செவ்வாய், 27 அக்டோபர், 2015

"கற்பழிச்சா எனக்குப் பிடிக்காதே ராகவன்....."


தான் எழுதிக் கொண்டிருந்த தொடர் கதையின் அடுத்த அத்தியாயத்தை எழுதுவதற்காக உட்கார்ந்திருந்தான் ராகவன்.  எதிரில் ஒரு ஷீட் பேப்பர் கொஞ்சம் எழுதப்பட்ட எழுத்துகளுடன் படபடத்துக் கொண்டிருந்தது.
 
வர்ணனை சரியாக வரவில்லை.  இவன் எழுத்துகள் எப்போதும் வரவேற்பையும், எதிர்ப்பையும் ஒரே சமயத்தில் கிளப்பும்.  விபரீத எழுத்தாளன்.  சர்ச்சைகளுக்குப் பேர் போனவன்!  
 
 
இப்போது அவன் கதையின் நாயகி கற்பழிக்கப்படப் போகிறாள்.  அதை எழுத வேண்டும்.
 
எதிரில் இருந்த ஆப்பிளை எடுத்துக் கத்தியால் தோல் சீவினான்.  கூர்மையான கத்தி விரலைப் பதம் பார்க்க 'ஸ்ஸ்..' என்று கையை உதறி எழுந்து வாஷ் பேசினுக்குச் சென்றான்.
 
விரலை வாய்க்குள் வைத்துச் சப்பிக் கொண்டே திரும்பிப் பார்த்தபோது டேபிளின் அருகே யாரோ இருந்தது போலிருந்தது. 
 
'ச்சே' என்று தலையை உதறிக் கொண்டவன்,  ஃப்ரிட்ஜிலிருந்து பாட்டிலை எடுத்து உதட்டுக்குள் சொருகிக் கொண்டான்.  திரும்பும்போது மறுபடியும் டேபிளின் அருகே நிழலாடியது.
 
அருகில் வந்தான்.  பேப்பர் படபடத்து அடங்கியது.
 
பேப்பரில் பேனாவை வைத்தான்.
 
"... கஸ்தூரி அலுவலகத்தை விட்டுக் கிளம்பினாள்."  என்று எழுதியவன் கொஞ்சம் யோசித்து "இலேசான ஒப்பனை செய்து கொண்ட பின்"  என்று முன்னால் சேர்த்தான். 
 
அவள் புடைவை அணிந்திருக்கும் விதத்தை எழுதி எழுதி அடித்தான்.  பின்னர் சில சினிமாப் பத்திரிகைகளை எடுத்து நடிகைகளின் படத்தை ஆராய்ந்தான்.
 
மீண்டும் சில வரிகள் சேர்த்தான்.  பேப்பரின் எழுத்துகளில் கஸ்தூரியின் கவர்ச்சி கூடிக் கொண்டிருந்தது.
 
"வெளியே செல்ல கதவைத் திறந்தபோது கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தார் ராமச்சந்திரன். அவர் பார்வையில் சதி தெரிந்தது"
 
கற்பனை மீண்டும் தடைப்பட, ராகவன் எதிர்ச் சுவரையும், சூனியத்தையும் வெறித்தான். 
 
 
 
அருகிலிருந்த ரிமோட்டை எடுத்தவன் டிவியை நோக்கி அதை நீட்டி, பொத்தானை அமுக்கினான்.  ஒன்றும் நிகழாததால், எழுந்து பார்த்தவன், அலுப்புடன் டிவியை நோக்கி நடந்து மேலே அணைத்து வைக்கப் பட்டிருந்த அதன் ஸ்விட்சை ஆன் செய்து திரும்பினான்.
 
சேனல்களில் தாவித் தாவி எங்காவது ஏதாவது கற்பழிப்புக் காட்சி வருகிறதா என்று ஆராய்ந்தான்.  இங்கிலீஷ் சேனல்களில் கற்பழிக்கவே தேவை இல்லாமல் கதாநாயகி இயல்பாய் தானே ஆடை துறந்தாள்.  மீண்டும் ஒரு அலுப்புடன் மலையாளச் சேனல்கள் பக்கம் போனான்.  இசை நிகழ்ச்சிகளாய் தூள் பறந்து கொண்டிருந்தனவே தவிர,  யாரும் கற்பழிக்கப்படக் காணோம்.
 
