புதன், 28 நவம்பர், 2012

'நல்ல' பாம்பு!

               
உங்கள் வீட்டுக்கு பாம்பு வந்திருக்கோ.... எங்கள் வீட்டுக்கு இன்று நாகராஜன் திக்(திக்) விஜயம். வெளியில் வேலையாய் இருந்த எனக்கு வீட்டிலிருந்து பதற்ற அழைப்பு வந்து ஓடினேன்.
   
எங்கள் ஏரியாவில் பாம்பு சகஜம். தெருவில். வீட்டுக்குள் அல்ல!

                                              
நண்பர் நாகராஜன் மோட்டார் ரூமுக்குள் தஞ்சம் அல்லது குடி புகுந்திருந்தார். (ஆசை, தோசை, வீட்டுக்குளேயே வந்திருக்கும் என்று பார்த்தீர்களா!)
                   
பாம்பை வீதில பார்த்திருக்கேன், புதர்ல பார்த்திருக்கேன், ஏன்,புத்துல கூடப் பார்த்திருக்கேன்... ஆனா வீட்டுக்குள்ளயே வந்து (இதுவரை சிங்கம் சூர்யா ஸ்டைலில் படிக்கவும்) இப்போதான் பார்க்கறேன்!


2, 3 பேர் கூடி நின்று கையை உதறிக் கொண்டிருந்தால் போதாதா? மெல்ல மெல்ல ஆர்வக் கூட்டம் அதிகமானது. அது வெளியில் வர இருக்கும் ஒரே வழியையும் மக்கள் கூட்டம் அடைத்து நிற்பது ஆபத்து என்பது புரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. வழக்கம் போல மோட்டார் ரூமுக்குள் ஏகப்பட்ட அடைசல்கள்.


ஆளாளுக்கு ஒரு ஐடியா எடுத்து விட்டுக் கொண்டிருந்தார்கள். இளங்கன்றுகள் தடிகளையும் குச்சிகளையும், ஸ்டம்புகளையும் உள்ள விட்டு ஆட்டியபடி செல்போனிலும் படமெடுக்க வசதியாக ஒரு கையில் ஃபோனை ஒரு கையிலும் வைத்துக் கொண்டு சத்தப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.
                                                       
ஒருவர் முனால் இருந்த பழைய சிமென்ட் மூட்டை, வெயிட்டான இரும்புத் தட்டு (எதற்கு இருந்தது என்றே தெரியாமல் இருந்ததை) எல்லாவற்றையும் வேகமாக எடுத்து வெளியில் எறிந்தார். "ஏய்...பார்த்து.. எங்கள் மேல் எறியறியே" என்ற கூச்சலும் இன்னும் என்னென்னமோ கமெண்ட்களுமாக அந்த இடமே சந்தை போல இருந்தது. இன்னொருவர் தைரியமாக அந்தக் குறுகலான இடத்துக்குள் நுழைந்து பார்த்து விட்டு "உள்ளே இல்லை சார்" என்று வெளியில் வந்தார்.

"அட, உள்ள நான் பார்த்தேன்... என்ன இல்லைங்கறீங்க?" என்று என் மனைவி சண்டைக்குப் போக, "hit ஸ்ப்ரே இருக்கிறதா" என்று கேட்டேன்.


இல்லை. பக்கத்துக்கடையில் ஓடிப் போய்க் கேட்டால் அங்கும் இல்லை.


சொல்ல மறந்து விட்டேனே... பாம்பார் யு டர்ன் அடித்து வீட்டுக்குள் வராமலிருக்க கடையிலிருந்து ஒரு கிலோ கல் உப்பு, மஞ்சள் பொடி வாங்கி வந்து வீட்டுக்குள் வரும் படி முழுதும் தூவி வைத்தோம்.


செக்யூரிட்டி மெல்ல, எப்போது ஜகா வாங்கினார் என்பது தெரியாமல் காணாமல் போயிருந்தார்! மற்றவர்களை அமைதிப் படுத்தி சற்றுத் தள்ளி இருக்கச் செய்தேன். சாம்பிராணி கப்  3 எடுத்து மூன்றையும் கொளுத்தி மோட்டார் ரூமுக்குள் வொயர் இல்லாத இடமாகப் பார்த்து வெவ்வேறு இடங்களில் போட்டேன். கொஞ்சம் கொஞ்சமாகப் புகை பரவ, இரண்டு மூன்று முறை தலையை மட்டும் வெளியே நீட்டிய பாம்பார், ஆட்களைக் கண்டு மிரண்டு மறுபடி உள்ளே ஓடுவதாக இருக்க, எல்லோரையும் கொஞ்சம் தொலைவுக்குப் போகச் செய்து அமைதியான (கையில் வீடியோ எடுக்க வசதியாக செல்ஃபோனுடன் மாடிப் படி மறைவில்) இன்னுமொரு 15 நிமிடக் காத்திருப்புக்குப் பின் வெளியில் வந்து சுவரோரமாகவே விரைந்து ஓடி மறைந்தார்!
 

