் தரும் கறிவேப்பிலை லஞ்சம்.
       
அரசியல்வாதி தரும் இலவச லஞ்சம்.
              
பத்திரிகைகள் தரும் இலவச இணைப்பு லஞ்சம்.
                        
தொலைகாட்சி தரும் புதிய படங்கள் லஞ்சம்.
              
வாக்களிக்க வாங்குவோம் லஞ்சம்.
        
லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டுமாம்!  ஓங்கிக் குரல் எழுகிறது.
              
ஆஹா, ஒழித்து விடலாம்.....
                
ஆனா, என்ன கமிஷன்?  
                         
              

புதன், 13 ஏப்ரல், 2011

உள் பெட்டியிலிருந்து.... 2011 04

                     
              
எது முதலில்?     
    
(அ) தொலை பேசி மணி அடிக்கிறது.

(ஆ) குழந்தை அழுகிறது..

(இ) வாசல் கதவு தட்டப் படுகிறது. 


(ஈ)மழை பெய்கிறது. மாடியில் காய வைத்த துணிகளை எடுக்க வேண்டும்.

(உ) உள்ளே திறந்து விடப் பட்டு தண்ணீர் வீணாகக் கொட்டிக் கொண்டிருக்கும் குழாயை நிறுத்த வேண்டும்.
  
(ஊ)அடுப்பில் பால் பொங்குகிறது. 
 
எந்த வரிசையில் முடிவெடுப்போம்?


எது அதிகம்?

குழந்தை சொன்னதாம் தாயிடம்,"அம்மா! நீ என்னை நேசிப்பதை விட நான் உன்னை அதிகம் நேசிக்கிறேன்" தாய் : "எப்படி கண்ணே" குழந்தை சொல்கிறது..."உனக்கு இரண்டு குழந்தைகள், ஆனால் எனக்கு நீ ஒரே ஒரு அம்மாதானே.."

ஊக்கம்

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எல்லா நம்பிக்கையையும் இழந்து நாம் முடிந்தது என்று எண்ணும் கணம் கடவுள் புன்னகைக்கிறார்."மகனே இது ஒரு வளைவுதான், முடிவு அல்ல! (Just a bend and not the end)

கவித...கவித...

கேட்டேன்..கேட்டேன்..
நினைக்கும்போது மென்மழை,
இரவின் மடியில் மெல்லிசை,
குழந்தையின் சிரிப்பு,
பொய்யில்லா மனங்கள்,
முடிவில்லா வாலிபம்,
சாய்ந்து கொள்ள தோள்,
தாய் மடி தூக்கம்,
தூக்கத்தில் மரணம்,
மரணம் வரை உன் நட்பு...

Reminder போடு God

கடவுளே,
நான் நம்பிக்கை இழக்கும்போது
என் ஏமாற்றங்களைவிட
உன் அன்பு உயர்ந்தது
என்பதையும்,
என் வாழ்வின்
உன் திட்டங்கள்
என் கனவுகளை விட
சிறந்தது
என்பதையும்
எனக்கு நினைவூட்டு...!

அன்பான வேண்டுகோள்

எதிரிகள்
எதிரில் நிற்கிறார்கள்...
நண்பர்கள்தான்
முதுகில் குத்துகிறார்கள்.
நண்பனே..
நீயாவது
சொல்லிவிட்டு
துரோகம் செய்..

விகடகவி 
                            
WAS IT A CAR OR A CAT I SAW ...என்ன இது என்கிறீர்களா...இப்பாலிக்கா படிச்சாலும் அப்பாலிக்கா  படிச்சாலும் ஒரே மாதிரி வருது பாருங்க...

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

வாக்களிப்பது முக்கியம்.


                   
பொதிகைத் தொலைக்காட்சியில், அவ்வப்போது, கீழ்க்கண்டவர்கள் தலையைக் காட்டி, மக்கள் எல்லோரும் வோட்டுப் போடவேண்டும். வோட்டுப் போடுகின்ற ஜனநாயகக் கடமையிலிருந்து மக்கள் தவறி விடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கின்றனர். (நம்மில் எவ்வளவு பேர் பொதிகை அல்லது தூர்தர்ஷன் தொலைக்காட்சி போன்றவற்றை பார்க்கிறோம் என்பது பெரிய கேள்வி. )

அ) அப்துல் கலாம் அவர்கள்.

