Short Story லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Short Story லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.6.16

வேற ஜாதிப் பையன்!

      
சமையலறையில், பின்னால் ஏதோ நிழலாடியது.    இப்படி பூனை மாதிரி வருவது யார் என்று அமிர்தத்திற்கு நன்றாகத் தெரியும். மகள் அகிலாவாகத்தான் இருக்கும். 

அகிலா திருச்சியில் கல்லூரி ஹாஸ்டலில் தங்கி, (பி எஸ் சி இறுதியாண்டு) படிப்பவள். விடுமுறைக்கு வந்திருக்கின்றாள். அநேகமாக, சத்தமில்லாமல் வந்து, பின்னாலிருந்து கண்ணைப்  பொத்துவாள்.  'நான் யார் என்று சொல்லு பார்ப்போம்.' 

'வேற யாரு? என்னுடைய போக்கிரிப் பொண்ணு!' என்று கூறியபடி, பொத்திய கைகளை விலக்கி, அகிலாவைத் திரும்பிப் பார்த்து, பெருமையுடன் புன்னகை செய்வாள் அமிர்தம்.  
    
   

இன்று அப்படி எதுவும் நிகழவில்லை. 

"அம்மா" 

"என்னம்மா அகிலா?" 

"உன்கிட்ட ஒண்ணு சொல்லப்  போறேன். " 

"ஒண்ணு என்ன? ஒன்பது வேண்டுமானாலும் சொல்லு. கேட்டுக்கறேன். " 

"அதெல்லாம் இல்லை - ஒன்னே ஒண்ணுதான். " 

"சரி. சொல்லு. " 

" நான் ஒருத்தரை லவ் பண்றேன்." 

"என்ன?" என்று கேட்டவாறே அவசரமாகத் திரும்பிய அமிர்தத்தின் கையில், இறக்கிவைத்த சூடான பால் பாத்திரம் சுட்டுவிட்டது. " ஆ " என்று அலறிவிட்டாள் அமிர்தம். 

"அம்மா நீ இந்த அளவுக்கு அஃபெக்ட் ஆயிடுவே என்று நினைக்கலை. சாரிம்மா. நான் அப்புறமா உன்கிட்ட பேசறேன்." 

"அகிலா  இரு இரு நான் அஃபெக்ட் ஆனதுக்கு நீ சொன்ன விஷயம் காரணம் இல்லை. திரும்பும்பொழுது, சூடான பால் பாத்திரம் கையில் பட்டுடுச்சு. அதனால்தான் அலறினேன். " 

"நல்ல வேளை - அப்பா வீட்டில் இல்லை. இருந்திருந்தால், உன் குரல் கேட்டவுடன் ஓடோடி வந்து, என்னைப்  பார்த்து, 'அடி பாதகி! என்ன செய்தாய் என் அன்பு மனைவியை ' என்று என்னைப் பார்த்து சத்தம் போட்டிருப்பார் அம்மா!" 

அமிர்தம் அடக்க முடியாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். "யாரு உன் அப்பாவா!   நான் அலறினால் உடனே ஓடி வருவார் என்பது சரி. ஆனால்,வந்து  என்ன சொல்லுவார் தெரியுமா? 'அமிர்தம் - ஏன் இப்படி பேய் போல அலறி, கொழந்தைய பயமுறுத்துறே?' இப்படித்தான் சொல்லுவார்!" 

"சரி. சமையலறையை  விட்டு வெளியே வா அம்மா. நான் மெடிக்கல்  கப்  போர்டிலிருந்து பர்னால் எடுத்துவந்து உன் கைக்குப் போட்டுவிடறேன்." 

               ஹாலில், அமிர்தத்தை ஒரு  நாற்காலியில்  உட்காரவைத்து, கைக்கு பர்னால் போட்டு விட்டாள் அகிலா. 

கை எரிச்சல் குறைந்ததும், அமிர்தம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள். 

"அந்தப் பையன் பெயர் என்ன?" 

" மங்கள்." 

" அது என்ன மங்கள், திங்கள் என்றெல்லாம் பெயர்!  நம்ம ஜாதி இல்லையா?" 

" இல்லை." 

" அட ராகவா! "

" அதுக்கு ஏன் இப்போ அப்பாவைக் கூப்பிடுகிறாய்? அதுவும் பெயர் சொல்லிக்  கூப்பிடறே !"

" அவரை எங்கே கூப்பிட்டேன்? நான் சொன்ன ராகவன் வேற. ஆனால் உன் அப்பாவுக்கு நிச்சயம் இந்த விஷயம் பிடிக்காது. ஒப்புக்கொள்ளவே மாட்டார். சரி. அந்தப் பையன் என்ன ஜாதி?"

"தெரியலை. தெரிஞ்சிக்கவும் முயற்சி பண்ணலை."

" போட்டோ இருக்கா?" 

அகிலா போட்டோவை, தன் கைப்பையிலிருந்து எடுத்துக் காட்டினாள். 
"ரொம்ப  சின்ன வயசா இருக்கும் போலிருக்கு!"

"அம்மா இது அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எடுத்த போட்டோ. இது நல்லா இருக்குன்னு சொல்லி, நான் கேட்டப்ப இதைக் கொடுத்தார்." 

"என்னுடைய  அண்ணன் பையன் ராஜு இவனைவிட  நல்லா இருக்கான். அவன்  பேச்சை  எடுத்தாலே  நீ அவன் ஒரு மக்கு. ஏதோ நட்டாமுட்டி வேலை செய்துகொண்டு, ஊர் சுற்றும் சோம்பேறி என்று சொல்வாய்." 

" நான் சொல்றது இருக்கட்டும். நீயே சொல்லு. உன் கல்யாண வயசுல, ராஜு மாதிரி ஒருத்தனைப் பார்த்திருந்தா நீ கல்யாணத்துக்கு சரின்னு சொல்லியிருப்பியா அம்மா?" 

" இதோ பாரு இந்தமாதிரி சிச்சுவேஷன் அந்தக் காலகட்டத்தில் இல்லை. அப்போதைய நிலைமைக்கும், இப்போதைய நிலைமைக்கும் முடிச்சுப்போட  முடியாது."

"நான் கேட்ட கேள்விக்கு, இன்னும் நீ பதிலை சொல்லவில்லை. ராஜு மாதிரி ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்க நீ சம்மதித்திருப்பாயா?"

" நான் மாட்டேன். " 

"அப்போ உங்க பொண்ணு மட்டும் எப்படி சம்மதிப்பா?" 

"ஓஹோ! சரி. மங்களுக்கு சொத்து பத்து நிலம் நீச்சு எல்லாம் ஏதாவது இருக்கா? "  

" ஏதோ கொஞ்சம் இருக்குன்னு நினைக்கிறேன். சரியா, விவரமா தெரியலை."

" எந்த ஊரு? "

" சொந்த ஊரு அஹ்மத்நகர், மகாராஷ்டிரா என்று  சொன்னார். "

" தமிழ் தெரியாதா?" 

" தமிழ் பேசத் தெரியும். தமிழ்  எழுதப் படிக்கத் தெரியாது. "

" என்ன வேலை?" 

