வெள்ளி, 31 டிசம்பர், 2010

திரு திரு


"தந்துடறேன் சார்...தராம எங்கே போகப் போறேன்...நான் ஏமாத்தறவன் இல்லை சார்...எனக்கும் புள்ளை குட்டிங்க இருக்கு...வாத்தியார் புள்ள சார் நானு ...உங்களைப் போய் ஏமாத்துவேனா..."

எதிரில் நின்ற திருவேங்கடத்தின் குரலில் பவ்யம் சற்று தூக்கலாகவே தெரிந்தது.

திரு வின் வார்த்தைகளைக் கேட்பவர்களுக்கு இவர் ஏமாற்றக் கூடியவரா என்று தோன்றும். அலுவலகத்தில் யார் அநியாயமாக நடந்தாலும் முதலில் தட்டிக் கேட்பது திரு தான். பேச்சுகள் ரொம்ப நியாயமாக இருக்கும்.

அதாவது மற்றவர்கள் பற்றி நியாயம் பேசும்போது.

அவசரத் தேவைகளுக்கு அவ்வப்போது நூறும் இருநூறும் கேட்கும்போது முதலில் தயக்கமாக இருந்தது. கொடுக்காமலும் இருக்க முடியாமல் தந்தார். உடனே உடனே சொன்ன தேதியில் கொடுத்து விட்டார் திரு. பிறகு அவ்வப் போது ஐம்பது, நூறு என்று வாங்கி திருப்பித் தருவது வழக்கமானது.

ஆனாலும் இந்த வகையில் பையனின் படிப்புச் செலவு பற்றி சொல்லி "அவசரமாக மூவாயிரம் குடு சார்" என்ற போது கொஞ்சம் யோசிக்க வேண்டி வந்தது.

அவர் யாருக்கு இவ்வளவு பெரிய தொகை கடனாகக் கொடுத்ததில்லை.

அவர் பையன் வேறு அப்போது கூட வந்திருந்தான். அவன் பார்வையைப் பார்த்தால் பாவமாக இருந்தது. ஏதோ புண்ணியம் செய்ய வாய்ப்பு பக்கத்தில் வந்திருந்தும் அதைச் செய்யாமல் இருப்பது பெரும் பாவமோ என்ற தர்ம சிந்தனைகள் வேறு வாட்ட,

"எப்போ கொடுப்பே.." என்றார்.

"அட, அடுத்த மாசம் ஜிபிஎஃப் சார்...எடுத்தவுடனே முதல்ல உனுக்குத்தான்,,,படிப்புக்கு வழிகாட்டற மவராசன்...லேட் பண்ணுவனா..."

கொடுத்தார்.

நூறு இருநூறு எல்லாம் வந்த வேகம்...இது வரவில்லை! இதுதான் 'சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது போலும்' என்று இவர் நினைத்துக் கொண்டார்.

ஜி பி எஃப் பணத்தை திரு என்ன செய்தார் என்று தெரியாது. கேட்டால் மனம் பதறும் அளவு ஒரு காரணத்தைச் சொல்லி அதனால் அங்கு கொடுக்க வேண்டியதாகப் போய் விட்டது என்றார். ஒன்றும் சொல்ல முடியவில்லை. மீறிச் சொன்னால் மனிதாபிமானம் பற்றி லெக்சர் நடக்கும்.

"அப்ப எப்போ திருவேங்கடம்..எனக்கும் தேவையா இருக்கு.."

"அடுத்த மாசம் சொசைட்டி வருது சார்...கண்டிப்பா தந்துடறேன்...."

அடுத்த மாதங்கள் கடந்து வருடங்களும் கடந்து கொண்டுதான் இருந்தன.

ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார். தெரிகிறது. இவர் திரு வுடன் பேசாமல் இருந்து பார்த்தார். அவரும் லட்சியம் செய்யவில்லை. நிம்மதியாக இருந்தார். இப்படியே இருந்தால் நம்மால்தான் பணத்தைத் திரும்ப வாங்க முடியாமல் போகும் என்று இவர்தான் திரும்பப் பேச வேண்டியதாக இருந்தது.

எவ்வளவு தரம் கேட்டாலும் சலிக்காமல் நீதி நேர்மை பற்றி லெக்சர் கொடுத்து ஏமாற்ற மாட்டேன் என்று திருவேங்கடம் சொல்வது அலுப்பூட்டும் வழக்கமானது.

இந்த நிலையில் திரும்ப ஒரு நாள் எதிரில் தலைகுனிந்து திருவேங்கடம்...

'மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறேன்' என்றார்.

"அபார்ஷன் பண்ணிப் புடலாம் என்று ஆஸ்பத்திரி போனோம் சார்...நாள் தாண்டிப் போச்சாம்..இனிமே செஞ்சா உயிருக்கே ஆபத்தாம்..."

"சரி..."

"என்ன சார் கதை கேக்குற...எனக்கு உன்ன விட்டா யாரு..."

"என்ன சொல்றே...அதனால் நான் என்ன செய்யணும்..."

"முதல்ல ஆஸ்பத்திரி வாங்க சார்...அடுத்த தெருலதான் இருக்கு.."

"......................"

"ராஜுவும் குமரப்பன் சாரும் வர்றாங்களாம்...நீங்களும் வாங்க..."

'அவர்கள் வந்து விட்டு சும்மா சென்று விடுவார்கள். அவர்கள் பிரச்னை அதோடு தீர்ந்து விடும். என் கதை அபபடி இல்லையே..." என்று எண்ணியவர் சென்று பார்த்தார்.

திரு மனைவியைப் பார்த்தவர் இரக்கப் பட்டுத்தான் போனார். அதற்குத்தான் திரு இவரை ஆஸ்பத்திரி இழுத்திருக்கிறார் என்று தெரிந்தபோதும் கண் முன்னே காணும் தேவையைப் புறம் தள்ள முடியவில்லை.

"உங்க ரிலேஷன் யாருமே உதவ மாட்டாங்களா திரு?"

"எங்கே சார்..உங்களுக்குத் தெரியாததா..."

இவருக்கு ஒன்றும் தெரியாது. ஆனாலும் ஏதோ திரு குடும்பத்தைப் பற்றி சர்வமும் தெரிந்தவர் போல அவர் பேசியதை மறுக்க முடியவில்லை.

"எவ்வளவு தேவைப் படும்" தயக்கம், பயம்...

"நிறைய வேணும் சார்...நீங்க ஒரு அஞ்சாயிரம் கொடுங்க போதும்...மிச்சத்த வெளில அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்..."

'இதையும் வெளிலயே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமே' மனதில் நினைத்தவர் "அவ்வளவு இருக்காது இரண்டாயிரம் தர்றேன்.." என்றார்.

"அப்படிச் சொல்லாதீங்க சார்...அடுத்த மாசம் தந்துடறேன்...நம்ப மாட்டீங்க..நான் அபபடி நடந்துகிட்டேன் இல்லை...நிச்சயம் பாதியாவது தந்துடறேன்..."

நாலாயிரம் தந்தார்.

திருவின் குணம் தெரியும். அவர் மனைவியின் உயிரைக் காப்பாற்ற நம்மால் ஆனதைதானே கொடுக்கிறோம்..முழுதுமா கொடுக்கிறோம்...அதில் ஒரு சிறு தொகைதானே..திரு தருவார் என்று நம்பிக்கை இல்லை. எப்போ வருமோ...

கொடுக்காமலும் இருக்க முடியவில்லை.

இதோ...நாட்கள் சென்றுகொண்டே இருக்கின்றன...

பணத்தைத் திருப்பிக் கேட்கும் போதெல்லாம் திரு சொல்லும் பதில்தான் முதல் வரி...!

ஆனால் அதற்குப் பின் திருவும் இவரிடம் பணம் ஏதும் கேட்பதில்லை. எனவே அந்தத் தொல்லை இல்லை.