'உள்ளே பாம்பே இல்லை' என்றவரை அழைத்து எடுத்த வீடியோவைக் காட்டியபோது பூட்சைக் கழற்றி விட்டு பார்க்க வந்தது சிரிப்பு.
               
'சாரைப்பாம்பைக் கண்டால் வளைந்து வளைந்து ஓடு, நல்ல பாம்பைக் கண்டால் நேராக ஓடு என்பார்கள். சாரைப்பாம்பு ரொம்ப நெளியாமல் ஓரளவு  நேராகவே விரைந்து செல்லும், நல்ல பாம்பு நெளிந்து நெளிந்துதான் செல்லும் சாம்பிராணி வாசனை அடித்தால் ஒரு நாகம், புழுங்கல் வாசனை அடித்தால் ஒரு நாகம் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியும்' என்றெல்லாம் தகவல் தந்தார் அவர்.

             
இடையிலேயே நெட் திறந்து பாம்பைப் பிடிக்க யாரைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்றெல்லாம் ஆராய்ந்தோம். பாம்பு இப்போது வெளியில் போனாலும் அது இந்த இடத்தைப் பார்த்து விட்டால் அப்புறம் அதே இடத்துக்கு வந்து கொண்டேயிருக்கும் என்று ஒருவர் அள்ளி விட்டார்!

             
ஆக, திக்விஜய நாகராஜா நல்ல பாம்பாகத்தான் இருக்க வேண்டும். இதுவரை யாரையும் கடிக்கவில்லையே! அப்புறம் ரொம்ப நேரம் இந்தச் சம்பவம் பற்றிப் பரபரப்பாகப் பேசிக் கொண்டே இருந்தார்கள். சொல்வதற்கு எல்லோரிடமும் ஒரு பாம்புக் கதை இருந்தது!


               

28 கருத்துகள்:

  1. அட நாகராஜன் உங்க வீட்டுக்கு வந்தாரா.... சொல்லவே இல்லை :) அதான் இப்ப சொல்லிட்டேனேன்னு சொல்லப்படாது!

    நெய்வேலியில் நிறைய பாம்பு அனுபவங்கள்... கையால் பிடித்த கதையெல்லாம் இங்கே சொன்னால் அடித்து விடுவார்கள்.... :)

    பதிலளிநீக்கு
  2. அட? நம்ம சுப்புக்குட்டி தானா! அதுக்கா இவ்வளவு அலட்டல். நாங்கல்லாம் குடித்தனமே பண்ணி இருக்கோம். அம்பத்தூர் வீட்டில் தினம் பத்து முறை வந்து நலம் விசாரிப்பார். வீட்டுக்குள் படுக்கை அறை, சமையலறை, குளியலறைனு அவருக்கு எங்கே பிடிச்சதோ அங்கே வந்துடுவார். நமக்குக்கையால் பிடிக்கப் போன அனுபவங்கள் எல்லாமும் உண்டு. சர்வ சகஜம்.

    இதுக்குப் போயி......................

    நான் என்னமோ கரப்போனு நினைச்சுட்டேன்.

    பதிலளிநீக்கு
  3. //நெய்வேலியில் நிறைய பாம்பு அனுபவங்கள்... கையால் பிடித்த கதையெல்லாம் இங்கே சொன்னால் அடித்து விடுவார்கள்.... :) //

    @ Venkat Nagraj
    Needless to say sir.. Ur (half)name already reflects full.

    பதிலளிநீக்கு
  4. அட... சர்வ சாதாரண விஷயம்... ஜூஜூபி... (அந்த இடத்திலேயே இருப்பதில்லை)

    பதிலளிநீக்கு
  5. அடடா !! பாம்பு வீட்டுக்குள் வந்ததா ? !!
    வாசல் வழியாகவா ?
    வீட்டு வாசல் எந்த திக்கைப்பார்த்து இருக்கிறது ?
    ராகு கேது டிசம்பர் 2 ந்தேதி தான் பெயர்ச்சி.
    ஆனால் அதற்குள்ளெ வந்துட்டாரா ?

