1.5.26

வாட வெத்தலை வதங்க வெத்தலை வாய்க்கு நல்லால்லே

வாழைப்பூ நறுக்குவது என்பது கொஞ்சம் லொள்ளு பிடித்த வேலை. கொஞ்சம் பொறுமை வேண்டும். கொஞ்சம் திறமை வேண்டும்!

ஒவ்வொரு இதழாக பிரித்து உள்ளே இருக்கும் வாழைக் குழந்தைகளை(!) எடுத்து, அதன் தலையை சிலுப்பி, அதன் பாதுகாப்புக் கதவையும் கள்ளனையும் கிள்ளி வெளியே போட்டுவிட்டு நறுக்க வேண்டும்.

"முதலாம் சந்திப்பில் நான் அறிமுகம் ஆனேனே" என்று ஸ்வர்ணலதா குரலில் சார்லி சாப்ளின் பாட்டு கேட்டுக் கொண்டே நறுக்கிக் கொண்டிருந்தேன்.
அடுத்த பாடல் "ரகசியமானது காதல்" ஓட தொடங்கியது் பாடல் முடிவு பெறும் சமயம் "காதலும் கடவுளைப் போல" என்று சொல்லும் போது விரல் பட்டு பாட்டு சட்டென்று நின்று விட்டது.
"காதலும் கடவுளைப் போல... "
அட, காதல், கடவுள் போலவா? என்ன உவமை சொல்ல வருவார் கவிஞர்...
அடுத்தவரி என்னவாக இருக்கும் என்று மனம் யோசித்துக் கொண்டே இருந்தது.
வெவ்வேறு வரிகளை யோசித்தபடி நறுக்கிக் கொண்டே வரும்போது, நறுக்கிய பின் மிஞ்சும் வாழைக் குறும்பூவை எடுத்து வாயில் போட்டு ரசித்து மென்றபடி அடுத்த வரி என்னவென்று பார்த்தேன்.
"அதை உயிரினில் உணரணும் மெல்ல" என்றது பாடல்.
துவர்ப்பான அந்த வாழைக் குறும்பூவும் உவப்பான இந்த பாடல் வரியும்...

அட நல்லாருக்கே....!

===============================================================================

"அதான் எனக்குத் தெரியுமே" மாதிரிதான் சித்ரா லக்ஷ்மணன் சொல்லும் நாகேஷ் பற்றிய இந்த விவரங்களும். சில விவரம் புதிதாக இருக்கலாம். ஆனாலும் சுவாரஸ்யம்!


========================================================================================

மகுடநிலா கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் மு மேத்தா இப்படி எழுதிக்கொண்டு வந்தார்.






= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

சித்ரா லட்சுமணனுக்கு கவிஞர் பிறைசூடன் கொடுத்துள்ள இந்த பேட்டியை பகிராமல் இருக்க முடியவில்லை.  நான் கவிஞனாக்கும், ஆஹா ஊஹூ என்றெல்லாம் இல்லாமல் யதார்த்தமாக எளிமையாக பேசுகிறார்.  தன் விளையாட்டுத்தனத்தையும், யோசிக்காமல் பேசுவதையும் குறிப்பிடுகிறார்.  நேர்மையான உரையாடல்.  முடிந்தால் முழுவதும் கிடைத்தால் தேடிப்பாருங்கள்!  தான் பூஜை செய்வதைப் பற்றி அவர் குறிப்பிடுவது வேறொரு காணொளித்துளியில் இருக்கும்.  சுவாரஸ்யம்.

  

==========================================================================================

சாண்டில்யன் பக்கம் 

யவனராணி படித்தபோதே வந்த ஒரு சந்தேகம் கரிகால் பெருவளத்தான் பற்றியது.

சாண்டில்யன் இளஞ்சேட்சென்னி இறக்கும்போது கரிகாலன் இருபது வயது வாலிபன் என்று சொல்லி அல்லியை காதலியாகவும் கொடுக்கிறார்.  இளஞ்செட்ச்சென்னி மரணத்தையே கொலை என்கிறார்.  நாம் படித்த வரலாறோ,  இதோ நான் கொடுத்திருக்கும் கி வா ஜ வின் கரிகாலன் புத்தகத்திலோ இரண்டு விஷயங்களுமே மாறி இருக்கிறது.  எது உண்மை?  இளஞ்செட்ச்சென்னி இறந்த பிறகுதான் கரிகாலன் பிறப்பதாக சொல்கிறார் கி வா ஜ 

கல்லணை கட்டிய கரிகாலன் என்னும் திருமாவளவன் என்னும் சோழப்பேரரசின் காணாமல் போன நேரம்...  

......  இதைக் கேட்டதும் அந்த வினாடி வரை முகத்தில் பிரதிபலித்திருந்த கோட்டைத் தலைவனின் கிலி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டதன்றி மாளிகையே அதிரும்படி யாகவும் சிரித்தான் அந்த யவனன். அவன் சிரிப்புக்குக் காரணத்தை அறிய முடியாத இளஞ்செழியன் ஆச்சரியம் ததும்பும் கண்களை அவன்மீது நாட்டினான். யவனன் தன் சிரிப்பைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டு ஹிப்பலாஸை மட்டுமின்றி இளஞ்செழியனையும் பிரமிப் பிலும் கலவரத்திலும் ஆழ்த்தக் கூடிய சுடுசொற்களைக் கொட்டத் தொடங்கி இகழ்ச்சியும் குரூரமும் தொனித்த குரலில், "அரசரிடம் சொல்ல முடியாது படைத் தலைவரே! சொல்லவே முடியாது" என்றான்.

"காரணம்?"

"சோழ மண்டலத்துக்கு இப்பொழுது அரசர் இல்லை."

"அரசர் இல்லையா?"

"அரசர் இறந்து விட்டார்!"

கோட்டைத் தலைவன் கூறிய வார்த்தைகளால் தலைமேல் பேரிடி இறங்கி விட்டதைப் போல் ஒரு கணம் திகைத்த படைத்தலைவன், மறுகணம் நிதானத்தை அறவே இழந்து எதிரே மலை போல் நின்றிருந்த யவனன் மீது பாய்ந்து அவன் கழுத்தை இரு கையாலும் நெரிக்கத் தொடங்கி, "உளறாதே. இன்னும் ஒருமுறை அந்த வார்த்தையைச் சொன்னால் இந்த இடத்திலேயே பிணமாகி விடுவாய்” என்று பெரிதாகக் கூவினான்.