" அவரு ஐ டி கம்பெனில  பிராஜக்ட்  லீடரா  இருக்காரும்மா " 

" அப்பிடீன்னா - அது பெரிய வேலையா?" 

"அப்படித்தான் வெச்சிக்கோயேன்."

" காலம்  பூரா உன்னைக் கண் கலங்காமல் வைத்துக் காப்பாற்றுவானா?" 

" நான் எதற்குமே கண் கலங்கமாட்டேன் அம்மா!" 

" சரி. ராஜூவைத்தான்  உனக்குப் பிடிக்கலை. மக்குன்னு சொல்லி ஒதுக்கிட்டே. உங்க  அப்பாவின்  தங்கச்சி  - உன்னுடைய  லலிதா அத்தையின் பையனையாவது கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லையா? அவன் மக்கு  இல்லையே. சூப்பர் இன்டெலிஜென்ட். நல்ல வேலையிலே இருக்கான். " 

" யாரு? தாமோதரனா? அம்மா என்னுடைய  மாமாவின் மக்குப்  பையனையாவது  பொறுத்துக்கலாம். ஆனா அத்தைப் பையன் .....  ஐயோ - என்னால ஒரு மணி நேரம் கூட பொறுத்துக்கொள்ள முடியாது. எப்போ வாய் திறந்தாலும் ஒரே சுயதம்பட்டம். டாம்  டாம்  தாமோதரன் - ச்சே - எங்கேயாவது நாம் சொல்வது எதையாவது காது கொடுத்துக் கேட்பானா? எப்போ பாரு  நான் இப்படிப்  பண்ணுவேன் அப்படிப் பண்ணுவேன், இப்படி சொல்லிட்டேன், அப்படி சொல்லிட்டேன் என்று தன்னைப் பற்றியே  உயர்வாகப்  பேசிக் கொள்வான். அந்த டமார சத்தத்திலேயே எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும்!"

"அப்போ மங்கள்  என்று  உறுதி செய்துவிட்டாய்."

"ஆமாம் அம்மா - உனக்கு இந்தக் கல்யாணத்தில் ஆட்சேபணை எதுவும் இல்லைதானே? சம்மதம்தானே?"

"உன்னுடைய  அப்பா என்ன சொல்லுவாரோ, சம்மதிப்பாரா என்று தெரியவில்லை. அவருடைய  அபிப்பிராயம்  என்ன என்று தெரிந்துதான் நான் எதுவும் சொல்லமுடியும். அவர் தாமோதரன் தனக்கு மாப்பிள்ளையாக வந்தால், நன்றாக இருக்கும் என்று அபிப்பிராயம் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்."

"அம்மா. அப்பா மார்க்கெட்டிலிருந்து வந்தவுடன் நான்  லைப்ரரிக்குப்  போயிடறேன். நீ அப்பாகிட்ட பேசி அவருடைய சம்மதத்தை வாங்கிவிடு. இப்போ சமையலறைக்குப் போய் எனக்கு உன்னுடைய ஸ்பெஷல் காபி போட்டுக்கொடு. " 

"சரி அகிலா. அது என்ன ஸ்பெஷல் காபி? நான்  எப்பவும் போடறது ஒரே காபிதானே! "

"உனக்கு வேணா அது ஸ்பெஷல் இல்லாம இருக்கலாம். நீ போடறது காபியே இல்லை. ஒரிஜினல்! ஒரிஜினல் தேவாம்ருதம்! நீ போடற மாதிரி காபி, இதுவரை நான் இந்த ஈரேழு பதினான்கு உலகிலும் குடித்ததில்லை!"

" ஆமாம் - இவ எல்லா லோகத்தையும் சுத்தி வந்தவ!"

இருவரும் சிரிக்கிறார்கள். 

ராகவன் உள்ளே வந்துகொண்டே , "என்ன அம்மாவும் பொண்ணும் ரொம்ப சந்தோஷமா பேசிச் சிரிச்சுகிட்டு இருக்கீங்க! ஏதாவது சந்தோஷ சமாச்சாரமா?"

" ஆங்  - அது வந்துங்க ... ஆமாம்  ... சந்தோஷ ..... "

" அம்மா நீ போய் முதலில் மூன்று ஸ்பெஷல் காபி போட்டு எடுத்துகிட்டு வா. குடித்துவிட்டு, நான் லைப்ரரிக்குப் போகணும்."

"ஆமாம் அகிலா. அதுதான் சரி." 

அம்மா காபியுடன் வரும்வரை அகிலா லைப்ரரி புத்தகத்தைத் தேடுவது போல பரபரவென்று அலைந்து தேடிக்கொண்டிருந்தாள். காபி வந்ததும் புத்தகம் கிடைத்துவிட்டது. 

காபியைக் குடித்துவிட்டு, "அம்மா - நான் லைப்ரரி போயிட்டு வறேன்" என்று சொல்லியபடி வெளியில் சென்றாள். 

********************
"என்னங்க - சந்தோஷ சமாச்சாரம் சொல்ல  வந்தேனே - என்ன என்று தெரியுமா?" 

"தெரியலையே! என்ன அது?"

" கேட்டு, அதிர்ச்சி அடஞ்சிடாதீங்க. நம்ம அகிலா ஒருத்தரை லவ் செய்யறாளாம். கல்யாணம் பண்ணிக்கொண்டால்  அவனைத்தான் செய்துகொள்வேன் என்று உறுதியா சொல்றா."

"இதையா சந்தோஷ சமாச்சாரம்னு சொன்னே! இதுக்கா சிரிச்சுகிட்டு இருந்தீங்க !" 

" நாங்க சிரிச்சது, காபி விஷயமா. ஆனா இந்த சீரியஸ் விஷயம் பத்திப்  பேசி , நான் உங்க சம்மதத்தை வாங்கணும்னு அகிலா நெனக்கிறா." 

அகிலாவிடம் அமிர்தம் கேட்ட  பல கேள்விகளையே ராகவன், அமிர்தத்திடம்  கேட்கிறார். அகிலா சொன்ன பதில்களை, அமிர்தம் ராகவனுக்குச் சொலகிறாள். 

"தாமோதரனைக் கூடவா வேண்டாம் என்று சொல்கிறாள்!" எங்கே அந்த மங்கள் போட்டோவைக்  காட்டு!"

போட்டோவைப் பார்க்கிறார். 

"ஹூம் இந்தக் காலத்துப் பசங்க எல்லாம் எதை வெச்சு எப்படி லவ்வுல விழறாங்கன்னு தெரியலை."

" சரிங்க - உங்க அபிப்பிராயம் என்ன? அதைச் சொல்லுங்க."

" நீ ஏற்கெனவே ஏதாவது முடிவு எடுத்திருப்பே. நீ எடுக்கின்ற முடிவுகள் எல்லாம் சரியாகத்தான் இருக்கும். நீ என்ன நெனக்கிற  சொல்லு."