இப்போதும் அலுவலகத்தில் அவ்வப்போது அங்கங்கே திருவின் "நீதி, நேர்மை, நியாயம்" குரல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இவர் அந்தப் பக்கம் போனால் குரல் நின்று விடும். திரு மெல்ல அங்கிருந்து நகர்ந்து விடுவார்.

அடக்க முடியாத திரு தன்னைக் கண்டு விலகுவது கண்டு மனதுக்குள் ஒரு சிறு பெருமை...

யாருடைய வெற்றி ..யாருடைய தோல்வி இது?

புதன், 29 டிசம்பர், 2010

அப்பள ரகசியம்...


முன்குறிப்பு : முந்தைய பதிவான புத்தகத் திருவிழாவில் நீங்கள் வாங்க விரும்பும் புத்தகப் பட்டியலை இன்னமும் சொல்லலாம்.

கல்யாண மெனுக்கள் பற்றியும் ஒரே மாதிரி பந்திகள் பற்றியும் முன்பு எழுதி இருந்தோம். அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது ஆறேழு மாதங்கள் முன்பு தான் சென்று வந்த திருமணம் பற்றி மாமா சொல்லிக் கொண்டிருந்தார்.


அவருடைய பால்ய நண்பரின் மகன் திருமணம். மயிலையில் நடந்ததாம். மாப்பிள்ளைப் பெண் இருவரும் வெளி நாட்டில் பணி புரிபவர்கள். நுழைந்தவுடன் தக்காளி சூப்பும், கூட உள்ளங்கை சைஸில் கரு நீலத்தில் ஒரு மெனு கார்டும் கொடுத்தார்களாம்.கூடவே "Details of south indian marriages & importance" என்று சினிமா பாட்டு புத்தக சைசில் 25 பக்கத்தில் ஒரு சிறு புத்தகமும் எல்லோருக்கும். அதனுடன் கூட அழகிய ஒரு சின்னஞ்சிறு சுருக்குப் பை ஸ்டைலில் ஒரு பை. அதில் சிறிதளவு அட்சதை. மேலும் சாப்பிட்டவுடன் கை துடைக்க அழகிய சிறிய துண்டு ஒன்று!


மெனு கார்டில் பதிமூன்று வகை சிற்றுண்டிகள் பட்டியலிடப் பட்டிருந்ததாம். இரண்டு வகை சட்னி, மிளகாய்ப் பொடி, ஸ்வீட், தோசை, மசாலா தோசை, இட்லி, பூரி பொங்கல் இத்யாதி இத்யாதி ...


திருமணங்களில் ஒரு வழக்கம் உண்டு. தாலி கட்டி முடிந்ததும் விருந்தினர்கள் மணமகனை, மணமகளை மற்றும் அவர்கள் பெற்றோரை கண்டபடி கை குலுக்கி 'மாப்பிள்ளை வந்தாச்சா...மருமகள் வந்தாச்சா...நாத்தனார் வந்தாச்சா..அண்ணி வந்தாச்சா' என்றெல்லாம் கேட்டபடி அந்த 'சாதனையை' பாராட்டுவார்கள். நான் ஒரு திருமணத்தில் அப்படி கை குலுக்கச் சென்று ப்ரோகிதரிடம் கண்டனம் வாங்கியிருக்கிறேன். இந்தத் திருமணத்தில் மைக்கில் "சப்தபதி முடியும் வரை மாப்பிள்ளையையோ பெண்ணையோ யாரும் கை குலுக்கக் கூடாது" என்று அறிவித்த வண்ணம் இருந்தார்களாம்.


பரிமாறும் பணியாளர்கள் மார்பில் ARS Cooking Service என்று Electronic scrollingகில் அவரவர்கள் பெயர் ஓடிக் கொண்டிருந்தது ஒரு விசேஷமாம்.

மேடையில் மணமக்கள், ப்ரோகிதர் பெற்றோர் தவிர வீடியோ க்ராபர்களுக்கு மட்டுமே அனுமதி. மற்றவர்கள் கீழேதான். எல்லோருமே CC LCD டிவியில் திருமணத்தைக் கண்டு களித்தார்களாம். எல்லோரும் மேடையில் ஏறி என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் மூடி விடும் மற்ற திருமணங்களிலிருந்து வித்யாசமாக எல்லோரும் நன்றாகப் பார்க்கும் வண்ணம் நடந்ததாம்.

சாப்பாடு என்ன மெனு என்று கேட்டேன். அதற்குள் கிளம்பி விட்டதால் அது தெரியாது என்றார்.

சாதரணமாக திருமணங்களுக்கு நூறு ரூபாய் (நூத்தியொரு ரூபாய்) மொய் எழுதுபவர்கள் இருப்பார்கள். அவர்கள் சங்கடப் படும் அளவு கிளம்பும்போது எல்லோருக்கும் நூற்றைம்பது ரூபாய்க்கும் அதிக பெறுமானமுள்ள தரமான Hand Bag ஒன்று வைத்துக் கொடுத்தார்களாம்.

எனக்கு ரொம்ப நாளாய்த் தெரியாத விஷயம் ஒன்று சமீபத்தில்தான் தெரிந்தது!

எவ்வளவோ செலவு செய்து நடத்தும் திருமண பந்திகளில் கூட சில சமயம் இன்னொரு அப்பளம் கேட்டால் தர மாட்டார்கள். 'என்னடா இவ்வளவு செலவு செய்பவர்கள் இது தர மாட்டேன் என்கிறார்களே' என்று தோன்றும். அல்லது இது யார் கேட்கப் போகிறார்கள் என்று சிக்கனமாக செய்து விட்டார்கள் என்றும் தோன்றும். இதை மீறி அதிகம் யோசித்ததில்லை. என்னவென்று பார்த்தால் ஒரு ஆளுக்கு ஒரு அப்பளம் என்பது பந்தியில் எவ்வளவு பேர் சாப்பிட்டார்கள் என்று கணக்கெடுக்கும் அளவுகோலாம். அப்பளத்தை (பெரும்பாலும்) வைத்துதான் இதை கணக்கெடுப்பார்களாம் .அட...இது தெரியலையே எனக்கு..!!


படங்கள் உதவி : நன்றி.... Zonkerala.com, Google, Dreamstime.com

பின்குறிப்பு : முந்தைய பதிவான புத்தகத் திருவிழாவில் நீங்கள் வாங்க விரும்பும் புத்தகப் பட்டியலை இன்னமும் சொல்லலாம்.

திங்கள், 27 டிசம்பர், 2010

புத்தகத் திரு விழா...வாசகர்களுக்கு ஒரு கேள்வி...
முப்பத்தி நான்காவது புத்தகத் திருவிழா ஜனவரி நாலாம் தேதி முதல் தொடங்குகிறது.

போனவருடம் பொங்கலுக்கு முன்னாலேயே முடித்து விட்டார்கள் என்று ஞாபகம். இந்த முறை ஜனவரி பதினேழு வரை இருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள். சந்தோஷம். பொங்கல் விடுமுறையில் கொஞ்சம் மேயலாம்.

"போன வருஷம் வாங்கிய புத்தகங்கள் எல்லாம் படிச்சாச்சா"

இல்லைதான். பல புத்தகங்கள் ஏற்கெனவே தொடராக் வந்த போது படித்தவை. நம் கையிருப்பில் இருக்கட்டுமே என்று வாங்கி வைத்தவை.


"ஏற்கெனவே படித்ததை ஏன் வாங்க வேண்டும்?"

ஏற்கெனவே படித்து நல்லாயிருக்கு என்று தெரிந்ததாலும் அவ்வப்போது மீண்டும் படித்து இன்புறவும்...! புத்தகம்தானே? கெட்டா போகப் போகிறது?


படிக்காத புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக படிக்க வேண்டும். அதற்காக இந்த வருடம் புத்தகங்கள் வாங்காமல் இருக்க முடியுமா? இது ஒரு போதை...


சென்ற வருடம் பதிப்பகங்கள் தந்த லிஸ்ட்டை செக் செய்து பார்க்கலாம் அவர்கள் ஏதாவது ஒரு மொத்த லிஸ்ட் தருகிறார்களா தெரியவில்லை.

