2.8.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள்:: அத்தாளநல்லூர் - திருநெல்வேலி:: நெல்லைத்தமிழன்

 

அத்தாளநல்லூர், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். அந்தக் கோயிலின் மேற்கே தாமிரபரணி ஆறு தெற்கு வடக்காகப் பாய்கிறது. இங்குதான் கஜேந்திரமோட்சம் நடந்தது என்று சொல்கின்றனர். கும்பகோணம் அருகே உள்ள கவித்தலத்திலும் (கபிஸ்தலம், மூப்பனார் ஊர்) கஜேந்திர மோக்ஷம் நடந்தது என்கின்றனர். இன்னும் சில கோயில்களிலும். இருந்தாலும், கஜேந்திர மோக்ஷம் நடக்க, ஆறு, பொதிகை மலை, அதைச் சார்ந்து அகஸ்தியருக்கான சன்னிதி என்று பலவும் அமைந்த இடம் இந்த அத்தாளநல்லூர். அதற்கு ஏற்றவாறு, மூலவருக்கு கஜேந்திர வரதர் என்ற திருநாமம்.

இந்தக் கோயில் கருவறையில் சுதை வடிவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் ஆதிமுலப் பெருமாள் கஜேந்திர வரதர் என்ற நாமத்துடன் காட்சி தருகிறார். மூலவருக்கு அருகிலேயே மார்க்கண்டேய மற்றும் பிருகு முனிவர்கள் உள்ளனர்.

இந்தக் கோயிலைச் சுற்றி மூன்று தீர்த்தங்கள் உள்ளன. முதலையிடமிருந்து கஜேந்திரனைக் காப்பாற்றி, இருவருக்குமே வீடுபேற்றை அளித்ததாகக் கருதப்படும் விஷ்ணு தீர்த்தம் கோயிலின் பின்புறம் உள்ளது. கோயிலின் வடபுறத்தில் சிங்க தீர்த்தம் இருக்கிறது. சிங்க தீர்த்தத்திற்கு தெற்கில் 1-1 ½ கிமீ தொலைவில் சக்ர தீர்த்தம் அமைந்துள்ளது. முதலை மீது பாய்ந்து அழித்த விஷ்ணுவின் சக்ராயுதம், இந்தத் தீர்த்தத்தில்தான் மூழ்கி, தன் புனிதத்தைத் திரும்பப் பெற்றது என்கின்றார்கள். இங்குள்ள இந்த மூன்று தீர்த்தங்களிலும் நீராடுவது சிறப்பு என்கின்றனர். (தீர்த்தங்களில் நீராட்டம் பற்றி நான் விரைவில் எழுத இருக்கும் இராமேஸ்வர பயணத்தில் சொல்கிறேன்)

நான் புராணக் கதைகளுக்கு இடம் தருவதில்லை. இருந்தாலும் இந்தத் தலத்துக்கு அந்தப் புராணக் கதையைச் சுருக்கமாகத் தர நினைக்கிறேன்.

ஹூஹூ என்ற பெயருடைய கந்தர்வன், தேவல முனிவர் தண்ணீரில் நின்று தவம் செய்துகொண்டிருந்தபோது, விளையாட்டாக ஒரு முதலையின் வடிவம் எடுத்து, தேவல முனிவரின் கால்களைக் கவ்வினான். தவத்தை இடையூறு செய்த கந்தர்வனின் மீது கோபம் கொண்டு, முதலையாகவே நீரில் இருக்கக் கடவாயாக என்று சாபம் கொடுத்தார்.

பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னன் இந்திரத்யும்னன், தன்னுடைய அரண்மனையைத் துறந்து மலைசார்ந்த பகுதிகளில் தவம் புரிந்துகொண்டிருந்தான்.  அந்தப் பக்கம் வந்த அகஸ்திய முனிவரைக் கவனிக்காமல் தன் தியானத்திலேயே குறியாக இருந்த இந்திரத்யும்னனைப் பார்த்து, கடமைகளை விட்டுவிட்டு தனக்கு விருந்தோம்பல் செய்யாததைப் பார்த்து கோபம் கொண்ட அகஸ்திய ரிஷி, அடுத்த பிறவியில் யானையாகப் பிறப்பாய் என்று சாபம் அளித்தார் (ரிஷிகளின் சாபம், பெற்றுக் கொள்பவனின் முன்வினைப் பயனாலோ அல்லது அவருக்கு நல்லது கிடைப்பதற்கோ ஏற்படுகிறது) யானைக்கூட்டத்தின் தலைவனாக கஜேந்திரனாகப் பிறந்த இந்திரத்யும்னன், திருகூட மலைப் பகுதியில் திரிந்துகொண்டிருந்தான்.