ஆ) சுகாசினி

இ) இன்று காலையில், தோனி கூறினார். கடைசி இரண்டு வாக்கியங்கள் மட்டும், தமிழிலேயே கூறினார். "நம்முடைய வாக்கு, நம்முடைய எதிர்காலம்!"
     
சினிமா, சீரியல்கள் மட்டும்தான் மக்களில்  பெரும்பாலானவர்களின் கவனத்தைக் கவர்ந்த விஷயம். இப்பொழுது கிரிக்கட்டும் வெகுஜன கவனம் கவருகின்ற அம்சமாக இருக்கின்றது.
தேர்தல் என்பது, வெகுஜனங்களை அவ்வளவாகக் கவர்வது இல்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.  
                                                 

தேர்தலில் வாக்களிப்பது என்பது, நாம் வேட்பாளர்களுக்கோ அல்லது அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளுக்கோ அளிக்கும் ஆதரவோ அல்லது எதிர்ப்போ அல்ல. வேட்பாளராக நிற்பவர்களுக்குள், இவர் வந்தால் பரவாயில்லை - மற்றவர்களை விட இவர் வருவது நல்லது என்று "நான்" நினைக்கின்றேன் என்பதுதான் நாம் போடுகின்ற வோட்டு.

இந்த ஒவ்வொரு வோட்டும், நாட்டின் மீது, நம் மாநிலத்தின் மீது, நம் எதிர்காலத்தின் மீது நாம் வைக்கின்ற அக்கறையை, உலகிற்குக் காட்டுகின்றது.

ஒரு தொகுதியில் பதினைந்து சதவிகிதம் வோட்டுகள்தான் பதிவாகின்றது என்று வைத்துக் கொள்வோம். அங்கு நிற்கின்ற யாராவது ஒரு வேட்பாளர், பதிவான வோட்டுகளில் பெரும்பான்மை பெற்று, வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுவார். ஆனால், யார் ஆட்சிக்கு வந்தாலும், இந்தத் தொகுதி மீது விஷேஷ கவனம் எதுவும் செலுத்தமாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், இந்தத் தொகுதி மக்கள் உறக்கத்தில் உள்ளவர்கள் அல்லது சமூகத்தின் மீது அதிக அக்கறை இல்லாதவர்கள்.

வேறொரு தொகுதியில், எண்பத்தைந்து சதவிகிதம் வாக்குகள் பதிவாகின்றன, அதில் வெற்றி பெறுகின்ற வாக்காளர் தமக்கு அடுத்து வந்த வேட்பாளரை விட ஆயிரம் வோட்டுகள் / அல்லது அதற்கும் குறைவான வித்தியாசத்தில்தான் ஜெயிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்தத் தொகுதி மீது, ஆளும் கட்சி, எதிர்க் கட்சி இரண்டுமே எப்பொழுதும் அக்கறை செலுத்தும். தங்கள் கட்சி பக்கம், இந்தத் தொகுதியை இழுக்க, முழு கவனம் செலுத்துவார்கள்.

தப்பித் தவறி (அன்னா ஹசாரே புண்ணியத்தில்) இப்பொழுது வரைவு வடிவம் பெற்று வருகின்ற, லோக்பால் / லோகாயுக்த் அமைப்புகள் சட்டமாக்கப் பட்டு, இந்த சட்டங்கள் மக்களுக்கு / மக்கள் சக்தி ஆயுதமாக மாறினால், அரசியல்வாதிகளைக் கண்டு சாதாரண மக்கள் பயந்து வந்த காலம் மாறி, மக்களைக் கண்டு பயப்பட வேண்டிய காலத்தின் கட்டாயம், அரசியல்வாதிகளுக்கு ஏற்படும். இந்த நிலைமை, நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு நிச்சயம் வித்திடும்.

வாக்களிக்கும் நிலையில் உள்ள அனைத்து வாக்காளர்களும், உங்கள் தொகுதியில், உங்கள் வோட்டை, நீங்களே போடுங்கள். யாருக்கு வேண்டுமானாலும் வோட்டுப் போடுங்கள். ஆனால், வோட்டுப் போடுங்கள்.
                 
