26.11.25

காந்தாரா படத்தின் கதை புரிந்ததா?

 

கேள்வி பதில்கள் : 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

வியாசர் எழுதிய மூல மகாபாரதம்

வில்லிபுத்தூரார் எழுதிய வில்லி பாரதம்

ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து - மகாபாரதம்

சோ எழுதிய மகா பாரதம்

பாலகுமாரன் எழுதிய மகாபாரதம்

ஜெயமோகன் எழுதிய வெண்முரசு - மகாபாரதம்

இவற்றில் எதையெல்லாம் படித்திருக்கிறீர்கள்? உங்களைக் கவர்ந்தது எது?

# முதலிரண்டு மட்டுமே படித்திருக்கிறேன்.  இரண்டுமே சிறப்பானவை என்று நினைக்கிறேன்.  ராஜாஜி சுருக்கம் தெளிவு என்பதால் பிடிக்கும்.  சோ விளக்கம் பிடிக்கும்.

& முழுவதுமாக நான் படித்தது ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து - மகாபாரதம் மட்டுமே. எனக்குப் பிடித்திருந்தது. 

கலங்கரை விளக்கம்' படத்தில் 'பொன்னெழில் பூத்தது புது வானில்....' பாடலில் 'தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு... ' என்று ஒரு வரி வருகிறதே? தென்னை வனம் என்பது சரியா? தென்னந்தோப்பு என்பதுதானே சரி?

# புலவர்களுக்கு இதில் எல்லாம் பூரண சுதந்திரம் உண்டு.

நெல்லைத்தமிழன் : 

1. சமீபத்தில் காந்தாரா-பார்ட் 1 தியேட்டரில் பார்த்தேன். எனக்கு படம் சுத்தமாகப் புரியவில்லை, பிரம்மாண்டமான, செலவழித்து எடுக்கப்பட்ட காட்சிகள் தவிர. ஆனால் இந்தப் படம் ஐந்து மடங்குக்கு மேல் சம்பாதித்திருக்கிறது.  ஒரு வேளை எனக்குத்தான் கதை புரியவில்லையா?   

# நான் பார்க்கவில்லை.  கதை என்ன என்று செ.நு சொல்லாதோ ?

& காந்தாரா டீஸர், டிரைலர் எதுவுமே என்னைக் கவரவில்லை. அந்தக் காலத்தில் ' உங்கள் அபிமான தியேட்டர்களில், உங்கள் அபிமான டைரக்டர் B விட்டலாச்சார்யா அளிக்கும், உங்கள் அபிமான நடிகர் காந்தா ராவ் ( + கவர்ச்சி நடிகை நடித்த ) என்று வந்த பல படங்கள் என்னைக் கவர்ந்தன ! 

2. சமீபத்தில் தியேட்டருக்குப் போய் படம் பார்த்த, அல்லது படம் பார்த்து நொந்துபோன அனுபவம் ப்ளீஸ்   

# தியேட்டரில் பார்த்தது பொன்னியின் செல்வன்-1. கல்கி மேலிருக்கும் அபிமானம் காரணமாகப் பிடித்திருந்தது.  நம்ம ரா.கி எழுதியது நன்றாகப் போகிறது என்ற சந்தோஷம்.‌

3.  பிடிகருணை என்று சொல்லப்படும் கருணைக்கிழங்கை உபயோகித்து ஏதாவது வித்தியாசமான செய்முறை இருக்கிறதா? - உடனே எல்லோரும் சொல்வதுபோல சேனைக்கிழங்கை, கருணைக் கிழங்கு என்று சொல்லிக் கடுப்பேத்தாதீர்கள்   

# பிடிகருணை புளிக்குழம்பு, சுட்ட கறி, மசியல் மட்டும் தெரியும், மசியல் பிடிக்கும். 

4. சிறு கிழங்கு உபயோகித்திருக்கிறீர்களா? அது கேரளாவில் மாத்திரமே விளைகிறது என்று நினைக்கிறேன்   

# சிறு கிழங்கு மேட்டுப்பாளையத்தில் பார்த்திருக்கிறேன். சாப்பிட்ட நினைவில்லை.‌

5. புத்தகம் படிக்கும் வழக்கம் எதனால் குறைந்துவிட்டது? எல்லா தரப்பு மக்களும்-வீட்டு உதவியாளர், செக்யூரிட்டியிலிருந்து பெரிய வேலையில் இருப்பவர்கள் வரை, யூடியூப், செய்திகள் என்று மொபைலிலேயே காலம் தள்ளுகிறார்களே. 

