திங்கள், 31 மார்ச், 2014

திங்க கிழமை 140331:: உகாதி பச்சடி.

                  
உகாதி தினத்தன்று செய்யப்படும் ஒரு சிறப்பான உணவு தான் உகாதி பச்சடி. இந்த பச்சடியின் சிறப்பம்சம் என்னவென்றால், இது அறுசுவைகள் சேர்த்து செய்யப்படும்.  
  


  


இப்படி அறுசுவைகள் சேர்த்து செய்வதற்கு காரணம்: 
(இதை உண்பவர்கள்,)
மாங்காய், புளி - புளிப்பு : வீட்டில் உள்ளவர் எல்லோருக்கும் புளித்துப் போகும் அளவுக்கு நீண்ட ஆயுளுடனும், 
வேப்பம்பூ - கசப்பு - எமனுக்குக் கசப்பாகவும், 
வெல்லம் - இனிப்பு - ஊரில் உள்ளோர் எல்லோருக்கும் இனியவராகவும், 
தேங்காய் போன்று இளகிய, வெள்ளை மனம் கொண்டவராகவும், 
மிளகாய்த்தூள் - காரம் - எதிரிகளுக்குக் காரமானவராகவும் 
உப்பு - உவர்ப்பு - உழைப்பின் மேன்மையை உணர்ந்து நடப்பவராகவும் 
இருக்கவேண்டும் என்பதே. 
  


இந்த பச்சடியை மூன்று ஸ்பூன் சாப்பிடும்போது 
# வீட்டவருக்குப் புளிப்பாக,
# எமனுக்குக் கசப்பாக,
# ஊராருக்கு இனிப்பாக 
என்று சொல்லி வீட்டுப் பெரியவர் கொடுக்க, வீட்டில் உள்ள மற்றவர்கள் கையில் வாங்கி குடிப்பார்கள். 


இப்போது அந்த உகாதி பச்சடியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
                   

தேவையான பொருட்கள்: 
மாங்காய் - 1 கப் (பொடியாக நறுக்கியது) 
வேப்பம்பூ - 1 டேபிள் ஸ்பூன் 
வெல்லம் - 1 கப் (தட்டியது) 
தேங்காய் துண்டுகள் - 1 டேபிள் ஸ்பூன் 
புளிச் சாறு - 4 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 சிட்டிகை 
உப்பு - தேவையான அளவு 
தண்ணீர் - 3 கப் 

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, புளி சாறு ஊற்றி, அத்துடன் மாங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். மாங்காயானது நன்கு வெந்ததும், அதில் வெல்லம், மிளகாய் தூள், உப்பு, வேப்பம்பூ, தேங்காய் துண்டுகள் சேர்த்து 8-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், உகாதி பச்சடி ரெடி!!!
      

16 கருத்துகள்:

  1. உகாதித் திருநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இப்படி எல்லாம் செய்ததே இல்லை... நன்றி... உகாதித் திருநாள் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. புளிச்சாறோ, தேங்காயோ சேர்த்தது இல்லை. மாங்காயை வேகவைத்துக் கொண்டு உப்புச் சேர்த்துப் பின்னர் வெல்லம் போட்டுச்சேர்ந்து வரும் வரை கொதிக்கவிட்டுத் தேவையானால் மாவு கரைத்து ஊற்றி நெய்யில் வேப்பம்பூவை வறுத்துச் சேர்ப்போம். ஏலக்காய் சேர்ப்போம். இது புது மாதிரியாக இருக்கு. மாமியார் வீட்டில் வெறும் புளி ஜலத்திலேயே வெல்லம், மி.தூள், உப்புச் சேர்த்துக் கொதிக்கவிட்டு வேப்பம்பூ போடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  4. யுகாதி பச்சடியில் இவ்வளவு செய்திகள் அடங்கி இருக்கிறதா? செய்திகள் புதிய தகவல்.


    வீட்டவருக்குப் புளிப்பாக,
    # எமனுக்குக் கசப்பாக,
    # ஊராருக்கு இனிப்பாக
    என்று சொல்லி வீட்டுப் பெரியவர் கொடுக்க, வீட்டில் உள்ள மற்றவர்கள் கையில் வாங்கி குடிப்பார்கள்.//
    அருமை.
    யுகாதி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. யுகாதி பச்சடி..... தமிழ் வருடப் பிறப்பிற்கு வீட்டில் செய்வார்கள்.....

    ஏனோ பிடிப்பதில்லை! :)

    பதிலளிநீக்கு
  6. யுகாதி சுபக்காஞ்சலு

    அறுசுவைகள் சேர்த்து செய்வதற்கு காரணம்:
    (இதை உண்பவர்கள்,)
    மாங்காய், புளி - புளிப்பு : வீட்டில் உள்ளவர் எல்லோருக்கும் புளித்துப் போகும் அளவுக்கு நீண்ட ஆயுளுடனும்,
    வேப்பம்பூ - கசப்பு - எமனுக்குக் கசப்பாகவும்,
    வெல்லம் - இனிப்பு - ஊரில் உள்ளோர் எல்லோருக்கும் இனியவராகவும்,
    தேங்காய் போன்று இளகிய, வெள்ளை மனம் கொண்டவராகவும்,
    மிளகாய்த்தூள் - காரம் - எதிரிகளுக்குக் காரமானவராகவும்
    உப்பு - உவர்ப்பு - உழைப்பின் மேன்மையை உணர்ந்து நடப்பவராகவும்
    இருக்கவேண்டும் என்பதே.
    அருமையான விளக்கம் ..

    பதிலளிநீக்கு
  7. யுகாதி பச்சடி - அருமையான விளக்கம். இனிய உகாதித் திருநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. புது மாதிரியான பச்சடியாக இருக்கிறது. தயாரித்து முடித்ததும் எப்படி இருக்கும் என்று அந்த புகைப்படத்தையும் போட்டிருக்கலாமே! (சாப்பிட்டுவிட்டீர்களோ?) :)
    யுகாதி சுபதின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  9. புது மாதிரியான பச்சடியாக இருக்கிறது. தயாரித்து முடித்ததும் எப்படி இருக்கும் என்று அந்த புகைப்படத்தையும் போட்டிருக்கலாமே! (சாப்பிட்டுவிட்டீர்களோ?) :)
    யுகாதி சுபதின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. பச்சடி ரெசிபி ஜோரு! இனிய யுகாதி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. அருமையான குறிப்பு. நன்றி.

    அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  12. ரொம்ப அருமையான பகிர்வு ஸ்ரீராம். இது போல தமிழ் புத்தாண்டன்று
    பச்சடியாக இல்லாமல் பொதுவாக உணவில் அறுசுவைகளையும் சேர்த்து செய்ய வேண்டும் என்ற பழக்கம் எங்கள் தஞ்சாவூர் பக்கம் உள்ளது. அதற்கான காரணங்களை அழகாக விளக்கியுள்ளது மிக அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  13. கீதா மாமி சொல்லியுள்ளது போல் தான் பச்சடி செய்வோம். காரத்திற்கு ஒரு பச்சை மிளகாயை கீறி சேர்ப்போம். இது புது மாதிரியா இருக்கு.

    பதிலளிநீக்கு
  14. @Adhi, அதே போல் கையில் பெரியவங்க ஊற்ற வாங்கிக் குடிச்சதில்லை. :)) இலையிலே பரிமாறுவாங்க, கட்டாயமாய்ச் சாப்பிட்ட்டே ஆகணும்னு நிபந்தனையோட! :))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!