வெள்ளி, 25 டிசம்பர், 2020

வெள்ளி வீடியோ : தேனில் செய்த தேகம் தாங்குமோ தென்றல் வந்து தீண்டினால்

நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

==============================================================================================

 காமத்துக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம்?  காதலில் காமம் இருக்கும்.  காமத்தில் காதல் இருக்க வாய்ப்பில்லை.  வந்த வேகத்தில் மறையும் காமம்.  பிரிந்து நின்றாலும் மறையாது காதல்.  பலபேரிடம் வரும் காமம்.  ஒரே ஆளிடம் வரும் காதல்.  

அலைகள் ஓய்வதில்லை ஆகட்டும், இந்தப் படம் ஆகட்டும், ஏன் இன்னும் பல படங்கள் காதல் என்ற பெயரில் காமத்தைதான் காட்டியதாகத் தோன்றும்.   

கடவுளுக்கு எதிரான சாத்தானின் வேலையாகவே காமத்தைப் பார்க்கிறது புராணங்கள்.  இயற்கைக்கு முரணான செயல்!  ஒருவரின் சொத்தை அவர் விருப்பம் பற்றி கவலைப்படாமல் இன்னொருவர் அபகரிக்கும் செயல்.  குரான், பைபிள், கீதை என்று எல்லாமே காமத்தில் ஆழ்வது நரகத்துக்கு இட்டுச் செல்லும் செயல் என்றே சொல்கின்றன.

அப்படி காதலைச் சொல்வதாகக் காமத்தைக் காட்டிய படங்களில் ஒன்றிலிருந்து இன்று இரண்டு பாடல்கள்!

வாலிபமே வா வா .  1982 இல் வெளிவந்த படம்.  பாரதிராஜா இயக்கத்தில் பி கண்ணன் ஒளிப்பதிவில் இளையராஜா இசையில் ராஜ்கண்ணு தயாரிப்பு.  

அலைகள் ஓய்வதில்லை போல இதுவும் பட்டையைக் கிளப்பி விடும் என்று எதிர்பார்த்திருப்பார்கள் போல...   ஊ..ஹூம்!  நான் வழக்கம்போல இத் திரைப் படம் பார்க்கவில்லை.  இந்த இரு பாடல் தவிர வேறெதுவும் என்னை இந்தப் படத்தில் கவரவில்லை. 

முதல் பாடல் கே ஜே யேசுதாஸும் எஸ் பி ஷைலஜாவும் இணைந்து பாடி இருக்கும் பாடல்.  இப்பாடலின் ப்ளஸ் இளையராஜாவின் மெட்லீயும் யேசுதாஸின் குரலும்!  முன்னர் இந்தப் பாடல் என்னுடைய யேசுதாஸ் கேசெட்டின் இரண்டாவது பக்கம் இறுதிப் பாடலாக இருந்தது.  கடைசியாக மறுபடி பல்லவி தொடங்கும்போது கட் ஆகிவிடும்!


பொன்வானப் பூங்காவில் தேரோடுது 
பொன்வானப் பூங்காவில் தேரோடுது 
போராடுது எண்ணம் நீராடுது இன்னும் 
வானிலே 
கவிபாடித் துதிபாடித் தொழுகிறது 

பொங்கும் காவேரி நீராக இன்பம் தானின்று நூறாக 
எண்ணம் எங்கெங்கிலும் பனிப்பூவாக 
எண்ணும் இன்பங்களின் துணை நீயாக 

இளம் தேகங்கள் தாளாதது அவை 
நான் சொல்லி மாளாதது 

என்றும் தானாக தேனாகத்தான்....

தென்றல் பூவாக ஆனந்தம்  உந்தன் தோளோடு ஆரம்பம் 
பனிக்காலங்களில் மனம் தான்வாட 
அதை நான் பாடவே தினம் நாள் கூட 

இது தானாகத் தீராதம்மா இனி 
நீயின்றி ஆறாதம்மா 

  எந்தன் கையோடு மெய்யோடு வா...  


 

 
அடுத்த பாடல் மலேசியா வாசுதேவன், பி சுசீலா பாடிய இந்த இன்னொரு பாடலும் இதேபோல ஒருமுறை கேட்கலாம் ரகம்.

புலமைப்பித்தன் எழுதிய பாடல்.  மலேசியா வாசுதேவன் பாடலின் இறுதி கட்டத்தில்தான் இணைவார்.

