புதன், 15 ஜூன், 2011

என்ன பாட்டுப் பாட....

                               
அரசாணிக்கால்.....



சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். முதல் நாள் வரவேற்பில் இசைக் கச்சேரி. 'இது மாதிரி நிகழ்ச்சிகளில் இந்த அலறல்கள் இது எதற்கோ' என்று பாடத் தோன்றும்.நீண்ட நாள் கழித்து நிறைய உறவினர்களை, நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் காது கிழியும் அளவு பாட்டுப் பாடி பேசுவது காதில் விழாத அளவு செய்வார்கள்.அருகில் இருப்பவர்களோடு உரத்த குரலில் அலறி அலறி பேசிக் கொண்டிருப்போம். திடீரென பாடல் நிற்கும். நாம் அலறுவது நமக்கே விநோதமாக இருக்கும். அடுத்த முறை அலற முடியாத வண்ணம் தொண்டையும் கட்டி இருக்கும். அப்போது பார்த்து வீட்டு பெரியவர்கள் யாராவது வந்து ஏதாவது கேள்வி கேட்பார்கள்! அடுத்த அலறல் ஸாரி பாடல் தொடங்கி இருக்கும். சரி, நன்றாகவாவது பாடுகிறார்களா என்றால் நூற்றுக்கு எழுபது சதவிகிதம் சுமார் ரகம்தான்.

மேடையில் அவ்வப்போது பாடும் நண்பர் ஒருவர் என்னுடன் ஒரு திருமண வரவேற்புக்கு வந்திருந்தார். இப்போது சமீப காலமாக அவர் பாடுவதில்லை. மேடையில் பாடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் இவர் பழைய தோஸ்த் போலும். பரஸ்பர விசாரிப்புகளுக்கு பின் ஒரு பாடல் இவரைப் பாட அழைக்க, நண்பர் ஆர்வத்துடன் மேடை ஏறி 'பாடும்போது நான் தென்றல் காற்று' என்று கானமிசைத்து பூரிப்புடன் இறங்கினார். அவர் சொல்லும்போது மேடையில் அவர்கள் வைத்திருக்கும் ஒருவகை இசைக் கருவியில் பாடலின் பின்னணி இசைகள் முன்னரே Feed செய்யப் பட்டிருக்கும் என்றார். அப்புறம் சில சமயம் அப்படியும் உண்டு என்று அவரே திருத்தமும் கொண்டு வந்தார். எவ்வளவு உண்மையோ...

வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருவோம்....இதில் திருமண நிகழ்ச்சி சம்பந்தப் பட்ட பாடல்களை தேர்ந்தெடுத்து வைத்திருப்பார்கள். அந்தந்த தருணங்களில் அதைப் பெருமையாக (!) பாடத் தொடங்குவார்கள். 'மணமகளே மணமகளே வா வா', 'வாராய் என் தோழி வாராயோ' போன்ற பாடல்கள் இந்த வகைக்கு பிரபலம். இப்போதெல்லாம் 'புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே' பாடல் பாடுவதில்லை என்று நினைக்கிறேன். பாடல் மட்டுமல்ல அதன் கருத்துகளும் அவுட் டேட்டட் ஆக கருதக் கூடிய பாடலாக இருக்கலாம்!

நான் சென்ற நிகழ்ச்சியில் வரவேற்பில் பாடிய பாடல் ஒன்று பற்றியும் திருமணத்தின் போது நாதஸ்வரத்த்தில் வந்த பாடல் பற்றியும் சிந்தனையில் தோன்றிய முத்துகளை இங்கு சிதறடிக்கலாம் என்று எண்ணம்! முதலாவதாக வரவேற்பில் பாடிய பாடல். 'கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான்' பாடல்.

படக் காட்ச்சியின் படியும் வார்த்தை அமைப்பின் படியும் திருமண நாள் குறித்து பாடும் பாடல்தான். சந்தேகமில்லை. அந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள். அல்லது காட்சி அமைப்பாவது - ஏன் பாடுகிறார் - என்பதாவது தெரிந்துதான் இருக்கும். கிளைமேக்சில் சாகப் போகிறாள் என்று முடிவு தெரிந்து விட்ட நோயைக் கொண்ட கதாநாயகியைக் குறித்து பாடப் படும், லேசான சோகம் இழையோடும் சரணங்களைக் கொண்ட அந்தப் பாடலை வெறும் பல்லவி வரிகளுக்காகவும், எம் எஸ் வியின் கவர்ச்சியான ஆரம்ப இசைக்காகவும் மட்டும் திருமண வரவேற்பில் பாடுவது சரியா...?

