"இன்னிக்கி என்ன சமைக்கறது?"
இந்தக் கேள்வி வீட்டில் அடிக்கடி கேட்கிறேன். அதாவது கேள்வி நான் கேட்கவில்லை. கேள்வி கேட்கப் படுவதைகேட்கிறேன்! கேட்பது பாஸ். என்னவோ அவருக்கு அதில் ஒரு சலிப்பு வந்து விட்டது போல.. இங்கு மட்டுமா கேட்கிறேன்? எல்லார் வீட்டிலும் இந்தக் கேள்வி வரும் என்றுதான் நினைக்கிறேன்! சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட வயதில் ஒரே மாதிரி வேலையை தினசரி ஒரே மாதிரி செய்வோருக்கு ஏற்படும் சலிப்பு. என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.. அவ்வப்போது கைகொடுக்க ஆரம்பித்தேன்.என் அம்மாவுக்கும் இதே பிரச்னை இருந்தது.
கொஞ்சம் வித்தியாசமாக.
சமைப்பது எது வேண்டுமானாலும் சமைத்து விடுவார். சாயங்காலம் டிஃபன். அதுதான் அவர் பிரச்னை. அப்போதைய கதாநாயகன் என் அப்பா. அப்படீன்னா இப்போதைய கதாநாயகன் நீயான்னு கேட்கப்படாது. நான் சொல்ல மாட்டேன்.
என்ன சமைப்பது என்று யாரிடமும் யோசனை கேட்கக் கூடாது என்பது முதல் பாடம்! ஆளுக்கு ஒன்று சொல்வார்கள். எது செய்தாலும் ஒருவர் குறையோடு இருப்பார். எல்லோருக்கும் எல்லாமும் பிடித்து விடுகிறதா என்ன! அம்மா சமைத்ததை நாங்கள் கேள்வி கேட்காமல் சாப்பிட்டது போல என் மகன்கள் இல்லை.
மேலும், என்ன சமையல் என்று சொல்லி விட்டு செய்தால் சாப்பிடும் நேரம் தட்டில் என்ன விழப்போகிறது என்கிற ஒரு சின்ன சஸ்பென்ஸ் மிஸ் ஆகி விடும். அந்த சஸ்பென்ஸ் பிடித்தது, பிடிக்காதது பேதத்தை உடைத்து விடும்!
நிறைய டிஃபன்கள் அப்பாவுக்குப் பிடிக்காது. ஆனால் அவரே " திரும்பித் திரும்பி இதையேவா?" என்றும் கேட்பார்! வெந்தய தோசை அவரின் ஃபேவரைட். எனக்கு கொழுக்கட்டை மாதிரி அவருக்கு வெந்தய தோசை. அவரின் வெந்தய தோசை ஆசையை நிறைவேற்றிய பாஸால் என் கொழுக்கட்டை ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. இந்த வருட என் பிறந்த நாளின்போது சஸ்பென்சாக செய்கிறேன் என்று மாலை கொஞ்சம் கொழுக்கட்டை செய்தார். மாவுக்குள் இருந்த பூரணத்தை தேட நான் கணேஷ் வசந்த்தைத் தேடினேன்.
சில சமயங்களில் சில காய்கறிகள் சமைக்கப்படாமலேயே தூக்கி எறியப்படும் அவலங்களும் நடக்கும். அப்புறம் நான் முறையை வகுத்துக் கொடுத்தேன். வாங்கி வைத்திருக்கும் காய்கறிகளுக்கேற்ப ஒவ்வொரு நாளும் இதுதான் என்று டேபிள் மாதிரி போட்டேன்.
நானே நிர்வகித்தேன், நறுக்கிக் கொடுத்தேன். சமயங்களில் நானே செய்தும் விடுவேன்.
மனதில் ஒரு ஐடியா உருவாக கீழ்க்கண்ட லிஸ்ட் உதவலாம்.
