யாரும் செய்திருக்க மாட்டீர்கள் என்று சொல்ல மாட்டேன். ஓரளவு எல்லாமே எல்லோரும் முயற்சிப்பதுதான். சின்ன மாறுதல்கள் சில சமயங்களில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும்,
குடைமிளகாயை உருளைக்கிழங்குடன் சேர்த்து கறி செய்திருக்கிறேன். பீட்ரூட்டுடன் சேர்த்து செய்திருக்கிறேன். இவ்வளவு ஏன், கத்தரிக்காயுடன் சேர்த்து கூட செய்திருக்கிறேன். இந்த கத்தரிக்காயுடன் சேர்த்து செய்த அன்று சாப்பிட வந்திருந்த என் மாமாக்களில் ஒருவர் இதனால் கவரப்பட்டு அப்புறம் அடிக்கடி அவர் சமையலில் இப்படி செய்வதாகச் சொல்லி இருக்கிறார்.
"இன்னிக்கி நீ சொல்லிக் கொடுத்த காம்பினேஷன்ல கறி" என்பார் போனில்.
இன்று நான் சொல்லும் முறையிலும் முன்பே செய்திருக்கிறேன் என்றாலும் சின்ன மருமகள் வந்த பிறகு இதுதான் முதல் முறை. இதற்கு முன் ஒரு முறை குடைமிளகாய் வெங்காயம் கறியா, குடை மிளகாய் உருளைக்கிழங்கு கறியா என்று கேட்டபோது மருமகள் இரண்டாவதை தெரிவு செய்ததால் அப்போது உருளைக்கிழங்குடன் சேர்த்து செய்தேன்.
இன்று வெங்காயத்துடன் மட்டும் ஜோடி சேர்த்து செய்து விட்டேன். என்ன சின்ன மாறுதல் என்றால் வெங்காயத்தை நீளமாகவோ, பொடியாகவோ நறுக்காமல் இப்படி இதழ் இதழாக பிரித்துப் போட்டு செய்தேன்.
இந்த சின்ன மாறுதல் மகன்கள், மருமகள்கள் மனத்தைக் கவர்ந்து விட்டது.
சாதாரணமாக வெங்காயத்தை முதலில் வதக்கிக் கொண்டு பின்னர் காயைச் சேர்ப்போம். இங்கு முதலில் குடைமிளகாயை முதலில் போட்டு புரட்டிக் கொண்டு அது பாதி வெந்ததும் வெங்காய இதழ்களை சேர்த்து புரட்டி எடுத்து விடுவேன்.
ரசித்துச் சாப்பிட்டார்கள்.
உப்பு மட்டும்.. காரப்பொடி தேவையில்லை. குடைமிளகாயே காரம்தானே!
இதை குடும்பக் குழுமத்தில் பகிர்ந்தும் என் இளைய சகோதரி இதில் தக்காளி சேர்த்திருக்கலாமே என்றார். இன்னும் என்னென்னவோ சேர்க்கலாம்தான். முயற்சிகள்தானே! அன்று எளிமையாய் செய்தோம். அவ்வளவுதான். ஆனால் தக்காளி சேர்த்தும் ஒருமுறை முயற்சித்து விடலாம் என்று மனதில் போட்டுக்கொண்டேன்.
இந்தப் பதிவின் ஆரம்ப வாக்கியமாக ஒரு வாக்கியத்தை யோசித்து வைத்திருந்தேன். அது தோன்றியது வெள்ளிக்கிழமை நள்ளிரவு! குறித்துக் கொள்ளவில்லை. எங்கே மறக்கப்போகிறது என்கிற அலட்சியம். பாஸிடம் சொல்லி வைத்தேன். இப்போது அந்த வாக்கியத்துடன் பதிவை ஆரம்பிக்கலாம் என்று பார்த்தால் மறந்து விட்டது. பாஸிடம் கேட்டால் "அப்படியா? என்னிடமா? சொன்னீர்களா?" என்று துண்டு துண்டாக ஆச்சர்யப்படுகிறார். வாக்கியம் பொருத்தமாய், நன்றாய் இருந்திருக்குமோ இல்லையோ, மறந்து விட்டது என்றதும் ஏதோ பெரிய இழப்பு போல தோன்றுவது மனித பலவீனம்!!
