வெள்ளி, 30 டிசம்பர், 2011

கொஞ்சம் உரத்த யோசனை.

                   
தண்ணி இல்லாமல் துணி துவைக்கும் எந்திரம் வந்தேவிட்டது - அப்பாதுரை மற்றும் கீதா சந்தானம் கேட்டுள்ள விஷயம்! மிக சிறிய பிளாஸ்டிக் மணிகள் போன்ற துகள்களை துவைக்கவேண்டிய துணிகளுடன் சேர்த்து மெஷினில் போட்டால் தண்ணீர் இல்லாமலே துவைக்கும் சிஸ்டம் இன்னும் இரண்டு வருடங்களில் வீடு தோறும் காணப்படும்! 
               
சூரிய சக்தியில் மின்சாரமும் கனவு அல்ல - வாழ்க்கையில் நடக்கக் கூடிய - நடந்து கொண்டிருக்கிற விஷயம் தான். 

    
ஆனால் 10000 ருபாய் செலவில் ஒரு நாளுக்கு 2 யூனிட் தயாரிக்க முடியும் சுடுநீர் இயந்திரங்களும் அப்படித்தான் - சுமார் 1௦௦ லிட்டர் சுடுநீருக்கு முதலீடு 25௦௦௦ வரை!  
          
படிக்கும் பழக்கம் என்பது காகிதப் புத்தகமாகத்தான் இருக்க வேண்டுமா?
கணினியிலும் படிக்கலாமே! 
                    
முதியவர்களுக்கு மரியாதை பற்றி இலங்கையை சேர்ந்தவர் சொல்வது புதுமையாக இருக்கிறது இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்தவர்களிடம் காணப்பெறும் ஒரு நல்ல விஷயம் அவர்கள் யாரையும் 2 வயதுக் குழந்தையாக இருந்தால் கூட நீங்கள் வாருங்கள் போங்கள் என்று பேசுவதைத்தான் பார்க்கிறோம் மதுரைக்காரர்களிடமும் இந்த பழக்கம் உண்டு. 
       
வாலிபந்தனில் வித்தை கற்க வேண்டும் - கற்ற வழியில் நிற்க வேண்டும் என்பதெல்லாம் சங்க காலத்துக்கு மட்டும் தான் பொருந்துமோ ?  
                            
தொப்பையைக் குறைக்க கொஞ்சம் வில் பவர் கொஞ்சம் அவகாசம் நடை பயில போதும் இல்லையா? எந்திரங்கள் தேவையா? எல்லோரும் தொப்பை இல்லாமல் இருந்துவிட்டால், போலீஸ்காரர்களை எப்படி அடையாளம் காண்பது? 
             
உன்னையே நீ அறிவாய் என்றார் சாக்ரடிஸ். அது இல்லாமல் மற்றவர் மனதை அறிய பிரயத்தனம் [முயற்சி] வீண் என்று தோன்றுகிறது/   நம்மிடம் " வாங்க சார் வாங்க! வீட்டிலே குழந்தைகளை எல்லாம் கூட அழைத்து வந்திருக்கலாமே" என்பவர் மனதுக்குள் " ஆமாம் இவன் எழுதப் போற மொய்க்கு 2 பங்கு சாப்பிட்டுடுவான்/////" என்று நினைப்பது நமக்குத் தெரிந்தால் ????
     
அரவங்காடு தொழிற்சாலையில் சிதம்பரம் என்று ஒரு தலைமை குமாஸ்தா இருந்தார். அவர் துர்காபவனில்  ஈவினிங்  டிஃபன் சாப்பிட வந்து விட்டு பஜ்ஜி சட்னி சாப்பிடும் பொழுது 'ஐயரே!  இன்னும் கொஞ்சம் சட்னி போடேன். இன்று நல்லா இருக்கு' என்று சொல்வார் பிறகு தனக்குத்தானே 'ஆமாம் இப்போ நல்லா இருக்குனு ஒரு வார்த்தை சொல்லிட்டாப் போதுமே - ஒரு பிடி உப்பை அதுலே சேர்த்துடுவாரு" என்று அவர் சொல்வது நமக்கும் கேட்கும்! 
     
எனவே, (மற்றவர் மனதை அறியும்) ஆசையை அழித்து விடுங்கள் - அது துன்பத்தை மட்டுமே கொடுத்து நம் நிம்மதியைக் கெடுத்து விடும்! 

என் விருப்பங்கள் :- 
1. ஓர் ஏக்கருக்கு வருடத்துக்கு 10 டன் அதற்கு மேலும் விளைச்சல் கொடுக்கும் தானியப் பயிர். 
   
2. வறண்டு போகாத எண்ணைக் கிணறுகள் - ஏன் தண்ணீர்க் கிணறுகளும் கூடத்தான்! 
    
3. வீட்டிலிருந்தே வேலை - உடற்பயிற்சிக்காக பக்கத்திலிருக்கும் பூங்காவில் நடந்தால் போதும். 
   
4. எந்தப் புத்தகமாக இருந்தாலும், பாட்டாக இருந்தாலும், செய்தித் தாளாக இருந்தாலும் நீங்கள் சம்பாதித்த பணத்துக்கு வரி கட்டியிருப்பின், இலவச டௌன்லோடு வசதி இந்த மாதிரி பைல்கள் கண்ட்ரோல் எக்ஸ் கண்ட்ரோல் வி மட்டுமே செய்ய முடியும் !
    
