3.8.26

"திங்க"க்கிழமை  : திப்பிச சாம்பார் சாதம் -- கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 ரொம்ப நாள் கழிச்சு ஒரு திப்பிசத்தோடு வரேன்.!

இந்த வருஷம் ஏதும் எழுதலையோனு நினைச்சேன். ஹிஹிஹி, இங்கே வந்தே அத்தனை மாதங்கள் ஆகின்றன. ஆனால் மார்ச் 21 ஆம் தேதி வரை எழுதி இருக்கேன். அதன் பின்னர் தான் கால் வலி/குடும்பப் பிரச்னைகள்/மனச்சோர்வு/மறுபடி கால் வலி/வீக்கம்/படுக்கைனு ஆகிவிட்டது. இப்போக் கொஞ்ச நாட்களாகப் பரவாயில்லை என்றாலும் அதிக நேரம் உட்கார்ந்தால் காலில் லேசாக வீங்க ஆரம்பிக்கிறது. ஆகவே கொஞ்சம் பயமாகவும் இருக்கு. என்றாலும் இன்னிக்குக் கட்டாயமாய் இங்கே வந்தாவது பார்க்கணும்னு வந்துட்டேன். இப்போதைக்குப் புதுசா எதுவும் போடலை. ஆனால் இரண்டு நாட்கள் முன்னர் செய்த ஒரு திப்பிச வேலையைப் பத்தி மட்டும் சொல்லிட்டுப் போயிடறேன்.
நான் எப்போவுமே எதுவும் வீணாகாதபடிக்குக் கொஞ்சமாச் சமைச்சாலும் சில/பல சமயங்கள் மிஞ்சத் தான் செய்கிறது. போன வாரம் ஞாயிறன்று அவரைக்காய் 

போட்டு சாம்பார் வைத்திருந்தேன். எப்போதும் வைப்பதை விடக் கொஞ்சமாக வைத்திருந்தாலும் அது என்னமோ மிஞ்சி விட்டது. அதை அப்படியே வைச்சுச் சூடு பண்ணி விட்டு எடுத்து வைச்சுட்டேன். மறுநாள் என்ன சமைப்பது என வழக்கமான மண்டை காய்தல். யோசிச்சேன். நம்ம ரங்க்ஸ் கேட்டார் என்ன சமையல்னு! நேத்திக்கு சாம்பார் தான்னு சொல்லிட்டேன். அதை அப்படியே வைச்சுச் சாப்பிடவும் யோசனை. 


ஆகவே இரண்டு பெரிய வெங்காயம் நறுக்கிக் கொண்டேன். 

சின்ன வெங்காயம் இருந்தாலும் அதை உரிச்சு, வதக்கி வேக வைக்க நேரம் எடுக்குமே! கொஞ்சமாய் நீர்ப்புளிக் கரைசல் அரைக்கிண்ணம். ஒரு மி.வத்தல், ஒரு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை, ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, வெந்தயம் அரை டீஸ்பூன், சின்னத் துண்டு லவங்கம், ஏலக்காய் ஒன்று,தேங்காய்த் துருவல் எல்லாவற்றையும் தேங்காய் எண்ணெயில் வறுத்து அரைத்துக் கொண்டேன்.  அரைக்கரண்டி பருப்பைக் குழைய வேக வைத்துக் கொண்டேன்.

கல்சட்டியைப் போட்டுத் தேங்காய் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கிக் கொண்டு நீர்ப்புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விட்டேன். பின்னர் நேற்றைய சாம்பாரை அதில் சேர்த்துக் கொண்டேன். நன்றாகக் கொதிக்க வைத்தேன். பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்கும்போதே சமைத்த சாதத்தோடு குழைந்த பருப்பையும் சேர்த்துக் கலந்து கொண்டேன். தளதளவெனக் கொதித்தது. நல்ல வாசனையும் வந்தது.  
                                                          