இந்த வருடம் என்னென்ன புத்தகங்கள் வாங்குவது என்று ஒரு லிஸ்ட் போட வேண்டும்.

இதில்தான் வாசகர்களையும் கலந்து கேட்கலாம் என்பது எங்கள் எண்ணம்.

நண்பர்களே,

நீங்கள் ஒரு லிஸ்ட் இந்த வருடம் வாங்க தயாராக இருப்பீர்கள். உங்கள் லிஸ்ட் என்ன? இங்கு பகிர்ந்து கொண்டால் எல்லோருக்குமே ஒரு பகிர்தல் கிடைத்து நம் எல்லோருக்குமே சில புத்தகங்கள் நம் லிஸ்ட்டில் சேர்க்க முடியும். நிறைய பேர் நாஞ்சில் நாடன் புத்தகம் வாங்குவார்கள் என்று நம்பலாம். அதுபோல நேற்று ஞாயிற்றுக் கிழமை வெளியிடப் பட்ட கீழைக் காற்றின் எட்டு நூல்களில் ஏதாவது இடம்பெற்றிக்கலாம். மற்ற சக பதிவர்கள் ஏதாவது புத்தகம் எழுதி இருக்கிறார்களா என்று நண்பர்கள்தான் சொல்ல வேண்டும்.


எங்கள் லிஸ்ட்டில் வண்ண நிலவன் சிறுகதைகள், அசோகமித்திரன் சிறுகதைகள் சேர்க்க சொல்லியிருக்கிறார் ஆசிரியர். நாஞ்சில் நாடன் புத்தகம், சென்ற முறை சாரு புத்தகம் இரண்டு வாங்கியதால் இந்த முறை அவரின் ஸீரோ டிகிரி...

கண்ணதாசன் கவிதைகள் வாங்க வேண்டும்...திரைப் பாடல்கள் அனைத்தும் சேர்ந்து இருக்கிறதா என்று பார்த்து. வைரமுத்து கவிதைகள் சினிமாப் பாடல்கள் சேர்ந்ததா என்று தெரியவில்லை. ஆனால் அறுநூறு ரூபாயாம்...ஐயோ...

உடன் வரும் நண்பர்களில் இரண்டு வகை உண்டு... ஒருவகை நண்பர்கள் "அதே புத்தகங்கள்....புத்தகம் புத்தகம் புத்தகமாய்..." என்று சொல்லியபடி முதுகில் கை வைத்து நெம்பி வெளியில் கொண்டு வந்து விடுவார்கள்...ஓரிரு புத்தகமும், ரவா தோசையும் பஜ்ஜியும்தான் செலவு!

இரண்டாவது வகை நம்மை விட அதிக ஆர்வம் பிடித்தவர்கள். வாங்கிய புத்தகங்களை தூக்க ஆள் அழைத்து வருபவர்கள்...


கம் ஆன்... உங்கள் தெரிவுகளை அள்ளி விடுங்கள்...


படங்கள் : நன்றி கூகிள், மூவிகேலரி.இன், கனெக்ட்.இன்.,

வெள்ளி, 24 டிசம்பர், 2010

டிசம்பர் 24
சிலருக்குதான் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் இந்த கொடுப்பினை வாய்க்கிறது.

டிசம்பர் 24.

ஆயிரமாயிரம் மக்கள் மனதை கொள்ளை கொண்ட இரண்டு சாதனை இந்தியர்கள் இந்த தினத்தோடு சம்பந்தப் பட்டிருக்கிறார்கள்.

எம் ஜி ஆர்

டிசெம்பர் 24 தேதியில் மறைந்தவர்.

இவர் அரசியல் வாழ்வை விட்டு விடுவோம். 1935 இல் சதிலீலாவதியில் தொடங்கிய இவர் திரை வாழ்வு எந்த உயரத்துக்கு வந்தது என்பதை நாடறியும்.

எம் ஜி ஆர் ஃபார்முலா என்ற ஒன்று பின்னாளில் ஸ்பெஷலாக அறியப் படும் அளவு இவரது திரைப் படங்கள் அமைந்தன. இவர் பாடல் காட்சிகளில் நடிக்கும் ஸ்டைலே தனிதான்...இரண்டு கைகளையும் மாற்றி மாற்றி நெஞ்சில் வைத்து தொடங்கி வானத்தைக் காட்டி இவர் பாடும் ஸ்டைல் தனி. பெரிய நடனம் என்று கிடையாது. பெரிய நடிப்பு என்று கூட ஒன்று கிடையாது. எது இவரை தமிழக மக்களின் மனம் கவர்ந்த வெற்றி நாயகனாக வைத்திருந்தது என்பது ஆச்சர்யம்.


அவர் படங்களில் அவர் சொன்ன ஸ்பெஷல் ஹீரோயிசம். அவர் பட ஹீரோ குடிக்க மாட்டார்...தவறு செய்ய மாட்டார். தவறு செய்பவர்களை சும்மா விட மாட்டார். பகுத்தறிவுப் பாசறையில் வந்த இவர் படத்தில் கடவுள் என்றால் என்ன என்று விளக்கம் கொடுக்கும் பாடல் ஒன்று உண்டு. "கடவுள் இருக்கின்றார் கண்ணுக்குத் தெரிகின்றதா..." காற்று கண்ணுக்குத் தெரிகின்றதா, உணர முடிகிறது இல்லையா அதே போலதான் கடவுள்' என்ற கருத்தில் வரும் பாடல்.

இவர் பாடல்களில் பலப்பல நல்ல பாடல்கள். எல்லாவற்றையும் சொல்ல முடியாது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்கலீல் ஒன்று
"கண் போன போக்கிலே கால் போகலாமா..."

அதிலும் குறிப்பாக,
"திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்..வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்.."

அடுத்த இரண்டு வரிகளையும் எனது நோட்டில் எல்லாம் எழுதி வைத்திருந்தேன்...

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்..."

நிறைய நல்ல பாடல்கள் சொல்லலாம்...ஆனால் அடுத்த ஆளைப் பற்றி சொல்ல வேண்டுமே...!

முஹம்மத் ரஃபி.


டிசம்பர் 24 தேதியில் பிறந்தவர்.

இவர் குரல் கடவுளின் கொடை.

1924 ஆம் ஆண்டு பிறந்து 1980 ஆம் ஆண்டு மறைந்தவர்.

இவரைப் பற்றி சொல்ல வேண்டுமானால் இவர் பாடல்கள் கேட்டிருக்க வேண்டும். ரொம்பப் புகழ் பெற்ற பாடல்களாக சொல்ல வேண்டுமென்றால்,


சுராலியா ஹை தும் மேரே தில் கோ ...யாதோன் கி பாராத் பாடல்
கியாஹுவா தேரா வாதா .......................ஹம கிசிசே கம் நஹீன் பாடல்.
குங்குநாரஹிஹை ..................................ஆராதனா படப் பாடல்

தமிழ் நாட்டில் கூட தெரிந்திருக்கக் கூடிய பாடல்களைச் சொல்ல மேலே சொன்ன பாடல்கள். இவர் பாடிய நல்ல பாடல்கள் லிஸ்ட்டைச் சொல்ல இந்தப் பதிவு போதாது. தோஸ்த் படத்தில் இவர் பாடிய 'ஆவாஜ் மேன தூங்கா...' பாடல் கேட்டுப் பாருங்கள்.


எல்லோரும் கேட்டிருக்கக் கூடிய ஒரு பாடல் "ராமையா ஒஸ்தாவையா..."

பாடல் இணைக்க முடியவில்லை. சில தொழில் நுட்பக் கோளாறுகள்! பாடல்களை மனதில் நீங்களே பாடிப் பாருங்கள்! தெரிந்த பாடல்களை மனத்திலும் பின்னூட்டத்திலும் அசை போடுங்கள்!

படங்கள் உதவி - நன்றி கூகிள், விக்கி, சுலேகா.காம்.