========================================================================================
மனசாட்சியம் - 31
K G Y Raman
" என்னைப் பேசச் சொன்னால், என்ன பேசத் தோன்றும் ? "
உங்களுடன் பேசுவது எனக்குப் பிடிக்கிறது. என் சந்தோஷத்திற்காக, ஏதோ ஒன்றைப் பற்றி தினசரி பேச முற்படுகிறேன். எனக்கு பிடிப்பதனால் உங்களுக்கும் பிடித்துத்தான் ஆக வேண்டும் என்று ஒன்றும் கட்டாயம் இல்லை அல்லவா ?
இந்த மாதிரிப் பொதுப் பேச்சு என்று வந்துவிட்டால் நாம் என்னவெல்லாம் பேச முடியும் ? நம் அனுபவங்கள், விருப்பு வெறுப்புகள், ஆசைகள், குறைகள் , கோபங்கள்.
நாம் படித்ததன் மூலம் பெற்ற தெளிவு அல்லது அறிவு இது பற்றி கூட நிறைய எழுதிப் பகிர முடியும் .
எழுதுவதில் நகைச்சுவை, வழக்கத்துக்கு மாறான முரண்பாடுகள், சிறிய அளவில் கிளுகிளுப்பு அல்லது விரசம், பிரபலங்களின் மேல் அவதூறு அல்லது வழிபாடு இப்படி எழுதக்கூடிய விஷயங்களை ஒரு வகைப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.
இவற்றில் " அதற்கான வாசகர் " ( டார்கெட் ஆடியன்ஸ்) கூட்டத்தை கவரக்கூடிய பல பல விஷயங்கள் இருக்கின்றன. எல்லாவற்றிலும் தத்துவம் மட்டும் தனியான சிறப்புப் பெறுகிறது. ஒன்று, ஆர்வமாக விழுந்து விழுந்து படித்து அது பற்றி சிந்தித்து தெளிவைப் பெற முயல்வார்கள் - அல்லது " சே, சுத்த போர் " என்று தூக்கிப்போட்டு விட்டுப் போய்விடுவார்கள்.
நான் முற்றிலும் எதிர்பாராத ஒருவர் வந்து, ஒரு தத்துவத்தைச் சொல்லி எங்களைக் கவர்ந்து சென்றதைப் பற்றித்தான் இன்று நான் உங்களுக்கு சொல்ல ஆசைப்படுகிறேன்.
எங்களுக்கு மேல் அதிகாரியாக இருந்த என்ஜினியர் ஓய்வு பெற்று அவருக்கு பிரிவுபசாரம் கொடுக்கும் சமயம். பிரிவுபசார விருந்தில் முக்கிய விருந்தினராக எங்கள் மேலதிகாரிக்கும் மேல் அதிகாரியாக இருந்த இன்ஜினியரை அழைத்திருந்தோம்.
" இப்போது நமது நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கும் நம் மேற்பார்வைப் பொறியாளர் தமது தலைமை உரையை நிகழ்த்துவார் " என்று விழா அமைப்பாளர் அறிவித்ததும் திரு ஏ எம் உஸ்மான் பேச எழுந்தார். அவர் பேசியதின் சாரத்தை என் மொழியில் கீழே தருகிறேன்:
" கொஞ்சம் மெதுவாப் பேசுங்க ! மாமியாருக்கு பாம்புக் காது."
" இங்கே இருந்தே அவ்வளவு தூரம் கழுகுப் பார்வை பார்ப்பான் - ஜாக்கிரதை."
" செயினைப் பிடுங்கிக் கொண்டு சிறுத்தை போல மின்னல் ஓட்டம் ஓடி மறைந்து விட்டான் "
" மோப்பம் பிடிக்கிறதுல வேட்டை நாய் பிச்சை வாங்கணும் "
ஐம்புலன்கள் ஒன்றையும் எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றிலும் மிகச் சிறப்பாக இருக்கிற பிராணி எது என்று பார்த்தால் இப்படி பாம்பு கழுகு நாய் சிறுத்தை என்று தொடர்ந்து மனிதனைத் தவிர வேறு பிராணிகளை தான் முதலிடத்தில் சொல்லுகிறோம். ஆற்றல் விஷயத்தில் இப்படி மனிதகுலம் பல பிராணிகளுக்கும் கீழே பின்தங்கி இருக்கும் போது, அவனைச் சிறப்படையச் செய்து மேம்படுத்தியது எது ?