"அகிலா அவளுடைய அத்தை பையனையோ, மாமா பையனையோ கல்யாணம் பண்ணிக்க  விரும்பலை என்பது, எனக்கு வருத்தம்தான். ஆனால், அவளுடைய சந்தோஷம்தான் நமக்கு முக்கியம். பையனுக்குப் பொண்ணைப் புடிச்சிருக்கு; பொண்ணுக்குப் பையனைப் புடிச்சிருக்குன்னா அது போதும். எனக்கு சம்மதம்தான். " 

"சரி - அப்போ அகிலாவிடம் அவள் வந்தவுடன் நம்ம சம்மதத்தை சொல்லிடலாம். - நீ போய் சமையல் வேலையை கவனி." 

அமிர்தம் சமயலறைக்குள் சந்தோஷமாக நுழைந்தாள். 

******************** 

அகிலாவின் கைப்பேசி , "அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு ... " என்று முதலமைச்சர் குரலில் மெலிதாக ஒலித்தது. லைப்ரரியில் எல்லோரும் திரும்பிப்பார்த்தனர். 

அவசரமாக கைப்பேசியை எடுத்த அகிலா கேட்டாள் ,
 " என்ன அப்பா?"
" அம்மா சம்மதிச்சுட்டா "
   
    

*********************************************** 



19.9.15

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்தவாரம் + சொல்லாதே யாரும் கேட்டால் ... 6/7




1)  மாணவர் சமுதாயம் இன்றைய கால கட்டத்தில் படிப்பு மட்டும் அல்லாமல் பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்து அசத்துகின்றனர். மக்களுக்கு பயன்படும் வகையில் பல வித பொருட்களை கண்டுபிடித்து தங்கள் தனி திறமைகளை வெளி காட்டுகின்றனர்....  பிளஸ் 1 மாணவன் அஜய் விஷால்.
 


2)  முன்பு தமிழ்நாட்டுக்குள் வந்த செய்தியாக விஸ்ராந்தி பற்றிப் பார்த்தோம்.  இப்போது மீண்டும் சாவித்திரி வைத்தி பற்றி அகில இந்திய அளவில்.
 


3) T3K.  சென்னையை அழகாக்க முயற்சிப்பவர்கள்.
 



4)  கல்வித்தரம், கட்டமைப்பு வசதி மற்றும் சுகாதார வசதிகளில் தன்னிகரற்ற வகையில் வேகமாக வளர்ந்து வருகிறது மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.  தலைமை ஆசிரியரின் முயற்சியில், தனியார் பங்களிப்புடன்.
 


5)  ஜாலி ஹோம்.
 



6)  திண்டுக்கல் அருகே பஞ்சாயத்து தலைவர் ஒருவர், மக்கள் பங்களிப் புடன் பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் அமைத்து ஒரு முறை பெய்யும் 2.5 செ.மீ. மழை யில் 1.70 கோடி லிட்டர் தண்ணீ ரைச் சேமித்து, குடிநீர் பிரச்சினைக் குத் தீர்வுகண்டு சாதனை படைத் துள்ளார்.  சாதனை மனிதர் வாகரை பஞ் சாயத்து தலைவர் கே.சின்னான்,  அனைவராலும் பின்பற்றப் படவேண்டியவர்.
 



7)  ஈக்களும் புழுக்களும் குடியிருக்கும் சூழலில், கால்கள், கைகள், மர்ம உறுப்புகள் அழுகிய நிலையில், குடும்பத்தாரால் கைவிடப்பட்ட நிலையில், ஆதரவற்றுக் கிடப்போரை மீட்டு இல்லங்களில் சேர்க்கிறார், 'அகல் பவுண்டேஷன்' வெங்கடேஷ்.
 


8)  விளையும் பயிர்.  ஆனால் இது எந்த அளவு சாத்தியம், தலையை அசைத்தாலே ஆன் ஆகி,  ஆஃப்  ஆகி விடும் என்றால் பயனிருக்குமா என்றெல்லாம் தோன்றினாலும் தெரியாமலா விருதுக்குத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்? முயற்சிக்குப் பாராட்டுகள்.
 


9)  குறை சொல்லிக் கொண்டே இருப்பதைவிட, செயலில் நாமே இறங்கி விடுதல் நல்லது!  ரிசர்வ் வங்கியிலிருந்து ஒய்வு பெற்ற 65 வயது அஜித் லக்ஷ்மிரத்தன்.
 



10)  பேராசை இல்லை.  வாழ்க்கையை நடத்தத் தேவையான அளவு பணம், இல்லை, இல்லை, காசு போதும்!  அதற்குமேல் வேண்டாம்.  வரதராஜன், 75 - ஆதிலெட்சுமி,72 தம்பதியர்.
 



11)  தமிழகத்தில் இருந்து, ஆயிரக்கணக்கான டிரைவர்கள் லோடு ஏற்றி வந்தாலும், அதில் நான் மட்டும் தான் பெண் என்பது, ரொம்ப பெருமையாக இருக்கும். இப்போது, டிரைவராக மட்டுமே, மாதம், 30 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன். சொந்த லாரி என்பதால், கிடைக்கும் கூடுதல் லாபம் தனி. கஷ்டம்னு நினைத்தால், வீட்டை விட்டு வெளியே வர முடியாது; முடியும்னு நினைத்தால் எந்தச் சுமையும் சுகமாக மாறிவிடும்.  'கல்பனா சாவ்லா' விருது பெற்ற, லாரி ஓட்டுனர் ஜோதிமணி
 


12)  எத்தனை தடைகள்!  அத்தனைத் தடைகளையும் உடைத்தது தன்னம்பிக்கை மற்றும் முயற்சி என்னும் நேர்மறை எண்ணங்கள்தானே...  பாவன் கௌர்.
 



13)  இந்த 'பைக்கிற்கு' தேசிய அளவில் முதல் பரிசு கிடைத்துள்ளது.  ஒருமுறை 'சார்ஜ்' செய்தால் 60 கி.மீ., செல்லும். மின்சாரமின்றி இடையில் நின்றாலும் 5 நிமிடங்கள் கழித்து இயங்கினால் கூடுதலாக 5 கி.மீ., வரை செல்லும்.   
 
 
மாற்றுத் திறனாளிகளால் தங்கள் பைக்கை 'ரிவர்சில்' இயக்க முடியாது. இதற்கு பிறர் உதவியை நாட வேண்டியுள்ளது. இதை தவிர்க்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'இ பைக்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி ஆட்டோ மொபைல் பேராசிரியர் ராஜவேல் தலைமையில் மாணவர்கள் முகமது ஷகில், சப்தகிரி, நவீன்குமார், சரண்பாண்டியன், அஸ்வின்பாபு, நிஷாந்த் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.  


 


================================================================


சொல்லாதே யாரும் கேட்டால் ... 6/7  
    
எனக்கு அவரைத் தெரியவில்லை. அவருக்கு என்னைத் தெரிந்திருக்கிறது.

எப்படி ?

என் முகம்?......   முகம் ........!    

அட! இப்போ தெரிஞ்சிடுச்சு. முகநூல்.

நான்தான் என்னுடைய முகத்தை முகநூலில் ஆதிகாலம் முதல்  மாற்றாமல் அப்படியே போட்டு வைத்திருக்கின்றேனே!
      
