29.10.26

முழங்காலோ மைசின் முழங்கையோ மைசின்

சைக்கிள் வண்டி மேலே :: 04 எஸ் எல் ஆர் சி கே!



என்னுடைய பெரிய அக்காவுக்கு, நான்கு குழந்தைகள். ரெண்டு பசங்க, ரெண்டு பொண்ணுங்க. அந்த நாட்களில், ரெண்டு பசங்களும் தனித்தனியா இருந்தா ரத்தினங்கள். ஒண்ணா சேர்ந்தா அராஜகக் கொழுந்துகள். இவர்கள் இருவரிடமும்தான் நான் முப்பது வருடங்களுக்கு முன்பு, வகையாக மாட்டிக் கொண்டேன். 

மதுரை சென்றிருந்த போது, பேச்சு வாக்கில் அவர்களிடம், 'எனக்கு கேரியரில் உட்கார்ந்துதான் சைக்கிள் ஓட்டத் தெரியும்; சைக்கிளில் ஏற, இறங்கத் தெரியாது, சீட்டில் உட்கார்ந்தும் சைக்கிள் விட்டதில்லை' என்று 
கூறினேன்.  
  
அவ்வளவுதான் - அவர்கள் இருவருக்கும் பயங்கரக் கோபம் வந்துவிட்டது. "மாமா - நீங்க இப்படி சொல்வது உங்களுக்கே வெட்கமாக இல்லையா? அவனவன் ஹெர்குலிஸ் கணக்கா ஹீரோ சைக்கிள் ஓட்டறான். நீங்க கேரியரில் உட்கார்ந்து ..... ஹூம். நல்ல வேளை இப்பவாவது சொன்னீங்க. கிளம்புங்க ரேஸ் கோர்ஸ் பக்கம். பத்து ரூபாய் கொடுங்க. ஒரு அவர் சைக்கிள் இப்பவே எடுத்து வந்துவிடுகிறோம். இன்றைக்கு நைட்டு தூங்கப் போகும்பொழுது நீங்க * எஸ் எல் ஆர் சி கே யாகத் தான் தூங்கப் போவீர்கள்" என்றனர்.  

ஆமாம், ஆமாம் உடனேயே கேட்டேன், 'எஸ் எல் ஆர் சி கே - என்றால் என்ன?' 'எஸ் எல் ஆர் சைக்கிள் கிங்' என்றனர். ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தபுஸ்டியாகப் புன்னகை புரிந்துகொண்டனர். (*எஸ் எல் ஆர் சி கே என்றால் வேறு ஏதாவது சைடு மீனிங் இருக்கா?) 

நான் பர்சைத் திறந்து, பத்து ரூபாயை எடுத்து சின்னவனிடம் கொடுத்து, "டேய் - பார்த்து ஒரு சின்ன சைக்கிளா, கேரியர் இருக்கற சைக்கிளா எடுத்து வாடா" என்றேன். "அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்" என்று சொல்லி, சிட்டாகப் பறந்தான் அவன். 

நான் சைக்கிள் கனவுகளில், (சக்கரம் இல்லாத வெள்ளை இறக்கைகள் ஸ்லோ மோஷனில் ஆடுகின்ற சைக்கிள்கள்) மிதந்தவாறு, பெரியவனுடன்  ரேஸ் கோர்ஸ் பக்கம் சென்றேன். 
சின்னவன், பத்தே நிமிடங்களில் அய்யனார் கோவில் குதிரை உயரம் கொண்ட, கேரியர் இல்லாத தொத்தல் சைக்கிள் ஒன்றின் மீது ஆரோகணித்து வந்தான். அந்த சைக்கிளைப் பார்த்த உடனேயே எனக்கு 'சைக்கிள் ஓட்டுவேன்' என்று இருந்த  கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் 'புஸ்' ஆனது. 

"என்னடா இது? கேரியர் எங்கேடா?"

"மாமா அவர் சைக்கிளில் எல்லாம் எந்த மானமுள்ள மடையனும் கேரியர் விட்டு வைக்கமாட்டான்."

"ஏன்?" 