    மேஷ ராசிக்காராளும் துலா ராசிக்காரருமே கொஞ்சம் பரிஹாரம் பண்ணிக்கணும்
    துலாத்திலே ஆல்ரெடி சனி உச்சனா வேற இருக்கு. அதோட ராகு சேரப்போறான்.
    கன்யா ராசிக்காராருக்கு ராகு 2 ல் வருது.
    மேஷத்துக்கு 7 லே சனி. ஆல்ரெடி கண்டச்சனி, அதோட ராகு சம்பந்தம்.

    அவாவா பக்கத்திலே இருக்கிற நவக்ருஹ கோவில்லே போய் ஹோமத்திலே பங்கு எடுத்துக்கோங்க.
    அது சரி.. பாம்பை பிடிச்சாச்சா ?
    என்னது பிடிக்கலையா ?
    உமக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையா அப்படின்னு கேட்கலை.
    பாம்பு காட் ஆர் நாட் காட். அதைச் சொல்லுங்கோ

    காட் அப்படின்னு சொல்றேளா !
    எதுக்கும் ஒரு ப்ரச்னம் பாத்துடறேன்.
    அவாவா கொஞ்சம் தக்ஷிணை எடுத்துண்டு ப்ரசன்னமாகுங்கோ ..

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  6. உங்க வீட்டுக்கு வந்த பாம்பு படத்தை போடுங்க

    பதிலளிநீக்கு
  7. படம் எடுக்கறவரை எடுத்த படத்தைக் கொஞ்சம் பயந்துட்டேதான் பார்த்தேன் :-)

    பதிலளிநீக்கு
  8. எனக்குத் தெரியாமப் போச்சுங்களே? தெரிஞ்சிருந்தா நானும் வந்து வேடிக்கை பார்த்திருப்பேனுங்களே?

    பதிலளிநீக்கு
  9. ‘நல்ல’ கதை. த்ரில்லர் மூவி. வளைந்து நெளிந்து ஓடுபவரை தைரியமாகப் படமாக்கியிருப்பதற்குப் பாராட்டுகள். ஆம், எல்லோரிடம் கண்டிப்பா உண்டு பாம்புக் கதை:)!

    பதிலளிநீக்கு
  10. //சொல்வதற்கு எல்லோரிடமும் ஒரு பாம்புக் கதை இருந்தது! //

    பல கதைகள் இருக்கும் உண்மைதான் !

    பதிலளிநீக்கு
  11. என்ன சார் கடைசியா பாம்பை பிடிச்சி அடிக்கவே இல்லையா? ஏமாதிடீங்க....

    பதிலளிநீக்கு
  12. பாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பா!!!!

    இந்த சமயத்திலும் படம் எடுத்து எங்களுடன் பகிர்ந்திருக்கிறீர்களே....தைரியசாலி தான் சார் நீங்க...:))

    பதிலளிநீக்கு
  13. //பாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பா!!!!//
    ரிப்பீட்டு!!

    அதைவிட பயம்தருவது, அதைப் பிடிக்காமல் போக விட்டுட்டீங்களே? அடுத்து யார் வீட்டில் நுழைந்து பயம்காட்டுமோ!! நல்லவேளை நான் மெட்ராஸில் (பெங்களூர்?) இல்லை!!

    //வீட்டுக்குள் வராமலிருக்க .. ஒரு கிலோ கல் உப்பு, மஞ்சள் பொடி வாங்கி வந்து வீட்டுக்குள் வரும் படி முழுதும் தூவி வைத்தோம்//

    அப்படியா? புது சேதி!! (ஆமா, பின்வாசல் அல்லது ஜன்னல், வெண்டிலேட்டர் வழியாவெல்லாம் பாம்பு வராதா?)

    //நான் என்னமோ கரப்போனு நினைச்சுட்டேன்.//
    @கீதா மேடம்!! :-))))

    பதிலளிநீக்கு
  14. குரோம்பேட்டை குறும்பன்29 நவம்பர், 2012 அன்று PM 1:28

    "பம்பு" ரூமுக்குள் "பாம்பு"!
    சரிதான். பாம்புக்கு கால் கிடையாதுதான்!

    பதிலளிநீக்கு
  15. பாம்பென்றால் படையும் நடுங்கும்தானே? பாம்புகள் உடலிலிருந்து ஒருவித சுரப்பு அது செல்லுமிடத்திலெல்லாம் படருமாம் அந்த வாசனையை வைத்தே மற்ற பாம்புகள் நம்ப நண்பன் சென்றுள்ள இடம் ஏதோ உணவு கிடைக்கும் போலன்னு வருமாம் இதுதான் பாம்பை அடித்தாலும் பழிவாங்க வரும்னு நாம நினைக்கும் நிகழ்வுக்குக் காரணம் Wildlife biology professor ஒருவர் ஒரு நிகழ்வில் தெரிவித்த செய்தி

    பதிலளிநீக்கு
  16. இதுக்கெல்லாம் பயந்தா....எதுக்கு உப்பு,மஞ்சள் ?