5. எல்லாக் கோவில்களுக்கும் பிரார்த்தனைக் கூடங்களுக்கும் நுழைவு வரி. அதில் வருகின்ற வருமானம், வருமானக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களின் மேம்பாட்டுக்கு. 
     
6. எந்த ஊர்வலமாக இருந்தாலும் மக்கள் தொகைக்கேற்ப ஏற்பாட்டாளர் ஒரு தொகை கட்டிய பின்னரே அனுமதி ஆட்கள் அதிகம் வந்தால் அடுத்த கூட்டத்துக்குள் அதிகப்படி தொகையை செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதி. 
            
இன்னும் நிறைய உண்டு - சாப்பாடு அழைக்கிறது. 
                   

வியாழன், 29 டிசம்பர், 2011

இரண்டிரண்டாக....காட்சியும் கானமும்...இது சாரமதியில் எம் கே டி பாவகத்ர், ச்சே...பாட்டு போட்டாலே ஸ்லிப் ஆஃப் தி டங் வந்துடுது......பாகவதர் பாடிய பாடல். காட்சியோடு கிடைக்காதது என் குற்றமல்ல...!இது சிந்துபைரவியில் கே ஜே யேசுதாஸ் அதே ராகத்தில் பாடும் பாடல். இளையராஜா இதில் செய்திருக்கும் புதுமை 'மரி மரி நின்னே' என்கிற இந்தப் பாடல் ஒரிஜினலாக வேறு ராகம். அதை இளையராஜா சாரமதியில் போட்டிருக்கிறார்.தெலுங்கில் வெளிவந்த ஏக் துஜே கேலியே.....கமல் இளமையில் இந்தப் பாடலில் எப்படி இருக்கிறார்...? சரிதாவுக்கு இதுதான் முதல் படம் என்று நினைவு! சிவரஞ்சனி ராக பேஸ்!


இது ஹிந்தியில் வெளிவந்த மரோ சரித்ரா....அதே காட்சி. அதே நடிகர். மத்தியவயது கமல்! சரிதாவின் இடத்தில் ரத்தி அக்னிஹோத்ரி. அதே சிவரஞ்சனி ராக அடிப்படையில்...


டிஸ்கோ டான்சர் படத்தில் கேமி கேமி பாடல் தெரிவு செய்தேன். காட்சியில் அதன் தமிழ்ப் பாடல் கிடைக்காததால் கிடைத்ததைப் பகிர இந்தப் பாடல்! ஹிந்தியில் மித்துன்...தமிழில் ஆனந்த் பாபு...நாகேஷ் மகன்... 

சனி, 24 டிசம்பர், 2011

நானும் கச்சேரிக்குச் சென்றேன்...!நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலைச் சேர்ந்த மாருதி சபாவில்  21-12 புதன் கிழமை அன்று அபிமான காயத்ரி வெங்கட்ராகவன் கச்சேரி . இலவசம் என்பதால் இயன்றவரை வேகமாகச் சென்று விட்டேன்.    

போக்குவரத்து நெரிசலில் சிக்கி அங்கு அடையும்போது பதினைந்து நிமிடம் தாமதம் என்றாலும் காயத்ரி சமர்த்தாக நான் சென்று சேர்ந்த பிறகுதான் கச்சேரி தொடங்கினார்! நெகிழ்ந்து போனேன். அருகிலிருந்தவர் சொன்னார். "அவங்களே லேட்...கூட, தம்பூரா வேற மக்கர் பண்ணுது..." ச்சே...!
   
நடுவில் ரெண்டு முறை தம்பூராவைத் திருகித் திருகி சரி செய்து கொண்டுதான் கச்சேரி தொடர்ந்தது.   
   
சம்பிரதாயமாக நாட்டையில் பஞ்சரத்ன கீர்த்தனையின் முதல் பாடல் ஜெகதானந்தகாரகா வில் தொடங்கினார். தொடர்ந்து ஹம்சநாதம், கரகரப்ப்ரியா, வசந்தா என்று சரசரவென முன்னேறினார். கனராகமாக சந்காபரணம் எடுத்துக் கொண்டு மென் நடையில்  தொடங்கி ஜாலம் காட்டி முடித்தார். தனியில் உடனிருந்தவர்கள் கலக்கினார்கள். பெயர் விவரம் எல்லாம் கேக்கக் கூடாது! வயலின் எம் எஸ் அனந்தராமன் என்று சொன்னார் அருகிலிருந்த ஆர்வலர்.மிருதங்கம் கடம் யார் என்று அவருக்கும் நினைவுக்கு வரவில்லையாம்!
               
அப்புறம் பாடிய தேஷ் ராகமும், 'அயோத்தியக் கோமானைப்  பாடிப்பர' வும் மனத்தைக் கொள்ளை கொண்டன. ராகமாலிகை ஒன்று பாடி குறிஞ்சியில் நிறைவு செய்தார்.
               
தேஷ் பாடும்போது அருகிலிருந்த ஆர்வலர் (ரொம்ப ஆர்வம் போலும் கச்சேரிக்கு வரும் ஆர்வத்தில் பல் கூட விளக்காமல் வந்திருந்தார் என்பது ஒவ்வொரு பாடலுக்கும் அவர் அருகில் வந்து விளக்கம் சொல்லி சிலாகித்தபோது தெரிந்தது!)நாடோடி படத்தில் வரும் அன்றொருநாள் இதே நிலவில் பாடல் தேஷ்தான் என்றதும் ஏன் இந்தப் பக்கம் இருந்த சீனியர் "வீரபாண்டியக் கட்டபொம்மன் படத்தில் வருமே, சிங்காரக் கண்ணே உன் அந்தப் பாடல் கூட தேஷ் தான்" என்றார். ஆர்வலர் முதலில் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் பின்னர் அந்தப் பக்கம் திரும்பி பாடிப் பார்த்து விட்டு பெருந்தன்மையாக  ஒத்துக் கொண்டார்.
                 