"அதுவா, கேரியர் இருந்தா பசங்க சிட்டுங்களை ஏத்திகிட்டு குஷாலா ரவுண்டு அடிப்பானுங்க என்று அந்த மா. மடையர்களுக்குத் தெரியும்." 

எனக்குக் குழப்பம் வந்துவிட்டது. மானமுள்ள மடையன் என்றால் யாரு? அந்த மானமுள்ள மடையர்கள் ஏன் சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்யத் தயங்குகின்றனர்? நான் குழம்பித் தெளிவதற்குள், சின்னவன், "இருங்க மாமா - சைக்கிள் நல்ல கண்டிஷன்ல இருக்குதா, ஆக்சிலேரேட்டர், பிரேக், க்ளட்ச் எல்லாம் ஒழுங்கா இருக்குதான்னு ஒரு ரவுண்டு போய்ப் பார்த்துவிட்டு வருகின்றேன்" என்று சொல்லி, என் பதிலுக்குக் காத்திராமல், சைக்கிளை ஓட்டிச் சென்றுவிட்டான். 

அப்போ பின்னாடி யாரோ ஒருவர், சைக்கிளில் வந்தவாறு, "புலி .... புலி' என்று கத்த, திக்பிரமை பிடித்து, ஓடத் தயாரானேன். அவருடைய சைக்கிளில் கேரியர் இருந்தது. அதில் சிட்டுக்குருவிகள் ஏதேனும் தென்படுகின்றனவா என்று ஆவலோடு பார்த்தேன். ஒரு புளிமூட்டைதான் இருந்தது. 
      
சின்னவன் பத்து நிமிடங்கள் கழித்து பிரசன்னமானான். இப்போ பெரியவனின் டர்ன். 'நாங்க  ரெண்டு பேரும் சேர்ந்துதானே உங்களுக்கு சைக்கிள் கற்றுத் தரப் போகிறோம். சைக்கிள் என்ன கண்டிஷன்ல இருக்கு என்று நானும் நல்லாத் தெரிஞ்சிகிட்டாதான் உங்களுக்குக் கற்றுத் தர சௌகர்யமா இருக்கும்.' 

பெரியவன் ரவுண்டு அடிக்கும் பொழுது சின்னவன் என்னிடம், ஒரு கேள்வி கேட்டான். 

"மாமா உங்களுக்கு எவ்வளவு அண்ணன்கள்?" 

"நாலு."

"போன மாதம் உங்க தம்பி வந்திருந்தார். அவரிடம், 'உங்களுக்கு எவ்வளவு அண்ணன்கள்?' என்று கேட்டேன். அவர் 'ஐந்து' என்றார் தெரியுமா?"

"அப்படியா? - என்னுடைய அம்மாவுக்கு எப்பவும் ஓர வஞ்சனைதான். கோகுலாஷ்டமி பட்சணங்கள் கூட, எனக்குக் கொடுப்பதைவிட என் தம்பிக்குத்தான் அதிகம் கொடுப்பா. எனக்கு நாலு அண்ணன்கள் மட்டும் கொடுத்து, தம்பிக்கு ஐந்து அண்ணன்களைக் கொடுத்திருக்கா. அம்மாவிடம் இது பற்றிக் கேட்கிறேன்." 
    
சைக்கிளும் பெரியவனும் வந்து சேர்ந்தார்கள். சின்னவன், சைக்கிளைக் கைப்பற்றி, என்னிடம், "மாமா, சைக்கிளுக்குப் பின்னாடி வந்து நில்லுங்க."
               
"ஏன்? நீ அடுத்த ரவுண்டு விடும்பொழுது, நான் அதைப் பிடித்துக் கொண்டே ஓடி வரவேண்டுமா?"

"சீச்சீ அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் சைக்கிளை எப்படி சாய்த்து வைத்துக் கொண்டு, இடது காலால் பெடல் மிதித்து, நேரே பார்த்து, வலது காலை சைக்கிளுக்கு அந்தப் பக்கத்தில் எடுத்துப் போடுகின்றேன் என்று பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல நீங்களும் ஓட்டணும்."