வோட்டுச் சாவடியில் விழுகின்ற ஒவ்வொரு வோட்டும், நம் எதிர்காலத்தின் மீது நமக்கு அக்கறை இருக்கின்றது என்பதை உலகுக்கு உணர்த்தும்.
         

வியாழன், 7 ஏப்ரல், 2011

அழகிய மந்திரி!

மந்திரிக்கழகு வரும் பொருள் மறைத்தல் ..... மன்னிக்கவும் 'மந்திரிக்கழகு வரும் பொருளுரைத்தல்' என்று ஒரு தமிழ் சொற்றொடர் ஆத்திச்சூடியோ மூதுரையோ கொன்றை வேந்தனோ நினைவில்லை. ஆனால் ஒரு அழகிய மந்திரியை தம் வீட்டில் வைத்திருக்கும் நண்பரை அண்மையில் சந்தித்தேன்.

"ஸார், நீங்கள் இதை நம்பமாட்டீர்கள், ஆனால் இது உண்மை. நேற்று நாங்கள் எல்லாரும் வீட்டில் உட்கார்ந்து டிவியில் இந்திய வெஸ்ட் இண்டீஸ் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென்று என் பேரன், 'தாத்தா சட்னு வா, யூசுப் பதான் சிக்ஸ் அடிக்கப் போறார்.' என்று கூவினான். வேகமாக ஓடிப்போய் டிவியை கூர்ந்து கவனித்தேன். ஆம். பதான் ஆறு விளாசித் தள்ளினார். ரி ப்ளே அல்ல, லைவ் தான்!! அது மட்டுமா, பதான் அவுட் ஆனது, அடுத்த பவுண்டரி என்று என் பேரன் ஞான திருஷ்டியோடு எல்லாவற்றையும் சொல்லச் சொல்ல அப்படியே நடந்தது. ஐந்து அல்லது பத்து வினாடிகளுக்கு முன்பாக பின்பு நடக்க இருப்பதை அப்படியே சொல்லி என்னை பிரமிக்க வைத்தான் பேரப்பிள்ளை. ஒரு வேளை அடுத்த இந்தி பேசும் அலைவரிசையில் சற்று முன்பாகவே படம் வருகிறதோ என்று பார்த்தாலும் அவன் வேறு சேனல் பார்க்க எங்கள் வீட்டில் இலவச டி வி இல்லையே!"  
            
ஒரே மூச்சில் பட படவென்று சொல்லி முடித்தார், என் நண்பர்.
   
குழம்பிப் போன எனக்கு கொஞ்ச நேரம் கழித்துதான் விஷயம் விளங்கியது.
                
அது என்ன மர்மம்? ஊகியுங்கள் பார்க்கலாம்.   
    

புதன், 6 ஏப்ரல், 2011

உலகக் கோப்பை சிந்தனைகள்...

              
உலகக் கோப்பையா கிண்ணமா -  ஏதோ ஒன்றை வென்றாகி விட்டது. (கிண்ணம் என்றால் சின்னதாக ஷேவிங் கப் போல இருக்குமோ... ) வென்ற த்ரில் மகிழ்ச்சி எல்லாம் இன்னும் தீராத நிலையில் சில சிந்தனைகள்...

   
             
 
எண்பத்தி மூன்றில் வென்ற ப்ருடென்ஷியல் கப்புக்கும் இன்றைய உலகக் கோப்பைக்கும் என்ன வித்தியாசம்? 
     
அன்று வென்ற இந்திய அணிக்கும் இன்றைய அணிக்கும் என்ன வித்தியாசம்?
அன்று இவ்வளவு விளம்பரமும் பணமும் இல்லை. அன்றைய அணித்தலைவர் கபிலுக்கு இவ்வளவு பில்ட் அப் இல்லை.
                     
அன்றைய ஆட்டங்கள் பல இந்தியர்களால் தொலைக்காட்சியில் பார்க்க முடியாமல் போனது. பல பரபரப்பான கணங்கள் பார்க்க முடியாமல் போனது வருத்தம். இன்று எல்லாமே ஓவர் டோஸ். ஆனாலும் த்ரில்லுக்குக் குறைவில்லை. இன்றைய இளைய தலைமுறையைப் பார்க்கும்போது இன்னும் வேகமாக, உற்சாகமாக, விவரம் தெரிந்தவர்களாகக் காணப் படுகிறார்கள்.
 