வியாழன், 23 டிசம்பர், 2010

மார்கழித் திங்கள் அல்லவா.

கோல நினைவுகள்....
மாதங்களில் சிறந்தது மார்கழி...

மார்கழி மாதம் வந்தால் ரெண்டு விஷயம் விசேஷம்..


ஒன்று பனியும் குளிரும்... அடுத்து கோலம்!
அந்த நாளில் வீட்டு வசதிக் குடியிருப்பில் குடியிருந்த போது சுமார் ஐநூறு வீடுகளின் நடுவே இருந்த அனுபவங்கள் நினைவுக்கு வருகின்றன. அதற்கும் முன்னால் நீண்ட தெருக்கள் இருந்த இடங்களில் வசித்த காலங்களும்...


வரிசையான தெருக்களில் ஒவ்வொரு வீட்டின் முன்னும் விதம் விதமான கோலங்கள்...முதலில் காவி மட்டும் பூசப் படும் காலங்கள் போய் கலர்ப் பொடிகள் வந்து கலர்ப் பொடிகளை கோலத்தில் இட்டு வண்ண மயமான தெருக்களைப் பார்த்த காலம். கோலத்தில் கால் மிதிக்காமல் காலை தெருவில் நடப்பதே ஒரு கலை. அலுவலகம் போகும் பெண்கள், பள்ளி கல்லூரி போகும் பெண்கள் எந்த வீட்டின் முன் கோலம் புது மாதிரியாகவோ, கஷ்டமான கோலமாகவோ இருக்கிறதோ அங்கு நின்று அளவெடுப்பார்கள். மறு நாள் அவர்கள் வீட்டின் முன் அந்தக் கோலம் காணப்படும். பெரும்பாலும் இந்தக் கோலக் கடத்தல்கள் ஏரியா விட்டு ஏரியா தான் போடப் படும். பின்னே, பக்கத்து வீட்டில் போட்டதை நம் வீட்டில் மறுநாள் போடுவதில் சுவை இல்லையே...!


இந்தக் கோலம் போடப் படும் முன் முதல் நாள் வீட்டுப் பெண்கள் பேப்பரிலும் தரையிலும் புள்ளிகள் வைத்து கோடுகள் இழுத்து சிந்தனையுடன் கோல ஆராய்ச்சியில் இருப்பார்கள். ஏதோ கஷ்டமான கணக்கு ஃபார்முலாவுக்கு விடை கண்டு பிடிக்கும் கணித மேதை போலத் தோன்றுவார்கள்.


நாங்களும் கூட புள்ளிகளை இஷ்டத்துக்கு வைத்து விதம் விதமாக டிசைன் போட்டு கோல உற்பத்தி செய்ய முயற்சி செய்வோம்!


என்ன கோல ஆராய்ச்சி என்கிறீர்களா...ஓய்வு கிடைத்ததே என்று வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது பழைய கோல நோட்டு கிடைத்தது..அதை வைத்து ஒரு பதிவு ஒப்பேற்றி விடலாமே என்று தோன்றியது..! அதில் பார்த்த கோலங்களைத்தான் அங்கங்கே தெளித்திருக்கிறோம்.


ஒருமுறை அதிகாலைக் குளிரில் தங்கை தலையில் துணி சுற்றிக் கொண்டு கர்மசிரத்தையாக கோலம் போட்டுக் கொண்டிருக்க, அதிகாலை ஊரிலிருந்து வந்த மாமா தொந்தரவு செய்யாமல் பின்னால் நின்று (அவரும் மஃப்ளருடன்) ரசித்துக் கொண்டிருக்க, புள்ளியிட்டு கோலத்தைப் பெரிதாக்கப் பின்னால் நகர்ந்த தங்கை அரைகுறை இருளில் பின்னால் நின்ற உருவத்தைப் பார்த்து அலற, அதுவரை அங்கு காவலுக்கு நின்றிருந்து அப்போதுதான் உள்ளே சென்றிருந்த நாங்கள் ஓடிவர...மறக்க முடியாத சம்பவம்.


இன்றைய கான்க்ரீட் காடுகளின் நடுவே கோலங்களை எதிர்பார்ப்பது ரொம்பக் கஷ்டம். இன்றைய ஐடி யுகத்தில் கோலம் போடும் பெண்களும் குறைவு. போடும் இடம் அமைந்திருக்கும் இடங்களை யோசித்தால் மற்றவர்கள் பார்க்கும் வாய்ப்பும் குறைவு.


அப்போது மார்கழிக் கோலம்..இப்போது காலத்தின் கோலம்!புதன், 22 டிசம்பர், 2010

உள் பெட்டியிலிருந்து...1210

வந்ததை ரசித்து, ரசித்ததை எடுத்து, எடுத்ததை (மொழி) மாற்றி, கொடுத்துள்ளோம் உங்களுக்கும், ரசிக்க...
சில உண்மைகள்...

எல்லா "சும்மா சொன்னேன்" பின்னாலும் ஒரு சிறு பொய் இருக்கிறது.

எல்லா "எனக்குத் தெரியாது" பின்னாலும் சிறிது அறிவு இருக்கிறது.

எல்லா "எனக்குக் கவலை இல்லை"யின் பின்னும் ஒரு அக்கறை இருக்கிறது.

எல்லா வெறுப்பின் பின்னும் சிறிய விருப்பு இருக்கிறது.

எல்லா "ஒண்ணுமில்லை, பரவாயில்லை"யின் பின்னும் சிறிய வலி இருக்கிறது.

எல்லா பொய்களின் பின்னும் ஒரு சிறிய உண்மை இருக்கிறது.

------------------------------------------------------


எல்லா சந்திப்புக்கும்
ஒரு காரணம் இருக்கிறது.

சிலர் நம்மைச் சோதிக்க,
சிலர் நம்மை உபயோகிக்க,
சிலர் உணர்த்த,
சிலரை உணர,
சிலர் நம்மை அடையாளம் காட்ட,
சிலர் வழியேற்படுத்த,
சிலர் வலி ஏற்படுத்த,
சிலர் வழி நடத்த,
வாழ்க்கையின் எல்லா
மூலைகளிலும்
சந்திப்புகளிலும்
ஆச்சர்யமும் சலிப்பும்....
எல்லா சந்திப்புக்கும்
ஒரு காரணம் இருக்கிறது..

செவ்வாய், 21 டிசம்பர், 2010

குட்டிச் சுவரில் வெட்டி அரட்டை..

ராசி...

"ராசி நல்ல ராசி...உன்னை மாலையிட்ட மங்கை மகராசி... உன் கை ராசி.." ஏ.எம். ராஜா பாடிக் கொண்டிருந்தார்.

அடுத்த பாடலாக,

"ராசிதான்..கை ராசிதான்.." பாடல் ஒலிக்கத் தொடங்கியதும் ரேடியோக் காரர்கள் பாடல் போடும் 'தீம்' புரிந்தது.

கூடவே சில சிந்தனைகளும் கிளர்ந்தெழுந்தது!

காலையில் பூவோ கீரையோ வாங்கும்போது கொஞ்சம் பயமாகவே இருக்கும்.

சில பேர்,"ராசியான கை உங்க கையால முதல் போணி பண்ணினா ரொம்ப ராசி சார்.." என்பார்கள். சில பேர் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஒன்றும் சொல்லவில்லை என்றால் அவர்களைப் பொறுத்தவரை நம் கைகளுக்கு ராசி கிடையாதா, அல்லது அவர்களுக்கு அதில் நம்பிக்கை இல்லையா என்றும் தெரியாது!

எனக்கு இதில் நம்பிக்கை கிடையாது.

அப்படித்தான் சொல்ல வேண்டும். பகுத்தறிவு, விஞ்ஞான அறிவு எல்லாம் கிடையாது.

பட்டறிவு. அதாவது பட்ட அறிவு...!