அடுத்த ஜென்மத்தில் யானைகளின் அரசனாகப் பிறந்தான் இந்திரத்யும்னன். காட்டில் திரிந்துகொண்டிருந்தபோது, தாமரைக் குளத்தைக் கண்டு அதில் தன் சகாக்களுடன் இறங்கி விளையாடினான். அந்தக் குளத்தில் இருந்த முதலை கோபமடைந்து கஜேந்திரனின் காலைப் பிடித்துக்கொண்டது. கஜேந்திரனால் முதலையிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. எல்லா முயற்சிகளும் பயனற்றுப் போக, கடைசியில் குளத்திலிருந்து தாமரை மலரை எடுத்து, ஆதிமூலமே என்று இறைவனை நினைத்து அபயம் கேட்டது (முந்தைய ஜென்மாவின் இறைபக்தியால் இது சாத்தியமாயிற்று). குரலைக்கேட்டு வந்த இறைவன், தன் சக்ராயுதத்தால் கஜேந்திரனைக் காப்பாற்றி, முதலைக்கு உடனே மோக்ஷமும், கஜேந்திரனுக்கு அவனுடைய ஆயுள் முடிந்ததும் மோக்ஷமும் கொடுத்தான்.

இந்தப் புராணக் கதை, ஸ்ரீமத் பாகவதத்தில் 8வது ஸ்கந்தத்தில் கஜேந்திர மோட்சம் என்ற பகுதியில் வருகிறது.

அத்தி-யானை, ஆள-ஆட்கொண்ட/காத்த  .   அத்தியாள நல்லூர் என்பது பிறகு மருவி, அத்தாளநல்லூர் என்று ஆகிவிட்டது. இதுதான் ஊரின் பெயர்க் காரணம்.

பொதிகை மலை, தீர்த்தக் குளம், அகஸ்தியரின் சன்னிதி, ஊர்ப் பெயர் போன்ற பலவற்றினால் இந்தத் தலத்தில்தான் கஜேந்திர மோக்ஷம் நடந்தது என்று நிரூபணமாகிறது என அர்ச்சகர் சொன்னார்.

இந்தக் கோயில் சுமார் 2500 ஆண்டுகள் பழைமையானது.

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் உள்ளன. முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் அத்தாளநல்லூரில் ஒரு பகுதி வயல்கள், வரி இல்லாத தேவதான நிலமாகப் பிரிக்கப்பட்டதாம். அவனுடைய காலத்தில் கஜேந்திர வரதர் கோயில்  மொய்ம்மாம் பூம்பொழில் ஆழ்வார் கோயில் என்று அழைக்கப்பட்டதாம்.

இந்தச் செய்தியைப் படித்ததும் எனக்கு திவ்யப்பிரபந்தத்தில் இந்தப் பெயர் வருகிறதே என்று தோன்றியது.

##மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை*  முதலைச் சிறைப்பட்டு நின்ற,*

கைம்மாவுக்கு அருள் செய்த*  கார்முகில் போல் வண்ணன் கண்ணன்,*

எம்மானைச் சொல்லிப் பாடி*  எழுந்தும் பறந்தும் துள்ளாதார்,*

தம்மால் கருமமென் சொல்லீர்*  தண்கடல் வட்டத்துள்ளீரே!  