பின்னர் இரும்புக்கரண்டியில் நெய்யைத் தாராளமாக ஊற்றிக் கொண்டூ கடுகு மட்டும் போட்டுப் பாதி மி.வற்றல், கருகப்பிலை, பெருங்காயத் தூள் போட்டுத் தாளித்துச் சாதத்தில் விட்டுக் கலக்கிவிட்டுக் கொத்துமல்லித் தழையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்தேன். சாம்பார் சாதம் தயார். ரசம் வைத்துவிட்டுப் பாகற்காயை வதக்கிவிட்டு அது போறாதோனு சந்தேகத்தில் இரண்டு அப்பளங்களும் பொரித்து எடுத்துக்கொண்டு அன்னிக்குப் பாட்டை ஒப்பேத்தியாச்சு. இதே போல் வத்தக் குழம்பு மிஞ்சினால் புளியஞ்சாதம் மாதிரி மாற்றலாம். அதைப் பின்னர் பார்ப்போமா? அன்னைக்கு என்னமோ உடம்பு கொஞ்சம் ஒரு மாதிரி இருந்ததால் படங்கள் எல்லாம் எடுத்துப் போடலை. ஆனால் புதிதாகச் செய்யும் சாம்பார் சாதம் போலவே அமைந்திருந்தது. இன்னொரு முறை இந்தத் திப்பிசம்பண்ணும்போது படங்கள் மட்டும் எடுத்துப் போடறேன்.




===========================================================================


மலையாள திரை உலகில் கமர்சியல் இயக்குனர்களில் பிரபலமானவர் இயக்குனர் ஜோஷி. இவர் மம்முட்டி, மோகன்லால் உடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். 

அந்த வகையில் 1992ல் ஜோஷி இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் "கவுரவர்". இந்தப் படத்தின் கதையை மறைந்த இயக்குனர் லோகிததாஸ் எழுதியிருந்தார். சிறைவாசம் முடிந்து திரும்பும் மம்முட்டி, நீண்ட காலமாக பிரிந்து இருந்த தனது மகளை தேடி கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை.

கதைப்படி மம்முட்டியின் மகள் வேறு ஒரு நபர் வீட்டில் அவரது இரண்டு பெண் குழந்தைகளுடன் சேர்த்து வளர்ந்து வருவார். ஆனால் மம்முட்டி அந்த நபரை கண்டுபிடிக்கும் சமயத்தில், மம்முட்டியின் மகள் யார் என்கிற உண்மையை அவரிடம் கூறாமல் இறந்து விடுவார். மம்மூட்டியும் இந்த மூவரையுமே என்னுடைய மகளாகவே நினைத்துக் கொண்டு வளர்க்கிறேன் என்று சொல்வதாக படம் முடியும். 

இதில் என்ன ஆச்சரியம் என்றால், படத்தில் மம்முட்டியின் உண்மையான மகள் யார் என்கிற உண்மை கடைசிவரை ரசிகர்களுக்கு சொல்லப்படவே இல்லை.. அது மட்டுமல்ல, படத்தில் நடித்த மம்முட்டிக்கு கூட தனது மகள் கதாபாத்திரத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் யார் என்கிற உண்மை இப்போது வரை தெரியாதாம்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவலை கூறியுள்ள இயக்குனர் ஜோஷி, 

"ஆனால் ரசிகர்களுக்கு க்ளூ கொடுப்பது போல மற்ற இரண்டு பெண்களின் முகமும் நீள் வட்ட வடிவில் இருக்கும், ஆனால் மம்முட்டியின் மகளாக நடித்தவரின் முகம் மட்டும் வட்ட வடிவில் இருக்கும். இதை பார்வையாளர்கள் தங்களது நுண்ணறிவால் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அது பற்றி வெளிப்படையாக கூறாமல் வைத்திருந்தோம். ஆனால், இப்போதுவரை யாராலும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை" என்று கூறியுள்ளார்.

======================================================================================


"வழக்கமா நீ பெல்பாட்டம்தானே போட்டுக்கொண்டு வருவே... இன்னிக்கி என்ன டிரான்ஸ்பரென்ட் புடவை கட்டிக்கொண்டு வந்திருக்கே?"

