1.11.26

நான் சென்ற அலுவலகப் பயணங்களில் கண்டவை - 06 பாலக்காடு:: நெல்லைத்தமிழன்

 

நான் ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவன். பலரால் அதனைச் சரியாகச் சொல்லமுடியாததால், ஜோசியம் பொய் என்ற எண்ணம் பரவியிருக்கிறது. மக்கள் ஜோசியர்களை நம்புவதால், கல்லா கட்டுவதற்காக பொய்யும் புரட்டும், தெரிந்ததும் தெரியாததுமாக ஒரேயடியாக பல ஜோசியர்கள் அடித்துவிடுகிறார்கள். உங்களுக்கு நிச்சயமாக ஆண் குழந்தைதான், தவறினால் பெண் குழந்தை பிறக்கும் என்ற ரேஞ்சுக்கு எழுதுகிறார்கள்.

என் அப்பாவிற்கு மிக நம்பிக்கையான ஒரு ஜோசியர் இருந்தார். எங்கள் திருமணத்திற்காக ஜாதகப் பொருத்தங்களை உள்ளூர் ஜோசியரிடம் கேட்டுவிட்டு, பிறகு பொருந்தும் ஜாதகங்களை அவருக்கு அனுப்பி அவருடைய விளக்கங்களைக் கேட்டபிறகுதான் அடுத்த ஸ்டேஜுக்குச் செல்வார். அந்த ஜோசியர், ஒரு முறை கணிணி சம்பந்தமாக ஏதோ ஒரு உதவி, நான் கெம்ப்ளாஸ்டில் (மேட்டூர். அது இந்தியாவில் நான் முதல் முதலாக ஒரு கம்பெனியில் வேலை செய்த கதை. ஆரம்பகால வேலை, பிறகு வெளிநாடு செல்லவேண்டும் என்ற ஆசை, எப்படி வெளிநாட்டு வேலை வாய்ப்பு வந்தது, துபாய் அனுபவங்கள் என்று தனியாக எழுதவேண்டும்) வேலை பார்த்தபோது கேட்டிருந்தார். அதற்கான விளக்கங்களை அவருக்கு எழுதியிருந்தேன். அவர் என்னிடம், நீங்கள் முருகனை வணங்குங்கள், சஷ்டியில் பிறந்தவர் என்பதால், செவ்வாய் தோறும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் பண்ணுங்கள் என்று சொன்னார். கந்த சஷ்டி கவசம் படித்து மனனம் செய்யும் வேளை, நான் துபாயில் வேலை பார்த்தபோதுதான் வந்தது.  எதற்கும் ஒரு நேரம் வேண்டுமல்லவா?  அந்த ஜோசியர் தன்னுடைய ஒரே மகளுக்கு நல்ல வரன் பார்த்தார்.  நன்கு ஆராய்ந்து பொருத்தம்லாம் பார்த்து திருமணம் செய்துவைத்தார். மகள் ஒரு வருடத்துக்குள்ளேயே கணவனை இழந்துவிட்டார். அது அந்த ஜோசியருக்கு பேரதிர்ச்சியாகி, பிறகு ஜோசியம் பார்ப்பதையே விட்டுவிட்டார்.

சில ஜோசியர்கள், சில நேரங்களில் சொல்வது சரியாக பலிக்கும். எல்லா நேரங்களிலும் பலிக்கிறதா என்றால், அப்படி இல்லை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.  அப்படி ஒரு ஜோசியர் எனக்குச் சொன்னதைத்தான் இந்த வாரம் பகிர நினைக்கிறேன்.

நான் வேலை பார்த்த அந்த கன்சல்டன்சி கம்பெனியிலேயே மூன்று வருடங்கள் வேலை பார்ப்பேன், என்னைப் பற்றி நீங்கள் சந்தேகப்பட வேண்டாம் என்று கம்பெனி எம்.டியிடம் சொன்னதை உங்களிடம் பகிர்ந்திருந்தேன். அது என்ன மூன்று வருடம்? கணிணி துறையில் 3-5 வருடங்கள் ஒரே கம்பெனியில் வேலை பார்ப்பது என்பது அந்த கம்பெனிக்கு, அதிலும் கன்சல்டன்சி கம்பெனிக்கு நல்லது. அப்படிப்பட்டவர்களை நம்பித்தான் பெரிய பெரிய ப்ராஜக்ட்களைக் கொடுக்கமுடியும். அனேகமாக எல்லா ப்ராஜக்ட்களும் ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை போகும். முடிந்த பிறகும் அடுத்த ஆறு மாதங்கள் நிறைய சப்போர்ட் தேவையாக இருக்கும். ப்ராஜக்ட் மேனேஜரை நம்பி இப்படி ஒரு கம்பெனியின் ப்ராஜக்டைக் கொடுத்து, அவன் ஆறு மாதங்களுக்குள் வேறு வேலை பார்த்துக்கொண்டு சென்றுவிட்டால், அது ப்ராஜக்டைக் குலைத்துவிடும்.  அதனால், நான் மூன்று வருடங்கள் என்று சொன்னதால், இவனை நம்பி பெரிய கம்பெனி ப்ராஜக்டுகள் கொடுக்கலாம் என்று கம்பெனி எம்.டிக்கு நம்பிக்கை வந்திருக்கும்.