சில வியாபாரிகள் நாம் முதலில் போய் நின்றிந்தாலும் கூட நம்மை கவனிக்காது, அல்லது கவனிக்காத மாதிரி வேறு வேலை செய்துகொண்டே வேறு ஆட்களுக்கு விற்பனை செய்வதைப் பார்த்திருக்கிறேன். எனக்கும் அதில் சந்தோஷம்தான். உண்மையில் முதல் ஆளாக நாம் வாங்கி விடக் கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்வும் எனக்கு இருக்கும். ஏனென்றால் மறுநாள் அவர்களைப் பார்க்கும்போது எங்கே 'நேற்று சரியான வியாபரமே இல்லை சார்' என்று மறைமுகமாக சொல்வார்களோ என்று பயமாக இருக்கும். சிலசமயம் அதனாலேயே அங்கு வாங்க வேண்டிய பொருள் இருநதால் கூட, முதல் நாள் அங்கு முதல் ஆளாக வாங்க வேண்டிய சந்தர்ப்பம் வந்திருந்தால், இன்று தவிர்த்து விடுவேன்! ராசியில்லாதவன் என்று பெயர் வாங்குவதில் விருப்பம் இல்லை எனக்கு! ஒரு வேளை நேற்று வியாபாரம் ரொம்ப அமோகம் என்று கூடச் சொல்லலாம். ஆனால் எனக்குத் தேவை இல்லை. பின்னதில் கிடைக்கும் சிறு மனச் சந்தோஷத்தை விட முன்னதில் தவிர்க்கும் மனச் சுருக்கம் பெரிது. என்ன சொல்கிறீர்கள்?


முதல் வியாபாரம் என்று சொல்வதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. தந்திரம் என்று கூட சொல்லலாம். ஆட்டோ ஆகட்டும், பொருட்கள் ஆகட்டும், 'முதல் போணி சார்...' என்று குரல் கொடுத்தார்கள் என்றால் நாம் பேரம் பேசக் கூடாது என்று அர்த்தம்!

ராசியான கை என்று சொல்லப் படுபவர்களை எல்லா இடத்திலும் அப்படிதான் சொல்கிறார்களா என்று ஒரு சந்தேகம் உண்டு. எனக்கு அபபடி இல்லை. ஒருவர் இப்படி. இன்னொருவர் அபபடி! ராசியான கை என்று சொல்லும்போது மகிழ்ந்து போகாமலிருக்கப் பழகி விட்டேன். மாற்றுக் கருத்தில் மனம் சுருங்காமலிருக்கப் பழகிக் கொண்டிருக்கிறேன்!

வியாபாரிகள் இப்படிச் சொல்வதில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் தந்திரமும் உண்டு என்று தெரியும் ஏன் 'உம' விகுதி சேர்க்கிறேன் என்றால் என் நண்பர் ஒருவர் இருக்குமிடம் தேடி சில பொருட்கள் வரும். விலையும் டோக்கன் அமவுண்ட் தான்! 'நாம் கே வாசி' ஓரிரு ரூபாய் வாங்கிச் செல்வார்கள்.


"இப்படி ஒருவரைப் பற்றி கைராசி என்று சொல்கிறீர்களே, அப்போது பக்கத்தில் நிற்கும் மற்ற வாடிக்கையாளர் மனம் என்ன நினைக்கும் என்று யோசிக்க மாட்டீர்களா" என்று என் வியாபார நண்பர் ஒருவரைக் கேட்டேன்.

"எனக்கு எல்லார் கையுமே ராசிதான் சார்...அதனாலதானே எங்க பொழைப்பு...ஆனால் சில பேரு கை ரொம்ப ராசி.." என்றார்!

என்னையும் சில பேர் உங்க கை ராசி சொல்லியிருக்கிறார்கள் என்பதில் ஒரு ரகசிய திருப்தியும் உண்டு. நான் இப்படிச் சொல்லியிருக்கிறேன் என்று வெளியில் சொல்லி விடாதீர்கள்.

அவர்கள் ராசி பார்ப்பது இருக்கட்டும், அவர்களிடம் பொருள் வாங்கிய நாம் என்ன பார்ப்பது? வாங்கி வந்த பொருள் சரியில்லை, அல்லது தொலைந்து விட்டது என்றோ நாம் முதலில் ஆட்டோவிலோ டேக்சியிலோ ஏறிச் சென்ற வேலை நடக்கவில்லை என்றால் அந்தக் கடைகளை நாம் தவிர்க்க வேண்டுமா அல்லது முதலில் 'போணி' செய்வதை தவிர்க்க வேண்டுமா?!!

ராசியான பேனா, ராசியான சட்டை என்று நான் எதுவும் வைத்துக் கொண்டது கிடையாது. நண்பர்களிடமும் ராசி பார்ப்பதில்லை. என் வேலைகளைச் செய்யும் போது ராகு காலம் வந்தால் அஷ்டமி போன்ற தினங்கள் வந்தால் கவலைப் படுவது இல்லை. ஒரு வகையில் மகிழ்ச்சிதான். எப்போதும் இருப்பதைவிட கூட்டம் குறைவாக வேலைகளை எளிதில் முடித்து வரலாம்! அபபடி முடித்துமிருக்கிறேன்.

படங்கள் : நன்றி கூகிள், ஃபோட்டோ நெட்.


சனி, 18 டிசம்பர், 2010

பயமா பாசமா...எதிர்பாராத அதிர்ச்சி அது...

பெரியப்பா இறந்து விட்டார் என்று தெரிந்தபோது சாந்தி அதிர்ந்துதான் போனாள்.

பெரியப்பா மகன் குமார்தான் ஃபோன் பேசினான்.ஒரு சிறு விபத்து என்பதற்காக முதலில் ஒரு மருத்துவமனையிலும், பின்னர் அங்கே ரொம்பக் காசு பிடுங்குகிறார்கள்என்று தோன்றியதாலும், அங்கே சிகிச்சை பார்க்க வந்த மருத்துவர்கள் மிக இள வயதினராகத் தெரிந்ததாலும் சில பேரை யோசனை கேட்டு இங்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். கணுக்காலில் ஒரு சிறு எலும்பு முறிவு அவளவுதான். ஆனால் இந்த மருத்துவமனையிலோ நோயாளியை பார்க்க உறவினர் நண்பர் என்று யாரையும் விடாமல் மறைத்து வைத்திருந்தது சோதனையாக இருந்தது.

பிபி அதிகமாக இருந்தது என்று அறுவை சிகிச்சையைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்கள். இவருக்கானால் வயது ஐம்பத்தாறு ஆனாலும் பிபி சுகர் என்று ஏதும் கிடையாது.

உறவினர்களை யாரும் பார்க்க முடியாத டென்ஷனில் அவர் கத்த, ஒரு வழியாய் அறுவை சிகிச்சை செய்திருந்தார்கள். அப்போதும் யாரையும் உள்ளே விடவில்லை. இரண்டு நாளில் பார்க்கலாம் என்று சொல்லியிருந்த நிலையில் இப்போது இப்படி ஒரு ஃபோன்.

"என்னடா ஆச்சு?"

"இல்லக்கா...எல்லாம் சரியாதான் இருக்குன்னாங்க...அப்பா கிட்ட ஃபோன்ல கூடப் பேசினோம். நல்லாத்தான் பேசினாரு..என்ன ஆச்சோ...ரெண்டு மணி நேரத்துல ஃபோன்...க்ரிடிகல்னாங்க...ஹை பிபின்னாங்க..." திணறித் திணறிப் பேசினான் குமார். அழுகையில் புதைந்த அவன் குரல் பல இடங்களில் தெளிவில்லாமல் இருந்தது.

"அப்புறம்.." சாந்தி குரல் நடுங்கியது. "சொல்லுடா...என்ன ஆச்சு சொல்லு..எப்படி இப்படி...அவருக்கு ஏதுடா பிபி?"

மறுமுனையில் குமார் குரலெடுத்து அழுதான். "தெரியலையேக்கா ... ஒருவேளை நம்மளை யாரும் பார்க்கவே விடாத டென்ஷன்லேயே BP ஏறிடுச்சோ என்னவோ தெரியலையே..."

"பெரியம்மா எங்கேடா?"

