நகரின் மத்தியில், பரபரப்பான சாலையில் பெரிய வளாகத்துக்குள் அமைந்த அலுவலகம்!
அதில் மூன்றாவது மாடியில் எங்கள் அலுவலகம். பெரிய ஹா........லில்
கணக்கிலடங்கா நாற்காலி, மேஜைகளுக்கிடையே தேடினால் தலையலைகளுக்கு நடுவில்
நாங்கள் கிடைப்போம்.
ஒரு வழக்கமான வேலைநாளில்...
எதிரே யாரோ நிற்பது போன்ற உணர்வினால் நிமிர்ந்தான் சிவா.
"யாரு?"
"நீங்க.. நானு..." கையில் ஒரு துணிப்பையுடன் நின்றிருந்தவன் தயங்கித் தடுமாறினான்!
"சொல்லுங்க.. என்னைப் பார்க்கவா வந்தீங்க. ? நான் உங்களைப் பார்த்த ஞாபகம் இல்லையே...."
"என் பேரு தண்டபாணி சார்."
"சரி.... இருக்கட்டும்....என்ன வேணும் உங்களுக்கு? உங்க பில் ஏதாவது பெண்டிங்கா?"
"பில்'லா.. இல்லை சார். வந்து.... நான்..." தயங்கி சுற்றுமுற்றும் பார்த்தான், வந்தவன்.
லேசாகப் பொறுமையிழந்த சிவா, "என்ன வேணும், யாரைப் பார்க்க வந்தீங்கன்னு 'சட்'டுன்னு சொல்லுங்க மிஸ்டர் தண்டாயுதபாணி"
"தண்டபாணி சார்..... உங்களை... உங்களைத்தான் சார் பார்க்கணும்... இல்லை கேட்கணும்..."
"வெளியூர் பிரான்ச்சா?"
"இல்லை சார்....நான் இந்த ஆபீசே இல்லை.."
"பின்ன? டைம் வேஸ்ட் செய்யாமச் சொல்லுங்க தண்டாயுதபாணி" என்றான் மிஸ்டரைக் கைவிட்டு.
"தண்டபாணி சார்.... இந்தப் பக்கமா வந்தேன்... பார்த்தா நீங்கதான் நல்லவரா
தெரியறீங்க.... ஒரு நூற்றைம்பது ரூபாய் இருந்தாக் கொடுங்க சார்..... ஊர்
போய் மணியார்டர் செஞ்சிடறேன்.... உங்க அட்ரசும் எழுதிக் கொடுங்க சார்.....
என் பணம் மொத்தமும் தொலைஞ்சு போச்சு..... ஊர் போகக் கூடக் காசில்லை.."
"எந்திரிய்யா... எந்திரிய்யாங்கறேன்.... என்னன்னு நினைச்சீங்க என்னை... இவ்வளவு பெரிய சிட்டியில, இந்த பில்டிங் தேடி வந்து, மூணு மாடி ஏறி, இத்தனை டேபிள், இத்தனை நாற்காலி, இத்தனை பேரைக் கஷ்டப்பட்டுத் தாண்டி வந்து என் கிட்டத்தான் கேக்கணுமா? என்னை இளிச்சவாய்னு நினைச்சியா..."
சிவா ஏன் இப்படிக் கத்துகிறான் என்று நாங்கள் நான்கைந்து பேர் அவன் பக்கத்தில் நெருங்கினோம். 'தண்டபாணி' எப்போதோ ஓடி விட்டிருந்தான்.
"நூற்றைம்பது ரூபாய் கேக்கறான்.... நூற்றைம்பது ரூபாய்.....எவனோ வேணும்னே அனுப்பியிருக்கான்..." இன்னமும் கத்திக் கொண்டிருந்த சிவாவை ஆசுவாசப்படுத்தி கீழே அழைத்து வந்தோம்.
வழக்கமான டீக்கடைக்குச் சென்று சூடான வடை எடுத்துக் கடித்தவாறு, டீ ஆர்டர் செய்துவிட்டு, சிவா பக்கம் திரும்பி, அவன் இவ்வளவு உணர்ச்சி வசப்படும் அளவு என்ன நடந்தது என்று கேட்டோம். இன்று நடந்த சம்பவம் வேடிக்கையாக இருந்தாலும் சிவா உணர்ச்சிவசப்பட்டது சற்று அதிகப்படியாகத் தெரிந்தது. அதனால் காரணம் கேட்டோம்.