நின்றேன். பார்த்தேன். 'ப்பூ  ... இவ்வளவுதானா. ... tan alpha = y/x கணக்கு எல்லாம் போட்டு, சைக்கிளைக் கைப்பற்றி, வலது கையால் வலது கை (ஹாண்டிலைப்) பிடித்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து .... இல்லை இல்லை இடது காலால் பெடல் மிதித்து, நேரே பார்த்..... அதற்குள் காரியம் மிஞ்சிப் போய்விட்டது. சைக்கிள் என் பக்கம் சாய, நான் இடது பக்கம் விழுந்து, 'சைக்கிள் வண்டி (என்) மேலே' விழ, இடது முழங்காலில் இரண்டு இன்ச்சுக்கு சிராய்ப்பு.  

சின்னவன், பெரியவனிடம் "அண்ணா - மாமாவை வீட்டுக்குக் கூப்பிட்டுப் போயி, நம்ம மெடிக்கல் கப் போர்டிலிருந்து 'முழங்காலோ மை சின்' எடுத்து இவருக்குப் போட்டு விடு" என்று சொல்லி, மேலும் ஒரு ரவுண்டு அடிக்கச் சென்றான். அப்பவே அவனுக்கு மெடிசின் பெயர்கள் எல்லாம் அத்துப்படி. அக்கா தவிர மொத்தக் குடும்பமே மருத்துவப் பல்கலைக் கழகக் கண்மணிகள்! 

மருந்து போட்டுக் கொண்டு, தத்தித் தடவி மீண்டும் வீதிக்கு வந்தேன். இப்போ பெரியவனின் டர்ன். "மாமா - சென்ற முறை நீங்க சைக்கிளை சரியா சாய்க்கலை. இப்போ பாருங்க - நான் எவ்வளவு சாய்க்கிறேன் என்று ....." நன்றாகச் சாய்த்து, பெடல் மிதித்து ..... ஏறி ஓட்டிக் காட்டினான். 
            
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாகிய நான், அந்த வேதாள சைக்கிளை அளவுக்கு மீறிச் சாய்த்து ஒரு உந்து உந்திவிட்டு,  மேலே என்ன செய்யலாம் என்று தீர்மானிப்பதற்குள், சைக்கிள் வலது பக்கமாக வேரற்ற மரம்போல விழ, இப்போ 'சைக்கிள் வண்டி மேலே' நான் விழுந்தேன், எழுந்தேன். வலது முழங்கையில் ஒன்றரை அங்குல சிராய்ப்பு! 
              
வீட்டுக்கு நானே போய் 'முழங்கையோ மைசின்' தேடி எடுத்து, முழங்கையில் அப்பிக் கொண்டேன். 
              
தெருவுக்கு நான் திரும்பி வந்த போது, இடது முழங்கால், வலது முழங்கை இரண்டும் 'விண் ..... விண் ...' சிச்சுவேஷனில் இருந்தன.   "இனி என்னால் சைக்கிள் கற்றுக் கொள்ள முடியாது. நீங்க ரெண்டு பேரும் மீதி இருக்கின்ற நேரத்தை ஆளுக்குப் பாதி நேரம் சைக்கிளை ஓட்டிவிட்டு, வீடு வந்து சேருங்கள்" என்று பெருந்தன்மையுடன் கூறி, வெற்றிகரமாக வாபஸ் ஆனேன். 
   
(* எஸ் எல் ஆர் சி கே என்றால் ஒருவேளை single leg or crooked கை என்று ஏதாவது இருக்குமோ?)       

