செவ்வாய், 30 ஏப்ரல், 2013

உள் பெட்டியிலிருந்து 4 2013


ஜோக்க்காம்...

1) இண்டர்வியூ எடுப்பவர் : "எந்த உயிரினம் வானில் பறந்தாலும் பூமியில் குழந்தை பெறும்?"
                                           

 

மிஸ்டர் எக்ஸ் : [பதில் தெரிந்த உற்சாகத்துடன் சத்தமாக] "ஏர்ஹோஸ்டஸ்"

 

2) பார்ட்டி முடிந்து வழக்கம்போல லேட்டாகத் திரும்பிய கணவனிடம் மனைவி, "என்னை நாலு நாளுக்குப் பார்க்க முடியலைன்னா என்ன பண்ணுவீங்க?"
 
                                              

 

எதிர்பாராமல் ஒரு பரிசா..கணவன் குதூகலமாக "நன்றாயிருக்குமே" என்றான்.

திங்கள் கடந்து செவ்வாய் புதன் வியாழன் என்று தாண்ட இப்போது கணவன் முகத்தில் இருந்த வீக்கம் சற்றே மறைய, ஆம்... 4 நாட்களுக்குப் பின் இன்று அவனால் மனைவியை ஓரக் கண்ணால் பார்க்க முடிகிறது!

 

3) மனைவி சொல்வதைக் கேட்டுத் தலையாட்டிக் கொண்டிருப்பது என்பது நெட்டில் Terms and conditions படிப்பது போன்றது. புரிகிறதோ, இல்லையோ 'I agree' தான்!

 

4) எனக்கும் அவளுக்கும் நட்பு இல்லை, பகை இல்லை, காதல் இல்லை, மோதல் இல்லை, உறவு இல்லை, பிரிவு இல்லை, அன்பு இல்லை, கோபம் இல்லை,... ஆனால் நான் யாரிடமும் பேசுவதற்கு அவள் விடுவது இல்லை! "your account balance is too low. You are not allowed to make a call"நு சொல்கிறாள். என்ன செய்ய?!

 

5)அமெரிக்கா : "நாங்கள்தான் நிலவில் முதலில் கால் வைத்தோம்"

ஆஸ்திரேலியா : "வீனஸ்ல நாங்கள்தான் முதல்"

இந்தியா : "சூரியன்ல நாங்கள்தான் முதல்"

ஆஸ்த்., அமெரிக்கா : "பொய் சொல்லாதீங்க... எரிஞ்சி போயிருப்பீங்க"

இந்தியா :"
இது தெரியாதா... நாங்கள் ராத்திரில இல்லை காலை வச்சோம்"

========================

குழப்பமான ஓட்டத்தை விட நம்பிக்கையான மென் நடை எவ்வளவோ நல்லது. யாரையும் பின்பற்ற வேண்டாம், ஆனால் எல்லோரிடமிருந்தும் பாடம் கற்போம்.

 
                                                      

 

நம்முடைய, புன்னகையின் பின்னால் இருக்கும் சோகம்,
கோபத்தின் பின்னால் இருக்கும் அன்பு,
மௌனத்தின் பின்னே இருக்கும் அர்த்தம்
இவற்றை அறிந்தவனே நம் நண்பன்.

 
                                                       

 

நேற்றைய பொழுதில் நாம்தான் அவர்கள் வாழ்வில் முக்கியமானவர்கள் என்ற நிலையிலிருந்து இன்று நாம்தான் அவர்கள் வாழ்வில் மிக வேண்டப் படாதவர்கள் என்ற நிலை வந்தால் வாழ்வின் மிகக் கடினமான தருணம் அதுதான்.
 
                                                        

 

சரியான முடிவு உங்கள் நம்பிக்கையையும், தவறான முடிவு உங்கள் அனுபவத்தையும் அதிகரிக்கிறது.
 
                                                        

 

ஒரு புதிய உறவு நம் வாழ்வை அழகாக்கினாலும் நாம் இழந்த ஒரு நெருங்கிய சொந்தத்தை அது நிச்சயம் நிரப்புவதில்லை.

காதல்


"நீ என்னைக் காதலிக்கிறாயா?"

"ஆம்"

"எவ்வளவு?"

"நிறைய...நிறைய"

"நான் என்ன சொன்னாலும் கேட்பாயா?"

 
                                                       

 

"ஆம்... நிச்சயமாக"

"அப்போ இந்த மாடியிலிருந்து குதி"


"சரி,," விளிம்பு வரை நடந்தவன் திரும்பினான். "வா... வந்து என்னைத் தள்ளி விடு"

நம்பிக்கை.

=======================


                                               

 

பிரார்த்தனை செய்வதற்குமுன் நம்புங்கள்.
பேசுமுன் கேளுங்கள்.
செலவழிக்குமுன் சம்பாதியுங்கள்.
எழுதுமுன் யோசியுங்கள்.
கைவிடுமுன் முயற்சி செய்யுங்கள்.

==============================

மனிதன் உடல்நலத்தைப் பற்றிக் கவலைப் படாமல் சம்பாதிக்கிறான். பின்னாளில் சம்பாதித்ததை அந்த உடல்நலத்தைக் காக்கவே செலவிடுகிறான்!

 
                                              

 

கதவு மூடியிருக்கிறதே என்று தயங்கி நிற்காதீர்கள். சில பூட்டாத கதவுகள் உங்கள் முயற்சி என்னும் சிறு தள்ளலுக்காகக் காத்திருக்கின்றன.

                                          

 

நேற்றைய சண்டை இன்றைய உறவை / நட்பை பாதிக்காத நட்பே சிறந்த  நட்பு.

குற்ற உணர்வு கடந்த காலத் தவறுகளை சரி செய்வதுமில்லை. கவலைகள் எதிர்காலத்தை வளமாக்குவதும் இல்லை. வாழப் பழகுவோம்!

 
                                         

 

அசாதாரணமான விஷயங்களைச் சாதாரணமாகச் செய்யத் தேவையில்லை. சாதாரண விஷயங்களை அசாதாரணமாக செய்தால் போதும்.

                                      

 

ஒரு பொய் சொல்லி ஒரு நட்பை இழப்பது எளிது. அந்த நட்பை மீண்டும் பெற 1000 உண்மைகள் கூட உதவுவதில்லை.

 

"நானழகா நிலவழகா" காதலி கேட்டாள்.
 
                                           

 

"தெரியாது... ஆனால் உனைப் பார்க்கும்போது நிலவின் நினைவு வருவதில்லை. நிலவைப் பார்க்கும்போது உன் நினைவு வருகிறது"

 

கண்களால் காணும்போதும் புரியவில்லை!
கைகளால் எடுத்தும் தெரியவில்லை!!
யோசித்தாலும் விளங்கவில்லை!!!
இது என்ன என்ன? அன்பா, நட்பா காதலா?

                                     

 

அடப் போங்கப்பா... பரீட்சை வினாத்தாள்!

 

மனித மனங்கள் வினோதம்தான். அவர்கள் அறிவைப் பற்றி கர்வம் இருக்கும் அளவு அவர்களின் கர்வம் பற்றிய அறிவு இல்லை!

 

வெற்றியை நோக்கி..

                                                            
 
முடிவே தெரியாத
பாதையில்
பயணிக்கிறேன்...
முடிவில் நீ இருப்பாய்
என்று நம்பி!

திங்கள், 29 ஏப்ரல், 2013

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 4 2013


பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால்,...... அது பிரசுரமானால்,................ அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 
 
இங்கு ஒரு மாறுதல்.
   

எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...  
==================================================================== 

மனிதனின் மறுபக்கம் படத்தில் சிவகுமார் 'கடவுள் தோற்றுப் போன இடம் அது. அந்த இடத்தில் நான் ஜெயிக்க விரும்புகிறேன்' என்று பேசுகிறார். 

1) கடவுள் தோற்றுப் போகும் இடம் எது? மனிதன் ஜெயிக்கும் இடம் எது?

2) வாழ்க்கை உங்களை உருவாக்கியதா, நீங்கள் உங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டீர்களா?

3) சங்கீதம், நாட்டியம் ஆகிய கலைகள் மதம் சார்ந்தே இருக்கின்றனவா? ஆயின், அது நன்மையா, தீமையா?

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

ஞாயிறு 199:: தனிமை

                         
         
தனிமை பற்றி கவிதை எழுதுங்க. கருத்துரையாய்ப் பதியுங்க! 
          
பாட முடிந்தால், பாடி எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புங்க. நம்ம ஏரியாவுல வெளியிடுவோம். 
                        

சனி, 27 ஏப்ரல், 2013

பாசிட்டிவ் செய்திகள் ஏப்ரல் 21, 2013 முதல், 27, ஏப்ரல் 2013 வரை



எங்கள் B+ செய்திகள்.

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


1) பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக, இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஜின்னா:   நான், பார்வையற்ற மாற்றுத்திறனாளி. தேர்வு முடித்த மாணவர்கள், கோடை விடுமுறையை சிறப்பாக பயன்படுத்த, சில பயிற்சி வகுப்புகளுக்கு செல்வர். இதுபோல், பார்வையற்ற மாணவர்களுக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என்ற சிந்தனையில், "இந்தியன் அசோசியேஷன் பார் பிளைண்ட்' என்ற தொண்டு நிறுவனத்தை துவக்கினேன்.
                                                   

இந்நிறுவனம் மூலம், "சாதனா சிறப்பு பயிற்சி பள்ளி'யை உருவாக்கி, பார்வையற்ற மாணவர்களுக்கு பயிற்சியளித்து, வேலைவாய்ப்பை உருவாக்குகிறோம். பார்வையற்ற மாணவர்களை கையாளத் தெரிந்த ஆசிரியரை நியமித்து, இலவசமாகவே பயிற்சி தருகிறோம்.பார்வையற்ற மாணவர்கள், அரசு பணியில் சேர முன் போட்டித் தேர்வுகளை எழுத தேவையில்லை என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது பார்வையற்ற மாணவர்களும், மற்றவர்களோடு போட்டித் தேர்வு எழுதியே, பணிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. போட்டித் தேர்வுக்கு பயிற்சி தரும் தனியார் பயிற்சி பள்ளிகளில், பிரெய்லி புத்தகங்கள், பயிற்சி உபகரணங்கள் என, பார்வையற்றோருக்கு எந்த வசதியும் கிடைக்காததால், பார்வையற்ற மாணவர்களுக்கு என, தனியாக சிறப்பு பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்தேன்.