​"பெல்பாட்டத்தை என் தம்பி போட்டுக்கொண்டு போயிட்டான் கிரிஜா"

28 கருத்துகள்:

  1. ம்ம்ம்.... சாம்பார் சாதம் சாப்பிட்டே எத்தனையோ மாதங்களாகிவிட்டது. நெய் நிறைய ஊற்றி.... இதில் பெரிய திப்பிச வேலை இல்லையே... கொஞ்சமாக மிஞ்சிய சாம்பாரை உபயோகித்தது தவிர

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் ஆடிப் பதினெட்டு நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. ​சென்ற வெள்ளி அன்று நமது வீட்டில் சாம்பார் சாதம். மனைவியார் கொஞ்சம் சொதப்பி விட்டார். சாம்பார் சாதம் சாம்பார் கஞ்சி ஆகிவிட்டது. புது கர்க்கடகக் கஞ்சி என்று மழையை அனுபவித்துக்கொண்டே சாப்பிட்டோம்.

    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் சாதம் தனியா வைச்சிருக்கணும். அதிலேயே போட்டு வேகவைத்தால் சில/பல சமயங்கள் இப்படி ஆகலாம். அல்லது ஒரு உ.கி. வெங்காயம் நறுக்கி உப்பு, காரம் சேர்த்து வதக்கிக் கொண்டு சாதத்தில் சேர்த்துக் கிளறலாம். சேர்ந்துக்கும்.

      நீக்கு
    2. ​சூடு இருந்தவரை தான் கஞ்சி ஆறியபின் கத்தியால் வெட்டி போர்க்கால் சாப்பிடும் அளவுக்கு கட்டியாகி விட்டது. போட்ட காய்கள் பட்டாணி, பட்டர் பீன்ஸ் உரித்து, முருங்கக்காய், சின்ன சேப்பங்கிழங்கு, கொத்தவரங்காய், வெள்ளை கத்திரிக்காய். காய்கள் வெந்தன, ஆனால் குழையவில்லை.

      Jayakumar

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் ஆடி பதினெட்டாம் பெருக்கு நல்வாழ்த்துகள்.

    இன்றைய திங்கள் பதிவில் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் சாம்பார் சாதம் நன்றாக உள்ளது. சாம்பாரை சாதத்தில் போட்டு கலந்து சாப்பிடுவது ஒரு மாதிரி என்றால், சாம்பாருடனே இறுதியில் சாதத்தைப் போட்டு ஒரு கொதிக்க வைத்து தயாராக்கும் சாம்பார் சாதம் ஒரு வகையான ருசிதான்.

    எங்கள் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக சாம்பார்தான். அதிலும் நேற்று வெண்பொங்கலுடன், சாம்பார். தே. சட்னி, கேசரி, குணுக்கு என குழந்தைகளுக்காக செய்ய ஆரம்பித்து நேரம் சரியாக இருந்தது பதினெட்டாம் பெருக்கை வரவேற்று 17ம் பெருக்கை கொண்டாடி விட்டோம் என சொல்லிக் கொண்டேயிருந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. ஹெஹெஹெஹெஹெ படிச்சுட்டேனே. எப்படியோ படிச்சுட்டேனே! பெல்பாட்டம் தானே போட்டுண்டு வருவே? இன்னிக்கு என்ன ட்ரான்ஸ்பரன்ட் சாரினு சிநேகிதி கேட்க அந்தப் பெண் பெல் பாட்டத்தைத் தம்பி போட்டுண்டு போயிட்டான்னு சொல்றா! இஃகி,இஃகி,இக்ஃஇஃகி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீழே கொடுத்திருக்கீங்களா? அதைக் கவனிக்காமல் பெரிய நோஸ் கட் வாங்கிட்டேனே! ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ

      நீக்கு
    2. அது சரி, இன்னிக்கு என்னச் சின்னச் சின்னப் பதிவு?

      நீக்கு
  7. இன்னிக்கு எப்படியாவது நம்பெருமாளைப் பார்க்கணும்னு நினைச்சிட்டிருக்கேன். அவர் என்ன நினைக்கறாரோ தெரியலை. கீழே ஒரு பத்தரை மணிக்குப் போனால் சரியா இருக்கும்னு நினைக்கிறேன். பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  8. கீதாக்கா, திப்பிஸம் - நம்ம வீட்டில் கோல்மால்/தில்லுமுல்லு.

