இன்னொரு கனவு
"உக்காருங்க, டாக்டர் வருவார்!"
உட்கார்ந்தான். சுவரில் மாட்டியிருந்த சித்திரத்தைப் பார்த்தான். முன்பே பரிச்சயம் ஆனாற்போல் ஒரு நெருக்கம் அந்த ஓவியத்தில் தோன்றியது. இந்தப் பரிச்சயம் தான் மிகவும் ஹிம்சைப்படுத்துகிற சமாசாரம். முன்பே வந்து போன உணர்வு. நடக்கப் போகும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனதுக்குள் முதல் நாளே பதிந்து விடும் பரிதாபம். இப்போது கூட டெலிபோன் மணி அடிக்கும், டாக்டர் வருவார்.
அடித்தது. டாக்டர் வந்தார். இவனுக்குக் கொஞ்சம் கூட ஆச்சரியம் ஏற்படவில்லை. கடந்த ஒரு மாதமாகவே இப்படித்தான். இப்போது டாக்டர் டெலிபோனை வைத்துவிட்டு இவனைப் பார்த்துச் சிரிப்பார். "எஸ், ப்ளீஸ்?" என்று புருவத்தை உயர்த்தி விசாரிப்பார்...
"எஸ், ப்ளீஸ்?"
"டாக்டர், எனக்குக் கொஞ்ச நாளா ராத்திரியில் வித்தியாசமான கனவுகள் வருது டாக்டர்"
"சொல்லுங்க"
"ராத்திரி என்ன கனவு வருதோ, அது மறுநாள் அப்படியே நடக்குது டாக்டர்!"
"அப்படின்னா?"
"ஒரு நாள் ராத்திரி ப்ளேன்ல போறதா கனவு கண்டேன்; மறுநாள் ஆபீஸ்ல அவசர வேலையா பம்பாய்க்கு பிளேன் டிகெட் கொடுத்து அனுப்பிச்சாங்க. பிளேன்ல ஏர்ஹோஸ்டஸ், அவ சிரிப்பு, பக்கத்து சீட் பெரியவர், அவர் இருமல்... எல்லாம் என் கனவுல வந்தது டாக்டர்"
"ம்.."
"இன்னொரு நாள் சின்னவயசுல என்னோட படிச்ச ராஜாமணி வீட்டுக்கு வர்ற மாதிரி கனவு கண்டேன். மறுநாள் கதவைத் திறந்து பாத்தா ராஜாமணி நிக்கறான்!"
"ம்.."
"அப்புறம் ஒரு நாள் மேனேஜர் எனக்கு இருநூறு ரூபாய் சம்பள உயர்வு குடுக்கற மாதிரி கனவு; மறுநாள் மேனேஜர் கூப்பிட்டு இங்கிரிமென்ட் குடுக்கறார். இன்னொரு நாள் ஒரு கிரிகெட் மாட்ச் முழுக்கப் பாத்தேன். ஸ்கோர், விகெட், எல்பிடபிள்யூ.. எல்லாம் அப்படியே இருந்தது. பைத்தியம் பிடிச்சுடும் போலிருக்கு டாக்டர்!"
"உங்க கனவுல அமானுஷ்யமா ஏதாவது வருதா? நம்ப முடியாதபடி.. நீங்க பறக்கற மாதிரி.."
"கிடையாது டாக்டர். ஆனா நினைச்சுக்கூட பாக்காதது எல்லாம் வந்திருக்கு"
"எப்படி?"
"எங்க ஆபீஸ்ல விமலான்னு.. நாப்பது வயசு இருக்கும். அவங்க ஒரு நாள் என் கனவில் வந்தாங்க.. இந்த மாதிரி.. வீட்டில யாருமே இல்லை.. அப்படின்னாங்க"
"உங்களை வீட்டுக்குக் கூப்பிட்டாங்களா?"
"இல்லை. அப்ப முழிச்சிக்கிட்டேன். ஒரு டம்ளர் தண்ணியைக் குடிச்சுட்டுப் படுத்தேன். மறுபடி அந்தக் கனவு வரலை!"
"மறுநாள் ஆபீஸ் போனீங்களா?"