அரசு துறை மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பணி வாய்ப்புகள் உள்ளன. அதற்கு ஏற்றார் போல், ஆங்கில அறிவை வளர்க்க, "ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்புகள், பர்சனாலிட்டி டெவலப்மென்ட், கணினி பயிற்சி என, சாதாரண மனிதர்களோடு பார்வையற்ற மாணவனும் போட்டி போடும் அளவிற்கு, பயிற்சி தருகிறோம். "யுனைட்டட் வே ஆப் சென்னை' என்ற நிறுவன உதவியுடன், 25 கணினிகள் வாங்கி, பார்வையற்ற மாணவர்களுக்கான கணினி மையத்தையும் நடத்துகிறோம். கோடையில் நடத்தப்படும் இவ்வகுப்புகளை, இனி ஆண்டு முழுவதும் நடத்த முயற்சித்து வருகிறோம்.தொடர்புக்கு: 96008 22994.

2) ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை :

ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு திறமை இருக்கத்தான் செய்யும்,அதை வெளிக்கொண்டு வந்து பாராட்டினால் போதும்,அவர் திறமையின் மிச்சத்தை காட்டுவார்,விரைவில் உச்சத்தை தொடுவார்.


 அந்த வேலையைத்தான் நமது இணையதளத்தின் பொக்கிஷம் செய்து வருகிறது.அந்த வரிசையில் வருகிறார் வெங்கடேஷ்.கோவை சிங்கநல்லூரைச்சேர்ந்தவர்,வயது 27,ஏழாவது வரை படித்துள்ளார்.அங்குள்ள தங்க நகை கடையில் நகை செய்யும் தொழிலாளியாக உள்ளார்,காலையில் ஒன்பது மணிக்கு வேலைக்குள் நுழைந்தால் இரவு பத்து மணி வரை வேலை,வேலைதான். வெங்கடேஷ்க்கு ஏதோ ஒரு வகையில் சாதனை செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது,அது பற்றிய சிந்தனையில் இருந்தபோது உடன் வேலை செய்பவர் பத்திரிகையில் வந்த ஒரு செய்தியை ஆச்சர்யத்துடன் படித்துள்ளார்.


செய்தியில் இருந்த ஆச்சர்யம் என்னவென்றால் ஒருவர் இரண்டு கிராம் எடையில் தங்கத்தில் சைக்கிள் செய்து சாதனை படைத்துள்ளார் என்பதுதான்.இதைப்படித்ததும் இதைவிட குறைவான எடையில் நாம் ஏன் சைக்கிள் செய்யக்கூடாது என்று முடிவு செசய்து 180 மில்லி கிராமில் ஒரு தங்க சைக்கிளை செய்துவிட்டார்.,இந்த சைக்கிளின் ஹேண்டில் பாரை திருப்பமுடியும்,பெடலை சுழற்ற முடியும்,சக்கரமும் சுற்றும்.
இவ்வளவு நுணுக்கமாக வெங்கடேஷ் உருவாக்கிய சைக்கிளை பார்த்து முதலில் பாராட்டியவர் இவரது முதலாளி அம்பிகாபதிதான்.இவர் தந்த ஊக்கத்தால் 150 மில்லியில் கிரிக்கெட் உலககோப்பை,கோணியம்மன் கோவில் தேர்,கிட்டார்,தாமரை பூ மற்றும் துப்பாக்கி.
ஊதினால் பறந்துவிடும் 170 மில்லிகிராம் எடையில் இவர் செய்துள்ள துப்பாக்கியை, நிஜ துப்பாக்கி போல மடக்கி திறக்கலாம்,குண்டு போடும் இடத்தை சுழற்றலாம்.

18 காரட் தங்கத்தை உபயோகித்து, இப்படி இவர் செய்யும் தங்க மினியேச்சசரின் மதிப்பு ஐநூறு ரூபாய்க்குள்தான்,ஆனால் இதன் பின்னணியில் உள்ள இவரது உழைப்பு மிகவும் பெரியது.ஒரு மினியேச்சர் செய்ய சமயத்தில் ஒரு நாள் கூட ஆகிவிடுமாம்.வேலை இல்லாத நாளில்,நேரத்தில் இது மாதிரி பொருட்களை இவர் உருவாக்குகிறார்.இவரது தங்க மினியேச்சர் அனைத்துமே நிச்சயம் கின்னஸ் ,மற்றும் சாதனை புத்தகங்களில் இடம் பெறக்கூடியதுதான்.,ஆனால் அதற்கு முதலில் பத்திரிகையில் இது பற்றிய செய்தி வரவேண்டும் என்பது முதல் விதி,நீங்கள் என் சாதனை கனவு,நனவாக வழிகாட்டுவீர்களா என்ற வெங்கடேஷ்க்கு தந்த பதில்தான் இந்த கட்டுரை.வெங்கடேஷின் தொடர்பு எண்:9943971200.



3) காது கேளாதவர்களும் செல்போனை பயன் படுத்துவதற்கான கருவியைக் கண்டு பிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள் !!

காது கேளாதவர்களும் இனி செல்போனில் பேசலாம். அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரி மாணவர்களான சிவனேஷ், வேலரசன் மற்றும் செல்வராஜ் ஆகியோர். இவர்கள் பொறியியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இறுதி ஆண்டு பயில்கிறார்கள். மூவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.                                                     

தங்கள் படிப்பின் இறுதி ஆண்டு புராஜெக்ட்டாக இவர்கள் கண்டறிந்துள்ள இந்தக் கருவி மூலம் மறுமுனையில் பேசுபவரின் பேச்சைத் துல்லிய மாக உணர முடிவதோடல்லாமல், நம்மைப் போலவே காது கேளாதவர் கள் பொழுதுபோக்காகப் பாடல்களைக் கேட்டும் ரசிக்கமுடியும்.

இவர்களுக்கு இந்த ஐடியா எப்படி வந்தது?
 
 (எடுத்துச் சேமித்து வைத்திருந்த படம் எங்கே போச்சு?)


“எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு சரியாகக் காது கேட்காது. அவருக்காக நாம் ஒரு கருவி கண்டுபிடித்தால் என்ன என்ற யோசனையின் விளைவே இந்தக் கருவி” என்கிற சிவனேஷ், “அரைமனசோட அவர் என் கருவியைப் பயன்படுத்தி செல்போன்ல பேசுனப்ப அவர் முகத்துல வெளிப்பட்ட சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை” என்கின்றபோது, சிவனேஷின் முகத்தில் சாதித்த பெருமிதம் அலையாடியது.

எப்படி இயங்குகிறது இந்தக் கருவி?

ஹெட்போன் போன்று இருக்கும் இந்தக் கருவியில் பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருக்கும் மோட்டாரில்தான் இருக்கிறது சங்கதி. ஹெட்போனை மொபைலுடன் இணைத்துப் பேசும்போது மோட்டாரின் அதிர்வினைப் பயன்படுத்தி மறுமுனையில் பேசுபவரின் பேச்சைக் கேட்க முடியும் என்பதே இதன் செயல்பாடு.

“பொதுவாகவே மூக்கு, தொண்டை, காது போன்றவை ஒரே நரம்பால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், இவை எல்லாவற்றையும் இணைக்கும் பாலமான பல் இதற்கு உதவி செய்கிறது. ஹெட்போனில் இருக்கும் நீண்ட குச்சி போன்ற அமைப்பு பேசும்போது, தொடர்ந்து பல்லில் பட்டு அதிர்வினை ஏற்படுத்தி காது கேட்பவர்கள் கேட்க உதவி செய்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தால் பேசுவதைக் கேட்பதோடல் லாமல் பாடலையும் கேட்க முடியும்” என்று சிவனேஷ் தங்கள் கருவியின் செயல்பாட்டைப் பற்றி சாதாரணமாகச் சொல்லிவிட்டாலும் கருவியைக் கண்டுபிடிக்கவே 2,500 ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.

பேட்டரி மூலம் இயங்கும் இந்தக் கருவியை எந்த செல்போனோடு வேண்டுமானாலும் இணைத்துப் பயன்படுத்த முடியும். தற்பொழுது பேடண்ட் வாங்க முயற்சித்து வருகிறார்கள். அது கிடைத்து, தொழிற் சாலையில் தயாரிக்கத் துவங்கி விட்டால் குறைவான விலைக்கே வழங்க முடியும் என்கிறார்கள். 

4) ஒரு சின்ன சோலார் டிஷில் ஊருக்கே மின்சாரம் தரலாம் - IBM'ன் புதிய 3 இன் 1 சோலார் தொழில்நுட்பம்:

IBM's 3 in 1 Solar Invention can give Electricity / Water / Air-Conditioning - 3 இன் 1 சோலார் கண்டுபிடிப்பு / ஒரே நேரத்தில் அதிக மின்சாரம், தூய குடிதண்ணீர், மற்றும் குளிர்ந்த காற்று கிடைக்கும் வசதி - செலவும் மிக மிக குறைவு

உலகத்தில் பல சோலார் கண்டுபிடிப்பு வந்தாலும் அது மிக ஸ்லோவாக தான் நடை முறை படுத்தும் காரணம் அதன் விலை. சோலார் எனர்ஜியை மின்சாரமாக மாற்றுவதற்க்கு கண்ணாடி, சிலிக்கான் போன்ற பல மினிரல்கள் சேர்த்து தான் ஃபொட்டோ வால்ட்டிக் என்னும் சோலார் கன்வெர்ஷன் செய்து மின்சாரம் பெறப்படுகிறது. இப்போது ஐபிஎம் ஒரு புது வகை சோலார் டெக்னாலஜியை கன்டுபிடித்துள்ளது. இதற்க்கு பெயர் High Concentration PhotoVoltaic Thermal (HCPVT) இதன் மூலம் ஒரு சென்டிமீட்டர் சிப்பில் 2000 மடங்கு சூரிய சக்தி கிடைக்கும் அளவுக்கு மிகவும் எளிதான சில மெட்டல்கள் மூலம் அமைத்துள்ளனர். 

