27.10.26

எ போ  கதை (பொக்கிஷம்)  : அந்த முட்டாள் வேணு - புதுமைப்பித்தன்

 அந்த முட்டாள் வேணு
​புதுமைப்பித்தன்

"லட்சுமணா! ஏன் வேணுவைப் பற்றிப் பேசும் பொழுது எல்லாம், அந்த முட்டாள் வேணு என்று சொல்லுகிறார்கள்!" என்று கேட்டேன்.

"என்னப்பா? வேணுவைப்பற்றி உனக்குத் தெரியாதா? மாம்பலத்திலிருந்து கொண்டு, வேணுவைப் பற்றித் தெரியாதென்றால் அதிசயமாக இருக்கிறது."

அவருக்கு அதிசயமாக இருந்தாலும், எனக்குத் தெரியாதென்று ஒத்துக் கொள்ள வேண்டியிருந்தது. உடனே உற்சாகமாக கதை சொல்லவாரம்பித்தார்:

"வேணுவைப்பற்றி உனக்குத் தெரியுமே. அவன் இங்கு தான் ஒரு பெரிய ஷாப்பு வைத்துக் கொண்டிருந்தான். அப்பொழுதும் மாம்பலத்தில்தான் குடியிருந்தான். அங்கிருந்துதான் கடைக்கு வருவதும் போவதுமாக இருந்தான்.
ஒரு நாள் சாயங்காலம் போர்ட் ஸ்டேஷனில் புறப்பட்டான். அப்பொழுது மின்சார ரயில் போடப்படவில்லை. டிக்கட்டை வாங்கிக்கொண்டு பிளாட்பாரத்தில் உலாவிக் கொண்டிருக்கும்பொழுது, அவன் மனம் பித்தம் பிடித்ததுபோல் ஓடிக்கொண்டிருந்தது. அன்று ரயிலில் கூட்டமில்லை.
பிளாட்பாரத்தில் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு அழகான பெண் ரயிலில் ஏற வந்தாள். பார்த்ததும், அவன் மனம் பித்துப் பிடித்தது போலாயிற்று.

அவனும் அவள் பின்னோடேயே தொடர்ந்தான். அவள் ஒரு தனி வண்டியில் ஏறினாள். அவன் பிளாட்பாரத்தில் அங்குமிங்கும் அசடு வழிந்துகொண்டு உலாவினான். அவளிடம் எப்படிப் பேசுவது? அதுதான் பெரிய பிரச்சினை. அப்பொழுது வண்டியும் புறப்பட மணி அடித்தது. உடனே அவனும் முன்பின் யோசியாது அந்த வண்டியில் ஏறி அவள் உட்கார்ந்திருந்த பலகைக்கெதிரில் உட்கார்ந்தான்.

அவள் அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, கையிலிருந்த புத்தகத்தைப் படிக்கவாரம்பித்தாள். சில சமயம் ​அவள் கண்கள், அவனைத் தற்செயலாக நோக்கும். கையிலிருந்த புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தவள் திடீரென்று உள்ளுக்குள்​ நகைத்துக் கொண்டாள்.

வேணுவிற்கு இவ்வளவும், அவள் தனது வடிவழகில் ஈடுபட்டதினால் ஏற்பட்டது என்று தோன்றியது. பேசுவதற்கு நாவோடவில்லை. வாய் அடைத்துக் கொண்டது.

எழுந்தான்.  திடீரென்று முன்பின் யோசியாது அவளைக் கட்டித்தழுவி முத்தமிட்டான். 

அவள், ஒரு குதியில் தன்னை விடுவித்துக் கொண்டு கூக்குரலிட்டுச் சங்கிலியைப் பிடித்திழுத்தாள்.

வண்டி நின்றது. கார்டுகள், போலீஸ்காரர்கள் எல்லோரும் அங்கு கூடினர். விஷயம் தெரிந்தது. வேணு கைது செய்யப்பட்டு, ஸ்டேஷனுக்குப் போனதும் ரிமாண்டில் விடப்பட்டான்.