# காசு கொடுத்து வாங்காமல் யாரோ சுவாரசியமாக எழுதியதை இலவசமாகப் படிக்கும் வசதியும் பொழுது போக்க சினிமா நாடகம் இலவசமாகப் பார்க்கும் வசதியும் கைக்கெட்டி இருக்கும் இந்தக் காலத்தில், புத்தகங்களும் பத்திரிகைகளும் விலை போகாததில் வியப்பில்லை. புத்தகங்களுக்கு இப்போது எல்லாம் அநியாய விலை வைத்து விற்கிறார்கள். அதற்கான நியாயங்கள் உண்டு என்றாலும் அதிக விலை கொடுத்து புத்தகம் வாங்குவதற்கு ஒரு தயக்கம் ஏற்படுவதும் உண்மை. வாழ்க்கையை நடத்தத் தேவையான பணத்தைச் சம்பாதிக்கும் வழிகள் போன்ற ஜீவனோபாயங்களைப் பற்றி புத்தகம் வாங்கித் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இல்லை. இப்படி இருக்கும் போது புத்தகம் படிக்கும் வழக்கம் எப்படி தொடர்ந்து பலமாக இருக்கும் ? இந்தக் காரணங்களினால் நல்ல இலக்கியத்தரமான படைப்புகளை தேடிப் படிக்கும் வழக்கம் குறைந்து வருகிறது, விரைவில் அழிந்தும் போய்விடலாம் யார் கண்டது ?

கே. சக்ரபாணி சென்னை 28:

1. யாரேனும்  நம்பத்தகாததை  சொன்னால்  அல்வா கொடுக்கறான் பாரு  என்போம். அதேபோல்  பார்லிமென்ட்டில் பட்ஜட்  தாக்கல் செய்யும் முன்  அல்வா  கிண்டுவது  என்ற பழக்கம்  ஒன்று  உள்ளது.  இது எப்படி  வந்தது? 

# ஏதோ ஒரு சினிமாவில் பெண்ணை மகிழ்வித்து ஏமாற்ற மல்லிகைப்பூ அல்வா வாங்கிச் செல்வதாக காட்சி இருந்தது....அது போலத்தான் இதுவோ?

&  மத்திய நிதி அமைச்சகத்தில் (Finance Ministry) பட்ஜெட் தயாரிப்பு காலம் மிகக் கடினமானது. நாளும் இரவும் கணக்குகள், கணிப்புகள், திருத்தங்கள், மந்திரிகளோடு பேச்சுவார்த்தைகள்…இதெல்லாம் நடக்கும். பட்ஜெட் காலத்தில் அதில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பட்ஜெட் விவரங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படவேண்டும் என்பதால் நிதி அமைச்சக அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது.  

இந்த அழுத்தமான வேளையில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் மன அழுத்தத்தைக் குறைக்க, அலுவலகத்தில் இனிப்புகள், குறிப்பாக அல்வா, லட்டு போன்றவை செய்து கொடுக்கப்படும்.

2.  முன்பெல்லாம். நான்வெஜ்  ஹோட்டலை. மில்டரி ஹோட்டல் என்பார்கள்.  நான்வெஜ்க்கும். மில்டரிக்கும்என்ன  சம்பந்தம்? 

# மிலிட்டரிக்காரர்கள் பலமாக இருக்க நல்ல அசைவ உணவு முக்கியம் என்ற கருத்தின் அடிப்படையில் இப்படி போர்டு எழுதினார்கள்.  இப்போதும் கூட எல்லா சைவர்களும் சாக பட்சிணிகள் அல்லவே..

