புதன், 13 பிப்ரவரி, 2013

ஒரு அதிகாலை மரணம்.


பதினோரு மணியாகியும் மூர்த்தி இன்னும் அலுவலகத்துக்கு வரவில்லை.

                                         
 
"கணேசன்... மூர்த்தி ஏதாவது பெர்மிஷன், லீவு சொன்னாரா... இன்னும் காணோம்?" கேஷியர்  கேட்டார்.

"இல்லை சார்.... இந்நேரம் வந்திருக்கணுமே... அவர் ஊர்லேருந்து காலைல ரெண்டே பஸ்தான் உண்டு.. 9 மணிக்குள்ள ரெண்டுமே வந்துடும்... உடம்பு கிடம்பு சரியில்லையோ என்னமோ.."

மேனேஜர் ரூமிலிருந்து காளிமுத்து ஓடி வந்தான். மூர்த்தி நேற்றிரவு காலமாகி விட்ட செய்தியை அனைவருக்கும் அறிவித்தான்.  சற்றுமுன்தான் மேனேஜர் ரூமுக்கு அவர்கள் உறவினரிடமிருந்து தொலைபேசி வந்ததாகச் சொன்னான்.


ஆஃபீஸே சோகமானது.

மூர்த்தி அந்த ஊரிலிருந்து வெளியே தள்ளி ஒதுக்குப் புறமாக இருந்த கிராமத்திலிருந்து அலுவலகம் வந்து செல்பவன். அங்கிருந்து ஊருக்குள் வர ஒரு நாளைக்கு ஐந்து முறை மட்டுமே பஸ் வசதி உண்டு. அப்படியும் தவறாமல் நேரத்துக்கு வந்து விடுவான்.


தன்னுடைய அன்பான மனைவி பற்றியும், பையன் பற்றியும் அவன் சொல்லக் கேட்டிருக்கிறார்கள். அவன் மனைவி சுவையாக சமைக்கக் கூடியவள் என்று அலுவலகம் முழுதும் தெரியும். அவள் சமையலை அடிக்கடி அலுவலகம் முழுதும் சுவை பார்க்கும்.


ஆபீஸ் முழுக்க சோகப் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆங்காங்கே பேசிக் கொண்டார்கள். நினைவுகள் அலசப் பட்டுக் கொண்டிருந்தன.

                                    
 
மேனேஜர் எல்லோரையும் அழைத்துப் பேசினார்.

சாதாரணமாக ஒரு அரசு ஊழியர் பணிக்காலத்தின்போதே மரணமடைந்தால் அவரது இறுதிச் செலவுகளுக்கு என்று ஒரு தொகை அலுவலகம் சார்பில் வழங்கப் படும். அந்தப் பணத்தை வாங்கி வர ஏற்பாடு செய்தார்.

"சாயங்காலத்துக்குள்ள பாடி எடுத்துடுவாங்க. யார் யார் போகப் போறீங்க..."

ஐந்தாறு பேர் ரெடியானார்கள். அவர்களிடம் பணத்தைக் கொடுத்து மூர்த்தியின் மனைவியிடம் தரச் சொன்னார். "பார்த்துப் பேசுங்க"

அலுவலக ஜீப்பிலேயே புறப் பட்டார்கள். வழி முழுக்க மூர்த்தியின் பண்புகள், குணங்கள் பற்றிய பேச்சாகவே இருந்தது.


"பொண்டாட்டி மேல உசுரையே வச்சிருந்தான் சார்... அவங்களும் அப்படித்தான்"

"என்ன பண்ணுவாங்களோ இனிமே.. படிச்சுருக்காங்களா... அவங்களுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ண முடியுமா என்று பார்க்கலாம்..."

"பையன் படிப்பு வேற இருக்கே..."


"இப்போ கேட்க முடியாதுப்பா.. அப்புறம் கேட்கலாம்"


"பணத்தைக் கொடுத்தா வாங்குவாங்களா.. ரொம்ப அழுவாங்கப்பா.. அவங்களை யார் பார்த்திருக்கா?"

"நான் ஒண்ணு  ரெண்டு தரம் இங்க வந்தபோது பார்த்திருக்கேன் சார்...." காளிமுத்து.

"எல்லோரும் சேர்ந்து இருங்க... பணம் கொடுக்கும்போது. வாங்க மாட்டேன்னு அழுவாங்க... நாமதான் எடுத்துச் சொல்லிக் கொடுக்கணும். சங்கடமா இருக்கப்பா..."

                                        

ஊரை விட்டு விலகி, ஜீப் பாதையில்லாமல் இருந்த பாதையில் பயணித்து ஊரையடைந்தது.

