Rice flour upmaa லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Rice flour upmaa லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19.1.15

திங்கக் கிழமை 150119 :: அரிசிமா உப்புமா.

         
தேவையான பொருட்கள்: 
                       
அரிசிமாவு : இரண்டு கப். 
கெட்டி மோர் அல்லது தயிர் : ஒரு டம்ளர். 
நல்லெண்ணெய் : ஒரு கரண்டி / ஒன்றரைக் கரண்டி. 
கடுகு : ஒரு டீஸ்பூன். 
பெருங்காயம் : அரை சுண்டைக்காய் அளவு. 
மோர் மிளகாய் : மூன்று அல்லது நான்கு. 
உப்பு : தேவையான அளவு. 
கறிவேப்பிலை : ஒரு ஈர்க்கு. 
   

மோர் மிளகாய் ஒவ்வொன்றையும் நான்கைந்து துண்டுகளாகக் கிள்ளி வைத்துக்கொள்ளவும். 
      



அரிசிமாவை, மோரில்/அல்லது தயிரில்  கரைத்து, தேவையான அளவு உப்பைச் சேர்த்துக் கலக்கி, ஒரு பாத்திரத்தில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். கலவை ரொம்ப கெட்டியாகவும் இருக்கக்கூடாது, ரொம்ப நெகிழவும் இருக்கக்கூடாது. இட்லி மாவு பதத்தில் இருக்கலாம். 

ஒரு வாணலியை (ரேடியோ இல்லீங்க - இரும்புச் சட்டி) அடுப்பின் மீது வைக்கவும். 
               


அடுப்பைப்பற்ற வைக்கவும்.
  
எண்ணெயை  வாணலியில் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, மோர் மிளகாய்க் கிள்ளல்கள் (!) பெருங்காயம் ஆகியவைகளைப் போடவும். 

கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை இலைகளை ஈர்க்கிலிருந்து உருவி, கிள்ளிப் போடவும் (வாணலியில்தான்) 

இப்போ கொண்டுவாங்க அந்த தயிர் மாவுக் கலவையை! காய்ந்த, கடுகு வெடித்த, எண்ணெய் மீது அந்தக் கலவையை ஊற்றுங்கள். 

சொய்ங் என்று ஒரு சப்தம் வருகிறதா? 

ரசியுங்கள். 

மோர் மிளகாய், கடுகு, பெருங்காயம் எல்லாம் மாவுடன் சேர்ந்து இனிய மணம் வரும் அதை நாசி மூலம் வாங்கி, நுரையீரல் அறைகளில் சற்றுத் தேக்கிவைத்து அனுபவியுங்கள். 
  
தேவைப்பட்டால் மேலும் தயிர் சேர்க்கலாம். மாவு நன்றாக வேகும் வரைக் கிளறவும். 

சிறிது நேரம் கழித்து, ஒரு தோசைத் திருப்பியை வைத்துக்கொண்டு, மாவுக் கலவையை வெட்டி வெட்டி ஓசைப் படுத்தவும். 
                
இப்படி வெட்டி வெட்டி விடும்பொழுது, அரிசி மாவு, சிறு சிறு உருண்டைகளாக ஒரு பௌதிக மாற்றம் அடையும். சில உருண்டைகள் எண்ணெய் குடித்து, மொறு மொறு வென ஆகிவிடும். 
            
    

உப்புமாவை அடுப்பிலிருந்து  இறக்கும்பொழுது ஒவ்வொரு மாவு உருண்டையும் இரண்டு மில்லி மீட்டர் விட்டம் முதல் ஒரு அல்லது ஒன்றரை சென்டிமீட்டர் விட்டம் வரை இருக்கும். 
              
இதற்கு, தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை. இதனோடு இருக்கின்ற மோர் மிளகாய்த் துண்டுகள் போதும். அவற்றோடு சேர்ந்து இந்த அரிசி மாவு உப்புமா உருண்டைகளை சம்ஹாரம் செய்யும்பொழுது, சொர்க்க லோக சுகம் கிடைக்கும். 
               
செய்யுங்க, சாப்பிடுங்க!