"உண்மையை இன்னும் சொல்லலைக்கா... இங்கதான் இருக்காங்க...நீங்களும் வாங்க...அம்மாவுக்கு ஆறுதலா இருக்கும்"

சாந்தி அங்கு போனபோது கணவர் இறந்தது தெரியாமல் அவர் கையைத் தடவியபடி "கவலைப் படாதீங்க...பெரியபாளையத்தம்மன் உங்களைக் கை விட மாட்டாங்க...காப்பாத்திடுவாங்க" என்று சொல்லிக் கொண்டிருந்த பெரியம்மாவைப் பார்த்ததும் கஷ்டமாக இருந்தது. குமாரிடம் சொல்லி உண்மையை உடனே எடுத்து சொல்லச் சொன்னாள்.

அப்புறம் நடந்தது எல்லாமே இப்போது நினைக்கும்போது வேகமாக நடந்தது போலவும் அப்போது யோசிக்கும்போது மிக மெதுவாக நடந்தது போலவும் உணர்வு.

தன வீடு வந்து விட்டாலும் அவ்வப்போது தொலைபேசியில் பெரியம்மாவுடன் பேசிக் கொண்டே இருந்தாள் சாந்தி. ஆறுதல் சொல்லிக் கொண்டே இருப்பாள். பெரியப்பா தினமும் புதிதாகக் காய்கறி வாங்கி வருவது, நறுக்கித் தருவது, ஊறுகாய் போடுவது எல்லாவற்றையும் நினைவு படுத்தி சொல்லிச் சொல்லி அழுதாள் பெரியம்மா.


"ஏம்பா ஆறுதல்ங்கற பேர்ல பெரியம்மாவை அழ விடறே.." என்று சாந்தியின் கணவன் கூடக் கடிந்து கொண்டான்.

பத்தாம் நாள் காரியம் செய்வது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

அதைப் பற்றி பேச சாந்தி அன்றும் பெரியம்மாவுக்கு தொலைபேசினாள்.


"சாந்தி...சாந்தி...நானே ஃபோன் செய்யணும்னு நினைச்சேன்.."

பெரியம்மாவின் குரலில் பதட்டம் இருந்தது. ஆனால் கிசுகிசுப்பாக இருந்தது.

"என்ன பெரியம்மா" ஆச்சர்யத்துடன் கேட்டாள் சாந்தி.

"சாந்தி..சாந்தி...அது...பெரியப்பா..." குரல் வரவில்லை பெரியம்மாவுக்கு.

"சொல்லுங்க.."ஊக்கினாள் சாந்தி.

"எப்படிடி சொல்றது...பயமா இருக்கு...காலைல எழுந்து பல்லு விளக்கிட்டு குமார் கிட்ட ஏதோ சொல்றதுக்காக ஹாலுக்கு வந்தேனா..." பெரியம்மா மூச்சை இழுத்துப் பிடிப்பது தெரிந்தது. குரலில் நடுக்கம் இருந்தது.

"அட சொல்லுங்க பெரியம்மா..."

"ஹால்ல அவர் உட்கார்ந்திருக்கார்டி...."

"எவர்?" சாந்தி குரலில் எதிர்பார்ப்பு எகிறியது. விடை தெரிந்துவிட்டது போல ஒரு நடுக்கம் உடம்பில் ஓடியது. வரப் போகும் பதிலை நம்ப முடியாது என்று மனதில் எண்ணம் தோன்றியது.

"உன் பெரியப்பாடி..." குரலில் நடுக்கமா, பயமா எதுவென்று சொல்ல முடியாமல் கிசுகிசுப்பாய் வார்த்த்தைகள் விட்டு விட்டு வந்தன.

"பெரியம்மா உளறாதீங்க...குமார் எங்க...அவன் கிட்ட ஃபோனைக் குடுங்க..."

"அவன்....அவன்... அங்க இருக்காண்டி...வர மாட்டான்.." இலேசான அழுகையுடன் வந்தது பெரியம்மா குரல்.

"எங்க...எங்க இருக்கான்...என்ன பெரியம்மா..என்ன ஆச்சு உங்களுக்கு...வேற யார் இருக்கா அங்க..."

"குமார்...அவர் எதிர்ல உறைஞ்சிப் போய் உட்கார்ந்திருக்கான். அவர் கைல கன்னத்துல காயம்லாம் இருந்ததே அதைக் காணோமடி..."

சாந்தியால் நம்ப முடியவில்லை. பேச்சு வரவில்லை. அவள் கணவர் கூட மின் மயானத்துக்கு சென்று வந்து ஆஜானுபாகுவான பெரியப்பா உடல் ஒன்றரை மணி நேரத்தில் வெறும் சாம்பலாக பெட்டியில் கலெக்ட் செய்தார்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தாரே......பெரியம்மாவுக்கு புத்தி பேதலித்து விட்டதோ...உளறுகிறாளே ...

"காய் கொண்டு வா நறுக்கனுங்கறார்... நாயை அவுத்து வெளில விடச் சொல்றாரு...யாருக்கும் பேச்சே வரலை..."

ஃபோனை கையால் மூடிக் கொண்டு கணவனிடம் சொன்னாள்.

நடந்ததைக் கேட்ட அவள் கணவனும் நம்பவில்லை.

சிரித்தான்.

சாந்தியின் செல் ஒலித்தது. அவள் பேசிக் கொண்டிருந்தது லேண்ட் லைனில்.

செல்லில் "Periyappa calling.." என்று வர சாந்தி திகைப்புடன் அதை நோக்கினாள்.

"பெரியம்மா! பெரியப்பா செல் யார் கிட்ட இருக்கு..எனக்கு அதிலேருந்து கால் வருது.." என்றாள் லேண்ட் லைனில்.

"அவர் கைலதாண்டி இருக்கு...யாருக்கோ அடிச்சிகிட்டு இருந்தார்...உனக்குத்தானா..ஐயோ ஃபோனை வச்சிடுடி...பயமா இருக்கு..."

இப்போது செல்ஃபோன் தானாகவே அட்டென்ட் செய்யப் பட்டது. அதிலிருந்து பெரியப்பா குரல் ஒலித்தது.

"என்ன சாந்தி...என்ன நம்ப மாட்டேங்கறே...பெரியம்மா கிட்ட என்ன சந்தேகம் உனக்கு.."

"நான்...நான்...பெரி...பெரி..." குரல் குழற லேண்ட் லைனை அதன் இடத்தில் சாத்தினாள் சாந்தி.

செல்ஃபோன் ஆஃப் ஆக, சாந்தியின் கணவன் "சா...ந்தி..." என்று பதட்டத்துடன் கிட்டத்தட்ட அலறினான்.

திரும்பி ஹாலைப் பார்த்தவள் கண்கள் இருண்டன. சோபாவில் பெரியப்பா.


"என்ன மாப்பிள்ளை..பேச மாட்டேங்கறீங்க..... நாந்தான் நம்புங்க..."

".........................."

"சொல்லுங்க மாப்பிள்ளை...என்னமோ சொல்ல வரீங்க...வாயைத் திறந்து திறந்து மூடினா என்ன அர்த்தம்?"

"கன்னத்துல காயத்தைக் காணோமே..." என்னமோ பேச நினைத்து பேசாமல் இருக்க முடியாமல் உளறினான் சாந்தியின் கணவன்.

"அதுவா...இதோ...." என்று இடது கன்னத்தை கொசுவை விரட்டுவது போலத் தட்ட, அங்கே ஒரு காயம்...

"என்ன...காய்கறி நறுக்கவா...எங்கே காய்..என்ன காய் வச்சிருக்கீங்க...அதென்ன மாப்பிள்ளை கன்னத்து காயத்தையே பார்க்கறீங்க.."

"இந்தப் பக்கம்...இந்தக் கன்னத்துலதானே காயம் இருந்தது....காய்...ஒண்ணும் இல்லை... நறுக்க வேணாம்...நானே...நானே..."வாய் குழற குழற உளறினான் சாந்தி கணவன்.