சென்ற வாரம் வரை, இந்திய அணியைப் பற்றி, அணியில் இருந்த ஒவ்வொருவரைப் பற்றி அவர்தம் குடும்பத்தாரின் பேட்டி என்று திகட்ட திகட்ட பார்த்தாயிற்று. தோற்ற ஸ்ரீலங்கா அணி ஊர் சென்ற விவரம், அங்கு எப்படிப் பட்ட வரவேற்பு என்றெல்லாம் தகவலே இல்லை. நமக்கு டெண்டுல்கர் போல அவர்களுக்கு முரளிதரன். இறுதி ஆட்டம் முடிந்து ஊர் திரும்பிய அவருக்கு அவர்கள் என்ன மரியாதை செய்தார்கள் தெரியாது. நம்ப ஊர்ல தோற்று விட்டு வருபவர்களின் கொடும்பாவி கட்டி அவமானப் படுத்துவார்கள். சென்ற முறை வாசிம் அக்ரமின் பாக். அணி ஊர் திரும்ப முடியாமல் துபாய் லண்டன் என்று கலைந்து சென்றது நினைவுக்கு வருகிறது!
    
சங்கக்காராவிடம் இரண்டு கேள்விகள்...நியூ சிலாந்தை அரையிறுதியில் வென்றதும் சங்கக்காரா சிங்களத்தில் என்ன சொன்னார்? (ரொம்ப முக்கியம்...!) 'நான்தான் வென்றேன், நான்தான் வென்றேன்' என்று குழப்பி இரண்டாவது முறை டாஸ் போட வைத்தது பேட்டிங் தெரிவு செய்யத்தானே...!
 
இறுதிப் போட்டியில் வென்ற இந்திய அணியின் சாதனைகள் : முதல் முறை அதிகபட்ச ஸ்கோரை சேஸ் செய்தது...சதம் அடித்தவர் இருக்கும் அணிதான் வெல்லும் என்ற கோட்பாட்டை உடைத்தது, சொந்த மண்ணில் வென்றது ஆகியன. மேலும் தொண்ணூற்று ஆறில் கோல்கத்தாவில் காம்ப்ளியின் கண்ணீருக்கிடையிலும், இரண்டாயிரத்து ஏழில் லீக் போட்டியிலும் தோற்கடித்த ஸ்ரீலங்காவை வென்றது சந்தோஷம்!
   
இறுதிப் போட்டியில் சுண்டி விடப் பட்ட காய்ன் எவ்வளவுக்கு ஏலம் போயிற்று? காம்பிர் உடைத்த பேட் எவ்வளவுக்கு ஏலம் போயிற்று? (எல்லாவற்றையும்தான் காசாக்கி விடுவார்களே...!)

இந்தியா லீக் ஆட்டத்தில் ஒரு தோல்வியையும் கஷ்டப்பட்டு ஒரு 'டை'யையும் சந்தித்த போதும் காலிறுதியிலும் அரையிறுதியிலும் வலுவான அணிகளை சந்தித்து வென்றது குறிப்பிடத் தக்கது. இறுதி ஆட்டம் சமமான அணி. எந்த அணியுடன் ஆடினாலும் அவர்களுக்கு இணையாக ஆடுவது இந்திய அணியின் சிறப்பு! ஆனால் என்னதான் சந்தோஷம் இருந்தாலும் இப்படியா விமானச் செலவு இலவசம், வரிச் சலுகைகள், வீடு இலவசம் என்று அள்ளி விடுவார்கள்....அபபடி ஏழ்மையில் வாடுபவர்களா இந்திய அணியினர்...!

யுவராஜ் பந்துவீச்சிலும் சோபித்தது சிறப்பு. இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரை அவரையும் சுரேஷ் ரெய்னாவையும் நிச்சயமாய் நன்றாக ஆடுவார்கள் என்று நம்ப முடிந்தது. யுவராஜ் ஒரு ஸ்பெஷல் மனிதருக்காக ஆடுகிறேன் என்று சஸ்பென்ஸ் வைத்தது ரசிக்க வைத்தது. தோனி நிச்சயமில்லாத ஆட்டக் காரராக இருந்து கடைசி ஆட்டத்தில் சோபித்தது சிறப்பு. யூசுஃப் பதானுக்கு பதிலாக ரெய்னாவை எடுத்தது நல்ல யுக்தியாக மாறியது. யூசுஃப் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே இருந்தார். காம்பீர் முதலிரண்டு ஆட்டத்தில் பதட்டத்தில் இருந்தாலும் இறுதி ஆட்டத்தில் அவர் இல்லையென்றால் வெற்றி இல்லை என்ற நிலை! ஸ்ரீசாந்த் எதற்கு அணியில் இருந்தார் என்பதும் புதிர். வேஸ்ட்!