திரைப் பிரபலங்களில் இரண்டு பேர் நாட்டுப் பெயரோடு அறியப் படுகிறார்கள் என்று நினைக்கிறேன்.  மலேஷியா வாசுதேவன், சிலோன் மனோகர்!  வேறு யாராவது இருக்கிறார்களா?

அழகே உன்னைக் கொஞ்சம் 
கண்ணில் எழுத வா வா 
நெஞ்சம் முழுதும் நீ நீ நீ 
உயிர் எழுதும் ஒரு கவிதை 
ராகம் சொல்ல வா வா வா 

வானில் இன்று மேக ஊர்வலம் 
யாரைத்தேடிப் போகுமோ 
ஏழுவண்ண வானவில்லிலே 
மாலையாக சூட்டுமோ 

மலையின் அர்த்தமெங்கும் பச்சை மரகதம் 
இயற்கை அன்னை தந்த அன்பின் தரிசனம் 
அழகை விழியில் அளப்போம் வா வா வா 

தேனில் செய்த தேகம் தாங்குமோ 
தென்றல் வந்து தீண்டினால் 
வெளில செய்த பார்வை தாங்குமோ 
எண்ணெய் பார்த்து வீசினால் 

அடியே நீயே எந்தன் கண்ணின் முகவரி 
எனக்கும் காமன் தந்தான் உந்தன் முகவரி 
எனக்கும் அவன்தான் கொடுத்தான் வா வா வா 


52 கருத்துகள்:

 1. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று..

  எங்கெங்கும் நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். வைகுண்ட ஏகாதசி நன்னாளில் அனைவருக்கும் இறைவன் அருள் கிட்டி நலமுடன் வாழப் பிரார்த்திக்கிறோம். கிறிஸ்தவ நண்பர்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. சொர்க்கவாசல் திறந்து நம்பெருமாளை ஆயிரக்கால் மண்டபத்தில் கொண்டு விட்டுட்டு வந்தேன். அருமையான தரிசனம். கண் கொள்ளாக் காட்சி. பொதுமக்களை அனுமதிக்கவில்லை. எட்டு மணிக்கு மேல் கட்டண, இலவச தரிசனத்துக்குத் தான் அனுமதி! வீட்டில் இருந்தே பார்த்தாச்சு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னால் வீட்டிலிருந்தும் பார்க்கமுடியாத நிலை.  ஒருவார விடுப்புக்குப் பின் இன்றுதான் பணியில் இணைந்தேன்.

   நீக்கு
 4. பெருமாளைப் பார்த்த கண்களோடு பதிவைப் படிச்சேனா! முதல் வீடியோவைக் "க்ளிக்" செய்ததுமே விஷ்ணு சஹஸ்ரநாமம் யூ ட்யூபுக்கு அழைத்துச் சென்றது. நமக்கும் ஜினிமாவுக்கு ரொம்ப தூரம்னு புரிஞ்சுண்டேன். இஃகி,இஃகி,இஃகி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
   அனைத்து ஆலயங்களிலும் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி கண் நிறையக்
   கண்டு முடித்தோம்.
   பொதிகை இணைப்பு யூ டியுபிலிருந்து டெலிவிஷனுக்கு
   இணைப்பு கொடுத்து ஸ்ரீரங்க நாதனையும், ஸ்ரீபார்த்தசாரதியையும்
   தரிசிக்க முடிந்தது.

   அனைவரையும் இறைவனே காக்க வேண்டும்.
   இனிய கிறிஸ்மஸ் திருனாள் வாழ்த்துகள்.

   நீக்கு
  2. //முதல் வீடியோவைக் "க்ளிக்" செய்ததுமே விஷ்ணு சஹஸ்ரநாமம் யூ ட்யூபுக்கு அழைத்துச் சென்றது.//

   அதெப்படி?  எனக்கு 'புனித அந்தோணியார்' பாடல்தான் பாடுகிறது?!!

   நீக்கு
  3. வாங்க வல்லிம்மா, நல்வரவும், வணக்கமும்.

   நீக்கு
 5. இரு பாடல்களும் கேட்க இனிமைதான்.
  வரிகளை மறந்து விடலாம்.
  ஆமாம் இந்தப் படம் மறந்து விட்டது.
  சுசீலாம்மா குரல் இனிமை.