"என்னைக் கொன்றால் அரசர் பிழைத்து விட மாட்டார்” என்று முக்கி முனகினான் இளஞ்செழியனின் இரும்புப் பிடியிலிருந்து தப்ப முடியாத கோட்டைத் தலைவன்.

கழுத்தை நெரிப்பதை விட்டுச் சற்று விலகிய இளஞ்செழியன் மூளை பெரிதும் குழப்பமடைந்து கிடந்தது. "என்ன! மன்னர் மரணமடைந்து விட்டாரா?" என்று ஏதோ கனவில் பேசுபவன் போல் தனக்குத்தானே கேட்டுக் கொண்டு இரண்டு முறை உலாவினான். அந்தக் கேள்விக்குக் கோட்டைத் தலைவனே பதில் சொன்னான். "சந்தேகம் வேண்டாம் படைத்தலைவரே, உறையூரிலிருந்து சற்று முன்புதான் செய்தி வந்தது" என்று.

"சோழ மண்டலத்தின் இணையற்ற செம்மல் இளஞ் சேட்சென்னியா இறந்து விட்டார்!”

"ஆம் "

"உலகத்திலேயே மிக வேகமாகச் செல்லக் கூடிய அழகிய ரதங்களை உடைய இளஞ்சேட் சென்னியா போய் விட்டார்!"

“அவரேதான்.”

இளஞ்செழியன் அடுத்துப் பயபக்தியுடன் பேசினான். "இளஞ்சேட்சென்னி மறைந்து விட்டார். அவர் செல்வன் திருமாவளவன் வாழட்டும்" என்று ஏதோ மந்திர உச்சாடனம் செய்பவன் போல் வார்த்தைகளை உதிரவிட்டான் இளஞ்செழியன்.

"இளஞ்சேட் சென்னி இயற்கை மரணம் அடைய வில்லை படைத்தலைவரே. எதிரிகளால் கொலை செய்யப் பட்டார்..." என்று மேலும் விவரித்தான் கோட்டைத் தலைவன்.

"அப்படியானால் இளவரசர் திருமாவளவன்?"

"இருக்குமிடம் தெரியவில்லை."

"அரசர்மீது ஆணை என்று கதவைத் தட்டினீரே எந்த அரசர் அவர்?"

"எங்கள் தலைவரைத்தான் குறிப்பிட்டேன். படைத் தலைவரே!


யவனராணி = சாண்டில்யன் 


கி வா ஜ கரிகால் வளவன்  

நாட்டின் அரசாட்சியை அமைச்சர்கள் இளஞ்சேட் சென்னி இறந்துவிட்டான். மேற்கொண்டார்கள். அரசி கருவுற்ற செய்தி எப்படியோ சோழ நாட்டு மக்களுக்குத் தெரிந்துவிட்டது. முதலில் அரசியை அரண்மனையிலே வைத்திருக்கலாம் என்று எண்ணியிருந்தனர். ஆனால் எந்தச் சமயத்திலும் பகைவர்கள் நகரத்தை முற்றுகையிடக் கூடும். அரசி கருவுற்றிருக்கும் செய்தி எப்படியும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆகையால் அரசிக்குத் தீங்கு இழைப்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். இந்த அபாயத்தினின்றும் அரசியைப் பாதுகாக்க வேண்டும். வந்தபின் காப்பதை விட வருமுன் காப்பதே சிறந்தது. இன்னும் சில மாதங்கள் தக்க பாது காப்பில் அரசி இருந்து, இறைவன் அருளால் குழந்தை பிறந்துவிட்டால், பிறகு பகைவர்களின் கொட்டத்தை ஒருவாறு அடக்கலாம். குடி மக்களுக்கும் தைரியம் உண்டாகும்.

யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பான ஓரிடத்திற்கு அரசியைக் கொண்டு போய்த் தக்க வசதிகளுடன் வைப்பதென்று தீர்மானித்தார்கள். நல்ல வேளையாக இந்தக் காரியத்தில் அவர்களுக்குப் பெருந்துணையாக ஒருவர் வாய்த்திருந்தார். இரும்பிடர்த் தலையார் என்பவரே அவர். அவர் பெரும் புலவர்; மதுரைச் சங்கத்துப் புலவர் வரிசையில் சேர்ந்தவர். இது மட்டும் அன்று; அரசியின் சகோதரர் அவர். அவருடைய பாது காப்பில் அரசியை விடுவதில் யாருக்குத்தான் தடை இருக்கும்?

பல காலம் வள வாழ்வில் தான் வாழ்ந்து வந்த அரண்மனையை விட்டுச் சென்றாள் அரசி. கண்ணீரும் கம்பலையுமாக அவள் பிரிந்த காட்சி சான்றோர்களின் உள்ளத்தை உருக்கியது. "வருத்தம் அடையாதீர்கள். நீங்கள் தாங்கியிருக்கும் மாணிக்கம் தக்க காவலில் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தால்தான் உங்களை அனுப்புகிறோம். திருடர்கள் வந்துசாரும் இடத்தில் வைர மணிப் பெட்டகத்தை வைக்கலாமா? உங்களுக்குத் திருமகன் பிறந்துவிட்டால் மீண்டும் இந்த அரண்மனை வாழ்வு உங்களுக்குக் கிடைக்கும்" என்று அரசிக்கு ஆறுதல் கூறினார்கள். அவள் உள்ளத்துக்குள் ஏதோ நம்பிக்கை இருந்தது. தனக்கு மகன்தான் பிறப்பான் என்ற உறுதி இருந்தது. ஆனால் கடவுள் சித்தம் வேறாக இருந்தால்-? அதை நினைக்கும்போதே அவள் உடம்பு நடுங்கியது. அவள் வாழ்ந்த வாழ்வென்ன! அரசன் உயிரோடிருந்தால் அவள் இருக்கும் நிலை என்ன! எல்லாம் கனவாகத் தோன்றின.