அப்பொழுது நான் ஒரு தினசரிப் பத்திரிக்கையில் இருந்தேன். வேணு மறுநாள் என்னைப் பார்க்க வந்தான். என்ன செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. என்ன செய்வதென்று என்னைக் கேட்டான்.

"போடா முட்டாள், இந்த விஷயங்களில் எல்லாம் இப்படியா நடந்து கொள்வது?" என்று கண்டித்தேன்.

வேறு விதியில்லை. அவனைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. ஏதாவது ஒரு மாதிரியாக முடித்து வைக்கலாம் என்று மாஜிஸ்திரேட்டைப் பார்க்கச் சென்றேன்.

அந்தப் பெண்ணின் பெயர் சாந்தாவென்றும், அவள் ஜாதியில் பிராமணப் பெண் என்றும், அவள் பெற்றோர் இறந்துவிட்டதினால் சித்தப்பாவுடன் வசிக்கிறாள் என்றும் அவள் இப்பொழுது உபாத்தியாயினியாக இருந்து வருகிறாள் என்றும் அறிந்தேன்.

மாஜிஸ்திரேட் அந்தப் பெண்ணின் சித்தப்பா ஒரு கேஸ் போட்டிருக்கிறார் என்றும் அதை அவர்கள் வாபஸ் வாங்கிக் கொண்டால், போலீஸ் கேஸை தள்ளுபடி செய்துவிடுகிறேன் என்றும் கூறினார்.

இதற்கென்ன செய்வது? அந்தப் பெண்ணின் சித்தப்பா எப்படிப்பட்டவரோ?
​அவரைப் போய் பார்த்தால்தான் முடியும்.

அன்று மத்தியானம் மூன்று மணிக்கு அவரைப் பார்க்கச் சென்றேன். அவர் ஒரு பென்ஷன் உத்தியோகஸ்தர். தியஸாபிக் பைத்தியம். அவருடைய சகதர்மிணியும் அப்படித்தான்.

கதவைத் தட்டியதும் ஒரு பெண் வந்து கதவைத் திறந்தாள். நல்ல அழகி. ஆம், அவள்தான். அந்த முட்டாள் செய்த தவறில் ஒரு ஆச்சரியமும் இல்லை.

"சித்தப்பா இருக்கிறாரா?" என்று கேட்டேன். 

அவள் உள்ளே அழைத்துச் சென்றாள். அவள் சித்தப்பாவிற்கு ஒரு பத்திரிக்கையாசிரியர் தன்னைத் தேடி வீட்டிற்கு வந்து விட்டார் என்ற உத்ஸாகத்தில் தலைகால் தெரியவில்லை. அதிலும் எங்கள் பத்திரிக்கையில் அவருக்கு ஒரு பிரேமை இருந்தது.

குசலப் பிரச்னம் நடந்தபின், நான் வந்த காரியத்தைத் கூறினேன். இந்தக் கேஸினால் விஷயம் அதிகமாகப் பிரச்சாரமாகிப் பேச்சுக்கிடமாகும் என்பதை விளக்கமாகக் கூறினேன். அவருக்கும் அம்மாதிரிதான் பட்டது. ஆனால் அதைப்பற்றித் திடமாக ஒரு முடிவும் கூறவில்லை.

சகதர்மிணியைக் கேட்டுச் செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால் கேஸ் மறுநாளைக்கு கோர்ட்டுக்கு வருவதைக் குறிப்பிட்டேன். செய்வதாக இருந்தால் இன்றே ஆரம்பிக்க வேண்டும் என்றேன்.

அவர் உடனே சென்று, திருவல்லிக்கேணிக்குச் சொல்லித் தாம் வரும்வரை இருக்கும்படி கேட்டுக் கொண்டு சென்றுவிட்டார்.

வீட்டில் என்னையும் அவளையும் தவிர வேறு ஒருவரும் கிடையாது.
அவளுடன் பேச ஆரம்பித்தேன்.