யுவராஜும் தோனியும் இரண்டு இடங்களில் 'நான்' வென்று கொடுத்தேன் என்ற அர்த்தம் தொனிக்கப் பேசியதை வெற்றிக் களிப்பில் மறந்து விடலாம்! உண்மையில் யாருடைய தனி முயற்சியிலும் இந்திய அணி வெல்லவில்லை. அணியின் மொத்த முயற்சியுமே வெற்றிக்குக் காரணம். பாகிஸ்தானுடனான ஆட்டம் தவிர மற்ற ஆட்டங்களில் யுவியின் தொடர்ந்த வெற்றி, டெண்டுல்கரின் ஆட்டம், ரெய்னாவின் பதட்டமில்லாத ஆட்டம், காம்பிரின் கம்பீர ஆட்டம்...

டெர்மினேட்டர் பெரிதாகச் சாதிக்கவில்லை! டெண்டுல்கர் வயதை மறந்து எல்லைக் கோட்டுக்கருகில் விழுந்து, டைவ் அடித்து ஃபீல்டிங் செய்தது, அவர் அடித்த சில சிக்சர்கள், அழகான ஸ்டிரெயிட் டிரைவ் ஆகியவை மறக்க முடியாதவை.

தோற்ற ஸ்ரீலங்கா அணியினர் உணர்ச்சி காட்டாமல் இருக்க வென்ற இந்திய அணியில் பலர் (மகிழ்சிக்)கண்ணீர் சிந்தியது ஆச்சர்யமாகவும் இருந்தது. வேடிக்கையாகவும் இருந்தது, நெகிழ்ச்சியாகவும் இருந்தது. யுவராஜ்தான் அழுகையைத் தொடங்கி வைத்த மகானுபவர்! பின்னர் ஹர்பஜன், ஜாகீர், சச்சின், சேவாக், தோனி என்று ஜோதியில் இணைந்தனர்.

மொத்தத்தில் ஜாகீரின் பந்துவீச்சு மகிழ்ச்சியளித்தாலும் இறுதி ஆட்டத்தில் முதல் ஐந்து ஓவர்களில் ஆறு ரன்கள் மட்டும் கொடுத்தவர் கடைசி ஸ்பெல்லில் ரன்களை வாரி வழங்கினார். அதையும், மற்றும் தோனியே சொன்ன மாதிரி அஷ்வினுக்கு பதிலாக ஸ்ரீசாந்தை எடுத்ததையும், தோனி முன்னதாக பேட்டிங் செய்ய இறங்கியதையும் ஜெயித்து விட்ட காரணத்தால் மறந்து விடலாம். தோற்றிருந்தால் நிச்சயம் கேள்வி எல்லோரும் கேட்டிருபபார்கள்தான்.
   
நடுவில் ரொம்ப நாட்களாக விளையாடாமல் இருந்த அணி, பலவீனமான அணி என்றெல்லாம் பேசப் பட்ட பாகிஸ்தான் அணி அபபடி பலவீனமான அணியாக இல்லை. அஃபிரிடி பூம் பூம் என்று பேட்டிங் செய்யா விட்டாலும் பந்து வீச்சும், அணித் தலைமையும் சிறப்பாகவே இருந்தன. பழைய யூனுஸ் கானையும், அப்துல் ரஜாக்கையும் காண முடியவில்லை. பாக் அணியுடன் விளையாடிய போது பழைய பகைமை** இல்லாமல் நட்புடன் ஆடியது ரசிக்க முடிந்தது. நல்ல வேளை ஸ்ரீசாந்தை அந்த ஆட்டத்தில் எடுக்கவில்லை.