இப்படி ஒரு கேள்வி கேட்ட உடனேயே எல்லோரும் " பகுத்தறிவு " என்று பதில் சொல்வோம். ஆனால் பகுத்தறிவின் மூலம் மனிதன் பல வசதிகளைச் சம்பாதித்து இருக்கிறானே தவிர, மேன்மையடையவில்லை என்பதே கசப்பான உண்மை. மனித அறிவின் உச்சகட்ட சாதனையாக பலவற்றை சொன்னாலும் அணுகுண்டு ஏவுகணை என்று புதிது புதிதாக அழிவாயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மனிதகுலம் முற்றிலும் நாசம் அடையக்கூடும் என்ற திகிலைத் தோற்றுவித்திருக்கிறது. லட்சக்கணக்கான உயிர்களை இதுவரை பலி கொண்டு இருக்கிறது. இது இன்னும் தொடரும். ஒரு பக்கம் மருந்துகளைக் கண்டுபிடித்து உயிர்களைக் காப்பாற்றுகிற மனிதனேதான் குண்டுகளைக் கண்டுபிடித்து உயிர்களைப் பலி வாங்குகிறான். வசதி மேம்பாட்டுக்கான சாதனங்கள், நோய் தீர்க்கும் மருந்துகள் இதனாலெல்லாம் மனிதன் சௌகரியங்களை அதிகரித்துக் கொள்ள முடியும். மேலும் சுகமாக வாழ முடியும். ஆனால் மேன்மை அடைய முடியுமா ?
அப்படியானால் மனித குலத்திற்கு மேன்மை அடைவதற்கான வாய்ப்பே கிடையாதா என்று கேட்டீர்களே ஆனால் அதற்கு ஒரு சிறப்பான பதில் இருக்கிறது.
மனிதன் செய்கிற எந்த காரியத்தையும் மனிதனை விடச் சிறப்பாகச் செய்கிற பிராணிகள் இருக்கின்றன என்பதற்கு நான் உங்களுக்கு மேலும் மேலும் உதாரணங்கள் சொல்ல வேண்டிய தேவையில்லை.
இதுவரை இவ்வுலகில் தோன்றிய மிகச்சிறந்த மனிதர்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்தீர்களானால் அதில் மிகச் சிறந்த அறிவாளர்கள் இருக்க மாட்டார்கள் . மாறாக அன்பும் கருணையும் தயாள குணமும் உள்ள மனிதர்களையே நாம் மேன் மக்களாகப் பார்க்கிறோம்.
எனவே மனிதனுக்கும் விலங்குக்கும் என்ன வேறுபாடு, எது மனிதனை உயர்த்திக் காட்டுகிறது என்று கேட்டால் என் பதில் அது காருண்யம், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு, பிறர்க்கு உதவி செய்யும் மனப்பான்மை என்று மட்டுமே சொல்லுவேன். இந்த இயல்புகள் மனிதன் தவிர வேறு எந்த ஜீவ ராசிக்கும் கடவுள் தரவில்லை. பழக்கின நாய் பிரியமாக நடந்து கொள்ளும். வளர்த்த பசு பால் தரும். ஆனால் அவற்றுக்கு கருணை பரோபகாரம் போன்ற குண விசேஷங்கள் கிடையாது. வளர்ச்சியும் திறமையும் பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் பொது. ஆனால் அன்பும், காருண்யமும், பரோபகாரமும் அப்படி அல்ல. இவையெல்லாம் மனித குலத்தின் தனிச்சொத்து. இவை நிரம்பப் பெற்றவர்கள் மேன்மையான மக்கள்.
அப்படிப்பட்ட ஒரு மேன்மையான மனிதர் இன்று பணி ஓய்வு பெற்று நம்மிடமிருந்து பிரிந்து செல்கிறார் . அவர் நல்வாழ்வு வாழ நாம் எல்லோரும் அவரை வாழ்த்தி வணங்குவோம்.
இதைவிடச் சிறப்பான பிரிவு உபசார விருந்துப் பிரசங்கத்தை நான் கேட்டதில்லை. அவர் பேசியதை நான் அப்படியே தர முடிந்திருந்தால் அல்லது அவர் பேசியதைப் பதிவு செய்து நீங்கள் கேட்க முடிந்திருந்தால் நீங்களும் நான் சொல்வதை ஒத்துக் கொள்வீர்கள்.