கதையை ஒரமாக ஒதுக்கி, இன்னொரு பத்திரிகையில் இவன் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளை எடுத்து மேய்ந்தான். பெரும்பாலான கேள்விகளில் இவனை வம்பிழுத்துக் கேள்வி கேட்டிருந்தார்கள்.  "உங்களை சைக்கோ என்கிறார்களே சிலர்?" என்று கேட்டிருந்தார் அயன்புரம் ச. தத்துவராமன்.
 
மென்று கொண்டிருந்த ஆப்பிளை எச்சிலுடன் சேர்த்து அப்படியே மேசைக்குக் கீழே துப்பியவன், அந்தக் கேள்வியை எடுத்து வைத்துக் கொண்டு காட்டமாக ஒரு பதில் எழுதினான்.
 
பிறகு மீண்டும் தொடர்கதையைத் தொட்டவன், சுவரைப் பார்த்துப் பார்த்து கொஞ்ச வரிகள் எழுதினான். மறுபடியும் சூனியத்தை வெறித்து மறுபடி சில வரிகள் எழுதினான்.

 
எழுந்து மணியைப் பார்த்தவன் சட்டையை மாட்டிக் கொண்டு சாப்பிடக் கிளம்பினான்.
 
வழி முழுவதும் காட்சிகளை யோசித்தபடியே நடந்து, காத்திருந்து, சாப்பிட்டான்.

 
யோசித்தபடியே சாப்பிட்டு  விட்டு யோசித்தபடியே திரும்பியபோது மணி பத்தாகி விட்டிருந்தது.  கதவு வெறுமனே சாத்தி இருந்தது. 

 
'பூட்டாமலே போய்விட்டேனா?'

 
 
உள்ளே நுழைந்து விளக்கைப் போட்டவன் டேபிளின் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்த நங்கையைக் கண்டு திகைத்துப் போனான்.  திரும்பி, இது தன் ரூம்தானா என்று மறுபடி ஒருமுறை பார்த்துக் கொண்டவன், அவளைக் குழப்பத்துடன் பார்த்தான்.  எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.
 
"வாங்க ராகவன்..  சாப்ட்சாச்சா?"
 
"நீங்க...?"
 
"நான் கஸ்தூரி.  உங்கள் கதாநாயகி.."
 
"நான்சென்ஸ்...  யார் நீங்க?"
 
"நம்பலையா?  இந்த...
 
 

எழுதி முடித்த சிறிது நேரத்திலேயே
காணாமல் போனார்கள்
கதையின் பாத்திரங்கள்..
வெற்றுத் தாளில்
எழுதப் படாமலேயே
நிற்கிறது
என் படைப்பு

 
இதை எழுதியதும் நீங்கதானே?   உங்க கற்பனை நிஜமாகக் கூடாதா?  இதோ பாருங்க.."  என்றவள் எழுந்து மேஜை மேல் எழுதி வைக்கப் பட்டிருந்த பேப்பருக்குள் மறைந்தாள்.  இவன் திகைத்து நின்றிருக்க,  சில நொடிகளில் பேப்பரிலிருந்து மீண்டும் பிரசன்னமானாள்.

 
"நான்தான்.  ஏற்கெனவே ரெண்டு வாட்டி வெளில வந்து பேச ட்ரை பண்ணினேன்.  நேரம் சரியில்லை.  போயிட்டேன்.  இப்போ கதைல என்னைக் கற்பழிக்கப் போறாங்களா ராகவன்?  கற்பழிச்சா எனக்குப் பிடிக்காதே ராகவன்..   அதுவும் அந்த வயசான ஆளு!  அதோ பாருங்க"  டிவியைக் காட்டினாள்.
 
டிவியில் ஒரு பெண் தன்னைக் கற்பழிக்க வந்தவர்களைப் பந்தாடிக் கொண்டிருந்தாள். 
 
 
"இப்படி எழுதுங்க ராகவன்..  இதுதான் நல்லாருக்கு"  என்றாள்.
 
"ஷட்டப்.. உன்னை என்ன செய்யணும்னு தீர்மானிக்க வேண்டியவன் நான்.  நான் உன்னைப் படைத்தவன்"
 
"ஆணவமா ராகவன்?  இது வரை என்னை எவ்வளோ கௌரவமா காட்டிகிட்டு வந்தீங்க?  நானே என்னை ரசிச்சேன்.  இப்போ திடீர்னு ஏன் இப்படி?  அதுவும் ரொம்ப வல்கரா இருக்கு வரிகள்.."
 
"உளறாதே.. கதைக்கு அது தேவை.  உன்னை முன்னால அப்படி உத்தமமா காமிச்சதே இதுக்குத்தான்..  பின்னால நீ அப்படியே உல்டாவா மாறுவே.."
 