"நான் வேலைக்கு சேர்ந்த புதிது....."
சூடான வடையைப் பேப்பரில் வைத்து அமுக்கி, அமுக்கி எண்ணெய் எடுத்தபடியே சிவா சொல்லத் தொடங்கினான்.
"அது ஒரு சின்ன ஊர். வேலை முடிந்து கொஞ்சம் லேட்டாக ஒருநாள் திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு சின்ன பாலம் போல வரும். பெரும்பாலும் ஆள் நடமாட்டமில்லாத ஊர் அது. அந்தப் பாலத்தைத் தாண்டும் நேரம் ஒரு குரல் கொஞ்சம் சத்தமாகவே கேட்டது.
"முப்பதும் முப்பதும் எவ்வளவு?"
"அறுபது" பக்கத்தில் யாருமேயில்லாததாலும் ஏதோ என்னிடமே கேட்டது போலவும் இருந்ததால், என்னையும் அறியாமல் நான் பதில் சொன்னேன்.
"அறுபதும் அறுபதும்?"
"நூற்றி இருபது"
"நூற்றி இருபதும் நூற்றி இருபதும்?"
"இருநூற்று நாற்பது" விளையாட்டு போலவே உற்சாகமாகிச் சொன்னேன்.
"இருநூற்று நாற்பதுல தொண்ணூறு போனா?"
"நூற்றைம்பது" என் உற்சாகமான பதில்!
பாலத்துக்கடியிலிருந்து இரண்டு பேர் வெளிவந்தார்கள்.
"எடு நூற்றைம்பது ரூபாய்..."
"எதற்கு?"
" நீதானே சொன்னே?"
"நீங்க கேட்டதால்தானே சொன்னேன்?"
"நாங்க கேட்டா சொல்லிடணுமா" இது ஒருவன். "இப்பவும் நாங்கதாண்டா கேட்கறோம்... எடுக்கறியா இல்லை இன்னும் கணக்குப் போடறியா?" அவன் கையில் ஒரு கத்தி தெரிந்தது.
எடுத்துக் கொடுத்து விட்டு வந்து விட்டேன். சின்ன வயசுலேயே ஒரு
நூற்றைம்பது ரூபாய் மேட்டர்ல எனக்கும் என் சித்தப்பாவுக்கும் ஒரு மிஸ் -
அண்டர்ஸ்டேண்டிங் நடந்தது ஞாபகம் வந்தது" சிவா கொஞ்சம் இடைவெளி விட்டான். வடையை முடித்து சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான்.
"இதுக்காடா இவ்வளவு கோபம்"
ஒரு ஊது ஊதி விட்டு சிவா தொடர்ந்தான்.
"அப்புறம் மதுரைல இருக்கறப்போ பஸ் ஸ்டேன்ட் பக்கத்துல சிங்கப்பூர்க் குடைன்னு வித்துகிட்டு இருந்தான். எதை எடுத்தாலும் 75 ரூபாய்னு சொல்லி வித்துகிட்டு இருந்தான். கொஞ்ச
நேரம் வியாபாரத்தைப் பார்த்துகிட்டு இருந்தேன். அதுல ஏதோ ஃபிராடு
இருக்கறா மாதிரி பட்டது. அவன் அடிக்கடி என்னை என்ன வேண்டும்னு கேட்டும்
பேசாமப் பார்த்துகிட்டிருந்தேன். கொஞ்ச நேரத்துல ரெண்டு மூணு பேர் என்னைச் சுத்தி
நின்னுட்டாங்க.... லேசா பயம் வந்து ஒரு குடையை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன்....
"நல்ல குடை சார்.. எடுங்க... ஸ்பெஷலு.. " என்றான் ஒரு தடியன். "நூற்றைம்பது ரூபாய்" என்றான் இன்னொரு தடியன்.
"75 ரூவாத்தானே சொன்னீங்க" என்றேன். இப்போது கடையில் கஸ்டமராக நான் மட்டும்தான் இருந்தேன்.
"அது வேற... இது 150 ரூபாய்" என்றான் அவன்.
"இது சரியில்லை.... கம்பி வேற மடங்கியிருக்கு.... வேற காட்டுங்க... 75 ரூவாலயே காட்டுங்க" என்றேன்.