=================================================================================
மேலே மனசாட்சியும் படித்ததும் எனக்கு நினைவில் வந்த கண்ணதாசன் வரிகள் :
மனிதரில் நாய்கள் உண்டு
மனதினில் நரிகள் உண்டு
மனிதரில் நாய்கள் உண்டு
மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு
பழக்கத்தில் பாம்பும் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு
பழக்கத்தில் பாம்பும் உண்டு
நாயும் நரியும் புலியும் பாம்பும்
வாழும் பூமியிலே
மானம் பண்பு ஞானம் கொண்ட
மனிதனை காணவில்லை


காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள்.அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவில் தங்களது குடைமிளகாய் வெங்காயம் சேர்த்த கறி படங்களுடன் செய்முறை விளக்கமும் அருமையாக உள்ளது. போன வாரம் இதே காய்களை மட்டும் வைத்து வெந்தய குழம்பு செய்தேன். (பருப்பில்லாமல் மொட்டைக்குழம்பு என்ற பெயரில்.) நேற்று மீதியாக இருந்த குடைமிளகாய் அவியலோடு சேர்ந்தது. குடைமிளகாய்யின் வாசனையே தனி. எனக்கு மிகவும் பிடிக்கும். மழைகாலமாகையால், குடையுடன் வரும் இதனை விரும்பாதவர் யார்? மழையில்லாவிடினும், இது தன் குடை என்ற அடைமொழியை யை இழக்க விரும்புவதில்லை. :))
/இந்த கத்தரிக்காயுடன் சேர்த்து செய்த அன்று சாப்பிட வந்திருந்த என் மாமாக்களில் ஒருவர் இதனால் கவரப்பட்டு அப்புறம் அடிக்கடி அவர் சமையலில் இப்படி செய்வதாகச் சொல்லி இருக்கிறார்./
நானும் இதைப்போல் ஒருமுறை செய்து பார்க்கிறேன். நீங்கள் இதற்கென வெங்காயம் அரிந்த முறை பார்வையை கவர்கிறது. ரொம்ப பொறுமையாக செய்துள்ளீர்கள் மனமார்ந்த பாராட்டுக்கள்.
இதற்கு வைத்த பொருத்தமான (வாசகம்) பெயர் நினைவுக்கு வந்தால் பகிருங்கள். அறிந்து கொள்ள காத்திருக்கிறோம். (ஒரு டிப்ஸ்... எங்கு முதலில் அந்த வாசகம் யோசனைக்கு வந்ததோ, அந்த இடத்தில் நின்று மீண்டும் யோசித்தால் அது மீண்டும் நினைவுக்குள் வர வாய்ப்புள்ளது.) அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாஸின் அக்கா குடைமிளகாயை மட்டும் வைத்து குருமா செய்வார். எங்களுக்கும் கற்றுக் கொடுத்தார்.
நீக்குவெங்காயம் பொடியாக அரிவதைவிட இது மிக எளிதானது!
நான் படுக்கையில் இருந்தபடியல்லவா யோசித்திருந்தேன்! பொய்ப்படுத்துக் கொண்டே யோசிக்க வேண்டியதுதான் நினைத்தாலே இனிக்கும் கமல் போல
இதே குடைமிளகாயில் ஸ்டஃப் செய்து முயற்சித்திருக்கிறேன். இங்கும் பகிர்ந்திருக்கிறேன். உங்களுக்கும் நினைவிருக்கும்!
நீக்குஆமாம் நினைவிருக்கிறது. இதையெல்லாம் நான் இன்னமும் முயற்சித்ததில்லை. இங்கு வந்த புதிதில் குடும்பத்துடன் மாலை நேரம் வெளியில் செல்லும் போது, முழுதான குடை மிளகாய் பஜ்ஜியை மகன் வாங்குவார். அதில் ஒன்றை முழுதாக சாப்பிட முடியாது வயிறும் நிறைந்து விடும். வீட்டில் அது போல செய்தால், நிறைய எண்ணெய் வைக்க வேண்டி வரும். ஆனால், வீட்டில் கு. மிளகாயை அரிந்து பஜ்ஜி மாவில் தோய்த்து அடிக்கடி செய்துள்ளேன். கு. மி எதனுடனும் சேரும் தன்மையுடையது.
