திங்கள், 23 மே, 2011

எப்படியாவது தப்பிக்க வேண்டும் - இறுதிப் பகுதி

                    
'கா' வின் காரை ஓட்டிச் சென்றவர்கள், அவர்களுக்கு இடப்பட்டிருந்த  கட்டளைகளை மின்னல் வேகத்தில், மளமளவென்று முடித்தனர். 
                     
காரினுடைய பதிவு எண் பலகைகள் உடனடியாக மாற்றப்பட்டன. காரின் நிறம் மாற்றப்பட்டது. காரின் பதிவுப் பத்திர நகல்கள் தீக்கிரையாகின. 

கார் ஊருக்கு வெளியே, அதிக ஜன நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டது. காரின் கதவுகள் பூட்டப் பட்டன. காரைக் கிளப்புகின்ற சாவி, ஒரு கவரில் போடப் பெற்று அப்படியே, ஒரு குறிப்பிட்ட விலாசத்திற்கு கூரியர் அனுப்பப்பட்டது. (அது 'தீ' யின் விலாசம்.)

இந்த வேலைகளை, 'கே' என்பவர் அனுப்பியிருந்த நிரல் படி செய்து முடித்ததற்கு இருவருக்கும் கூலியாக ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய்கள் மிஞ்சியது. 
            
இது 'தீ' யினுடைய கதை! 

எனவே, இந்த 'கே' யார், அவர் என்ன ஆனார் என்றெல்லாம் யாரும் கேட்காதீர்கள். 
  
எனிவே 'கே' பற்றிய கதை பிறகு எங்கள் பதிவில் வெளியாகக்கூடும்!  

***** 
'தீ' க்கு, 'கே' யார் என்பதோ, அவர் எங்கே இருக்கிறார் என்பதோ தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் 'கே ஃபார் கேஷ்' என்பது மட்டும்தான். 'கே' இடும் ஆணைகளை அப்படியே செய்து முடித்தால், கை மேல் பலன் கிடைக்கும் என்பது அவருக்குத் தெரியும். சொன்ன காரியத்தை செய்து முடித்துவிட்டு, தன்னுடைய நெட் பாங்கிங் கணக்கில் பார்த்தால், ஓரிரு நாட்களுக்குள், பல கணக்குகளிலிருந்து பணம் பெயர்ந்திருப்பது தெரியும். நதிமூலம், ரிஷிமூலம் போன்று பணமூலமும் ஆராயக் கூடாது என்பது அவர் கொள்கை. 

காலையில், கூரியரில் அவர் பெயருக்கு வந்த கார் சாவியை எடுத்து வைத்துக்கொண்டு, அடுத்து என்ன தகவல், எப்படி வருகின்றது என்று எதிர்பார்த்திருந்தார்.   

தகவல் வந்தது. வாசலில் மாட்டப்பட்டிருந்த கடிதப் பெட்டியில், ஒரு வெள்ளை நிற உறை. அதன் மேல் 'தீ' என்ற ஒரே எழுத்து. வேறு எந்த தகவலும் இல்லை. உள்ளே எழுதியிருந்தது மிகவும் சுருக்கமாக. 

'மெக்கானிக் தீ அவர்களின் பார்வைக்கு. ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள காரை ஓட வைக்கவும். அதற்கு முன்பு அதில் 'உலை' வைக்கவும். எந்த நேரத்தில் 'உலை' வேலை செய்யவேண்டும் என்பதை, உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள மருந்துக் கடையில் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். 
                    
மருந்துக் கடையில் கேட்கவேண்டிய கேள்வி: 'கிழவர் மருந்து குடித்தாரா? அடுத்த வேளை மருந்து எத்தனை மணிக்கு?' முதல் கேள்விக்கு வருகின்ற பதில் எதுவாக இருந்தாலும், இரண்டாவது கேள்வியின் பதில் முக்கியம். அதன் படி 'உலை' வேலை செய்ய வேண்டும். 
   
'உலை' வேலை செய்யும் நேரத்திற்கு பத்து நிமிடங்கள் முன்பாக  - வண்டியை சந்தடி மிகுந்த சந்தையில் நிறுத்திவிட்டு, உடனடியாக அவ்விடத்தை விட்டு அகன்றுவிடவும். மற்றவை வழக்கம் போல். 

