புனைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.6.11

பிற்பகல்


முக்கியமான மீட்டிங் என்று எம் டி அறைக்கும் என் அறைக்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தேன். நடுவில் என் அறை வாசலில் ஒரு பெரியவரும் ஓர் இளைஞனும் காத்திருப்பதைப் பார்த்தேன். என்ன என்று கேள்வி கேட்கக் கூட நேரம் இல்லை. பி ஏ வை அழைத்து அவ்வப்போது விவரங்கள் சொல்வதும் விவரங்கள் கேட்பதுமாக இருந்த போது அவரே காத்திருப்பவர்களைப் பற்றி சொன்னார். அந்த இளைஞனுக்கு என்னால் ஒரு முக்கியமான காரியம் ஆக வேண்டியிருந்தது. என் கையெழுத்துக்காக காத்திருக்கிறான் என்று தெரிந்தது.
எம் டி ரூம் அல்லாடல், டென்ஷன் குறைந்ததும், அவர்களை உள்ளே வரச் சொன்னேன். என்ன உதவி வேண்டும் என்று கேட்டேன். சொன்னான்.

இந்த மாதிரி உதவிகள் என்னால் தினசரி செய்யப் படுபவை. என் அலுவலக விவகாரம் என்றில்லை. என்னுடைய பல்வேறு அறிமுகங்களைக் கொண்டு என்னால் முடிந்த உதவிகளை யார் எப்போது கேட்டாலும் செய்து வருவது வழக்கம்.
உடன் வந்த பெரியவரை எங்கோ பார்த்த ஞாபகம் லேசாக வந்தது. அவர் என்னைப் பாராட்டி புகழ்ந்து பேசத் தொடங்கினார். உங்களைப் போன்றவர்களால்தான் மழை பொழிகிறது... உண்மையான மனிதர்.... இப்படி அலங்கார வார்த்தைகள்... அவர் பேசுவதை சைகை காட்டி நிறுத்தி விட்டு அவரைப் பற்றி விசாரித்தேன். அரசு அலுவலகம் ஒன்றிலிருந்து ஓய்வு பெற்றதாகச் சொன்னார். எங்கு என்று கேட்டபோது அவ்வாறு சொன்ன ஊர் மற்றும் அலுவலகம் பெயர் கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். என் தந்தை வேலை பார்த்து ஓய்வு பெற்ற அதே இடம். அவர் பெயரைக் கேட்டதும் நினைவு அடுக்குகளில் அதிர்வு ஏற்பட்டது.
ஆச்சர்யம்! இதே போன்ற ஒரு சூழ் நிலையில் இவரை நான் இவர் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறேன். என் தந்தை மீது நல்ல அபிப்ராயம் இல்லாதவர். என் தந்தை மீது இவருக்கு லேசான பகையுணர்ச்சி கூட அப்போது இருந்தது என்று அப்பா சொல்லியிருந்தார். அந்த அலுவலகத்தில் பணி புரியும் பணியாளர்கள் சிலரது பெயர்களில் எல் ஐ சி பாலிசி எடுக்கப் பட்டு அதற்கு சம்பளச் சான்றிதழ் போன்ற விவரங்களுக்கு இவரது கையொப்பம் தேவையாய் இருந்தது.
அப்பா என்னுடன் வந்திருந்தும், இவர்தான் பொறுப்பு என்று அறிந்ததும் அவர் வேறு ஓர் அறையில் அமர்ந்து கொண்டு என்னை மட்டும் கையொப்பம் பெற அனுப்பியிருந்தார். அப்போதைய அவரின் ஸ்டெனோதான் அப்பாவுக்கும் அவர் ஓய்வு பெறும் முன்பு ஸ்டெனோ. அவர் என்னை இன்னார் என்று அறிமுகப் படுத்தி கையொப்பம் இடச் சொல்லி வேண்டுகோள் விடுத்த போது இவர் அந்த பேப்பர்களை கொத்தாகத் தூக்கி பக்கத்து இருக்கையில் போட்டார், பிறகு என்னைப் பார்த்தார்.
"உங்கப்பாவால எவ்வளவு கஷ்டம் தெரியுமா எனக்கு... எனக்கு வேலை தெரியாது என்று என் மேலதிகாரி உங்கப்பாவை வைத்துக் கொண்டே என்னை எவ்வளவு திட்டுவார் தெரியுமா...? என்று தொடங்கி நிதானமாக பேசத் தொடங்கி, கடைசியில், கையொப்பம் போட மாட்டேன் என்று மறுத்தார். ஸ்டெனோ என்னை பரிதாபமாகப் பார்த்தார். நான் கிளம்பவும் விடவில்லை அவர். நெடு நேரம் பேசிய பிறகே விட்டார். ஆனால், கையொப்பமும் இடவில்லை. 'அப்பா செய்ததற்கு நான் என்ன செய்ய, இது என் வருமானம் சம்பந்தப் பட்ட விஷயம்... இதில் வரும் வருமானம் என் வேலையை நிரந்தரமாக்க உதவும்' என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் நிர்த்தாட்சண்யமாக மறுத்த அந்த நாள் இப்போது என் மனதில் நிழலாடியது.
டேபிளில் இருந்த பொருட்களை சீர் செய்த வண்ணம் சிந்தனையில் ஆழ்ந்து விட்ட என்னை, பெரியவரின் குரல் நினைவுக்குக் கொண்டு வந்தது.

