சினிமாப் புதிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமாப் புதிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17.6.13

திரைப்பாடல் புதிர்

                
கீழே உள்ள வரிகள் அந்தந்தப் பாடலின் இடையே வரும் வரிகள்தான். 'அருஞ்சொற்பொருளி'ல் ( ! )இருக்கும் அந்த வரிகளை மீட்டெடுப்பதோடு, அந்தப் பாடலின் ஆரம்ப வரிகளையும் சொல்ல வேண்டும்!

முடிந்தவரை பாடல் புரியக்கூடிய அளவில், சரியாகக் கொடுத்திருக்கிறேன்.

ஈசிதான். புதிய பாடல்கள் எதுவுமில்லை.

'ஜூட்'டா....
  
1) இவனைக் கூப்பிட்டா அவன் வர்றான், அவனைக் கூப்பிட்டா இவன் வர்றான் எவன் நமக்கு உதவுவான்னு கிருஷ்ணனையும், கந்தவேளையும் சந்தேகப் படறாளாம் பொண்ணு! எழுதறதுல்லாம் தப்பாக ஆறது விதியான்னும் சந்தேகம்! ஆரம்பிக்கறதை முடிக்கவும் தெரியலை!
  
2) வேண்டி, வேண்டி உங்களை வேண்டச் சொல்லிக் கேட்டும் நீங்கள் வேண்டவில்லை என்றால் என்னை நம்பாமல் இருந்தால் துளியாவது நஷ்டம் எனக்கு உண்டா ஐயா?  நான் பார்த்ததைத்தானே சொல்கிறேன்? உங்கள் விஷயம்தான் ஐயா...
  
3) முதிர்ச்சியை இன்னும் எட்டவே எட்டாத அந்த முகத்தின் பிரகாசம், எப்படி உரையாடுவது என்ற கலை, மென்மையான நடை இவற்றையெல்லாம் காணோமே என்று கவலைப் படுகிறேன்... அமைதியாக நீ தூங்குகிறாயே....
  
4) அண்ணிக்கி லவ்வு 'டிராப்' 'ட்ராப்'பா சொட்டற கண்ணோட நீ என்னிய லுக்கு விட்டியே... சொம்மா சொகமாத்தான் இருந்திச்சி போ.. ஒன்னோட கண்ணுலயும் கையிலயும் விழுந்துட்டேன். பார்த்தது போதும்மா! நீ கேட்டது வேணுமா வேணாமா?
  
5) "தாவணி போட்ட உன்னைத் தொடும்போது இதயம் தண்ணி அடிச்சாப்போல ஆயிடுதுமே... "
"வேற பார்வை பாக்காத மச்சான்...ஆறா வேர்க்குது..புடைவையத் தொடறத்துக்கு முன்னாடி கழுத்துல மாலைய போட்டு  மாறன் சொன்னதைச் சொல்லு..."
   
6) நிலவு போல மூஞ்சி! சிவப்பா வாயி! வெள்ளைப் பூ போல சிரிப்போட மகன்.. தளர் நடைல மனசு குளிர்றா மாதிரி உம்மா கொடுப்பான் அவன்.
  
7) வேகமா விரல்களால,  கண்ணால பேசி , 'வீணை உடம்பை' வாசிச்சேன்னா பூமிக்கு அந்த வானம் வந்தது மாதிரியும் ஆறு ஒண்ணு இதயத்துள்ள பாஞ்சு ஓடற மாதிரி புது அனுபவம்தான்!
  
8) கவலைங்கற கடனை என் வாழ்க்கைல கொடுத்துருக்கற கடன்காரக் கடவுள்! கவலையெல்லாம் சரியாப் போனாத்தான் கடன் அடையும். சொல்லப்போனா வறிய மக்கள் ஜீவிதத்துல தண்ணியடிச்சுட்டு விளையாடற மாதிரி ஆடறான் கடவுள்.
  
9) நீலமா தெரியும் அந்த மேகம் போலத்தான் நானும் காதல்ங்கற ஆகாசத்துல பறக்கறேன்.  தண்ணியில பூ தத்தளிப்பது போல இதயம் மயங்கறேன். மீனே ஜாடையாவாவது பேசேன். மலர் மேனியைப் பார்த்ததும் மன்மதனின் கணை பாய்ந்து சூடாகும் என்னைத் தணிவிக்கும் ஜில்லுனு இருக்கும் ஓடத் தண்ணி நீதான் வா....!
  
10)  வளர்ந்த பொண்ணு, கொழந்த மனசு ரெண்டும் ஒண்ணாயிருக்கற அதிசயம் நீதான்பா...ஆனால் உன் எண்ணங்கள் மட்டும் தீயைப் போல சுடும் பாவம்தான் என்ன? சூரியன் உதிக்காம இருக்காது. அதுக்காகத்தான் நானும் காத்திருக்கிறேன்!  
                      
** ஹி ஹி ! படங்களுக்கும் கேள்விக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தப்பித் தவறி ஏதாவது சம்பந்தம் இருந்தால் அது தற்செயலாக நிகழ்ந்ததாகக் கொள்க! 
  
* இந்தப் பதிவுக்குப் பின்னூட்டங்கள் மட்டறுக்கப் (என்ன வார்த்தைடா  இது!) படுகின்றன! கிர்ர்ர் மேடம் பல பதிவுகளில் விடுத்த வேண்டுகோளை மதித்து.