நானும் என் அறிவைக் காட்ட எண்ணி, "எனக்கு இதில் முத்திரைப் பாடல் துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ' பாட்டுதான் சார்...மேலும் கனவே கலையாதே என்றொரு சமீபப் பாடல் கூட இருக்கு" என்றேன்.
                  
ஆமோதித்தவர் "பொல்லாதவன் படத்துல வரும் சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா பாட்டு கூட தேஷ்தான்" என்றார்.
                    
நான் இந்தப் பக்கம் திரும்பி பாடிப் பாடிப் பார்த்தும் சரியாகவரவில்லை. "அப்படியா" என்றேன் சந்தேகத்தோடு. 
                   
"ஆமாம் சார்...எம் எஸ் வி மன்னன் சார்....அந்தப் பாட்டுலேயே BGM பிரிந்தாவன சாரங்கா" என்றதும் சற்று தளளி அமர்ந்து கொண்டேன். இவ்வளவு புலமை எனக்கில்லை!
                              
ராகமாலிகையில் ரேவதி ராகம் வரும்போது "தீர்க்கசுமங்கலி படத்துல கடைசிப் பாட்டு தீர்க்க சுமங்கலி வாழ்கவே ரேவதி சார்...அப்படியே அழுதுடுவேன்" என்றார். எனக்கே அழுகை வரும் போல இருந்தது.    

கரகரப்ப்ரியாவும் வசந்தாவும் அவர் கண்டுபிடிக்கும் முன்பே நான் கண்டு பிடித்து விட்டேன் ன்பதில் எனக்குள் கொஞ்சம் பெருமை! நாங்களும் சொல்வோமில்லே...!

(இது இந்தக் கச்சேரியில் பாடியது அல்ல)   
மறுநாள் ஹைதராபாத் பிரதர்ஸ். போகவில்லை. சனிக்கிழமை சௌம்யா. வாய்ப்பு இல்லை. ஞாயிறு சாகேதராமன், போக வேண்டும். ஆர்வலர் கண்ணில் பட்டால் வேறு இடத்தில் அமர வேண்டும். என்ன ராகம் என்று என்னை என்னை கேட்கிறார். எனக்கு ரசிக்க மட்டும்தான் தெரியும்! 
     
பெரிய ஆட்கள் கச்சேரியை இலவசமாகத் தருவதால் மாருதி சபாவுக்கு எங்கள் பாராட்டுகள்!
    
அங்கு உணவு ஏற்பாடு அறுசுவை அரசு நடராஜன். கச்சேரிக்கு இடையில் எழ மனமில்லாததால் முடிந்ததும் வந்து பார்த்தால் வெறும் தோசையும் ஊத்தப்பமும் மட்டுமே கிடைத்தது. அபபடி ஒன்றும் சுகமில்லை!   

முதல் படம்  உதவி : நன்றி கூகிள், 'த ஹிந்து' 
                   

வியாழன், 22 டிசம்பர், 2011

மூன்று கேள்விகளுக்கான முத்தான பதில்கள்....

                          
முந்தைய பதிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முத்தான பதில்களைத் தந்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, அப்பாதுரை, கீதா சாம்பசிவம். முதலில் கேள்விகளுக்குக் கீழேயே பதில்கள் வர வர சேர்த்து விடுவதாக யோசித்து,  பழசாகி விட்ட பதிவை யாரும் படிக்க மாட்டார்கள் என்பதால்தான் இந்த பதில்களை தனிப் பதிவாகப் போடுகிறோமே தவிர, ஒரு பதிவைத் தேத்தும் எண்ணம் ஹி.... ஹி... நிசமா இல்லீங்க.... நம்புங்க! 

கேள்விகளையும் தந்து அதற்குரிய பதில்களையும் யார் சொனது என்று பெயருடன் வெளியிட்டுள்ளோம். படித்து பிடித்தவர்கள் பரிசுகளை எங்களுக்கு(ம்) அனுப்பினாலும் சரி, சம்பந்தப் பட்டவர்களுக்கு அனுப்பினாலும் சரி... சந்தோஷமே...!
*** ***
சென்னைப்பித்தன் எனக்குக் கேள்வி கேட்கவும் தெரியாது.பதில் சொல்லவும் தெரியாது!
*** ***
==============================================
1)  இதுவரை எத்தனையோ கண்டுபிடிப்புகள் வந்து விட்டன. இன்னும் பத்து வருடங்களில் வரும் என்று எதிர்பார்க்கும் அல்லது வரவேண்டும் என்று நீங்கள் விரும்பும் ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு என்ன?

சண்முகவேல் : தொப்பையை குறைக்கும் எந்திரம். 

ஹேமா : மனித மனங்களை அறிய ஒரு இயந்திரம்

கீதா சாம்பசிவம் :   நீங்க பதிலே சொல்றதில்லை. நாங்க மட்டும் கேள்வி கேட்கணுமாக்கும்! முடியாத், போங்க 1. எரிபொருள்-மாற்றுக் கண்டுபிடித்தே தீரணும். ஏற்கெனவே விலை ஏற்றம் அதிகம். 