'தீ' கடிகாரத்தைப் பார்த்தார். மணி மாலை நான்கு. மருந்துக் கடைக்குச் சென்றார். மருந்துக்கடையில் இரண்டு பேர் இருந்தார்கள். வழக்கமான ஒருவர், முற்றிலும் புதியவர் ஒருவர். வழக்கமாக இருப்பவர், 'என்ன வேண்டும்?' என்று கேட்டார். 'தீ' கேட்டார்: "கிழவர் மருந்து குடித்தாரா? அடுத்த வேளை மருந்து எத்தனை மணிக்கு?" 

வழக்கமாகக் காணப்படுபவர், புதியவரைப் பார்த்தார். புதியவர் சொன்னார், 'கிழவர் மருந்து குடித்து வருகிறார். அடுத்த வேளை மருந்து, இன்று இரவு ஏழு மணிக்கு.' 
   
'தீ' வீட்டுக்கு விரைவாக வந்து, தன்னுடைய மெக்கானிக் பெட்டியை எடுத்துக் கொண்டு, அதில் வைக்கப்படவேண்டிய உலையும், மற்றும் கருவிகளும் சரியாக உள்ளதா என்று உறுதிப் படுத்திக் கொண்டு, வெளியே வந்தார்.  அருகில் இருந்த ஆட்டோவைப் பிடித்து முதலில் அந்த சந்தைப் பக்கம் போகச் சொன்னார். நிறைய ஜனங்கள் கூட்டம் கூட்டமாக வாங்குவதிலும் விற்பதிலும் மும்முரமாக இருந்தனர். காரை எங்கே நிறுத்தலாம் என்பதை உத்தேசமாக முடிவு செய்வதற்காக அவர் அங்கே சென்றார். ஆட்டோவிலிருந்து இறங்கி, பணம் கொடுத்து அனுப்பினார். பிறகு, உலைக்கு வேண்டிய சில விஷயங்களை சந்தையில், சில்லறை விலையில் வாங்கிக் கொண்டார். self tapping screws மட்டும் எங்கும் கிடைக்கவில்லை. அவர் வழக்கமாக வாங்குகின்ற கடையில், 2 BA / 4 BA ஸ்க்ரூ வகைகள் இருந்தன. அலைந்து திரிந்து பல கடைகள் ஏறி இறங்கிய பின் ஒரு வழியாக அவர் தேடிய ஸ்க்ரூ கிடைத்தது. இதற்குள் மாலை மணி ஐந்தாகி விட்டது.     
   
காரை எங்கே நிறுத்துவது என்ற இடத்தைத் தேர்ந்தெடுக்க கால் மணி நேரம் ஆகியது. அதன் பிறகு, மற்றொரு ஆட்டோவைப் பிடித்து, சந்தையிலிருந்து, கார் இருந்த ஒதுக்குப் புறமான இடத்தை நோக்கி ஆட்டோ ஓட்டுநரை ஓட்டச் சொன்னார். அதே நேரத்தில், சந்தையிலிருந்து அந்தக் கார் இருக்குமிடத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகின்றது என்பதையும் 'தீ' கணக்கு செய்து வைத்துக்கொண்டார். சரியாகப் பன்னிரண்டு நிமிடங்கள்! 

மணி மாலை ஐந்தரை. 

காரைக் கண்டு பிடிப்பது மிகவும் சுலபமான வேலையாக இருந்தது. காரைத் திறந்து, அதனுள், தான் கொண்டு வந்திருந்த உலை, உலைப் பெட்டி, போன்றவற்றை வைத்துவிட்டு, தன் சிறிய துளையிடும் கருவியை எடுத்துக் கொண்டு, அதை காரின் ஃபியூஸ் பெட்டியின் உபரி இணைப்புகளில் இணைத்து, காருக்கு அடியில் சென்றார். மொத்தம் எட்டு துளைகள் இட்டார். கார் ஃப்ளோரின் அடிப்பாகத்தில். ஒவ்வொரு துளையும் மார்க் செய்து துளையிட்டு முடிக்க, துளைக்கு நான்கு நிமிடங்களாக, மொத்தம் முப்பத்திரண்டு நிமிடங்கள் ஆயின. 
       
மணி மாலை ஆறு ஐந்து. 
       