===========

ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள சிலருக்கு மாத்திரம் தெரிந்தது. ஆட்சியை நடத்தி வந்த அமைச்சர்களுக்கும், சில சான்றோர்களுக்கும் தெரியும். அவர்கள் இதற்கு முன் ஊக்கமில்லாமல் இருந்தார்கள். அவர்கள் முகத்தில் வாட்டமே குடி கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் இரும்பிடர்த் தலையாரிடமிருந்து நல்ல செய்தியை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

'இளஞ்சேட்சென்னி இருந்து பார்த்து முறைப்படி குழந்தையைச் சீராட்டக் கொடுத்து வைக்கவில்லையே!" என்ற துயரம் அவர்களுக்கு இப்போது உண்டாயிற்று. ஆண்குழந்தை பிறந்த செய்தி அளவில்லாத மகிழ்ச்சியை உண்டாக்கினாலும் வேறு வகையில் அவர்களுடைய உள்ளம் மறுகியது. குழந்தை பிறந்ததை உலகத்தார் அறியத் தெரிவிப்பது உசிதமன்று என்று தீர்மானித்தனர். சோழநாட்டில் உள்ள சில வேளிர் கலகம் செய்யக் கிளம்பியிருந்தனர்.

குழந்தை பிறந்த செய்தி அவர்களுக்குத் தெரிந்தால் ஏதேனும் செய்துவிடக் கூடும். அரண்மனைக்குக் குழந்தையைக் கொணர்ந்து வளர்த்தால் தக்க பாதுகாப்பு வேண்டும். அதற்குரிய படைப்பலம் இல்லை. ஆகவே, இன்னும் சில ஆண்டுகள் ஒருவரும் அறியாமல் குழந்தை வளர்வதே நல்லது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். இரும் பிடர்த்தலையாரும் அந்த முடிவுக்கு உடன் பட்டார். குழந்தையைக் காக்கும் பொறுப்பு அவரிடமிருந்து அகலவில்லை. இன்ன இடத்தில் குழந்தை வளர்கிறது என்ற செய்தி மிகவும் இரகசியமாகவே இருந்தது.


சாண்டில்யன்  வெர்ஷன் 

"கரிகாலன் இங்கு வந்திருப்பது எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்கள் படைத்தலைவரே.   கரிகாலனைக் கண்ணிமை காப்பதுபோல் காக்க உறுதிகொண்டிருக்கும் என்னைத் தவிர வேறு யார் இவன் நடமாட்டங்களைக் கவனிக்க முடியும்!    அப்படி இரவும் பகலும்  அவனைப் பார்த்துக் கொண்டிருக்காவிட்டால் மன்னர் இளஞ்சேட்சென்னி சென்ற இடததிற்கு இவனும் சென்றிருப்பான். சோழமண்டலத்தில் சூரிய வம்சமும் அடியோடு அற்றுப் போயிருக்கும். 

இளஞ்செட்சென்னியின் மாளிகை இன்னும் என் கண் முன்பாக நிற்கிறது! எத்தனை பெரிய மாளிகை திடீரெனத் தீபக்குன்றாகத் தெரிந்தது. எத்தனை மாங்கள் வெடித்தன! மரங்களா வெடித்தன? இல்லை இல்லை? உறையூர் மக்களின் மனங்கள் வெடித்தன. உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியின் அழகிய ரதங்கள் இனி உறையூர் சாலைகளில் உருண்டோடாதே என்று உறையூர் மக்களின் இதயங்கள் வெடித்தன. 

அன்று கொளுத்தியது உறையூர் பெருமாளிகையையல்ல; அரசன் மாண்டு அராஜகம் ஏற்பட்டால் மாற்றார் அரசை ஏற்றுவிடுவாரே என்று ஏங்கிய எண்ணற்ற மக்களின் உள்ளங்கள் கொளுத்தின. திடீரென்று நள்ளிரவில் ஏற்பட்ட அந்தச் சதியால் உறையூர் அன்னையின் முகமே சிவந்து விட்டதுபோல் தீ ஜ்வாலை வெகு தூரத்துக்குச் செக்கச்செனே லெனத் தெரிந்தது. 

நெருப்பை அணைத்தார்கள் மக்கள்.  சதியை அணைக்க முடியவில்லை. தீயில் தீய்ந்து கருவிட்ட பல சடலங்கள்ஞாம் மாளிகையில் கிடைத்தன. எது அரசர் சடலம்,  எது வேலையாள் சடலம் என்று நிர்ணயிக்க முடியாமல் ஆபரணங்களையும் கத்திகளையும் வேல்களையும் கூட கருக்கிவிட்டது அந்தப் பாழும் தீ. நானே அந்த மாளிகைக்கு சென்றேன். சடலங்களை ஒவ்வொன்றாகப் புரட்டினேன். எது  என் தங்கை, எது என் தங்கை புருஷன்?     திணறினேன். பிணங்களைப் புரட்டிய கைகள் நடுங்கின.  ஏதும் தெரியாமல் மரியாதையுடன் புதைக்கக்கூடச் சடலங்கள் கிடைக்க வில்லை_" என்று சொல்லிய இரும்பிடர்த்தலையார் உணர்ச்சி மிகுதியால் பேச்சைச் சற்று நிறுத்தினார்.

பூவழகி துக்க வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தாள். "கோரம் கோரம்" என்று அவள் உதடுகள் முணுமுணுத்தன. இரும்பிடர்த்தலையார் நீர் தளும்பிய கண்களுடன் அவளைப் பார்த்துவிட்டு மேலும் சொன்னார்: "கேட்பதற்கே கோரமாயிருக்கும் இந்தச் சதியின் விளைவை நேரில் பார்த்த எனக்கு எப்படியிருக்கும் பூவழகி?  இளஞ்சேட்சென்னிக்கு ன் தங்கையை மணமுடித்துக் கொடுத்த அதே கைகளாய் அவர்கள் இருவர் பிணங்களையும் தேடியும் கிடைக்காத என் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்? அந்த உள்ளத் கொதிப்பில் சதிகாரர்களைப் பழி வாங்க நெருப்பணைந்த அந்த மாளிகைச் சாம்பலையே கையில் எடுத்துச் சத்தியம் செய்தேன். உடனே படைகளைத் திரட்டிப் பாதகள் இருங்கோவேளைக் கொன்றும் இருப்பேன். கொல்லவும் முயன்றேன். ஆனால், இரு வல்லரசுகள் அவனுக்குத் துணை நின்றன. தீ வைத்துத் தாயாதி இளஞ்சேட்சென்னியைக் கொன்ற இருங்கோவோள் அதை விபத்து என்று பறை ஏற்றினான். எந்தக் குற்றமும் புரியாத இரண்டு அப்பாவி 
மாளிகையில் உறங்கினான். அவனைத் தப்புவிக்கும்  எண்ணத்துடன் என் மாளிகைக்கு ஓடினேன். அங்கு என் மனைவி வெட்டப்பட்டுக் கிடந்தாள். கரிகாலன் மறைந்துவிட்டான்.   புலன் விசாரித்து சேரர் வஞ்சியில் கரிகாலன் சிறைப் பட்டிருப்பதை அறிந்து இங்கு வந்தேன். ஆன்பொருனை நதிக்கரை மாளிகையில் கரிகாலன் சிறையிருப்பதை அறிந்து சில காவலருக்குப் பணம் கொடுத்து என் பக்கத்தில் சேர்த்தேன். இரவு நேரங்களில் கரிகாலனும் நானும் விளக்குகளை ஆட்டி ஜாடை மூலம் கருத்துக்களை அறிவித்துக் கொண்டோம் அதற்குச் சமணத் துறவி பெரிதும் உதவியாருக்கிறார்...