(யாருங்க இந்த இளிச்சவாயன்?)  
      

ஃபேஸ்புக்கில் இருக்கின்ற என்னுடைய மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு என் முகம் நன்கு பரிச்சயம் ஆகி இருக்குமே!

இவர் என் படத்தை facebook ல பார்த்திருப்பார். அதனால்தான் என்னைத் தெரிந்திருக்கின்றது!

இதோ இந்த ரவுண்டில் அவரை நெருங்கினேன்.

அவர் பெஞ்சிலிருந்து எழுந்து, என்னிடம் பேசத் தயாராக நின்றுகொண்டிருந்தார்.

(தொடரும்)

17.9.15

சொல்லாதே யாரும் கேட்டால் ..... 4/7


சொல்லாதே யாரும் கேட்டால் ..... 4/7  
 
    
இதோ இந்த ரவுண்டில் அவரருகே சென்ற சமயம் .....

அவருடைய அலைபேசியில் அவருக்கு அழைப்பு வந்துவிட்டது.

"ஹலோ ஆமாம் .... தெரியும், தெரியும், சொல்லுங்க. ஓ அப்படியா! ...... " தொடர்ந்து பேசிக்கொண்டே என்னைப் பார்த்துத் தலை அசைத்தார். மீண்டும் புன்னகை.

தமிழ் பேசுகிறார்! தமிழ் தெரிந்தவர். இது எங்காவது என் மூளையில் பெல் அடிக்கிறதா என்று பார்த்தேன்.

ஊஹூம். மண்டை காய்கிறது. யார் அவர்?

(தொடரும்)

       

15.9.15

சொல்லாதே யாரும் கேட்டால் 2/7



                                                 சொல்லாதே யாரும் கேட்டால்    2/7
            
  

இரண்டாவதுச் சுற்று வரும்பொழுது சந்தேகமாக அவர் இருந்த திக்கில் பார்த்தேன்.

மீண்டும் புன்னகை.

'எனக்குப் பின் பக்கத்தில் யாராவது வருகின்றார்களா?' என்று திரும்பிப் பார்த்தேன்.

யாரும் இல்லை.

அப்போ, என்னைப் பார்த்துத்தான் புன்னகைக்கின்றார் போலிருக்கு.

எதற்கும் இருக்கட்டும் என்று பதில் புன்னகை ஒன்றை வீசிவிட்டு நடைப் பயணத்தைத் தொடர்ந்தேன்.

(தொடரும்)  

8.9.15

கேட்டது கேட்டபடி 2/7

               
"இங்கேதான் இருக்கியா? நான் பேசினதை எல்லாம் ஒட்டுக் கேட்டியா?"
   

"அப்படித்தான் வெச்சுக்கோயேன்! "
           
"சரி சரி - முகுந்தன் வரானாம்." 
              
"வரட்டுமே!"
                
"ஒருவாரம் இங்கே நம்ம வீட்டிலே தங்கிப்பானாம்." 
               
"அண்ணா உன்னுடைய பிசினெஸ் ட்ரிப் எவ்வளவு நாள்?" 
                
"இன்னிக்கு சாயந்திரம் கிளம்பிப் போயிட்டு மூன்றே நாளில் திரும்பி வந்துடுவேன்." 
                    
"முகுந்தன் எப்போ வரானாம்?" 
               
" என் நண்பன் முகுந்தன் என்னை விட இரண்டு வயது பெரியவன். அவனை நீ மரியாதை இல்லாமல் வரான் போறான் என்று பேசக்கூடாது." 
               
"சரி - அந்தப் பெரியவர் எப்போ வருவாராம்?" 
             
"இன்னிக்கு நைட்டே வரானாம்." 
              
"அண்ணா நானும் உன் கூட பிசினெஸ் ட்ரிப் வந்துவிடுகிறேன். அந்த முகுந்தர் கூட இங்கே நான் தனியாக இருக்க ஒரு மாதிரியா இருக்கு." 
               
"அது முடியாதுடா செல்லம்! நான் ஏற்கெனவே ரிசர்வ் செய்துள்ளேன். மேலும் வீட்டைப் பார்த்துக்கொள்ள நீ மட்டுமாவது இங்கு இருக்கவேண்டும். அதான் வேலைக்காரர்கள், வாட்ச்மேன் எல்லோரும் இருக்காங்களே! உனக்கு என்ன பயம்?" 
              
"அண்ணா! முகுந்தன் கூட நான் கோபித்துக்கொண்டு அவரோடு பேசுவதை நிறுத்தி ஆறு வருஷம் ஆயிடிச்சு. இப்போ, அதுவும் நீ ஊரில் இல்லாதபோது, இந்த சிக்கலில் நான் மாட்டிக்கணுமா?  "  
   
(தொடரும்) 

                 

30.6.15

தொந்த்ரீ !


வெள்ளிக்கிழமை.

பூங்கா .

காலை  வேளை.

சிறுவர் விளையாடுமிடத்தில், முழங்கால் உயரத் தடுப்புச் சுவற்றின் மீது அமர்ந்து, தலை நரைத்த எட்டு ஆண்கள் இந்தி, கன்னடம், ஆங்கிலம் எல்லா மொழிகளிலும் சுஷ்மா, வசுந்தரா, லலித் மோடி பற்றி எல்லாம் அரட்டையடித்து ஓய்ந்து ஏழு ஐம்பதுக்கு ஒருவருக்கொருவர் கை குலுக்கி, கட்டிப் பிடித்து, சிரிப்போடு அவரவர் வீடு நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.

அலுவலகம் செல்வோர் எல்லோரும் ஏழு மணி முதல் எட்டு மணி ஆவதற்குள், பூங்காவில்  இருந்த நடைபாதையில்  வேகச் சுற்றுகள் சுற்றி, வாட்சைப் பார்த்தபடி வெளிநடப்பு செய்திருந்தனர்.

அருகில் உள்ள கார்ப்பரேஷன் பள்ளிச் சீருடையணிந்த சிறுவர்கள் ஓடி ஆடி ஓய்ந்து, ஒன்பது மணி சுமாருக்கு வேலி தாண்டிக் குதித்து பள்ளிக்கூடம் சென்றனர்.

பூங்காவில் வெளியாட்கள் அநேகமாக யாரும் இல்லாத நேரம்.

பூங்கா பராமரிப்பு செய்கின்ற குடும்பத்து பெரியவர்கள் பராமரிப்புப் பணிகளில் ஆழ்ந்திருந்தனர். ஒரு நாலு வயதுப் பெண் குழந்தை மட்டும் சிறுவர்களின் விளையாட்டுக்காக   சறுக்குமரம், ஸீ - ஸா, ஊஞ்சல் உள்ள பகுதியில், தனித்து நின்று கொண்டிருந்தது. இங்கே அங்கே சும்மா பார்த்துக் கொண்டிருந்தது. கையில் இருந்த ஒரு கையில்லாத பொம்மையை, தூங்க வைப்பது போல கொஞ்சம் தட்டிக் கொடுத்தது.