"இந்தக் கேஸினால் எவ்வளவு தொந்தரவு இருக்கிறது. கோர்ட்டின் முன்பு நிற்கும்பொழுது எத்தனை பேர் சிரிப்பார்கள். நமக்குள்ளாக, ஒரு பேச்சிற்குச் சொல்கிறேன். அந்த முட்டாளுக்குப் புத்தி கற்பித்துவிட்டு, வேறு வண்டியில் ஏறியிருந்தால், இந்த கூக்குரல் இடாமல்?" என்றேன்.
​
​அவள் சிரித்தாள். "நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். அந்தச் சமயத்தில் நான் பயந்துவிட்டேன். பைத்தியக்காரன் கொல்ல வருகிறானாக்கும் என்று பயந்தே போனேன். அந்த முட்டாள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை" என்றாள்.

நான் சிரித்துக்கொண்டு, "மன்னிக்க வேண்டியது தான் என்று ஒப்புக் கொள்ளுங்கள். எப்படி இருந்தாலும் தங்களைப் போன்ற... அதில் அதிசயம் ஒன்றுமில்லை"

அவளும் என்னைவிட அதிகம் சிரித்தாள். "ஆசைக்கும் செய்கைக்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது."

“நான் திடீரென்று, இப்பொழுது உங்களை முத்தமிட்டால் என்ன செய்வீர்கள்" என்றேன்.

“அதற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லையா?"  நேராக எனது கண்களை நோக்கினாள்.

“இரண்டும் ஒன்றல்லவென்று எனக்கும் தெரியும்."

"மேலும் நீங்கள் அவனைப்போல் முட்டாளா? மேலும் உங்களைப்போல்..." என்று கடைக்கண்ணால் நோக்கினாள்.

உடனே அவள் தடுக்க முயலுமுன் அவள் கன்னத்தில் ஒரு முத்தமிட்டேன்.

"மன்னியுங்கள். எனக்கும் அந்த வேணுவைப்போல் கோர்ட்டிற்குச் செல்ல வேண்டும் என்றுதான் ஆசை" என்று மிகவும் தாழ்மையாகச் சொன்னேன்.

"ஏன்?" என்று கேட்டாள்.

தங்களை "தங்களைப் போன்ற அழகியை நான் கண்டதே இல்லை. முத்தமிட்டதே பெரிய வெற்றி. அதற்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் ஏற்பேன்" என்றேன்.

அவளும் சிரிக்க ஆரம்பித்தாள்.

​“நீங்கள் வேடிக்கைக்காரராக இருக்கிறீர்கள்?" என்றாள்.

அவள் சொல்லி முடியுமுன் அவளை மறுபடியும் அணைத்து முகத்திலும் அதரங்களிலும் முத்தங்களைச் சொரிந்தேன்.

தன்னை விடுவித்துக் கொண்டு, "நீங்கள் ஒரு மிருகம், உங்களுடன் பேசியதே தவறு" என்றாள்.

"மன்னியுங்கள், மன்னியுங்கள். நான் உங்களைக் காதலிக்கிறேன். தங்களைக் கண்ட ஒரு வருஷ காலமாக எனது காதல் வளர்ந்து கொண்டே வருகிறது" என்று மனமறிந்து பொய் கூறினேன்.

“தங்களை ஒரு வருஷத்திற்கு முன்பு சென்னையில் சந்தித்தேன். அப்பொழுதே காதல் கொண்டேன். நான் வேணுவிற்காக இங்கு வரவில்லை. அந்தச் சாக்கை வைத்துக்கொண்டு தங்களைக் காணுவதற்காகவே வந்தேன்" என்றேன்.

அவளும் என்னைத் தழுவி முத்தமிட்டாள்.

இரவு ஏழு மணி இருக்கும். அவள் சித்தப்பா வந்து சேர்ந்தார். இருவரும் வழியிலேயே பேசி முடிவு கட்டி விட்டார்களாம். கேஸை வாபஸ் வாங்குவதாகச் சொன்னார்கள்.