திருவாய்மொழியில், ஐந்தாம் பத்தில், முதல் பாசுரமாக மேலே உள்ள பாசுரம் வருகிறது. (நம்மாழ்வார் இயற்றியது)

பொருள்: குளிர்ந்த சமுத்திரம் சூழ்ந்த உலகத்தில் உள்ளவர்களே!  நெருக்கமாக உயர்ந்த மலர்ச்சோலைகள் சூழ்ந்த தடாகத்தில் முதலையால் பீடிக்கப்பட்டு கலங்கிநின்ற கஜேந்திரனுக்கு அருள்மழை பொழிந்த, மழைமேகம் போன்ற நிறமுடைய கண்ணனை எண்ணி, அவன் புகழை வாயால் பேசியும், பாடியும், குதூகலித்து ஆட்டமாடியும்  கூத்தாடாமல் இருப்பவர்களால் என்ன பயன் உள்ளது? என்கிறார் ஆழ்வார்.

விளக்கம்:  மொய்ம்மாம் பூம்பொழில்- மா-வண்டு, வண்டுகள் மொய்த்து ரீங்காரமிடுகின்ற பூக்களைக் கொண்ட சோலை.   மா என்பதை மாமரம் என்று பொருள் கொண்டால், நெருக்கமான, பூக்கள் மலர்ந்து இருக்கின்ற மாமரங்கள் உடைய சோலை.  மொய்-அழகு, மா-பரந்த என்று கொண்டால், பரந்த அழகாகப் பூத்த சோலை. 

இதனை எழுதும்போது நான் நெல்லையில் நவதிருப்பதிகளைத் தரிசனம் செய்த ஒரு சமயத்தில் மதியம் ஆழ்வார் திருநகரியிலிருந்து புறப்பட்டு திருச்செந்தூர் நோக்கிச் சென்றேன். காரணம், மதியம் 1-2 மணிக்குப் பிறகு சில கோயில்கள் நடை சார்த்தியிருப்பார்கள். திரும்பவும் 5 மணிக்குத்தான் கோயில் திறப்பார்கள். இடைப்பட்ட நேரத்தில் சாப்பிட நல்ல ஹோட்டல் அந்தப் பகுதியில் கிடையாது. அதையும் ஒரு காரணமாக வைத்து நாங்கள் திருச்செந்தூருக்குச் சென்று அங்கு கோயில் தரிசனம் முடிந்த பிறகு, ஹோட்டலில் உணவு உண்டுவிட்டு, பனைவெல்லம், சுக்குக் கருப்பட்டி போன்றவற்றை நான் வாங்கிக்கொள்வேன், பிறகு நவதிருப்பதி தரிசனத்தைத் தொடர்வோம்.  அப்படி ஒரு முறை சென்றிருந்தபோது, ஆழ்வார்திருநகரிக்குச் சிறிது தொலைவில், திருவழுதி நாடு என்ற பலகையைப் பார்த்தேன். ஒரு காலத்தில் அந்தப் பகுதி திருவழுதி நாடு என்றே அழைக்கப்பட்டுவந்தது.  திருவாய்மொழி தனியன்களில் ஒன்று,

திருவழுதி நாடு என்றும் தென்குருகூர் என்றும்
மருவினிய வண் பொருநல் என்றும் - அருமறைகள்
அந்தாதி செய்தார் அடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே! தெளிந்து. 

இந்தத் தனியனை அருளிச்செய்தது, நாதமுனிகளின் மகன் ஈஸ்வர முனிகள். (அவருடைய மகன் ஆளவந்தார் என்ற யாமுனாச்சார்யார்)

இதில் அந்தப் பகுதியை ‘திருவழுதி நாடு’ என்று குறிப்பிட்டுள்ளதைப் பாருங்கள். (இந்தத் தனியன் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது).   நாம் வரலாற்றுப் பெயர்களை இழந்துவருகிறோம்.

இந்தக் கோயிலில் ஜடாவர்மன் ஸ்ரீவல்லப பாண்டியன் கொடையாக கோயிலுக்கு அளித்த நிலம், மற்றும் மாறவர்ம பாண்டியன் காலத்தில், சேரன்மஹாதேவி நிர்வாகத்தினரால் அளிக்கப்பட்ட கொடை போன்றவையும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

கல்வெட்டு-(இணையம்)

 

 

 

 

 

 

தொடர்வதற்கு முன்பு, கோயிலின் மூலவரான,  ஆதிமூல கஜேந்திர வரதரைச் சேவித்துக்கொள்ளலாமே.

ஆதிமூல கஜேந்திர வரதர். நின்ற திருக்கோலம், ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன்.

