"சார், இந்த வீட்டில் லக்ஷ்மி தாண்டவம் ஆடுவாள் என்று சொல்வார்களே உங்களுக்கு அது மாதிரி விஷயங்களில் நம்பிக்கை உண்டா?" என்றார்.
இவருக்கு நம் மனைவி பெயர் எப்படித்தெரிந்தது என்று வியந்து கொண்டே "அது எப்படி உங்களுக்குத் தெரியும்? " என்று நான் கேட்க, " "இதெல்லாம் ஸ்கூல் வைத்தா சொல்லித் தருவார்கள்? அங்கங்கே கேள்விப்படுவதுதான் " என்று அவர் சொல்ல 'இதென்னடா விபரீதம்! ஏதோ இரண்டு பக்கத்து வீடுகளுக்கும் முன்னே பின்னே இருக்கும் வீடுகளுக்குமாக ஒரு நாலு அல்லது போனால் போகிறது என்று ஆறு வீட்டுக்குத் தெரிந்திருக்க முடிந்த ஒரு சமாச்சாரம் நம் பேட்டை எல்லையையும் தாண்டி பரவி இருக்கிறதே என்றெண்ணிக் கொண்டே 'அப்படி என்ன கேள்விப் பட்டீர்கள்?' என்றதும் அவர்,
"அதோ அங்கிருப்பதேல்லாம் வெற்றிலை தானே?" என்று கேட்டுவிட்டுப் பின்னர் 'வெற்றிலை இப்படி செழித்து வளர்ந்தால் செல்வம் கொழிக்கும் என்று சொல்வார்கள். அதனால் தான் அப்படிக் கேட்டேன் என்றதும் தான் . பரவாயில்லை நாம் நினைத்தது போல் நம் உரத்த குரல் அவ்வளவு பேருக்குக் கேட்கவில்லை என்று எனக்கு ஒரு நிம்மதி பிறந்தது.