கணேஷ் : மற்றவர்களின் எண்ணங்களை அறியச் செய்யும் ஒரு மிஷின் 

ஹுஸைனம்மா : //ஹேமா said...
மனித மனங்களை அறிய ஒரு இயந்திரம்,//
//கணேஷ் said...
1. மற்றவர்களின் எண்ணங்களை அறியச் செய்யும் ஒரு மிஷின்.//
இதோ வந்துகிட்டேயிருக்கு!!

பத்து வருஷம் கழிச்சு இல்லை, இப்பவே வேணும். நான் மனசுல நினைக்க நினைக்க, கண்ணுக்குத் தெரியாத அளவு சின்னதா இருக்கிற அந்த மெஷின் டைப் பண்ணிகிட்டே இருக்கணும் - பதிவுகளை. 

வேலைகள் செஞ்சுகிட்டிருக்கும்போது இத எழுதலாமே, அத எழுதலாமேன்னு மனசுல ஓடுது.. ஆனா, கீ போர்ட் முன்னாடி உக்காந்தா... வார்த்தை வரமாட்டேங்குது... எக்ஸாம் ஹால்ல உக்காந்த மாதிரி. :-(((

(ஆடியோ ரிகார்டர் வெச்சுக்கலாமேன்னு கேக்காதீங்க... வேல செஞ்சுகிட்டே சம்பந்தமில்லாம எதாவது பேசிகிட்டிருந்தா, கூட இருக்கவங்க நம்மளை.. ஸாரி, என்னை, “லூஸு”ன்னு டவுட்டை கன்ஃபர்ம் பண்ணிட மாட்டாங்க? அதான் சத்தமில்லா இனிமை கேட்டேன்... :-)) 

ராமலக்ஷ்மி : கொடிய நோய்களைத் தீர்க்க வல்ல இயந்திரம்.
ராமன் : அதிசய கண்டுபிடிப்பு அல்ல, அவசிய கண்டு பிடிப்பு.. சூரிய சக்தியில் ஓடும வண்டிகள், சூரிய ஒளியில வீட்டுக்கு மின்சாரம்.

கீதா சந்தானம் : தண்ணியில்லாமல் துணி துவைக்கும் இயந்திரம்/ பெட்ரோலுக்கு மாற்று சக்தி. 

அப்பாதுரை :வரும் என்று எதிர்பார்ப்பது பக்கவிளைவில்லாத பசியடக்கும் என்சைம்.
வரவேண்டும் என்று விரும்புவது குறைந்த செலவில் அதிகமாகத் தயாரித்து வினியோகிக்கக் கூடிய செயற்கை அரிசிக்கான என்சைம்.

வரும் என்று எதிர்பார்ப்பது இணைய வர்த்தகத்துக்கானப் பொதுப் பணம்.
வரவேண்டும் என்று விரும்புவது இணைய வழியே உலகத்தரக் கல்வி.

வரும் என்று எதிர்பார்ப்பது தண்ணீர் தேவைப்படாத சலவை எந்திரம்
வரவேண்டும் என்று விரும்புவது சலவை தேவைப்படாத துணி.

வரும் என்று எதிர்பார்ப்பது தினசரி உபயோகத்துக்கான வயர்லெஸ் மின்சாரம்.
வரவேண்டும் என்று விரும்புவது தினசரி உபயோகத்துக்கான மின்சாரம்லெஸ் சாதனங்கள்.

வரும் என்று எதிர்பார்ப்பது கேன்சருக்கு சிங்கில் டோஸ் மருந்து.
வரவேண்டும் என்று விரும்புவது தலைவலிக்கு சிங்கில் டோஸ் மருந்து.
==============================================
2) வாழ்வில் ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் நபரும், அவரிடம் கேட்க வேண்டும் என்று நினைக்கும் கேள்வியும்.. (அல்லது கேள்விகளும்)  
சண்முகவேல் : ஆங் சான் சூகி .கேள்வி:எப்படி உணர்கிறீர்கள்?  
ஹேமா : கடவுளைக் காண ஆசை.
A R ராஜகோபாலன் : RAJARAJAN CHOZHAN &
கீதா சாம்பசிவம் கடவுள்-- எப்படி இப்படில்லாம்???????
விலைவாசி, பத்துவருடங்களிலாவது குறையுமா?
கடவுள், அரசியல்வாதிங்க நேர்மையா எப்போ மாறுவாங்கனு கேட்பேன். பாவம் நல்லா மாட்டிப்பார். சும்மாப் பிச்சு உதறிட மாட்டோமா!
பத்துவருடங்களுக்குப் பின்னரும் இதே கூட்டணி அரசுதான் தொடருமா?
கடவுள், அதுக்குள்ளே என்னைக் கூப்பிட்டுக்கோப்பா!
பத்து வருடங்களிலாவது எங்க காலனியிலே சாலைகள் போடப்படுமா?
பாதாளச் சாக்கடைத்திட்டம் அடுத்த பத்துவருடங்களிலாவது செயல்படுமா? அதைப் பார்க்க நான் இருப்பேனா?  
கணேஷ் : ஐரோம் ஷர்மிளா: கேள்வி: உங்களால் எப்படி சாத்தியமானது?
ராமன் : ஊழல பெருச்சாளிகளில் ஒருவரை நேரில் பார்த்து கேட்க விரும்பும் கேள்வி: இவ்வளவு பணத்தையும் எப்படி செலவிடுவீர்கள்? இன்னும் ஏன் சம்பாதிக்க ஆசை? 
அப்பாதுரை : ஒரு முறையாவது சந்திக்க எண்ணும் நபர்: பில் கேட்ஸ். கேட்க விரும்பும் கேள்வி: ஒரு ரூபாய்க்கு சில்லறை இருக்குமா?
==============================================
3)  இன்றைய இளைய தலைமுறையிடம் இல்லாத ஆனால் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் விஷயம் என்ன? 
சண்முகவேல் : வாசிப்புப் பழக்கம்.