அவர்களுடைய விடையையும் சாந்தாவின் ஆலிங்கனத்தையும் பெற்றுக்கொண்டு வெளியேறினேன். 

பிறகு சமீபத்தில் அவளைச் சந்திக்க நேர்ந்தது. அவள் ஒரு டி.இ.ஒ.விற்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள்.

​அவளுடைய கணவன் என்னை மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார்.

"தாங்கள் அந்த முட்டாள் வேணு விஷயத்தில் எவ்வளவு மரியாதையாக, பக்குவமாக நடந்து கொண்டீர்கள் என்று சாந்தா அடிக்கடி புகழ்ந்து கொண்டு இருக்கிறாள்" என்று என்னை மரியாதையாக வரவேற்றார்.


1934 ல் புதுமைப்பித்தன் எழுதிய கதை.

ஒரு அறியாத அந்நியப்பெண்ணை முத்தமிடுவது - அதுவும் அந்தக் காலத்தில் - இவ்வளவு எளிதா?  புதுமைப்பித்தன் மனதில் என்ன இருந்ததோ..  அதில் அவளும் ஆலிங்கனம் செய்து முத்தமிடுகிறாளாம்.  என் புரிதலில் ஏதாவது பிழையா?  மறைபொருள் வேறேதும் உண்டோ?  அவள் அப்பாவும் இருவரையும் தனித்திருக்க வைத்து விட்டு வெளியே சென்று விடுகிறாராம்!   நலல்வேளை அகல்யை போல வேறெதுவும் நடந்து விடவில்லை.  அவளும் அவள் துறை சார்ந்த ஒரு அதிகாரியை அப்புறம் மணந்து சந்தோஷமாக இருக்கிறாள்.  புதுமைப்பித்தரே..  என்னைப்பொறுத்த வரை கதை அல்பமாயிருக்கிறது!

=============================================================================================================

மனசாட்சியம் - 26
KGY Raman 

ரசித்தது என்ன, எப்படி ?

பத்திரிகைகளில் கதை கட்டுரைகள் படிப்பது என்ற சுவாரசியம் எனக்கு எப்போது எப்படி ஏற்பட்டது என்று யோசித்துப் பார்த்தால் சரியான விடை கிடைக்கவில்லை.  பொழுது போகாமல் வீட்டில் இருந்த நாட்களில் நூலகம் சென்று அங்கிருக்கும் சஞ்சிகைகள் புத்தகங்களை மேலோட்டமாகப் பார்த்து ஏதாவது சுவாரஸ்யம் ஏற்பட்டால் அதைப் படித்து முடித்து விடுவேன். 

படே படே எழுத்தாளர்களுக்கு எல்லாம் முன்னால் எனக்கு அறிமுகமானவர் கல்கி. பொன்னியின் செல்வன் வெளிவந்து கொண்டிருக்கும் போதே ரசித்துப் படித்தது நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் கல்கியின் கட்டுரைகளும் சங்கீத விமர்சனங்களும் புத்தகங்களாக வெளிவந்த போது பலமுறை ஆர்வமாகப் படித்திருக்கிறேன்.  அப்புறம்தான் இந்த இலக்கிய எழுத்தாளர்கள் இலக்கிய விமர்சகர்களின் கட்டுரைகள் இவை பற்றிய அறிமுகம் ஏற்பட்டது. 

" கல்கி ஒன்றும் பெரிய எழுத்தாளர் அல்ல -  அவருக்கு நாவல் எழுதத் தெரியுமே தவிர , கதை எழுத வராது. அவருடைய சரித்திர நாவல்கள் உண்மையில் சரித்திர நாவல்களே அல்ல. சில ஆங்கில நாவல்களின் தாக்கத்தால் அவர் எழுதியிருக்கிறார் " என்றெல்லாம் விமர்சனங்களைப் படித்த போது அந்த விமர்சகர்களின் பெயரில் எனக்கு மிகுந்த கோபமும் வருத்தமும் ஏற்பட்டது. ஆனாலும் கல்கியின் சிறுகதைகள் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்பதும் ஓரளவு உண்மைதான். அவருடைய கட்டுரைகள் பிரமாதமாக இருக்கும். அவருடைய சரித்திர நாவல்கள் அவை புனையப்பட்டவையாக இருந்தாலும் கூட அற்புதமானவை. முக்கியமாக மிகவும் இயல்பான நகைச்சுவை மிக்க சம்பாஷணைகளை அவருடைய நாவல்களில் காணலாம். 