"சார்....என்ன சார் அமைதி ஆயிட்டீங்க.... எதாவது தப்பா பேசிட்டேனா..."

"இந்த மாதிரி புகழ்ந்து பேசறது நான் விரும்பாத ஒண்ணு... வேலை ஆக வேண்டிய இடத்துல புகழ்ந்து பேசறதுக்கு என்ன காரணம்னு உங்களுக்கும் தெரியும்.."

அது தம்பி,,,, ஸாரி சார்... தம்பின்னு கூப்பிட்டதுக்கு மன்னிச்சுடுங்க..."

"பரவாயில்லை...உங்கள் ஆபீசிலிருந்துதான் என் அப்பாவும் ஓய்வு பெற்றார். என்னை அடையாளம் தெரியுதா... நாம கூட சந்திச்சிருக்கோம்..."

'தெரியும் சார்... தெரியும் தம்பி... ஞாபகம் இருக்கு.. தியாகராஜன் சொன்னார்..."

"தியாகராஜன்?"

"ஸ்டெனோவா இருந்தாரே... என்னுடைய இந்த நிலைமையைப் பார்த்துட்டு அவர்தான் உங்களைப் பற்றிச் சொல்லி அனுப்பினார்"

"ஓ..."

இப்போது என் மனதில் கையொப்பமிடும் ஆர்வமோ உதவி செய்யும் எண்ணமோ இல்லை. டேபிள் வெயிட்டை உருட்டிய படி யோசித்துக் கொண்டிருந்தேன்.
"தம்பி...நீங்க எல்லோருக்கும் உதவி செய்யறவர்னு இங்க எல்லோருமே சொன்னாங்க... நான் தான் இவனை இங்கே அழைத்து வந்தேன். நான் செய்தது தப்புன்னு இப்போ புரியுது... அதை மனசுல வச்சிருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்..."

"எப்படிச் சொல்றீங்க.."

"இத்தனை வருஷம் ஆச்சு...உங்களுக்கும் உங்க அப்பாவைப் போலவே மனசு.... எதையும் மனசுல வச்சிக்க மாட்டீங்க..."

"அதனால..."

"உங்கள் நிலைமைல அப்போ எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி இப்போ இதுவும் எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கே தெரியும்... மறுக்க மாட்டீங்கன்னு நம்பிக்கைதான்... நான்தான் என் தப்பை ஒத்துகிட்டேனே..."

இப்போது தேவை என்றதும் தப்பு என்று படுகிறதோ... என்று தோன்றியது. கேட்கவில்லை.