- 2013 ல்  KGG எழுதிய ஒரு தொடர்பதிவின் ஒரு பகுதியின் மீள் -

========================================================================================


 மனசாட்சியம் - 2​8

KGY Raman 


" கண்டனத்துக்குள்ளாகும் கண்டிப்பு "

நான் சிறுவனாக இருந்த அந்த நாட்களில் எந்தப் பக்கம் பார்த்தாலும் யாரோ ஒருவர் ஏதோ ஒரு விஷயத்துக்காக என்னைக் கண்டித்துக் கொண்டே இருப்பார். வயதில் பெரியவர்களாக இருப்பவர்களுக்கு,  சிறுவர்களை, அவர்கள் சொந்தமானாலும் சினேகிதர் வீட்டுப் பிள்ளைகள் ஆனாலும் அல்லது முற்றும் தெரியாத அந்நியப் பிள்ளைகளாக இருந்தாலும் கண்டிக்கிற உரிமை இருந்தது. நமக்குக் கோபம் வந்து, நமது அப்பா அம்மாவிடம்  " என்னை அந்த மாமா திட்டினார் "  என்று புகார் சொன்னால், பெரும்பாலும் பெற்றவர்கள் " நீ என்ன விஷமம் பண்ணினியோ யாருக்குத் தெரியும் ?  பெரியவங்க கண்டிக்கிறாங்கன்னா நீ என்னவோ தப்பு செய்திருக்கிறாய் என்று அர்த்தம். இனிமேலாவது சமத்தா நடந்துக்கோ "  என்று அவர்கள் பங்குக்கு நம்மை ஒரு தரம் கண்டித்து அனுப்புவார்கள். ஒரே ஒரு சமயம் என் குடும்பத்துப் பெரியவர் ஒருவர் என்னைச் சற்றுக் கடுமையாக ஒழுங்கு செய்ய முற்பட்டபோது என் அம்மா " அவன் அப்படியெல்லாம் செய்ய மாட்டான் .அவனை யாரும் திருத்துகிற  அவசியமில்லை. நீ வாடா இந்தப் பக்கம் " என்று இழுத்துக் கொண்டு போனார். விஷயம் அதற்கு மேல் நீளாமல் முற்றுப்பெற்றது.

இந்த நாட்களைப் போல் இல்லாமல் அந்த காலத்தில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய குளம் அல்லது ஸ்படிகம் போல் தெளிந்த நீர் ஓடுகிற வாய்க்கால் ஆறு எல்லாமே இருக்கும். சிறுவர்களாகிய நாங்கள் அங்கே போய் நீரில் குதித்துக் கும்மாளம் போடுவோம். ஊர் பெரியவர்கள் யார் வந்தாலும் மிகவும் சாகப் பிள்ளைகள் போல சீரியஸாக குளித்துக் கொண்டிருப்பது போல் நடிப்போம். அதையும் மீறி சில சமயம் பட்டா மணியார் வீட்டு சின்னவர் வந்து " டேய் பசங்களா ! அரை மணி நேரமா பார்க்கிறேன், எல்லாரும் தண்ணில ஊறிக்கிட்டு இருக்கீங்க மரியாதையா எல்லாரும் கரையேறி வீட்டுக்குப் போகணும்  ! இல்லாத போனா நாலு அறை வைத்து நானே வீட்டுக்கு அனுப்பி விடுவேன் " என்று சொல்வார். நல்ல பிள்ளைகளாக உடனே கரையேறி வீட்டுக்குப் போய் விடுவோம்.

பட்டாணியாருக்குச் சொந்தமான மாந்தோப்பு குளம் ஆறு இரண்டுக்கும் மத்தியில் இருந்தது. அதிலே பச்சரிசி மாங்காய்  மரம் ஒன்று இருந்தது. பூவும் பிஞ்சும் காயுமாக பூத்துக் குலுங்கும். வடு முற்றி,  காய் சின்னதாக வளர்ந்தவுடன் அதற்குப் பிடித்தது சனி. பையன்கள் கல்லெறிந்து ஒரு மாங்காய் கூட மரத்தில் வைக்காமல் எடுத்துக் கடித்து சாப்பிட்டு விடுவார்கள். அதற்குக் கூட அந்த பட்டாமியார் எங்களை கோபித்துக் கொண்டதில்லை. மாறாக " டேய் பசங்களா , பழம் ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றாங்க ! ஒரு காயைக் கூட பாக்கி வைக்க மாட்டேன் என்கிறீர்களே,  ஏண்டா உங்களுக்கு இந்த துர்புத்தி ? " என்று அலுத்துக் கொள்வாரே தவிர கடிந்து கொண்டதில்லை. தினசரி காலை பூஜை புரஸ்காரம் எல்லாம் ஆனபின் ஒரு சிறு வெள்ளிக் கிண்ணத்தில் சில கற்கண்டுத் துண்டுகளைப் போட்டுக் கொண்டு வெளியே வந்து குழந்தைகள் கண்ணில் பட்டால் ஒரு சின்னத் துண்டு கல்கண்டு கொடுப்பார். பெரிய பணக்காரர் ஆனாலும்,  அவர் கொடுப்பது சின்ன கல்கண்டே ஆனாலும், எங்களுக்கு அது ஏதோ அபூர்வ வஸ்துவாகத் தோன்றும். அப்படியான கருணை உள்ளம் கொண்ட பெரியவர்களும் உண்டு.