நான் ஒரு தடவை வெகேஷனுக்கு பெங்களூர் வந்திருந்தேன். அப்போது ஒரு ஜோசியரிடம் என் ஜாதகத்தைக் கொடுத்து கன்சல்ட் செய்தேன். பிறகு பஹ்ரைன் திரும்பினேன். நான் வேலை பார்த்த கம்பெனியில் (டேட்டாமாஸ்) அப்போது கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் முடிந்திருந்தது.  ஒரு நாள் கம்பெனி எம்.டி என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அது அக்டோபர் முதல் வாரம், 1998 என்று நினைவு. அப்போது அவரிடம், நான் ஜோசியரை கன்சல்ட் செய்திருக்கிறேன். இந்தக் கம்பெனியை விட்டு இப்போது விலக மாட்டேன். ஆனால் இந்த மாதத்தில் மூன்றாம் வார முடிவில் நான் வேறு ஒரு கம்பெனியில் பணி புரிவேன், ஆனால் சம்பளம் இந்தக் கம்பெனியில்தான். புதிய கம்பெனி இந்த இடத்தைவிட்டு தூரமாக இருக்குமாம். எனக்கு ரிப்போர்டிங் பாஸும் வேறு கம்பெனியில்தானாம். வரும் ஏப்ரலில் வேலை மாறுதல் உண்டு என்று ஜோசியர் சொல்லியிருக்கிறார் என்றேன். அவர் சிரித்துக்கொண்டே கேட்டுக்கொண்டார். மூன்று வருடங்களில் என் நிறை குறைகள் அவருக்குத் தெரியும், என்னுடைய நல்லெண்ணமும் நல்ல நடத்தையும் என்னை நம்பிக்கைக்குரியவனாக ஆக்கியிருந்தது.

இது நடந்து பத்து நாள் கழிந்து ஒரு வியாழக்கிழமை, அலுவலகம் விட்டு நான் வீட்டுக்கு மதியம் வந்தேன். எங்களுக்கு வியாழன் மதியம் வரைதான் அலுவலகம். பிறகு வார இறுதி. வார முதல் நாள் சனிக்கிழமை. இப்படித்தான் அப்போது இருந்தது. சாப்பிட உட்காரும் நேரத்தில் கம்பெனி எம்.டி என்னை அவசரமாக அழைத்தார். உடனே வா, உன்னிடம் ஒன்று சொல்லவேண்டும் என்றார். அலுவலகத்துக்குச் சென்றபோது, உனக்கு ஜோசியம் சொன்னவர் எப்படி இவ்வளவு சரியாகச் சொன்னார் என்று கேட்டார். பிறகு அவரே இப்போதுதான் ஒரு பெரிய ஆயில் கம்பெனி கணிணித் துறைத் தலைவர் என்னிடம் பேசினார். அங்கு வேலை பார்க்கும் ஒருவன் விலகிவிட்டதால், நம் கம்பெனி அவர்களுக்கு Ingres தெரிந்த ஒருவரை அனுப்ப முடியுமா, அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவைப்படும், அதற்குள் அந்த சாஃப்ட்வேரை ஆரக்கிளுக்கு மாற்றிவிடுவோம் என்றாராம். கம்பெனியில் எனக்கு மாத்திரமே ingresல் அனுபவம் உண்டு என்பதால் (கெம்ப்ளாஸ்ட் அனுபவம்) என்னை அனுப்ப உத்தேசித்திருக்கிறாராம்.  அதனால் சனிக்கிழமை முதல் நான் அந்த கம்பெனிக்கு ரிப்போர்ட் செய்யணும் என்றார். ஜோசியர் சொன்ன தேதிக்கும் நான் ரிப்போர்ட் செய்யும் நாளுக்கும் ஒரு தினம்தான் வேறுபாடு.