இரண்டாவது பாடல் பற்றி...

பாடலில் தவறில்லை. நடுவில் வரும் வரிகளைப் பிய்த்து பாடும் போது வரும் தாக்கம் பற்றி. நல்ல வேளை நாயனம்!

திருமண நாள். நாயனக்காரர் பல பாடல்கள் வாசித்தபின் 'அலைபாயுதே' வை வாசிக்க எடுத்தார். இந்தப் பாடல்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது நாயனக் காரர் மேடை மேல் கண்ணாக இருக்க வேண்டும். அங்கிருந்து யாராவது ஒருவர் திடீரென ஒரு விரலை நீட்டி 'கொன்னுடுவேன்' பாணியில் ஆட்ட ஆரம்பிக்க, இரண்டு மூன்று விரல்கள் அந்த ஆட்டத்தில் அணி வகுக்க, நாயனக்காரர் திடீரென நாயன முனையில் பாம்பைக் கண்டது போல வீறிட வேண்டும். கெட்டி மேளம்! மண மகனுக்கும் மண மகளுக்கும் கையில் காப்பு கட்டும் நேரம் இந்தப் பாடல்.என் உதடுகள் நாயன வாசிப்புடன் சேர்ந்து மனதுக்குள் வரிகளை முணுமுணுத்துக் கொண்டிருந்த நேரம்! (பின்னே...தெரிந்த பாடலாச்சே...) மணமகன் கையில் காப்பு கட்டி ஐயர் விரலை ஆட்ட கெட்டி மேளம்....நாயனக் காரர் நிறுத்தி நிதானமாக அந்த இடத்தில் வாசித்த இடம் 'இது முறையா...'....! அடுத்து அவர் சுதாரித்து பிர்கா இழுத்து தாளம் சரி செய்து அடுத்த வரி வருவதற்குள் மணமகள் கையில் மணமகன் கட்டும் காப்பு....மறுபடி விரலாட்டம். மறுபடி கெட்டிமேள வீறிடல். இப்போது ஸ்லோ மோஷனில் வந்த வரிகள் 'இது தகுமா..'...! மணமக்கள் இருவரும் காப்பு கட்டி எழுந்து நிற்கும்போது தருமம்தானா நியாம்தானா என்று கேட்டு -- வாசித்து முடித்தார்! இது சுவாரஸ்யத்துக்காக எழுதியது. இப்படிப் பார்த்தால் நிறைய பாடல்கள் வாசிக்க முடியாமல் போகலாம்!   
    
அப்புறம் ஒரு விஷயம்...

இந்த மாதிரி திருமண நிகழ்ச்சி முழுதும் அதிகாரபூர்வ புகைப்படக் காரர்களும், உறவினர்களும் மேடையில் நின்று விட்டால் திருமண நிகழ்ச்சியை ஹாலில் அமர்ந்திருப்பவர்கள் எப்படி பார்ப்பார்கள்? எல்கே கூட முன்பு ஒரு பதிவில் இதையே சொல்லியிருந்த ஞாபகம் வருகிறது. முன்பு கேரளத் திருமணங்கள் பதிவில் போட்ட மேடை சரியாக இருக்கலாம்!  
                    

15 கருத்துகள்:

  1. ரொம்ப ரசித்துப் படித்தேன். மெல்லிசைங்கற பேர்ல காத்தடிக்கிது காத்தடிக்கிது அப்படீங்கற பாட்டெல்லாம் பாடி வெறுப்பேத்திய காலம் போய் இப்போ பொருள் இருக்கற பாட்டெல்லாம் பாடுறாங்களே.. அதே பெரிய பாராட்ட வேண்டிய விஷயம் தான். இருந்தாலும் ஆர்கெஸ்ட்ரா சவுண்டை குறைச்சுண்டா தேவலை. நீங்க சொல்றாப்புல சொந்த பந்தம் கிட்டே பேசவே முடியாது! உங்கள் கெட்டிமேள விரல் வர்ணனை படித்து பெருசாக சிரிச்சுட்டேன். :))))))

    பதிலளிநீக்கு
  2. கோச்சுக்காதீங்க எங்கள், டைம் இல்லே.. எந்த ப்ளாக் பக்கமும் போறதில்லை..