ஊர்ப் பெரியவர்களுக்கே இவ்வளவு உரிமை இருக்கும்போது , பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா ? 
" நல்லா அடிச்சு சொல்லிக் கொடுங்க " என்று பெரியவர்கள் வந்து ஆசிரியர்களுக்கு ஓபன் லைசென்ஸ் கொடுத்து விட்டுச் சென்று விடுவார்கள். சில ஆசிரியர்கள் நினைத்தாலே நடுங்கவைக்கும் கடுமையான தண்டனைகளைக் கூட வெகு சாதாரணமாகக் கொடுப்பார்கள்.  அவர்களை கேள்வி கேட்பவர்கள் யாருமே இருந்ததில்லை. 

இன்றைய நிலைமை நிச்சயமாக இப்படி எல்லாம் இல்லை.  நான் வேலை பார்க்கிற இடத்திலே ஒன்றுக்கும் உதவாத ஒரு சோம்பேறி குமாஸ்தாவை அவருடைய மேல் அதிகாரி கண்டிக்கப் போய், அந்த குமாஸ்தா அவாண்டமான புகார்களை சொல்லி மேலதிகாரியை இடைநீக்கம் செய்து வைக்கும் அளவுக்கு விஷயம் சிக்கலாகிப் போனது. அதிலிருந்து அவர் மீண்டு வர என்னால் ஒரு சிறு உதவி செய்ய முடிந்தது என்பது எனக்கு இன்று வரை பெரிய சந்தோஷம்.

" அவன் என் பிள்ளை. அவன் எப்படி இருந்தால் உனக்கென்ன ? " என்பதுதான் இன்று கண்டிக்க முற்படும் யாரானாலும் நிச்சயம் எதிர்கொள்ளக் கூடிய வசனம்.  சில சமயம் கணவன் மனைவி இருவருக்கிடையே கூட இது போன்ற சங்கடங்கள் ஏற்படுகின்றன. 

ஆபீஸ் பற்றிச் சொல்லவே வேண்டாம்.  " நமக்கு எதற்கு வம்பு " என்று கூடுமானவரை சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல், சம்பளத்தை வாங்கிக் கொண்டு , பத்திரமாக ரிட்டயர் ஆனால் போதும் " என்று எண்ணுபவர்களே அதிகம்.

மனோ தத்துவ நிபுணர்கள், " கண்டிப்பு தேவைதான். அதீத கண்டிப்பு அல்லது அடித்து வளர்ப்பது ஆபத்தானது.  கண்டிப்பு  முன் யோசனையுடன் செய்யப்பட வேண்டும். கண்டித்துச் சொல்வதைவிட, எப்படியெல்லாம் இருக்க வேண்டுமோ அப்படி இருந்து காட்டி, குழந்தைகளுக்கு ஒரு முன் உதாரணமாக பெற்றோர்கள் இருக்க வேண்டும் " என்று சொல்கிறார்கள். ஆசிரியர்கள் பிள்ளைகளை அடிக்கக்கூடாது என்று சட்டமே வந்து விட்டது என்று நினைக்கிறேன்.

கண்டிப்பு தேவையில்லை என்று சொல்வதற்கு ஒரு விசேஷ மனப்பான்மை இருக்க வேண்டும். அது என்னிடம் இல்லை.