"பிரிச்சுப் பார்த்து உடைச்சுபுட்டு வேற கேக்கறியா.... இதை நீதான் எடுக்கணும். எடு 150 ரூபாய்" என்றார்கள் அடாவடியாய்.
எவ்வளவோ வாதாடிப் பார்த்தேன். மூன்று தடியன்களை மீறி எதுவும் பேச
முடியவில்லை. 150 ரூபாய் கொடுத்து விட்டு வெறுப்புடன் கிளம்பினேன். குடையை
என்னிடம் நீட்டினார்கள். லட்சியம் செய்யாமல் நடந்து கொஞ்ச தூரம் சென்று விட்டு, அப்புறம் 'ரூபாயையும் கொடுத்து விட்டு சும்மா ஏன் போகணும்' என்ற ஒரு எண்ணத்தில் திரும்பி வந்து குடையைக் கேட்டேன். 'அதான் கொடுத்துட்டோமே' என்றார்கள். அங்கிருந்த ஒருவர்
'அவர் வாங்காம இல்லை போனார்?' என்று சொல்ல, அவரை உற்றுப் பார்த்தவர்கள்
எனக்கு அருகிலிருந்த குப்பைத் தொட்டியைக் கை காட்டினார்கள். அங்கு ஒரு குடை
கிடந்தது. நான் பார்த்த குடை மாதிரி வேறு தெரியவில்லை. இந்த சமயம்
எனக்காகப் பேசினவர் பக்கத்துல அதே 3 தடியன்களும் நின்றிருந்தார்கள்.
அடுத்து என்ன நடக்கும் என்று தெரியும் என்பதால் குடையையும் எடுக்காமல் பேசாமல்
வந்து விட்டேன். இதுதான் என்னை ரொம்பவே கடுப்பேத்தின இன்னொரு150 ரூபாய்
மேட்டர்..... இன்னிக்கி அவன் இவ்வளவு பேரையும் தாண்டி, வந்து என்கிட்டே வந்து கேட்டது மட்டுமில்லை, குறிப்பாய் 150 ரூபாய் என்று கேட்டதும் இது ஞாபகம் வந்து 'குபீர்'னு பத்திகிட்டு வந்திடுச்சி"
சிகரெட் முடித்து, டீயைக் குடித்தபடியே சிவா சொல்லி முடிக்க, கடைக்காரரிடம் 'கணக்கில் எழுதிக் கொள்ள'ச் சொல்லி விட்டு சிவாவை ஆசுவாசப் படுத்தி, அவனுடன் உள்ளே ஸீட்டுக்குச் சென்றோம்!
படங்கள் : நன்றி இணையம்
முடிவில் சிவா அவர்கள் "எவ்வளவு ஆச்சி" என்று கடைக்காரரிடம் கேட்க... "150 ரூபாய்" என்று சொல்ல... பிறகு.........
பதிலளிநீக்குஇப்படி ஏதும் ஆகவில்லையே...
இப்ப நீங்க சொல்லுங்க
பதிலளிநீக்குமுப்பதும் முப்பதும் எவ்வளவு
முப்பதும் முப்பதும் அறுபது. இது தெரியாமயா பதிவு எழுத வந்திருக்கேன்? உங்க வேலையை வேறு யாராச்சும் கிட்ட காட்டுங்க.
பதிலளிநீக்குஅட சிவராமா!!!!
பதிலளிநீக்குரொம்பப் பாவம்:(
நூற்று ஐம்பது ரூபாய் உங்களை விடாது போல இருக்கே! நல்ல அனுபவம்தான்
பதிலளிநீக்கு// மேஜைகளுக்கிடையே தேடினால் தலையலைகளுக்கு நடுவில் நாங்கள் கிடைப்போம். //
பதிலளிநீக்கு''டேய் பசங்களா ! உழைச்சு சம்பாதிக்கற காசுதாண்டா நிக்கும். நீங்க இப்படி வேலையே செய்யாம சம்பாதிச்சா
அத இன்னொருத்தன் உங்ககிட்டேந்து பிடிங்கிண்டு ஓடிப்போயிடுவான்டா.... ""
அப்படின்னு பல பேருட்ட அந்தக்காலத்துலே சொல்லிருக்கேன்.
