திங்கள், 19 ஜனவரி, 2015

திங்கக் கிழமை 150119 :: அரிசிமா உப்புமா.

         
தேவையான பொருட்கள்: 
                       
அரிசிமாவு : இரண்டு கப். 
கெட்டி மோர் அல்லது தயிர் : ஒரு டம்ளர். 
நல்லெண்ணெய் : ஒரு கரண்டி / ஒன்றரைக் கரண்டி. 
கடுகு : ஒரு டீஸ்பூன். 
பெருங்காயம் : அரை சுண்டைக்காய் அளவு. 
மோர் மிளகாய் : மூன்று அல்லது நான்கு. 
உப்பு : தேவையான அளவு. 
கறிவேப்பிலை : ஒரு ஈர்க்கு. 
   

மோர் மிளகாய் ஒவ்வொன்றையும் நான்கைந்து துண்டுகளாகக் கிள்ளி வைத்துக்கொள்ளவும். 
      அரிசிமாவை, மோரில்/அல்லது தயிரில்  கரைத்து, தேவையான அளவு உப்பைச் சேர்த்துக் கலக்கி, ஒரு பாத்திரத்தில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். கலவை ரொம்ப கெட்டியாகவும் இருக்கக்கூடாது, ரொம்ப நெகிழவும் இருக்கக்கூடாது. இட்லி மாவு பதத்தில் இருக்கலாம். 

ஒரு வாணலியை (ரேடியோ இல்லீங்க - இரும்புச் சட்டி) அடுப்பின் மீது வைக்கவும். 
               


அடுப்பைப்பற்ற வைக்கவும்.
  
எண்ணெயை  வாணலியில் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, மோர் மிளகாய்க் கிள்ளல்கள் (!) பெருங்காயம் ஆகியவைகளைப் போடவும். 

கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை இலைகளை ஈர்க்கிலிருந்து உருவி, கிள்ளிப் போடவும் (வாணலியில்தான்) 

இப்போ கொண்டுவாங்க அந்த தயிர் மாவுக் கலவையை! காய்ந்த, கடுகு வெடித்த, எண்ணெய் மீது அந்தக் கலவையை ஊற்றுங்கள். 

சொய்ங் என்று ஒரு சப்தம் வருகிறதா? 

ரசியுங்கள். 

மோர் மிளகாய், கடுகு, பெருங்காயம் எல்லாம் மாவுடன் சேர்ந்து இனிய மணம் வரும் அதை நாசி மூலம் வாங்கி, நுரையீரல் அறைகளில் சற்றுத் தேக்கிவைத்து அனுபவியுங்கள். 
  
தேவைப்பட்டால் மேலும் தயிர் சேர்க்கலாம். மாவு நன்றாக வேகும் வரைக் கிளறவும். 

சிறிது நேரம் கழித்து, ஒரு தோசைத் திருப்பியை வைத்துக்கொண்டு, மாவுக் கலவையை வெட்டி வெட்டி ஓசைப் படுத்தவும். 
                
இப்படி வெட்டி வெட்டி விடும்பொழுது, அரிசி மாவு, சிறு சிறு உருண்டைகளாக ஒரு பௌதிக மாற்றம் அடையும். சில உருண்டைகள் எண்ணெய் குடித்து, மொறு மொறு வென ஆகிவிடும். 
            
    

உப்புமாவை அடுப்பிலிருந்து  இறக்கும்பொழுது ஒவ்வொரு மாவு உருண்டையும் இரண்டு மில்லி மீட்டர் விட்டம் முதல் ஒரு அல்லது ஒன்றரை சென்டிமீட்டர் விட்டம் வரை இருக்கும். 
              
இதற்கு, தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை. இதனோடு இருக்கின்ற மோர் மிளகாய்த் துண்டுகள் போதும். அவற்றோடு சேர்ந்து இந்த அரிசி மாவு உப்புமா உருண்டைகளை சம்ஹாரம் செய்யும்பொழுது, சொர்க்க லோக சுகம் கிடைக்கும். 
               
செய்யுங்க, சாப்பிடுங்க! 
     

20 கருத்துகள்:

 1. வணக்கம்
  இலகுவான செய்முறை விளக்கம். பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. உப்புமாவே பிடிக்காது. இந்த அரிசி உப்புமாவும்,கோதுமை ரவை உப்புமாவும் சற்று விதிவிலக்கு.

  பதிலளிநீக்கு
 3. இது என்னோட பேவரிட் டிபன். அடிக்கடி எங்கம்மாவை செஞ்சு தரச் சொல்லி சாப்பிடறதுண்டு. எளிமையான செய்முறை அட்டாசம்ங்கோ...

  பதிலளிநீக்கு
 4. அநியாயமா இருக்கே! கேட்டது நான். ஆனால் எனக்கே தெரியாமல் போஸ்டா? இந்த உப்புமாவோட ஒரு கதையே இருக்கு. ஆனால் சொல்ல மாட்டேனே!