"இதுல என்ன பிரச்னை மாப்பிள்ளை...இந்தக் கன்னமா...இதோ..."என்ற பெரியப்பா இடது கன்னத்தை தடவி, வலது கன்னத்தில் ஓட்டுவது போல தட்ட, காயம் அங்கே தோன்றி சிவப்பு நிறம் தோன்றியது.

சாந்தி கணவன் மயக்கமானான் . சாந்தி ஏற்கெனவே மயக்கமாகியிருந்தாள்.

படங்கள் : நன்றி கூகிள்.

வியாழன், 16 டிசம்பர், 2010

தேன் தேன் ..

பார்த்தேன், சிரித்தேன்,
இதோ வருகிறது முழுப் பாடல்.
கேட்டு இரசியுங்கள்.
மேலும் ஒரு கேள்வி கேட்கிறோம்.
இது தேன், தேன் என்று வருகின்ற பாடல்.
டேன், டேன் என்று வருகின்ற பாடல் எது? கருத்துரையுங்கள்.
            

புதன், 15 டிசம்பர், 2010

பாட்டுப் புதிர்.

இந்த இசைத் துணுக்கைக் கேளுங்கள்.கேள்விகள்:

1) பாடலின் ஆரம்ப வரி என்ன?

2) பாடலைப் பாடியவர்(கள்) யார்?

3) என்ன படம்?

4) யார் இசையமைப்பு?

5) யார் எழுதிய பாடல்?


ஒவ்வொரு பதிலுக்கும், பத்து மதிப்பெண்கள்.

பாடல் என்ன இராகம்?. இதை சரியாகச் சொல்பவர்களுக்கு ஐம்பது மதிப்பெண்கள்.
நூற்றுக்கு நூறு யார் வாங்கப் போகிறார்கள் பார்க்கலாம்!
        

செவ்வாய், 14 டிசம்பர், 2010

அலமேலு

"என்னங்க...வேலைக்காரிக்கு யார் கிட்டயாவது சொன்னீங்களா?" கடைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த செல்வராசுவிடம் மனைவி கேட்டாள்.

"சொல்லியிருக்கேன் சுசி...எங்க...இதோ அதோங்கறாங்க..."


புது வீடு மாறி பதினைந்து நாளாகிறது. முன்பு இருந்த வீட்டில் வேலைக்காரி பிடித்ததே பெரிய கதை. வீடு மாற்றும் கவலையை விட அப்போதிலிருந்தே இதுதான் பெரிய கவலையாக இருந்தது.

பழைய வீட்டு வேலைக்காரியையே இங்கே வர முடியுமா என்று கேட்ட போது மறுத்து விட்டாள்.

"தொலைவுங்க...கூட அது நம்ம ஏரியா இல்லீங்க...அங்கத்தி ஆளுங்க கோச்சுக்கும்..."

அப்படியானால் ஆட்டோ ஸ்டேண்ட் போல நிறைய இருப்பார்கள் போல, உடனே கிடைத்து விடுவார்கள் என்று தேற்றிக் கொண்டார்கள். ம்..ஹூம்.

கடைத் தெருவில் பழைய வேலைக் காரியைப் பார்த்தார் செல்வராசு. 

"நல்லாருக்கீங்களாய்யா .. அம்மா சொகமா? ஆளு கிடைச்சுதாங்கையா?"

"எங்கேம்மா...இன்னும் இல்லை ...தெரிஞ்சவங்க யாரும் இருந்தா சொல்லேன்...நீயே வரலாம். வர மாட்டேங்கறே ..."

"அடப் பாவமே...வினும்மா கூட ரொம்பக் க்கஷ்டப் படுமே...எந்தத் தெரு சொன்னீங்க"

வினும்மா என்று அவள் குறிப்பிட்டது இவர் மகள் விநோதினியை.

தெரு பெயர் சொன்னார்.

"அட..அங்கேயா...தெரு முனைல ஒரு குடிசை பார்த்திருக்கீங்களா.."

"ஆமாம் தெரியும் தெரியும்...அலமேலு அம்மாதானே..கேட்டேனே பார்க்கறேன்னாங்களே தவிர வரலை.."

"பார்த்துட்டீங்களா...பரவாயில்லை சாமி...மறுபடி பார்த்து என் பேர் சொல்லுங்க...அவங்க எனக்கு மாமியார் முறைதான்..அவிங்க வர மாட்டாங்கையா...அவிங்களுக்குக் கீழே பதினைந்து பேர் இருக்காங்க..அவிங்கள்ள ஒருத்திய அனுப்புவாக..."

'இது வேறயா' என்று நினைத்தபடி "சரிம்மா" என்று வீடு திரும்பினார் செல்வராசு. 

காய்கறியை சுசியிடம் கொடுத்து விட்டு அவளிடம் நடந்ததைச் சொல்லி, "நீ போய்க் குடிசைல சொல்லேன்" முன்னர் அலமேலுவைப் பார்த்த போதே ஏனோ ஒரு பயம்தான் ஏற்பட்டது இவருக்கு.

"நானா...அட..நீங்கதான முன்னமே பாத்துருக்கேன்னு சொன்னீங்க...நீங்களே மறுபடி போய்ப் பாருங்க"

போனார். தயக்கத்துடன் குடிசை முன்பு நின்று குரல் கொடுத்தார்.
                                    
  
அள்ளிச் செருகிய கொண்டையுடன் தோன்றினாள் அலமேலு. "இன்னா..?"

சிபாரிசைச் சொன்னார்.

"அது சொல்லிச்சா...நீ முன்னமே வந்திருக்கே இல்லே...சரி, சரி பார்க்கறேன்...வூட்டுலதான இருப்பீய...?"

"ஆமாம்மா... "

"சரி போ..பன்னண்டு மணிக்கு அப்பால சரோசா வரும். அனுப்பறேன்.."

சுசியிடம் நடந்ததைச் சொன்னார்.

காத்திருந்தார்கள்.

பனிரெண்டரை மணிக்கு மேல் ஒரு மாது உள்ளே நுழைந்தாள்.

"ஆரும்மா வூட்டுல.."

"யாரது"

"அலமேலும்மா அனுப்பிச்சுது...ஆளு வேணும்னு கேட்டீங்களாமே..."

"நீங்கதான்.... நீதான் சரோஜாவா?"

"அ ஆங்... ஆமாம் வூட்ல எத்தினி பேரு?"

"அஞ்சு பேரு... நானு, இவ என் மனைவி, என் பொண்ணு, மாப்பிள்ளை அவ பையன்....சின்னப் பையன்தான்..." கடைசி வரியை ஏன் சொன்னார் என்று செல்வராசுவுக்கே ஆச்சர்யமேற்பட்டது.

"டிவி இருக்கா.."

"அதை ஏன் கேக்கறே...அதான இதோ பார்த்துகிட்டு இருக்கோமே .. எவ்வளோ கேக்கறே சம்பளம்..அதை சொல்லு" சுசி கேட்டாள்.

கேள்வியை லட்சியம் செய்யவில்லை சரோஜா.

"காலைல என்ன டிஃபன் செய்வீங்க"

செல்வராசு சுசியைப் பார்த்தார். 'என்னது இது?'

சுசிக்கு வந்த ஆளை விட மனமில்லை போலும். ஏற்கெனவே வந்து வந்து வராமல் போன ஆட்களை நினைத்துக் கொண்டாள்.

"எப்பவுமே காலைல இட்லிதான்...எப்பவாவது பொங்கல்...அதுல பாத்திரம் ரொம்ப விழாதும்மா"

"தொட்டுக்க..?"

"சட்னி, மிளகாய்ப் பொடிதான்..." சுசியும் யோசிக்காமல் 'சட்'டென சொல்லி விட்டு "ஏன் கேக்கறே" என்றாள்.

"சாம்பார்லாம் செய்ய மாட்டீங்களா.." என்றவள் இப்போதுதான் முதல் அடி எடுத்து உள்ளே வைத்தாள்.