-------------------------------------------


இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசியை மணந்தார். இவ்விருவருக்கும் பிறந்தவரே முற்காலச் சோழர்களுள் புகழ் பெற்றவரும், கூடுதலாக அறியப்பட்டவனுமான கரிகால் சோழன். கரிகாலன் சிறுவனாய் இருந்த போது இளஞ்சேட்சென்னி இறந்தார் என்பது முடத்தாமக் கண்ணியர் இயற்றிய பொருநராற்றுப்படை மூலம் தெரியவருகிறது. விக்கி

============================================================================================

பாஹே பக்கம்  :



========================================================================================


முகநூலிலிருந்து.....



#கேள்வி:"நீங்கள் நடித்த படங்கள் சிலவற்றைப் பார்த்த பிறகு, அவற்றில் நீங்கள் நடித்திருக்க வேண்டாமே என்று எங்களுக்கு நினைக்கத் தோன்றியதே. ஏன்?"
#பதில்: "நீங்கள் என்னை சிவாஜி என்ற நட்சத்திர நடிகராக மட்டும் பார்க்கிறீர்கள். 'அப்படிப்பட்ட இவர் ஏன் இதில் நடித்தார்?' என்று நினைக்கிறீர்கள். நான் அப்படி நினைக்க முடியாது. "
"என்னை நடிக்க அழைக்கும்போது இதை ஒரு தொழிலாகப் பாவித்து ஒப்புக் கொள்கிறேன். நான் என்னை நம்பியிருக்கும் பலருக்காகத் தொழில் செய்தாக வேண்டும். அதே நேரம், வருபவரிடம், அவரது முயற்சி சரிப்பட்டு வராது என்பதையும் சொல்லி விடுவேன். அவர் பிடிவாதமாகக் கூறினால் நான் என்ன செய்ய முடியும்? நட்புக்கு, அன்புக்குக் கட்டுப்பட்டு சில சமயம் நான் பலிகடா' வாக ஆகிவிட நேரிடுகிறது."
"முடியாது' என்று மறுப்பது மிகச் சுலபம். ஆனால் அப்படிச் சொல்ல என்னால் முடியாததுதான் என் பலவீனமோ என்னமோ! "
"படம் ஆரம்பமாவதற்கு முன்பே ஓரளவு அதன் தலைவிதியை நான் கணித்துவிட முடிகிறது. ஆனால் தயாரிப்பாளர் 'ரிஸ்க்' எடுத்துக் கொண்டு படததைத் தயாரிக்கிறார். நான் என் பணி சிறப்பாக அமையப் பாடுபடுவதுடன் நிறுத்திச் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்படுகிறது. "

- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் (1982) Endrendrum Sivaji

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

நல்ல பல்லவிக்கு 18 பவுன்!

எம் எஸ் விஸ்வநாதனும் வாலியும்... பெரிய தனக்காரங்க.. பெரிய மனசுக்காரங்க...
===============================================================================

இன்னும் கொஞ்சம் மு மேத்தா கவிதைகள் 




எங்கிருக்கிறாய்?

நீ என்
கவிதைகளை ரசிப்பதாகக்
கூறிய பிறகு
என் கவிதைகளெல்லாம்
உன்னை மட்டுமே
ரசிக்கத் தொடங்கி விட்டன.


படித்து முடிந்ததும்
கொடுத்ததைத்
திருப்பி வாங்கிக் கொள்வதற்கு
இது
புத்தகமல்ல
இதயம்

கை நழுவ
விட்டால்தான்
உடைந்து போகும்
என்பதற்கு
இது
கண்ணாடியல்ல
மனது

மாபெரும் கூட்டத்தின்
மத்தியிலும்
என் கண்கள்
கேட்டுக் கொண்டே
இருக்கின்றன...
நீ
எங்கிருக்கிறாய் என்று.


அருகில் நீ இருந்த போது
என்னையே கேட்டுக் கொண்டேன்
“நான் யார்?” என்று....
இங்கிருந்து நீ
போய் விட்ட பிறகு
இவர்கள் என்னைக் கேட்டார்கள்
“நீ யார்?” என்று!

===========================================================================



நாடோடி இலக்கியம்  -  கி வா ஜகந்நாதன் 


.................  களவென்னும் பகுதி மிகவும் சுவை பொருந்திய காட்சிகளை உடையது.

காதலன் காதலியைத் தேடிக் கொண்டு வருவதும், கட்டுக்காவலுக்குள் அடங்கி நிற்கும் காதலி அவனைக் குறித்த இடத்தில் குறித்த காலத்தில் சந்திக்க முடியாமல் அவதியுறுவதும், இருவர் உள்ளத்திலும் எழும் உணர்ச்சிகளும் கவிதையின் சுவையை மிகுவித்து ரஸமயமாக்குகின்றன.

தன் காதலன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் வந்து நிற்கிறான் என்பதைக் காதலி உணர்ந்தும் அவனைப் போய்ச் சந்திக்க முடியவில்லை என்றால் அவள் மனம் என்ன பாடுபடும்! வேலை செய்ய ஓடுமா? தன் காதலன் தன்னைக் காணாமல் ஏமாந்து போவானே என்ற வருத்தம், அவனைச் சந்திக்க முடியவில்லையே என்ற குறை, அவன் அங்கே நிற்பதை யாரேனும் கண்டுபிடித்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் - எல்லாம் சேர்ந்து அவள் உள்ளத்தில் போராடுகின்றன.