 

அகஸ்திய முனிவர். இரண்டாவது படத்தில் கஜேந்திர மோக்ஷம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

 

அகஸ்தியரின் சிலை, பூமியில் அழுந்தியுள்ளது. இதுபோன்று சிலைகளில் பாதி பூமியில் அழுந்தி இருப்பதை பல இடங்களில் கண்டிருக்கிறேன். கோயிலைச் சீரமைக்கும்போது, சிலையை மேலே எடுத்து வைத்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றும். நீங்களும் நான் பகிர்ந்த கங்கைகொண்ட சோழபுர மேடையில் உள்ள சிற்பங்கள் காங்க்ரீட் சூழ இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

 

 

 

 

ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஆதிமூலப் பெருமாள்.  இருபுறமும் மார்க்கண்டேய மற்றும் பிருகு மஹரிஷிகள்.

 

 

 

வடக்கு நாச்சியார் சன்னிதி. 

 

 

 

 

 

கோயில் நீங்கள் எண்ணுவது போல சிதிலமடைந்து இருக்கவில்லை.  இருந்தாலும் அந்த ஊரில் ஒரு காலத்தில் இருந்த எல்லோரும் புலம் பெயர்ந்துவிட்டார்கள். அதனால் பழைமை வாய்ந்த கோயில் தனியாக இருப்பது போலத் தோன்றுகிறது.

அடுத்த வாரம் தொடர்வோமா?

(தொடரும்) 

45 கருத்துகள்:

  1. இன்றைய பதிவு சிறப்பு. தெரியாதவைகளைத் தெரிந்து கொள்வதே தனி இன்பம் தான். அதுவும் இறைவனைப் பற்றியும், , அவன் புகழ் பரப்பும் பாடல்கள், கோயில் வரலாறுகள் என்று அமைந்து விட்டால் மனத்திற்கு தனித்ததோர் இன்பத்தில் திளைக்கும் பேற்றை உணர முடிகிறது. நன்றி, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார். தொடர் எழுதும் வாய்ப்பில் நானுமே பலவற்றைத் தெரிந்துகொள்கிறேன், சிவற்றிர்க்கு விளக்கம் கிடைக்கிறது. இந்தத் தொடரைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள் அந்தப் பகுதிக்குச் செல்லும்போது கோயில் தரிசனம் செய்யலாமே என்ற எண்ணமும் காரணம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. சரணம் சண்முகா... நலமா துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. காலையில் மங்கலச் சொற்கள். வாழ்க. கில்லர்ஜி நலமா? அலைபேசி செய்தியைப் பார்க்கவில்லையே இரு வாரங்களாக

      நீக்கு
    2. சகோதரர் கில்லர்ஜி அவர்கள் நலமாக உள்ளார்களா? கொஞ்ச நாட்களாக அவரை எங்குமே காணவில்லையே என நானும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். இன்று பதிவின் வழி கேட்க வேண்டுமென நினைத்தேன். நீங்களே இங்கு குறிப்பிட்டு விட்டீர்கள்.நன்றி.

      நீக்கு
  4. ஸ்ரீ ஆதிமூல கஜேந்திர வரதரைச் சேவித்துக்
    கொண்டேன்...

    ஓம் ஹரி ஓம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி. பதிவின் மூலம் கோயில் இறைவனைத் தரிசனம் செய்ய ஞாயிறை வாய்ப்பாக்கிக் கொள்கிறேன்.

      நீக்கு
  5. நீர்ப்பறவைகள் எல்லாம் பறந்து
    விட்ட்னவோ!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலத்தின் தேவை கருதி, உலகம் சுருங்குகிறது. பலரும் நல்வாய்ப்புகளைத் தேடிச் செல்கின்றனர். எப்போதிருந்தாலும் தாய் மடிக்கு வந்துதானே ஆகணும் என இறைவன் புன்சிரிப்புடன் பார்க்கிறான்.

      நீக்கு
  6. அந்த நகர், இந்த நகர் என்று பேரை மாற்றி விடாமல் வைத்திருக்கின்றார்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொந்தக் காரன் இல்லையென்றால் கொள்ளை போவது தவிர்க்க இயலுமா?