சரி,  இந்த விமர்சகர்கள் இவ்வளவு சொல்லுகிறார்களே,  இவர்கள் பாராட்டுகிற பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்துப் பார்க்கலாம் என்கிற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.

மௌனி, புதுமைப்பித்தன், லா ச ராமாமிர்தம், அசோகமித்திரன், இப்படியாக பல பேருடைய கதை/நாவல்களை ஆர்வத்தோடு படித்தேன்.

இந்த நட்சத்திரக் கூட்டத்தில் என்னைக் கவர்ந்த நட்சத்திரம் தி. ஜானகிராமன். 

ஒரு ஆச்சரியம் என்னவென்றால் நான் படித்த பல பெரிய எழுத்தாளர்களின் கதைகளிலும் திருமணத்தை தாண்டிய உறவு அல்லது விலை மாதர் சகவாசம் இப்படியே பெரும்பாலும் இருந்தது. இது எனக்கு ஒரு ஆச்சரியத்தை அளித்தது. இதைப் பற்றி எழுதி மீண்டும் மீண்டும் எழுதி நட்சத்திர அந்தஸ்து பெறுவது எனக்கு சற்று வியப்பாகக் கூட இருந்தது.  புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமி பிள்ளையும் ஒன்றுதான் நான் மிகவும் ரசித்த கதை. 

கு.ப.ராஜகோபாலன் இந்த நட்சத்திரக் கூட்டத்தில் அற்ப ஆயுளில் மறைந்து போன பிரபல எழுத்தாளர்.

என் அப்பா " கு ப ராஜகோபாலன் என்னுடைய சிநேகிதன் " என்று சொல்லி எனக்கு வியப்பளித்தார். அவருடைய கதை ஒன்றிரண்டை தேடிப் பிடித்துப் படித்தபோதும் எனக்கு சற்றே ஏமாற்றமாகத்தான் இருந்தது.  கு ப ரா எப்போதும் மொட்டை மாடியில் இரவு வேளைகளில் நின்று கொண்டு,  நட்சத்திரக் கூட்டங்களை நெடு நேரம் ஆர்வமாகப் பார்ப்பாராம். (இது என் அப்பா எனக்கு அளித்த ருசிகரத் தகவல்.)

லா.ச ராமாமிர்தம் சுந்தர ராமசாமி கி ராஜநாராயணன் ஆகியோரது பல கதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன்.

ஜெயகாந்தன் பிற்காலத்தில் மிகப் பிரபலமானவர். அவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு முறை எங்கள் வீட்டு திருமணத்திற்காக நாங்கள் போய்க் கொண்டிருந்தபோது என் பெரியப்பாவும் சித்தப்பாவும் ஏன் அப்பாவும் ஒரு கட்சி. அதாவது ஜெயகாந்தன் ஒன்றும் பெரிய எழுத்தாளர் இல்லை .  ஏழைகளைப் பற்றி மட்டுமே எழுதுகிறார். 

எதிர்க்கட்சியாக நானும் திரு பாஹே அவர்களும். 

விவாதம் கிட்டத்தட்ட ரயில் பயணம் முடியும் வரையிலும் மணிக் கணக்கில் மிகவும் சூடாக நடந்தேறியது.  பாஹே " நீங்க ஜெயகாந்தன் கதைகள் எவ்வளவு படித்திருக்கிறீர்கள் ? "  என்று கோபமாகக் கேட்டபோது தான் அவர்கள் யாருமே எந்தக் கதையுமே படித்ததில்லை என்பது தெரிய வந்தது.  

