புதன், 29 ஜூன், 2011

"செல்வப் பெருமாளும், கணேஷும்" (கே 09)


      
அத்தியாயம் 09: "செல்வப் பெருமாளும், கணேஷும்"

முன்பு வெளியான  பதிவுகளை, மக்கள் அநேகமாக மறந்திருப்பார்கள். பதிவாசிரியர், இந்தத் தாமதத்தை, ஏதோ ஒரு திட்டம் போட்டுத் தான் செய்திருக்கிறார் என்று விஷயம் அறியாத வட்டாரங்கள் கிசு கிசுப்பதில் உண்மை இருக்கிறது என்று மற்ற ஆசிரியர்கள் நினைப்பதில், நியாயம் இருக்கிறது என்று ....  

-----------------

முதல் எட்டு + இரண்டு பதிவுகளில் என்ன நடந்தது என்று விலாவாரியாகத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், இங்கே இடது பக்கத்தில் உள்ள சுட்டிகள் மூலம் அங்கே போய்ப் படிக்கவும். மற்றவர்களுக்கு, முன்பு நடந்தது என்ன என்று ஒவ்வொரு பதிவையும் ஒரு வரியில் சொல்லிவிடுகிறோம். 

'தீ' என்பவன் ஒரு தீவிரவாதி. கா என்பவரின் விற்பனைக்கு வந்த பழைய காரை, செல்வப் பெருமாள் என்பவரும், கணேஷ் என்பவரும், கா எதிர்பார்த்ததை விட அதிக விலை கொடுத்து காரை ஓட்டிச் செல்கிறார்கள். அந்தக் கார் அடையாளங்கள் மாற்றப் பட்டு, ஊருக்கு வெளியே நிறுத்தப் படுகிறது. தீ க்கு காரின் கீ, குரியர் மூலம் அனுப்பப் படுகிறது. தீ அந்தக் காரில் குண்டு வைக்கிறார். ஆனால், துரதிருஷ்ட வசமாக குண்டு வெடிப்பில், அவரே இறந்துவிடுகிறார். துப்பறியும் காசு சோபனா மற்றும் எலெக்ட்ரானிக் சாமியார் இருவரின் உதவியை நாடுகிறார் இன்ஸ்பெக்டர் ரங்கன். கா சோ, எ சா இருவரும் திட்டம் தீட்டி, காரின் சொந்தக்காரர் 'கா'வைக் கண்டு பிடித்து விட்டனர். இனி காரை ஓட்டிச் சென்ற இருவரைக் கண்டுபிடிக்க அடுத்த திட்டம் தீட்டுகின்றனர்.  

================   
   
கா சோ: "கார்த்திக் சார்! நீங்க அப்புறம் உங்க காரை ஓட்டிச் சென்றவர்களுடன் எவ்வளவு தடவைகள் பேசினீர்கள்?"

கார்: "ரொம்ப தடவை பேசிட்டேங்க. முதல் ஒன்று இரண்டு தடவைகள் சாதாரணமாக மறுத்துப் பேசியவர்கள், பிறகு நான் ஃபோன் பண்ணினாலே கன்னா பின்னா என்று திட்டுகிறார்கள்,"

எ சா: "சரி அவங்களுடைய அலை பேசி எண்களைக் கொடுங்க. உங்க கார் விற்பனை விளம்பரம் வந்த அந்த இ வி (இலவச விளம்பரங்கள் = free ads) பேப்பரையும் கொடுங்க. நான் உங்களுக்கு இன்று மாலைக்குள் "call now" என்று குறுஞ்செய்தி ஒன்று அனுப்புவேன், அப்போ நீங்க உடனே செல்வப் பெருமாள் அலைபேசி எண்ணுக்கு ஃபோன் செய்யுங்கள். ஓ கே?"

கார்: "ஓ கே பை."  

++++++++++++++++++++++++   
   
கார்த்திக் வீட்டிலிருந்து வெளியே வந்த சோபனா,  அருகில்  இருந்த  எஸ் டி டி  பூத்திலிருந்து, செல்வப் பெருமாளின் எண்ணை அழைத்தார். எ சா அருகில் நின்று, சோபனா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

கா சோ : "ஹலோ - பெருமாளா? அண்ணன் இருக்காரா?"

மறு முனை குரல் : "ஹலோ? யாரு? ...நீங்க? நீனாவா?"

கா சோ: "அட! குரலை வெச்சி கரீக்டா கண்டு பிடிச்சுட்டியே பெருமாளு. ஆமாம் நீனா தான் பேசுறேன். அண்ணன் எங்கே?"

ம மு கு: "என்னங்க நீனா ... நேத்திக்கி அண்ணன் உங்க கூடத்தானே ப்ரொடியூசர பாக்க கெளம்பி வந்தாரு?"

கா சோ: "அட என்ன பெருமாளு நீயி! அது நேத்திக்கி. இன்னைக்கு அவரு அந்தப் பக்கம் வந்தாரா என்று தெரிஞ்சிக்கத்தான். .."