நாம் உடனே என்ன நினைப்போம்? அந்த ஜோசியரிடமே, நாளை என்ன குழம்பு சாப்பிடுவேன் என்று கேட்டுப்பார்க்க வேண்டியதுதானே இல்லை வேறு ஏதேனும் கேட்கலாமே, எல்லாம் பலிக்குமா என்போம். அப்படி நினைக்கக் கூடாது.  பின்னொரு காலத்தில் அதனைப் பற்றிச் சிந்திக்கும்போது, இறைவன், எம்.டி. மனத்தில் என் நினைவு வரணும் என்பதற்காக அவரிடம் நான் ஜோசியம் கேட்ட கதையைச் சொல்ல வைத்திருக்கிறார் என்றுதான் தோன்றியது.  ஜோசியத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதனால் அப்போது வந்த ஒரு சில வாய்ப்புகளை நான் கவனத்தில் கொள்ளவில்லை. எனக்கு புதிய வேலை வரும் ஏப்ரலில்தான் என்று மனதில் பதிந்துவிட்டது.

அப்படி நடந்ததா என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம். இப்போது மலம்புழா அணைக்கட்டுப் பகுதியின் படங்கள்.



விஞ்சில் அமர்ந்து செல்லும்போது அணைக்கட்டுப் பகுதி மிக அழகாக இருக்கும் (ஆனால் புகைப்படம் எடுப்பது கடினம்)

 

 

நீர் வெளியேறலை. வெளியேறும்போது எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா?

 

இந்த மாதிரி நீர்நிலைகளின் கரையில் வளரும் தாவரங்களிலிருந்து பேப்பர் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடிப்பது நல்லதா?

அணையிலிருந்து வெளியேறும் நீர் வரும் பாதை.

நந்தி தெரிகிறதா?

மிகவும் புகழ் பெற்ற யக்ஷி சிற்பம். இதனை காணயி குணிராமன் என்ற சிற்பி ஒற்றைக் கல்லில் உருவாக்கினார். 1969ல் நிறுவப்பட்ட இதன் ஐம்பதாவது வருடத்தில் கேரள அரசு அந்த ஓவியரை கௌரவித்தது. சிற்பத்தின் வெளிப்படைத் தன்மைக்காக சிலரால் குறை சொல்லப்பட்ட போதிலும், பெரும் புகழ் பெற்றது. இந்த ஓவியரே, திருவனந்தபுரம் சங்குமுகத்துறையில் ஜலகன்னிகா என்ற சிற்பத்தையும் உருவாக்கியிருக்கிறார்.

 

அழகிய சிற்பம், ஆபாசமாகத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக புகைப்படத்தின் கோணத்தை மாற்றியிருக்கிறேன். நம்ம எங்கள் பிளாக் சென்சார் அதிகாரி கௌதமன் சாரின் கத்தரியிலிருந்து தப்பிக்குமா?

 

 

 

 

இங்க கேமரா வைத்து யாரைக் கண்காணிக்கிறார்கள்? எடுத்த கோணத்தில் பாலம் தெரியவில்லை. அணைக்கு யாராவது ஆபத்து விளைவிக்கக் கூடாது என்பதற்கு கண்காணிப்பு அவசியம் அல்லவா?

 

 

அங்கும் ஒரு காற்றாலை வைத்து மின்சார உற்பத்தி செய்கிறார்கள். எனெர்ஜி எஃபிஷியண்ட் என்று இதைத்தான் சொல்கிறார்களோ?

இன்றைய படங்கள் உங்களைக் கவர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்த வாரம் தொடர்வோம்.

(தொடரும்) 


=====================================================================================


மனசாட்சியம் - 30
KGY Raman 

ரவுடிகள் பெருமை

மூன்றாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் கிளாஸ் ரவுடியின் பெயர் சண்முகம். நல்ல விஷயங்கள் யார் கையில் இருந்தாலும் பிடுங்கிக் கொண்டு விடுவான். தின்பண்டமாய் இருந்தால் உடனே தின்று விடுவான். வகுப்பு நடந்து கொண்டிருந்தால் கூட இப்படி எல்லாம் போக்கிரித்தனம் செய்யத் தயங்கியதில்லை. 

