உறவினர் இல்லத் திருமணம் ஜனவரி மாதம்,
ஸ்ரீரங்கத்தில் என்று டிசம்பரில் தெரிந்தது. உடனே எதுவும் முடிவு
செய்துவிட முடியவில்லை. வெளியூர்த் திருமணங்களுக்கு அட்டெண்டன்ஸ் போடுவது
என்பது கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது! எனவே அவசரப்பட முடியவில்லை.
கிளம்பும்வரை
நிச்சயமில்லாத சூழல் என்பது எனக்கு மட்டும்தான். மற்ற மூன்று எங்கள்
ஆசிரியர்கள் அட்டெண்டன்ஸ் உறுதி என்று ஆனது. இருந்தாலும் ஸ்ரீரங்கம் வந்தால் சந்திக்க முடியுமா என்று கீதா மேடத்தின்
வசதியைக் கேட்டு வைத்தேன். நல்லவேளை, முன்கூட்டியே நாங்கள் வருவது பற்றிச்
சொல்லியும் அவர் தப்பித்துச் சென்று விடவில்லை. பிழைக்கத் தெரியாதவர்!!
கௌதமன்
வைகோ அவர்களிடமும், திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களிடமும் பேசி
வைத்தார். ரிஷபன்ஜி அலைபேசி எண் எங்களிடம் இல்லாததால் ஸ்ரீரங்கம் சென்று
பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டோம்.பெருங்களத்தூரை அதற்குண்டான நேரத்தில் அடைந்து விட்டோம். அங்கிருந்து வண்டலூர் தாண்டுவதற்குள் முழி பிதுங்கிப் போனது! இன்ச் இன்ச்சாக நகர்ந்த வண்டிக்கூட்டங்கள் வெறுப்பேற்றின.
நடுவில்
ஒரு இடத்தில் எரிபொருள் நிரப்பியதைத் தவிர, எங்கும் நிறுத்தாமல்
ஸ்ரீரங்கம் அடைந்தபோது மணி இரவு 8.30. நேராகச் சாப்பாட்டு ஹால் சென்று,
ஏதாவது இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டோம்!
முன்னரே
நாங்கள் மூவர் ஆளுக்கொருவரிடம் 5 சாப்பாடுகள் எடுத்து வைக்கச்
சொல்லியிருந்தோம். மொத்தம் 15 சாப்பாடு காத்திருக்கப் போகிறது என்று
பேசிச் சென்றோம். அதற்கெல்லாம் தேவையே இல்லாமல் அப்போதுதான் கடைசி
பந்திக்கு முதல் பந்தி ஓடிக் கொண்டிருந்தது.
சாப்பாட்டில்
இரண்டு விஷயங்கள் நாக்கைக் கவர்ந்தன. ஒன்று பாயசம். இரண்டாவது
கிடாரங்காய் ஊறுகாய்.. பாயசம் பயங்கரப் பற்றாக்குறை போலும். முதல்முறை ஒரு
கரண்டி ஊற்றியவர், இரண்டாவது முறை கேட்டதும் அரைக் கரண்டிதான் ஊற்றினார்!
ஊறுகாய், கேட்ட அளவு கிடைத்தது. நாங்கள் காரத்தையும் ரசிப்போம், இனிப்பையும் ரசிப்போம்ல...
ரிசப்ஷனுக்கு வந்த கூட்டத்தின் அளவு சாப்பாட்டில் தெரிந்தது. குறிப்பாக
ரசத்தில்!!
- தொடரும் -