வியாழன், 23 ஜூன், 2011

பிற்பகல்


முக்கியமான மீட்டிங் என்று எம் டி அறைக்கும் என் அறைக்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தேன். நடுவில் என் அறை வாசலில் ஒரு பெரியவரும் ஓர் இளைஞனும் காத்திருப்பதைப் பார்த்தேன். என்ன என்று கேள்வி கேட்கக் கூட நேரம் இல்லை. பி ஏ வை அழைத்து அவ்வப்போது விவரங்கள் சொல்வதும் விவரங்கள் கேட்பதுமாக இருந்த போது அவரே காத்திருப்பவர்களைப் பற்றி சொன்னார். அந்த இளைஞனுக்கு என்னால் ஒரு முக்கியமான காரியம் ஆக வேண்டியிருந்தது. என் கையெழுத்துக்காக காத்திருக்கிறான் என்று தெரிந்தது.
எம் டி ரூம் அல்லாடல், டென்ஷன் குறைந்ததும், அவர்களை உள்ளே வரச் சொன்னேன். என்ன உதவி வேண்டும் என்று கேட்டேன். சொன்னான்.

இந்த மாதிரி உதவிகள் என்னால் தினசரி செய்யப் படுபவை. என் அலுவலக விவகாரம் என்றில்லை. என்னுடைய பல்வேறு அறிமுகங்களைக் கொண்டு என்னால் முடிந்த உதவிகளை யார் எப்போது கேட்டாலும் செய்து வருவது வழக்கம்.
உடன் வந்த பெரியவரை எங்கோ பார்த்த ஞாபகம் லேசாக வந்தது. அவர் என்னைப் பாராட்டி புகழ்ந்து பேசத் தொடங்கினார். உங்களைப் போன்றவர்களால்தான் மழை பொழிகிறது... உண்மையான மனிதர்.... இப்படி அலங்கார வார்த்தைகள்... அவர் பேசுவதை சைகை காட்டி நிறுத்தி விட்டு அவரைப் பற்றி விசாரித்தேன். அரசு அலுவலகம் ஒன்றிலிருந்து ஓய்வு பெற்றதாகச் சொன்னார். எங்கு என்று கேட்டபோது அவ்வாறு சொன்ன ஊர் மற்றும் அலுவலகம் பெயர் கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். என் தந்தை வேலை பார்த்து ஓய்வு பெற்ற அதே இடம். அவர் பெயரைக் கேட்டதும் நினைவு அடுக்குகளில் அதிர்வு ஏற்பட்டது.
ஆச்சர்யம்! இதே போன்ற ஒரு சூழ் நிலையில் இவரை நான் இவர் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறேன். என் தந்தை மீது நல்ல அபிப்ராயம் இல்லாதவர். என் தந்தை மீது இவருக்கு லேசான பகையுணர்ச்சி கூட அப்போது இருந்தது என்று அப்பா சொல்லியிருந்தார். அந்த அலுவலகத்தில் பணி புரியும் பணியாளர்கள் சிலரது பெயர்களில் எல் ஐ சி பாலிசி எடுக்கப் பட்டு அதற்கு சம்பளச் சான்றிதழ் போன்ற விவரங்களுக்கு இவரது கையொப்பம் தேவையாய் இருந்தது.
அப்பா என்னுடன் வந்திருந்தும், இவர்தான் பொறுப்பு என்று அறிந்ததும் அவர் வேறு ஓர் அறையில் அமர்ந்து கொண்டு என்னை மட்டும் கையொப்பம் பெற அனுப்பியிருந்தார். அப்போதைய அவரின் ஸ்டெனோதான் அப்பாவுக்கும் அவர் ஓய்வு பெறும் முன்பு ஸ்டெனோ. அவர் என்னை இன்னார் என்று அறிமுகப் படுத்தி கையொப்பம் இடச் சொல்லி வேண்டுகோள் விடுத்த போது இவர் அந்த பேப்பர்களை கொத்தாகத் தூக்கி பக்கத்து இருக்கையில் போட்டார், பிறகு என்னைப் பார்த்தார்.
"உங்கப்பாவால எவ்வளவு கஷ்டம் தெரியுமா எனக்கு... எனக்கு வேலை தெரியாது என்று என் மேலதிகாரி உங்கப்பாவை வைத்துக் கொண்டே என்னை எவ்வளவு திட்டுவார் தெரியுமா...? என்று தொடங்கி நிதானமாக பேசத் தொடங்கி, கடைசியில், கையொப்பம் போட மாட்டேன் என்று மறுத்தார். ஸ்டெனோ என்னை பரிதாபமாகப் பார்த்தார். நான் கிளம்பவும் விடவில்லை அவர். நெடு நேரம் பேசிய பிறகே விட்டார். ஆனால், கையொப்பமும் இடவில்லை. 'அப்பா செய்ததற்கு நான் என்ன செய்ய, இது என் வருமானம் சம்பந்தப் பட்ட விஷயம்... இதில் வரும் வருமானம் என் வேலையை நிரந்தரமாக்க உதவும்' என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் நிர்த்தாட்சண்யமாக மறுத்த அந்த நாள் இப்போது என் மனதில் நிழலாடியது.
டேபிளில் இருந்த பொருட்களை சீர் செய்த வண்ணம் சிந்தனையில் ஆழ்ந்து விட்ட என்னை, பெரியவரின் குரல் நினைவுக்குக் கொண்டு வந்தது.

