செவ்வாய், 3 ஜூலை, 2012

ஹிக்ஸ் போசான்!

   
(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.) 
   
ஹிக்ஸ் போசான் அல்லது ஹிக்ஸ் போசோன் (Higgs Boson) என்பது ஒரு நிறையுடைய அணுத் துகள் ஆகும். தற்போது இது Standard Model படி ஒரு கருதுகோள் மட்டுமே. இதுவரை இது பரிசோதனை மூலமாக நிரூபிக்கப்படவில்லை. பெரும் ஹாட்ரான் மோதி உதவியுடன் நடைபெறும் பரிசோதனைகளில் இந்தத் துகள் நிரூபிக்கப்படலாம். இந்த ஹிக்ஸ் போசானைக் கடவுள் துகள் (God Particle) என்றும் குறிப்பிடுவர்.
    
அணுவின் அடிப்படை அலகுகளான இம்மிகள் பற்றி அறிய கற்றை இயற்பியலின் (Quantum Physics) அடிப்படையில் நாம் அணுவைப் பிளந்து அதன் உட்கருவில் நுழைந்து அதன் உட்கூறுகளை எலெட்ரான் மைக்ராஸ்கோப், ஸ்கேன்னிங் டன்னலிங் மைக்ராஸ்கோப் போன்றவைகளைக் கொண்டு ஆராய்ந்த நம் அனுபவம் குவார்க்ஸ், லெப்டான், போசான், என்ற மூன்று பிரிவுகளாக விரிகிறது. இதில் முதலிரண்டும் அணுவின் உட்கருவைப் பற்றிய ஆராய்ச்சிகள். 'போசான்', மேற்சொன்ன எலெக்ட்ரான்களின் சுழற்சி வேகத்திற்கு ஈடுகொடுத்து அதைப் பின்தொடர்ந்த மனிதனின் ஆராய்ச்சி பற்றியது. இந்திய விஞ்ஞானி சத்தியேந்திரநாத் போஸ் கண்டுபிடித்த போசான்கள், மனிதனுக்கு இந்த ஆராய்ச்சியில் சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
     
அடிப்படையில் போசான்கள் - ஃபோட்டான்கள், குளூஆன்கள், வீக்கான்கள் என மூன்று வகைப் படும். இவை அணுக்களில் ஒரு இம்மியிலிருந்து மற்றவற்றிற்கு சக்தியைக் கடத்துவன. அண்மையில் கண்டறியப்பட்ட கிரேவிட்டான், அணுக்கள் ஒன்றிலிருந்து மற்றவற்றிற்கு புவிஈர்ப்பு விசையைக் கடத்தும் வல்லமையைக் கொடுப்பது என்று நிரூபனமாகியுள்ளது.
           
இந்த வரிசையில் அணுக்களுக்குப் பொருள் திணிவை அளிக்கும் திறன் கொண்ட துகள்கள் போசான்கள் தாம் என்று 1960-ல் பிரிட்டீஷ் பௌதிக விஞ்ஞானி டாக்டர் பீட்டர் ஹிக்ஸ் என்பவர் 'Origin of Mass' எனும் தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதைத்தான் 'ஹிக்ஸ் போசான்' என்றும் 'கடவுள் துகள்' (God Particle)என்றும் அழைக்கின்றனர். இதுவே அணுவின் கட்டமைப்புக்கு ஆதிமூலமாக இருக்கக்கூடும் என்பது விஞ்ஞானிகளின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
    
அண்டத்தின் தோற்றம் என்பது சுமார் 15 அல்லது 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட 'BIG BANG' எனப்படும் பெரும் பிரளயத்துக்குப் பின் உருவான வெப்பமிகுந்த தீக்கோளம் விரிந்து பரவிக் குளிர, அதில் தோன்றிய வாயுக்கள் சுருங்கிச் செறிவடைந்து அடுத்த ஐந்து பில்லியன் ஆண்டுகளில் பல மாற்றங்களுக்குட்பட்டன. பின்னர் கொத்துக் கொத்தாக அவ்வாயுக்கள் திரண்டு பிரபஞ்சம் முழுக்கப் பால்வீதிகளாக மாற்றம் கண்டன. காலப்போக்கில் பால்வீதிகள் விரிந்து பரவ, மேலும் சில பில்லியன் வருட மாற்றங்களுக்குப் பின் பால்வீதிகளில் நட்சத்திரங்களும், பிற்பாடு கிரகங்களும் தோன்றியதாகவும், நட்சத்திரங்களுக்கும் பிறப்பு, இளமை, முதுமை, இறப்பு என்று உண்டு என்றும் விஞ்ஞானம் சொல்கிறது.
             
இதே போன்றதொரு செயற்கைப் பிரளயத்தை உருவாக்கிப் பிரபஞ்ச ரகசியத்தை அறியும் மனிதனின் முயற்சியாக இப்போது அண்மையில் (செப் 10, 2008) ஜீரா மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய கூட்டமைப்பின் (CERN) 300 அடி ஆழம், 27 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்ட பெரிய ஆட்ரான் மோதுவி என்னும் ராட்சத ஆய்வுக் கூடத்தில் (LHC - Large Hadron Collidar) புரோட்டான் துகள்களை மோத விடுகின்றனர்.
                 