ம மு கு : இல்லைங்க. இன்னிக்கு இதுவரை அண்ணன் இந்தப் பக்கம் வரலை. கொஞ்சம் இருங்க .. கணேஷு பய என்ன சொல்றான்னா , அண்ணன் ஊட்டி போயிருக்கார் ரெண்டு நாள்ல வந்திடுவாருன்னு ... ஒங்க கிட்ட சொல்லலியா?

கா சோ: "ஓ ஆமாம் இப்ப ஞாபகம் வருது. அடுத்த வாரம்தான் ஊட்டி போறாருன்னு நெனச்சேன். சரி, நான் கால் பண்ணினது, ஒன்கிட்ட பேசறத்துக்குத்தான் பெருமாளு. அண்ணன் மேட்டர் ஒண்ணு போலீசு கையில மாட்டிடுச்சு. இதை எல்லாம் ஃபோன்ல சொல்ல முடியாது. நேர்ல தான் சொல்லமுடியும். எனக்குத் தெரிஞ்ச பெரிய எடத்துப் பொண்ணு ஒண்ணு - சோபனான்னு பேரு. அதுதான் எனக்கு டீடெயிலு சொல்லிச்சு. அது ஒன்ன வந்து பார்த்து என்ன விவரம்னு சொல்லும். அதை நீ அண்ணனை பார்க்கும்பொழுது, அண்ணன் கையில பக்குவமா சொல்லி, பிரச்னையிலிருந்து காப்பாத்திக்க அவரு என்ன செய்யணுமோ அதை செய்து கொள்ளச் சொல்லு. நீ இப்போ எங்கே இருக்குற? விலாசம் சொல்லு."

ம மு கு விலாசம் சொல்ல,  அதை எழுதிக் கொள்கிறார் சோபனா.

அரை மணி நேரத்திற்குள், அந்த விலாசத்திற்கு காரை ஓட்டிச் சென்றார், எலெக்ட்ரானிக் சாமியார்.   

################################   
       
அந்த வீடு = பழைய வீடு என்றோ புதிய வீடு என்றோ சொல்லமுடியாதபடி இருந்தது, வெளித் தோற்றம். காலிங் பெல் பொத்தானை அமுக்கிவிட்டு, காத்திருந்தனர் எ சா & கா சோ.

லுங்கி, பனியன் அணிந்த, ஒல்லியான உருவம் ஒன்று வந்து கதவைத் திறந்தது. "யார் நீங்க? என்ன வேணும்?"

கா சோ: "இங்கே செல்வப் பெருமாள், கணேசுன்னு ... ரெண்டு பேரைப் பார்க்க வேண்டும். நீனா அனுப்பினாங்க."
    

      
ஒல்லி உருவம் உள்ளே ரம்மி ஆடிக்கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து, "டேய் பெருமாளு, கணேஷு - ஒங்களைப் பார்க்க வந்திருக்காங்கடா! நீனா அனுப்பினாங்ககலாம் ..."

பெருமாளும் கணேஷும் ஆடிக் கொண்டிருந்த ஆட்டத்தை ஸ்கூட் விட்டுவிட்டு வந்தார்கள். எ சா - கார்த்திக்குக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். 'call now'

     
ஆடிக் கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவன், 'டேய் பாப்பா ஷோக்கா கீதுடா. படத்துல எதுனாச்சும் நடிக்கிற ஐடியா கீதான்னு வெசாரிடா ... ' என்றான். அவனுக்குப் பக்கத்தில் இருந்த இன்னொருவன் அவனைத் தலையில் தட்டி, 'பொத்திக்க' என்றான்.

அந்த நேரத்தில் பெருமாளின் அலை பேசிக்கு அழைப்பு வந்தது. எடுத்து யாரென்று பார்த்த பெருமாள் "டேய் கஸ்மாலம் - இன்னொரு தபா கால் பண்ணினேனா - நேர்ல வந்து ஓன் கையக் கால ஒடச்சுடுவேன்." என்று சொல்லி, சோபனாவைப் பார்த்து "மன்னிச்சுக்குங்க" என்றான்.

"நீங்க யாருடைய கையைக் காலையோ ஒடிக்கிறதுக்கு, நான் ஏன் உங்களை மன்னிக்கணும்?அது யாரு? கடன் கொடுத்தவரா?"

"ஐயோ இல்லீங்க - கடன் கொடுத்தவரு திருப்பி கேட்கறது தப்பு இல்லீங்க. இவன் யாரோ பேமானி. நாங்க அவன் கிட்ட காரும் வாங்கலே - சோறும் வாங்கலே - எப்போ பார்த்தாலும் ஃபோன் பண்ணி - காரு மொதலாளிக்கிப் பிடிச்சிருந்ததா? வாங்கிக்கிறீங்களா இல்லையா? முடிவு சொல்லுங்க - அப்பிடீன்னு கேட்டு பேஜாரு பண்ணுறான். எனக்கும், கணேசுக்கும் மாறி மாறி ஃபோன் போட்டு டார்ச்சர் பண்ணுறான்."