===============================================================================================

 சென்ற வாரம் பார்த்த ரிக்ஷா மாமா படத்திலிருந்து இன்னொரு பாடல்...!

....தங்க நிலவுக்குள் நிலவொன்று... 



===========================================================================================


பிரபல, பத்திரிகை பிரியரான, குல்தீப் நய்யார், "பிட்வீன் த லைன்ஸ்' எனும், சர்ச்சைக்குரிய நூலை வெளியிட்டார்.
அந்த நூலை, டில்லியை அடுத்த, சிறிய ஊரான, குர்கானை சேர்ந்த, ஒரு சாதாரண,பெயர் தெரியாத, டீக்கடைக்காரருக்கு அர்ப்பணித்துள்ளார். காரணம், நம் நாட்டு பெரிய பெரிய அரசியல் தலைவர்களுக்கு உள்ளதை விட, அதிக புத்தி கூர்மையும், அரசியல் ஞானமும், அந்த டீக்கடைக்காரருக்கு, அதிகம் இருப்பதாக கூறுகிறார்.
[ தினமலர் வாரமலர் ]

===================================================================================

நேபாள பாதாள மஹாதேவ் கோவில் 


======================================================================================

கே ஜே யேசுதாஸின் இன்னொரு பக்கம் வியப்பளிக்கிறது.  எவ்வளவு கோபக்காரர் பாருங்கள்...


========================================================================================

ஓட்டை விழுந்த 
மூட்டையிலிருந்து 
உதிரும் இடியாப்பக் 
கொத்து போல 
சிறு துளி சாரல்களாய் 
பொழிகிறது வானம்


மொத்தமாக கொட்டி 
சுத்தமாக காலி 
ஆகி விடாமல் 
சிறு துளிகளாக 
சீராக பெய்கிறது 
சாரல் மழை

வெளிச்ச கீற்றுகளின் 
நடுவே தெரிகிறது 
வெள்ளி கம்பிகளாய் 
சாரல் மழை

==================================================================================================

1993  சின்னக்கண்ணம்மா படத்திலிருந்து ஒரு பாடல்.  பஞ்சு அருணாச்சலம் எழுதியது.  இளையராஜா இசை.  ஒரு ஆஸ்பத்திரியில் பிறந்த இரண்டு குழந்தைகள் இடம் மாறி விட, அது யதேச்சையாக தெரிய வருகிறது.  பாசப்போராட்டம் ஆரம்பிக்கிறது.  கிட்டத்தட்ட இதே போல ஒரு கதையை முன்னர் கே பாலச்சந்தர் கண்ணா நலமா என்று எடுத்திருந்தார்.

பெண் குழந்தை பிறந்தததும் அதைக் கொண்டாடி தந்தை பாடும் பாடல் 

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே...  பாடுபவர் மனோ.  கார்த்திக், கௌதமி, சுஹாசினி, நாசர் நடித்த படம்.

===================================================================================

சிவந்த மண் படப்பிடிப்புக்கு வெளிநாடு சென்று வந்த அனுபவத்தை சிவாஜி கணேசன் விகடனில் எழுதினார்.  அதிலிருந்து...
 

அந்நிய மண்ணில் சிவந்த மண் 

சிவாஜி கணேசன்


சிற்றுண்டிச் சாலையில் தன் கையிலிருந்த சாண்ட்விச்சை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஸ்ரீதர். ஸ்ரீதரின் முகம் 'கடுகடு'வென மாறியதற்குக் காரணம் என்ன என்று நான் ஆராயத் தொடங்கினேன்.
.
'உங்களுக்கு அது பிடிக்கவில் லையா?" என்று கேட்டேன்.

 உடனே அவர், பிடிக்காமல் ஒன்றுமில்லை.  ஆமா, இது வெஜிடேபிள் சாண்ட்விச்தானே என்றார் சிறிது அவநம்பிக்கையுடன். 