திங்கள் - வெந்தயக்குழம்பு, உருளை அல்லது சேப்பங்கிழங்கு ரோஸ்ட் ;
செவ்வாய்க்கிழமை : மோர்க்குழம்பு, பச்சைக்காய் கறி :
புதன்கிழமை : தேங்காய் அல்லது பருப்புத் துவையல், பூசணி அல்லது சௌ சௌ கூட்டு :
வியாழக்கிழமை : தக்காளி, வெங்காய வதக்கல் (சாதம் கலந்து கொள்ளலாம்), வடகம்
வெள்ளிக்கிழமை : பொரிச்ச குழம்பு , கறி
சனிக்கிழமை : ரெடிமேட் சாதம்
ஞாயிற்றுக்கிழமை : வெங்காய சாம்பார், உருளைக்கிழங்கு கறி
இது ஒரு டென்டேட்டிவ் லிஸ்ட்தான். மாறுதல்கள் நம் மனதைப் பொறுத்தது. மயங்கி நிற்கும் மனதை எழுப்பி விட உதவும்.
பருப்புத் துவையல் செய்யும் நாட்களில் என் அம்மா ஓமம் போட்டு வெந்தயக்குழம்பு செய்வார் என்று ஞாபகம்.
கைவசம் உள்ள காய்கறிகளை பொறுத்து இதை உபயோகித்துக் கொள்ளலாம். நடுவில் சுண்ட / மிதுக்க வத்தல், மணத்தக்காளி வத்தல் என்று வத்தக்குழம்பும் செய்யலாம். நாங்கள் அப்பள வெந்தயக்குழம்பும் செய்வோம்.
நடுவில் ஒருநாள் மிளகு சீரகப்பொடி சாதம் சாப்பிடலாம். மணத்தக்காளி, வேப்பம்பூ வறுத்து சூடான சாதத்தில் நெய்விட்டு கலந்து சாப்பிடலாம்.
ஒருநாள் சமையலே இல்லாமல் வெறும் தயிர் சாதம் மட்டும் செய்து சாப்பிடலாம். சமைக்க நினைத்தால் சமைக்கலாம் வெரைட்டியா இல்லை கையினில்?
டிஃபன் வகைகளுக்கும் அப்படிதான் . என்ன செய்வது என்ன செய்வது என்று குழம்பும் சமயம் மனதில் சில ஐட்டங்கள் நினைவுக்கே வராது. எனவே ஒரு லிஸ்ட் போட்டேன். அதை Shuffle செய்தேன்.
1) இட்லி சாம்பார், சட்னி 2) புளி அவல் 3). தோசை, சட்னி, மி.பொ
4). பொங்கல், கொத்ஸு 5). ஜவ்வரிசி மோர்க்கூழ் 6). குறுணை உப்புமா
7) சப்பாத்தி, தால் 8). கோதுமை ரவா உப்புமா 9) பணியாரம் - தித்திப்பு
10).அரிசி மாவு உப்புமா 11) அடை 12) தேங்காய் சேவை 13). ஊத்தப்பம்
14). பூரி 15. ரவா உப்புமா 16. எலுமிச்சை சேவை 17. சப்பாத்தி குருமா
21) மோர் அவல் 22) அரிசி மாவு மோர்க்கூழ் - புளிப்பு மோர் போட்டும்
செய்யலாம், புளியைக் கரைத்தும் செய்யலாம்.23) கோதுமை தோசை
24) ரவாமைதா தோசை 25) உப்புமா கொழுக்கட்டை 26) புளிப்பொங்கல்
என்ன லாபம் என்றால் நினைவுக்கு சட்டென்று வராத டிஃபன் வகையறாக்கள் இதைப் பார்த்ததும் மனதில் அலார்ம் அடித்து, எதற்கான மூலப்பொருட்கள் வீட்டில் இருக்கிறதையோ அதைச் செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!