பெருமாள், கணேசு - இருவருமே ஒல்லியான உருவம் கொண்டவர்களாக இருந்தனர். கார்த்திக், காரை ஓட்டிச் சென்ற இருவருமே பருமனான உடல் வாகு கொண்டவர்கள் என்று சொன்னது ஞாபகம் வந்தது.

"எப்போதிலிருந்து அவர் இந்த மாதிரி தொந்தரவு தருகிறார்?"

"ரெண்டு வாரங்களுக்கு முன்பு ஃப்ரீ ஆட்ஸ் பேப்பரில், 'ஆதி மனிதன்' படப் பிடிப்பிற்காக, அந்தக் கால ஓவியங்கள், செட்டிநாட்டு மர வேலைப்பாடுகள், சிற்ப வேலைப்பாடுகள் - இதெல்லாம் இருந்தால் விலை கொடுத்தோ அல்லது வாடகைக்கோ வாங்கிக் கொள்வோம் என்று விளம்பரம் கொடுத்திருந்தோம். எங்கள் இரண்டு பேர் பெயர்களையும், செல் நம்பர்களையும் கொடுத்திருந்தோம். அந்த விளம்பரம் வந்த இரண்டு நாளிலிருந்து இந்த டார்ச்சர் ஆரம்பிச்சிடிச்சு."

எ சா, தான் கார்த்திக்கிடம் வாங்கி வந்திருந்த இ வி பேப்பரைக் காட்டி, "இதுதானா அந்தப் பேப்பர்? இதுல எங்கே இருக்கு உங்க விளம்பரம்?"

"ஆங் - இதுதானுங்க அந்த பேப்பர். நாலாம் பக்கத்தில் இதோ இங்கே வந்திருக்கு பாருங்க."

எ சாமியார், கா சோ விடம், போகலாம் என்று சைகை காட்டினார்.

கா சோ - ஒரு ஓட்டப் பட்ட கவரை - பெருமாளிடம் கொடுத்து, "இதுல நீனா சொன்ன விஷயம் எல்லாம் இருக்கு. அண்ணன் வந்தா இதை அவரிடம் கொடுத்து, படிச்சுப் பாத்து, என்ன செய்யணுமோ அதை செஞ்சி காப்பாத்திக்கணும்னு சொல்லிடுங்க. நாங்க வர்றோம்."

பெருமாள்: "மேடம் நீங்க சினிமா ஃபீல்டுல நுழையறதா இருக்கீங்களா? சினிமாவுக்கு வந்தீங்கன்னா ஒரே படத்துல உச்சாணிக்குப் போயிடுவீங்க. இஷ்டம்னா சொல்லுங்க."

கா சோ: "நான் சினிமாவில் நடித்தால் எங்க அப்பாவுக்குப் பிடிக்காது."

பெரு: "அப்படியா? யாரு அவரு?"

கா சோ: "கவர்னர்"

உள்ளே விளையாடிக் கொண்டிருந்தவர்கள், பீடி புகைத்துக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் திடுக்கிட்டு எழுந்து நின்றார்கள்.

"யாருங்க - பர்னாலா? ..."

"பர்னாலும் இல்லை, சைபாலும் இல்லை - இவரு ஒரிசா கவர்னர்."

"உங்க அப்பா தமிழரா?"

"ஆமாம்"

"ஒரிசா கவர்னருக்கு தமிழ் தெரியுமா?"

"அது அவரைத்தான் கேட்கணும்" என்று சொன்னவாறு நடந்த சோபனாவை வியப்புடன் பார்த்தவாறு நின்றிருந்தது அந்த ரம்மிக் கூட்டம்.

(தொடரும்)
         

5 கருத்துகள்:

 1. சுவாரசியமான பதிவு , பெயர்களை சுருங்க சொல்லியிருப்பது இன்னும் கொஞ்சம் ரசனையை அதிகரிக்க செய்கிறது , அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 2. ஹய்யா வெற்றி! வெற்றி!! இந்தக் கதையை யாரோ ஒருத்தர் படிச்சிருக்கார்!

  பதிலளிநீக்கு
 3. எங்கே இருந்தாராங்கே?

  நகைச்சுவைக் கதையா மாறிட்டு வருதே?

  பதிலளிநீக்கு
 4. வெற்றி! - இந்தக் கதையை அப்பாதுரை தொடர்ந்து படித்து வருகிறார்!

  பதிலளிநீக்கு
 5. அப்பாதுரை கேட்டிருக்கற அதே கேள்விதான் நானும் கேக்கறேன். // எங்கே இருந்தாராங்கே?//
  சுவாரசியாமா இருக்கு. தொடருங்கள், தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!