நல்ல வேளையாக அவளோடு உயிருக்கு உயிராகப் பழகும் தோழி ஒருத்தி இருக்கிறாள். அவள்தான் அந்த இரண்டு காதலர்களுடைய தெய்வக் காதலும் படர்ந்து வளர உதவியாக இருப்பவள். காதலி தன்னுடைய உள்ளத்தில் பொங்கி எழும் உணர்ச்சிகளை அவளிடம் சொல்லுகிறாள். உள்ளத் துயரை வெளியிடுவதில் ஓரளவு ஆறுதல் ஏற்படும் அல்லவா?

தவிர, தலைவியின் உள்ளத்தில் ஏழு கடல்களும் புரண்டால்தான் என்ன? அவள் கருத்தை நாம் எப்படி உணரப் போகிறோம்! அந்த உணர்ச்சி வார்த்தைகளாக வந்தால்தானே கவிதைக்கு உரிய பொருளாகும்? காதலி தனியே பேசிக்கொண்டே இருந்தால் நாடக ரஸம் சிறவாதே.

ஆகவே அவளைப் பேச வைப்பதற்கு அந்த உயிர்த்தோழி உபகாரமாக இருக்கிறாள். காதலன் காதலியருக்கு அத்தோழி வேண்டுமோ இல்லையோ, கவிஞனுக்கு அவள் அவசியமாகிறாள். காதலி தோழியிடம் தன் மனத் துயரை உரைப்பதும், தோழி ஆறுதல் கூறுவதும், காதலனிடம் தோழி தலைவியின் நிலையை எடுத்து உரைப்பதும் ஆகிய பேச்சு வகைகளினாலே, உணர்ச்சியளவிலே நின்ற ஊமைக் காதல், கவிதைக்கு உரிய காதல் ஆகிவிடுகிறது.


புலவர்களின் இலக்கியத்திலே காணப்படும் இந்தக் காதல் விசித்திரங்களை உலகத்திலும் பார்க்கலாம். காதலர்கள் மறைவாக காதல் புரிவதுதான் இயற்கைக்குப் பொருத்தமானது. ஆகவே உலகம் முழுவதும் களவுக் காதல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. உண்மை வாழ்க்கையின் ஒவியமாகிய நாடோடி இலக்கியம் இதற்குச் சாட்சி கூறுகிறது. முன்னே சொன்ன காதல் நிகழ்ச்சியை நாடோடிப் பாட்டிலும் பார்க்கிறோம்.

தன் காதலனை மாமன் என்று அழைப்பது நாட்டுப்புறத்துச் சம்பிரதாயம். காதலி வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். அவளுடைய காதலன் அவளைச் சந்திப்பதற்காக வந்து அருகிலே உள்ள மாந்தோப்பிலே நிற்கிறான். வசந்த காலமும், இயற்கையெழில் குலுங்கும் மாந்தோப்பும் புலவன் கற்பிக்கும் கவிதைக்குத்தான் சொந்தமென்று நினைக்காதீர்கள். நாடோடிக்கும் அவை சொந்தப் பொருள்களே.

தன் காதலன் வந்து நிற்பதை அவன் செய்யும் சங்கேத ஒலியால் உணர்ந்து கொள்கிறாள். அவள் உள்ளம் தவியாகத் தவிக்கிறது. ஒரே ஓட்டமாகப் போய் அவனைக் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆத்திரப்படுகிறது. வீடென்னும் சிறையில் இருக்கும் அவளுக்கு அவ்வளவு சுதந்திரம் ஏது? அவளால் போக முடியவில்லை.

தன் காதலன் வருவானென்றும் அவனைப் போய்ச் சந்திக்கலாமென்றும் அவள் ஆவலோடு அலங்காரப் பொருள்களை வாங்கி வைத்திருக்கிறாள். தன் காதலனைச் சந்திக்கும்போது மடித்துக் கொடுக்க நல்ல வெற்றிலை வாங்கி வைத்திருக்கிறாள். அவனுக்குப் பொட்டிடச் சந்த னம் அரைத்து வைத்திருக்கிறாள். தன்னை அலங்கரித்துக் கொள்ளப் பூ வைத்திருக்கிறாள். அவளுக்கு அரளிப் பூத் தான் இருக்கிறது. அதைப் பிறர் அறியாமல் இறைவானத்திலே செருகி வைத்திருக் கிறாள்.
இவற்றை உபயோகப்படுத்தலாமென்றும் தன் காதலனை மாமனை மாந்தோப்பிலே சந்தித்து மகிழலாம் என்றும் அவள் கனவு காண்கிறாள். 

பாவம்! அவள் விருப்பம் நிறைவேறவில்லை. அப்பொழுதுதான் அவளுடைய தாய் உடனிருந்து ஏதோ வேலை செய்யும் படி சொல்லிக்கொண்டு இருக்கிறாள். வாசலிலே தகப்பனாரும் அண்ணன்மாரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பேருக்கும் தெரி யாமல் எப்படிப் போவது? முடியவில்லை.

ஒருநாள் கழிந்தது.அவளுடைய ஆயுளில் ஒருபாதி வியர்த்தமாகி விட்டது போன்ற துக்கம் அவளுக்கு ஏற்பட்டது. மறுதாளும் அவளுடைய காதலன் வருகிறான். அவனுடைய வாய் ஊதல் - அதை வீளை என்று பழந்தமிழர் சொல்வார்கள் -அவள் காதில் இனிமையாக விழுகிறது. அவளை அழைக்கும் குறிப்பு ஒலி அது. இன்றும் காவல் அதிகமாக இருக்கிறது. அவள் உள்ளம் துடிக்கிறது; முகம் வாடுகிறது. உடம்பில் சோர்வு உண்டாகிறது. செய்கிற காரியத்திலே புத்தி போகவில்லை. இந்த நிலையில் இங்கும் ஒரு தோழி - காதலியின் சிநேகிதக்காரி வருகிறாள். காதலியின் தோற்றத்திலே புலப்பட்ட சோர்வு அவள் கண்ணை உறுத்துகிறது. 

"ஏன் இப்படி இருக்கிறாய்?" என்று அந்தரங்க மாகக் கேட்கிறாள்.