காருக்குள் இருந்த 'உலை' மற்றும் உலைப் பெட்டி ஆகியவைகளை 'தீ' எடுத்துக்கொண்டு காரின் அடியில் சென்று அவற்றைப் பொருத்தும் வேலையில் மும்முரமானார். இரண்டையும் காருக்கு அடியில் பொறுத்த இருபது நிமிடங்கள் ஆயின. எட்டு ஸெல்ப் டாப்பிங் ஸ்க்ரூகளும் பொருத்தப் பட்டு, அவைகள் வெளியே வராதபடி அவைகளை சோல்டரிங் செய்து முடித்த பின், இனிமேல் சோல்டரிங் அயர்ன் டிஸ்கனெக்ட் செய்து, ஒயர்களை  உலையின் இன்புட் இணைப்புக்குத் திருப்பிவிட்டு ... நேரம் மாலை ஆறு இருபத்தெட்டு. 

உலையின் டைமர் முப்பது நிமிடங்களில் செயல் படுமாறு அமைத்துவிட்டு, அதை 'ஸ்டார்ட்' பட்டன் அமுக்கிவிட்டு 'இது ஒரு திரும்பப் பெற முடியாத கட்டளை. கவுண்ட் டவுன் ஆரம்பிக்கு முன்பு சரி பார்த்துச் சொல்லவும்' என்ற எச்சரிக்கையைப் புறக்கணித்து .... OK என்று கொடுத்தவுடன், டைமர் ஓடத் துவங்கியது. 

அவசரம் அவசரமாக தன்னுடைய உபகரணங்கள், அடையாளம் காண முடிந்த சில குப்பைகள் எல்லாவற்றையும் தன்னுடைய மெக்கானிக் பையில் காரின் அடியில் படுத்த படியே அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ....

காருக்கு வெளியே, காருக்குப் பக்கத்தில் வந்து யாரோ காரின் பக்கவாட்டுக் கதவை யாரோ பலமாகத் தட்டினார்கள்.   
                
"ஐயா யாருங்க? காருக்கு அடியில? கார் ஓனரா அல்லது கார் திருடனா?"
    
பூட்ஸ் கால்களைப் பார்த்த உடனேயே தெரிந்து போய்விட்டது, டிராபிக் கான்ஸ்டபுள். உடனே 'தீ' அவசர முடிவு ஒன்றை எடுத்தான். காருக்குக் கீழே படுத்த படியே பேசி (இயன்ற வரையில் தன் முகத்தைக் காட்டாமல்) கான்ஸ்டபிளை அனுப்பி விடுவது. தன் முகத்தைக் காட்டி விட்டால், பிறகு கோர்ட்டில் சாட்சியாக நிற்கும் கான்ஸ்டபிள் - குற்றவாளிக் கூண்டில் நிற்கின்ற தன்னை சுலபமாக அடையாளம் காட்டிவிடுவார் என்ற பயம் 'தீ'க்கு வந்தது. 

"சார்! நான் ஓனருமில்லை, திருடனும் இல்லை. கார் மெக்கானிக்." 

"ஓனர் இல்லை என்பது சரி. ஆனால் ஓனர் இல்லாமல் ஒரு மெக்கானிக் மட்டும் எப்படி வந்தீர்கள்? ஓனர் எங்கே? இந்தக் கார் இங்கே இரண்டு நாட்களாக கேள்வி கேட்பார் இல்லாமல் நின்றுகொண்டு இருக்கின்றது. இப்போ மட்டும் எப்படி இதை எடுக்க வந்தீங்க?" 

"சார்! ஓனர் அவசரமாக வெளியூர் சென்றுள்ளார். அவர் காரை எப்பொழுதும் ரிப்பேர் பார்க்கும் மெக்கானிக் நான்தான்"

"ஓ அப்படியா? அடையாள அட்டை ஏதாவது வைத்திருக்கின்றீர்களா?"

" இருக்கிறது சார்!" என்று சொன்னபடியே, வலது கையால் பாண்ட் பைக்குள் இருந்த தன்னுடைய போலி அடையாள அட்டையை வெளியே எடுத்தார் 'தீ'. 
                             