இதில் 30% சூரிய சக்தியை மின்சாரக மாற்றியும் மீதி உள்ள சூடில் உப்பு தண்ணீரை சேலினேட் முறையில் நல்ல தண்ணீராக மாற்றியும் மிச்சம் உள்ள எனர்ஜியில் குளிர்ந்த காற்று கிடைக்குமாறு 3 இன் 1 ஆக அமைத்திருக்கிறார்கள்.
அதாவது பொதுவாக இப்போது உள்ள ஒரு முழு சோலார் ஃபோட்டோவால்டிக் பிளேட் மூலம் 300 வாட்ஸ் கிடைக்கும் ஆனால் இங்கு 1 சென்டி மீட்டரில் 200 முதல் 250 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். ஒரு இரண்டடிக்கு இரண்டி இருந்தால் முழு வீட்டுக்கு 8 மணி நேர சூரிய சக்தியில் 24 மணி நேரமும் கிடைக்கும் என்றால் பெரிய கண்டுபிடிப்பு தான். அதாவது ஒரு ஊருக்கே ஒரு டிஷ் போது. இவர்கள் சஹாரா பாலைவனத்தில் 2% சதவிகித இடம் கொடுத்தால் உலகத்தின் மொத்த மின்சார தேவையும் எந்த ஒரு எனர்ஜி இல்லாமல் 100% கிடைக்குமாம்.
இதை அமைக்க வெறும் 12,500 ரூபாய் தான் ஒரு ஸ்கொயர் மீட்டருக்கு ஆகும் செலவு அது போக 1000 யூனிட் கரென்ட்டுகு வெறும் 5 ரூபாய் தான் செலவு.கூடவே தண்ணீர் பஞ்சம் மற்றூம் இயற்கை ஏசி வேறு கிடைக்கும் 



(எங்கள் டெக்னிகல் ஆசிரியர் இதில் சில சிறு சந்தேகங்களைச் சொல்லியுள்ளார். ஆனாலும் வரவேற்கத்தக்கச் செய்தியே என்பது அவர் கருத்து)

5) அதிக விலையில் விற்கும் வெளிநாட்டு மருந்துகளுக்கு, முற்றுப்புள்ளி வைத்த பெண் வழக்கறிஞர், ராஜேஸ்வரி: நான், சென்னையை சேர்ந்தவள். புனே சட்டக் கல்லூரியில் சட்ட படிப்பை முடித்த பின், "காப்புரிமை' தொடர்பான வழக்குகளில் வாதாடுவது வழக்கம். பல வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள், காப்புரிமையால் கொள்ளை லாபம் பெறுவதை தடுத்ததன் மூலம், இந்தியாவின் பல லட்ச ஏழை நோயாளிகள், குறைந்த விலையில் மருந்துகளைப் பெற்று பயன்பெறுவர். 


                                           
 

புற்றுநோய்களில் மிகவும் கொடியது, "பிளட் கேன்சர்' எனப்படும், ரத்த புற்றுநோய். இந்நோய் தாக்கியவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வெள்ளை அணுக்கள் உடனடியாக குறைவதால்,நோய் கண்டறியப்பட்ட சில மாதத்திலேயே மரணமடைவர். 

வாழ்நாளை நீட்டிக்க சுவிஸ் நாட்டின், "நோவார்டிஸ்' என்ற மருந்து நிறுவனம், 1992ல், "இமேடினிப் மெசிலேட்' என்ற மருந்தை விற்க ஆரம்பித்தது. இம்மருந்தை வாங்க, ஒருவரின் மாத செலவு மட்டும், 1.20 லட்சம் ரூபாய்.நல்ல லாபம் பார்த்த நோவார்டிஸ் நிறுவனம், பெரும்பாலான நாடுகளிலும் விற்க ஆரம்பித்து, காப்புரிமையையும் பெற்றது.

1997ல், இந்திய கண்டுபிடிப்பாளர் பதிவு ஆணையத்திடமும் விண்ணப்பித்தது. ஆனால், "நாட்கோ' என்ற இந்திய நிறுவனம், நோவார்டிசுக்கு இணையான, ரத்த புற்றுநோய்க்கான மருந்தை, 2002ல் கண்டுபிடித்து, விற்பனை செய்தது. இம்மருந்தின் மாத செலவு வெறும், 8,000 ரூபாய்.நாட்கோவை விட, 15 மடங்கு அதிக லாபத்தில் வெளிநாட்டு நிறுவனம் விற்பனை செய்வதால், அதற்கு காப்புரிமை தரக்கூடாது என, நாட்கோ சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, வெற்றி பெற்றேன்.
காப்புரிமை மூலம் மருந்துகளை அதிக லாபத்தில் விற்று வந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, நஷ்டஈடாக, பல கோடி ரூபாய் தர வேண்டும் என்ற பயத்தில் இருந்த இந்திய நிறுவனங்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம், வெளிநாட்டு மருந்துகளுக்கு இணையாக, உயிர் காக்கும் மருந்துகளை குறைந்த விலையில் தயாரிக்க முயலும்.

நன்றி தினமலர்
6) கென்யா நாட்டு வீராங்கனை ஓட்டப்பந்தயத்தில் தன்னுடன் ஓடி வந்த சீனா நாட்டு மாற்று திறனாளி தாகத்தால் தவிப்பதை பார்த்து அவருக்கு தண்ணீர் குடிக்க உதவி செய்து விட்டு ஓடினார்.
                                                


இதனால் அவருக்கு இரண்டாம் இடமே கிடைத்தது அது மட்டும் இல்லாமல் US $ 10,000 பணத்தையும் இழந்தார்.போட்டியில் ஜெயிப்பது மட்டுமே வெற்றி இல்லை.

தங்கம் மட்டுமே அப்ரிக்காவில் கிடைப்பதில்லை.சில தங்கமான மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை நிருபித்து விட்டார் இந்த பெண்.இவர் போட்டியில் ஜெயிக்கவில்லை ஆனார் எல்லார் மனதையும் ஜெயித்துவிட்டார்.! (முகநூல்)



7) விதை எடுத்து மரம் பெருக்கும் திட்டம்:-
பறவை இனங்கள் அழிந்து கொண்டிருக்கும் நிலையில் மரத்தின் விதைகளை எடுத்து நீர் நிலை பகுதிகளில் கொண்டுசேர்ப்போம் .
                                        


இதை பல இடங்களில் எடுத்து சொல்லி உள்ளேன்.இம் முயற்சியில் பெங்களூர் செல்வராஜ்,பெங்களூர் வீதி மரங்களில் 30,000 விதை பொருக்கி,கோவை "பசுமை கரங்கள்" ,பீளமேடு வசம் ஒப்படைத்தார். (முகநூல்)


8) இந்தவார 'மனிதர்களுக்கு ஒரு பாடம்' ('எபி' ஆசிரியர் ஒருவர் வீட்டில் நடந்தபோது அலைபேசியில் எடுத்த வீடியோ. பாடல் சேர்த்தவர் தலை(யில்)மை(தடவாத) 'எபி' ஆசிரியர்)

   
         

புதன், 24 ஏப்ரல், 2013

அலேக் அனுபவங்கள் 19:: பிடிபட்டோம்!

         
போன பதிவில் எழுதி இருந்த அரட்டை மூலை பற்றி மீண்டும் ஞாபகப் படுத்திக்குங்க. இது சுட்டி!
             
தினமும் சாப்பிட்டு முடித்தவுடன், எங்கள் அணி அப்ரெண்டிஸ் எல்லோரும் சேர்ந்து அமர்ந்து அரட்டை அடிக்க, ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தோம். ட்ரைனிங் செண்டர் செல்ல வேண்டியவர்கள், கம்பெனி பிரதான வாயிலில் நுழைந்தால், இடதுபுறம் திரும்பி, நீண்ட தூரம் நடக்க வேண்டும்.
           
பெரும் தலைகள் இருக்கின்ற பகுதி பிரதான வாயிலில் நுழைந்து, சற்று தூரம் நடந்து, வலது புறம் திரும்பினால் போதும்.
             
ட்ரைனிங் செண்டர் ஆட்கள், பெரும் தலைகள்  பெரும்பாலும் வராத இடம்,  படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நீல நிற இடம்.
   
இந்த இடம்தான் எங்களுடைய சீனியர் அப்ரெண்டிஸ்கள் அரட்டையடிக்க உபயோகித்த இடம் என்று காற்று வழி செய்தியும் உண்டு!

சாப்பாடு முடித்த பின், அரட்டை மூலைக்கு ஒவ்வொருவராக வருவோம். இருவர் அல்லது மூவராக அந்த இடத்திற்கு வந்தால் ஆபத்து. ட்ரைனிங் சென்டரில் இருக்கின்ற பாட்ரிக் என்னும் கழுகு கண்களில் நாங்கள் பட்டுவிட்டால், பேராபத்து. அவர் ட்ரைனிங் ஆபீசரிடம் சென்று, 'தஸ் புஸ்' என்று காற்றோடு ஆங்கிலத்தைக் கலந்து அவர் காதில் ஊற்றி, எங்களுக்கு உலை வைத்துவிடுவார்!
 
சற்றேறக் குறைய இரண்டு அல்லது மூன்று மாதங்கள், அரட்டை கச்சேரி (ஒரு நாளைக்கு, குறைந்த பட்சம் பத்து நிமிடங்கள், அதிக பட்சம் முப்பது நிமிடங்கள்) இனிதே நடந்து வந்தது. அந்த நேரத்தில், ஒவ்வொருவரைப் பற்றியும் மற்றவர்கள் பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். ஏற்கெனவே ஒரு டிபார்ட்மெண்டுக்கு பயிற்சி சென்றவர்கள், அந்த டிபார்ட்மெண்டில் யார் அப்ரெண்டிஸ்களுக்கு அனுகூலமாக நடந்துகொள்பவர், யாரு கடி மனிதர் என்று மற்றவர்களுக்கு சொல்லுவார். 
  
