Wednesday, February 29, 2012

பார்த்ததும் படித்ததும் நினைத்ததும்- வெட்டி அரட்டை.புத்தகத் திருவிழாவில் வாங்க விடுபட்டு போனவையாகச் சில புத்தகங்கள் தோன்றின. கபிலன் வைரமுத்து எழுதிய ஒரு புத்தகம். 'உயிர்ச்சொல்' என்ற புத்தகம் தாய்மை பற்றியது என்று விமர்சனத்தில் படித்தேன். அதாவது குழந்தை பிறந்தபின் தாய் மனதில் வரும் மனக்குழப்பங்களை அலசும் புத்தகம். இதில் ஒரு புதுமை. கதைக் கருவை ஒட்டி ஒரு பாடல் எழுதி இசையமைத்துப் பாடி குறுந்தகடாக்கி புத்தகத்துடன் தருவதாகப் படித்தேன். புதுமையாக இருந்தது. 


File:Kabilan Vairamuthu.jpg

இன்னொரு விஷயம் சென்ற முறையே பார்த்ததுதான் இந்த முறையும் வாங்காதது சுப்ரமணிய ராஜு சிறுகதைகள், புதுமைப் பித்தன் சிறுகதைகள் ஆகியவை உட்பட சில புகழ்பெற்ற படைப்புகள் குறுந்தகடாக -ஒலி வடிவில்- வந்திருப்பதை வாங்கிப் பார்க்க (கேட்க) வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஜீவனுடன் வாசிப்பார்களா வேறு மாதிரி இருக்குமா என்று பார்த்திருக்கலாம். வாசிப்பதில் இருக்கும் சௌகர்யம் கேட்பதில் இருக்குமா என்று தெரியவில்லை! குரல் பிடிக்க வேண்டும். Bhaaவம் இருக்க வேண்டும்! கேட்டுப் பார்த்தால்தான் தெரியும். விலை என்னமோ நூறுக்குள் அல்லது சற்று மேல்தான்! சில புத்தகங்களைப் படிக்கும்போது இரண்டாவது பதிப்பிலேயே சில மாற்றங்கள் - சில புகைப்படங்களைப் புதிதாகச் சேர்த்து, சில ஓவியங்களைப் புதிதாகச் சேர்த்து - என்று மாறுதலுடன் வெளியிட்டுள்ளார்கள். அப்போது தோன்றியது, "முதல் பதிப்பு வாங்கியவர்கள் இளிச்சவாயர்களா...!" 


இது என்ன நியாயம்?!

அதுபோல நான் முந்தய வருடம் வாங்கிய புத்தகம் ஒன்று பைண்டிங் இல்லாமல் நூறு ரூபாய். அதே புத்தகம் பைண்டிங் செய்யப் பட்டு கிழியும் வாய்ப்புக் குறைக்கப்பட்டு இந்த வருடம் நூற்றுப் பத்து ரூபாய்! 

அடுத்ததாக புத்தகங்களின் விலை பற்றி...

ஒரு புத்தகம் 279 பக்கங்கள். 180 ரூபாய்.
இன்னொன்று 272 பக்கங்கள் 110 ரூபாய்.
பிறிதொன்று 352 பக்கங்கள் 100 ரூபாய்.

முதல் இரண்டு புத்தகங்களின்  விலையைப் பாருங்கள். சும்மா உதாரணத்துக்குச் சொல்பவைதான் இவை. பேப்பர் தரம் என்பார்கள். லே அவுட் என்பார்கள்.கட்டமைப்பு,  பைண்டிங் என்னென்னவோ காரணங்கள்!. ஆனாலும் நான் குறிப்பிட்டிருப்பவை பேப்பர் தரமோ, வடிவமைப்போ ஒரே மாதிரிதான் இருக்கின்றன.

எழுத்தாளர்களை வைத்து விலையா அல்லது புத்தகம் சொல்லும் கருத்து குறித்த விலையா....அதையும் சொல்ல முடியாதபடி புதிய எழுத்தாளரின் புத்தக விலையும் இப்படிதான் இருக்கிறது. பிரித்துப் படித்தால் மேலும் கீழும் நிறைய இடம் விட்டு நடுவில் சிறு கட்டம் கட்டியது போல சிறிய பாகத்தில் எழுத்துகள்.புத்தகங்களை எல்லோரும் வாங்க வேண்டும் என்றால் விலை கொஞ்சம் கண்ணை உறுத்தாமல் இருக்க வேண்டாமோ...