அடுத்து,  ஆறாம் வகுப்பு வரும்போது,  முற்றிலும் வேறு மாதிரியான ரவுடி அறிமுகம் ஆனான். பெயர் தக்ஷிணாமூர்த்தி. அவன் என்று சொல்ல வேண்டுமா இல்லை அவர் என்று குறிப்பிட வேண்டுமா என்று சந்தேகம் வரும் அளவுக்கு பெரிய பையன். ஊர்ப் பணக்காரரின் ஒரே பிள்ளை. வெள்ளைக் குதிரை பூட்டிய பள  பள வண்டியில் பட்டு வேஷ்டி பட்டு ஜிப்பாவில் ராஜகுமாரன் போல் வந்து இறங்குவான். அன்றாடம் ஒரு புது நோட்டுப் புத்தகம், புது பென்சில் சகிதம் வருவான். அவை பெரும்பாலும் யாருக்கோ ஒருவருக்கு அன்றே தானமாகத் தந்து விடப்படும்.  'நன்றே செயினும் அன்றே செய்க' என்கிற கொள்கையின் விளக்கம்.  எல்லா வாத்தியார்களிடமும் அலட்சியமாக,  கிட்டத்தட்ட அவ மரியாதையாகப் பேசுவான். 

" சார்!  நீங்க சொல்றது எதுவுமே புரியலை. "

 "ஹோம் ஒர்க்கா அதையெல்லாம் யார் செய்கிறது ? " 

இதெல்லாம் அவன் பேசும் வசனங்கள். நல்ல வேளையாக வேறு போக்கிரித்தனம் எதுவும் அவன் செய்ததில்லை.  இன்றைக்கு என்ன பேசுவான் என்று ஒவ்வொரு நாளும் நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்போம். அவனுடைய தகப்பனார் அப்படி என்ன செல்வாக்கு வைத்திருந்தாரோ தெரியவில்லை,  எந்த ஆசிரியரும் அவனுடைய அடாவடிகளைச் சகித்துக் கொள்வார்களே தவிர,  கண்டித்ததே கிடையாது. இடைவேளைகளில் பட்டாணிக்கடலை, கடலை  உருண்டை, நாகப்பழம்,  சாக்லேட் என்று வித விதமாகத் தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு வந்து எல்லாருக்கும் தாராளமாக வினியோகிப்பான்.  ஆறாவது வகுப்பில் சேர்ந்து ஒரு சில மாதங்களே ஆனதும் பள்ளிக்கு வருவதையே நிறுத்தி விட்டான். நாங்களும் அந்த ஊரை விட்டு வேறு ஊருக்குப் புறப்பட்டு விட்டோம். பிள்ளை பிழைத்துக் கொண்டதா என்று தெரியவில்லை.

ஏழு எட்டு வகுப்புகள் இரண்டும் ஒரு நகராட்சிப் பள்ளியில் படித்தேன். ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அந்த இரண்டு வகுப்புகளிலும் போக்கிரிப் பையன் என்று யாருமே இருந்ததில்லை. மாறாக ஓரே ஒரு போக்கிரி வாத்தியார் இருந்தார். நல்ல வேளையாக பெண் பிள்ளைகள் படிக்காத ஆண்கள் பள்ளி. அவரது விரசப் பேச்சுக்கள் எங்களைத் தாண்டி வெளியே போகவில்லை.

ஒன்பதாம் வகுப்பு ஒன்று மட்டும் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் படித்தேன்.  தலைமை ஆசிரியர் ஒரு  பாதிரியார். கண்டிப்புக்குப் பெயர் போனவர். எப்போது பார்த்தாலும் பிரம்பும் கையுமாகப் பள்ளியைச் சுற்றி வந்து கொண்டிருப்பார். மாணவர்களால் மட்டுமல்ல ஆசிரியர்களால் கூட "பெரிய சாமி" என்று தான் அழைக்கப்படுவார். இந்தப் பள்ளியில் போக்கிரிப் பையன்களுக்கு இடமே இல்லை. ஆனால் ஒரு வில்லன் பியூன் இருந்தான். பையன்கள் யாராவது ஏதாவது சிறு விஷமம் செய்தால் கூட, அவர்களை இழுத்துக் கொண்டு போய்ப் பெரிய சாமி முன்னால் ஆஜர்ப் படுத்தி விடுவான். பெரிய சாமியும் தன் பிரம்பாயுதத்தை எடுத்து நான்கு திருச்சாத்து சாத்தி அனுப்புவார்.