மற்றவர்கள் அந்த டிபார்ட்மெண்டுக்கு ட்ரைனிங் செல்லும் பொழுது, எங்கே படலாம், எங்கே தொடலாம், யார் பக்கம் செல்லக்கூடாது என்று நன்கு  தெரிந்து வைத்துக் கொள்வோம். மற்ற லோக விவகாரங்களும் பரிமாற்றம் நடைபெறும். (அப்பாதுரை சார்! கற்பனை குதிரையை ரொம்ப மேய விடாதீங்க! எல்லாமே சைவ சிந்தனைகள்தான்)
   
எப்படி பிடிபட்டோம்? 
நாங்கள் பிடிபட்ட நிகழ்ச்சி சற்றும் எதிர்பாராத விதமாக நிகழ்ந்தது. மதிய உணவு வேளை முடிந்ததும், தன்னுடைய வொர்க் டயரியை ட்ரைனிங் ஆபீசர் பார்த்துக் கையெழுத்திட்டதை, திரும்பப் பெற சென்றிருந்தான், எங்கள் அணி நண்பன். அதை வாங்கிக் கொண்டு திரும்ப யத்தனித்தவனை, தடுத்து நிறுத்தியது, ஏ டி ஓ வின் குரல். ஏ டி ஓ = அசிஸ்டன்ட் ட்ரைனிங் ஆபீசர்.  யாருங்க அது? ஹி ஹி - நம்ம பாட்ரிக் அவர்களுக்கு நாங்க கொடுத்திருந்த பதவிப் பெயர் அது! கிளார்க் என்று சொன்னால் அவர் செய்கின்ற அலம்பல்களுக்கு அது சரியாக இல்லை என்பதால் இப்படித்தான் அழைத்து வந்தோம் அவரை!  
               
"மிஸ்டர் ...... வுட் யூ மைன்ட் கிவிங் பேக் திஸ் டயரி டு மிஸ்டர் .......... இப் யூ ஹாப்பென் டு ஸீ ஹிம்?" என்று அரட்டை அணியின் மற்ற நண்பர் ஒருவருடைய டயரியை எடுத்து நீட்டினார். இந்த நண்பன், உடனே, 'எஸ் ஐ ஹாவ் நோ மைன்ட்' என்று பேத்தியவாறு, அதை வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டான். 
   
பாட்ரிக்குக்கு ஒரே அதிசயம்! அப்ரெண்டிஸ்கள் யாரையாவது கம்பெனிக்குள் தேடவேண்டும் என்றால், அவருடைய உதவியின்றி, யாராலும் தேட இயலாது. யார் யாருக்கு எங்கெங்கே போஸ்டிங் போட்டிருக்கிறோம் என்பது அவருக்கு மட்டும்தான் (தன்னுடைய சித்ரகுப்தன் நோட்டு பார்த்து) தெரியும். அப்படி இருக்கையில், இந்த ஆள் டயரியை எடுத்துக் கொண்டு, எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல நடந்து சென்றதைப் பார்த்தவுடன், ஒரு சிறிய சந்தேகம் வந்தது. 
   
பாட்ரிக், அருகில் இருந்த ட்ரேட் அப்ரெண்டிஸ் ஒருவரை அழைத்து, டயரியுடன் செல்கின்ற நண்பர் எங்கே போகிறார் என்று வேவு பார்த்து வந்து தன்னிடம் சொல்லச் சொன்னார். அசோக் லேலண்டில் ஆள்காட்டிகளுக்குப் பஞ்சமே இல்லை. அந்த ஆ.கா. பாட்ரிக் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு, வந்து, பார்த்து, விவரங்களை பாட்ரிக்கிடம் கூறிவிட்டார். 
    
நாங்கள் செய்த புண்ணியம், அன்றைக்கு ட்ரைனிங் ஆபீசர் அலுவலகத்தில் மதியம் இல்லை. எங்கோ வெளி வேலையாக சென்றிருந்தார். 
   
பாட்ரிக் பின் வாசல் வழியாக எங்களின் அரட்டை மூலைக்கு வந்து, பத்து நிமிட கீதோபதேசம் நிகழ்த்தினார். 'மறுபடியும் எங்களில் யாரையாவது ட்ரைனிங் நேரத்தில் அங்கு கண்டால், அதை ட்ரைனிங் ஆபிசரின் கவனத்திற்கு உடனே எடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியிருக்காது' என்று அவர் சொன்னார் என்று அவருடைய தஸ் புஸ் மொழியை உரித்துப் பார்த்துப் புரிந்து கொண்டோம். 
                      

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

லால்குடி குரு

                     


லால்குடி ஜி ஜெயராமன். 
வயலின் வித்வான். 
தோற்றம்: 17 -09 - 1930.
மறைவு: 22 - 04 - 2013. 

இன்று இசை வானில் ஜ்வலிக்கும் பல (வாய்ப்பாட்டு, வாத்யம் இசைக்கின்ற) நட்சத்திரங்களின் குரு. 
             

ஒரு பழைய விகடன் கட்டுரை அவரைப்பற்றி-கீழே

மனதைக் கரைக்கும் உன்னத இசைக்கு லால்குடி ஜெயராமன் சொந்தக்காரர். இசையின் பல பரிமாணங்களை `இதோ, இதோ’ என பல கதவுகளைத் திறந்து காட்டிய இசை மேதையின் பெர்சனல் பக்கங்களில் இருந்து இங்கே கொஞ்சம்...

லால்குடி கோபால அய்யர்-சாவித்ரி தம்பதியினரின் மூத்த மகனாக 1930 செப்டம்பர் 17-ம் தேதி பிறந்தார் லால்குடி ஜெயராமன்.

லால்குடியின் தாயார் சாவித்ரி அம்மாள் 97 வயதிலும் உடன் இருந்து தன் மகனுக்கு இன்றும் ஆசிர்வதித்துக்கொண்டு இருக்கிறார். `அம்மாவின் அர்ப்பணிப்பும் ஆசிர்வாதமுமே தன் புகழுக்குக் காரணம்!’ என்பார் லால்குடி!

லால்குடியின் தந்தை கோபால அய்யர், வயலின் உட்பட பல்வேறு வாத்தியங்களில் விளையாடுவதிலும், வாத்தியங்களை உருவாக்குவதிலும் கைதேர்ந்தவர். ஆனால், தன் வித்வத் திறமையை மக்களிடம் இவர் கொண்டுசென்றது இல்லை!

ஜி.என்.பி., செம்மங்குடி அரியக்குடி, மதுரை மணி, மதுரை சோமு, ராம்நாட் கிருஷ்ணன், ஆலத்தூர் சகோதரர்கள், பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், மகாராஜபுரம் சந்தானம் என பல இசை சிகரங்களின் கச்சேரிகளைத் தன் வயலினால் அழகுபடுத்தியவர் லால்குடி!

தந்தை கோபால அய்யர்தான் லால்குடியின் குரு, நாலு வயதில் இருந்தே அதிகாலை 3 ½ மணிக்குத் தொடங்கும் சாதகம் காலை 9 மணி வரை தொடருமாம். `அந்த கடினப் பயிற்சிதான் தன்னை ஒரு வடிவத்தில் பொருத்தியது’ என்கிறார்!

இவரின் மூன்று சகோதரிகளும் இசைக் கலைஞர்களே. பத்மாவதி வீணைக் கலைஞர், ராஜலட்சுமி, ஸ்ரீமதி இருவரும் வயலின் கலைஞர்கள். தன் சிறு பிராயத்தில் இருந்தே ஸ்ரீமதியுடன் சேர்ந்து நிறைய டூயட் கச்சேரிகள் வாசிக்கத் தொடங்கினார் லால்குடி!

மதுரை மணி, ஜி.என்.பி., செம்மங்குடி போன்ற பிரபல இசைக் கலைஞர்களின் கச்சேரிகள் அப்போது வானொலி மூலம் லால்குடியில் உள்ள பூங்கா, கோயில்களில் பெரிய ஸ்பீக்கர்களில் ஒலிபரப்பாகுமாம். சிறு வயதிலேயே அந்தக் கச்சேரிகளைக் கிரகித்து வீட்டுக்கு வந்து அப்படியே வயலினில் வாசிக்கும் திறமை இருந்தது லால்குடியிடம்.

இந்தப் பழக்கம் பின் நாட்களில் மேற்சொன்ன பெரியவர்களுக்குப் பக்கவாத்தியம் வாசிக்கும்போது லால்குடிக்குக் கைகொடுத்தது. `எனக்கு நீ ஏற்கெனவே பல கச்சேரிகள் வாசித்திருப்பதைப்போல பிரமிப்பை உன் வாசிப்பு ஏற்படுத்துகிறது’ என்று அலைவரிசை ஒற்றுமையால் ஆச்சர்யப்பட்டு இருக்கிறார்கள் மகாமெகா வித்வான்கள்!
              
வாய்ப்புகள், கச்சேரிகள், இசைத் தொடர்புகள் எனப் பல்வேறு காரணங்களுக்காக லால்குடியின் குடும்பம் சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலைக்கு இடம் பெயர்ந்தது. பிறகே, தற்போது உள்ள தி.நகர் ராமானுஜம் தெரு வீட்டுக்கு மாறியது!

லால்குடியின் வயலினும் பேசும்’ என்பார்கள், ஆம், இவரது தனிக் கச்சேரிகள் வாய்ப்பாட்டு நடையிலேயே அமையும். குறில் நெடில் அறிந்து பாடுவதுபோல இவரது வயலினில் இருந்து எழும்பி வரும் இசை, கேட்பவர்களுக்கு வார்த்தைகளாக ஒலிக்கும் இதனை `சாகித்திய வில் ‘ என்பார்கள்!

தன் சகோதரி ஸ்ரீமதியுடன் டூயட் கச்சேரிகள் செய்தவர், பிறகு மகள் லால்குடி விஜயலக்ஷ்மி, மகன் ஜி.ஜே.ஆர் கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து கச்சேரிகள் செய்துவந்தார்!  