கூடியிருந்த கூட்டம் விலகி வழிவிட, ஜீப்பிலிருந்து இறங்கி தயக்கத்துடன், மெளனமாக உள்ளே நடந்தனர்.
 
                                            

மூர்த்தி நீட்டிப் படுத்திருந்தான். பார்க்கக் கஷ்டமாக இருந்தது. வாழ்வு, மரணம் பற்றிய வழக்கமான கேள்விகள் மனசுக்குள் வந்தன.

பணத்தை எடுத்துக் கொண்டு அவன் மனைவியிடம் வந்தனர். அவள் கையில் பணத்தைக் கொடுத்தனர்.


வாங்கி எண்ணினாள்.

"என்னங்க... நான் போய்ட்டா லட்ச லட்சமாப் பணம் வரும்னு சொன்னீங்களே...வெறும் பத்தாயிரம்தான் கொடுக்கறாங்களே.. நான் என்ன பண்ணுவேன்?" மூர்த்தி பக்கமாகத் திரும்பி அரற்றினாள்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.


"யம்மா... இது மூர்த்தி சாரோட இறுதிச் செலவுக்கு மட்டும்மா.. நீங்க சொல்ற பணம்லாம் அப்புறம் முறைப்படி வரும்"

                                           
 
திரும்பும்போது ஜீப்பில் மரணம் பற்றி யாரும் பேசவில்லை!


படங்கள் : நன்றி இணையம்.

27 கருத்துகள்:

 1. மூர்த்தி அவர்களின் சரி பாதியின் பண்புகள், குணங்கள் பற்றி யோசிப்பதால் ஜீப்பில் இருப்பவர்களுக்கு எப்படி பேச்சு வரும்...?

  பதிலளிநீக்கு

 2. வாங்க சூர்யஜீவா சார்... நீண்ட நாட்களுக்குப் பின்னான உங்கள் வருகை மகிழ்ச்சியைத் தருகிறது.

  வாங்க DD.. நன்றி.

  பதிலளிநீக்கு
 3. பாஸிடிவ்வா எடுக்கணும்னா, முடிஞ்சதைப் பத்தியே யோசிக்காம, பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து, இனி அடுத்து என்னன்னு பார்க்கிறாங்க. அவ்வ்வ்வ்வ்வ்.....

  மனைவியை இழக்கும் ஆணின் ரியாக்‌ஷன் எப்படியிருக்குனு ஒரு கதை எழுதுங்களேன். (ஏட்டிக்குப் போட்டி இல்லை. தெரிஞ்சுக்கத்தான்...) :-)))

  பதிலளிநீக்கு
 4. "பணம் கொடுக்கும்போது. வாங்க மாட்டேன்னு அழுவாங்க... நாமதான் எடுத்துச் சொல்லிக் கொடுக்கணும்.."

  வாசிக்கறவங்க இந்த மாதிரி நினைக்கணும், இல்லை, இப்படி எழுதியாவது அவங்களை அப்படி நினைக்க வைச்சு, நாம வேறே ஒண்ணைச் சொல்லணும்ங்கற எழுத்தாள குணம் அழுந்திப் பதிந்த இடம்.

  'எங்கள்' ஒருபக்கக் கதையே எப்பப் பாத்தாலும் யோசிக்காமல், இரண்டு மூணு பக்க முயற்சிகளில் இறங்கினால் என்ன தோன்றியது.
  அவர்களால் சிறப்பாக செய்ய முடியும் என்பதினால் தான் இந்த யோசனையே.

  பதிலளிநீக்கு
 5. நல்ல ட்விஸ்ட் கடைசியிலே. ஆனாலும் யதார்த்தமும் இதுவே! போனது போயாச்சு, அடுத்து என்னனு யோசிக்கிறாங்க! :( இழப்பின் வலி இல்லாமல் இருக்காது. அந்த நேரத்துக் கஷ்டம் தன்னையும் மீறிப் புலம்ப வைத்திருக்கும். நடுத்தரக் குடும்பம்! :(

  பதிலளிநீக்கு
 6. தலைப்பைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. :((

  பதிலளிநீக்கு
 7. பலபேரு இப்படித்தான் இருக்காங்க சார்! அதையே கதை சொல்கிறது! அருமையான கதை! பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 8. எல்லாமே... .. ஒரு எதிர்பார்ப்புத்தான்..