கக்கு - மாணிக்கம் :இன்றுள்ளவர்களிடம் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் சுத்தமாக அற்றுப்போனது. அவர்களுக்கு மீண்டும் வாசிக்கும் பழக்கம் வரவேண்டும் என்று ஆசை படுகிறேன்

ஹேமா : இன்றைய தலைமுறையினருக்கு பெரியவர்களை மதிக்கும் குணம் வேண்டும்.  
கீதா சாம்பசிவம்  :  இளைய தலைமுறைக்கு மாரல் சைன்ஸும், சிவிக் சென்ஸும் தேவை. 
அது எப்படிங்க சினிமா ஷ்டாருங்களைப் பத்தின உடனே பதில் வேகமா வருது! மத்ததுக்கெல்லாம் பதிலே வரதில்லை? :P 
இளையதலைமுறையே, உங்களை நீங்களே பார்த்துண்டாத் தான் உண்டு 
இளைய தலைமுறைக்காவது இந்த வசதியெல்லாம் கிட்டி சந்தோஷமா இருக்குமா? இளைய தலைமுறை அதற்கேற்றவாறு சுத்தமும், சுகாதாரமும் கற்குமா? 
கணேஷ் : நேரத்தை மதிக்க வேண்டும். நேர நிர்வாகம் என்ற ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும்.
ஹுஸைனம்மா : அம்மா, அப்பா சொல்றதை, (சாப்பிட வான்னு சொன்னாகூட) ஆர்க்யூ பண்ணிகிட்டேஏஏஏஏ இருக்காம, புரிஞ்சு ஏத்துகிட்டு நடக்கிற நல்ல புத்தி.
(நான் குழந்தையா இருக்கச்சே, எங்கம்மாவும் இதத்தான் 
.... கேட்டிருப்பா... !!!!) 
ராமன் :  இளைய தலைமுறையினருக்கு முந்தைய தலைமுறையினர் பால் சற்று பொறுமை வேண்டும் என்று எண்ணுகிறேன் 
கீதா சந்தானம் :   புத்தகம் படிக்கும் வழக்கம். 
அப்பாதுரை  இளைய தலைமுறையினரிடம் இல்லாத, ஆனால் இருக்க வேண்டும் என்று விரும்புவது: மூத்த தலைமுறையின் தவறுகளை அறியும் திறன், மூத்த தலைமுறையின் குறைகளை மன்னித்து மறக்கும் பக்குவம்.  
                       

செவ்வாய், 20 டிசம்பர், 2011

வாசகர்களுக்குக் கேள்விகள் 1

                          
பத்திரிகைகளில் கேள்வி பதில் பகுதி வரும். வாசகர்கள் கேள்விகளுக்கு பத்திரிகை ஆசிரியர்கள் பதில் சொல்வார்கள்.
                
இங்கு ஒரு மாறுதல்.   
                
நீங்கள் பதில் சொல்ல இங்கு கேள்விகள்.
              
1)  இதுவரை எத்தனையோ கண்டுபிடிப்புகள் வந்து விட்டன. இன்னும் பத்து வருடங்களில் வரும் என்று எதிர்பார்க்கும் அல்லது வரவேண்டும் என்று நீங்கள் விரும்பும் ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு என்ன?
 
              
2) வாழ்வில் ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் நபரும், அவரிடம் கேட்க வேண்டும் என்று நினைக்கும் கேள்வியும்... (அல்லது கேள்விகளும்) 
          
3)  இன்றைய இளைய தலைமுறையிடம் இல்லாத ஆனால் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் விஷயம் என்ன?   
                    

திங்கள், 19 டிசம்பர், 2011

புலிகளைப் பார்த்துப் போட்டுக் கொண்ட சூடு...


Pit போட்டிக்கு முதல் முறையாக கலந்து கொண்ட முயற்சி. ஆர்வத்தையும் ஊக்கத்தையும் முத்துச்சரம் ராமலக்ஷ்மி கொடுத்தார்! Thanks madam.    


அவருடைய மேஜிக் கேமிரா எடுக்கும் புகைப் படங்களை பார்த்து ரசித்து உள்ளுக்குள் ஊறிய ஆர்வத்தில் கலந்து கொண்ட போட்டி! தீம் 'உன்னைப்போல ஒருவன்'. ஒன்றைப் போல இன்னொன்று. ஆனால் போட்டோஷாப் வேலைகள், மிரர் இமேஜ் கூடாது என்று கண்டிஷன்கள்.     
அவர் பல்வேறு இடங்களுக்கும் அலைந்து பலவித அற்புத புகைப்படங்களை எடுத்துத் தள்ளுகிறார். அவர் கையில் என்னதான் மாயமோ... துல்லியங்களின் அரசி! கலந்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு பதினாலாம் தேதிதான் முயற்சியே தொடங்கினேன். பதினைந்து கடைசித் தேதி.     