அப்பொழுது பக்கத்துக் குடியிருப்பு ஒன்றிலிருந்து, வயதான ஒரு வேலைக்கார அம்மா, ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு பூங்காவுக்குள் நுழைந்தார். அந்த அம்மா கழுத்தில், மஞ்சள் கயிறு மட்டுமே. கைகளில் பிளாஸ்டிக் வளையல்கள். குழந்தை, ஷூ + குல்லாய், ஸ்வெட்டர், கொலுசு அணிந்த இரண்டு வயதுப் பெண் குழந்தை. அந்தக் குழந்தையை ஒரு கையில் தூக்கிக்கொண்டு, மற்ற கையில் ஒரு பெரிய எவர்சில்வர் டபரா சகிதம் பூங்காவில் நுழைந்து, சிறுவர் விளையாடும் பகுதிக்கு வந்தார்கள்.

வேலைக்கார அம்மா அந்தக் குழந்தையை விளையாடுமிடத்தின் முழங்கால் உயர தடுப்புச் சுவற்றின் மீது அமர்த்தி, தன் கைப் பாத்திரத்தில் இருந்த உணவுப் பொருளை, சிறு உருண்டையாக உருட்டி,  அந்த இரண்டு வயதுக் குழந்தையின் வாயில் ஊட்டிவிட்டார். அருகில் மரக்கிளையில் வந்து அமர்ந்த காகம் ஒன்று "கா ..... கா" என்று கத்தியது.  அது, 'எனக்கு ஏதாவது கிடைக்குமா?' என்று கேட்டது போல இருந்தது.
 

அந்த அம்மா காகத்தை லட்சியம் செய்யவில்லை. இ. வ குழந்தைக்கு ஊட்டிவிடுவதிலேயே முழுக் கவனம் செலுத்தி வந்தார்.

காகம் தொடர்ந்து கரைந்து கொண்டிருந்தது.

நான்கு வயதுக் குழந்தை இவர்கள் இருவரையும் தூரத்திலிருந்து நோட்டமிட்டது. பிறகு சற்று அருகே சென்று, நின்று, பார்த்தது. அதற்குப் பிறகு, அந்த உணவுப் பாத்திரத்திற்குப் பக்கத்தில் தடுப்புச் சுவற்றின் மீது அமர்ந்துகொண்டது.  தன்னுடைய பொம்மையை தடுப்புச் சுவற்றின் மீது படுக்க வைத்தது. அப்படியே அந்த அம்மாவையும், குழந்தையையும் பார்த்து, சிநேகமாக ஒரு புன்னகை செய்தது. அதனுடைய புன்னகைக்கு அவர்கள் இருவரும் பதில் புன்னகை செய்யவில்லை.
   

காகம் தொடர்ந்து, " கா ....   கா ....... கா...."

நா வ குழந்தை, உணவுப் பாத்திரத்துக்குள் என்ன இருக்கிறது என்று சற்று எட்டிப் பார்த்தது. இ வ குழந்தை சாப்பிடுவதை ஆவலோடு பார்த்தது. ஆனால் கையை நீட்டாமல் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தது.

வேலைக்கார அம்மா, கொஞ்ச நேரம் இந்த நா வ குழந்தையை யோசனையுடன் பார்த்துவிட்டு, கொஞ்சம் அதிகமாக அந்த உணவைக் கையில் எடுத்து, உருட்டி, நா வ குழந்தைப் பக்கம் கையை நீட்டினார்.

நா வ குழந்தை உடனே ஆவலோடு அந்த உருண்டையை தன் இடது கையில் வாங்கிக்கொண்டது.

அந்தக் கையை தன் கண்களுக்கு அருகே கொண்டுவந்து, அது என்ன என்று பார்த்தது. ஒருவேளை முகர்ந்து பார்த்திருக்குமோ?

மரத்திலிருந்து காகம், " கா .......   கா   .........  கா"

நா வ குழந்தை, தன் இடது உள்ளங்கையில் இருந்த உணவு  உருண்டையை, வலது கையால் எடுத்து, அந்தக் காகம் இருக்கும் திசையில் வீசியது. காகம் அதை காட்ச் பிடித்து, மீண்டும் மரக்கிளைக்கு சென்று அமர்ந்து கொண்டது.
 


நான்கு வயதுக் குழந்தை சந்தோஷமாக இரண்டு கைகளையும் தட்டிச் சிரித்தபடி, "தொந்த்ரீ .....   தொந்த்ரீ ..... " என்றது.
                     

13.1.15

செவ்வாய் சிறுகதை. :: நடைராஜன்.

             
அலாரம் அடித்ததும், அரக்கப் பறக்க (சரியான ற வா இல்லையா?) எழுந்திருந்தார் நடராஜ். 
                
(அலுவலகத்தில் வேலை பார்த்த நாட்களில் அக்கம்பக்கத்து வாண்டுகளுக்கு, மற்றும் அண்ணனின் குழந்தைகளுக்கு, கதைகள் சொல்லுவேன். சமீபத்தில் அண்ணனின் பையன் (இப்போ அவனுக்கு ஒரு வாண்டுப்பையன் இருக்கின்றான்) என்னிடம், "சித்தப்பா - நீங்க சொன்ன கதைகளில் ஏன் எப்பவுமே வில்லன் காரெக்டருக்கு நடராஜ் என்று பெயர் வைத்தீர்கள்? " என்று கேட்டான். அப்போ என்ன பெயர் வைத்தேன் என்பது அவன் சொல்லித்தான் எனக்கு இப்போ தெரியும். ஆனாலும் யோசனை செய்து பார்த்தேன். காரணம் என்ன என்று இந்தக் கதையின் கடைசியில் சொல்கிறேன்.) 
     
"வேலா! பாத்ரூமில் துண்டு, சோப்பு, மாற்று உடை எல்லாம் ரெடியா வெச்சிருக்கியா?" 
            
"வெச்சிருக்கேன் எஜமான்!"
               
" முனியம்மா வெந்நீர், நான் குளிக்கும் பதத்தில் இருக்கா?" 
               
"இருக்கு எஜமான்" 
              
" இந்த குடும்ப டாக்டர் ஒருத்தர் எதையாவது சொல்லி வெச்சுடறார். நம்ம படறக் கஷ்டம் அவருக்கு எங்கே தெரியுது. " 
               
முனியம்மாவும் வேலனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். ஒன்றும் சொல்லவில்லை. 
           
பாத்ரூமிலிருந்து வெளியே வந்தவுடன், நடராஜ், "எங்கே நான் கேட்டிருந்த ஆரஞ்சுப்பழங்கள்? இரண்டு பழங்களை சுளை சுளையாக உரித்து வைக்கச் சொல்லியிருந்தேனே? "
    
  


"எஜமான், சமையல் கட்டில் ஒரு தட்டில் வைத்திருக்கின்றேன்."
               
"சமையல் கட்டில் வைத்துவிட்டு இங்கே என்னம்மா செய்யறே? போ போய் எடுத்து வா " என்று கூறி, டைனிங் டேபிள் நாற்காலி ஒன்றில் உட்கார்ந்துகொண்டார். 
                  