`சிருங்காரம்’என்ற பெயரில் தான் எடுக்க உள்ள திரைப்படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்று சாரதா ராமநாதன் என்ற இயக்குநர் லால்குடியை அணுகினார். பொதுவாக, அவ்வளவாக சினிமா ஆர்வம் இல்லாத லால்குடி , கொஞ்சம் தயங்கிய பிறகு ஏற்றுக்கொண்டார். அந்தப் படம்தான் லால்குடிக்கு 2006-ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது!

இவரது மகன் கிருஷ்ணன், மகள் விஜயலட்சுமி, இருவரும் பிரபல வயலின் வித்வான்கள், கர்னாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, விட்டல் ராம்மூர்த்தி, ஹரிசுதா காலட்சேபம் செய்யும் விசாகா ஹரி போன்ற இவரது மாணவர்கள் இந்தியாவில் மட்டும் அல்லாது பல்வேறு நாடுகளில் இவருக்குப் புகழ் சேர்த்தபடி இருக்கிறார்கள்!

குருவிடம் பணம் கொடுத்து இசை கற்க உதவியாக மத்திய அரசு மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பாகத் தரும் பணத்தை லால்குடி இதுவரை ஏற்றதில்லை. கட்டாயப்படுத்தும் மாணவர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு, அது பன்மடங்காகப் பெருகித் திரும்பும்போது, அதை அந்த மாணவனுக்கே வழங்கிவிடுவார்!.

`வயலின் வேணு வீணா! இந்த டைட்டிலில் உலகம் முழுவதும் இவர் தலைமையில் நடந்த நிகழ்ச்சிகள் இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. `வேணு’ என்றால் வேணுகோபாலன். அதாவது, கிருஷ்ணபகவானின் வாத்தியமான புல்லாங்குழல், `வீணா’ என்றால் வீணை, வயலினுக்கு லால்குடி, புல்லாங்குழலுக்கு என்.ரமணி, வீணைக்கு வெங்கட்ராமன் என்று மூவரும் சேர்ந்து பின்னியெடுத்த பிர்க்காக்களை நினைத்து சிலாகிக்காத இசை ரசிகர்களே இல்லை!. 
                    
காஞ்சி பெரியவர் பரமாச்சாரியார் ஒரு சமயம் ஏதோ கோபத்தில் `காஸ்ட மவுன’த்தில் ஆழ்ந்தார். அதாவது எவருடனும் பேசுவதில்லை. ஆசிர்வதிப்பது இல்லை எனத் தன் அறையிலேயே அமைதியாக முடங்கினார். தகவல் தெரிந்து, பெரியவரின் அறைக்கு வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்து தனியாக வயலினை வாசிக்கத் தொடங்கினார் லால்குடி அவர் வாசிக்க வாசிக்க.... பெரியவர் வெளியே வந்து பக்தர்களை ஆசிர்வதிக்கத் தொடங்கியது நெகிழவைத்த நிகழ்வு! 
   
வர்ணம் அமைக்க கடினமான ராகங்களான `நீலாம்பரி,’ `தேவகாந்தாரி’, ஆகிய இரண்டு ராகங்களிலும் இவர் இசைத்த வர்ணம் இன்றும் இசை மேதைகளை ஆச்சர்யப்படுத்திய அதிசயம்!.  
   
கர்னாடக இசைக் கலைஞர்களுக்கு சென்னை மியூஸிக் அகாடமி தரும் `சங்கீத கலாநிதி’ விருது ரொம்பவே ஸ்பெஷல். ஆனால், என்ன காரணமோ, காலதாமதமாக லால்குடிக்கு விருதை அறிவித்தபோது, விருதை வாங்க மறுத்துவிட்டார். தனது 80-வது ஆண்டு விழாவில், 'வாழ்நாள் சாதனையாளர்’ ஆண்டு விழாவில், `வாழ்நாள் சாதனையாளர்’ விருதை லால்குடிக்கு வழங்கி பிராயச்சித்தம் தேடிக்கொண்டது மியூஸிக் அகாடமி!

லால்குடி சிறந்த ஓவியரும்கூட மாணவர்களின் ரஃப் நோட்புக்கில் யானை, மயில் என்று வெரைட்டியான படங்களை அழகாக வரைந்து கொடுப்பார்!

இன்று வரை வாழ்நாளில் தான் வாசித்த கக்சேரிகள் பற்றி தகவல்களை நோட்புக்கில் தன் கைப்பட அழகாகக் குறிப்பு எழுதிவைக்கும் பழக்கம் கொண்டவர்!

இவர் கம்போஸ் செய்து அரங்கேற்றிய `ஜெயஜெயதேவி’ நாட்டிய நாடகம் பல்வேறு நாடுகளில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது! 
    
சில வருடங்களுக்கு முன்பு லால்குடிக்குச் சென்றவர், அங்குள்ள அரசுப் பள்ளியின் சிதைந்த நிலைமையைச் சீரமைக்கப் பல்வேறு கச்சேரிகள் மூலமும் நண்பர்களிடமும் நிதி திரட்டிக் கொடுத்தார்
.
எஸ்.பி.பி-யின் வாய்ஸ் மாடுலேஷனை ரசிப்பார், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே சகோதரிகளின் பாடல்கள் பிடிக்கும் . மெஹதிஹாசனின் கஜலும் விருப்பம்! 
     
இவரின் மனைவி ராஜலட்சுமியிடம், `ஏம்மா ராஜம், அது என்ன கச்சேரி?’ என்று இவர் ஏதாவது சந்தேகம் கேட்டால், `அன்னிக்கி புறப்படுறதுக்கு முன்னால இட்லியும் தேங்காய் சட்னியும் சாப்பிட்டுட்டுப் போனீங்களே?’ என்று நாள், கிழமை, மெனு உட்பட அனைத்தையும் சொல்லும் ஆதர்ஷ மனைவி.  
      
இசையில் பல்வேறு சாதனைகள், எட்ட முடியாத உயரங்கள் தொட்ட பிறகும் இன்றும் ஒரு மாணவனாகவே வாழ்ந்து வரும் லால்குடி (2010 September) இம்மாதம் 17-ம் தேதி 80-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இவரின் இசை ரசிகர்கள் `லால்குடி -80’ என்ற பெயரில் ஆத்மார்த்தமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளனர்!  
   
தொகுப்பு: 
திருமதி ஆனந்திராம்குமார் 
நன்றி :: ஆனந்த விகடன். 
                          

திங்கள், 22 ஏப்ரல், 2013

வண்ணதாசன், பிரகாஷ்ராஜ், கமலஹாசன், கவிதா பப்ளிகேஷன்ஸ், மெட்ரோ ரயில், கல்கி - வெட்டி அரட்டை


ஒரு கதைத் தலைப்பையே கவிதையாக வைக்க முடியுமா? சென்ற வார விகடனில் வந்த வண்ணதாசன் எழுதிய சிறுகதையின் தலைப்பு 

                                           

 
'கனியான பின்னும் நுனியில் பூ'.

கதையைப் படிக்காமல் கொஞ்ச நேரம் தலைப்பையே யோசித்துக் கொண்டிருந்தேன்! அவர் மாதுளையைச் சொல்கிறார்.


=========================

தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி விஜய் டிவியில் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பிரகாஷ்ராஜுடன் முதலில் கமல் மட்டும் அப்புறம் கமல்-கௌதமி பங்கேற்றனர்.  'செட் - அப்'பா என்றும் தெரியவில்லை. 50,00,000 ஜெயித்தார். பெற்றால்தான் பிள்ளையா என்ற எய்ட்ஸால் பாதிக்கப் பட்ட குழந்தைகளை ரட்சிக்கும் நிறுவனத்துக்கும், கேன்சரால் பாதிக்கப் பட்டு டெர்மினல் ஸ்டேஜில் இருக்கும் நோயாளிகளைப் பார்த்துக் கொள்ளும் நிறுவனம் ஒன்றுக்கும் பணம் சேர்த்துக் கொடுக்க ஆடி ஜெயித்தது. ஒரு கோடி ஜெயித்து விடுவோம் என்று வந்தாராம். 'டைம்' முடிந்ததில் இவ்வளவுதான் கிடைத்தது, என்றாலும் பிரகாஷ்ராஜும் மற்றும் தமிழ் ரசிகப் பெருமக்களும் மிச்சம் ஐம்பது லட்சம் திரட்டித் தந்து விடுங்கள் என்றார்.

                                       


பிரகாஷ்ராஜுக்கு ஜெமோவின் 'அறம்' சிறுகதைத் தொகுப்பும் தொ ப வின் தமிழகம் அறியாத் தகவல்கள் நூலும் பரிசளித்தார்.

                                           


ஒவ்வொரு கேள்விக்கும் பதில்கள் சொல்லிக் கொண்டே வந்ததும், பதில்கள் தெரிவதற்கான காரணத்தைச் சொன்னதும், தெரியாத கேள்விக்கு 'சோ' வைத் துணைக்கழைத்ததும், இடையிடையே அவர்-கௌதமி உறவு மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் சொன்னவாறே பதில்கள் சொன்னது என்று சுவாரஸ்யமாகவே இருந்தது நிகழ்ச்சி.

மெட்ரோ ப்ரியா (என்றுதான் நினைக்கிறேன்) கமலிடம் பேசுகிறேன் என்று அதீத பக்தியில் கண்ணீர் மல்கப் பேசினார். ஒரு ஹக் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டார். (கணவர் கூட வேண்டாம், கமல் போதும் என்ற அர்த்தத்தில் பேத்தினார், மன்னிக்கவும், பேசினார்.) அடுத்து வந்த இன்னொரு விஜய்  டிவிப் பெண் எனக்கும் ஒரு ஹக் மற்றும் ஒரு முத்தமும் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டார்.

