நாக்கு நாலு முழம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாக்கு நாலு முழம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.10.14

'திங்க'க் கிழமை - 'தாலி' - உத்தர் போஜன்!


சமீபத்தில் ஒரு மதிய உணவை ஹோட்டலில் சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் - வேறு வழியில்லாமல்தான்.

                                          

எங்கள் அதிருஷ்டம் மறுபடியும் வழியில் மாட்டியது 'சங்கீதா' தான்!  மறுபடியும் அதே சங்கீதாவா, வேறு ஏதாவது ஹோட்டல் கண்ணில் படுகிறதா என்று சுற்றுமுற்றும் தேடிவிட்டு, வேறு வழி இல்லாமல் உள்ளே போய் உட்கார்ந்து 'மீல்ஸ்' ஆர்டர் செய்யலாமா, 'டிஃபனா'கச் சொல்லி விடலாமா என்று தர்க்கம் செய்து கொண்டிருந்தோம். 

                                           
 
சாப்பாடு என்றால் அதே வாசனையில் சாம்பார், புளிப்பாக காரக்குழம்பு, வெங்காயம் போட்டு ரெண்டு கறி, ஒரு கூட்டு..... வேண்டாமே இந்த சோதனை என்று விவாதித்துக்கொண்டிருந்தபோது சர்வர் கொஞ்சம் காத்திருந்துப் பார்த்து விட்டு தண்ணீர் எடுத்து வைத்து விட்டு நகர்ந்து விட்டார்.

                                            

முடிவெடுக்க முடியாமல் வீட்டில் காத்திருந்த மகனுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு விடுவோம் என்று அலைபேசியில் அழைத்தபோது அவன்தான் ஒரு யோசனை சொன்னான். 

அப்படியே A/C பகுதிக்குப் போகச் சொன்னான். என்ன வித்தியாசம் என்று கேட்டபோது, அங்கு சமையலே தனி என்றான். அந்தப் பகுதியில் முன்பு சாப்பிட்டிருந்தபோதும் இந்த வித்தியாசம் தெரியாது எங்களுக்கு. ஏனென்றால் 'எப்புட்டி அம்மையிக்கி நிப்பட்டியே கதி' என்று எப்போதும் ஒரே மாதிரி ஏதாவது ஆர்டர் செய்து சாப்பிட்டு விடுவதால்!
அங்கு சென்று அமர்ந்து.... 


வெய்ட்...வெய்ட்... உட்காருவது அவ்வளவு எளிதாக இல்லை. நின்றிருந்த டை கட்டிய இளைஞரிடம் பெயர் கொடுத்து விட்டுக் காத்திருந்தோம். 



இதில் ஒரு (இன்னும்) சோதனை. நான்கு பேர்கள் அமரும் இருக்கைகள் காலியானபோது எங்களை விடுத்து நான்கு பேர்களாக இருந்தவர்களை அனுப்பினார் அந்த 'டை'யர்!  "இன்னும் ரெண்டு பேர் தனியாக வந்திருந்தால் கூட அவங்களையும் உங்களையும் இங்க அனுப்பிடுவோம் ஸார்.... உங்களுக்கு இதோ... (அருகிலிருந்த இரட்டை இருக்கைகளைச் சுட்டிக் காட்டி) இங்க காலியாகணும்... பிளீஸ் வெய்ட்" என்றார்.

10 அல்லது 15 நிமிடக் காத்திருத்தலுக்குப் பின் ஒரு வழியாக இடம் கிடைத்து, மகன் சொன்னது போல 'உத்தர் போஜன்' செலெக்ட் செய்து "சாப்பிட ரெண்டு தாலி, பார்சல் ஒரு தாலி"  என்றோம்!

                                                      

எங்கே கழுத்தில் கட்டும் தாலி வடிவில் ஒரு ஸ்வீட் கொண்டுவந்து விடுவாரோ என்ற பயமும் இருந்தது.

"ஸார்! தாலி பார்சல் வராது ஸார்...இங்கேதான் சாப்பிட முடியும்"


அப்படியா என்று உடனே அலைபேசியை எடுத்து மறுபடி மகனுடன் உரையாடி அவனுக்கு 'பாம்பே மீல்ஸ்' பார்சல் சொல்லி விட்டு, நாங்கள் 'தாலி'க்காகக் காத்திருந்தோம்.
 
முதல் சிவப்பு கலரில் ஒரு சூப் வந்தது. அதில் இரண்டு மூன்று பொரித்த பிரட் துண்டுகள். கூடவே சுட்ட அப்பளம் போன்ற ஒன்றின் மீது வெங்காயம் தக்காளி தூவப்பட்டிருந்தது.
                                                                       

                                                      

அதைச் சாப்பிட்டு முடித்ததும் ஒரு தட்டு கொண்டு வந்தார்கள். அதில் இருந்தவை :

                                                            

                                                                 

இரண்டு ரொட்டி, இரண்டு நான், ஒரு கப் பனீர் பட்டர் மசாலா, ஒரு கப் பட்டாணி மசாலா, வெங்காய ரைத்தா (வெள்ளரிக்காயும் கலந்தது), உருளைக்கிழங்கு பனீர் வெங்காயக் கறி, (சாதாரணமாக இது வைப்பதில்லையாம்), காலிஃபிளவர் 65, (அல்லது மஷ்ரூம்) ஃபிரைட் ரைஸ் ஒரு கப் (இது அல்லது பிரியாணி அல்லது புலவ் ஏதாவது ஒன்று தருவார்களாம்) பருப்புக் கடைசல் போல ஒன்று ஒரு கப், வெள்ளை சாதம் ஒரு கப், ஒரு கப்பில் ஒரு ஸ்வீட் துண்டு, தயிர் சாதம் (இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்தது), ஆவக்காய் ஊறுகாய்.
                                                                    

சாப்பிட்டு முடித்ததும் ஐஸ்க்ரீம் ஒரு கப்!

ஓஹோ என்றில்லா விட்டாலும் எப்போதும் சாப்பிடும் மீல்ஸுக்கு பதில் இது ஓகே! நானை உள்ளே அனுப்புவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடுகிறது!

'தாலி'க்கும் 'பாம்பே மீல்ஸ்'ஸுக்கும் சிறு வித்தியாசம்தான். வெள்ளை சாதம் கிடையாது. ஐஸ்க்ரீம் கிடையாது. அப்பளத்தில் வெங்காயம் தக்காளி கிடையாது.

'தாலி'  210 ரூபாய், பாம்பே மீல்ஸ் 190 ரூபாய்.


  எல்லா ஹோட்டல்களிலும் இப்படித்தானா, சுவை, அளவு, பதார்த்தங்களில் மாறுபாடு இருக்குமா என்று தெரிந்தவர்கள் சொல்லலாம்.