நமக்கு ஒட்டறது தான் ஒட்டும், மத்தது எல்லாமே ஓடிப்போயிடும். நம்மகிட்டேந்து பிடிங்கனவன் செஞ்சது நியாயமா? அப்படின்னு
கேட்கறதுக்கு முன்னாடி, நம்ம சம்பாதிச்சது நியாயமா இருந்ததா அப்படின்னு கேட்கறதுக்கு ஒரு குரல் உள்ளேந்து வரணும்.
பரியினும் ஆகாவாம் பாலல்ல
உய்த்துச் சொரியினும் போகா தம. ( ஊழ்..376)
இது ஒருபக்கம் இருக்கட்டும்.
இல்லாத வியாதிக்கு டாக்டர் அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் அப்படின்னு சொல்லி காசு புடுங்கறான்.
நடக்காத கேசுக்கு வக்கீல் ஃபீஸ் வாங்குறான்.
போடாத ரோடுக்கு கான்ட்ரக்டர் காஸு வாங்கரான்.
ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீ அப்படின்னு பெரிய பெரிய கடைலே ஏமாத்தரான்.
ரியல் எஸ்டேட்டைப் பத்தி சொல்லவே வேண்டாம். அப்படி ஒரு ஏமாத்து வேலை.
அவுக மட்டும் உண்மை சொல்றாகளா என்ன ?
பாவம் !! வந்தவன். !!
நம்மகிட்டேந்து காசு புடுங்கறவன் ஆயிரம் பேர் இருந்திருக்கான். இருக்கான்.
இவனும் ஒத்தனா இருந்துட்டுபோகட்டுமே.
உலகத்துலே ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவனும் இருக்கத்தான் செய்வான்.
சிவ சிவா ! நாராயணா !!
ஹரே க்ருஷ்ணா !! எங்கேடா இருக்கே !!
ஒரு சக்கரத்தை மேலே அனுப்பிச்சு சூரியனை மறையவச்சு,
அந்திப்பொழுது வந்துடுத்து அப்படின்னு ஏமாத்தினையேடா !!
நீ வந்து சொல்லேண்டா !!
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
ஸோ ஸாரி !!
பதிலளிநீக்குதலையலைகளுக்கு என்பதை தவறிப்போய் தலையணைகளுக்கு நடுவே என்று படித்துவிட்டேன்.
அதனால் தான் அந்த பின்னூட்டம்.
சிவா !!
சிவன் தந்த சோதனை இது.
சிவனே என்று இராமல்,
சீறிட்டு எழுந்தீர்கள் பாருங்கள்.
இருந்தாலும்,
சோதனைக்கு பின்னே ஒரு நல்லதும் நடக்கும்.
சூடான வடை உங்களுக்கு காபியுடன் கிடைத்திருக்கிறது.
உங்கள் ஆஃபீஸ் எங்கே இருக்கிறது ?
மூணாவது மாடியா ? லிஃப்ட் இருக்கா ?
சுப்பு தாத்தா.
உங்களுக்கு 150- ரூவா அனுபவம் போல எனக்கு பாஞ்சு ரூவா அனுபவம் வேடிக்கையாக நடந்தது.ஹிந்தில பாஞ்சுன்னா ஐந்து, அதுவே தமில்ல பத்னைந்து அதில் மாட்டிகிட்டேன்/
பதிலளிநீக்கு//"எடு நூற்றைம்பது ரூபாய்..."//
பதிலளிநீக்கு//150 ரூபாய் கொடுத்து விட்டு வெறுப்புடன் கிளம்பினேன்//
அடாடா அப்போவே தெரிஞ்சிருந்தா 'நூத்தி அம்பத்தொன்னு'னு கேட்ருக்கலாமே !
அட! இப்படியெல்லாம் நடக்குதா! உஷாராத்தான் இருக்கணும் போல!
பதிலளிநீக்குநல்ல அனுபவம்!
பதிலளிநீக்குவாழ்க்கையில் எப்படி எப்படி எல்லாம் கற்கிறோம்.
பாவம் சிவா!
நல்ல சிறுகதை! அல்லது உண்மையான நிகழ்வா?
பதிலளிநீக்குபொய் சொல்லாம சொல்லுங்க.எங்கள் புளொக் ஆசியர்கள் யாரோ பட்ட அனுபவம்தானே !