நான் இங்கு சொல்லி இருக்கிற என் கருத்துக்களில் கூட அந்த மாதிரி ஒரு பிழை இருக்கலாம். வேறு பல உணர்வுகள் பற்றி நட்சத்திர எழுத்தாளர்கள் சிறந்த கதைகள் எழுதி இருக்கலாம். அவைகளைப் படிக்காதது என் குற்றம் தான். 

தி ஜானகிராமன் கூட பெரும்பாலும் வழக்கத்துக்கு மாறான சினேகங்களைப் பற்றி எழுதியிருக்கிறார் என்பது கூட உண்மைதான். ஆனால் அதை அவர் கையாண்டு இருக்கிற முறை அற்புதமானது. ஒரு சில வார்த்தைகளை மிகப் பல உணர்ச்சிகளை நாசுக்காக காட்டிச் செல்கிற பக்குவம் பிரமிப்பளிக்கிறது. 

என் அபிமான அடுத்த நட்சத்திரம் சுஜாதா ரங்கராஜன். இவரைப் பற்றி இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்கிற அளவுக்கு எல்லாம் பலராலும் சொல்லியாகிவிட்டது.

தமிழ் எழுத்தாளர் வரிசையில் வேறு சில பிரபல எழுத்தாளர்களும் உண்டு. அவர்களின் பலரும் சிருஷ்டி கர்த்தாக்கள் அல்ல கெட்டிக்காரர்கள் அல்லது பிழைக்கத் தெரிந்தவர்கள். இந்த மாதிரி எல்லாம் அபிப்பிராயம் சொல்லிப் போகையில் அது யார் யார் என்று அடையாளம் சொல்லக்கூடாது என்பது எழுதப்படாத விதி.

தமிழில் படிப்பதற்குக் கிடைத்திருக்கிற செல்வம் அபரிமிதமானது. அவற்றை தற்போதைய தலைமுறையினர் கண்டு கொள்வதே இல்லையோ என்கிற கவலை எனக்கு எப்போதும் உண்டு.

5 கருத்துகள்:

  1. அனைவரும் வளமாக வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. புதுமைப்பித்தன் கதையா இது. ஏதோ ஹரால்ட் ராபின்ஸ் மாதிரி இருக்கே.
    ம்ஹூம் சரியில்லை.

    பதிலளிநீக்கு
  3. தி ஜானகிராமன் கூட பெரும்பாலும் வழக்கத்துக்கு மாறான சினேகங்களைப் பற்றி எழுதியிருக்கிறார் என்பது கூட உண்மைதான். ஆனால் அதை அவர் கையாண்டு இருக்கிற முறை அற்புதமானது. ஒரு சில வார்த்தைகளை மிகப் பல உணர்ச்சிகளை நாசுக்காக காட்டிச் செல்கிற பக்குவம் பிரமிப்பளிக்கிறது. '' இதுதான் உண்மை. அவரோடு மனசுக்கு இதமாய்க் கதை சொல்ல யாராலும் முடியாது. உயிர்த்தேனை எத்தனை தடவை படித்தாலும் அலுக்காது. உயர்ந்த மனிதர்களைச் சொல்ல வேண்டுமானால் அன்பே ஆரமுதே. அந்த நாளைய சென்னை அப்படியே கண்முன் வரும். எத்தனை நல்ல உள்ளங்கள் அந்தக் கதையில் !!! அனைவருக்கும் ஒரு நியாயம்

    பதிலளிநீக்கு
  4. ஜெயகாந்தன் கதைகளில் உண்மை தெறிக்கும். யாருக்காக அழுதான் படித்து மனம் தெளிந்தவர்கள் எத்தனையோ. அனேகமாக எல்லாம் படித்தாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  5. சுஜாதா சாரைப் பற்றி என்ன சொல்வது? யுக புருஷன்.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!