 'தீ' அடையாள அட்டையை, காருக்கு அடியிலிருந்தவாறு வெளியே நீட்டினார். அதைக் குனிந்து கையில் வாங்கிய போக்குவரத்துக் காவலர், அந்த அடையாள அட்டையின் மீது டார்ச் அடித்துப் பார்த்தார். உடனே 'தீ'க்குள் 'டிங்' என்று ஒரு எச்சரிக்கை மணி அடித்தது. டார்ச் ஒளி அடுத்துத் தன் முகத்தின் மீது விழப் போகின்றது என்பதை நொடியில் புரிந்து கொண்டவராக, அவர் தன் முகத்தை மறுபக்கம் வேகமாகத் திருப்பிக் கொண்டு, காருக்கு அடியில் படிந்திருந்த தூசியை வலது கையால் தேய்த்து எடுத்து முகத்தில் பூசிக் கொண்டார். பிறகு திரும்பி, அவருடைய முகத்தை டார்ச் வெளிச்சத்தில் காட்டினார். முகத்தைப் பார்த்த கான்ஸ்டபிள் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, இனிமேல் மெக்கானிக்குகளுக்கு அடையாள அட்டைக்கு ஃபோட்டோ எடுக்கும் பொழுது, முகத்தில் கொஞ்சம் கரியை பூசி படம் எடுக்க வேண்டும்! மெக்கானிக்குகள் பெரும்பாலான நேரங்களில் மூக்கில் கரியுடன்தான் காணப்படுகிறார்கள்.' என்று சொல்லியவண்ணம் அடையாள அட்டையை 'தீ' கையில் திணித்துவிட்டு நடந்தார். 

'தீ' அவசரம் அவசரமாக அடையாள அட்டையை தன இடது கையினால் வாங்கி வலது பக்க பாண்ட் பையில் திணிக்க சற்றுத் திரும்ப வலது காலையும் இடது கையையும் கொஞ்சம் திருப்பும் பொழுது 'மளுக்' கென்று 'தீ'யின் வலதுகால் முட்டி சுளுக்கிக் கொண்டது. 

முதலில் அந்த சுளுக்கின் தீவிரம் 'தீ'க்கு உறைக்கவில்லை. ஆனால் காரின் அடியிலிருந்து வெளியே வருவதற்கு வலது காலை அசைக்காமல் வெளியே வரமுடியவில்லை. வலது காலை சற்று அசைத்தால் கூட வலி - தீவிரமான வலி. வலியில் உயிரே போய்விடும் போன்ற நிலைமை. யாராவது அவரை, கையால் பிடித்து இழுத்தால்தான் வெளியே வரமுடியும் என்கிற நிலை. 

ஆனால், அருகில் யாருமே இல்லை.   
                       
நேரம் மாலை மணி ஆறு ஐம்பத்தெட்டு. 

எப்படியாவது தப்பிக்க வேண்டும்! 

எப்ப்ப்ப் படியாவது தப்பிக்க வேண்டும்! 

தப்பிக்க வேண்டும்! 


ப் 

பி 

க் 

க 

வே

ண் .........

'டும்!' 
       
                

9 கருத்துகள்:

  1. நான் நினைச்சது கொஞ்சம் மிஸ் ஆய்டுச்சு.. பா.எ ஷெ ஹோ பட்டம் கொடுங்க

    பதிலளிநீக்கு
  2. குரோம்பேட்டைக் குறும்பன்23 மே, 2011 அன்று 8:14 AM

    எனக்கும் கூட (மீதி) பாதி எ ஷெ ஹோ கொடுங்க. நான் முற்றும் என்று சொல்லியிருந்தேன். நீங்க 'டும்' என்று முடித்திருக்கின்றீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஒரு பாதி யூகிக்க முடிந்தது. முடிவு எதிர்பாராதது.

    பதிலளிநீக்கு
  4. நல்லா வந்திருக்கு கதை..

    "தப்பிக்க வேண்'டும்'"

    சரியான கிறுக்கன்.... அதென்னது இடது கையால வாங்கி, வலது பைக்குள் வைக்க முயற்சி..

    பதிலளிநீக்கு
  5. நல்லா விறுவிறுப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  6. சுவாரசியம். 'கே'க்காதீங்கனு சொல்லிட்டீங்க.. சரி.

    உலை என்பதற்கு பொருள் தெரியாமலே இத்தனை நாள் உபயோகித்துக் கொண்டிருந்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  7. இந்தத் தலைப்பில் க்ளூ இருக்கிறது! எப்படியாவது தப்பிக்க வேண்'டும்' - 'இறுதிப் பகுதி'!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!