எதை எடுப்பது என்ன எடுப்பது என்று குழம்பி கையில் கிடைத்ததை எல்லாம் அவசர கதியில் எடுத்து, (நிதானமாக எடுத்தாலும் இவ்வளவுதான் வரும் என்பது வேறு விஷயம்!) எடுத்தவற்றை அலசி ராமலக்ஷ்மி மற்றும் பலர் எடுத்த புகைப் படங்களைப் பற்றி எண்ணாமல், யோசிக்காமல் (மூட் அவுட் ஆயிடும்! நம்ம படத்தை அனுப்பவே தோன்றாது!) ஒன்றை அனுப்பியாகி விட்டது. அனுப்பிய பின்னும் இதை அனுப்பியிருக்கலாமோ என்று வேறொன்றி நினைத்துக் குழம்பவும் தவறவில்லை!     

எடுத்தவற்றையும், அனுப்பியதையும் ப்ளாகில் பகிர்வது கட்டாயமா, அந்த 'லிங்க்'கும் அனுப்ப வேண்டுமா என்றும் தெரியவில்லை. ஆனால் எடுத்த மற்ற புகைப் படங்களைப் பகிர்வதில் இரண்டு விஷயம் பூர்த்தியாகிறது!    
ஒன்று........... அனுப்ப விட்ட மற்ற புகைப் படங்களைப் 'படம் காட்டலாம்'.    

இரண்டு...... ஒரு பதிவு தேத்தலாம்!!   

படங்களைப் பார்த்து சிரிக்கக் கூடாது. புன்னகைக்க அனுமதி உண்டு!! 
         (இப்படிக்கு ..... பூனை!) 
                     

வெள்ளி, 16 டிசம்பர், 2011

கற்றலின் கேட்டல் நன்று ...!

             

கற்றலின் கேட்டல் நன்று என்னும் கூற்றுக்கு அவரவர் தத்தம் அனுபவங்களுக்கு ஏற்ப நிறைய எழுதி இருந்தாலும், ஒருவருக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று அறிந்து கொள்ள அவர் செய்கைகளைக் கூர்ந்து கவனித்து அதிலிருந்து கற்றுக் கொள்ள முயற்சிப்பதை விட, அவரையே கேட்டு விடுவது உத்தமம் என்பதுதான் அதற்குப் பொருளாக இருக்க முடியும்.

    
எப்படி என்கிறீர்களா ?  
   
என் நண்பர் ராமகிருஷ்ணனுக்கு கீரை பிடிக்கவே பிடிக்காது கீரை மசியலை அவர் எதற்கு ஒப்பிடுவார் என்பது அறிந்தால் நீங்கள் நாளை முதல் கீரையே சாப்பிட மாட்டீர்கள் - பாவம் சின்ன வயதில் ஒரு மாட்டுப் பண்ணையின் அருகே குடியிருந்ததன் விளைவாக இருக்கலாம்! 
  
 இன்னும் மற்ற சகாக்களுடன் நீலகிரியில் இருக்கும் அருவங்காடு தொழிற்சாலை குடியிருப்பில் நாங்கள் இருந்த பொழுது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வீட்டில் எல்லோரும் கூடி சாப்பிட்டு விட்டு அப்படியே குன்னூர் அல்லது ஊட்டி மற்றும் சில சமயங்களில் தொட்ட பெட்டா, பவானி, கோயம்பத்தூர் இப்படி எங்காவது போய் வருவதும் உண்டு.     

    
ஃபோர்மன் நாராயணசுவாமி வீட்டில் நாங்கள் எல்லாம் இப்படி ஒரு நாள் கூடி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.  நாராயணஸ்வாமியின் மனைவி வெகு நாட்கள் பூனேயில் இருந்தவர்.  அவ்வூர் வழக்கப்படி அவரவர் முதலில் எதை எடுத்து சாப்பிடுகிறார்கள் என்பதை கவனித்து, அதை அடுத்த முறை எடுத்து வரும் பொழுது நிறைய பரிமாறி விடுவார்.  
      
எல்லோரும் "தைலா மாமி நீங்க மட்டும் எப்படி யாருக்கு என்ன பிடிக்கும் என்பதை எப்படியோ தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அதைப் போடுகிறீர்கள்" என்று சாவித்திரி கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது மாமி "அதொண்ணும் பிரமாதம் இல்லையாக்கும் - இப்போ ராமகிருஷ்ணன் இலையில் கீரை போட்டதும் உடனே எடுத்து சாப்பிடுவதைக் கவனித்தேன் - உடனேயே உள்ளே போய் இதோ கொண்டு வந்தும் போட்டு விட்டேன்" என்று சொன்ன போது ராமகிருஷ்ணன் முகம் போன போக்கைக் கவனிக்காமலேயே மாமி "இப்போ பாருங்க கேஜிக்கு என்ன பிடிக்கும்னு சொல்றேன் " என்று விளக்க ஆரம்பித்து விட்டார்.
       
இப்பொழுது சொல்லுங்கள் கேட்டலின் கற்றல் நன்றா ? கற்றலின் கேட்டல் நன்றுதானே! 
     
இந்த அனுபவம் நிறையவே உண்டு என்பதால் சமீப காலமாகவே விழாக்களுக்கு சென்றாலும் சரி, கல்யாண வீடுகளுக்குச் சென்றாலும் சரி பிடிக்காத ஐட்டத்தை முதலில் காலி செய்வதே இல்லை. அதற்காக இலையில் விழும் பண்டங்களை வீண் செய்யும் வழக்கமும் கிடையாது. அந்த பிடிக்காத ஐட்டத்தை கடைசியாகக் காலி செய்வோம். (முன்னர் ஆர் வி எஸ் எழுதிய ஒரு விருந்தும், பரிமாறும் முறை பற்றிய பதிவில் கூட இதைச் சொல்லியிருக்கிறோம்!) பிடித்த ஐட்டத்தை முதலில் அல்லது எப்போது மறுபடி வேண்டுமோ அப்போது காலி செய்து விட்டால் மறுபடி கிடைக்கும் வாய்ப்பு இருக்கும்!  
             