இங்கிலாந்து அணி, நியூ சிலாந்து அணி மற்றும் தென் ஆப்பிரிக்க அணி ஆகியவை இதுவரை கோப்பை வென்றதில்லை. நியூ சிலாந்து அணி ஃபீல்டிங் தவிர மற்ற அம்சங்களில் பலவீனமான அணியாக இருந்தது. இங்கிலாந்து அணி ஒன் மேன் ஷோ போல ஸ்ட்ராஸ் ஆடினால் உண்டு இல்லா விட்டால் ஜோனாதன் ட்ராட்......வாய்ப்பு கம்மி. தென் ஆப்பிரிக்கா இன்னும் முயற்சித்திருக்கலாம். க்ரூப் பிரிக்கும் போதும் இந்த முறை இங்கிலாந்தையும் தென் ஆப்பிரிக்காவையும் வெவ்வேறு க்ரூப்பில் போட்டிருக்கலாமோ என்னமோ...

அயர்லந்து அணியின் சாதனைகள் ஆச்சர்யம். கெவின் ஓ ப்ரைன் பிரமிக்க வைத்தார். சேவாகின்  விக்கெட் எடுத்ததும் ஜான்ஸ்டன் ஆடிய நடனம் அழகு...ரசிக்க வைத்தது. மற்றபடி நெதர்லாந்து, கென்யா போன்ற அணிகள் ஏன் விளையாடின என்று புரியவில்லை. அடுத்த முறை அணிகளை மாற்றி அமைக்க வேண்டும்.

எண்பத்தி மூன்றில் மேற்கிந்தியத் தீவுகளை வென்று கோப்பையைக் கைப்பற்றிய பிறகு அதே மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் அப்புறம் ஆடிய ஆட்டங்களில் வாங்கிய அடி நினைவுக்கு வருகிறது. இந்த முறை அப்படியெல்லாம் நடக்காது என்று நம்பலாம். வலுவான அணிதான் இப்போதைய இந்திய அணி. பிரவீன் குமார் இல்லாத குறையும் நன்றாகவே தெரிந்தது. வலுவான பேட்டிங் அணி என்று சொல்லப்பட்டாலும் ஒருவர் ஆட்டம் இழந்ததும் எல்லோரும் வேகமாக பெவிலியன் திரும்புவதும் நடந்தது. பேட்டிங் பவர் ப்ளே ஒரு முறை கூட சிறப்பாகக் கையாளப் படவில்லை. பேட்டிங் சொன்ன அளவு கூட - காகித அளவில் கூட -பந்து வீச்சு இல்லையென்றாலும் எப்படியோ ஒப்பேற்றி ஜெயித்தாயிற்று!

டெண்டுல்கர் ஓய்வு அறிவிப்பாரா...உலகக் கோப்பை தொடங்குமுன் தோனி மாய்ந்து மாய்ந்து அதற்கு சிபாரிசு செய்தது போல தோன்றியது. அடுத்த உலகக் கோப்பைக்கு உத்தேச இந்திய அணி என்னவாக இருக்கும்?

காம்பிர், சேவாக், விராத் கொஹ்லி, ரெய்னா, யுவராஜ், ஹர்பஜன், போன்றோர் நிச்சயம் அணியில் இருக்கக் கூடும்.

அடுத்த ஒரு மாதத்துக்கு சேனல்களுக்குப் பேச விஷயம் கிடைத்து விட்டது. இன்றே பரபரப்பான தகவல்கள் வரத் தொடங்கியும் விட்டன...தோனி மொட்டை அடித்து விட்டாராம்....யாரை என்று கேட்காதீர்கள். அப்புறம் இருக்கவே இருக்கு அடுத்த திருவிழா...ஐ பி எல் திருவிழா...

 உண்மைத் தோற்றத்தைப் பற்றி கவலைப் படாமல் மேக் அப் இல்லாமல் ரஜினி மனைவி மகளுடன் கூட்டத்தில் ஒருவராக இருந்து கை தட்டி சந்தோஷப் படுத்தியது, சந்தோஷப் பட்டது, அதே போல ஷாரூக் கான், ஆமீர்கான், ஹ்ரித்திக் ரோஷன் என்றெல்லாம் கூட்டத்தில் இருந்தும் மக்கள் அவர்களை லட்சியம் செய்யாமல் ஆட்டத்தில் கவனமாக இருந்தது, குறிப்பிடத்தக்க விஷயங்கள்.
    