=========================================

                                                        

நாளை 23ம் தேதி உலகப் புத்தகத் திருநாளாம். 24ம் தேதி எழுத்து வேந்தர் ஜெயகாந்தனின் பிறந்தநாளாம். அதனோடு கூட கவிதா பப்ளிகேஷன்ஸ் தொடங்கிய நாள் 25-4 (37 ஆண்டுகளுக்கு முன்) இந்த மூன்று நிகழ்வையும் சேர்த்து கவிதா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தார் அந்த மூன்று நாட்கள் புத்தகம் வாங்க வருவோருக்கு 25% தள்ளுபடியில் அவர்கள் விரும்பும் கவிதா புத்தக நிலையப் புத்தகங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள்.(8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், சென்னை)

24/4 ஒரு கிரிக்கெட் பிரபலத்துக்கும் பிறந்தநாள்!


========================================================

கல்கி இந்த வருடத்துக்கான சிறுகதைப் போட்டியை அறிவித்துள்ளது. (HVL ஹேமா கவனிக்கவும்!)

கடைசி தேதி ஜூன் 15, 2013. ஆகஸ்ட் ஆண்டு மலரில் முடிவுகள் வெளியாகுமாம். முதல் பரிசு 10,000, இரண்டாம் பரிசு 7,500, மூன்றாவது பரிசு 5,000.


======================================================

பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரச் செய்திகளை மீடியாக்கள் தவிர்க்க வேண்டுமோ என்று தோன்றுகிறது. ஏனென்றால் இதுமாதிரிச் செய்திகளைப் படித்து/பார்த்து விட்டு தீய மனம் கொண்டோருக்கு ஒரு விழிப்புணர்வு வந்து விடுகிறதோ என்று தோன்றுகிறது. டெல்லியில் ஐந்து வயதுப் பெண் குழந்தைச் செய்தியைத் தொடர்ந்து கொல்கட்டாவில் 15 வயதுச் சிறுவன் 5 வயதுப் பெண் குழந்தையிடம் தவறாக நடக்க முயற்சித்திருக்கிறான். டெல்லியிலும் இன்னொரு சம்பவம்.

தண்டனைகள் உடனடியாகவும், கடுமையாகவும் ஆக்கப்படாவிட்டால் இவர்களுக்கெல்லாம் துளிர்த்துத்தான் போகும்.


===================================================================

மின்கம்பங்கள் பற்றாக்குறை தமிழகத்தில் விரைவில் தீர்க்கப்படும் என்று மின்துறை அமைச்சர் சட்டசபையில் சொன்னதை முதலில் படித்தபோது வழக்கம்போல மின்பற்றாக்குறை என்றுதான் நானும் படித்தேன். அப்புறம்தான் கம்பங்கள் கண்ணில் பட்டது!

     
    

இந்த ஜூனுக்குள் மின்பற்றாக்குறை சரியாகிவிடும் என்று சொல்லி வந்த அமைச்சர் சென்ற வாரம் இந்த வருட இறுதிக்குள் என்று கெடுவை நீட்டியிருக்கிறார்!!

=================================================================

இந்தவருட இறுதிக்குள் என்று படித்த இன்னொரு செய்தி சென்னையில் மெட்ரோ ரயில் ஓட்டம். இந்தவருட டிசம்பரில், தப்பினால் 2014 ஜனவரியில் கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலான மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கி விடுமாம்!
                        
==================================================================

வலைப்பக்கங்களைக் குறிப்பிடாமல் எந்தப் பத்திரிகையும் இருப்பதில்லை. இதை முதலிலிருந்தே செய்துவரும் விகடன் 'வலைபாயுதே' பகுதியில் படித்த சுவாரஸ்யமான ஒன்று.

                                                    
 
1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14,நாராயணசுவாமி,16,17,18,19....

சுவாரஸ்யமான ட்விட்டர்வாசிகள்.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

சனி, 20 ஏப்ரல், 2013

பாசிட்டிவ் செய்திகள் ஏப்ரல் 14, 2013 முதல் ஏப்ரல் 20, 2013 வரை


எங்கள் B+ செய்திகள்.

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
       
1) ஆரோக்கியத்துக்கு ஒரு பாடம் :  விடிந்தும், விடியாத அந்த அதிகாலை வேளையிலே ஒரு சின்னஞ்சிறிய கடைமுன் கூட்டம் நிரம்பிவழிகிறது. கூட்டத்திற்கு காரணம் அங்கு வழங்கப்படும் இயற்கை உணவுகள்தான்.

                                      
சிவகாசி தபால்நிலையம் பக்கத்தில் உள்ள தாய்வழி இயற்கை உணவகத்தில் நிலவேம்பு கஷாயம், ஆடாதொடை ரசம், கத்தாழை சூப், அடுப்பில் வைக்காமல் உருவாக்கப்பட்ட பேரீச்சை அவல், பலவித பயறுவகைகள், நெல்லிக்காய் சாலட், வெந்தயக்களி, சின்ன வெங்காயம் போட்ட கம்மங்கூழ் என்று எப்போதோ, எங்கோயோ கேட்ட பழமையான பராம்பரியமான உணவு வகைகளை வழங்கிக் கொண்டு இருக்கிறார் கடையின் உரிமையாளரும் இயற்கை ஆர்வலருமான சிவகாசி மாறன்ஜி.

நமது பழமையான உணவு என்பதை மறந்ததால்தான் இன்றைக்கு இவ்வளவு நோய் நொடிகள், எப்போதும் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் எந்நாளும் தொல்லை இல்லை என்று சொல்லும் மாறன்ஜி கடையில் வழங்கப்படும் பொருட்களின் விலையோ இரண்டு ரூபாயில் இருந்து ஏழு ரூபாய்க்குள் அடங்கிவிடும். ஒரு வரியில் சொல்வதானால் விலை குறைவு ஆரோக்கியம் அதிகம்.

நிலவேம்பு கஷாயம் குடித்தால் போதும் டெங்கு காய்ச்சல் பக்கத்திலேயே வராது, வந்தாலும் பயந்து ஒடிவிடும், இப்படி இங்குள்ள ஒவ்வொரு உணவு பொருளுக்கும் பின்னணியில் நிறைய ஆரோக்கியமும், மருத்துவ குணங்களும் நிறைந்து உள்ளன.

அடுப்பில் வைக்காமல் நூற்றுக்கணக்கான அறுசுவை உணவுகளை தயார் செய்யமுடியும், அதற்கு பெண்கள் முன்வர வேண்டும், வாரத்தில் ஒரு நாள் அடுப்பு பற்ற வைக்காமல் சமைத்தாலே நாட்டிற்கும் வீட்டிற்கும் எவ்வளவோ பலன்கள் உண்டு என்று சொல்லும் மாறன் இயற்கை உணவை எல்லாரிடமும் கொண்டு சேர்ப்பதற்காக நிறையவே உழைத்து வருகிறார்.

இதை இளைஞர்கள் கையில் சேர்த்துவிட்டால் அது அற்புதமான ஆரோக்கியமான இந்தியாவிற்கு வழிவகுத்துவிடும் என்பதில் உறுதியாக இருக்கும் இவர் இது தொடர்பாக பள்ளி, கல்லூரியில் பொருட்காட்சி நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது என்று எப்போதும் பிசியாக இருக்கிறார். இயற்கை உணவு பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக அவரது போன் எண்:9367421787.

2) மின்வெட்டுக்கு ஒரு பாடம் :
  காற்று இல்லாமலே காற்றாலையை இயக்கி மின்சாரம்: ஜலகண்டாபுரம் வாலிபர் சாதனை

காற்று இல்லாமலே, காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரித்து செயல் வடிவம் காட்டியுள்ளார், பத்
தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து வாலிபர்.
                                                

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, கண்டுபிடித்துள்ளார்.

இதற்கான முயற்சியில், மூன்று ஆண்டுகளாக ஈடுபட்ட அவர் கூறியதாவது:சேலம் மாவட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, மேலும் படிக்க முடியாமல், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். காற்றாலையை, காற்று இல்லாமலே இயக்க முடியும் என, கண்டுபிடித்துள்ளேன். காற்று வீசும் காலத்தில் மட்டுமே, காற்றாலையில் இருந்து, மின்சாரம் பெற முடியும்; மற்ற காலங்களில் காற்றாலையில் உள்ள இறக்கைகள் சுற்றாது. தற்போது, காற்றாலையில், மூன்று இறக்கைகள் உள்ளது.என்னுடைய தொழில்நுட்பப்படி, காற்றாலையில் நான்கு இறக்கைகள் பொருத்த வேண்டும். மேலும், கீழும் உள்ள இரண்டு இறக்கையின் நடுவில், ஹீலியம் வாயுவை நிரப்ப வேண்டும். காற்றாலையின், இரு பக்கமும் உள்ள, இரண்டு இறக்கைகளின் அளவு ஒரே சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு இறக்கையில் இருந்து, கீழுள்ள இறக்கைக்கு வாயு செலுத்தப்படும் போது, எடை தாங்காமல், கீழுள்ள இறக்கை மேல் நோக்கி தள்ளப்படும். இதனால், இறக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலத்தொடங்கும். ஹீலியம் வாயு, தானியங்கி சென்சார் மூலம், இரண்டு இறக்கைகளிலும் மாறி மாறி செலுத்தப்படுவதால், இறக்கைகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இதனால் காற்று இல்லாமலும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

நான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில், வரை படங்களின் மூலமும், எழுதியும் காண்பித்தேன். என் கண்டுபிடிப்புக்கு, மத்திய அரசு காப்புரிமை கொடுத்துள்ளது. ஓராண்டுக்குள், நான் அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்து காட்ட வேண்டும் என்பதால், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த செந்தில்குமார், மேச்சேரியை சேர்ந்த ஜெயவேல், சேலம், கருப்பூரை சேர்ந்த ராஜசேகர், குமாரபாளையத்தை சேர்ந்த சிவராஜ் ஆகியோரின் உதவியுடன், என் சக்திக்கு தகுந்தவாறு காற்றாலை அமைத்து, அதில் சிறிய அளவில் மின்சாரமும் கிடைக்க செய்துள்ளேன். போதிய பணவசதி இல்லாததால், ஆராய்ச்சியை தொடர தடை ஏற்பட்டுள்ளது.நான் செய்த செயல் வடிவத்தை, மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில் ஒப்படைக்க உள்ளேன். ஐந்து பேர் சேர்ந்து பவர் விஷன் சேரிட்டபிள் டிரஸ்ட் ஆரம்பித்துள்ளோம்.