எம் டி இன்டர்காமில் அழைத்தார். மனப் போராட்டங்களை அலச நேரம் கிடைத்ததால் விடுதலை பெற்றது போல உணர்ந்தேன். எழுந்தேன். அவரை நாளை வரச் சொல்லி விடை கொடுத்து விட்டு எம் டி அறை நோக்கிச் சென்றேன்.

(நாளை அவர் வருவாரா? வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்? நீங்க சொல்லுங்க!)

17.6.11

பிளேடு

                              
எலெக்ட்ரிக் ட்ரெயினில் ஏறியதிலிருந்தே வழக்கம் போல கச கச என்று நெரிந்த கூட்டம் லேசான கடுப்பையும் எச்சரிக்கை உணர்வையும் தந்தது. சாதாரணமாக பத்தரை மணிக்கு மேல் கூட்டம் இருக்காது என்று பெயர். பதினொன்றரை மணிக்கு இந்தக் கூட்டம் அதிருப்தியைத் தந்தது.
                 
 
என்ன செய்ய எங்களைப் போலவே எல்லோருக்கும் ஏதோ வேலை...!

மனைவி உள்ளே சென்று உட்கார்ந்திருந்தவர்கள் பக்கத்தில் ஓரமாக நின்று கொள்ள, பிக் ஷாப்பரை காலிடுக்கில் வைத்துக் கொண்டேன். பையில் பணம் பத்திரமாக இருக்கிறதா என்று செக் செய்து, இடுப்பில் செல் இருக்கிறதா என்றும் பார்த்துக் கொண்டேன். கூட்டம் இருந்தாலே தானாக அவ்வப்போது நிகழும் அனிச்சைச் செயல்கள்.

"திருட்டு முழி முழிச்சிகிட்டு பைய பைய தொட்டு பார்த்துக்காதீங்கோ...அப்போதான் பிளேடு போடறவனுக்கு உங்க மேல சந்தேகமே வரும்...." மனைவியின் குரல் மனதில் ஒலித்தது.
     
"ஆமாம்...என் பையில் ஆயிர ஆயிரமா பணம் வச்சிருக்கேன்...என்னைத்தான் தேடுவான் பாரு..."

"அதைத்தான் நானும் சொல்றேன்...ஒண்ணும் இல்லாத பைன்னு தெரிஞ்சு பிளேடால பையை இன்னும் ரெண்டு கீறு கீறிட்டுப் போவான்...மார்புல விழுப்புண்ணோட வரலாம்...!

நான் செக் செய்வதை யாராவது கவனிக்கிறார்களா என்று என்னை அறியாமல் பார்த்துக் கொண்டேன்!
 
இருவர் என்னை கவனித்துக் கொண்டிருப்பது போலப் பட்டது. ஓரக் கண்ணால் சட்டைப் பையைப் பார்த்துக் கொண்டேன். பணம் உள்ளே கொத்தாக இருந்தது. இப்போதெல்லாம் தவறாமல் எடுத்துச் செல்லும் கைக்கு அடக்கமான கோடக் கேமிரா இருந்தது. பேனா சற்றே வெளியில் தெரியும் படி எனக்கும் என் மனைவிக்குமான   டிக்கெட் உள்ளே தளளி விட்டுக் கொண்டேன்.

சாதாரணமாக டிக்கெட்டைக் கையிலேயே வைத்திருப்பது வழக்கம். பைக்குள் வைத்து விட்டால் செக்கிங் வந்தால் அவசரத்தில் எடுக்கும்போது பணமோ வேறு ஏதாவது முக்கிய பேப்பரோ வெளியில் வந்து விழுந்து விடும் என்ற பயம். பஸ்ஸில் போனாலும் பத்திரமாக டிக்கெட்டைக் கையில் வைத்திருந்து விட்டு பஸ்ஸை விட்டு இறங்கி வெகு தூரம் வந்த பிறகு கவனமாக தூக்கிப் போடுவேன். ஒரு முறை பழைய பிட் பேப்பரை தூக்கிப் போடுவதை நினைத்து டிக்கெட்டைத் தூக்கி வெளியில் போட்டு விட்டு பட்ட அவஸ்தை ஞாபகத்துக்கு வரும்.