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி

      நீக்கு
  8. சகோதரர் கில்லர்ஜி அவர்களைப் பற்றி எதுவும் தெரியாதது வருத்தமாக உள்ளது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ??????????? What happened to him?

      நீக்கு
    2. ஒன்றும் ஆகவில்லை கீசா மேடம்... கில்லர்ஜி ரொம்ப பிஸியாக இருக்கணும். அல்லது வாட்சப் பார்க்க இயலாதபடி அவரது வேலை அமைந்திருக்கவேண்டும். கடைசியாக வாட்சப் பார்க்க வந்து இரண்டு வாரங்கள் ஆகிறது.

      நீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. இங்கே தஞ்சை கும்பகோணம் சாலையில் பாடல் பெற்ற சிவாலயம் சக்கராப்பள்ளி... சக்ரவாகப் பறவை வழிபட்ட தலம்...

    கோயிலைச் சுற்றிலும் வீடுகள்... தெருப் பெயர்கள் மாறி விட்டன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில்களுக்குத் தொடர்ந்து பக்தர்கள் செல்லணும். கோயிலைச் சுற்றியுள்ள தம்தம் வீடுகளை நிலங்களை தர்மத்துக்கு எதிராக விற்றுவிடக்கூடாது. பல்வேறு காரணங்களால் இவை நடக்கின்றன.

      நீக்கு
  11. நாளைக்கு இங்கே கஜேந்திர மோக்ஷம். நம்பெருமாள் பக்கத்து மண்டகப்படிக்கு வருகிறார். என்னால் எங்கே கீழே இறங்கி நடந்து போக முடியும்? மனதிலே தான் நினைச்சுக்கணும். இங்கே அத்தாளநல்லூர் தல புராணம் படித்ததும் இம்மாதிரிப் பல கோயில்களிலும் நடப்பது நினைவில் வந்தது. இங்கே மதுரையில் ஸ்வாமியின் திருவிளையாடல்கள் நடித்துக்காட்டுகிறாப்போல் கஜேந்திர மோக்ஷமும் ஒவ்வொரு வருஷமும் நடித்துக் காட்டுகிறார்கள். அநேகமா எல்லாமுமே. ரொம்பப் பிரபலம் மட்டையடியும் அதைச் சார்ந்த சேர்த்தி சேவையும் தான். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த அளவு இவற்றை தரிசனம் செய்திருப்பீர்கள் இல்லையா கீதா சாம்பசிவம் மேடம்? அந்தக் காலகட்டத்தை மனதால் நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

      நீக்கு
  12. கோயில் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கிறார்கள் என்பது தெரிகிறது. இத்தனை பெரிய கோயிலைப் பராமரிப்பதே சிரமம் தான். எனினும் இறைவன் மேலுள்ள பக்தி அதை ஈடு செய்து விடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய மக்கள் வந்து மாசுபடுத்தாவிட்டாலும் கோயில் சுத்தமாக இருக்கும். இருந்தாலும் எளிய மக்கள் வந்து கோயிலைப் பார்த்துக்கொள்கிறார்கள்.

      நீக்கு
  13. கோவிலின் தோற்றம் மிகவும் கவர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப பழைமையான கோயில். அடுத்த வாரம் கல்வெட்டுகள்லாம் பார்க்கலாம். இந்த மாதிரி ஊர்ல வாழ்ந்து, கோயில் பின்னால ஓடும் நதியில் குளித்து பெருமாள் சேவித்து... இப்படி வாழ்க்கை ஓடினால் நல்லா இருக்கும்.

      நீக்கு
    2. அதற்கு முன்னால் பற்று யாவையும் அறுத்திருக்கவேண்டும்.  மனைவி,  மகள்,மகன் பேரன் பேத்தி..  ஜடமைகள்..  நாவை அடங்கியிருக்க வேண்டும்.

      நீக்கு
    3. ..பற்று யாவையும் அறுத்திருக்கவேண்டும்... //

      இந்த ஒரு விஷயத்தில் பெரும்பாலான பக்தர்களின் ஆன்மீகப் பயணம் தடைப்பட்டு மேற்கொண்டு நகராது நின்றுவிடும். அதாவது அவர்களின் உத்வேகமெல்லாம் இந்த இடத்தில் தளர்ந்து நழுவிவிடும். Back to square 1 !