காதலி சொல்ல எண்ணுகிறாள். வார்த்தை வரவில்லை; அவளுக்குத் துக்கம் பொங்குகின்றது. முதல்நாள் வாங்கி வைத்த வெற்றிலை. இன்று வாடிப்போயிற்று; அரைத்து வைத்த சந்த னம் உலர்ந்து போயிற்று; இறைவானத்திலே செருகிவைத்த பூ, குருவி கொத்தியதால் அழகு குலைந்துவிட்டது. இந்தக் குறைகளைத்தான் வெளிப்படையாகச் சொல்லலாம் என்று நினைக்கிறாள். ஆனால் எல்லாவற்றிற்கும் சிகரமான குறையை அவள் தன்னை அறியாமலே கடைசி யில் சேர்த்துச் சொல்லிவிடுகிறாள்;

வாட வெத்தலை வதங்க வெத்தலை
வாய்க்கு நல்லால்லே
நேத்து வச்ச சந்தனப் பொட்டு
நெத்திக்கு நல்லால்லே
குருவி கொத்தின அரளிப் பூவு
கொண்டைக்கு நல்லால்லே
மாமன் வந்து தோப்பிலே நிக்கிறது
மனசுக்கு நல்லால்லே!

அவள் உள்ளத்தை வாடும் வெற்றிலை என்னலாமா? உலர்ந்த சந்தனம் என்னலாமா? குருவி கொத்தின மலர் என்னலாமா? சே,சே!  இந்த உபமானங்களெல்லாம் எங்கே! அவளது வாடிய உள்ளத்தின் நிலை எங்கே! அதைப் புலப்படுத்த எந்தப் பாஷையிலும் வார்த்தைகள் இல்லை.

மஞ்சரி - 2004 

==========================================================================================

காமராஜர் செய்த தவறு !
காமராஜர் சென்னை மாநில முதல்வராக இருந்தபோது தஞ்சை மாவட்டத்தில் மின்னல்வேகச் சுற்றுப்பயணத் திட்டத்தை மேற்கொண்டிருந்தார்.
அப்போது மன்னார்குடியை அடுத்துள்ள பரவாக்கோட்டை பஞ்சாயத்து அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை முதலமைச்சரைக் (காமராஜர்) கொண்டு திறந்து வைப்பது என்றும், அத்துடன் பிரதமர் நேருவின் படத்தை மந்திரி வெங்கட்ராமன் அவர்களாலும், காமராஜர் படத்தை பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார் (எம். எல். சி) அவர்களாலும் திறந்து வைப்பது என்றும் முடிவு எடுத்திருந்தார்கள் அவ்வூர்ப் பிரமுகர்கள்.
ஆனால் மந்திரி வெங்கட்ராமன் அவர்கள் ஏதோ அவசர காரியத்தை முன்னிட்டு தமது புரோகிராமை ரத்து செய்து விடவே, கட்டிடத் திறப்போடு, பிரதமர் நேருவின் படத் திறப்பையும் காமராஜரைக் கொண்டே நடத்தி விடுவது என்று முடிவெடுக்கப் பட்டது.
காமராஜர் அவசர அவசரமாக வந்தார். அவர் முன் வெள்ளிக் கத்தரிக்கோல் நீட்டப்பட்டது. கட்டிடத்திறப்பை முடித்துவிட்டு, அவசரமாக உள்ளே நுழைந்தபடியே, " அடுத்து என்ன?" என்றார். " படத்திறப்பு" என்று பணிவோடு பதில் வந்தது.
ஆவலோடு அவசரம் கலக்க, அங்கு இருந்த ஒரு படத்தைத் திறந்து வைத்தார். அடுத்த வினாடி திகைத்து நின்று விட்டார்! அங்கிருந்தவர்கள் எல்லோருடைய முகத்திலும் திகைப்புக்குறி! நிகழ்ந்து விட்ட தவறுதலுக்கு கோபப்படுவாரோ என்று எண்ணியபடி எல்லோரும் கேள்விக்குறியோடு நிற்கும்போது, " ஆகட்டும்! அதனாலென்ன? என் படத்தை நானே திறந்து வைத்ததில் என்ன ஆச்சர்யம்? இதுவும் ஒரு புதுமை தானே!"என்று சொல்லி அங்கிருந்தவர்கள் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி விட்டார் காமராஜர்!

1965 விகடனிலிருந்து....

===============================================================================

சகலகலாவல்லி

பானுமதி அம்மா வாரந்தோறும் திங்கட்கிழமையன்று சோமவார மவுனவிரதம். காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரையிலும் மவுனம் அனுஷ்டிப்பார். எவரோடும் எதுவும் பேசாமல், கையில் துண்டுக் காகிதங்களை வைத்துக்கொண்டு எழுதி எழுதிக் காட்டுவார்.

சாஸ்திர சம்பிரதாயங்களுடன் கைரேகை, ஜோதிடம் முதலிய கலைகளைக் கற்று ‘சகலகலாவல்லி’யாகத் திகழ்ந்தவர் அவர்.

பானுமதி பரிமாறிய ‘பெஸரட்’

நளதமயந்தி டப்பிங் தொடங்கிய அடுத்த நாள் காலை 9 மணி. நான் பானுமதி அம்மாவுக்காக காத்திருந்தேன். மற்ற குரல் கொடுக்கும் கலைஞர்களை வைத்து டப்பிங் தொடங்க இருந்த நேரத்தில், பக்கத்தில் ஸ்டூடியோவிற்குள்ளேயே இருந்த பானுமதியம்மாவின் பங்களாவில் இருந்து ஒரு பையன் என்னிடம் ஓடிவந்தான்.

‘இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மா இங்கே வர்றாங்க. ஒங்களை டிபன் சாப்பிட வேண்டான்னு சொல்லச் சொன்னாங்க’ என்றான்.

சற்று நேரத்திற்கெல்லாம் அந்த மஞ்சள் நிற அன்னப்பறவை வந்தது.

(அனைத்து அன்னப்பறவைகளும் தூய வெண்ணிறமாகத்தான் இருக்கும். ஆனால், பானுமதி இரண்டாகப் பிளந்த ஈரோடு மஞ்சள் நிற மேனி கொண்டவராதலால் மஞ்சள் அன்னப்பறவை என்றேன்)

ஒயிலாக உள்ளே வந்தவர் மயிலாக இருக்கையில் அமர்ந்தார். கூடவே ஒரு ஹாட்பேக்கும், பிளாஸ்க்கும், தட்டுகளும் கொண்டு வந்த பையன் அவற்றை எதிரில் இருந்த டீப்பாயின் மீது வைத்தான்.