    பதிலளிநீக்கு
  3. கல்யாணத்துக்கு வர்றவங்க இவ்வளவு யோசிப்பாங்களா என்ன. வந்தோமா, சாப்பிட்டோமா, கிளம்பினோமான்னுல இருப்பாங்க.

    பதிலளிநீக்கு
  4. // 'இது தகுமா..'...! மணமக்கள் இருவரும் காப்பு கட்டி எழுந்து நிற்கும்போது தருமம்தானா நியாம்தானா என்று கேட்டு -- வாசித்து முடித்தார்! //

    ROFL..

    பதிலளிநீக்கு
  5. Voted 5 to 6 in INDLI

    இது நல்ல அருமையான நகைச்சுவையான பதிவு.

    //மணமகன் கையில் காப்பு கட்டி ஐயர் விரலை ஆட்ட கெட்டி மேளம்....நாயனக் காரர் நிறுத்தி நிதானமாக அந்த இடத்தில் வாசித்த இடம் 'இது முறையா...'....! அடுத்து அவர் சுதாரித்து பிர்கா இழுத்து தாளம் சரி செய்து அடுத்த வரி வருவதற்குள் மணமகள் கையில் மணமகன் கட்டும் காப்பு....மறுபடி விரலாட்டம். மறுபடி கெட்டிமேள வீறிடல். இப்போது ஸ்லோ மோஷனில் வந்த வரிகள் 'இது தகுமா..'...! மணமக்கள் இருவரும் காப்பு கட்டி எழுந்து நிற்கும்போது தருமம்தானா நியாம்தானா என்று கேட்டு -- வாசித்து முடித்தார்! //

    மிகவும் அருமையான, சுவார்ஸ்யமான எடுத்துக்காட்டு.

    மிகவும் ரஸித்துப்படித்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. கச்சேரி விஷயத்தை கச்சிதமா சொல்லிட்டீங்க. உண்மைதான்:)!

    நேரில் சென்றும், முக்கிய சடங்குகளை ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் டிவிப் பொட்டிகளில் பார்த்து, வரிசையில் போய் மணமக்களை வாழ்த்தி வருவதுதான் பெரும்பாலும் நடக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. நல்ல நேர்முக வர்ணனை...

    வீறிடல்...பீறிட்ட சிரிப்பை வரவழைத்தது.. கெட்டி மேள உத்தரவு விரலசைக்கும் பொழுது நொடியில் கெட்டி மேளம் வரலைன்னா கோவுச்சக்கிற சம்பந்திகளும் உண்டு... சில சமயத்துல தட்டச் சொல்ல ஒருத்தருதான் உத்தரவு கொடுப்பார் ..மூடு வந்து வீறிடல் கட்டுக்கடங்காமல் போகும் பொழுது கையமர்த்தி நிறுத்த பத்து பேராவது வேண்டும்....

    பதிலளிநீக்கு
  8. ம்ம்.. இந்த மாதிரி கல்யாணங்களுக்குப் போய் வருஷங்களாச்சு.. ஆனா, இந்த மெல்லிசை நிஜமாவே ஒரு எரிச்சல்தான்.. பாட்டைக்கூட ரசிக்க முடியாத அளவுக்கு கூச்சலா இசை இருக்கும்!!

    கெட்டிமேளம் - விரலசைத்து மிரட்டல்: முழுசாப் புரியலை. ஓரளவு ஊகிச்சுருக்கேன்.