      நீக்கு
    4. //பற்று யாவையும் அறுத்திருக்கவேண்டும். // ஸ்ரீராம்... நாம் நம் ஜெனெரேஷன், முந்தைய ஜெனெரேஷன் போல் கிடையாது. அதுபோல நமக்கு அடுத்த ஜெனெரேஷன் நம்மைப் போல் கிடையாது.

      என்னால், என் முந்தைய ஜெனெரேஷன் போல, அதே அளவு ஆசாரமாக, disciplined ஆக இருக்க முடியாது. நம்மால் முடிந்த அளவுதான் இருக்க முடியும். இதுதான் என் அளவுகோல்.

      அதைப்போல நம்மால் முடிந்த அளவுதான் பற்று இல்லாமல் இருக்க முடியும். முழுமையாக பற்றில்லாமல் இருந்தால்தான்... என்ற அளவுகோல் இருந்தால், நம்மால் ஒரு அடி கூட எடுத்து வைக்க இயலாது. அதுபோல முந்தைய ஜெனெரேஷன் போல நானும் இருக்கணும் என்று நினைத்தால், எதையும் செய்ய இயலாது.

      நீக்கு
    5. உறவினர்கள் பலரும், இப்படித்தான் அடுத்த ஜெனரேஷனை நினைத்து (அவங்க வந்துபோக சுலபமாருக்கணும், விமானத்துல வந்து பிறகு வீட்டுக்கு உடனே வரும்படியாகவும், அவங்க நிலைக்கு ஏற்றமாதிரி நகரங்களில் வசித்தால்தான் நல்லது... என்றெல்லாம் பேச்சு ஓடும். நகரங்களில் இணையம், மின்சாரம், அருகிலேயே மருத்துவமனை, ஊபர் போன்ற வசதி, தண்ணீர் போன்ற அத்தியாவசியங்கள் இருக்கும். கிராமங்கள் (கும்பகோணம் ஶ்ரீரங்கம் உட்பட) அப்படி இல்லை என்றெல்லாம் சொல்வாங்க.

      இப்படியெல்லாம் நாம் யாருக்காக யோசிக்கிறோம்? எதற்காக யோசிக்கிறோம் என நினைத்தால் பதில் இருக்காது.

      நம்மால் ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது.

      உங்க நல்ல நேரம்... ஒரளவு கூட்டுக் குடும்பத்தில் இருக்கீங்க. அதனால்தான் இப்படி யோசிக்கறீங்க.

      நீக்கு
  14. "நாம் தவம் செய்யும்போது சுற்றுப் புறத்தையோ வேறு யாரையுமோ கவனிப்போமா?  இவனை மட்டும் நாம் அப்படி எதிர்பார்ப்பது தவறல்லவா? என்று அகஸ்தியருக்கு தோன்றவில்லை பாருங்கள்...  நடக்க உள்ள நாடகத்தின் அடுத்த காட்சிக்கு தேவை என்பதால் விட்டு விட்டார் போலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று ஒரு உபந்நியாசம் கேட்டுக்கொண்டிருந்தேன் ஸ்ரீராம். அதில் துர்வாசருக்கு சாபம் கொடுத்தால்தான் வளர்ச்சி. மத்தவங்களுக்கு சாபம் கொடுத்தால், அவங்க சேர்த்து வைத்திருக்கும் தவ வலிமை குறையும் என்று சொன்னார். இந்த மாதிரி சாபங்களே காரணமாகத்தான் சில நேரங்களில் அமையும்.

      நீக்கு
    2. துர்வாசரும் சாபம் கொடுத்தபோது தன் தவவலிமையை இழந்ததாகத்தான் படித்திருக்கிறேன்.

      நீக்கு
    3. முனிவர் என்றாலே.. ‘பிடி சாபம்’ என்று தொடர்கிற வார்த்தைகளே நினைவுக்கு வருகின்றன. அந்த அளவிற்கு முனிவர்களை, ரிஷிகளை முன்கோபிகளாக, சாதாரண அசடுகளாக நமது ஆன்மீகப் பிரசங்கிகள் சித்தரித்துக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

      நீக்கு
    4. வாங்க ஏகாந்தன் சார்... முனிவர்களும் நம்மைப் போல மனிதர்களே. மனிதர்களில் மெச்சூரிட்டி ஏற்பட ஏற்பட அமைதியான குணம் அமைவதுபோல அந்த பிரம்மரிஷி என்ற தன்மையை அடைந்தாலும் அந்த மெச்சூரிட்டி அடையாதவர்கள் இருப்பர்.