    நல்லாருக்கு. நம்ம வீட்டிலும் பெரும்பாலும் மீறாமல், செய்வது வழக்கமாகிவிட்டது. மீந்தாலும் அதை எப்படி உருமாத்தலாம்னு ஓசிச்சு செய்துவிடுவதுண்டு. நலலவே வந்துவிடும்

    கீதா

    பதிலளிநீக்கு
  9. கவுரவர் கதையில் அப்படித் தெரியாமல் வளர்க்கபப்டும் மகள் யாரென்று தெரியவரும் போது....என்று இப்போதும் யாரென்று தெரியாத மகளாகவேன்று வளர்ந்து வரும் போது தெரியவரும் நாளில் ட்விஸ்ட் எ அப்படி ஒரு கதையை அமைத்து மம்முட்டியும் இருக்கிறார். அப்போது குழந்தையாக நடித்த பெண்ணும் இருப்பார் இல்லையா அவரையே மகளாகப் போட்டு படம் எடுக்கலாமோ? ஸ்ரீராம் என்ன சொல்றீங்க?! அப்படி வந்தா நல்லாருக்கும்ல?

    கதை ஒன்று மனதில்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெல்கம் பேக் கீதா... வாங்க வாங்க.....

      தமிழ்ல பைலட் பிரேம்நாத் அப்படி என்கிற படத்துல இதே கரு.

      நீக்கு
  10. ஜோக் - ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  11. @ நெல்லைத்தமிழன் : இது நேற்றைய கமெண்ட்டிற்கு பதில் கமெண்ட்! (நேற்றைய பக்கத்திலும் இப்போதுதான் இட்டேன்):
    ”தவமோ, வலிமையோ.. ஏதோ ஒரு உன்னதத்தை நாம் அடைவது போலத் தோன்றினாலும் போதும்... உடனே அதை சிதைத்து..நீ ஒன்னுமில்ல!-ன்னு காண்பித்துவிடும் நமக்குள் இருக்கும் கசடுகள்.. ’நான்’ என்பதே காலங்காலமாய்ச் சேர்ந்த கசடுகளின் ஒரு படிவம்தானே”

    நீக்கு

    பதிலளிநீக்கு
  12. @ கீதா சாம்பசிவம்: திங்கட்கிழமை இவர் என்ன போட்டிருக்கார்னு பார்த்தேன். சாம்பார் சாதம் கலர்ஃபுல்லா இருக்கு. காய்கறி, நெய்னு தாராளமா சேத்தா.. சாப்பிடலாம்தான்!

    மேலும்..

    ’மனித ஜீவன்’ என்பதே.. கடவுளின் ’திப்பிச வேலை’தானோ என்னவோ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /’மனித ஜீவன்’ என்பதே.. கடவுளின் ’திப்பிச வேலை’தானோ// யோசிக்க வேண்டிய விஷயம்.நல்லா கவனிச்சோம்னா, நாம ஏதோ ஒரு உறவினரைக் கொண்டிருப்போம், உருவத்தில் ஜாடையில், சிலரின் குணம், சிலரைப் போல் பேசும் சுபாவம் என்று ஒரு காம்பினேஷனில்தான் இருப்போம். அதனால்தானா என்னவோ அப்பா தலைமுறையில் 6 பேருக்கும், அம்மா தலைமுறையில் 6 பேருக்கும் தர்ப்பணம் பண்ணுகிறோமோ?

      நீக்கு
  13. சாம்பார் சாதம் சுவையாகத்தான் இருந்திருக்கும். முதல் நாள் வைத்த குழம்பு மீந்து விட்டால் நானும் இப்படி செய்வதுண்டு(அநேகமாக எல்லா பெண்களும் செய்வார்கள்).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையைச் சொல்றேன்.. என் வீட்டில் அப்படிச் செய்ததே கிடையாது. நான் தனியாக இருந்தபோது, நிறைய பாயசம் செய்து அல்லது அவியல் செய்து, இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்திருக்கிறேன் (ஃப்ரிட்ஜில்). அவியலில் மாத்திரம் நீர் வந்துவிட்டால் தூரப்போட்டுவிடுவேன். வெந்தயக் குழம்பு மாத்திரம் மீதமாகி இருந்தால், மறுநாள் சாப்பிட்டால் நல்லா இருக்கும்.