‘நீங்கள் ‘பெஸரட்’ சாப்பிட்டிருக்கீங்களா?’ என்று கேட்டார்.

‘நிறைய சாப்பிட்டிருக்கேன். எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆந்திரா பச்சைப்பயறு தோசைதானே. கூடவே கோதுமை உப்புமாவும் சைடுக்கு இஞ்சிச் சட்னியும் இருக்கும். அதோட வெள்ளை மெதுவடையும் வைப்பாங்க’.

இதைக்கேட்டு அவர் சிரித்தபடி, ஆச்சரியத்துடன் ‘ரொம்ப கரெக்டா சொல்றீங்களே! எப்படி?’

‘சாவித்திரி வீட்டிலேயும், டைரக்டர் ஜம்பனா வீட்டிலேயும் சாப்பிட்டிருக்கேன்’.

‘சாவித்திரியை உங்களுக்குத் தெரியுமா?’

‘ரொம்ப நல்லாத் தெரியும். சினிமாவுக்கு நான் வந்த நாளில் எனக்கு கிடைச்ச முதல் நடிக நண்பர்கள் ஜெமினிகணேசனும், சாவித்திரியும்தான். அவுங்க சேர்ந்து நடிச்ச சவுபாக்கியவதி படத்துக்கு அஸிஸ்டெண்ட் டைரக்டராகவும், அஸோஸியேட் டயலாக் ரைட்டராகவும் வேலை செய்தேன்.

ஜெமினியை ‘அண்ணன்னு’ கூப்பிடுவேன். சாவித்திரி என்னைவிட 6 வயசு இளையவர். ஆனாலும் ஒரு அன்புக்காக அண்ணின்னு அழைப்பேன். ரெண்டு பேருமே எங்கிட்டே ரொம்பப் பிரியமா இருப்பாங்க.

இலக்கியத் தெலுங்கைக்கூட நான் நல்லா பாலோ பண்ணுவேன். ஆனா கொஞ்சம் கொஞ்சந்தான் பேசத்தெரியும். அதுக்குக்காரணம் சாவித்திரிதான். அப்பப்போ சின்னச்சின்ன வார்த்தைகள் எனக்குச் சொல்லிக்குடுக்கும்’.

‘இருக்கட்டும். நான் ஒங்களுக்கு கிராமரோட நல்லா தெலுங்கு பேசக் கத்துக்குடுக்குறேன்’.

‘ரொம்ப நன்றி. பெற்ற மொழி தமிழ்! கற்ற மொழி ஆங்கிலம். அதுக்கு அடுத்தபடியா தெலுங்கு மொழி எனக்குப் பிடிக்கும். ஒங்க தெலுங்கு சங்கீத மும்மூர்த்திகள் தியாகய்யர், சியாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி தீட்சிதர் மூணு பேருமே எங்க திருவாரூர்ல அவதரிச்சவுங்கதான்’.

‘அப்படின்னா ஒங்க சொந்த ஊர் திருவாரூரா?’

‘ஆமா, அதனாலதான் ஆரூர்தாஸ்னு என் வாத்தியார் எனக்குப் பேர் வச்சாரு. ஆரூர்னா திருவாரூர்! திருவாரூர் ஸ்தல மூலவர் தியாக ராஜசுவாமி. அதனாலதான் அங்கே பிறந்த அவருக்கு தியாகராஜர்னு பேர் வச்சாங்க. அதை நீங்க தியாகய்யான்னு ஆக்கிட்டிங்க’.

‘பரவாயில்லே. நிறைய விஷயங்கள் தெரிஞ்சி வச்சிருக்கீங்களே. இப்படித்தான் இருக்கணும். சரி, சாப்பிட்டுட்டு டப்பிங் ஆரம்பிக்கலாம்’.

சூடான பெஸரெட்டையும், சுவையான கோதுமை உப்புமாவையும் அத்துடன் அதிகக் காரமான இஞ்சிச் சட்னியையும் அவர் கையாலேயே எடுத்து பீங்கான் பிளேட்டில் வைத்துப் பரிவுடன் எனக்குக் கொடுத்தார்.

அன்னலட்சுமி பரிமாறினார்!
கொண்ட மட்டும் உண்டேன்!
வயிறும் நிறைந்தது!
மனமும் நிறைந்தது!


சினிமாவின் மறுபக்கம் -  ஆரூர்தாஸ் 

=================================================================================


1967 ல் வெளியான அனுபவி ராஜா அனுபவி ஒரு ஜாலியான படம்.  நாகேஷ்தான் ஹீரோ,  பாலச்சந்தர் படம்.  கண்ணதாசன் பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை.  இந்தப் பாடல் ஹிந்தியில் இதே போலவே ஆரம்ப வரிகளை வைத்து ஆரம்பித்தார் ஆர் ஆர் டி பர்மன்.

செம ஹிட் அடித்த பாடல்.

தூத்துக்குடி பாஷையில் அமைந்த பாடல்.


அதிகாலை மூன்று மூன்றரைக்கே எங்கள் சேலம் பயணம் துவங்கி விடும் என்பதால் எப்போது பதிலளிப்பேன் என்று தெரியாது. வெள்ளி முழுவதும் பயணம் பிஸி, களைப்பு!  JKC விருப்பத்தை இன்று என்னால் நிறைவேற்ற முடியும்!!!

29 கருத்துகள்:

  1. வாழைப்பூ நறுக்குவது என்னன்னா கையில் அந்த பிசு பிசுப்பு ஒட்டுமே கறுப்பா...நான் கொஞ்சம் தேங்காய் எண்ணை தடவிக் கொண்டு நறுக்குவேன் ஆனா கத்தி வழுகிப் போகும். சில சமயம்.

    நல்ல உவமை ஸ்ரீராம் தலையை சிலுப்பி......

    நான் நினைப்பேன் பூவுக்குள் ஒளிந்திருக்கும் ரகசியக் கள்ளனை அப்பூவின் கைகளை விலக்கி கள்ளனை உருவி ஆஹா பாரு உன்னைக் காப்பாத்திட்டேன்னு ஆனா அது சொல்லும் அடப் பாவி அந்த ரெண்டும்தானே நான் வாழைக்காயா உருவாகப் பாதுகாப்புன்னு!!!! அதுக்கு முன்னாடி என்னை உதிர்த்து...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா... நான் ஒவ்வொரு முறையும் எண்ணெய் தடவிக் கொள்ள மறந்து விடுவேன்.