= = = = = = = == = =

படமும் பதமும் :

நெல்லைத்தமிழன் :


வடக்கே கோதுமை வயல்கள் அதிகம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த வயல்களில் அல்லது வீட்டின் அருகாமையில் மேலே இருக்கும் குடிசை போன்று அழகிய அமைப்பைப் பார்த்தேன். வயலுக்கு உரமாக சாணியைச் சேகரித்து அதன் மீது மழை கரைத்துவிடாமல் இத்தகைய குடிசை போன்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.


சிறிது சிதைந்திருந்த அத்தகைய பகுதியில் சாணிக்கரைசல் தெரிந்தது.


மாடுகளுக்கான தீவனப்புற்களையும் இப்படிப்பட்ட அமைப்பில் சேகரித்துவைத்திருந்தார்கள். எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள். 


= = = = = = = = = = = 

KGG பக்கம். 

ஒரு வார்த்தை சொல்லிடுங்க - அப்புறம் நான் பார்த்துக்கறேன். 

சுமார் அறுபது வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வு. சின்ன அண்ணனுக்கு தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலமாக கிளார்க் வேலை கிடைத்தது. அண்ணன் தன்னுடைய நண்பர்கள் எல்லோருக்கும் தனக்கு வேலை கிடைத்த விஷயத்தை சொல்லி மிகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டார். 

அண்ணனின் நண்பன் ஒருவனின் அப்பா விஷயம் கேள்விப்பட்டவுடன், நேரே எங்கள் வீட்டிற்கு வந்து என் அப்பாவிடம், வேலை எப்படி கிடைத்தது, என்ன பரிட்சை போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். 

என் அப்பா அவரிடம் பல விவரங்களைக் கூறி, த நா ப ச கமிஷனில் ஏற்கெனவே வேலையில் இருந்த என் ஒன்று விட்ட அண்ணன் ஒருவரைப் பற்றியும் கூறினார். 

அவ்வளவுதான், நண்பனின் அப்பா இந்த விவரத்தை கெட்டியாகப்  பிடித்துக் கொண்டுவிட்டார். " அடேடே அவர் ரெகமண்ட் செய்தால் டைப் ரைட்டிங் & ஷார்ட் ஹேண்ட் பாஸ் செய்துள்ள என் பையனுக்கு அரசாங்கத்தில் ஏதாவது டெம்பரரி போஸ்ட் கிடைக்குமா? " என்று கேட்டார். 

என் அப்பா அவரிடம், " கவர்ன்மெண்ட் வேலை கிடைக்க அந்த அலுவலகம் மூலம் வேலை கிடைக்கவேண்டும் என்றால் த நா ப ச கமிஷன் பரிட்சை எழுதி பாஸ் செய்யாவிட்டால், வேலை கிடைக்க வாய்ப்பு இல்லை." என்று கூறினார். 

" சார் - வேலை கிடைக்க பணம் கிணம் கொடுக்க வேண்டும் என்றாலும் நான் தயார் " என்றார். 

அதற்கு என் அப்பா அவரிடம், " அப்படி எல்லாம் பணம் கொடுத்து வேலை வாங்க முடியுமா என்று எங்களுக்குத் தெரியாது. அப்படி இருந்தாலும், அதற்கு இது இடம் இல்லை. இருந்தாலும் நீங்கள் வேண்டுமானால் பையனை விட்டு, விவரங்களுடன் ஒரு விண்ணப்பம் எழுதி த நா ப ச அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துப் பாருங்கள்" என்றார். 

அவர் விடுவதாக இல்லை. " சார் - நீங்க சொன்ன அந்தப் பையனிடம், வேகன்ஸி ஏதாவது வந்தால், உடனடியாக உங்களுக்குத் தகவல் அனுப்பச் சொல்லுங்கள். நீங்க என்னிடம் உடனடியாக அதை சொல்லுங்கள். நான் உடனடியாக விண்ணப்பம் எழுதி அனுப்பிவிடுகிறேன்" என்றார். 