சில ஜெயகாந்தன் தொகுப்புகள் ரூபாய் ஆயிரத்தைத் தாண்டுகின்றன. பழைய பைண்டிங் செய்யப் பட்ட புத்தகங்களைக் கணக்கெடுத்தபின் விடுபடுபவை பார்த்து வாங்கத்தான் வேண்டும்! 

சமீபத்தில் மறைந்த ஆன்மீக எழுத்தாளர் ரா கணபதியின் புத்தகம் - பக்த மீரா  பற்றியது - 370 பக்கங்கள் 45 ரூபாய்க்குக் கிடைத்தது. சில பதிப்பகங்களில் பழைய விலையில் புத்தகங்கள் வாங்க முடிகிறது. விசா, பாரதி பதிப்பகங்கள் உதாரணம். சில புதிய புகழ் பெற்ற பதிப்பகங்கள் சொல்லும் விலை தலை சுற்றுவது நிஜம். தொகுப்பாகக் கிடைக்கின்றன. வடிவமைப்பு பார்க்க அழகாக இருக்கிறது. உண்மை. ஆனால் விலை...! இன்னொன்றும் சொல்ல வேண்டும். 'காவல் கோட்ட'மே எடுத்துக் கொள்வோம். அதை வாங்கிக் கையில் வைத்துப் படிக்க முடியுமா என்று தெரியவில்லை. அவ்வளவு பெரிய சைஸ். இது மாதிரிப் புத்தகங்கள் வாங்கினால் மற்ற ஸ்டால்கள் அலைய தெம்பு வேண்டும். அல்லது கூடவே தூக்கி வர ஒரு ஆள் வேண்டும்! மேலும் இது மாதிரிப் புத்தகங்களோடு அவர்கள் இலவசமாக ஒரு ஸ்டேண்டும் தரவேண்டும்! ராமாயணம், மகாபாதம் போன்றவற்றை வைத்துப் படிப்போமே...அது போல...பொன்னியின் செல்வன் கடைக்குக் கடை வித வித அளவுகளில் கிடைக்கிறது. ஒரே தொகுதியாக ஐந்து பாகங்களும் என்றும் கிடைக்கிறது. வாங்கினால் கையில் வைத்துப் படிக்கச் சிரமமாக இருக்கும் என்று தோன்றியது.நர்மதாவில் ஒரு புத்தகம் வாங்கினேன். 852 பக்கங்கள். சைஸ் சொல்ல வேண்டுமென்றால் இப்போது வரும் விகடன் சைஸை விட சற்று பெரியது. நல்ல பேப்பர்கள்தான். வழு வழு அட்டை. எழுநூற்று ஐம்பது ரூபாய் போட்டிருக்கிறது. அறுநூற்றைம்பதுக்கு வாங்கினேன். மேலே சொன்ன புத்தகங்கள் விலையோடு இதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். 


புத்தகக் கண்காட்சியில் பத்து சதவிகிதம் தள்ளுபடி என்கிறார்கள். அதை இன்னும் கொஞ்சம் கூட்டலாம்! தாராளமாகவே தள்ளுபடியை அதிகரிக்கலாம். அவர்களுக்கு நஷ்டமாகாது என்றுதான் நம்புகிறேன். என் கண்முன்னால் வேறொருவருக்கு இருபது சதவிகிதம் தள்ளுபடி செய்த கடை உரிமையாளர் ஒருவர் எனக்கு பத்து சதவிகிதம்தான் செய்தார். தெரிந்தவர்கள், வேறு பதிப்பகத்தார், பொதுவில் படிக்க வாங்குகிறேன்.........ஆயிரம் காரணங்கள்.

நான் அப்போது கவனிக்காத அப்புறம் கவனித்த இன்னொரு கொடுமை ஒரு பதிப்பகம் பத்து சதவிகிதம் தள்ளுபடிகூட இல்லாமலேயே என் தலையில் புத்தகத்தைக் கட்டியிருக்கிறது. என் தவறுதான். ஆனால் கேட்டுதான் அவர்கள் கொடுக்க வேண்டுமா...இரண்டாம் முறை செல்லும்போது கேட்கவேண்டும் என்று நினைத்து பில்லைத் தொலைத்து விட்டதால் கேட்கவில்லை.

