புதன், 27 பிப்ரவரி, 2013

அலேக் அனுபவங்கள் 17:: முட்டை போட்டியா?

                                
அசோக் லேலண்டில் அது ஒரு வெயில் கால மதிய நேரம். கால் நடையாக காண்டீன் வரை சென்று, நாற்பது பைசா சாப்பாடு சாப்பிட்டு, கால்நடையாக என் பணி இடம் திரும்பினேன். (இரண்டு பேர்களுக்கு கருத்துரை பதிய பாயிண்ட் கிடைத்து விட்டது என்று நினைக்கின்றேன். பார்ப்போம்!)
 
வெயில் காலங்களில், வெளியே சுற்றிவிட்டு வந்தால், இரண்டு புகலிடங்கள் அந்த நாட்களில் மிகவும் பிரசித்தம். ஒன்று நகல் யந்திரம் உள்ள அறை. மற்றது மேலாளர் அறை.   
 
அந்த அறைகள் குளிர் பதன எந்திரங்கள் கொண்ட அறைகள் என்பதால், (தமிழுல சொன்னா ஏ சி ரூம்!) வெயிலுக்கு இதமாக, சற்று இளைப்பாறலாம். 
             
மதிய நேர டிஸ்கஷனுக்காக என்றே கூட சில பேப்பர்களை எடுத்து வைத்துவிடுவோம். சில நாட்களில், மேலாளர் சாப்பிட செல்வதற்கு முன்பாகவே போய் சாப்பிட்டு வந்து , அவர் அறையை விட்டு கிளம்புவதற்குள், அங்கே தஞ்சம் புகுந்து, "நீங்க போய் சாப்பிட்டுவிட்டு நிதானமா வாங்க சார், எப்போ ஈ டி (Executive Director) வந்து கேட்டாலும், ' மானேஜர் இப்போதான் சாப்பிடப் போனார்' என்று சொல்லிவிடுகிறேன்!"  என்று சொல்லி விடுவேன். மானேஜருக்கும் அந்த டீலிங் ரொம்பப் பிடிச்சிருந்தது!  
              
ஒரு நாள், இப்படி மேலாளர் அறைக்குள் நான் நுழைந்த தருணத்தில், அவர் போனில், "முட்டை போட்டியா?" என்று கேட்டுக் கொண்டிருந்தார். சரி, யாரோ சத்துணவுக்கூட ஆயாவோடு போனில் உரையாடுகிறார் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.  
              
தொடர்ந்து அவர், "அதாம்பா எல்லோரும் செய்யறதுதானே. அதைத்தான் கேட்டேன். முட்டை போட்டியா?" என்றார். பிறகுதான் கவனித்தேன் அவர் பேசிக் கொண்டிருந்தது, வெளித் தொலை பேசி இல்லை. டிபார்ட்மெண்டுகளுக்கிடையே பேசப் பயன் படுகின்ற, உள் தொலைபேசி. (internal telephone) 'இதேதடா விசித்திரமாக இருக்கிறதே! அசோக் லேலண்டில், அடை காக்கும் கோழிகளை கூட அப்பாயிண்ட் செய்கிறார்களா'  என்று ஆச்சரியத்துடன் அந்த ஆந்திரா யுனிவெர்சிடி அதிகாரியை நோக்கினேன்.  
               
அப்புறம், 'அப்படியே மறுமுனையில் ஒரு கோழி பேசிக் கொண்டிருந்தாலும், இவருக்கு கோழி பாஷை தெரியாதே!' என்று நினைத்தேன். இதற்குள், மறுமுனையில் பேசிக்கொண்டிருந்தவர், இவர் என்ன கேட்கிறார் என்று புரியாமல், பக்கத்தில் யாராவது தமிழ் தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களிடம் போனைக் கொடுக்கும்படி கேட்டிருப்பார் போலிருக்கு. அதிகாரி என்னிடம் போனைக் கொடுத்தார். 
             
நான் போனை கையில் வாங்கி, காதில் வைத்து, 'ஹலோ?' என்று வாயால் கேட்டேன். மறுமுனையில் பேசிக் கொண்டிருந்தவர், 'திட்டமிடுதல்' (Planning Department) பகுதி நண்பர். எனக்கும் தெரிந்தவர்.
             