புதன், 14 டிசம்பர், 2011

படித்ததைப் பகிர ஒரு வெட்டி அரட்டை....

              
அந்தக் காலத்தில் விரும்பிப் படித்த பல நாவல்களை புத்தக வடிவில் வாங்கும்போது 'ஆனாலும்...' என்ற ஒரு சின்ன ஏக்கம் இருக்கும்!  அதாவது அப்போது தொடர்கதையாக வந்த போது வாராவாரம் கதைகளுக்கு ஜீவன் சேர்த்த ஓவியங்கள் இல்லாமல் புத்தகம் படிப்பது ஏதோ இழந்தது போலத்தான் இருக்கும். பைண்ட் செய்து வைத்திருக்கும் புத்தகங்கள் வசதியானவை. படங்களுடன் படித்து ரசிக்கலாம். ஆனால் எங்கள் வீட்டு விசிறி வாழை, வாஷிங்டனில் திருமணம் பொன்னியின் செல்வன், யவனராணி போன்ற பல புத்தகங்கள் பூச்சி அரித்து வீணாய்ப் போனது கஷ்டமாக இருந்தது. 
      
புத்தகமாகப் போடுகிறவர்கள் வாராவாரம் வந்த அந்தப் படங்களையும் சேர்த்து போடக் கூடாதோ என்று தோன்றும். யவனராணி போன்ற கதைகளில் டைபீரியசையும் யவனராணியையும்  அட்டையில் மட்டுமே காண முடியும். உள்ளே வரிகள், வரிகள், வரிகள்.....

விகடன் முதல்முறையாக அந்தக் குறையைப் போக்க வருகிறது. அதைப் படித்த நாள் முதலே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. நிறையப் பேருக்கு ஏற்கெனவே தெரிந்தும் இருக்கும். படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். ஆனாலும் சும்மா பகிர்ந்து கொள்கிறேன்!

2216 பக்கங்களில் 5 பாகங்களாக கெட்டி அட்டையுடன் 1,350 ரூபாய், ஆனால் 31-12-2011 க்குள் முன்பதிவு செய்தால் பொன்னியின் செல்வன் புத்தகம் 999 ரூபாய்க்குத் தருவதாக விளம்பரம். ஓவியர் மணியம் தீட்டிய ஒரிஜினல் வண்ண ஓவியங்களுடன் என்பதுதான் விசேஷம். (புத்தகத்தில் கருப்பு வெள்ளைதான் வந்தது - முதல் முறை) "இது வரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாத பிரமிப்பான வடிவில்" என்று ஆசை காட்டுகிறது.

ரூபாய் அதிகம் என்று தோன்றினாலும் நிச்சயம் நிறைய பேர் விரும்புவார்கள் என்றுதான் தோன்றுகிறது. (ஓவியங்கள் இல்லாத பதிப்புகள்  250 ரூபாயிலிருந்து 300 ரூபாய்க்குள் கிடைக்கிறது - ஐந்து பாகங்களும். ஐந்து பாகங்களும் ஒரே புத்தகமாய்க் கூட கிடைக்கிறது. டைரி சைஸில் என்ற விளம்பரத்துடன்)

****************************************************
பத்து நாட்களுக்குமுன் படித்த இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். கடத்தப் பட்ட 22 டைனோசர் முட்டைப் படிமங்களை சீனாவிடம் அமெரிக்கா தந்ததாகப் படித்த செய்தி.

வயது 6.5 கோடி ஆண்டுகளுக்கும் மேல் இருக்கலாம் என்றும் ஏலம் விடப் படுவதற்கு இவை கடத்தப் பட்டதாகவும் தெரிகிறது. 

சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த முட்டைகளில் 19 முட்டைகளில் உயிர் பெறக் கூடிய முதிர்வுறாக் கருவுரு உயிர் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்ற செய்திதான். 

மூன்றாவது முறை அமெரிக்கா இப்படி திருப்பி தந்திருக்கிறதாம்.

ஒவிராப்டர் வகையைச் சேர்ந்த முட்டைகளாம். சீனாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் குவாங்க்டன் மாகாணத்தில் கிடைக்கப் பெற்றதாம்.

***********************************************************
மறைந்த தேவ் ஆனந்த் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றும் படித்தேன். தேவ் ஆனந்துக்கு முஹம்மது ரஃபி பல பாடல்கள் பாடியிருக்கிறார்.
  
ஆனால்   முஹம்மது ரஃபிக்காக தேவ் ஆனந்த் ஒரு பாடல் பாடியிருக்கிறாராம். 1966 ஆம் வருடம் பியார் மொஹப்பத் என்ற படத்தில் ஒரு பாடலின் இடையே வரும் வரிகளை தேவ் ஆனந்த் பாடினாராம். 

************************************************************
கடிதங்கள் எழுதும் காலத்தில் போஸ்ட் கார்டாக இருந்தாலும் சரி, இன்லேன்ட் லெட்டராக இருந்தாலும் சரி எங்கள் குடும்பத்துக்கே ஒரு வழக்கம் உண்டு. சுருக்கமாக எழுதிப் பழக்கமே இல்லை! பொடிப் பொடியாக எழுதுவது முதல் மார்ஜினில் கோணம் மாற்றி எழுதுவது,  ஸ்கெட்ச் பேனாவில் - ஏற்கெனவே எழுதியிருக்கும் இடையே பெரிய எழுத்துகளில் ஒரு செய்தி என்றெல்லாம் எழுதி ஒட்டிய பின்னும் அனுப்புனர் முகவரியின் மேலும் கீழும்  கூட சில வரிகள் எழுதி அனுப்புவோம்!
                              