  இரண்டாவது பாடல் நடுவில் நின்று விட்டது மா.
  மீண்டும் முயற்சிக்கிறேன்.
  நன்றி மா ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாதியில் நின்று விட்டதா?  நான் கேட்டபோது முழுசும் பாடியதாக நினைவு.  பார்க்கிறேன்மா.

   நீக்கு
  2. வேறு காணொளி இணைத்து விட்டேன்மா.

   நீக்கு
  3. நன்றி மா ஸ்ரீராம். இனிய வைகுண்ட ஏகாதசி நன்னாள் வாழ்த்துகள்.

   நீக்கு
 6. அருமையான தொகுப்பு ஐயா!
  2021 இல் - தங்கள்
  தளத்திற்கு அடிக்கடி வருவேன்.

  பதிலளிநீக்கு
 7. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் காலை வணக்கம் மற்றும் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!
  ஶ்ரீராம் இது உங்களுக்கே அடு்க்குமா? வைகுண்ட ஏகாதசியும் அதுவுமாக காதல், காமம் என்று.. நாராயணா..!
  எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காத படங்களுள் அ.ஓ.வும் ஒன்று. பாரதிராஜா எடு்த்த ஏதோ ஒரு நல்ல படம் சரியாக ஓடாத கோபத்தில் வா.வா.வை எடுத்தாராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாராயண்.. நாராயண...

   இரண்டு நாடகளாக -

   மனதிலோ தூய்மையில்லை..
   வாக்கிலோ இனிமையில்லை..

   என்ற ஆழ்வாரின் திருமொழியும்

   நீதியால் வாழமாட்டேன் நித்தமும் தூயனல்லேன்!.. - என்று அப்பர் பெருமான் மொழிந்ததுவும் நெஞ்சில் நிழலாடுகின்றன...

   நீக்கு
  2. படம் எப்படி இருந்தால் என்ன பானு அக்கா...   அதைத்தான் நானே சொல்லி இருக்கிறேனே...   நமக்குத்தேவை பாடல்தான்.  அதைக் கேட்டுப்பாருங்கள்..

   நீக்கு
  3. வாங்க துரை செல்வராஜூ ஸார்..   உங்கள் மனக்கவலைகள் சீக்கிரம் தீரப் பிரார்த்தனைகள்.

   நீக்கு
  4. மனக் கவலைகளுக்காகச் சொல்ல வில்லை...

   அப்பேர்ப்பட்ட அருளாளர்கள் நமக்காக அவ்விதம் பாடிப் பரவி வைத்து இருக்கின்றார்கள்...

   நான் எப்போது கடைத்தேறுவேன் என்பதற்காக அதைச் சொன்னேன்...

   நீக்கு
  5. @ துரை செல்வராஜு:
   அருமையான ஆழ்வார், அப்பர் பெருமான் வரிகளைக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஞானிகள் தங்களுக்குள்ளேயே ஏதேதோ குற்றம் கண்டு மனம் வெதும்புபவர்கள். இத்தனைக் குற்றம், குறையிருந்தும் அருள்கின்றாயே, காக்கின்றாயே என அவனை நினைத்து நெகிழ்பவர்கள். இத்தகையோரின் சிந்தனை வாசனை நம்மை அவ்வப்போது தொட்டுச் செல்வதும் பாக்யமே.

   நீக்கு
 9. காதல் - காமம் விளக்கம் நன்று

  பாடல்கள் அருமை ஜி

  பதிலளிநீக்கு
 10. முருகா...

  காமத்துப்பால் - இன்பத்துப்பால் - நீண்ட பதிவொன்று எழுத வேண்டும்: அதுவும் ஒரு கணக்கியலுக்காக...

  பதிலளிநீக்கு
 11. // காமத்துக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம்? காதலில் காமம் இருக்கும். காமத்தில் காதல் இருக்க வாய்ப்பில்லை. வந்த வேகத்தில் மறையும் காமம். பிரிந்து நின்றாலும் மறையாது காதல். பலபேரிடம் வரும் காமம். ஒரே ஆளிடம் வரும் காதல். //

  காதல் - காமம் இரண்டு சொற்களுமே ஒரே பொருள் கொண்டவை தான். அதாவது ஒரே உணர்விற்காக இரண்டு சொற்கள்

  இரண்டையும் பிரித்துப் பார்த்து வெவ்வேறு பொருள் கொள்ளல் அபத்தமானது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஈஸ்வரா! நல்ல தெளிவான பொருள் கொடுத்திருக்காரேனு சந்தோஷம் அடைந்தேன். இங்கே வந்து இரண்டையும் பிரித்துப் பார்த்துப் பொருள் கொள்ளக் கூடாது என்றால்! கடவுளே!

