பிரம்ம முகூர்த்தமாகிய அதிகாலைக்கேற்ற நிலை தியானம் என யாரும் ஒப்புக்கொள்வர்.
"இறைவனிடம் பேசுதல் பிரார்த்தனை, இறைவன் பேச்சைக் கேட்பது தியானம் " என்று ஒரு ஆழ்பதிவு அண்மையில் கண்ணில் பட்டது.
எண்ணங்கள் அலைமோதும் மனதை ஒரு நிலைப் படுத்தி, ஒரு நல்லெண்ணம் அல்லது எண்ண அலைகள் சஞ்சலிக்காத ஆழ் நிலையிலிருப்பது தியானம். இது குரு முகமாக, ஒரு மந்திரச்சொல் அல்லது மூர்த்தத்தின் துணை கொண்டு அடையப் படுவதாய் சொல்லப்படுகிறது. இது முற்றிலும் தனி மனிதனின் சாதனை அல்லது சித்தி. பயிற்சியால் பெறப்படுவது சாதனை, அருளால் வரப்படுவது சித்தி என்கிறார்கள். இது பற்றி சாதனையோ சித்தியோ கைவரப்பெறாத எவரும் எதுவும் சொல்வதற்கில்லை. அவரவர் தம் முயற்சியால்தான் பெற்றாக வேண்டும். அதிர்ஷ்டம் குறித்த விஷயம்.
மற்றபடி, அதிவிடிகாலை நேரம் இசை பாடுவதில் அல்லது கேட்பதில், ஆன்மீகம் படிப்பதில் செலவழியலாம்.
எது எப்படியானாலும், காலையில் கணிசமான பொழுது சஞ்சலமற்ற அமைதியில் தொடங்கப்படுவது உன்னதமானது -- ஐயமில்லை.
செய்தி அறிக்கைகள், "நிஜம்" நிகழ்ச்சிகள், கந்தல் காமெடிகள் குறுக்கிடாத எல்லாக் காலையும் நல்ல தொடக்கமே .