முனியம்மா கொண்டு வந்த பழச் சுளைகளை ஒவ்வொன்றாக சுவைத்துச் சாப்பிட்டுவிட்டு, கொட்டைகளையும், சுளைகளின் தோல்களையும் டேபிளில் கன்னா பின்னா என்று போட்டவர், " முனியம்மா - இதை எல்லாவற்றையும் ஒன்று விடாமல் எடுத்து, குப்பைக்கூடையில் போடு" என்றார். 
     

"வேலா - எங்கே நான் நேற்று வாங்கிய ட்ராக் சூட், ட்ராக் ஷூ?" 
                
"செருப்பு வைக்கும் அலமாரியில் இருக்கு எஜமான்." 
         
"நான் இன்றைக்கு போட்டுக்கத்தானே அதை வாங்கி வந்தேன்! நீ இங்கே இருந்துகொண்டு, அங்கே இருக்குன்னு சொன்னா என்ன அர்த்தம்? போ அதையும் வெள்ளை சாக்ஸ் ஜோடியையும் எடுத்துகிட்டு வாப்பா." 
           
வேலன் கொண்டுவந்த எல்லாவற்றையும் அணிந்துகொண்டார். 
              
"டிரைவர் தங்கவேலு வந்தாச்சா?" 
              
"அவரு எட்டு மணிக்குத்தான் எப்பவும் வருவாரு எஜமான்." 
            
"ஏண்டா - நேத்திக்கே ஃபோன் செய்து தங்கவேலுவுக்குச் சொல்லலையா?" 
               
"சொன்னேன் எஜமான். அவரு நான் சொன்னா கேக்கமாட்டாராம். நீங்கதான் சொல்லணுமாம்." 
             
"எடுடா மொபைலை. போடுடா அவன் நம்பரை. " 
                
"ஹலோ தங்கவேலுவா" 
              
"எஸ் பாஸ்." 
          
"ஆமாம். எஸ்ஸு பாஸு இதிலெல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை. கரெக்டா  ஏழு மணிக்கு நீ இங்கே இருக்கணும். இல்லைனா சீட்டைக் கிழிச்சுடுவேன்." 
          
"இதோ வரேன் பாஸ்." என்று சொல்லி, அழைப்பை கட் செய்த தங்கவேல், 'என் சீட்டை நீ கிழிச்சா, கடவுள் உனக்கு (சீட்டு) டிக்கெட் கொடுத்திடுவார்'  என்று சொன்னார். 


ஏழு மணி பத்து நிமிடங்களுக்கு பார்க் வாயிலில் பார்க் செய்யப்பட்ட காரிலிருந்து இறங்கிய நடராஜ், தங்கவேலிடம், "இன்னும் அரைமணி நேரத்தில், பார்க்கில் வாக்கிங் போய் முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். அந்த நேரத்தில் வந்து, என்னை பிக்கப் செய்து, வீட்டில் கொண்டுபோய் விடவேண்டும்" என்று சொல்லியவாறு, பார்க்குக்குள் நடந்து சென்றார். 
   
அவ்வளவுதான் கதை. 
     
(ஆமாம் - கடைசியில் என்னவோ சொல்கிறேன் என்று சொன்னேனே என்ன அது? ஹாங் - வில்லனுக்கு நடராஜ் பெயர்க்காரணம். அது ஒன்னுமில்லீங்க - அப்போ எனக்கு ஆபீசில் பாஸ் ஆக இருந்தவர் பெயர் நடராஜ்.) 
          

6.1.15

செவ்வாய் சிறுகதை. 48 நாட்கள்.

           
அதை எப்போ, யார் கிளப்பிவிட்டார்கள் என்று தெரியலை. 
             
ஆனா மனசுல பச்சக்குன்னு வந்து ஒக்காந்துகிச்சு. 
                      
அதாகப்பட்டது, தொட்டாற்சுணங்கி இலையை, மனதில் ஏதாவது  ஒன்றை நினைத்தபடி, (எல்லா நாளும் ஒன்றையே நினைத்தபடி) தொடர்ந்து  நாற்பத்தெட்டு நாட்கள் தொட்டு, அதை சுணங்க வைக்கவேண்டுமாம். நாற்பத்தெட்டு நாட்கள்   இப்படி செய்து வந்தால், எண்ணிய எண்ணம், பண்ணிய வேண்டுதல் ஈடேறுமாம்! 
                 
பெங்களுரு பார்க்கில், நிறைய தொட்டாற்சுணங்கி செடிகள் உண்டு. வேண்டுதல்கள் இல்லாமலேயே அடிக்கடி அவைகளைத் தொட்டு சுணங்க வைப்பேன். மேற்கண்ட விவரம் தெரியவந்தவுடன், இதைப் பரிட்சித்துப் பார்த்துவிட ஆவல் கொண்டேன். 
           

மறுநாள், பார்க்கில் சுற்றி வரும்பொழுது, தொட்டாற்சுணங்கி கண்ணில் பட்டவுடனேயே, என்ன வேண்டிக்கொள்ளலாம் என்று யோசனை செய்தேன். ஐந்தாறு நாட்களாக, இடது தோள்பட்டை மூட்டில் கடுமையான வலி இருப்பது ஞாபகத்திற்கு வந்தது. ஆஹா கிடைத்துவிட்டது ஒரு வேண்டுதல்! 
               
எல்லாம் வல்ல தொ சு வே என்னுடைய இடது தோள் மூட்டு வலி சரியாக வேண்டும் என்று வேண்டி, தொட்டேன் பல இலைகளை. 
              
மறுநாளும் அப்படியே. 
                   
அதற்கடுத்த நாளும் அப்படியே! 
   
ஒவ்வொரு நாளும், இடது கை விரல்களால், தொ சு இலைகளை சுணங்க வைத்து, வேண்டிக்கொண்டு வந்தேன். 
          

கொஞ்சம் கொஞ்சம் குணமானது போலவும் ஒரு பிரமை இருந்தது. 
                  
நாற்பது நாட்கள் கடந்து போயின. தொட்டாற்சுணங்கி செடியும் தினமும் என் கை பட்டு, வாடிக்கொண்டிருந்தது. 
                
நாற்பத்து ஒன்றாவது நாள்! 
       
பார்க் சென்றால் ....... 
              
அங்கே அந்த செடிகளைக் காணோம்! 
              
தோட்டச் செடிகளை  அழகாக வெட்டிவிடுபவர், முதல் நாள் மாலையே தொ சு செடிகள் எல்லாவற்றையும் சம்ஹாரம் செய்து பார்க் மூலையில் எடுத்துக் குவித்துவிட்டார்! 
               
இடது தோள்பட்டை வலி இன்னமும் அப்படியே இருக்கின்றது. 
               
உங்கள் வீட்டருகே தொட்டாற்சுணங்கி செடி இருக்கா? 
               
நாற்பத்தெட்டு நாட்கள் நான் அங்கே வந்து தங்கிக்கொள்ளலாமா? 
            