   திருஞானசம்பந்தர், "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி"யதை இப்போ நினைச்சுப் பார்த்தால் இந்தப் பொருளைப் படித்ததும் பதிகங்கள் பாடுவதையே நிறுத்தி இருப்பார். இன்றைய காதல்/காமம் இரண்டின் பொருளும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் உண்மையில் "காதல்"என்பது எல்லோரிடமும் வரும் ஈசன் உள்பட! காமம் என்பது முற்றிலும் வேறே. இங்கே மனிதர்களைச் சுட்டுவதால் ஒரே ஒருத்தரிடம் தான் காதல் தோன்றும். அதற்குக் காமம் இருக்கணும்னு அவசியம் எல்லாம் இல்லை. ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஆணுக்குத் தோன்றுவது காமம் அல்லது தகாத இச்சை! காதல் உணர்வே வேறு. காமம் என்பது வேறு உணர்வு. பிரித்துத் தான் பார்த்தாகணும்.

   நீக்கு
  2. எப்படிக் "கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?" என நாச்சியார் திருமொழியில் வந்த "நாற்றம்"என்னும் அழகிய சொல்லின் பொருள் இன்றைய காலத்தில் மாறிவிட்டதோ அதே தான் இந்தக் காதல்/காமம் என்னும் சொற்களுக்கும் பொருந்தும். இப்போதோ "நாற்றம்" என்றாலே நமக்கு "துர்நாற்றம்" தான் நினைவில் வருது. அதைப் போல் ஆகிவிட்டது இந்தக் காதலும்/காமமும். மேலே பொருள் மிக அழகாகத் தான் சொல்லி இருக்கார் ஶ்ரீராம்.

   நீக்கு
  3. நன்றி ஜீவி ஸார்.  என்னால் இரண்டையும் ஒரே பொருளில் பார்க்க முடியவில்லை.

   நன்றி கீதா அக்கா.

   நீக்கு
  4. /ஈஸ்வரா! //

   இறையனாரின் பாடல். நக்கீரருக்கான கேள்வி.

   கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
   காமம் செப்பாது கண்டது மொழிமோ
   பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
   செறி எயிற்று அரிவை கூந்தலின்
   நறியவும் உளவோ நீ அறியும் பூவே.

   திருவள்ளுவர் பெருந்தகை கூட பால் வகைப் பிரிப்பில் காமத்துப்பால் என்று பெயரிட்டு அதை களவியல், கற்பியல் என்று வகைப்படுத்தினார்.

   புணர்ச்சி மகிழ்தல், காதல் சிறப்புரைத்தல் எல்லாம் களவியலில் அடக்கம்.

   காமம் என்ற சொல்லுக்கான புரிதல் இன்மை காலத்தின் அலங்கோலம்.

   காதல் என்ற சொல் புனிதம் போலவும், காமம் என்ற சொல் ஏதோ அபுனிதம் போலவும் அர்த்தம் கொண்டால் அதற்கு அவரவர் புரிதல் இன்மையே பொறுப்பாகும்.

