48 days லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
48 days லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.1.15

செவ்வாய் சிறுகதை. 48 நாட்கள்.

           
அதை எப்போ, யார் கிளப்பிவிட்டார்கள் என்று தெரியலை. 
             
ஆனா மனசுல பச்சக்குன்னு வந்து ஒக்காந்துகிச்சு. 
                      
அதாகப்பட்டது, தொட்டாற்சுணங்கி இலையை, மனதில் ஏதாவது  ஒன்றை நினைத்தபடி, (எல்லா நாளும் ஒன்றையே நினைத்தபடி) தொடர்ந்து  நாற்பத்தெட்டு நாட்கள் தொட்டு, அதை சுணங்க வைக்கவேண்டுமாம். நாற்பத்தெட்டு நாட்கள்   இப்படி செய்து வந்தால், எண்ணிய எண்ணம், பண்ணிய வேண்டுதல் ஈடேறுமாம்! 
                 
பெங்களுரு பார்க்கில், நிறைய தொட்டாற்சுணங்கி செடிகள் உண்டு. வேண்டுதல்கள் இல்லாமலேயே அடிக்கடி அவைகளைத் தொட்டு சுணங்க வைப்பேன். மேற்கண்ட விவரம் தெரியவந்தவுடன், இதைப் பரிட்சித்துப் பார்த்துவிட ஆவல் கொண்டேன். 
           

மறுநாள், பார்க்கில் சுற்றி வரும்பொழுது, தொட்டாற்சுணங்கி கண்ணில் பட்டவுடனேயே, என்ன வேண்டிக்கொள்ளலாம் என்று யோசனை செய்தேன். ஐந்தாறு நாட்களாக, இடது தோள்பட்டை மூட்டில் கடுமையான வலி இருப்பது ஞாபகத்திற்கு வந்தது. ஆஹா கிடைத்துவிட்டது ஒரு வேண்டுதல்! 
               
எல்லாம் வல்ல தொ சு வே என்னுடைய இடது தோள் மூட்டு வலி சரியாக வேண்டும் என்று வேண்டி, தொட்டேன் பல இலைகளை. 
              
மறுநாளும் அப்படியே. 
                   
அதற்கடுத்த நாளும் அப்படியே! 
   
ஒவ்வொரு நாளும், இடது கை விரல்களால், தொ சு இலைகளை சுணங்க வைத்து, வேண்டிக்கொண்டு வந்தேன். 
          

கொஞ்சம் கொஞ்சம் குணமானது போலவும் ஒரு பிரமை இருந்தது. 
                  
நாற்பது நாட்கள் கடந்து போயின. தொட்டாற்சுணங்கி செடியும் தினமும் என் கை பட்டு, வாடிக்கொண்டிருந்தது. 
                
நாற்பத்து ஒன்றாவது நாள்! 
       
பார்க் சென்றால் ....... 
              
அங்கே அந்த செடிகளைக் காணோம்! 
              
தோட்டச் செடிகளை  அழகாக வெட்டிவிடுபவர், முதல் நாள் மாலையே தொ சு செடிகள் எல்லாவற்றையும் சம்ஹாரம் செய்து பார்க் மூலையில் எடுத்துக் குவித்துவிட்டார்! 
               
இடது தோள்பட்டை வலி இன்னமும் அப்படியே இருக்கின்றது. 
               
உங்கள் வீட்டருகே தொட்டாற்சுணங்கி செடி இருக்கா? 
               
நாற்பத்தெட்டு நாட்கள் நான் அங்கே வந்து தங்கிக்கொள்ளலாமா?