9.9.14

கல்யாணி ஏன் சிரித்தாள்? 02

           
முதல் & முந்தைய பகுதி சுட்டி இங்கே: மங்கா 
           
"விஸ்வம்; விஸ்வநாதன்."
          
"இந்த ஊரா?"
           
"இல்லை." 
         
"எந்த ஊரு?"
          
"உமாமகேச்வரபுரம்" 
          
"எப்படிப் பழக்கம்? 
               

"போன வருஷம் இங்கே எங்க தெருவுல நடந்த என் ஃபிரெண்டின் அக்கா கல்யாணத்திற்கு வந்திருந்தார். அவர்தான் மாப்பிள்ளைத் தோழன்." 
                
"எப்படிப் பழக்கம் ஏற்பட்டது?"
             
"கல்யாண வீட்டில் என்னைப் பார்த்ததுமே, நாந்தான் தன்னுடைய எதிர்கால மனைவி என்று தோன்றிவிட்டதாம். முதலில் என் ஃபிரெண்டின் அக்காதான் என்னிடம் வந்து சொல்லி, என்னுடைய சம்மதத்தைக் கேட்டாள்."
              
"யார், என்ன என்று தெரியாமலேயே நீ சம்மதம் சொன்னாயா?" 
                 
"இல்லை மா....... அம்மா. முதலில் நான் சொன்னது, இதெல்லாம் எனக்கு வேண்டாம் - என் அப்பாவுக்குத் தெரிந்தால், முதுகுத் தோலை உரித்துவிடுவார் என்றுதான்."
           
"அப்புறம்?"
          
"அவருடைய நண்பர்கள், என் ஃபிரண்டு எல்லோரும் சேர்ந்து என்னிடம் பேசி, என்னுடைய சம்மதத்தை அவரிடம் சொன்னார்கள். பிறகு அவர்கள் எல்லோரும் சுற்றி இருக்கும்பொழுது அவர் என்னிடம் பேசினார். தான் உமாமகேச்வரபுரம் பண்ணையாரின் மகன் என்றும், ஒரு அக்கா, ஒரு தங்கை என்றும் அவர்களுக்குக் கல்யாணம் ஆனவுடன், எங்கள் காதலைப் பற்றி அவங்க அம்மா அப்பாவிடம் சொல்லி, அவர்கள் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொள்வதாயும் கூறினார். என்னுடைய ஃபிரெண்ட்ஸ் எல்லோரும் என்னுடைய அப்பாவிடம், சமயம் வரும்பொழுது பக்குவமாக எடுத்துச் சொல்லி, கல்யாணம் நடக்க உதவுவதாகச் சொன்னார்கள்."
               
"அதற்குப் பிறகு அவரைப் பார்க்கவே இல்லையா?"
             
"இல்லை" 
            
"அப்பிடீன்னா இப்போ அவர் எப்படி இருக்கார், என்ன செய்துகொண்டிருக்கார் என்றெல்லாம் உனக்குத் தெரியாதா?" 
           
"தெரியும். என்னுடைய ஃபிரெண்டின் அக்காவுக்கு, உமாமகேச்வரபுரத்தில் பண்ணையார் வீட்டுத் தெருவுக்குப் பக்கத்துத் தெருவில் இருக்கின்ற வீடுதான் புகுந்த வீடு. விஸ்வம் அவருடைய நண்பரைப் பார்க்க அடிக்கடி அங்கே வருவார். ஃபிரெண்டின் அக்கா பிறந்த வீட்டிற்கு வாரா வாரம் கடிதம் எழுதுவார். அந்தக் கவரில் என் பெயர் போட்டு தனியாக ஒரு கடிதம் இருக்கும்.  அது எனக்கு அவர் எழுதிய கடிதம். அதில் ஒவ்வொரு வாரமும் என்னை விசாரித்து, தான் எப்படியிருக்கிறார் என்பதையும் எழுதி விடுவார்."
           
"நீ பதில் கடிதம் எழுதுவாயா?"
              
"இல்லை. ஆனால் என்னைப் பற்றி, என்னுடைய தோழிக்கு எல்லா விவரமும் தெரியும், அதனால அவளே என்னைப் பற்றிய நிலைமைகளை அக்காவுக்கு எழுதி, அக்கா அதை அவரிடம் சொல்லுவாராம். அவருடைய அடுத்த கடிதத்தில் நான் சொன்ன விவரங்களைப் பற்றி ஞாபகமாக விசாரித்து எழுதுவார்."
                
"அவர் எழுதியக் கடிதங்களை இப்போ இங்கே வைத்திருக்கின்றாயா?"
              
"இதோ இருக்கு அம்மா!"
             
"என்னிடம் கொடுக்கின்றாயே! நான் பார்க்கலாமா?"
          
"தாராளமாப் பார்க்கலாம்; படிக்கலாம் அம்மா! அவர் எப்போவும் டீசண்ட். விகல்பமா ஒரு எழுத்து கூட எழுதமாட்டார்."
           
கடிதங்கள் எல்லாம் மேலே நம்பர் போடப்பட்டு, அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 
          


மேலோட்டமாக இரண்டு மூன்று கடிதங்களைப் படித்த மங்கா மாமி, 'பரவாயில்லை. பையன் ரொம்ப நல்ல மாதிரியாத்தான் தெரியறது' என்று முணுமுணுத்தாள். 
                 
மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு கடிதம் கொஞ்சம் கசங்கி இருந்தது. கல்யாணி அதை அடிக்கடி எடுத்துப் படித்திருப்பாள் என்று நினைத்தால் மங்கா மாமி. தானும் அதை எடுத்துப் படித்துப் பார்த்தாள். விஸ்வம் தன்னுடைய அக்காவுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதையும், அடுத்து தங்கை திருமணம் முடிந்து விட்டால், தான் கல்யாணியைக் கல்யாணம் செய்துகொள்வதில் தடை எதுவும் இருக்காது என்று எழுதியிருந்த கடிதம்! 
             
"விஸ்வத்தின் அக்காவுக்குக் கல்யாணம் ஆயிடிச்சா?"
                  
"உம். ரெண்டு வாரத்திற்கு முன்பு ஆயிடிச்சு அம்மா. அந்தக் கல்யாணத்திற்குப் போகலாம் என்று அப்பாவிடம் பெர்மிஷன் கேட்கப் போய்த்தான் அப்பா என்னைக் கண்டபடி திட்ட ஆரம்பித்துவிட்டார். இங்கே கொண்டுவந்து உங்க கிட்டே, உங்க பொறுப்பிலே சேர்த்துவிட்டுவிட்டார்." 
                
"ஆகட்டும் அம்மா கல்யாணி. நீ வருத்தப்படாதே. மூர்த்தியிடம் நான் இது பற்றி பேசுகின்றேன்." 
             
(தொடரும்) 
             

2.9.14

கல்யாணி ஏன் சிரித்தாள்? 01

             
மங்கா மாமி எப்பவும் பிசி. 
                