   நீக்கு
  5. நீங்களே ஒத்துக்கொண்டதுக்கு நன்றி ஜீவி ஐயா! திருவள்ளுவரும் சரி, இறையனாரும் சரி இங்கே காமத்தைப் பற்றி மட்டுமே சொல்லி இருப்பது மகிழ்ச்சி தருகிறது. காதல் எனில் அது இறைவன் மேலும் வரும், மனிதர்கள் மேலும் வரும். காதல் இருக்கும் இடத்தில் இந்தக் காமத்துக்கு அதிக வேலை இருக்காது. காதலும், காமமும் சேர்ந்தால்/அது இருமனங்கள் இணையும்போது நடக்கும் ஒன்று. காமம் தனிப்பட ஒருத்தரிடம் மட்டும் தோன்றும். ஆனால் நாம் இவ்வுலகையே காதலிக்கலாம். தடையே இல்லை. ஆண்டாள் ரங்கமன்னாரிடம் கொண்டது காதல் தான். காமம் இல்லை. அதே போல் பக்த மீராவும். அவள் கிரிதாரியை அவள் காதலித்தாள். காமத்தில் மூழ்கவில்லை. இரண்டும் ஒன்று என்று சொல்லுபவர்களால் ராஸலீலையின் தத்துவத்தையும் திருப்பாவையின் உள்ளார்ந்த ஜீவனையும் புரிந்து கொள்ள முடியுமா? சந்தேகமே! தன்னை நாயகி பாவத்தில் இருத்திக் கொண்டு இறைவனைக் காதலித்த பல பெரியோர்கள் உண்டு. அவர்கள் காமத்தில் மூழ்கினார்கள் என்று சொல்ல முடியுமா? உதாரணமாக மணிவாசகர்! இவர் ஒருத்தர் போதுமே! காதல் என்னும் புனிதமான சொல் தான் இன்றைய நாட்களில் காமத்தையும் குறிக்கிறது. அதனால் நமக்கு இரண்டும் ஒன்று போல் தோற்றம் அளிக்கிறது.

   நீக்கு
  6. இங்கே களவு ஒழுக்கம் எல்லாம் வருவதும் காதலில் ஒரு பகுதியானாலும் அது தனிப்பட்ட இருவரின் காமத்தைப் பற்றி மட்டுமே பேசுவது! காதல் என்றாலோ உலகில் இருக்கும் எவ்வுயிர் மேலும் வரலாம். வியாசருக்கு மகன் மேல் கொண்ட பற்றால் எதைப் பார்த்தாலும் சுக ரிஷியாகத் தோன்றியது போல் ஈசன் மேல் காதல் கொண்டவருக்கு எதைப் பார்த்தாலும்/யாரைப் பார்த்தாலும் அவன் வடிவாகவே தோன்றுவார்கள். நிச்சயமாயும் உத்தரவாதமாயும் காதலும், காமமும் வெவ்வேறே! என்னைப் பொறுத்தவரை சந்தேகமே இல்லை.

   நீக்கு
  7. https://engalblog.blogspot.com/2020/07/blog-post_28.html

   இதை வாசித்துப் பாருங்கள்.

   ஏற்கனவே வாசித்திருந்தாலும், மறுபடியும் இப்பொழுது வாசிக்கையில் இந்தக் கதையின் உள்ளார்ந்த உணர்வுகள் புரிய வரலாம். இந்தக் காலத்து சிலரின் தரம் தாழ்ந்த சொல்லான காமத்தையும் காதலின் ஆழ்ந்த வெளிப்பாடாக பாவித்து இரண்டையும் வித்தியாசப்படுத்தாத கலந்த உணர்வாக பாவிப்பது தான் இந்தக் கதையின் சிறப்பு.

   காமம் என்றால் விருப்பம் என்று அர்த்தம். அவ்வளவு தான். இறையனாரின் மேற்குறித்த பாடலில் 'காமம் செப்பாது' என்ற வரி, விருப்பம் என்ற அர்த்ததிலேயே வருகிறது. காமம் என்பது வக்கிரம் பிடித்த சொல்லாக மாற்றம் கொண்டது பிற்காலத்தில் தான். காதல் என்பதனை அன்பாக வர்ணித்தது
   விருப்பம் என்ற வேர்ச்சொல்லின் விரிவாகத் தான்.

   இப்பொழுது கூட 'அவளை அவன் விரும்பினான்' என்ற அர்த்ததிலேயே அவளை அவன் காதலித்தான் என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்.

   இறைவன் மீதான காதல் என்பதனை எடுத்துக்காட்டாகக் கொண்டு நீங்கள் சொல்ல வந்ததை நியாயப்படுத்த வேண்டாம். அது நாம் பேசும் 'காதல்-- காமத்திற்கு சம்பந்தப்படாத 'தெய்வீக' விஷயங்கள். Platonic love என்று காதலின் வகையொன்றும் உண்டு. ஆன்மநேயக் காதல் என்று ஓரளவு அதனை தமிழில் கொள்ளலாம்.

   காமம் என்ற பழைமை வாய்ந்த காதலுக்கான மாற்றுச் சொல்லை இக்காலத்தில் புழக்கத்தில் இருக்கும் அர்த்தத்தில் பார்க்கக் கூடாது என்பது தான் நான் சொல்ல வந்தது.