நீக்கு/இந்த மாதிரி ஒரு மாமனார் கிடைக்க மருமக்ள்கள் புண்ணிய சாலிகள்./
சகோதரி வல்லிசிம்ஹன் அவர்கள் சொல்வது உண்மை. நலமாக என்றும் இதேபோல இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன். இறைவனும் வேண்டியும் கொள்கிறேன்.
ததாஸ்து.
நீக்குஅன்பின் கமலாவுக்கும் ஶ்ரீராமுக்கும் இன்னும் வரப் போகிறவர்களுக்கும் இந்த நாள் இனிய நாளாக இருக்கப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க அம்மா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குவாருங்கள் சகோதரி. தங்கள் அன்பான பிரார்த்தனைக்கு மிக்க நன்றி.
நீக்குகுடை மிளகாய் மிகப் பிடித்த காய்கறி. சேலத்தில் ஜன்க்ஷன் அருகே குடியிருந்த போது ஊட்டியிலிருந்து வரும் குடமிளகாய்கள் மிகப் பெரிதாக இருக்கும். ஒன்றை அரிந்தால் இரண்டு கட்லட் செய்யலாம். குடமிளகாய் வெங்காயம் செரியான காம்போ. நீங்கள் இதழ் இதழாகச் செய்திருப்பது. மிக அருமை. இந்த மாதிரி ஒரு மாமனார் கிடைக்க மருமக்ள்கள் புண்ணிய சாலிகள்.
பதிலளிநீக்கு// இந்த மாதிரி ஒரு மாமனார் கிடைக்க மருமக்ள்கள் புண்ணிய சாலிகள்.//
நீக்குஹிஹிஹி... // ங்கள் இதழ் இதழாகச் செய்திருப்பது. மிக அருமை. //
அந்த வித்தியாசம்தான் சுவை.
சகோதரி குடை மிள்காய்க்குக் கவிதையாக மழை நாள் குடை என்கிறார். அதுவும் அருமை.
பதிலளிநீக்குகமலா அக்கா எப்பவுமே வார்த்தைகளில் விளையாடுவார்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய மனசாட்சியம் பகுதியும் மிக அருமையாக உள்ளது.
/இதுவரை இவ்வுலகில் தோன்றிய மிகச்சிறந்த மனிதர்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்தீர்களானால் அதில் மிகச் சிறந்த அறிவாளர்கள் இருக்க மாட்டார்கள் . மாறாக அன்பும் கருணையும் தயாள குணமும் உள்ள மனிதர்களையே நாம் மேன் மக்களாகப் பார்க்கிறோம்./
ஒரு மனிதன் மேன்மையுடன் வாழ்ந்தான்/வாழுகிறான் என்பதை உதாரணங்களுடன் விளக்கிய திரு. ஏ. எம். உஸ்மான் அவர்களது பேச்சை நானும் ரசித்தேன். நன்றாக சொல்லியுள்ளார்.
தேள் கொட்டுவது போல நாவால் பிறர் மனதை புண்படுத்துபவரும் உண்டு. இவையெல்லாம் விலங்கின் சுபாவங்களாக இறைவனால் விதிக்கப்பட்டு வாழ்பவை. மனிதன் மட்டுமே கருணை, அன்பு, பெருந்தன்மை, காருண்யம் போன்ற குணங்களுடன் இருக்க முடியும் என்பதாக இறைவன் படைத்துள்ளான். இதை உணர்ந்து மனித குலம் வாழ்ந்து காட்டினால் அவன் மேன்மையடைந்தவனாக இருப்பான். நல்ல விளக்கம். ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
மனசாட்சியத்தின் பொருத்தமாக சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் வழங்கிய கண்ணதாசன் அவர்களது பாடலும் அருமை. வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குகுடை மிளகாய்+வெங்கயம், 2 குடை மிளகாய்ப் பருப்புசிலி, குடை மிளகாய் பருப்பு சாம்பார்.குடை மிளகாய் டபிள் பீன்ஸ் கதம்ப சாதம், குடை மிளகாய் முருங்கைக் காய் வெறுங்குழம்பு இப்படி போகும் என் முதல் வருட சமையல். அரைத்துக் கொடுக்க ஒரு பெண் உதவிக்கு இருந்தார்.