"ஏம்மா பாத்திரம் தேய்க்கதானே வந்துருக்கே..." சுசி பொறுக்க முடியாமல் கேட்டே விட்டாள்.

உள்ளே அளவெடுத்துக் கொண்டிருந்த சரோஜா கிச்சன் மற்றும் பாத்ரூம், பாத்திரம் தேய்க்குமிடம் என்று சூபர்வைஸ் செய்தாள்.

"இங்கதான் தேய்க்கணுமா"

"ஆமாம்"

திரும்பி பாத்ரூம், கிச்சன் என்று அளவெடுத்தாள்.

சுசியும் செல்வராசுவும் சஸ்பென்சாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"சரி நாளைலேருந்து வர்றேன்...இப்போ ஏதாவது டிஃபன் இருக்கா"

"இல்லை"

இளக்காரமாகப் பார்த்து விட்டு வெளியேறினாள் சரோஜா.

ஏனோ இருவருக்குமே ஒரு பெருமூச்சு வந்தது. இனி தினமும் அந்தப் பெருமூச்சு எப்போ விடுவோமோ என்று கவலையும் வந்தது.
   
அடுத்த நாள் முதல் சரோஜா வேலைக்கு வரத் தொடங்கி விட்டாள். அதிரடிதான். போய் வேலை செய்யுமிடத்தில் உட்கார்ந்து விடுவாள். திரும்பிப் பார்ப்பாள். சுசி பாத்திரக் கூடையை எடுத்துக் கொண்டு போய் சரோஜா பக்கத்தில் வைப்பாள். 

அங்கிருந்தே டிவியை ஒரு கண்ணால் பார்த்த படியே வேலை தொடங்கும். வேலையைப் பார்த்த சுசி ஆடிப் போனாள். பாத்திரத்தை எடுக்க வேண்டியது..ஒரு திருப்பு திருப்ப வேண்டியது..குழாயில் காட்ட வேண்டியது....

செல்வராசுவை 'என்னங்க இது' என்ற பார்வை பார்த்தாள் சுசி.

மெல்ல மெல்ல தைரியமாக 'மிஞ்சியிருந்தால்தான் டிஃபனோ சாப்பாடோ கொடுப்போம்' என்றும் சொல்லி விட்டாள் சுசி.

வேலைக்கு ஆள் கிடைத்து விட்டது என்று நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஏதோ ஒரு சங்கடம். மகள் வினு ஆஃபீசிலிருந்து திரும்பி வேலைகளில் குறை காணத் தொடங்கினாள்.

இடையில் ஓரிரு நாள் கடைத் தெருவில் வெற்றிலையை அதக்கிய படி அலமேலும்மா "என்ன சரோசா வாராளா... ஆரு வூட்டுக்கும் வராது அது..நான் சொன்னதாலே உங்க வூட்டுக்கு வருது.." என்ற போது செல்வராசுவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

பாதி வேலைகளை சுசியே செய்ய வேண்டி வர, நொந்து போனாள் சுசி.

"ஏங்க நிறுத்திடலாமா...வேற ஆள் பார்க்கலாங்க..."

"ஐயோ நான் மாட்டேன்...இவளை விடு...அலமேலு என்ன சொல்வாளோ..அப்புறம் அடுத்த ஆள் வேற கிடைக்கறது கஷ்டம்...முன்னமே பட்டோம் இல்லை.."

"இப்ப மட்டும் என்ன வாழுதாம்" சுசி நொடித்துக் கொண்டு உள்ளே போனாள்.

இடையில் மேல் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த ராதையைக் கேட்டுப் பார்த்தாள். அவள் பதிலேதும் சொல்லாமல் தாண்டிச் சென்று கொண்டே இருந்தாள்.

ஒரு கட்டத்தில் இதற்கு மேல் பொறுக்க முடியாது என்பது போல சுசி, செல்வராசுவிடமிருந்து பணம் வங்கிக் கொண்டு சரோஜாவிடம் சென்றாள்.

"இந்தா..இது வரைப் பார்த்ததற்குக் காசு... நாளை முதல் நீ வர வேண்டாம்..."

தைரியமாகச் சொல்லி விட்டு வந்து விட்டாள். சரோஜா விரோதமாக செல்வராசுவை ஒரு பார்வை பார்த்தாள். பிறகு சென்று விட்டாள்.

மாலை வெளியே ஏதோ கூச்சல் கொஞ்ச நேரமாய்க் கேட்கிறதே என்று எழுந்து வெளியே வந்தார் செல்வராசு. எதிர் வீட்டுக் காரர்கள் பக்கத்து வீட்டுக் காரர்கள் இவர்கள் வீட்டையே பார்த்துக் கொண்டிருக்க, அலமேலு தெருவில் நின்று கோபமாகக் கத்திக் கொண்டிருந்தாள்...

"என் கிட்ட வந்து ஆள் வேணும்னு கேக்கத் தோணிச்சி இல்லே...நிறுத்தறேன்னு சுளுவா அவ கிட்ட சொல்லிட்டியே...என் கிட்ட சொல்ல வேணாம்...உன் வூட்டுக்கு அனுப்பினதுக்கு அடுத்த தெருல கேட்டாங்க அவுங்க வூட்டுக்காவது அனுப்பிருப்பேன்...மருமவ சொன்னாளேன்னு எல்ப் செஞ்சதுதான் ராங்காயிடிச்சி... இனி யார் வருவா உன் வூட்டுக்கு..நானும் பாக்கறேன்..."

என்னடா இது வம்பாப் போச்சு என்று நினைத்துக் கொண்டார் செல்வராசு. அவள் அகலும் வரைக் காத்திருந்து பின்னர் கடைத்தெருவுக்குக் கிளம்பினார்.

கடைத்தெருவில் பழைய வேலைக்காரி தென்படவே அவளிடம் சொன்னார். அவளும் கோபிப்பாளோ என்று நினைத்தபோது,

"அத்த விடு சாமி...வேற ஆள் வந்தா சொல்றேன்.." என்று சொல்லிப் போனது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

அக்கம்பக்க ஆட்கள் அனுதாபமாய்ப் பார்க்கிறார்களா கேலியாய்ப் பார்க்கிறார்களா என்றே தெரியவில்லை! அவர்களுக்கும் இந்த அனுபவம் இல்லாமலா இருந்திருக்கும்? அலமேலுவைதான் தவிர்க்கவும் முடியவில்லை. சந்திக்கவும் முடியவில்லை. வேறு ஆட்களும் இன்னும் கிடைத்த பாடில்லை.

பத்து நாள் கழிந்திருக்கும். கடைத் தெருவில் நின்றுகொண்டிருந்த போது சுசி ஃபோன் செய்தாள்."சீக்கிரம் வாங்களேன்...அலமேலு வீட்டைத் தூக்கிட்டாங்க.."

அசுவாரஸ்யமாய் வீட்டை நெருங்கிய போது தெரு முனையில் பெரிய வண்டி தன் ராட்சதக் கைகளால் அலமேலு குடிசையைத் தூக்கி விட்டிருக்க, அலமேலு புலம்பிக் கொண்டிருந்தாள்.

ஒருபக்கம் 'அப்பாடா இனி இவள் தொல்லை தெருவில் நடக்கும்போதெல்லாம் இருக்காது' என்று கொஞ்சம் நிம்மதியாய் இருந்தபோதும் கொஞ்சம் பாவமாகவும் இருந்தது. 'எங்கே போவாள் இவள் இனி..?'

"அட விடுங்க சார்...வேற பொறம்போக்குல மறுபடி குடிசை போட்டுடுவாங்க இவங்க..." இவர் மனதைப் படித்தவர் போல பக்கத்து வீட்டுக்காரர் பைக்கை வெளியில் கொண்டு வந்து ஸ்டார்ட் செய்து ஏறிப் போனார்.

'உங்களுக்குத் தெரிஞ்சி யாராவது வீட்டு வேலை செய்ய ஆள் இருக்காங்களா...?'
(படங்கள் : கூகிளில் சுட்டவை. நன்றி கூகிளாண்டவர்)