      நீக்கு
  2. வாழ்க்கைத் துணை நீ. கவிதை நன்றாக இருக்கிறது.

    மனைவியை உள்ளன்போடு நேசித்தால்தான் இப்படி எழுத இயலும்.

    எல்லா வார்த்தைகளும் படிக்க முடிந்தது. துன்னிய வார்த்தை உபயோகம் ரசித்தேன். தடாக்க் ... அடுத்த வார்த்தை மாத்திரம், குன்றமையா? புரியவில்லை, யோசித்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன். இது அப்பா திருமணத்துக்கு முன் தன் பதின்ம பருவத்தில் எழுதியது!

      நீக்கு
  3. ரகசியமானது வாழைப்பூ! நிஜமாகவே ரொம்ப வியந்ததுண்டு வாழைப்பூவை முதன் முத்லாக நறுக்கிய போது.

    அதற்குள் எத்தனை ரகசியங்கள் என்று வைரமுத்து பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிகூட்டம் ரகசியம் னு எழுதும் முன்னரே!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அட! அடுத்த பாட்டு அந்த வரி நல்லாருக்கே! உணர்வோடு கலந்து உணர்வதுதானே மாபெரும் சக்தி!

    காதல் ம்ம்ம் அப்படிக் கலந்தால் அது தெய்வீகக் காதலய்யா!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அதுதான் தெரியாதே!!!!!

    ஹாஹாஹா இப்பதான் பார்க்கிறேன் ஸ்ரீராம். சுவாரசியம். நாகேஷ் லெஜன்ட்

    கீதா

    பதிலளிநீக்கு
  6. நிஜமாகவே நாகேஷ் சீன்ஸ் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த சீன்ஸ் இப்பவும் கூட. ஊரில் தேரடியில் பார்த்த படம் திருவிளையாடல்.

    இணையம் வந்த பிறகு இக்காட்சியை யுட்யூபில் பார்த்துப் பார்த்து ரசித்ததால், எங்கள் தளத்தில் கூடப் பதிவு எழுதியதுண்டு இதன் இன்ஸ்பிரேஷனில்!!!

    எங்கள் தளத்தில் நான் இப்படியாக எழுதியவை அப்ப நிறைய.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்ப வாசிப்பவர்கள் எங்கள் தளத்திற்கு அப்ப கிடையாது.

      கீதா

      நீக்கு
    2. எல்லோருமே அந்த ரசனைகள் நிறைய அப்படி எழுதி இருப்பார்கள் இல்லையா?

      நீக்கு
    3. ஆமாம் ஸ்ரீராம். கண்டிப்பாக எழுதியிருப்பாங்க.

      ஊர்ல இருந்தப்ப இந்தப் படம் தேரடில பார்த்த பிறகு வீட்டில் நாங்கள் எங்களுக்குள் இந்த தருமி சீனுக்கு எங்கள் கற்பனைல இட்டுக்கட்டி பேசி ரசித்ததுண்டு. அது போல பள்ளியிலும் கல்லூரியிலும் ...அப்படித்தான் என்னை நாடகத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.

      கீதா

      நீக்கு
  7. நிஜமாகவே சிவாஜி நல்ல ரசிகரும் கூட அதாவது நடிப்பின்.....அப்படி ரசிகராக இருந்தால்தானே தன்னாலும் நடிப்பை வெளிப்படுத்த முடியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. என்ன மோசம்ல அந்த அசோசியேட் டைரக்டர் ...இப்படியும் மனுஷங்களா?!

    ஹையோ சஸ்பென்ஸ்ல முடியுதே காணொளி....ஸ்ரீராம். சரி யுட்யூபில் எடுத்துப் பார்த்துவிடுகிறேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தனைக்கும் இன்களூடு ஆல் இந்த ஆப்ஷனை கிளிக் செய்து வெளியிட்டேன் அப்படியும் இவ்வளவு தான் வருகிறது போல

      நீக்கு
  9. மு மேத்தாவின் வரிகள் ரொம்ப ரொம்ப ரசித்தேன், ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. கவிஞர் பிறைசூடன் காணொளி எடுத்து வைத்திருக்கிறேன் ஸ்ரீராம். சுட்டியை ஆனால் இன்னும் பார்க்கவில்லை. மெயினாக சித்ராலக்ஷ்மணன் எடுக்கும் பேட்டிகளைப் பார்ப்பதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எதேச்சையாகத்தான் பார்க்க ஆரம்பித்தேன் அவரது எளிமையும் நேர்மையும் எனக்கு பிடித்திருந்தது

      நீக்கு
    2. ஆமாம் அதே ரொம்ப ரசித்தேன்

      கீதா

      நீக்கு
  11. அடப் பாவிங்களா! பிறைசூடன் எனும் பெயர் நல்லால்லியாமா? மனதைக் கவரும் பெயர். சே ரசனையே இல்லாதவங்க.

    இயல்பான பேட்டி தன் மீதான குறைகளையும் வெளிப்படையாகச் சொல்கிறார்.

    சிறு வயதிலிருந்தே ஆன்மீகத்தில் நாட்டம் ஆனால் பாவம் பேசும் போது தான் யோசிக்காமல் பேசுவதையும் சொல்கிறார். (நீங்களும் சொல்லிருக்கீங்க ஸ்ரீராம்)

    பாருங்க, அவருக்காவது சின்ன வயசு....அப்ப பக்குவம் இருந்திருக்காமல் போகலாம்...தப்பில்லை எல்லோரும் படிப்படியாக வளர்ந்து வருபவர்கள் தானே பக்குவம் என்பது அப்படித்தானே...... இல்லையா.....ஆனால் வயதான பிறகும் ஆன்மீகம் நாட்டம் உள்ளவர்கள் மனம் பக்குவமடையாமல் பேசிவிடுகிறார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. ரொம்பப் பக்குவமாகப் பேசுகிறார். இயல்பாகப் பேசுகிறார். முழுவதும் பார்க்க வேண்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு பேஸ்புக்கில் தொடர்ந்து பிட்டு பிட்டாக நிறைய பிட்டுகள் வந்தது

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!