    பதிலளிநீக்கு
  9. சோதனை மேல் சோதனை, போனால் போகட்டும் போடா என்று முத்திரை குத்திய சோக பாடல்களை பாடாத வரை சரிதான்.
    கெட்டி மேளம், கெட்டி மேளம் என்றவுடன் நாயனக்காரர்கள் எந்த பாடலை பாடிக் கொண்டிருந்தாலும் அதை அந்த நொடியே நிறுத்தி விட்டு கெட்டி மேளம் வாசிப்பது எல்லா இடங்களிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கு உள்ள ஒரு கோவில் கும்பாபிஷேகம் அன்று நாதஸ்வரத்தில் 'சம்போ, சிவா சம்போ ஸ்வயம்போ' வெகு அற்புதமாக வாசித்து கொண்டிருந்தார்கள். மனம் லயித்து கேட்டுக் கொண்டிருந்தபோது கற்பூர ஆரத்திக்காக கெட்டி மேளம், கெட்டி மேளம் என்ற உடன் பாதியில் பாடல் தடைபட்டு விட்டது. ஆனால் ஆரத்தி முடிந்தவுடன் அவர்களும் அழகாய் விட்ட இடத்தில் இருந்து தொடங்கி விட்டார்கள். நாதஸ்வரம் வாசிப்பவர்கள் எல்லோருக்குமே இது பழகி போய் விட்டது என்று நினைக்கிறேன் நம் தி. மோ. சண்முக சுந்தரத்தை தவிர. :)

    பதிலளிநீக்கு
  10. மீனாக்ஷி - நீங்க சொல்வது சரிதான். ஆனால் - தி மோ ச சு கேஸ் மட்டும் கொஞ்சம் வேறு மாதிரி. அவர் நாதஸ்வர வாசிப்பில், இசை ஞானத்தில், ஜனரஞ்சக இசை அளிப்பதில் எல்லாவற்றிலும் சூப்பர் கிங். ஆனால் - தன இசையை ரசிகர்கள் ரசிக்கவிடாமல் வேட்டு வாணம் வேடிக்கை என்று தொந்தரவுகள் வரும்பொழுது மட்டும்தான் தொடர்ந்து வாசிக்க மாட்டேன் என்று அடம்பிடித்து, கோபப்படும் யுவராஜ் சிங்!

    பதிலளிநீக்கு
  11. ஹா ஹா. கல்யாணத்தில் நாதஸ்வரம் சில நேரங்களில் ரிசப்ஷன் லைட் மியூசிக்கைவிட சிறப்பாக இருக்கிறது. லைட் மியூசிக் என்று ஏந்தான் சொல்கிறார்களோ, காதைக் கிழிக்கும்படியில்ல சத்தம் போடறாங்க.

    பதிலளிநீக்கு
  12. கல்யாணவீடுகளுக்குப் போகும்போது இவ்வளவு அவதானமாகக் கவனிச்சுப் போட்டோவும் எடுத்தால் பிறகு சாப்பாடு தரமாட்டார்கள்.கவனம் எங்கள் புளொக்.

    நான் ஊரின் சிறுவயதில் கேட்டதும் அம்மா அழுததும்.தாலி கட்டி அறுகரிசி போடும் சமயம்
    ”வாய்க்கரிசி போடுகினம்” என்று சொன்னது !

    பதிலளிநீக்கு
  13. ஒரு முறை கல்யாண ரிசப்சனில் 'போனால் போகட்டும் போடா' பாட்டும் கேட்டிருக்கிறேன். பாதிப் பாட்டு பாடினார்கள். ஏனோ அசம்பாவிதமாகத் தோன்றவில்லை. in fact, it was hilarious. பெண் வீட்டுக் காரர்களும் சேர்ந்து சிரித்து ரசித்தார்கள்.

    பதிலளிநீக்கு
  14. //இப்போதெல்லாம் 'புருஷன் வீட்டில்
    //புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே' பாடல் பாடுவதில்லை என்று நினைக்கிறேன். பாடல் மட்டுமல்ல அதன் கருத்துகளும் அவுட் டேட்டட் ஆக கருதக் கூடிய பாடலாக இருக்கலாம்!//