என் குரலை அடையாளம் கண்டு கொண்டு, "கௌதமா - அவர் என்ன கேட்குறாருன்னு எனக்குப் புரியல. நீ கேட்டு விளக்கமா சொல்லு" என்றார்.   
               
நான் அதிகாரியை பார்த்தேன். அவர் சொன்னார்: "அவரு திருப்பதி போயிட்டு வந்தாராம். அதுதான், (தலையைக் காட்டி) முட்டை போட்டு வந்தாரா' என்று கேட்டேன்" என்றார். 
         
நான் போனில், அந்த நண்பரிடம், "அது ஒண்ணுமில்லே சார். நீங்க திருப்பதி போயிட்டு வந்திருக்கீங்களே, மொட்டை போட்டு வந்திருக்கிறீர்களா' என்று கேட்கிறார் சார்" என்றேன். அவர் மறுமுனையில் சிரித்த சிரிப்பில், என் கையில் இருந்த ரிசீவர் அதிர்ந்தது. 
                      
***************  **************  ************** 
            
அதே அதிகாரியின் சம்பந்தப் பட்ட மற்றுமொரு சுவையான அனுபவம்: 
             
எங்களுடைய (பழைய) 370 எஞ்சின் கிராங்க் ஷாப்டில், ஒரு சிறிய மாற்றம் செய்து, அதை ஒரு ட்ரயல் பேட்ச் உற்பத்தி செய்து, தமிழகத்தில் பல பகுதிகளில் அந்த கிராங்க் ஷாப்ட் பொருத்தப்பட்ட எஞ்சின், பேருந்துகளில் சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருந்தது. எல்லா இடங்களிலிருந்தும் கிடைத்த அறிக்கைகள், சம்பந்தப்பட்ட எஞ்சின்கள் குறை ஏதுமின்றி, நன்றாக இயங்கிக் கொண்டுள்ளன என்பதுதான்.  
              
மூத்த அதிகாரிகளின் உயர்மட்டக் குழு சந்திப்பின் போது, இந்த விவரங்கள் அளிக்கப்பட்டன. அப்பொழுது ஒரு (வடக்குப் பகுதி சர்விஸ்) அதிகாரி, இந்த மாற்றம் செய்யப்பட்ட எஞ்சின் உள்ள பேருந்துகள், எங்கே அதிக அளவில் சோதனை ஓட்டம் ஓடிக் கொண்டிருக்கின்றன? என்று கேட்டார்.  
              
இந்த ஆந்திர அதிகாரி, உடனே மீட்டிங் ரூமிலிருந்து, அந்த பிராஜெக்ட் இன்சார்ஜ் (நாராயணசாமி என்று ஞாபகம்) ரூமிற்கு போன் செய்து, விவரங்கள் கேட்டு அறிந்தார். ஒரு காகிதத்தில் விவரங்களை எழுதிக் கொண்டார்.  
                   
மீட்டிங் ரூமில் இருந்த அனைத்து உயர் அதிகாரிகளிடமும், பெருமையாக சொன்னார். "இந்த மாற்றம் செய்யப்பட்ட என்ஜின் உள்ள வண்டிகள், அதிக அளவில் ஓடிக் கொண்டிருப்பது, தஞ்சை பெருமாள் டிரான்ஸ்போர்ட். " 
                  
சிலர், சரி என்று தலை ஆட்டி கேட்டுக் கொண்டனர். சிலர் புருவம் உயர்த்தினர். ஒருவர் மட்டும் கேட்டார், "அது என்ன புதுசா இருக்கு? நான் கேள்விப் பட்டதே இல்லையே!"   
                    
நம் அதிகாரி, போன் செய்து பிராஜெக்ட் இன் சார்ஜை, மீட்டிங் அறைக்கு உடனே வரும் படி அழைத்தார்.  
                  