    சுப்பு தாத்தா......!

    பதிலளிநீக்கு
  17. ஐயோ பாம்பா? எனக்கு பல்லியை கண்டாலே பயம். பதிவை படிக்கும்போதே எனக்கு பக்கு பக்குன்னு அடிச்சுண்டுது.

    //பாம்பு இப்போது வெளியில் போனாலும் அது இந்த இடத்தைப் பார்த்து விட்டால் அப்புறம் அதே இடத்துக்கு வந்து கொண்டேயிருக்கும் என்று ஒருவர் அள்ளி விட்டார்! //
    யம்மா! வேடிக்கை பாக்க வரவங்க ஏதோ வந்தோமா, பாத்தோமான்னு போக வேண்டியதுதானே. போற போக்குல இப்படி எதாவது கொளுத்தி வேற போட்டுட்டு போகணுமா.

    கீதா மேடம் உங்க படம் ஒண்ணை பெரிய சைஸ்ல எடுத்து பதிவுல போடுங்க. நான் அதை பிரிண்ட் எடுத்து வீட்ல மாட்டி வெச்சுக்கறேன். எனக்கும் கொஞ்சம் தைரியமா இருக்கும். ஒரு வேலை பாம்பார் வந்தா படத்தை பாத்துட்டு 'ஓ இது இவங்க வீடுதானான்னு' பேசாம போய்டும். :))

    பதிலளிநீக்கு
  18. இத்தனை பேரு நான் வூட்டுக்குள்ளே வந்தேன் அப்படின்னு நினைச்சுக்கினு
    கமென்ட் போட்டிருக்காக...

    அவங்க சொன்னத பொய்யாக்க கூடாதில்ல....

    நாளைன்னிக்கு மத்தியான்னம் வரல்லாம் அப்படின்னு இருக்கேன். நேரா வாசல் வழியா...

    ஆவின் பாலு அரை லிட்டர் வாங்கி வச்சுருங்க...

    இப்படிக்கு,
    நல்ல பாம்பு.

    பதிலளிநீக்கு
  19. இந்த நல்ல்ல்லல்ல்ல்ல பாம்பு மெட்ராஸ் பாஷை பேசறது, ஆவின் பால்தான் கேக்கறது. அதானால இது இங்க எல்லாம் வராது. ஐய்யா! ஜாலி! :)

    பதிலளிநீக்கு
  20. //"பம்பு" ரூமுக்குள் "பாம்பு"! //

    ஹாஹா....இது சூப்பர் தலைப்பு!!!!!

    நம்ம வீட்டுலேயும் பாம்புக்கு பயந்த ஒரு ஜீவன் இருக்கார்.

    எங்கிட்டேயும் ஒரு பாம்புக்கதை உண்டு:-))))

    பதிலளிநீக்கு
  21. எங்கள் ப்ளாக்30 நவம்பர், 2012 அன்று AM 5:51


    * நன்றி வெங்கட் நாகராஜ்.

    //கையால் பிடித்த கதையெல்லாம் இங்கே சொன்னால் அடித்து விடுவார்கள்.... :)//

    பாம்பைத்தானே?! :))

    * நன்றி middleclassmadhavi.

    * நன்றி கீதா சாம்பசிவம்... சுப்புக்குட்டி என்பது இதுதானா? நான் பூனை என்று நினைத்துக் கொண்டிருந்தேன்! கடைசி வரி 'பன்ச்' ..... உ.பு.சி.!

    * நன்றி மாதவன்.... நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க...!

    * நன்றி DD.

    * நன்றி சுப்பு தாத்தா... //உமக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையா அப்படின்னு கேட்கலை.
    பாம்பு காட் ஆர் நாட் காட். அதைச் சொல்லுங்கோ // ஹிஹிஹிஹிஹி.....!

    * நன்றி ஜெ ஜெ ... கீழே வீடியோ பார்க்கவில்லை என்று தெரிகிறது!!!

    * நன்றி அமைதிச்சாரல்... //படம் எடுக்கறவரை எடுத்த படத்தை// great.

    * நன்றி கந்தசாமி சார்... இதுக்காக கோவைலேருந்து இவ்வளவு தூரம் அலைய வைக்க வேணாமுன்னுதான்....!

    * நன்றி ராமலக்ஷ்மி. எல்லோரும் முன்னாலேயே பகிர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!