காரணம் அவர், கோபு, ராஜேந்திரன் மூவரும் சுத்த சைவம். பக்கத்தில் இருந்த கிருஷ்ணசாமி வெஜிடபிள் சாண்ட்விச்தான் என்று ஆணித்தரமாகக் கூறினார்.

நம்பிக்கையுடன் கடித்துச் சாப்பிட ஆரம்பித்தார் ஸ்ரீதர்.

ஒரு கடி கடித்துப் பார்த்து ட்டு "ஏண்டா, ராஜி? இது உப்புக் கரிக்கவில்லையா?" என்றார்.

உடனே அவன் "ஆமா. ஆமா உப்போ உப்பு! ஒரே உப்பு!" என்றான்.

உடனே சுவாரஸ்யமாகச் சாப்பிட்ட கோபு ஹோட்டல்காரனுக்கு நன்றி உஙற்சி அதிகம்.  அதுதான் உப்பு அதிகம் சேர்த்திருக்கிறான் என்று ஜோக் அடித்தான்.

எனக்கு ஏனோ சந்தேகம் பிறந்தது.  எங்கே அந்த சாண்ட்விச்சை இப்படி காட்டுங்கள் என்றேன். 

அவரும் என் திசையில் அதைக் காண்பித்தார்.

எனக்கு தூக்கி வாரிப்போட்டது.  அடப்பாவிகளா நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பது வெஜிடபிள்  அல்ல. இது ஹேம் சாண்ட்விச்.   அதாவது வெள்ளைப்பன்றியின் கறி என்று கூறி முடிப்பதற்குள் ஸ்ரீதர் தன் வாயில் இருந்ததை பிளேட்டில் துப்பி, மதுரை வீரன் கோவில் முன் நெருப்பு மிதிப்பவர்களைப் போல குதிக்க ஆரம்பித்து லிட்டார். "சோடா, கோடா! தண்ணி என்று சத்தம் போட, சிப்பந்தி சோடாவுடன் ஓடி வந்து, ஏதோ மாரடைப்பால் கஷ்டப்படு கிறார் என்று நினைத்து பதறிப் போனான். சோடாவைக் குடித்து, வாஷ்' பேஸினில்காரி காரித் துப்பினார். "எது நடக்கச் கூடாது என்று நினைத்தேனோ, அது நடந்துவிட்டதே!" என்று புலம்ப ஆரம்பித்தார்.  

சாப்பீட்டு முடித்த கோபு."ஆமாம்! நடந்தது நடந்து விட்டது. இதற்காகத் தீக்குளித்தா நாம் சுத்தம் செய்து கொள்ள முடியும்! ஆனால், ஒன்று: கொஞ்சம் உப்பைக் குறைத்திருந்தால் இது பிரமாதமான அயிட் டம்! என்றான். எல்லாரும் சிரித்து விட்டோம்.

இதற்குப் பிறகு எல்லாரும்புறப்பட்டு ஓட்டல் வந்து சேர்ந்தோம். ரோம் நகரில் எங்களுக்கு உதவி செய்ய, கேள் தல்லோ என்ற யூத மதத்தைச் சேர்த்த நண்பர் ஒருவர் நியமிக்கப் பட்டிருந்தார். அவருக்கு சாந்தமான முகம். அவருக்கு ஆங்கிலம் தெரியும் என்ற வுடன் அவரை ஒவ்வொருவரும் தத்தம் அறைக்கு அழைத்தனர்.

ஆனால், ஸ்ரீதர் குறுக்கிட்டு "இத்த கோஷ் டீமுக்கே நான்தான் முதலாலி, என் அறைக்குதான் அவர் வரவேண்டும் என்று சொல்லி விட்டார்.

1969 விகடன் 

========================================================================================

எழுத்தாளர்களுக்கு இந்தியாவில் எவ்வளவு சம்பளம்  நூறு புத்தகங்கள் எழுதி இருக்கிறேன் என்று வெளின்பாட்டு விமான நிலையத்தில் எஸ் ராமகிருஷ்ணன் சொன்னதும் அப்போ நீங்க பில்லினர்னு சொல்லுங்க என்றார்களாம்.