மீட்டிங் ஹாலுக்கு சென்ற பிராஜெக்ட் இன்சார்ஜிடம், எல்லோரும், "யாருப்பா அந்த தஞ்சை பெருமாள்? நீங்க பாட்டுக்க புதுப் புது ஆட்களிடம் சோதனை வண்டிகளை கொடுத்து சோதனை செய்தால், நாளைக்கு வேறு பெரிய கஸ்டமர்களுக்கு அந்த மாற்றங்கள் நம்பகமானவை என்று எங்களால் எப்படி நிரூபிக்க முடியும்?" என்றெல்லாம் கேள்விகள் கேட்க, பிராஜெக்ட் இன் சார்ஜ் கூறினார். "சார், அது தஞ்சை பெருமாள் டிரான்ஸ்போர்ட் இல்லை; தந்தை  பெரியார்  டிரான்ஸ்போர்ட்  கார்ப்பரேஷன்!"   
                     

17 கருத்துகள்:

  1. 40 பைசா சாப்பாடு, எந்த ஆண்டு? ஆச்சர்யம் முட்டை போட்டியா சிரிக்க வைத்தது, சொந்த அனுபவங்களா? அருமையாக இருந்தது. :)

    பதிலளிநீக்கு
  2. ஆனாலும் அந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு...

    நீங்கள் நினைத்ததும் நடந்து விட்டது...!

    பதிலளிநீக்கு
  3. //தமிழுல சொன்னா//

    வாட் லேங்வேஜ் இஸ் திஸ்?

    நாத்திகரான தந்தை பெரியாரை ஒரே நொடியில் கடவுள் ரேஞ்சுக்கு மாத்திட்டாரே!! யாராலயும் முடியாததைச் சாதிச்சுட்டார். க்ரேட். :-)))

    பதிலளிநீக்கு
  4. படங்களும் பகிர்வும் ரசித்துச் சிரிக்கவைத்தது ..

    பதிலளிநீக்கு
  5. முட்டையா ? மொட்டையா??
    மொழு மொழு என்று இருப்பது எது ??!

    பதிலளிநீக்கு
  6. பெரியார் பெருமாள் ஆனதும், மொட்டை முட்டையானதும் சுவாரசியம். சிரிச்சு மாளலை.

    பதிலளிநீக்கு
  7. ஹிஹிஹி, ஹூசைனம்மா சொல்வதை அப்படியே வழிமொழிகிறேன்.


    //மானேஜர் இப்போதான் சாப்பிடப் போனார்' என்று சொல்லிவிடுகிறேன்!" என்று சொல்லி விடுவேன். மானேஜருக்கும் அந்த டீலிங் ரொம்பப் பிடிச்சிருந்தது! //

    நல்லா இருக்கு டீலிங்! :))))

    முட்டை போட்ட அனுபவம் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  8. முட்டை போட்டியாவும் தஞ்சை பெருமாளும் ரசிக்க வைத்தன! சிறப்பான பகிர்வு! நன்றி

    பதிலளிநீக்கு
  9. சுவையான சம்பவங்கள்.....
    படித்து ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  10. முட்டை போட்டியும், தஞ்சை பெருமாளும் சூப்பர்...:)

    கிராங்க் ஷாஃப்ட் கேட்டு ரொம்ப நாளாச்சு...:)

    பதிலளிநீக்கு
  11. படித்த, இரசித்த, கருத்துரைத்த நண்பர்கள் எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  12. நல்லா சிரிக்க வைத்த பதிவு.
    40 பைசா சாப்பாடு எந்த வருடம். கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கே!
    ஹுஸைனம்மா பின்னூட்டம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. மொட்டை முட்டையானதா? நல்ல கூத்து போங்கோ என்று சொல்லலாம்ன்னு பாத்தா, தந்தை பெரியார் தஞ்சை பெருமாள் ஆனதை என்ன சொல்ல?

    பேஷ் பேஷ் நன்னாயிருக்கு!

    பதிலளிநீக்கு
  14. ரொம்ப சுவாரசியமா அழகா எழுதி இருக்கீங்க. சூப்பர்!

    பதிலளிநீக்கு
  15. ரொம்ப சுவாரசியமா அழகா எழுதி இருக்கீங்க. சூப்பர்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!