  # முடிந்தவரை மனிதர்களின் போட்டோக்களை அவர்கள் அனுமதி இல்லாது பிரசுரம் செய்ய வேண்டாம்... (even if such available freely on the NET)

  பதிலளிநீக்கு
 9. நடுத்தர வர்க்கத்தின் யதார்த்தத்தை உணர்த்துகிறது....:(

  பதிலளிநீக்கு
 10. உடனடியாகப் படிக்கத் தூண்டும் தலைப்பு. முடிவுதான் கொஞ்சம் அபத்தமாக இருந்தது. இறந்தவரின் உடல் கூட எடுக்கப்படா நிலையில் இப்படி ஒருவரும் பேசமாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 11. தலைப்பு அருமை...
  கதையின் முடிவு இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாம்.
  நல்லா எழுதியிருக்கீங்க...

  பதிலளிநீக்கு
 12. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.....

  பதிலளிநீக்கு
 13. ஏறக்குறைய இதே போன்றதொரு உண்மை நிகழ்வை நான் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். இதுவும் நிஜம்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

  பதிலளிநீக்கு

 14. ஹுஸைனம்மா, கீதா சாம்பசிவம், பழனி.கந்தசாமி சார், வெங்கட் நாகராஜ்.. சே. குமார், கீதா சந்தானம்... இதில் தவறில்லை. இதுதான் யதார்த்தம். மனைவியின் வார்த்தை நிஜமாக நடந்ததே! அதிலிருந்துதான் கதை!! ஹுஸைனம்மா சொல்லியிருக்கும் கருவில் விரைவில் முயற்சிக்கிறேன்! :))

  கோவை2தில்லி, ராமலக்ஷ்மி, 'தளிர்' சுரேஷ்.... நன்றி.

  ஜீவி சார்... முயற்சி செய்கிறேன்...றோம்!

  மாதவன்... நல்ல அறிவுரை... பின்பற்ற முயற்சி செய்கிறோம்.

  தலைப்பைப் பற்றிய பின்னூட்டங்களுக்கு நன்றி. கவனத்தைக் கவரும் வகையில் இருப்பதற்காக வைத்த தலைப்பு. சுஜாதா எழுதிய 'ஒரு நடுப்பகல் மரணம்' தலைப்பு ஞாபகத்துக்கு வரும் என்பது ஒரு ப்ளஸ்! தலைப்பைப் பார்ஹ்த்துதானோ என்னமோ, பதிவிட்ட ஒருமணி நேரத்திலேயே 100 பேர் படித்து விட்டதாக ஸ்டாட். சொல்கிறது!

  பதிலளிநீக்கு

 15. நன்றி வேணு சார்....

  பதிலளிநீக்கு
 16. "என்னங்க... நான் போய்ட்டா லட்ச லட்சமாப் பணம் வரும்னு சொன்னீங்களே...வெறும் பத்தாயிரம்தான் கொடுக்கறாங்களே.. நான் என்ன பண்ணுவேன்?" மூர்த்தி பக்கமாகத் திரும்பி அரற்றினாள்.

  நிதர்சன வரிகள் மனதில் அறைகிறது ..!

  பதிலளிநீக்கு
 17. மனைவியின் கவலை அவளுக்கு. இது
  போல நடக்கச் சந்தர்ப்பம் இருக்கு.
  உடனே சொல்லாவிட்டாலும் பின்னால் சொல்வார்கள். அழுத்தமான கதை.

  பதிலளிநீக்கு
 18. கதைதான் என்றாலும் இழப்பு மனதை வருத்தப்பட செய்கிறது என்றால். மனைவியின் புலம்பல் அதிர்ச்சி அடைய செய்கிறது . உண்மை நிலவரம் தெரியதவர்களோ!(முதலில் கொடுத்தபணம் அவசரதேவைக்கு பின்னல் பண்ம் வரும் என்று தெரியதவர்களோ))

  பதிலளிநீக்கு
 19. பணம் எல்லா இழப்புகளையும் சரிகட்டிவிடும்னு நினைக்கறவங்க இருக்கத்தான் செய்றாங்க!

  பதிலளிநீக்கு
 20. எதிர்பாராத திருப்பம். பணம் மட்டும்தான் வாழ்க்கை என்பதாக நிறைய பேர் இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 21. பணம் மட்டும் தான் வாழ்வு என்றான பின் வேறு என்னத்தைச் சொல்ல

  பதிலளிநீக்கு
 22. இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்று மனதை தேற்றிக் கொள்ளலாமா? இப்படியெல்லாம் இருக்க மாட்டார்கள்; கதைக்காக இப்படி ஒரு முடிவு என்று ஒதுக்கி விடலாமா?
  அதிகாலை மரணம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!