கட்டட வேலைக்காக வந்திருந்த ஒரு கர்டர் மேல் நடந்து " டங் " என்று சத்தம் வருவதை ரசித்த போது பியூன் என்னைப் பெரிய சாமி சன்னதிக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டான். நடுங்கும் குரலில் வாய் குழற,  " இனிமே செய்ய மாட்டேன் சாமி " என்று நான் சொன்னதும் ஆச்சரியகரமாக, எனக்குப் பிரம்படி கிடைக்கவில்லை. இது அந்த பியூனுக்குப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. " உனக்கு சுழி நல்லா இருக்கு பொழைச்சுப் போ " என்று என்னை ஆசிர்வதித்து அனுப்பினான். 

பத்தாம் வகுப்பில் பள்ளி பூராவும் ரவுடிகள். இது வேறு ஊர் வேறு பள்ளி. சம்பந்தம் கோதண்டராமன் என்ற இரண்டு பெயர்கள் மட்டும் நினைவில் இருக்கிறது. இரண்டு பேரும் கட்சி போட்டுக் கொண்டு ஒருவர் அணியை இன்னொருவர் தாக்கியவாறு இருப்பார்கள். போர்க்காலச் செய்திகள் போல இவர்கள் அடித்துக் கொள்வது அன்றாடம் மாணவர்கள் இடையே பேசப்படும்.  கோதண்டராமன் ஒரு முறை , எதிரியை " உன்னை இரவல் செருப்பால் அடிக்கிறேன் " என்று சவால் விட்டுவிட்டு, எங்கள் வகுப்பில் இருந்த முகமது யூசுப் என்கிற பரம சாதுப் பையனின் செருப்பை கேட்டு வாங்கிப் போய் எதிரியை அடித்து விட்டுத்  திருப்பிக் கொடுத்தான். விவரம் அறிந்த யூசுப் தேம்பித் தேம்பி அழுதது எனக்கு இன்றும் நினைவு இருக்கிறது. 

பதினொன்றாம் வகுப்பு.  மீண்டும் வேறு ஸ்கூல். இதுவும் கிறிஸ்தவப் பள்ளி. இங்கும் தலைமை ஆசிரியர் ஒரு பாதிரியார். சிரித்த முகத்துடன் சாந்தமாக இருந்த இவர் பெரியசாமிக்கு நேர்மாறான கருணைத் தெய்வம். 

குலசேகரனை ரவுடி என்று சொல்ல முடியாது. எந்த தப்பும் செய்யாத அப்பாவிப் பிள்ளை. அப்போதெல்லாம் ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு மூன்று வருடங்கள் படித்து மாணவர்கள் நிதானமாக மேலே வருவார்கள். குலசேகரன் அந்த வகை. " யப்பா,  கொலே, ஹோம் ஒர்க் பண்ணினியா ? " என்று ஆசிரியர்கள் உரிமையோடு கேட்பார்கள். குலசேகரன் என்கிற பெயரை " கொலெ " என்று கூப்பிட ஒரு தைரியம் வேண்டும். குலசேகரன் ஒரு தாத்தா பேரப் பிள்ளைகளுக்கு பேசுகிற தொனியில் ஆசிரியர்களுக்கு பதில் சொல்வான். அனுபவத்தின் பெருமை.  நான் பாஸான வருடம் குலசேகரன் பாஸ் ஆனானா என்று தெரியவில்லை.

அந்த நாட்களில் ரவுடி என்ற பெயர் அவ்வளவு பிரபலம் இல்லை.  மாறாக எல்லாரும் சண்டியர் என்று குறிப்பிடப்பட்டார்கள்.  அவர்கள் தப்பு செய்திருந்தாலும் பிற மாணவர்கள் அவர்களை ஒரு ஹீரோவைப் போல்தான் பார்த்தார்கள்.   நம் சினிமாக் கதாநாயகர்கள் ரசிகர்களிடையே பெரிய ஹீரோக்களாக உலவுவதன் ஆரம்ப கட்டத்தைத் தான் நான் விவரித்திருக்கிறேன் என்று இப்போது  எனக்குத் தோன்றுகிறது.

என் இனிய ரவுடி நண்பர்களே,  நீங்கள் இன்னும் இருக்கிறீர்களா ? பள்ளிக்குப்பின் சமூகத்தில் நல்ல பெயர் எடுத்து கௌரவமாக நலமாக வாழ்வீர்கள் என்று நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!