"சார்....என்ன சார் அமைதி ஆயிட்டீங்க.... எதாவது தப்பா பேசிட்டேனா..."

"இந்த மாதிரி புகழ்ந்து பேசறது நான் விரும்பாத ஒண்ணு... வேலை ஆக வேண்டிய இடத்துல புகழ்ந்து பேசறதுக்கு என்ன காரணம்னு உங்களுக்கும் தெரியும்.."

அது தம்பி,,,, ஸாரி சார்... தம்பின்னு கூப்பிட்டதுக்கு மன்னிச்சுடுங்க..."

"பரவாயில்லை...உங்கள் ஆபீசிலிருந்துதான் என் அப்பாவும் ஓய்வு பெற்றார். என்னை அடையாளம் தெரியுதா... நாம கூட சந்திச்சிருக்கோம்..."

'தெரியும் சார்... தெரியும் தம்பி... ஞாபகம் இருக்கு.. தியாகராஜன் சொன்னார்..."

"தியாகராஜன்?"

"ஸ்டெனோவா இருந்தாரே... என்னுடைய இந்த நிலைமையைப் பார்த்துட்டு அவர்தான் உங்களைப் பற்றிச் சொல்லி அனுப்பினார்"

"ஓ..."

இப்போது என் மனதில் கையொப்பமிடும் ஆர்வமோ உதவி செய்யும் எண்ணமோ இல்லை. டேபிள் வெயிட்டை உருட்டிய படி யோசித்துக் கொண்டிருந்தேன்.
"தம்பி...நீங்க எல்லோருக்கும் உதவி செய்யறவர்னு இங்க எல்லோருமே சொன்னாங்க... நான் தான் இவனை இங்கே அழைத்து வந்தேன். நான் செய்தது தப்புன்னு இப்போ புரியுது... அதை மனசுல வச்சிருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்..."

"எப்படிச் சொல்றீங்க.."

"இத்தனை வருஷம் ஆச்சு...உங்களுக்கும் உங்க அப்பாவைப் போலவே மனசு.... எதையும் மனசுல வச்சிக்க மாட்டீங்க..."

"அதனால..."

"உங்கள் நிலைமைல அப்போ எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி இப்போ இதுவும் எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கே தெரியும்... மறுக்க மாட்டீங்கன்னு நம்பிக்கைதான்... நான்தான் என் தப்பை ஒத்துகிட்டேனே..."

இப்போது தேவை என்றதும் தப்பு என்று படுகிறதோ... என்று தோன்றியது. கேட்கவில்லை.

எம் டி இன்டர்காமில் அழைத்தார். மனப் போராட்டங்களை அலச நேரம் கிடைத்ததால் விடுதலை பெற்றது போல உணர்ந்தேன். எழுந்தேன். அவரை நாளை வரச் சொல்லி விடை கொடுத்து விட்டு எம் டி அறை நோக்கிச் சென்றேன்.

(நாளை அவர் வருவாரா? வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்? நீங்க சொல்லுங்க!)

17 கருத்துகள்:

 1. கிளாசிகல் தாட் !

  யோசிச்சு என்னோட பதில சொல்லுறேன்

  பதிலளிநீக்கு
 2. //(நாளை அவர் வருவாரா? வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்? நீங்க சொல்லுங்க!) //

  வாழ்வில் எப்போது வேறு ஒருவருடைய உதவி தேவைப் படும் என்பது தெரிந்திராத மனிதர் அவர்.. இப்போது புரிகிறது அவருக்கு.

  நமக்கு அது இப்போதே புரியியட்டுமே.. ஆம்.. முடிந்தால், பகைவருக்கும் உதவி செய்வோம் -- வேறொரு நாளில் அவர் உதவி தேவைப் பட்டால்.. அப்போது வசதியாக இருக்குமே..

  என்ன தம்பி.. சாரி.. சாரி, என்ன சார்.. நாளைக்கு அவரு வந்த, கண்டிப்பா அவருக்கு உங்களால் முடிந்த உதவி செய்வீங்கதான..?

  பதிலளிநீக்கு
 3. உதவி பண்ணிடுங்க. அவருக்கும், உங்களுக்கும் வித்தியாசம் வேணாம்.