திருவாசகம் என்றொரு புத்தகம். இரண்டுபேர் அருகருகே வாங்குகிறார்கள் ஒரே புத்தகம்தான். ஒரே பதிப்பகம்தான். ஆனால் இருவேறு விலையில். அறுபத்தைந்து ரூபாய் வித்தியாசத்தில்! எப்படி?

விலை குறைத்து புத்தகங்களை வாங்க வேண்டுமென்றால் சம்பந்தப் பட்ட பதிப்பகங்கள் அவர்களின் சொந்த வெளியீடுகளின் விலையைக் குறைப்பதை விட வேறு பதிப்பக ஸ்டால்களில் அதே புத்தகத்தை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். இது புத்தகங்கள் மட்டுமின்றி அனைத்துப் பொருட்களுக்கும் பொருந்தும். சமீபத்தில் தெரிந்த ஒருவருக்கு எல் இ டி டிவி வாங்க அலைந்தபோது இதே அனுபவம் கைகொடுத்தது! அவர்கள் லாபத்தில் குறைத்துக் கொள்ள அவர்கள் தயாராய் இருக்கிறார்கள். அபபடி வாங்கியும் இருக்கிறேன். சில புத்தகங்களை வாங்கி படித்து முடித்தபின் மறுபடி விலையைப் பார்ப்பேன். இந்த விலை கொடுத்திருக்கலாம், வேண்டாம் என்று இரண்டு வகைகளிலும் விலையைப் பார்க்க வைக்கும் புத்தகங்கள் இருக்கின்றன!

வேறு சில மதசம்பந்தப் பட்ட புத்தகங்கள் பிரச்சாரத்துக்காக வேண்டி குறைந்த விலையில் புத்தகங்கள் தருகின்றன. அவற்றை கணக்கில் சேர்க்கவில்லை!

இந்த விலை அநியாயங்களைப் பார்க்கும்போது பேசாமல் வெளியில் செகண்ட் ஹாண்டில் வாங்கி விடலாமா என்றும் தோன்றுகிறது. 


அல்பமாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!!


சொந்தப் படங்கள் தவிர்த்த இரு படங்கள் உதவி : நன்றி விக்கி, தினமணி.

11 comments:

RVS said...

புஸ்தக விலைபற்றி சொன்னது உண்மைதான். வச்சதுதான் ரேட்டு. :-)

தமிழ் உதயம் said...

ஆச்சரியமா இருக்கு உங்கள் அனுபவ பகிர்வு. புத்தக விமர்சனத்தை கூட மாத்தி யோசித்திருக்கிங்க. எல்லோரும் படித்த புத்தகத்தை விமர்சிப்பாங்க. நீங்களோ படிக்க போற புத்தகத்தை, படிக்காத, பார்த்த புத்தகங்களையும் விமர்சித்தது - உண்மையில் நல்லா இருக்கு.

ராமலக்ஷ்மி said...

புத்தகங்களுடனான உங்கள் அனுவங்கங்களுடன் நானும் ஆச்சரியமாகப் பயணித்தேன். சுவாரஸ்யமான தகவல்கள்.

/ "முதல் பதிப்பு வாங்கியவர்கள் இளிச்சவாயர்களா...!" / இது புத்தகம் மட்டுமின்றி பல எலக்ட்ரானிக் விஷயங்களுக்கும் அடிக்கடி பொருந்தியிருக்கின்றன.

RAMVI said...

இது வெட்டி அரட்டை இல்லை. புத்தக விலை பற்றிய நல்லதொரு அலசல்.

//இந்த விலை அநியாயங்களைப் பார்க்கும்போது பேசாமல் வெளியில் செகண்ட் ஹாண்டில் வாங்கி விடலாமா என்றும் தோன்றுகிறது. //

இப்படியும் செய்யலாம். இல்லாவிட்டால் நூலகத்தில் சேர்ந்து புத்தகத்தை படிக்கலாம் (என்ன கொஞ்சம் தாமதமாக படிக்க வேண்டியிருக்கும்.)

கணேஷ் said...