இச்சோதனையில் பிரபஞ்சத்தில் இரண்டறக் கலந்திருக்கும் 'கடவுள் துகள்' வெளிப்படும்போது அதன் உண்மைத்தன்மையை நம்மால் அறிந்து கொள்ள முடியும். மேலும் இதுவரை மனிதனால் கண்டறியப் படாத பருப் பொருள் (dark matter) பற்றிய உண்மைகள் வெளிப்படும். பின் புரோட்டான்கள் அழிந்து உயிர்க் குழம்பு பிரபஞ்சத்தில் எவ்வாறு உருவானது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
                 
(நாளை, 'ஹிக்ஸ் போஸான்' பற்றி விஞ்ஞானிகள் சில அரிய  பெரிய உண்மைகளை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.. அந்த சமயத்தில் எங்கள் வாசகர்கள், அந்த உண்மைகளை உள்  வாங்கிக் கொள்ள இந்த விவரங்கள் அவர்களுக்கு உதவக் கூடும் என்ற எண்ணத்தில் இது இன்று வெளியிடப் படுகிறது. ஓம் நமோ ஹிக்ஸ் போசானே போற்றி!) 
           
            

9 கருத்துகள்:

 1. சார்.. கணக்கு கேள்வி கேப்பீக..
  புதிர் போடுவீக..
  இப்போ அறிவியலையும் கலந்து கலக்குறீக..

  நீங்க நெறைய படிச்ச புள்ள போல... !!

  பதிலளிநீக்கு
 2. சட்டுனு பாத்தப்ப, தலைப்பு ஏதோ ஆசனம் அல்லது ஆசான் என்பதுபோல இருந்துது.

  வாசிக்க ஆரம்பித்தால், கொட்டாவி கொட்டாவியாய் வருது. :-)))
  தமிழ்ல எழுதிருக்கப்படாதோ? அல்லது ஆங்கிலமென்றாலும் ஓக்கேதான்.

  பதிலளிநீக்கு
 3. நிறைய தமிழ் சொற்கள் கற்றுக் கொண்டேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

  god particle (பாத்தீங்களா, உடனே இங்க்லிபிஸ்ல தான் வருது) என்பது பாமரர்களுக்காக உருவாக்கப்பட்ட expression. இதற்கான தடயங்கள் சிகாகோ பெர்மிலேப் சோதனைகளில பல வருடங்களாக பரிசீலிக்கப்பட்ட வருகின்றன. நாளைய செய்திக்காக நானும் காத்திருக்கிறேன்.

  (இதற்கப்புறமும் சகலத்தையும் உருவாக்கி காத்து அழிக்கும் சாமி உண்டுனு அலையறவங்க அலையத்தான் செய்வாங்க. கடவுள் அருளால இதைக் கண்டுபிடிச்சோம்னு சொன்னாலும் சொல்வாங்க.. அவங்களை ஒண்ணும் செய்யமுடியாதயா சத்யேந்தர போசய்யா.. )

  பதிலளிநீக்கு
 4. //அண்டத்தின் தோற்றம் என்பது சுமார் 15 அல்லது 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட 'BIG BANG' எனப்படும் ..

  இந்த மாதிரியெல்லாம் சொல்லி என்னை ஏமாத்தப் பாக்கறீங்க.. அண்டமெல்லாம் விராட்புருஷர் ஒருத்தர் படைச்சாருன்னு எனக்கு நல்லாத் தெரியும்.

  பதிலளிநீக்கு
 5. //சர்வ பிரபஞ்சமும் சூக்ஷ்ம அவஸ்தைக்குப் போவது
  அவன் துயில்.

  ஸ்தூல அவஸ்தைக்கு வருவது அவன் விழிப்பு.

  அந்த உருவத்தை உணர்வார் ஆர்? //

  இப்போத் தான் ஶ்ரீரங்கம் மோஹனரங்கன் எழுதின இந்த ஶ்ரீபகவத் விஷய அனுபவம் படித்தேன். இங்கே வந்தால் அப்பாதுரையோட கமென்ட். எதிர்பார்த்தது தான். :)))))

  என்ன எழுதி இருக்கார்னு கேட்டுட்டு, என்ன பாடம் நடத்தி இருக்கீங்கனு தொடர்ந்து கமென்டறதுக்குள்ளே பப்ளிஷ் ஆயிடுச்சு! ஹிஹிஹி! அப்புறமா இங்கே மின் தடை. :))))

  பதிலளிநீக்கு
 6. ஹுசைனம்மா சொன்னாப்போல தமிழிலே எழுதி இருக்கக் கூடாதோ?

  பதிலளிநீக்கு
 7. நல்ல பதிவு .. நானும் ஆர்வமாக இருக்கின்றேன் டார்க் மேட்டர் பற்றி அறிந்துக் கொள்ள !

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!