    * நன்றி கலாகுமரன்.

    * நன்றி சமீரா.. அடிக்க எங்கே இடம்? வெளியே ஓட இடம் விட்டால் போதும் அது வெளியே போனால் போதும் என்று ஆகிவிட்டது!

    * நன்றி கோவை2தில்லி. நல்ல பத்திரமான இடத்திலிருந்துதான் படம் எடுக்கப் பட்டது. மேலும் நிஜமாகவே எங்கள் ஏரியாவில் நிறைய சுப்புகுட்டிகள் (நன்றி கீதா மேடம்!) இருப்பதால் பழகி விட்டது!

    * நன்றி ஹுஸைனம்மா... அடிக்க வசதியான இடமாயில்லை. அதான்.... நீங்கள் சொன்ன மற்ற வாயில்கள் வழியாகவும் வர வாய்ப்பிருக்கு! :))

    * நன்றி குகு.... பதிவு போடும் முன்னாடியே இந்த கமெண்ட் போட்டிருந்தால் அந்தத் தலைப்பையே வச்சிருக்கலாமே..! ஹிஹிஹி.....

    * நன்றி எழில்... கூடுதல் தகவல்களுக்கும் நன்றி.

    * நன்றி மோகன் குமார்.

    * நன்றி ஹேமா.. கல் உப்பில் அது ஊர்ந்தால் உடம்பு கிழித்து காயமாகும். மஞ்சளுக்கு பூச்சிகளை விரட்டும் குணம் உண்டு. சிலர் காரப் பொடியையும் சேர்த்துத் தூவுவார்கள்! காயத்தில் பட்டால் எரியுமாம்! இங்கும் ஐடியா சொன்னார்கள் 'எதற்கு? அது பிடிக்கும் தவளையை பதமான சூட்டில் பம்பு ரூமில் வாட்டி, இதில் தடவி சாப்பிடுமா' என்று கேட்டு, காரப் பொடி மசாலாப் பொடி தூவவில்லை! :)))

    * நன்றி மீனாக்ஷி...

    * நன்றி நல்ல பாம்பு!

    * நன்றி துளசி கோபால்...

    கடைசியாக, சென்னையில் பாம்பு வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய ஃபோன் நம்பர் என்று ஒன்று கிடைத்தது. அது.... 044 - 22200335.

    பதிலளிநீக்கு
  22. பாம்பு வந்த கதை சிரிப்பு திகில்னா(ஹைய்யோ. காலெல்லாம் புல்லரிக்கறது)

    கமெண்ட்ஸ் இன்னும் சிரிப்பாக இருக்கு.
    நேற்று செக் அப்பில் வைத்தியர் மிரட்டினவேகத்தில் அடங்கியிருந்த மனம் கலகலப்பாகிவிட்டது.

    கு.கு தலைப்பு பிரமாதாம். வீராவாலிகள் துளசிக்கும் கீதாவுக்கும் ஜேஜே.

    பின்கதவைச் சாத்தியே வைக்கவும்.
    ஏன்யா பயப் படுத்தறீங்க. வந்த இடத்துக்கு திரும்ப வருமா.:(
    @ வெங்கட் உங்கள் நல்ல அனுபவங்களைச் சொல்லவும்.:)

    பதிலளிநீக்கு
  23. //(இதுவரை சிங்கம் சூர்யா ஸ்டைலில் படிக்கவும்)// இப்ப தான் அந்த பீல் வந்தது...

    பாம்பை பம்பு (மோட்டார் பம்பு) பக்கத்தில் வைத்துக் கொண்டு உமக்கு வீடியோ கேட்கிறதா...
    சமயோசித புத்தி சார் உங்களுக்கு...
    சாம்ப்ராணி போட்டு எல்லாரும் பெரிய அபிசார பிடிப்பாங்க
    நீங்க சாம்ப்ராணி போட்டு ஒரு அப்பிரானிய(!) தொரத்தி விற்றுகீங்க


    எல்லோரிடமும் ஒரு பாம்புக் கதை இருந்தது! // சுவாரசியம் சார் ...

    பதிலளிநீக்கு
  24. பாம்புடன் போட்ட டீல்!

    இன்று எனது பக்கத்தில்.... முடிந்த போது பாருங்க! :)

    பதிலளிநீக்கு
  25. நல்ல பாம்பை ஏன் அடிக்கக்கூடாது

    பதிலளிநீக்கு
  26. @Pras Anna

    அடிக்கலாமே... ஏன் அடிக்கக் கூடாது? ஆனால் அது கடிக்குமுன் அடித்து விடவேண்டும் !!!!!

    :)))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!