இந்த விஷயத்தில் வரிக்கு வரி உங்களுடன் நான் ஒத்துப் போகிறேன். சில எழுத்தாளர்களின் புத்தகங்கள் என்றால் நியாயமான விலையை விடவும் ஒரு மடங்கு அதிகமாகவே வைக்கிறார்கள். ‘மலிவுப் பதிப்பு’ அல்லது ‘மக்கள் பதிப்பு’ என்கிற ஒரு விஷயமே வழக்கொழிந்து போய் விட்டது. நான் பழைய புத்தகக் கடைகளில் பல பொக்கிஷங்களை வாங்கியிருக்கிறேன்- இப்போதும் கூட!

கீதா சாம்பசிவம் said...

அல்பமாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!!//

இல்லையே! அப்படியே நினைச்சாலும் நான் கண்டுக்கற டைப் இல்லை. நமக்குக் கட்டுப்படி ஆனால் தான் வாங்க முடியும். உதாரணத்துக்கு வர்த்தமானன் பதிப்பகத்துப் புத்தகங்களை வாங்கினீங்கன்னா தலை சுத்தும்! அங்கே பதிப்பாகும் புத்தகங்களை வேறு பதிப்பக வெளியீடுகளிலே நல்ல பதிப்பாக வாங்க முடியும்.

பொதுவா நான் வானதி, அந்தக்காலத்து மங்கள நூலகம், அலயன்ஸ், ராமகிருஷ்ணா மடம், லிஃப்கோஇப்படிப் பதிப்பகங்கள் கூடக் கொஞ்சம் நம்பிக்கைக்குரியதாகத் தேர்ந்தெடுப்பேன். மதுரைனா மீனாக்ஷி புத்தகாலயம். மற்றப் பதிப்பகங்களின் புத்தகங்கள் எனில் நூலகத்தில் வாங்கிப் படிக்கலாம். வர்த்தமானன் பதிப்பக வெளியீடாகவோ என்னமோ, சரியாத் தெரியலை. டி.என். கணபதியோட புத்தகங்களை வாங்கிட்டு!!!

போதும்டா சாமினு ஆயிடுச்சு, ப்ரூஃப் ரீடிங்னு ஒண்ணு உண்டே அதைச் செய்ய மாட்டாங்களானு நினைச்சேன். ஒன்றிலே வந்த விஷயங்களே கொஞ்சம் போல நடுவே அல்லது மேலே கீழே மாற்றி மீண்டும் திரும்ப வருது! :((((((((

கீதா சாம்பசிவம் said...

இதைக் குறிச்சு எழுதணும்னு நினைச்சுப்பேன். ஆனால் நான் புத்தகக் கண்காட்சிக்கெல்லாம் போறதில்லை என்பதால் எழுதறதில்லை. :)))))

Madhavan Srinivasagopalan said...

ஒரு புத்தகம் நூறு ரூபாய்க்கு வாங்கிட்டு வீட்டுல நாலு பேரு படிச்சா... அதோட (செலவு) விலை வெறும் இருபத்தஞ்சு..
எப்படி என்னோட கணக்கு..?

பத்மநாபன் said...

நல்ல விலை அலசல்.. விலைக்குக் காரணம்...மின் புத்தகங்கள் வந்தவுடன் கொஞ்சமாக அச்சிட்டு அதிகமாக விலை வைத்து விற்க பார்க்கிறார்கள்

அப்பாதுரை said...

அருமையான கட்டுரை. ஆச்சரியமான (ஓரளவுக்கு) தகவல்கள். அடுத்தப் புத்தகத் திருவிழாவின் போது யாராவது ஒரு ஸ்டால் எடுத்து எந்தப் புத்தகம் எந்த பதிப்பகத்தில் என்ன விலை என்று கம்பேரிசன் சார்ட் எட்டணாவுக்கு விக்கலாம் போலிருக்கே?

வல்லிசிம்ஹன் said...

நல்ல அலசல். எனக்குப் புத்தகங்கள் வாங்கும் போது முதலில் விலையைப் பற்றி யோசிப்பதே இல்லை.
இப்பொழுது அப்படி இல்லை. படிக்கப் புத்தகங்கள் வேண்டும். அவை செகண்ட் ஹாண்டாக இருப்பதிலும் எனக்கு வருத்தமில்லை.
இன்னும் சொல்லப் போனால் ப்ளாட்ஃபர்ம் கடையில் அரிதான பழைய புத்தகங்களும் கிடைக்கும்.

நீங்கள் தீவிரமாக ஆய்வு நடத்தி இருப்பது நல்ல கார்யம்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!