"போனேன். விமலா எங்கிட்டே வந்தாங்க. அவங்க வீட்டுல யாரும் இல்லனு சொன்னாங்க. கனவுல வந்த மாதிரியே அந்த இடத்துலயே கட் ஆயிடுச்சு!"
"ஏன்?"
"அந்த சமயத்துல அவங்களுக்கு டெலிபோன் வந்தது. நானும் நழுவிட்டேன்"
"கவலைப்படாதீங்க. இந்த மாதிரி இன்ட்யூஷன்.. மூளை கூர்மையா இருக்கிற சிலபேருக்கு ஏற்படுவதுண்டு. சில பேருக்கு ஊகங்கள் சரியா அமைந்து விடுவதுண்டு. சில மாத்திரைகள் எழுதித் தரேன். நல்லா தூக்கம் வரும். இந்த மாதிரி கனவுகள் வராது!"
"இல்லை டாக்டர். இது வேறே ஏதோ சக்தி. இப்படியே போனா - எனக்குப் பயமா இருக்கு டாக்டர்!"
"இதுல பயப்பட ஒண்ணுமே இல்லை". டாக்டர் மருந்துச்சீட்டில் எழுத ஆரம்பித்தார்.
"ஈக்விப்ரோம்! அந்த மாத்திரைதானே எழுதுறீங்க? அப்புறம் படுக்கப் போகுமுன் வேலியம்-5. இதை எழுதிக் கொடுத்த பிறகு நான் குடுக்கப் போற ஃபீஸ் ஐம்பது ரூபாய்! கரெக்ட்?"
"..."
"இதைத்தானே இன்ட்யூஷன் அது இதுன்னு சொல்றீங்க? என் கனவுல நேத்து ராத்திரியே வந்தாச்சு!"
"அப்புறம் வேறென்ன கனவில் வந்தது?"
"இன்னிக்குக் காலைல வீட்டைவிட்டுக் கிளம்பும்போது கத்தியை எடுத்துக்கறேன்"
"கத்தி?"
"பாகெட் நைஃப். அப்புறம் ஒரு ஹோட்டல்ல போய் மசால் தோசை, காபி சாப்பிடறேன். வெளிய வந்து ஒரு பாக்குப் பொட்டலத்தைப் பிரிச்சு வாயில போட்டுக்கறேன். அப்புறம் ஒரு வில்ஸ் ஃபில்டர். ஒரு ஆட்டோ பிடிச்சு இங்கே வரேன். உங்க கிட்டே என் கனவுகள் பற்றிச் சொல்றேன். நீங்க ப்ரிஸ்க்ரிப்ஷன் தரீங்க. அதுக்கபுறம் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கேன். உங்களை ஒரு தம்ளர் ஐஸ் வாட்டர் கேக்கறேன். உங்க அசிஸ்டென்டைக் கூப்பிட்டு ஐஸ் வாட்டர் கொண்டுவரச் சொல்றீங்க. குடிக்கறேன். அவன் போன பிறகு நான் பாக்கெட்டில் இருக்கற கத்தியை எடுத்து உங்க மேலே பாயறேன். மாத்தி மாத்திக் குத்தறேன். கத்தியைத் துடைச்சு பாக்கெட்ல வச்சுக்கிட்டு வெளியில் ஓடறேன்!"
"இந்த மாத்திரை ஒரு வாரம் சாப்பிடுங்க. அப்புறம் என்னை வந்து பாருங்க, ஓகே?". டாக்டர் சிரித்துக் கொண்டிருந்தார்.
"டாக்டர், தாகமா இருக்கு, ஒரு தம்ளர் ஐஸ் வாட்டர் கிடைக்குமா?"
================ X =========================
எங்கள் கமெண்ட்: ரைட்டு நாங்க ஒண்ணும் கேக்கறதா இல்லை. நாங்க கேள்வி கேட்டா அப்பாவி, 'அவ்வ்வ்வவ்வ்வ்வ்' சொல்லுவாங்க; சாய் - ரிப்பீட்டு சொல்லுவாரு. எங்களுக்கு ஏன் வம்பு. ;-)