அடுத்த ஸ்டேஷனில் இன்னும் கூட்டம் ஏறியது, நெருக்கியது. இறங்குபவர்களுக்கு வழி விட்டு, பிச்சைக்காரர்கள், வியாபாரிகள் வழியை மறைக்காமல் இருக்கையின் ஓரத்தில் சாய்ந்தவாறு நின்று இடத்தை பாதுகாத்துக் கொண்டேன். காலுடனேயே பிக் ஷாப்பரை அழுத்தி இடுக்கிக் கொண்டேன். அருகில் இருந்தவர் முறைத்தார்.

"அதை எடுத்து மேலே வைப்பா....நிற்கவே இடமில்லை..!"

நான் லட்சியம் செய்யவில்லை. தூரத்தில் அமர்ந்திருந்த (ஓரத்தில் ஒட்டி உட்கார இருக்கை கிடைத்துவிட்ட) மனைவியைப் பார்த்தேன். அவளிடம் இரண்டு காய்கறிப் பைகள் இருந்தன. அவசரமாக 'அந்த' இருவரைத் தேடினேன். இறங்கியிருப்பார்களோ...? எதிரில் ஒருவனும் அருகில் ஒருவனும் நின்றிருந்தார்கள்.

மறுபடி என்னை அறியாமல் செல் பெளச்சையும் பாண்ட் பாக்கெட்டையும் தொட்டுக் கொண்டு 'பிக் ஷாப்ப'ரை நோட்டமிட்டுக் கொண்டேன். உள்ளுணர்வு இன்று பிளேடு நிச்சயம் என்றது.
   
பிக் ஷாப்பரில் அசைவு தெரிந்தது. சட்டென பார்த்தேன். கதவுக்கருகில் அமர்ந்திருந்த ஒரு பெண், பிக் ஷாப்பரின் வாயை சரியாக மூடி நிமிர்த்தி வைத்து என்னைப் பார்த்து சிரித்தாள். சந்தேகத்துடன் பார்த்தேன்.

"ஒரு கயிறு இருந்தா கட்டிடு நைனா..  விழாது... "

கயிறுக்கு எங்கே போக...லேசாய்ப் புன்னகைத்து விட்டு திரும்பிக் கொண்டேன். கூட்டம் நெரிய,

'ம்ஹூம்..ஆட்டோவில் போயிருக்கலாம்...'

அடுத்தடுத்த ஸ்டேஷன்களிலும் கூட்டம் ஏறியது. இறங்கியதோ கொஞ்சம்தான். இன்னும் மூன்று ஸ்டேஷன்கள் இருக்கின்றன, நாங்கள் இறங்க...
  
ஒரு வழியாய் அடுத்த ஸ்டேஷனும் தாண்ட இவர்கள் இருவரும் என்னை நெருங்கி நின்ற படி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஸ்டேஷனில் வண்டி நின்றது. என்னை இடித்துக் கொண்டு தாண்டிச் சென்று ஒருவன் இறங்கினான். செல் பௌச்சை இறுகப் பற்றியபடி பிக் ஷாப்பரையும் கையால் பற்றிக் கொண்டேன். கவனம் சட்டைப் பையில் இருந்தது. ட்ரெயின் கிளம்பியது. இருவரும் சேர்ந்து டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட் கொடுப்பது தெரிந்தது. ஒருவன் டிரைன் கடக்கும் போது, என்னைப் புன்னகையுடன் பார்த்து, சலாம் வைத்தான். சந்தேகத்துடன் சட்டைப் பையைப் பார்த்தேன். பணம் இருந்தது. கேமிரா இருந்தது... பேனா இருந்தது.... ஆனால் ...

டிக்கெட்டைக் காணோம்...

பெட்டியில் டிடிஇ வருகிறாரா என்று நோட்டமிட ஆரம்பித்தேன். அடுத்த ஸ்டேஷனில் இறங்கும்போது படிக் கட்டுக்கருகில் அல்லது நடைமேடையில் டிக்கெட் பரிசோதகரை எப்படி சமாளிப்பது என்று யோசனையில் ஆழ்ந்தேன்.