பதிலளிநீக்குஆஹா.. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா இறைவா இறைவா இறைவா..
நீக்குசின்ன வெங்காயம் சேர்த்த குடை மிளகாய் இன்னும் சூப்பர். த்ஹஞாவூர்க் குடை மிளகாய் காரமாக இருக்கும். அது மோர் மிளகாய் செய்யலம்.
பதிலளிநீக்குஅது செய்து வீட்டில் வைத்திருக்கிறோம்.
நீக்குஎன் தங்கை இதில் தக்காளி சேர்க்கலாம் என்றாள். அது அடுத்த தரம் முயற்சித்து விடலாம் என்று தோன்றியது.
:))))))))))))0
நீக்குஆம். கு. மிளகாய், தக்காளி வெங்காயம் சேர்த்து உப்பு, காரமுடன் நன்றாக வதக்கி கு. சா பெட்டியில் வைத்து சாதத்துடன் கலந்து சாப்பிடவும், டிபன் வகையறாக்களுக்கும் உபயோகித்து கொள்ளலாம். நானும் அவ்வாறு செய்து வைத்திருக்கிறேன். மூன்று காய்களின் மணமும் சேர்ந்து நன்றாக இருக்கும். ஒரு வாரத்திற்கும் மேலாக அப்படியே இருக்கும்.
நீக்கு// என் தங்கை இதில் தக்காளி சேர்க்கலாம் என்றாள். அது அடுத்த தரம் முயற்சித்து விடலாம் என்று தோன்றியது.//
நீக்குஇதை இப்போது பதிவிலும் சேர்த்து விட்டேன்.
திருத்திய பதிவின் வரிகளை கண்டேன். இதில் தக்காளி சேர்த்த பட்சத்தில்,, சிறிது காரப்பொடியும், சிறிது தனியா பொடியும் சேர்த்தால் சுவை மிகும். இறுதியில் ஒரு சிட்டிகை பெருங்காயமும் இதன் ருசிக்கு உதவி செய்யும். "ஆனால் எனக்கு மட்டும்" பெருங்காயாமா" என இந்த கலவைகள் மனதுக்குள் கோபமும் படும்."
நீக்குநல்ல டிப்ஸ்... மனதில் கொள்கிறேன்.
நீக்குபெயரைச் சொல்லலாமா என்று பெயர் வைத்து விடுங்கள்.
பதிலளிநீக்குஅது தலைப்பு இல்லையே... இது நாங்கள் ஏற்கனவே செய்வதுதானே என்று சொல்பவர்களுக்கு சமாதானமாக ஒரு வாக்கியம்!
நீக்குஆகா.. இதுவும் பொருத்தமான பெயர்தான். தலைப்பை கண்டவுடன் அது என்ன பெயர் என்ற ஆவல் எழும்.
நீக்குஒரு வேளை தாங்கள் யோசித்த அவ்வாக்கியம் "அரைத்த மாவோ" :))
நீக்குஅது நான்கு அல்லது ஐந்து வார்த்தைகள் கொண்ட வாக்கியம்.
நீக்கு// அவ்வாக்கியம் "அரைத்த மாவோ" :)) //
நீக்குஓ.. இதில் எனக்கு ஒரு மறைமுகச் செய்தி இருக்கிறதோ...!!!
:))))
நீக்குபுன்னகை இமோஜியா? அப்போ அதானா?
நீக்குகண்ணதாசன் வரிகள் படிக்கப் படிக்க இனிமை. இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்.
பதிலளிநீக்கு54 வயது மறையும் வயதா... திறமையானவர்களை சீக்கிரமே அழைத்துக் கொண்டு விடுகிறான் கடவுள். பட்டுக்கோட்டை, புதுமைப்பித்தன், பாரதியார்...
நீக்குமனசாட்சியம் அருமையான உரையாடல். ஓய்வு பெற்றவர்களைப் பாராட்டிப் பேசத் தனித் திறமை வேண்டும். அருமையாகப் பேசி இருக்கிறார் மேலாளர்.
பதிலளிநீக்குஓய்வு பெற்றவர்களை அல்லது ஓய்வு பெறுபவர்களை பாராட்டுவது என்பது எனக்கு கொஞ்சம் போலித்தனமாக தெரியும்.
நீக்கு