   'காதலா? காமமா?' என்ற தலைப்பில் எ.பி-யில் சனிக்கிழமைக்கான சப்ஜெக்டாக ஒரு கட்டுரையை ஸ்ரீராம் எழுதினால், காலத்தின் கோலத்தில் இரண்டாக நாம் அர்த்தப்படுத்திக் கொண்ட இந்த ஒற்றை விஷயத்தைப் பற்றி விவரமாக விவாதிக்க வழியேற்படும். அங்கு கூட மனிதக் காதலைப் பற்றிப் பேசினால் மட்டுமே விவாதிக்க முடியும் என்ற அளவில் ஒப்புக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  8. உங்கள் அந்தக் கதையும், அதற்கு நான் கொடுத்திருந்த பதிலும் ஓரளவு நினைவில் வருது. உங்கள் கருத்து உங்களுக்கு, என் கருத்து என்னோடு! ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவசியமோ, கட்டாயமோ இல்லை. என்னைப் பொறுத்தவரை காதல் வேறு, காமம் வேறு. காமத்தைக் காதலாக நினைக்க முடியாது என்னால்! உடல் சார்ந்தது காமம். காதல் மனம் சார்ந்தது. இதோடு நிறுத்திக் கொள்கிறேன். அவரவர் அவரவர் கருத்தில் இருப்போம்.

   நீக்கு
  9. ஸ்ரீராம் ஏதோ பாட்டுப்போட, காதல் - காமம், காமம் - காதல் என்று நிறைய ஓடியிருப்பதைப் பார்க்கிறேன். Love வேறு, Crush வேறு, இந்தக்காலத்தில் crush-ஐ Love என நினைத்துக்கொள்கிறார்கள். திரையில் அச்சுபிச்சென்று ஏதேதோ காட்டுகிறார்கள், அதன் தாக்கத்திலோ என்னவோ, வெளியிலும் துரத்துகிறார்கள் என்றெல்லாம் ஏதாவது எழுதி மேலும் சேர்க்க விரும்பவில்லை. மென்னுணர்வை ஆழ்மனம் அறியும். ஆழத்தில் இருப்பது ஆங்காங்கே அவரவர் மனதில் அதுமாட்டுக்கு இருக்கட்டும்!

   நீக்கு
 12. அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துகள்.

  முதலாவது பாடல் கேட்டிருக்கிறேன். அடுத்த பாடல் கேட்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மாதேவி.  வாழ்த்துகள் உங்களுக்கும்.  நன்றி.

   நீக்கு
 13. பொன்வானப் பூங்காவில் தேரோடுது.. அழகிய பாட்டு, முன்பு கேட்டதாக நினைவில்லை.. இதனைக் கேட்டதும் எனக்கு நினைவுக்கு வந்த பாட்டு..
  “ஆகாய்ப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா... ஊர்கொலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா...”

  சரிபிழை தெரியவில்லை ஆனால் நானும் காமம் என்பது வேறு, காதல் என்றால் அன்பு எனத்தான் நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வானம் என்றதும் அந்தப் பாடல் நினைவுக்கு வந்து விட்டதோ அதிரா...    நன்றி.

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  தங்கள் விளக்கங்கள் அருமை. அலைகள் ஓய்வதில்லை... அந்தப்படம் என்னவோ வெற்றிதான். ஆனால் அந்தப் படத்தைப் பற்றிய தங்கள் கருத்துக்கள் உண்மைதான்.

  இந்தப்படமும் கேள்விப்பட்டதில்லை. இன்றைய இரு பாடல்களும் இதுவரை கேட்டதில்லை. இப்போது கேட்கிறேன். இன்று என்னவோ எனக்கு வேலைகளே சரியாக இருந்தது. பதிவுகளுக்கு வரவே இயலவில்லை பகிர்வுக்கும்,விபரங்களுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 16. எந்த கருத்து சொன்னாலும் கம்பு சுற்ற பல்ர்உள்ளார் கள்

  பதிலளிநீக்கு
 17. இரண்டு பாடல்களும் கேட்ட நினைவில்லை.

  காதல் - காமம்! அட இதை வைத்து ஒரு பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது! நடக்கட்டும்! பொழுது போக வேண்டுமே! :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!