டெண்டுல்கரை தூக்கிக் கொண்டு மைதானம் சுற்றியது போலவே கோச் கேரி கிர்ஸ்டனையும் தூக்கி சுற்றி மரியாதை செய்தார்கள்.

அரை இறுதியில் உட்கார்ந்து ரசித்த சோனியா இறுதிப் போட்டியில் வென்ற பிறகு ரோடில் வந்து மக்களின் ஊடே வண்டியில் அமர்ந்தபடி கை கொடுத்து மகிழ்ச்சியில் பங்கு கொண்டதை சில சேனல்களில் காட்டினார்கள். இறுதி ஆட்டத்தில் ராகுல் காந்தி டீ ஷர்ட்டில் மக்களிடையே அமர்ந்திருந்தார்.
    
முடிக்கும் முன்பு இரண்டு லேட்டஸ்ட் விஷயங்கள் கொடுக்கப் பட்ட கோப்பை உண்மையான கோப்பை அல்ல என்ற செய்தி. கோடி கோடியாக அள்ளி எல்லா ஆட்டக் காரர்களுக்கும் வழங்க முடிந்த நிர்வாகத்தால் இருபத்திரண்டு லட்சம் தந்து கஸ்டம்ஸ் கிளியர் செய்வது கஷ்டமானதா...!

**பகைமை இல்லாத பாகிஸ்தான் அணி என்று சொன்னது கண் பட்டு விட்டது...அஃபிரிடி திடீரென ஏதோ புழுதியைக் கிளப்பிக் கொண்டிருப்பதாக செய்தி வந்துள்ளது.
        
தேர்தல் வெறுப்புகளை கொஞ்ச காலம் மறந்திருக்க முடிந்தது.
               

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

ஹலோ மை டியர் ராங் நம்பர்!


                                                                        

டிர்ரிங் .... டிர்ர்ர்ர்ர்ர்ரிங்!

ஹலோ இந்திய அரசாங்க லோகோ வடிவமைப்புத் துறை.

"................"
"என்னது கவர்ன்மெண்ட் முத்திரையில் இருக்கின்ற மூன்று சிங்கங்கள் முகங்களாக ஹர்பஜன் 'சிங்', மகேந்திர 'சிங்' தோனி, யுவ்ராஜ் 'சிங்' முகம் போடணுமா? அடப்பாவிங்களா உங்க கிரிக்கட் கிறுக்குக்கு ஒரு அளவே இல்லையா!"

=================

டிர்ரிங் .... டிர்ர்ர்ர்ர்ர்ரிங்!


ஹலோ - அகில இந்திய காமெடி நடிகர்கள் சங்கம்.

"......................."
"என்னது உங்க பார்ட்டி சார்பா, டர்ட்டியா பேச எங்க உறுப்பினர் யாராவது வருவார்களா என்றா கேட்கிறீர்கள்? வைங்கடா ஃபோனை! பிச்சிப் புடுவோம் பிச்சி!"

==================

டிர்ரிங் .... டிர்ர்ர்ர்ர்ர்ரிங்!


ஹலோ எங்கள் ப்ளாக் அலுவலகம்.

"................................."

"என்னது? எலெக்டிரானிக் சாமியார் விலாசம் வேண்டுமா? அவரை மும்பை கிரிக்கட் மைதானத்தில் யாரோ சிலர் நன்றாகக் கவனித்து அனுப்பிவிட்டார்கள்! ஐ பி எல் போட்டிகள் வரை அவர் மௌன விரதமாம்!"

==================

டிர்ரிங் .... டிர்ர்ர்ர்ர்ர்ரிங்!


ஹலோ அடி தடி ஆட்டோ அனுப்புவோர் சங்கம்.

"......................."

"மொத்தம் அஞ்சு பேருங்களா? அனுப்பிடுவோம். இருபத்தஞ்சு லட்சம் காஷ் கொடுத்துடுங்க. அட்ரஸ் சொல்லுங்க? எங்கள் ப்ளாக் .......அப்புறம்?...."

எஸ்கேப் ...... !

==================

திங்கள், 4 ஏப்ரல், 2011

ஹானஸ்டி தி பெஸ்ட் பாலிசி

இலவச தொலைக் காட்சி, ஒரு ரூபாய் அரிசி, வாக்குக்கு ரொக்கம் இவை குறித்து பல வீடுகளிலும் சர்ச்சை நடக்கும் என்று தோன்றுகிறது. எரிந்த கட்சி, எரியாத கட்சி ( அப்படி என்றால் என்ன என்று யாரும் கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்) எல்லாவற்றிலும் இருக்கும்தானே.