  பதிலளிநீக்கு
 4. அவருக்கு உடனே கையெழுத்துப்போட்டுத் தர முடியாமல் உங்களை, உங்கள் M D கூப்பிட்டுவிட்டதும், நல்லதாப்போச்சு.

  வந்திருப்பவர் ஒரு வயதான மனிதர், உங்க அப்பா வயதை ஒத்தவர், ஆனாலும் உங்கள் அப்பாவை மிகவும் வெறுத்தவர். தான் செய்த தவறை உணர்ந்ததாக தற்சமயம் தன் காரியம் ஆக வேண்டி நடிப்பவர்.

  நீங்கள் அவரை நாளை வரச்சொல்லி பிரச்சனையை சற்றே ஒதிக்கி வைத்து விட்டீர்கள். உங்கள் நிலைமையில் யாருமே பொதுவாக அப்படித்தான் நடந்து கொள்ள முடியும், அதுவும் பிறருக்கு உதவவேண்டும் என்ற நல்லெண்ணம் உள்ளவராக, தாங்கள் இருப்பதால் மட்டுமே. இல்லாவிட்டால் ஒரேயடியாக மறுத்திருப்பீர்கள் அல்லவா!

  போன மனிதர் நாளை திரும்பி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏனென்றால் அவர் உன்மனதுக்கு எல்லாம் தெரியும். மனசாட்சி திரும்ப உங்களிடம் வர அனுமதிக்காது.

  ஒருவேளை, திரும்பி வந்தாரானால், உதவி செய்துவிட்டுப் போங்கள். வயதானவரை அலைய விடாதீர்கள்.

  ”இன்னாசெய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்மையும் செய்துவிடல்”
  என்ற குறள் படித்தவனான படியால் எனக்கு இவ்வாறு எழுதத்தோன்றியது.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 5. அவரைப் பற்றி மட்டுமே நினைக்கிறீர்கள். அன்று நீங்கள் இருந்த அதே நிலையில் இன்றிருக்கும் அந்த இளைஞன்?

  பதிலளிநீக்கு
 6. நீங்கள் அவருக்கு கொடுத்துள்ள இந்த ஒருநாள் தண்டனையே போதுமானது சார் , இன்னா செய்தாரை .............................. என்ற குறளுக்கு ஏற்ப கை எழுத்து இட்டுவிடுங்களேன் சார்

  ஹுசைனம்மா சொன்ன மாதிரி அந்த இளைஞன் எதிர்காலம் முக்கியம் அல்லவா

  பதிலளிநீக்கு
 7. ஹுசைனம்மாவின் கருத்தே என்னுடையதும். இளைஞனுக்காக உதவுங்கள்.

  பதிலளிநீக்கு
 8. பயிக்குப் பயி! யத்தத்துக்கு யத்தம்!

  விடுங்க.. அதெல்லாம் எம்ஜிஆர் டயலாக்குக்குத் தான் ஒத்து வரும்.

  பதிலளிநீக்கு
 9. உங்களுடைய நாளைய நல்ல முற்பகல் விளைவுக்கெற்றாற்போல் இன்றைய பிற்பகல் செயல் அமையட்டும்....

  பதிலளிநீக்கு
 10. பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே, பகைவனுக்கருள்வாய்!

  இன்னா செய்தாரை ஒறுத்தல்...

  பதிலளிநீக்கு
 11. உதவும் நோக்கோடுதானே நாளை வரச்சொன்னீர்கள்??11

  பதிலளிநீக்கு
 12. அந்த இளைஞனுக்கு நிச்சயமா உதவணும். ஒருத்தர் மேல இருக்கற வெறுப்புல, இன்னொருத்தர் வாழ்வை கெடுப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

  பதிலளிநீக்கு
 13. தலைப்பும் கதையும் முடிவை வாசகர்களிடமே விட்டதும் அருமை.

  இன்னா செய்தாரை...தான் வேறென்ன? ஆனால் எவரும் அதற்கு இப்போது நாணுவதில்லை என்பதே உண்மை. தமிழ் உதயம் சொன்னதும். நம் திருப்திக்கு எல்லோருக்கும் நல்லதே நினைப்போம். செய்வோம்.

  பதிலளிநீக்கு
 14. http://blogintamil.blogspot.com/

  தங்களை வலைச்சரத்தில் குறிப்பிடுள்ளேன். கருத்துக்களை தெரிவிக்கவும். நன்றி.

  பதிலளிநீக்கு
 15. "Innaa Seidhaarkkum Iniyavey Seiyyaakkaal
  Enna Payaththadhoe Saaalvu?

  பதிலளிநீக்கு
 16. கருத்துக்கு நன்றி சோ விசிறி அவர்களே! இட்லி வடையில் அடிக்கடி உங்கள் கருத்துரைகள் படித்ததுண்டு. எங்கள் பிளாகில் உங்கள் கருத்து இதுவே முதன் முறை என்று நினைக்கிறோம். நன்றி, மீண்டும் வருக.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!