இது எதற்கு நினைவுக்கு வந்தது என்றால், பொன்னியின் செல்வன் செய்தியை மட்டுமே பகிரும் எண்ணம் இருந்தாலும் ஒரு பதிவில் நிறைய இடம் கீழே வேஸ்ட் ஆகிறதே (!!!) என்று இன்னும் இரண்டு செய்திகளை இதோடு இணைத்து விட்டேன்.
                       
கொசுறு தகவல். இன்று எவர்க்ரீன் படம் மிஸ்ஸியம்மா மறுபடி பார்க்கப் பட்டது. மிக அழகிய சாவித்திரி, மிக அழகிய ஜெமினி கணேசன் இனிமையான பாடல்கள் என்று அலுக்காத, அருமையான படம். 
                      
கொசுறு 2 : தினமணியில் மதியின் கார்ட்டூன்..."ஐயோ அடுத்த வருடம் 12-12-12 என்ற ஒரு சிறப்பான நாளில் வரும் ரஜினியின் பிறந்த நாளை - இன்ப அதிர்ச்சியை -அவர்தம் ரசிகர்கள் எப்படி தாங்கப் போகிறார்களோ..." !!!!!!!
                   

செவ்வாய், 13 டிசம்பர், 2011

உள் பெட்டியிலிருந்து 12 2011

                       
மனோதத்துவம்..

அர்த்தமில்லாத விஷயத்துக்குக் கூட அடக்க முடியாமல் சிரிக்கும் ஒருவன் மனதில் ஆழ்மன சோகம் உண்டாம்!
  
ரொம்பத் தூங்கும் ஒருவன் தனிமையை நிறைய உணர்பவனாக இருக்கலாமாம்.

ரொம்பப் பேசாதவன், அதே சமயம் பேச ஆரம்பித்தால் வேகமாகப் பேசுபவன் நிச்சயம் வெளிப்படுத்தாமல் உள்ளே ரகசியங்களைக் கொண்டிருக்கிறானாம்.
   
அழமுடியாதவன் பலவீனமானவனாம்.

அசாதாரணமான முறையில் பதட்டமாக சாப்பிடுபவன் டென்ஷன் அதிகமுள்ளவனாம்.

நேரமில்லா நிலையிலும் வேளையில்லா வேளையிலும் உங்களைப் பற்றி விசாரிக்கும் நபர் உங்களை விரும்புகிறாராம்.

--------------------------------------------------
மன்னிப்பு

தவறிய கணங்களில் உதவும் மன்னிப்பு உடைந்த நம்பிக்கைகளில் உதவுவதில்லை.

-----------------------------------------------------
உறவின் பலம்

ஒற்றுமைகளைக் கண்டு பிடிப்பதிலும் வேற்றுமைகளை மதிப்பதிலும் உறவின் பலம் இருக்கிறது.

------------------------------------------------------  
இடுக்கண் வருங்கால் பாடுக! 

பிரச்னைகள் அதிகமாகும் போது குரலெடுத்துப் பாடுங்கள். நாராசமான நம் குரலை விட அந்தப் பிரச்னைகள் பெரிதில்லை என்ற ஞானம் வரும்!
  
----------------------------------------------------
சமாளிப்'பூ'

நான் என்ன சொன்னேன் என்பதற்கு மட்டும்தான் நான் பொறுப்பு... அதை நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டீர்கள் என்பதற்கல்ல!
  
--------------------------------------------------------
நினைவுகள்

இணையும்போது உருவாக்கி பிரியும்போது பாதுகாக்கிறோம். சந்திப்பதும் பிரிவதும் வாழ்வின் வழிகளாயின் பிரியும்போது மீண்டும் சந்திப்போம் என்று நம்புவதும் வாழ்வின் நம்பிக்கைகள். 

--------------------------------------------------------
எதில் வெற்றி?

யாரையாவது முட்டாளாக்குவதில் நீங்கள் வெற்றி பெறும் கணத்தில், நண்பர்களே தெரிந்து கொள்ளுங்கள்... அவர் முட்டாள் என்று நினைக்காதீர்கள்.. அவர் அந்த அளவு உங்கள் வார்த்தைகளை நம்பியதால் முட்டாளானார் என்பதை உணருங்கள்.

------------------------------------------------ 
நான் யார், நான் யார், நீ யார்? 

ஒரு முட்டாள் தான் முட்டாள் என்று உணரும்போது அறிவாளியாகிறான்.
ஒரு அறிவாளி தான் அறிவாளி என்று எண்ணும் கணத்தில் முட்டாளாகிறான்!

---------------------------------------------------
"நச்"

நல்லவனாக இருங்கள். ஆனால் நிரூபிக்க முயலாதீர்கள்.

-----------------------------------------------------
"எனக்கொரு ஆசை இப்போது..."
  
இரண்டு நாய்கள் முத்தமிட்டுக் கொண்டதைப் பார்த்துக் கொண்டிருந்த காதலன் காதலியிடம், "நீ தவறாக நினைக்கவில்லை என்றால் நானும்..."

காதலி இடைமறித்தாள்.."ஓகே, ஆனால் ஜாக்கிரதை...கடித்துவிடப் போகிறது..." 

-----------------------------------------------------