மங்கா மாமிக்குக் குடும்பமே கிடையாது. குளித்தலைப் பக்கத்தில் ரயிலில் சிறுமியாக அழுதுகொண்டிருந்த மங்காவை (அப்பொழுது அந்தப் பெயரும் அவளுக்குக் கிடையாது!) எடுத்து வந்து வளர்த்தவர் ஒரு பரிச்சாரகர். அவருக்கும் அவர் மனைவிக்கும் குழந்தை பாக்கியம் இல்லை. இந்தப் பெண் அனாதையாக அழுதுகொண்டிருந்தபோது, அவளை அழைத்து வந்து, அவரும் அவர் மனைவியும் தங்கள் மகளாக சுவீகரித்துக் கொண்டனர். திருப்பதி அலமேலுமங்கைத் தாயாரே அந்தப் பெண்ணின் உருவில் வந்ததாக அவர்கள் கருதி, அலமேலு மங்கா என்று பெயர் வைத்து, மங்கா என்றே அழைத்து வந்தனர். 
            
பரிச்சாரகர் வீட்டில் வளர்ந்ததால், சமையல் வேலைகள் எல்லாமே சுலபமாக வந்தது மங்காவுக்கு. அம்மா அப்பா இறந்தபின் மீண்டும் அனாதையானாள்! திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என்று முடிவெடுத்து இப்போ ஐம்பதாவது வயதில் சமையல் காண்டிராக்ட் நிர்வாகம். 
               
சமையல் காண்டிராக்ட் வேலையை இவ்வளவு திறமையாக ஒரு பெண்ணாக இருந்துகொண்டு நிர்வகிப்பது அந்த கும்பகோணம் வட்டாரத்திலேயே பலரை வியப்பில் ஆழ்த்திய விஷயம். 
                
கல்யாணச் சமையல் என்றால் மங்கா மாமியிடம் சொல்லி அட்வான்ஸ் கொடுத்துவிட்டால் போதும். அப்புறம் அந்தக் கல்யாண வீட்டினர் சமையல், கோலம், சீர் முறுக்கு, கட்டுசாதக் கூடை, ஆரத்தி, பாட்டு என்று பல விஷயங்களுக்கு கவலை விட்டது என்று நிற்சிந்தையாக இருந்து விடலாம்! 
                 
மங்கா மாமியைப் பார்ப்பதற்கு, சமையல் இலை சப்ளையர் கணேஷமூர்த்தி வந்திருந்தார். பார்ப்பதற்கு டெல்லி கணேஷ் போல இருந்தார். 
               

"மாமி ஒரு விண்ணப்பம். நீங்க கொஞ்சம் மனசு வைக்கணும்."
               
"மூர்த்தி - ஏதாவது காண்டிராக்ட் தில்லுமுல்லு, ரசீது இது அதுன்னு சொல்வதாயிருந்தா நான் ஒன்றையும் கேட்கமாட்டேன்."
              
"அது தெரியாதா மாமி. இது வேற விஷயம். என்னுடைய பொண்ணு. பத்தாம் கிளாஸ் வரைக்கும் படிச்சுருக்கா. அதுக்கு மேலே படிப்பு வரலை. அவளுடைய அம்மா முந்தியே போய்ச் சேர்ந்துட்டா......."
              
"உம். அதுக்கு என்ன இப்போ?"
             
"படிப்பு வரலையே தவிர லவ்வு வந்திடுச்சு."
                
"ஈஸ்வரா!"
           
" வீட்டுல சும்மா இருந்தா இந்தமாதிரி ஏதாவது ஏறுக்கு மாறா பண்ணிக்கிட்டு இருப்பா. உங்க கிட்ட கொண்டுவந்து விட்டுடறேன். நீங்க உங்க பொண்ணாட்டம் அவளை உங்க கூடவே வெச்சு வேலை வாங்கிக்குங்கோ. சம்பளம் எல்லாம் ஒன்னும் கொடுக்காதீங்கோ. ஏதேனும் ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டையா ஒரு இடம் கெடச்சா கல்யாணம் பண்ணி வெச்சுடறேன்." 
                     
"சரி. நாளைக்கு மேட்டுத் தெரு சீனிவாசன் வீட்டுக் கல்யாண சமையல் வேலை இருக்கு. மீனாட்சி கல்யாண மண்டபத்துல மத்தியானத்திலேர்ந்து இருப்பேன். உன்னுடைய பொண்ணை அங்கே கூப்பிட்டுகிட்டு வந்திடு. குழந்தையை ஒன்றும் திட்டாதே. அவா அவா தலையில என்ன எழுதியிருக்கோ அதுமாதிரிதான் எல்லாம் நடக்கும்."
                   
"ரொம்ப தாங்க்ஸ் மாமி. நாளைக்கு அழச்சுண்டு வந்துடறேன்."
                 
"தாங்க்ஸ் எல்லாம் எதுக்கு?"
                      
======================================
             
மறுநாள். 
            
மீனாட்சி கல்யாண மண்டபம். 
                 
மாப்பிள்ளை அழைப்புக்காக மண்டபம் தயாராகிக் கொண்டிருந்தது. 
               
மங்கா மாமி பம்பரமாகச் சுற்றி கட்டளைகள் பிறப்பித்து சமையல் பகுதியை கிடுகிடுக்க வைத்தவண்ணம் இருக்கும் பொழுது கணேஷ மூர்த்தி சமையல் அறைக்கு வந்தார். கூடவே சங்கராபரணம் ராஜலட்சுமி போல ஒரு பெண். கையிலே ஒரு பை. பேச்சிலோ நடையிலோ தயக்கம் எதுவும் இல்லை. தேங்காய் உடைத்தாற்போன்று சிரிப்பு, பேச்சு! 
               
   

மூர்த்தி சொன்னார். "மாமி நான் சொன்னேனே .......இவள்தான் என்னுடைய பொண்ணு, கல்யாணி. படிப்பு வரலை. பாட்டு வருது. லவ்வு வந்துடுச்சாம். அந்தப் பையன் யாருன்னு கேளுங்கோ. பணக்கார வீட்டுப் பையன். எங்கே பாத்து எப்படி வந்துச்சோ! பணக்காரப் பசங்களை நம்பலாமோ? அவங்களுக்கெல்லாம் இது பொழுது போக்கு. நமக்கு ......"
                   
"போதும் மூர்த்தி. நான் பார்த்துக்கறேன். குழந்தையை ஒன்றும் சொல்லாதே. அறியாத பொண்ணா இருக்கா. அம்மா இல்லாத பொண்ணு வேற. நீ கிளம்பு."
              
"சரி மாமி நான் கிளம்பறேன். இனிமே இவ உங்க பொறுப்புல. நான் இலை சப்ளை செய்ய வரும்பொழுதெல்லாம் பாத்துக்கறேன்." 
                 
"சரி மூர்த்தி. நான் பாத்துக்கறேன். நீ போயிட்டு வா."
                  
"கல்யாணி நான் போயிட்டு வரேன் அம்மா!"
            
"சரிப்பா" 
        
============================== 
            
"கல்யாணீ! இங்கே வாம்மா. "

"என்ன மாமி?"

"என்னை அம்மான்னே கூப்பிடு."

"என்ன அம்மா?"

"அந்தப் பையன் பேரு என்ன?"

(தொடரும்)