சாரைப் பாம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாரைப் பாம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28.11.12

'நல்ல' பாம்பு!

               
உங்கள் வீட்டுக்கு பாம்பு வந்திருக்கோ.... எங்கள் வீட்டுக்கு இன்று நாகராஜன் திக்(திக்) விஜயம். வெளியில் வேலையாய் இருந்த எனக்கு வீட்டிலிருந்து பதற்ற அழைப்பு வந்து ஓடினேன்.
   
எங்கள் ஏரியாவில் பாம்பு சகஜம். தெருவில். வீட்டுக்குள் அல்ல!

                                              
நண்பர் நாகராஜன் மோட்டார் ரூமுக்குள் தஞ்சம் அல்லது குடி புகுந்திருந்தார். (ஆசை, தோசை, வீட்டுக்குளேயே வந்திருக்கும் என்று பார்த்தீர்களா!)
                   
பாம்பை வீதில பார்த்திருக்கேன், புதர்ல பார்த்திருக்கேன், ஏன்,புத்துல கூடப் பார்த்திருக்கேன்... ஆனா வீட்டுக்குள்ளயே வந்து (இதுவரை சிங்கம் சூர்யா ஸ்டைலில் படிக்கவும்) இப்போதான் பார்க்கறேன்!


2, 3 பேர் கூடி நின்று கையை உதறிக் கொண்டிருந்தால் போதாதா? மெல்ல மெல்ல ஆர்வக் கூட்டம் அதிகமானது. அது வெளியில் வர இருக்கும் ஒரே வழியையும் மக்கள் கூட்டம் அடைத்து நிற்பது ஆபத்து என்பது புரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. வழக்கம் போல மோட்டார் ரூமுக்குள் ஏகப்பட்ட அடைசல்கள்.


ஆளாளுக்கு ஒரு ஐடியா எடுத்து விட்டுக் கொண்டிருந்தார்கள். இளங்கன்றுகள் தடிகளையும் குச்சிகளையும், ஸ்டம்புகளையும் உள்ள விட்டு ஆட்டியபடி செல்போனிலும் படமெடுக்க வசதியாக ஒரு கையில் ஃபோனை ஒரு கையிலும் வைத்துக் கொண்டு சத்தப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.
                                                       
ஒருவர் முனால் இருந்த பழைய சிமென்ட் மூட்டை, வெயிட்டான இரும்புத் தட்டு (எதற்கு இருந்தது என்றே தெரியாமல் இருந்ததை) எல்லாவற்றையும் வேகமாக எடுத்து வெளியில் எறிந்தார். "ஏய்...பார்த்து.. எங்கள் மேல் எறியறியே" என்ற கூச்சலும் இன்னும் என்னென்னமோ கமெண்ட்களுமாக அந்த இடமே சந்தை போல இருந்தது. இன்னொருவர் தைரியமாக அந்தக் குறுகலான இடத்துக்குள் நுழைந்து பார்த்து விட்டு "உள்ளே இல்லை சார்" என்று வெளியில் வந்தார்.

"அட, உள்ள நான் பார்த்தேன்... என்ன இல்லைங்கறீங்க?" என்று என் மனைவி சண்டைக்குப் போக, "hit ஸ்ப்ரே இருக்கிறதா" என்று கேட்டேன்.


இல்லை. பக்கத்துக்கடையில் ஓடிப் போய்க் கேட்டால் அங்கும் இல்லை.


சொல்ல மறந்து விட்டேனே... பாம்பார் யு டர்ன் அடித்து வீட்டுக்குள் வராமலிருக்க கடையிலிருந்து ஒரு கிலோ கல் உப்பு, மஞ்சள் பொடி வாங்கி வந்து வீட்டுக்குள் வரும் படி முழுதும் தூவி வைத்தோம்.


செக்யூரிட்டி மெல்ல, எப்போது ஜகா வாங்கினார் என்பது தெரியாமல் காணாமல் போயிருந்தார்! மற்றவர்களை அமைதிப் படுத்தி சற்றுத் தள்ளி இருக்கச் செய்தேன். சாம்பிராணி கப்  3 எடுத்து மூன்றையும் கொளுத்தி மோட்டார் ரூமுக்குள் வொயர் இல்லாத இடமாகப் பார்த்து வெவ்வேறு இடங்களில் போட்டேன். கொஞ்சம் கொஞ்சமாகப் புகை பரவ, இரண்டு மூன்று முறை தலையை மட்டும் வெளியே நீட்டிய பாம்பார், ஆட்களைக் கண்டு மிரண்டு மறுபடி உள்ளே ஓடுவதாக இருக்க, எல்லோரையும் கொஞ்சம் தொலைவுக்குப் போகச் செய்து அமைதியான (கையில் வீடியோ எடுக்க வசதியாக செல்ஃபோனுடன் மாடிப் படி மறைவில்) இன்னுமொரு 15 நிமிடக் காத்திருப்புக்குப் பின் வெளியில் வந்து சுவரோரமாகவே விரைந்து ஓடி மறைந்தார்!
 

'உள்ளே பாம்பே இல்லை' என்றவரை அழைத்து எடுத்த வீடியோவைக் காட்டியபோது பூட்சைக் கழற்றி விட்டு பார்க்க வந்தது சிரிப்பு.
               
'சாரைப்பாம்பைக் கண்டால் வளைந்து வளைந்து ஓடு, நல்ல பாம்பைக் கண்டால் நேராக ஓடு என்பார்கள். சாரைப்பாம்பு ரொம்ப நெளியாமல் ஓரளவு  நேராகவே விரைந்து செல்லும், நல்ல பாம்பு நெளிந்து நெளிந்துதான் செல்லும் சாம்பிராணி வாசனை அடித்தால் ஒரு நாகம், புழுங்கல் வாசனை அடித்தால் ஒரு நாகம் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியும்' என்றெல்லாம் தகவல் தந்தார் அவர்.

             
இடையிலேயே நெட் திறந்து பாம்பைப் பிடிக்க யாரைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்றெல்லாம் ஆராய்ந்தோம். பாம்பு இப்போது வெளியில் போனாலும் அது இந்த இடத்தைப் பார்த்து விட்டால் அப்புறம் அதே இடத்துக்கு வந்து கொண்டேயிருக்கும் என்று ஒருவர் அள்ளி விட்டார்!

             
ஆக, திக்விஜய நாகராஜா நல்ல பாம்பாகத்தான் இருக்க வேண்டும். இதுவரை யாரையும் கடிக்கவில்லையே! அப்புறம் ரொம்ப நேரம் இந்தச் சம்பவம் பற்றிப் பரபரப்பாகப் பேசிக் கொண்டே இருந்தார்கள். சொல்வதற்கு எல்லோரிடமும் ஒரு பாம்புக் கதை இருந்தது!