டிரஸ்ட்டுக்கு பணம் செலுத்த விரும்புவோர், 99940097959 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

3) மனிதர்களுக்கு ஒரு பாடம் :
  சிறிது நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது....கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு காளை மாடுகள் ரோட்டில் முட்டி மோதி விளையாடித்திரிந்தன.

அப்போது, பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ் சாலையில் ஓடி திரிந்த மாடுகளில், ஒரு காளை மாடு மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த மாடு, சாலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியது. உடன் இருந்த மாடு பெரும் சத்தத்துடன் சாலையில் விழுந்த மாட்டை தலையில் முட்டி எழுப்பியது.
                                              


தொடர்ந்து, விபத்தில் காயமடைந்த மாட்டை மற்றொரு மாடு சுற்றி சுற்றி வந்து தலையால் முட்டி எழுப்பியது.மனிதர்கள் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாலும், அந்த வழியே செல்வோர் பார்த்தும் பார்க்காமல் போகும் இந்தக் காலத்தில், கால்நடைகள் மனிதாபிமானத்துடன் உடன் வந்த மாடு இறந்ததை அறியாமல் முட்டி எழுப்பியதை பார்த்தவர்கள் நெஞ்சம் நெகிழந்தனர்.

விபத்தில் சிக்கிய மாடு இறந்ததால், உடன் வந்த காளை மாடு பெரும் சத்தம் போட்டு அந்த பகுதியில் வேடிக்கை பார்க்க குவிந்த பொதுமக்களை துரத்தியது. இதனால், அந்த பகுதியில் நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள், நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அந்த இடத்தில் இருந்து, காளை மாட்டை விரட்டி அடித்தனர். ஆனால், மாடு சிறிது தூரம் ஓடி சென்று அந்த பகுதியையே சுற்றி சுற்றி வந்துகொண்டு இருந்தது. ஐந்தறிவு ஜீவன்கள் மனிதனைவிட பாசத்தில் ஒருபடி உயர்ந்தவை என்பது உண்மைதான்.

4) மாணவர்களுக்கு நவீன பாணியில் பாடம் :
கணினி வழிக் கல்வி; "சிடி' க்களில் பாடம்: "கைப்பணத்தில்' கிராமத்து ஆசிரியர் சேவை

காரைக்குடி அருகே புதுக்குடியிருப்பு, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவர்கள், கணினி வழிக் கல்வியில் கலக்கி வருகின்றனர்.
                                                       

புதுக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில், 66 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் கூலி வேலை செய்வோரின் குழந்தைகள் அதிகம். தலைமை ஆசிரியர் லாரன்ஸ் முயற்சியால், கணினி மூலம் கல்வி கற்கின்றனர்.

அவரது செலவில், பொது அறிவு, பாட சம்பந்தமான "சிடி' க்களை வாங்கி வைத்துள்ளார். ஒவ்வொரு பாடத்துக்கும் முன்பு, அது குறித்த தகவல்களை "சிடி' மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கிறார்; பொது அறிவு "சிடி' க்களும் காட்டப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு, கணினியில், "மவுஸ்' கையாளுதல், கூட்டல், கழித்தல் கணக்கு போடுதல் உள்ளிட்டவை கற்றுத்தரப்படுகிறது.

உணவு நேரத்திற்குப் பின், "டிவி' மூலம் "டிஸ்கவரி சேனல்' ஒளிபரப்பப்படுகிறது. மாணவர்கள் வனங்கள், வன உயிரினங்கள், கடல் வாழ் உயிரினங்களை பற்றியும் அறிந்து கொள்கின்றனர். "ஸ்போக்கன் இங்கிலீஸ்' கற்று கொடுக்கப்படுகிறது.

தலைமை ஆசிரியர் கூறுகையில், ""அறிவியலின் வளர்ச்சி, நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. புத்தகப் படிப்போடு, உலகம் பற்றிய அறிவை, மாணவர்களுக்கு வளர்க்க வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் கொடுக்கப்பட்ட "சிடி' க்களும் உள்ளன. மாணவர்களே "சிடி' யை போட்டு, பாடத்தை அறிந்து கொள்ள கற்றுக் கொடுக்கிறோம்,'' என்றார்.


5) முன்னேற நினைப்போருக்கு ஒரு பாடம் : 4 வருடங்களுக்கு முன்னர் ஹோட்டலில் மேஜை துடைத்துக் கொண்டிருந்த எல். பொன்னுதுரை இப்போது ஒரு கம்பெனியில் வேதியியல் பொறியாளராக வேலையைத் தொடங்க இருக்கிறார்.

5 வயதில் தாயை இழந்து தந்தை மறுமணம் செய்து கொண்ட நிலையில் உறவினர்கள் சிலர் இந்த தலித் மாணவனின் படிப்பார்வத்தைப் பார்த்து, தலித் ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைக்க, பத்தாம் வகுப்பை 96% சதவிகிதத்திலும், அப்புறம் ஸ்காலர்ஷிப் உதவியில் +2 வை 93% மதிப்பெண்ணும் பெற்றுத் தேறினார். அப்புறம் மேலே படிக்க ஆர்வமிருந்தும் முன்னேற முடியாமல் ராஜபாளையம் வசந்த் பவனில் வேலை செய்து கொண்டிருந்த போன்னுதுரையைக் கண்ட அவர் முன்னாள் இயற்பியல் ஆசிரியர், மறுநாள் எல்லா ஆசிரியர்களுடனும் அங்கு வந்து எல்லோரும் காசு போட்டு இவரைப் படிக்க வைக்கச் சென்னைக்கு அனுப்பினாராம். அப்புறமும் வங்கி உதவித் தொகை பெற அவர் தந்தை படுத்திய பாடு, ஆங்கிலம் புரியாமல் பட்ட கஷ்டங்கள் எல்லாவற்றையும் கடந்து இப்போது ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தில் வேலையில் சேரப் போகும் செய்தியைத் தெரிவிக்கிறது ஹிந்து நாளிதழ்.

                                           


 
தன்னுடைய அனுபவத்தை வைத்து, இனி வசதியில்லா மற்ற கிராமப்புற மாணவர்களுக்கும் உதவத் தீர்மானித்துள்ளாராம். 

              

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

வெள்ளிக்கிழமை வீடியோ 130419



         
நன்றி கெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா!
பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு தொல்லையடா!
 
 ஒரே ஒரு கேள்வி: இந்தமாதிரி பாடகரை இனி காண்போமா?  
          

வியாழன், 18 ஏப்ரல், 2013

"பாரீஸுக்குப் போ "


ரொ.....ம்ப வருடங்களுக்கு முன்னால் படித்த 'பாரீஸுக்குப் போ' நாவலை மறுபடி சமீபத்தில் படித்தேன் புதிய பார்வைகள் கிடைத்தன. 1965 இல் விகடனில் வெளிவந்த தொடர். அப்போது இதற்கு ஏகப்பட்ட எதிர்ப்பு, மற்றும் விமர்சனங்கள்.  

                                               

கலாச்சாரத்துக்கு எதிரானது என்றும், ஜெயகாந்தனின் கருத்துகளை எதிர்த்தும் நிறையக் கடிதங்கள் வந்தன என்று முன்னுரையில் ஜெ குறிப்பிடுகிறார்.

படிக்கும் வயதில் உறவினரோடு லண்டன் சென்று விட்ட சாரங்கன் நீண்ட பல வருடங்களுக்குப் பிறகு இந்தியா திரும்புகிறான்(ர்). 40 வயது. தாய் நாட்டிலேயே செட்டில் ஆகி விடும் எண்ணங்களோடு வருகிறான். திடீரென தனக்கு உறவுகளே இல்லை என்று உணர்வது போல நினைக்கிறான். 15 வருடங்களுக்குமுன் கடைசிமுறை வந்தபோது ஏற்பட்ட மனத்தாங்கலில் வரவேற்க சாரங்கனின் அப்பா உட்பட்ட உறவு யாரும் விமான நிலையம் வராத நிலையில் சாரங்கனின் அண்ணனின் தோழர் மகாலிங்கமும் அவர் மனைவி லலிதாவும் ஏர்போர்ட் வந்து வரவேற்று, அவனை அவன் வீடு கொண்டு விடுகிறார்கள். 

                                                        

வயதான தந்தை சேஷையா பழைய சாஸ்த்ரீய சங்கீத விற்பன்னர். அவருக்கு மேல்நாட்டு சங்கீதம் போலவே சாரங்கனின் கொள்கைகளும், நடத்தையும் பிடிக்கவில்லை. ஆனாலும் பாசத்தில் அவனை இங்கேயே ஏதாவது பிசினெஸ் செய்ய வைத்து வாழ்க்கையில் செட்டில் செய்ய முடியுமா என்று பார்க்கிறார். அவன் ஏற்கெனவே வெளிநாட்டுக்காரி ஒருத்தியைத் திருமணம் செய்தானே, என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே என்று கவலைப் பட்டுக் கொண்டே இங்கு திருமணம் செய்விக்க முடியுமா என்று சாரங்கனின் தமக்கை மகன் முரளி மூலம் தூது அனுப்புகிறார். இரண்டுக்குமே சாரங்கன் மறுத்து விடுகிறான். சேஷையாவுக்குக் கோபம் வருகிறது.

முரளிக்கு சொந்த பிசினெஸ் செய்யும் ஆசையை தாத்தா சேஷையா மறுப்பதில் ஆத்திரம்.