      "பிடி சாபம்" என்பது இன்டரெஸ்டிங் கான்சப்ட் ஆக எனக்குத் தோன்றுகிறது. பணம் சேரச் சேர, வீங்கிவிடாமல் பெரும் செலவு ஏற்படுவது போ தவ வலிமையை இயற்கையாகவே குறைக்கும் வழி.

      நீக்கு
    5. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், நமக்கு தவ்வலிமை இருக்கிறது என்றால் ஒரு நாளிலேயே நம் தவ்வலிமை குன்றுமளவுக்கு தினமும் நமக்கு எத்தனையோ விஷயங்கள், மனிதர்கள் மீது கோபம் ஏற்படுவதில்லையா?

      நீக்கு
  15. அத்தாளநல்லூர் வரலாறு அறிந்தோம்.

    கஜேந்திரமோட்சம் படம் நன்றாக உள்ளது.

    கோவில் பழையது என்றாலும் நன்றாக இருக்கிறது.

    ஆதிமுக கஜேந்திரவரதர் அழகாக இருக்கிறார் சேவித்துக் கொண்டோம்.

    புண்ணிய நதிகள் சுத்தமாக இருக்கும் பட்சத்தில் நீராடிக் கொள்ளலாம்
    இராமேஸ்வரம் சென்றபோது அதிகாலை கடலில் நீராட இருந்தோம் அங்கு நடக்கும் அசுத்தத்தை கண்டபின் நீராடுவதை விட்டுவிட்டோம் . கோவில் உட் கிணற்று தீர்த்தங்களில் தெளித்துக் கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி அவர்கள். உங்க கருத்து யோசிக்க வைக்கிறது.

      விரைவில் (இன்னைக்கு எழுதிக் கொடுத்தாலும் அது வெளிவர நவம்பர் ஆகிவிடும்) இராமேசுவர பயணம் எழுதுகிறேன். நம்மால் எதையும் சுத்தபாக வைத்துக்கொள்ள முடியாது.

      கர்நாடகாவிலிருந்து காவிரி நீர் திறந்துவிட்டதால் வறண்டு கிடந்த ந்திப் படுகைகளில் (தஞ்சை) நீர் வரும் காணொளிகளை இன்று பார்த்தேன். விவசாயிகள் மக்கள் நீரை விழுந்து கும்பிடுகிறார்கள். முதலில் நீர் அடித்துக்கொண்டு வருவது பிளாஸ்டிக் குப்பைகள், போத்தல்கள்.

      நீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. அத்தாளநல்லூர் தள வரலாறு , கோயில் படங்கள் எல்லாம் அருமை.

    //ஆதிமூல கஜேந்திர வரதர். நின்ற திருக்கோலம், ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன்.//
    சேவித்து கொண்டேன்.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    //கோயில் கருவறையில் சுதை வடிவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் ஆதிமுலப் பெருமாள் கஜேந்திர வரதர் என்ற நாமத்துடன் காட்சி தருகிறார். மூலவருக்கு அருகிலேயே மார்க்கண்டேய மற்றும் பிருகு முனிவர்கள் உள்ளனர்.//

    கீழே அந்த படத்தைப் பார்த்து வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  18. அத்தியாள நல்லூர் அத்தாளநல்லூர் ஆகி விட்டதே!

    . //மொய்ம்மாம் பூம்பொழில் ஆழ்வார் கோயில் என்று அழைக்கப்பட்டதாம்.//

    அருமையான பெயர்.

    பாசுர பகிர்வும் அதன் விளக்கமும் அருமை.

    பதிலளிநீக்கு
  19. பழமையான கோயில் பார்க்க அமைதியாக ஆரவாரம் இல்லாமல் இருக்கிறது. நீங்கள் போன போது மக்கள் இருந்தார்களா? இப்போது எந்த கோயில் போனாலும் கூட்டமாய் பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!