  பதிலளிநீக்கு
 5. குறிப்பு அருமை. நீங்கள் அதைத் தருகிற விதம் அதனினும் அருமை:).

  நன்றி.

  பதிலளிநீக்கு
 6. இது மோர்களி/கூழ் இல்லையோ? மிகவும் பிடித்த டிபன்,....அடிக்கடிச் செய்து சாப்பிடுவதுண்டு....

  அரிசி உப்புமா என்றவுடன் உடைத்த அரிசியில் செய்வார்களே அது என்று நினைத்துவிட்டோம்....கீதா

  பதிலளிநீக்கு
 7. இதையே புளி உப்புமா என்று திருனெல்வேலி பக்கங்களில் செய்வதுண்டு எப்படி என்றால் புளித் தண்ணீரில் கலந்து வைத்து (ரொம்பத் தண்ணியா இருக்கக் கூடாது கலவை) மோர் மிளகாய்...மற்றது எல்லாம் அப்படியே எண்ணையில் போட்டு கிட்டத்தட்ட பருப்பு உசிலி செய்வது போல உதிர்க்க வேண்டும். சிறு சிறு உருண்டைகளாக சற்று மொறு மொறு என்று உள்ளே சாஃப்டாக, மோர்மிளகாய் டேஸ்டுடன், புளிப்பும் காரமும் அருமையாக இருக்கும்...சாப்பிட்டுருக்கின்றீர்களா?

  பதிலளிநீக்கு
 8. இதை எங்க வீட்டில் மோர்க்களி என்பார்கள்! கொஞ்சம் மோரோ தண்ணீரோ அதிகம் ஆகிவிட்டால் வாயில் ஒட்டிக்கொள்ளும். சிலசமயம் கொஞ்சம் கறுகலுடன் சுவையாக இருக்கும்! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. இது மோர்க்களியும் இல்லாத,புளிமாவும் இல்லாத ஒரு பதார்த்தமாக இருக்கிறதே!

  பதிலளிநீக்கு
 10. அட! மோர்களிக்கு அரிசி மாவு உப்புமா என்று பெயரா? நான் கொஞ்சம் அடி காந்தட்டும் என்று விட்டுவிடுவேன். சுடச்சுட சாப்பிடுவதைவிட அடுத்தநாள் ரொம்ப நன்றாக இருக்கும். அரிசிமாவிற்கு பதில் ராகி மாவு போட்டுக் கூட கிளறுவேன். அதுவும் நன்றாக இருக்கும்.

  புளி உப்புமாவும் எங்கள் அம்மா செய்வாள்.

  பதிலளிநீக்கு
 11. துளசிதரன், இந்தச் சுட்டியில் பார்க்கவும். சும்மா ஒரு விளம்பரந்தேன்! :)

  http://geetha-sambasivam.blogspot.in/2010/04/blog-post.html வெங்காயம் சேர்த்த புளி உப்புமா

  http://geetha-sambasivam.blogspot.in/2010/04/blog-post_21.html அரைச்சுச் செய்த புளி உப்புமா

  இதையே பச்சரிசி மாவில் மோர் விட்டுக் கரைத்துக் கொண்டு மோர் மிளகாய், பமிளகாய், இஞ்சி, கருகப்பிலை, கடுகு, உபருப்பு தாளித்து நல்லெண்ணெயில் அல்வா பதத்துக்குக் கிண்டினால் மோர்க்கூழ்.

  பதிலளிநீக்கு
 12. // சிறிது நேரம் கழித்து, ஒரு தோசைத் திருப்பியை வைத்துக்கொண்டு, மாவுக் கலவையை வெட்டி வெட்டி ஓசைப் படுத்தவும். //

  வீட்ல சம்சாரத்தோட சண்டை வந்து, வீராப்பா நைட் டின்னர தியாகம் செய்யற நெலமை வந்தா... எல்லாரும் தூங்கனதுக்கப்புறம் கிச்சன் பக்கம் போயி (செஞ்சு சாப்புடுறதுக்கு) இந்த 'உப்மா' கிண்டினா (ஓசையினால்) மாட்டிப்பேனே! அடாடா என்ன பயன் இதுனால ?

  பதிலளிநீக்கு
 13. சகோதரி கீதா சாம்பசிவம்....கண்டிப்பாகப் பார்க்கின்றேன்.....கீதா.....

  பதிலளிநீக்கு
 14. எத்தனை ரசனையுடன் குறிப்பு!
  நான் செய்தது இல்லை. செய்துப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. வாவ் ஜொள்ஸ் :) ஆனா இது இப்பிடி மொறு மொறுன்னு ஆக நேரம் ஆகாது.. ?

  பதிலளிநீக்கு
 16. ஆமாம்..யாருமே சொல்லலையே எப்படி உப்புமா மஞ்சள் 'நிறத்துல ரவா கிச்சடி மாதிரி வந்ததுன்னு...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!