      நீக்கு
  14. பெல் பாட்டம் வந்த புதிதில் அது பற்றி நிறைய ஜோக்குகள் வந்தது. விகடன் அட்டைப் படத்தில் ஒரு கல்லூரி மாணவி கீழே மணிகள் கோர்த்து இருக்கும் பேண்டை அணிந்து கொண்டு," இதுதான் நிஜமான பெல் பாட்டம்" என்பாள் என்று ஒரு ஜோக் வந்தது.
    அமலா காலத்தில் பஞ்சககச்சம் போல சூடிதார் அணிவது ஃபேஷனாக இருந்தது. அப்போது தன் பஞ்சகச்சத்தை பேத்தி அணிந்து சென்று விட்டாள் என்று தாத்தா தன் நண்பரிடம் அங்கலாய்ப்பதாக ஒரு ஜோக் படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் 7ம் வகுப்பு தாளவாடி என்ற கிராமத்தில் படித்துக்கொண்டிருந்தபோது (அதன் வெகு அருகில்தான் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்களின் பிறந்த ஊர். நான் அவரைப் பார்த்திருக்கிறேன், நல்லா உடல் முழுக்க எண்ணெய் தடவி (முதுகில் எண்ணெய் தடவியது அவர் மனைவி) ராஜ்குமார் அவர்களின் உறவினர் பையன் எலெபெண்ட் பெல்பாட்டம் அணிந்துகொண்டு பள்ளிக்கு வந்திருந்தான். அப்போ ஆவ் என்று மனதில் தோன்றியது. இப்போ அந்த மாதிரி உடையை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.

      நீக்கு
  15. நெல்லை தமிழனின் சனிக் கிழமை பதிவை வெள்ளி இரவே(இங்கு) படித்து விட்டேன். எ.மூ.வீ. கதையை படிக்கத் தோன்றவில்லை. அதையும் படித்த பிறகு கருத்திடலாம் என்று நினைத்தேன். இன்று வரை கதை படிக்கவில்லை. நேற்று கொஞ்சம் பிஸி.
    மிகவும் உழைத்து, நெல்லை போடும் பதிவுக்கு உடனே கருத்து போடாமல் இருப்பது குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. மன்னித்துக் கொள்ளுங்கள்.
    சனிக்கிழமை, பாலேய், இசைக்காரர், பக்தர், எம்பார் பெயர் விளக்கங்கள் சிறப்பு.
    அத்தாளநல்லூர் கோவில் தல புராணமும் படங்களும் மிகவும் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா... அப்படீல்லாம் இல்லை பா.வெ. மேடம். எழுதும்போது ரொம்ப நேரம் எடுக்கிறது. ஆனால் கருத்திடவில்லையே என்று நான் எண்ணுவதில்லை. சில நேரங்களில் ஞாயிறு, சனி ரொம்ப நேரம் யாரும் கருத்திடாமல் இருந்தால் கொஞ்சம் யோசிப்பேன், பதிவை வள வளவென எழுதிட்டேனோ... இல்லை ரொம்பவே போரடிக்கிறேனோ என்று. அப்போ அப்போ ஸ்ரீராம், கௌதமன் சார் ஆகியோரிடம் கேட்பேன்.

      ஞாயிறு கோயில் பதிவுக்கு ஒரு இடைவேளை கொடுக்க நினைக்கிறேன் (கொடுத்துவிட்டேன்).

      நீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. சாம்பார் சாதம் செய்முறை நன்றாக இருக்கிறது. நேற்றைய சாம்பாரை சேர்த்து இருக்கிறேன் என்று சொன்னால் தான் தெரியும் .

    பதிலளிநீக்கு
  18. "கவுரவர் பட விமர்சனம் நன்றாக இருக்கிறது.
    பெல்பாட்டம் சிரிப்பு நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!