தமக்கை கணவர், அதாவது தன மாமனார்  சாமியாராகப் போய் விட்டார் என்ற செய்தியை நம்ப மறுக்கிறாள் லீலா முரளியின் மனைவி. முரளிக்கு அப்பாவைப் பற்றித் தெரிந்திருக்கிறது. பின்னாளில் தாத்தாவுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சொந்த பிசினெஸ் ஆரம்பித்து வெற்றிக் கொடி கட்டுவதற்குமுன் ஆரம்ப நாட்களில் தனது தந்தை மரணப் படுக்கையில் இருக்கிறார் என்று தெரிந்து,  சாரங்கன் உடன்வர,   
மற்றும் மனைவி லீலாவுடன் அவரையும் அவருடன் வாழும் முன்னாள் நாட்டியக்காரி கங்காவையும் சந்திக்கின்றனர். பாலம்மாள் கணவரைக் காண வர மறுத்து விடுகிறாள். மரணமடையுமுன்னர் முரளியின் அப்பா தன் பக்க நியாயத்தை - லீலாவின் பார்வையில் சப்பைக்கட்டு - லீலாவிடமும் முரளி, சாரங்கனிடமும் சொல்லிவிட்டுச் செல்கிறார். 

                                                  

கணவனுக்குக் கள்ளத் தொடர்பு இருந்தது என்பதால் அவரை விட்டுப் பிரிந்த சாரங்கனின் தமக்கை பாலம்மாள் கடைசி வரை கணவரைப் பார்ப்பதில்லை. கணவர் அறியாமல் உணர்ச்சி வசத்தில் தவறு செய்தால் மன்னித்து ஏற்றுக் கொள்வதுதான் தாயைப் போன்ற குணத்துடன் இருக்க வேண்டிய மனைவியின் பண்பு என்பது அவள் கணவர் நரசய்யா வாதம்.

ரங்கையா என்ற சாரங்கனின் அண்ணன் ஒருவன் மரணம் பற்றித் தெரிவிக்காத செய்தி சாரங்கனுக்குக் கோபத்தையும், சேஷையாவுக்குக் குற்ற உணர்வையும் தருகிறது.  ரங்கையாவின் மனைவியும் குழந்தையும் சேஷையாவின் கண்ணில் படாமல் அதே வீட்டில் வாழ்கிறார்கள். பின்னர் யாருமில்லா உடல்நிலை சரியில்லா தனிமையில் திருந்தும் சேஷையா இவன் பிறந்த நேரம்தான் தன மகன் ரெங்கையா மரணமடையக் காரணம் என்ற குருட்டு நம்பிக்கையில் வெறுத்து ஒதுக்கிய பேரன் கண்ணனை அணைத்து மகிழ்வதோடு, அவன் தாய்- தன மருமகளிடமே - குடும்பப் பொறுப்பை விடுகிறார்.

சாரங்கனை பேட்டி எடுத்து, தான் எழுதும் பத்திரிகையில் 'ஆர்ட்டிகிள்' எழுதுகிறாள் லலிதா. சங்கீதம் பற்றிய சாரங்கனின் பார்வை, ஃபாரின் ரிடர்ண்ட் என்ற மயக்கத்தில் இவனின் கொள்கைகள் மேல் பொதுமக்களுக்கு ஏற்படும் விருப்பமான மற்றும் வெறுப்பான பதில்கள், ஆகியவை பல விவாதங்கள் மூலம் சொல்லப் படுகின்றன.  இந்தக் கொள்கைகளால் கவரப் பட்டு லலிதா தன் மனதையும் உடலையும் சாரங்கனிடம் பகிர்கிறாள். தான் காப்பாற்றிய தன் குடும்பத்தால் இளமையில் வெளியில் விரட்டப்பட்ட, மற்றும் தனது கடந்தகாலக் கசப்பான வாழ்க்கை அனுபவங்களையும், மகாலிங்கம்தான் தன்னைக் கரை சேர்த்தார் என்றும் சம்பவங்களையும்  சாரங்கனுடன் பகிர்கிறாள்.

திரைப்படத்துக்கு இசையமைக்கச் சொல்லி அழைத்துப் போகும் டைரக்டர் கோபிநாத் மூலம் ஏற்படும் கசப்பான உணர்வுகள் மற்றும் காசில்லாத நிலை, சேஷையா இவன் மீது காட்ட நினைக்கும் அதிகாரம் என்று பல காரணங்களால் பாரிசுக்கே திரும்ப முடிவு செய்யும் சாரங்கன். பதறும், மறுக்கும், மயங்கும் லலிதா.

மகாலிங்கத்திடம் விவாகரத்து கோரச் சொல்லும் சாரங்கன். அதை ஆமோதித்தாலும் மகாலிங்கத்தின் அன்பால் தயங்கும், மருகும் லலிதா. மகாலிங்கத்தின் உணர்வுகள் ஒருநாள் 'அன்னா கரீனா' ஆங்கிலப் படம் பார்த்த இரவில் லலிதாவிடம் ஆவேசமாக வெளிப் படுகின்றன. எனவே விவாக ரத்து கோரும் எண்ணம் தயக்கமடைகிறது லலிதாவிடம். கடைசியில் 'உங்களிடமே முடிவை விடுகிறேன்... கணவரோடு வாழு என்று சொன்னால் வாழ்கிறேன். என்னோடு வந்து விடு என்று நீங்கள் சொன்னால் எதைப் பற்றியும் கவலைப் படாமல் உங்களுடன் வந்து விடுகிறேன்' என்று சாரங்கனிடம் அவன் நாட்டை விட்டு வெளியேறும் முந்தைய நாள் இரவில் கேட்கிறாள்.

'என்னதான் சொல்லுங்க சாரங்கன்.... வெளிநாட்டு இசை லலிதா கேட்கும்போது நானும் கேட்கவேண்டும் என்று நினைக்கிறேன் இசை முடிந்து பாட்டு ஆரம்பிக்கும்போது சிரிப்பு வந்து விடுகிறது'  என்றும் 'அதே சினிமா சங்கீதம் மற்ற பெரும்பான்மையினரைப் போலவே தன்னையும் கவர்வதாகச் சொல்லும் மகாலிங்கத்திடம் வடநாட்டுச் சங்கீதம் கேட்டுச் சிரிக்கும் நம் மக்கள், மேல்நாட்டு இசையை மகா கேவலமாகக் காபி அடிக்கும் திரை இசை என்று நீண்ட லெக்சர் அடிக்கிறான் சாரங்கன். லலிதா மகாலிங்கம் அறியாமல் மயங்கிப் போய்க் கிடக்கிறாள். பத்திரிகையில் எழுத குறிப்பெடுத்துக் கொள்கிறாள்.

மிகுந்த தர்ம நியாயங்கள் பேசும் சாரங்கன் மகாலிங்கத்தின் மனைவியான லலிதாவிடம் வைத்துக் கொள்ளும் உறவுக்குக் கட்டும் சப்பைக்கட்டுகள். லலிதாவின் மனநிலை உணர்வுகள், முரளியின் உணர்வுகள்.. அதே வீட்டில் இருக்கும் சமயல்காரத் தம்பதியினர், மகாலிங்கத்தின் வீட்டு சமையல்காரர் நாணா ஐயர், சாரங்கனுடன் புகை பிடிக்கும், மது அருந்தும் நவநாகரீக,மாதர் சங்க மாதவி,ஆகியோர் கதைப்போக்கில் அவ்வப்போது வந்து செல்கிறார்கள்.


சர்ச்சைகள், விவாதங்கள் என்று தொடர்ந்து கொடிருந்த கதை 'சட்'டென முடிவது போலத் தோன்றுவது உண்மைதான் என்கிறார் ஜெயகாந்தன், முன்னுரையில்.

இதிலிருந்து எடுத்துதான் கொஞ்ச நாள் முன்பு 'இலக்கியம்' என்ற தலைப்பில் பகிர்ந்திருந்தேன்.

இந்தியக் கர்நாடக இசைக்கும், வெளிநாட்டு இசைக்கும் உள்ள வேறுபாடுகள், சண்டைகள் பற்றி, சினிமா சங்கீதம் பற்றி என்று நீ....ண்ட சர்ச்சைகள் கதையில்.

கதியற்று நின்ற குடும்பத்தை படாத பாடு பட்டு முன்னுக்குக் கொண்டு வந்து, ஆனால் அந்தக் குடும்பமே இவள் நடத்தையில் சந்தேகப் பட்டு வெளியில் துரத்த, கையறு நிலையில் தற்கொலை செய்ய தைரியமில்லாமல் ஊரை விட்டுச் செல்ல முடிவெடுக்கும் நிலையில் மகாலிங்கம் ஆதரவு கொடுத்து, திருமணம் செய்கிறார். இவள் அறிவால் கவரப் பட்டு தேவதையைப் போல ஆராதனை செய்கிறார். இவளுக்கும் அவர் மூலம்தான் அந்தஸ்து வருகிறது.

இந்நிலையில் அவரை விட்டு விட்டு சாரங்கனுடனான லலிதாவின் உறவு, மகாலிங்கத்தைத் துறக்க அவளுக்கு வரும் எண்ணம், கங்காவின் கலையில் மயங்கி நரசய்யா ஆவலுடன் ஓரிரவில் இணைந்தாலும், ஒரு ஆண் என்ற முறையில் அவர் பாலம்மாளைத்தான் காதலிக்கிறார் என்னும் நரசய்யாவின் வாதம், என சில கருத்துகள், சம்பவங்களை ஒத்துக் கொள்ள முடியாவிட்டாலும் ரசிக்க வைப்பது ஜேகேயின் எழுத்து ஆளுமை.
                                                    

இந்தியாவின் பாரம்பர்ய இசை, திரை இசை பற்றிய விவாதங்கள் நமக்குள் பல நினைவுகளைக் கிளறுகின்றன அதில் ஒன்று 'உன்னால் முடியும் தம்பி'யில் வரும் சங்கீதச் சண்டை.

இந்தக்கதை வெளிவந்த காலத்தில் ஜேகேயுடனேயே பத்திரிகைகளில் எழுதி வந்த ஜீவி இந்தக் கதை பற்றியும், அவர் அபிப்ராயம், அப்போது இந்தக் கதைக்கு வந்த தாக்கங்கள் பற்றியும் சுவாரஸ்யமாய்ப் பின்னூட்டமிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

புத்தகத்தின் விலை...! 6.75.....! முதல் பதிப்பு டிசம்பர் 1966, இரண்டாவது 1969, மூன்றாவது 1972. மதுரை மீனாட்சி புத்தக நிலையம்!