" நீங்க விண்ணப்பம் முதலில் அந்த அலுவலகத்திற்கு அனுப்பி வைங்க"

" வேகன்ஸி இருந்தா உடனே எனக்குத் தகவல் சொல்லுங்க. உடனே விண்ணப்பம் அனுப்பிடறேன். "

" நீங்க விண்ணப்பம் .. ditto ditto .."

" வேகன்ஸி இருந்தா உடனே ..   ..   ditto .. ditto " 

இந்த உரையாடல் ஒரு வாரத்திற்கு ஒருமுறையாவது அடிக்கடி நிகழ்ந்துகொண்டு இருந்தது. 

எனக்குத் தெரிந்து அந்த நண்பன் விண்ணப்பமும் அனுப்பவில்லை, அவனுடைய அப்பா எதிர்பார்த்தபடி வேகன்ஸி எதுவும் வந்ததாக தகவலும் இல்லை. 

என் அலுவலக நாட்களில், இதே போன்ற விடாக்கண்டன் கொடாக்கண்டன் கதை ஒன்று நடந்தது. 

அது பற்றி அடுத்த வாரம் எழுதுகிறேன். 

= = = = = = = = = = = = = =

3 கருத்துகள்:

  1. வேலைக்கு விண்ணப்பம் அனுப்புவது, அரசு வேலைகளுக்கோ இல்லை வங்கி வேலைகளுக்கோ என்ன செய்யவேண்டும், எந்த எந்தப் புத்தகங்களைப் படிக்க வேண்டும், ஐஏஎஸ் தேர்வுனா என்ன... இது போன்ற வாழ்க்கைக்கான கல்விமுறை நம்மிடம் இல்லை. பஞ்சர் ஒட்டுவது, காரை பழுது பார்ப்பது, வீட்டுக்கான அடிப்படை எலக்டிரிகல், ப்ளம்பிங் வேலைகள் எனுபயோகமானவற்றை இந்தக் கல்வி கற்றுத்தருவதில்லை. மாங்கு மாங்கென்று, பெர்மாங்கனேட் கரைசல், கந்தக அமிலம் என கெமிஸ்ட்ரி Lலேபில் ஜல்லியடித்து, வெர்னியர் காலிப்பர், சூரிய ஒளியில் ஏழு நிறம் என்றெல்லாம் இயற்பியல் சோதனைக்கூடத்தில் மாங்கு மாங்கெனக் கற்றுக்கொண்டவையால் தொண்ணூற்றைந்து சத மாணவர்களுக்கு நேரம் விரயமாவதுதான் மிச்சம்.

    பதிலளிநீக்கு
  2. இதிஹாசங்களில்்சுருக்கமாக, எல்லோருக்கும் புரியும்படி இராஜாஜி அவர்கள் எழுதிய இராமாயணம், மஹாபாரதம் இரண்டும் பிடித்தமானது.

    எதுவுமே ஆயிரக்கணக்கான பக்கங்கள் இருந்தால் நீர்த்துவிடும், வள வள தவலைக்காட்சி சீரியல்கள் போல

    பதிலளிநீக்கு
  3. தென்னந் தோப்பு என்பதற்கான அர்த்தம் வேறு. தோப்பில் பல மரங்களும் இருக்கலாம். அதாவது தென்னந்தோப்பில் மா, பலா கொய்யா மரங்கள் இருந்தாலும் அதிகமாக தென்னை இருந்தால் தென்னந்தோப்பு என்று சொல்லலாம்.

    இலக்கியத்தில் தென்னஞ்சோலை என்றே குறிப்பிடுவர். (மாஞ்சோலைக் கிளிதானோ மான் தானோ பாடல் நினைவுக்கு வருதா?)

    காடு போல அளவுக்கதிகமான தென்னை மரங்கள் மாத்திரம் இருந்தால் தென்னை வனம் என்று சொல்வது சரிதான். புன்னை வனம், கொன்றை வனம் என்ற சொற்களும் வழக்கத்தில் உண்டு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!