வாங்கலாம் என்று கட்சி கட்டுபவர் முன்வைக்கும் வாதம் இப்படியாக இருக்கும்:

நான் வாங்காவிட்டால் என் பெயர் சொல்லி வேறு யாரோ அபேஸ் செய்யப் போகிறார்கள்.  அதற்கு நானே வாங்கிக்கொண்டு விடலாமே.

எவன் எவனோ எவ்வளவோ மூட்டை அடிக்கிறான்.  நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?

வாங்கிக் கொண்டு வேலைக்காரி மாதிரி ஒரு டிசர்விங் கேஸ் பார்த்துக் கொடுத்துவிடலாம்.

வாங்கக் கூடாது என்பவர் சொல்லும் பாயின்ட்கள் இப்படி இருக்கும்:

என் பெயரை சொல்லி எவன் வாங்கினாலும் அந்தப் பாவம் அவனுக்கு. எனக்கு என்ன ஆயிற்று?

இது ஏழை பாழைகளுக்கான சலுகை. வசதி இருப்பவர் இதைப் பெறக் கூடாது.

இது ஒரு மாதிரி மறைமுக லஞ்சம். தேர்தல் சமயத்தில் வருமானால் அது வாக்குக்கு பணம் கொடுக்க ஒரு குறுக்குவழி என்று தான் கொள்ள வேண்டும். அதற்கு நாம் துணை போகக் கூடாது. 

எவனெவனோ ஊழல பண்ணினால் நானும் ஏன் பண்ண வேண்டும்?

வேலைக்காரி மாதிரி ஆட்களுக்கு தமக்குத் தாமே வாங்கிக்கொள்ளலாமே. நாம் ஏன் நடுவில் தலையை நுழைக்க வேண்டும்? 

சரி இந்த  வாதங்கள் எல்லாம் ஏன் இப்போது சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா?  அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

திடீரென்று ஒரு நாள் காலை எங்கள் வீட்டு மோட்டார் (போர் வெல் பம்பு) ஸ்ட்ரைக் செய்து விட்டது.  துரை என்ற பிளம்பர் வந்து பார்த்து விட்டு, இரண்டு மணி நேரம் வேலை செய்து அதை சரி செய்து விட்டார்.
    
"துரை, எவ்வளவு கொடுக்கணும்? "

" உங்கள் இஷ்டம் சார், நீங்க கொடுப்பதைக் கொடுங்க. "

"சே அப்படியெல்லாம் சொல்லக் கூடாது, வேலை செய்பவர் தான் கூலி கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும்.  சொல்லுங்க எவ்வளவு தரணும்?"

"சரி ஒரு ஐம்பது ரூபாய் குடுங்க."

எனக்கு மூச்சே நின்று போய் விட்டது.  இவ்வளவு அப்பாவியாக இருக்கிறாரே இந்த ஆள்! அவனவன் என்ன வேலை செய்தாலும் முன்னூறு, நானூறு என்று அடித்து வாங்குகிறார்கள்.  நானே இவருக்கு நானூறு தர ரெடியா இருந்தது எனக்கு மட்டும் தான் தெரியும்.  சரி, ஒரு நூறு நமக்கும் ஆதாயமாக இருக்கட்டும் என்று முன்னூறு ரூபாயை எடுத்து நீட்டினேன். 

நம்பினால் நம்புங்கள், நம்பாவிட்டால் போங்கள்.  துரை நூறு ரூபாய்க்கு மேல் வாங்கிக் கொள்ள மறுத்து, தயக்கத்துடன் நூறு ரூபாயைப் பெற்றுக் கொண்டு சென்றார்.  இரண்டு நாளைக்கு முன்னால்  நடந்த ஆச்சரியம் இது. 
    
நொண்டிச் சாக்கு சொல்லி கலர் டீவி, ஒரு ரூபாய் அரிசி என்று வாங்குபவர்களுக்கு மத்தியில் துரை போன்ற அசாதாரணங்கள் இருப்பது ஒரு சந்தோஷம். வேறு என்ன சொல்ல?