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஹா.....ஹா..... அப்படி எதுவும் ஆகவில்லை DD!
ஹிஹி..... முப்பதும் முப்பதுமா? இருங்க....கால்குலேட்டர் எடுத்து வறேன் மோகன் குமார்.....
மோகன் குமார் உங்கள் கேள்விக்கு கந்தசாமி சார் பதில் சொல்லிட்டாரே.... நன்றி சார்!
நன்றி வல்லிசிம்ஹன்.
நன்றி TN MURALIDHARAN
நன்றி சுப்பு தாத்தா.... தவறாகப் புரிந்து கொண்டாலும் சுவாரஸ்யப் பின்னூட்டம் ஒன்று கிடைத்ததே... முதலில் இதற்கு வைத்த தலைப்பு 'ஊழ்'! இது பழைய அனுபவம்!
நன்றி மாதவன்.
நன்றி 'தளிர்' சுரேஷ்.
நன்றி ரஞ்சனி மேடம்....
நன்றி மனோ மேடம். பழைய சம்பவத்தில் கற்பனை கலந்து....!
நன்றி ஹேமா... ஆசிரியர்களுக்குத் தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்களின் அனுபவத்தைக் கேட்டு மானே தேனே எல்லாம் கலந்து பாட்டாப் பாடிட்டோம்! :))
கடைக்காரரிடம் 'கணக்கில் எழுதிக் கொள்ள'ச் சொல்லி விட்டு, "இது வரை கணக்கிலே எவ்வளவு ஆயிருக்கு, தண்டபாணி?" (கடைக்காரர் பெயரும் தண்டபாணி)
பதிலளிநீக்கு"பாஞ்சு தேதிக்கே கணக்கு கேக்கீறீங்களே, சாரே!"
"சும்மாத் தெரிஞ்சிக்கத்தான்.சொல்லு."
அவன் நோட்டுப் புத்தகம் எடுத்து 'எங்கள்' பக்கம் புரட்டி, "ஒரு பதினைஞ்சு, அப்புறம் இருபது, அப்பாலே பதினைஞ்சு, அப்பாலே அஞ்சு இருபது.. ஆக, நூத்தம்பது சார்!"
"என்ன நூத்தம்பதா!" என்று திகைப்புடன் திரும்பி சிவாவைப் பார்த்தா, பயல் எப்போதோ நழுவியிருந்தான்.
அவனிடம் இந்த நூத்தம்பது கதையைச் சொல்ல விரைந்தோம்!
(திண்டுக்கல் தனபாலன் சார்! இந்த பின்னூட்டத்தை தட்டச்சி விட்டுப் பார்த்தப்போது தான், நீங்களும் முதல் பின்னூட்டமாக இதையே சொல்லியிருப்பதைப் பார்த்தேன்.
ஆக, கதையைப் படிச்ச ஜோர்லே ஒரே மாதிரி நாம் இரண்டு பேரும் நினைச்சிருக்கோம், பாருங்க...)
எங்கோ எப்போதோ விட்ட 150 ரூபாய் இப்படித் துரத்துகிறதே.
பதிலளிநீக்குஎண்ண எண்ண கசக்குது, ஏதேதோ நினைக்குது வண்ண வண்ண தோற்றங்கள் நூற்று ஐம்பது ரூபாய்!
பதிலளிநீக்கு//தலையலைகளுக்கு என்பதை தவறிப்போய் தலையணைகளுக்கு நடுவே என்று படித்துவிட்டேன். //
பதிலளிநீக்குநானும்!! பிறகு, அப்படியே ஆப்பீஸில் தலையணை போட்டு படுத்தாலும், ஓப்பனா வாக்குமூலம் கொடுப்பாங்களான்னு, திருப்பி... ஐ மீன், மறுபடி வாசிச்சதால, தப்பிச்சீங்க!! :-)))
//முடிவில் சிவா அவர்கள் "எவ்வளவு ஆச்சி" என்று கடைக்காரரிடம் கேட்க... "150 ரூபாய்" என்று சொல்ல... //
கடைக்காரரையும் அடிக்கப்போன சிவாவை நாங்கள் பிடிக்க... இப்படித்தான் “கதை” முடியும்னு நானும் நினைச்சேன்.. இப்ப நான் தப்பிச்சுட்டேன்!! :-))))