==========================================================================================

சென்ற வாரம் எம் ஜி ஆர் பதில்கள் பார்த்தோமல்லவா...   இந்த வாரம் கருணாநிதி பதில் - தினமணி கதிரிலிருந்து.

உண்மையில் அருகாமை என்றால் அருகே என்று பொருள் அல்ல.  தொலைவு என்று பொருள்.  'தமிழறிஞர்' அதை அறியாமலிருந்தது ஆச்சர்யம்.


உங்கள் வீட்டிலேயே அலுவலகம் வைத்துக்கொண்டு இருக்கிறீர்களே,  நடுநடுவே வீட்டு நினைவு வராமலிருக்கிறதா?

அலுவலகம் கோட்டையில்தான் இருக்கிறது. அங்கு செல்வதற்கு வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன்பும் அங்கிருந்து திரும்பி வீட்டுக்கு  ஓய்வுக்காக வருகின்ற போதும் என் வீட்டை அலுவலகம் போல ஆக்கி விடுகிற பொறுப்பை அன்புக்குரிய பார்வையாளர்கள்தான் ஏற்று கொள்கிறார்கள்.  வீட்டுக்குள் இருக்கிற தொலை பேசி 85225 என்ற எண்ணிலிருந்து பார்வையாளர் பகுதியில் இருக்கிற தொலைபேசி எண் 87384 க்கு என் மனைவி  டயல் செய்து என்னிடம் பேசி "காபி - ஹார்லிக்ஸ் ஏதாவது வேண்டுமா?" என்று கேட்கும் போதுதான் வீட்டில் இருக்கிற நினைவே வருகிறது. மனைவி இருந்து பேசுவதும். பார்வையாளரிடம் நான் இருந்து பேசுவதும் மாடியில் மிக அருகாமையில் உள்ள இரு அறைகள் தான்!

காலையில் எத்தளை மணிக்குப் படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறீர்கள்?  எழுந்ததும் செய்யும் முதற்பணி என்ன?

ஆறு அல்லது ஏழு மணிக்குப் படுக்கையிலிருந்து எழுகிறேன். முதல் வேலையாக பத்திரிகைகளைப் பார்த்து விட்டு அதன் தொடர்ச்சியாக பைல்களை  எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறேன். 

பல அரசாங்க அலுவல்களை இடையே  பத்திரிகைகளுக்கு எப்படி எழுதுகிறீர்கள்?

ரயில் பிரயாணத்தின் போது பெரும்பாலும் எழுதுதுகிறேன்.. எழுத வேண்டு மென்று நினைத்தால் விடியற்காலை நாலு மணிக்கே எழுந்து எழுதத் தொடங்குவேன்.  ஓயாத பணிகளுக் இடையே எழுதவது என்பது கோடை வெயிலில் நடந்து வந்து ஒரு மரத்தடியில் இளநீர் பருகுவது போல் இருக்கிறது எனக்கு.

மந்திச்சபை விஸ்தரிப்பு இப்போதைக்கு இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்த நீங்கள் திடீரென்று நால்வரை அமைச்சர்களாக்கியிருக்கிறீர்களே,  அதன் நோக்கமென்ன?

"இப்போது இல்லை" என்றுதானே சொன்னேன்.  "எப்போதும் இல்லை" யென்று சொல்லவில்லையே  'இப்போது' என்பது நேரத்தையும் குறிக்கும் ; வாரத்தையும் குறிக்கும்; வருடத்தையும் மாதத்தையும் கூட குறிக்கும்.

நெடுஞ்செழியன் பிரச்னையைத் தீர்க்க உங்களுக்கு உதவியாக இருந்தது எது?

அண்ணா கற்றுத் தந்த அரவணைப்புப் பண்பு.   நாவலருக்கும்  எனக்கும் இருந்த நாட்பட்ட நட்பு'.


======================================================================================



1988 தீபம் இதழில் வந்த சில துணுக்குகள்.









கல்கி சிறுகதைப் போட்டி முடிவு 1948

உதவும் சங்கீதக் கச்சேரி!  1948 ம் வருடம்.  டிக்கெட் விலைகளை பாருங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!