முந்தைய பகுதி சுட்டி இங்கே: மறந்துவிடு
திரு விஸ்வம் அவர்களுக்கு,
மன்னித்துவிடு, மறந்துவிடு என்று அரசியல்வாதி போல எழுதியிருக்கின்றீர்கள்.
மன்னிப்பதற்கு நீங்கள் எனக்கு என்ன குற்றம் செய்தீர்கள்? இந்தக் கல்யாணியைக் கல்யாணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றியது ஒரு குற்றமா? நான் முதன் முதலில் கூறியதை சற்று நினைத்துப் பாருங்கள். 'இதெல்லாம் என்னுடைய அப்பாவுக்குப் பிடிக்காது, தெரிந்தால் முதுகுத் தோலை உரித்துவிடுவார்' என்றுதானே! அப்பா என்னை மன்னிப்பாரா என்று தெரியவில்லை - அவருடைய பேச்சை மீறி, காதல், கத்தரிக்காய் என்று விழுந்ததற்கு. மன்னிப்பதற்குரிய குற்றம் எதையும் நீங்கள் செய்யவில்லை என்று எனக்குத் தோன்றுவதால், மன்னிப்பு என்ற சொல்லுக்கே இகே இடமில்லை. அதனால், சந்தோஷமாக, உங்கள் அம்மா சொல்லுகின்ற பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளுங்கள்.
உங்களுக்கு ஒரு பையன் பிறந்தால், அவன் ஏழைப் பெண் யாரையும் விரும்பாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
அப்பொழுது 'என்னை நினை; உன்னைக் கல்யாணம் செய்துகொள்கின்றேன்' என்றீர்கள், நான் 'நினைக்கமாட்டேன்' என்றேன். இப்பொழுது, 'என்னை மறந்துவிடு, நான் வேறொரு கல்யாணம் செய்துகொள்கின்றேன்' என்கிறீர்கள்.
இப்பொழுது நான் கூறப்போவது, 'மறக்கமாட்டேன்' என்பதுதான். எப்படி மறக்க முடியும்? மருந்து சாப்பிடும்பொழுது குரங்கை நினைக்கக்கூடாது என்று கூறப்பட்டவன் கதைதான். வாழ்க்கை ஒரு சிலேட்டா? எழுதியதை எல்லாம் எச்சில் தொட்டு அழித்துவிட்டு, வேறு ஒன்றை எழுதிக்கொள்ள முடியுமா? அப்படியே சிலேட்டாக இருந்தாலும், பலப்பம் வைத்து எழுதியதை அழிக்கலாம்; ஆணி கொண்டு போட்ட கோடுகளை அழித்துவிடமுடியுமா?
நீங்கள் எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும் ஒவ்வொரு வார்த்தையும், என் இதயத்தில் ஆணிக்கீறல்களாக உள்ளனவே! இதயத்திலிருந்து அவைகளை அழித்துவிட இயலுமா?
என் வாழ்க்கையில் காதல் என்ற ஒரு சொல்லினால், எனக்கு ஒரு பிரியமான அம்மா கிடைத்துள்ளார்கள். இதற்காக நான் உங்களுக்கு ஆயிரம் முறை நன்றி சொல்லவேண்டும்.
உங்கள் கடிதத்தில், "கல்யாணீ - உன்னை நான் அடுத்த முறை பார்க்க நேர்ந்தால், உன் கணவனுடனும், குழந்தையுடனும், சிரித்த முகத்தோடு பார்க்க வேண்டும். என்னை மன்னித்துவிடு, மறந்துவிடு." என்று எழுதியிருந்தீர்கள்!
அடுத்தமுறை பார்க்க நேர்ந்தால் ...... பார்க்க நேர்ந்தால் ! பார்க்க நேர்ந்தால் ....!
'பார்க்கவேண்டாம் .... ' என்று நினைக்கின்றீர்கள் போலிருக்கு. நேர்ந்தால் பார்ப்போம்!
'கணவனுடனும்...' ஹா ஹா - இதற்குச் சந்தர்ப்பமே வாய்க்காது!
'குழந்தையுடனும் ..... ?' ஹா ஹா குட் ஜோக்!
'சிரித்த முகத்தோடு ....' சந்திக்க நேர்ந்தால், இதைப்பற்றி சிந்திக்கின்றேன். சரி என்று தோன்றினால் சிரிக்கின்றேன்!
அதுவரையிலும் .......
என்றும் மறவாத
கல்யாணி.
(தொடரும்)