    பாடுவதில்லை என்பதை சமீபத்தில் ஒரு திருமண வரவேற்பில் நேரிலேயே பார்த்தேன். இந்தப்பாட்டை பாட விருப்பம் தெரிவித்து சீட்டில் பாடலின் முதல் வரியை எழுதிக் கொடுத்தவர், மணமகனின் தந்தை என்பது வேறு விசேஷம். இதோ, அதோ என்று போக்குக் காட்டி, கடைசி வரை அந்தப் பாடலைப் பாடாமலேயே இசைக்குழுவினர் ஏமாற்றிவிட்டனர். மணமகனின் தந்தை என் நெருங்கிய நண்பர் தான். என்னிடம் வந்து அவர் குறைப்பட்டுக் கொண்டபொழுது, "விட்டுத்தள்ளுங்கள்.. அந்தப் பாடலைப் பாடாவிட்டாலும், அந்தப் பாட்டின் 'தேவதை' மாதிரி உங்கள் மருமகள் அடக்கவொடுக்கமாய் இருப்பாள் பாருங்கள்' என்று சமாதானப்படுத்தினேன். மணமகனின் தந்தை 'தான் இன்னார்' என்று சொல்லி எழுதிக் கொடுத்தும் அந்தப் பாட்டைப் பாடாததை தனக்கு ஏற்பட்ட ஒரு அவமானமாகவே கருதியிருப்பார் போலும். இரவு விருந்தில் என் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தார். சரியாகச் சாப்பிடவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

    விருந்து முடிந்து வெளியே வந்தால், இசைக்குழுவினர் சாப்பிட்டு விட்டு கிளம்புவதற்குத் தயாரான ஏற்பாட்டில் இருந்தனர். அவர்களிடமே கேட்டுவிட்டால் போச்சு என்று கேட்டே விட்டேன்."நாங்கள் என்ன சார் செய்யறது.. இந்த இந்தப் பாட்டு தான் பாடணும்னு புக் பண்ணும் பொழுதே மணப்பெண் வீட்டில் தீர்மானமாகச் சொல்லி, அந்தப் பாட்டுகளையெல்லாம் குறித்தும் கொடுத்து விட்டார்கள். இந்த மாதிரி கர்நாடகப் பாட்டையெல்லாம் பாடக் கூடாதென்று கண்டிஷன் வேறே!" என்றார்கள்.

    மணமகள் வீட்டிலேயே இதெற்கெல்லாம் ஏற்பாடு பண்ணுவதால், பல சமயங்களில் மணமகன் வீட்டார் 'ஐயோ,பாவம்' என்று ஆகிவிடுவது உண்மைதான்.
    இன்னொரு கல்யாணத்தில், மணமகன் வீட்டில் தனியாக வீடியோகிராபர் ஏற்பாடு செய்யாததினால், மணமகள் வீட்டாரை மட்டுமே கவரப் செய்து அத்தனை படத்தையும் அவர் எடுத்துத் தள்ளி விட்டார்! அந்த வீட்டு குஞ்சு குளுவானிலிருந்து யாரையும் மிஸ் பண்ணாமல் போட்டோ எடுக்க வேண்டுமென்று கறாரான அறிவுறுத்தலின் விளைவு!.. ஆல்பம் போட்டுக் கொடுத்த பொழுது எங்களுக்கு வேணடவே வேண்டாம் என்று மணமகன் வீட்டில் வாங்கிக் கொள்ளவே இல்லையாம்!

    டெயில் பீஸ்: பொதுவாக இதெல்லாம் பற்றி இப்பொழுதெல்லாம் பெண் வீட்டார் அலட்டிக் கொள்வதே இல்லை என்பது தான் விசேஷம்! வருங்காலத்தின் வயிற்றில் இருப்பதெல்லாம் தெரிந்தவர்கள் போலத் தெரிகிறார்கள்!

    பதிலளிநீக்கு
  15. எஸ் ஏற்கனவே நான் சொன்னேன் . அதுல சொன்னதுக்கு முக்கியக் காரணம் , தாலி கட்ட வேண்டிய மாப்பிளையையே இப்படி நில்லுங்க அப்படி நில்லுங்கன்னு சொன்னது..

    பொதுவா , கல்யாணத்தில் கச்சேரி வைப்பதற்கு எதிரானவன் நாம். காரணம், பழைய நட்புகளிடம் பேசுவோம்/பல நாள் கழித்து உறவினர்களிடம் பேச வேண்டி இருக்கும்.

    சில முறை , வேறு சிலக் கல்யாணங்களும் அங்கே பேசப்படும்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!