நீங்க முதல்ல எழுதின வரிகள்ள மோல்ட் ஆயிட்டேன் ராகவன்..  அதுலேருந்து என்னை நான் சேன்ஜ் பண்ணிக்க முடியும்னு தோணலை"
 
"உனக்கு சுய எண்ணம் கிடையாது.  உளறாதே"
 
"வேணாம் ராகவன்..  நான் இப்படியே காணாமல் போயிடுவேன்.." என்று வாசலைக் காட்டினாள்.
 
உரத்துச் சிரித்தான் ராகவன்.  


 
 
"நீ போயிட்டா?  எங்க போயிட முடியும்? இங்க இருக்க நீ"   பேனாவைக் காட்டினான்.  "இங்க கொண்டு வந்துடுவேன்.."  பேப்பரைக் காட்டினான்.
 
"ஆணவம்தான் உன்னை அழிக்கப் போவுது ராகவன்.."
 
"ஏய்.. என்ன மரியாதைக் குறையுது.."
 
"என்னை மாதிரி கேரக்டருக்கு மரியாதை தெரியாதே ராகவன்..  உனக்குத் .தெரியாததா..  நீதானே படைக்கறவன்.....?  இறைவன்!"   கடைசி வார்த்தை சொல்லும் போது இடது பக்கம் இதழ்கள் ஒதுங்கி,  நக்கலாக ஒரு புன்முறுவல் தெரிந்தது அவள் உதட்டில்.
 
"கெக்கேகேகே...' என்று சிரித்தான் ராகவன்.
 
"அசிங்கமா சிரிக்காதே..   நான் பத்தினியாவே இருக்க ஆசைப் படறேன்."  கத்தியை எடுத்தாள் கஸ்தூரி.


 
 
மறுநாள் திறந்து கிடந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே பெருக்க வந்த வேலைக்காரி போட்ட கூச்சலில் கூட்டம் சேர்ந்தது.
 
ஆப்பிள் வெட்டும் கத்தி சொருகப்பட்டு நாற்காலியில் சரிந்து கிடந்தான் ராகவன்.  நாற்காலியைச் சுற்றிலும் ரத்தம் குளம் கட்டியிருந்தது.  
 
 

 
 
"அரை லூஸு மாதிரி இருந்தான்.  அப்பப்போ பேச்சுக் குரல் கேக்கும்.  அறுத்துகிட்டு செத்துட்டானே குரு.."  கூட்டத்தில் ஒருவன் சத்தமாகப் புலம்பினான்.







 
 
 
 
படங்கள் : நன்றி இணையம்.





22 கருத்துகள்:

  1. ஹாஹா, சரியான திகில் கதைனு நினைச்சுப் படிச்சா, முடிவை ஏற்கெனவே ஊகிச்சுட்டேன்! :)

    பதிலளிநீக்கு
  2. குருவே ,கஸ்தூரியை கற்பழிக்க முயன்றதால் இந்த துயர முடிவோ :)

    பதிலளிநீக்கு
  3. மாதிரி எல்லாம் கிடையாது...! கன்பார்ம்...!

    பதிலளிநீக்கு
  4. செத்தும் கொடுத்தான் ராகவன் ஒரு கதை!
    அருமை

    பதிலளிநீக்கு
  5. வித்தியாசமான கதைதான் நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  6. கதை சூப்பர்...முடிவு ஊகிக்க முடிந்தது என்றாலும். நொஞ்ஞானம்?? புரியவில்லையே

    பதிலளிநீக்கு
  7. சொல்லிச் சென்றவிதம்
    கதையின் கருவுக்கு உயிர்

    அவரது நடவடிக்கைகள் கதையின்
    முடிவினை லேசாக கோடிட்டுக் காட்டும்படியாக
    இருந்தது கதையின் சிறப்பு

    மிகவும் இரசித்... தேன்

    பதிலளிநீக்கு
  8. இப்படியும் கதை எழுதலாம். நல்ல முடிவு ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    ஐயா
    கதை நன்றாக உள்ளது வித்தியாசமான கற்பனை.. படித்து மகிழ்ந்தேன் த.ம 8
    எனது பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உன் நினைவுக் கீற்றுக்கள்:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. புதுமைப்பித்தனின் காஞ்சணை போன்று உள்ளது.

    ஜெயகுமார்

    பதிலளிநீக்கு
  11. புதுமைப்பித்தனின் காஞ்சணை போன்று உள்ளது.

    ஜெயகுமார்

    பதிலளிநீக்கு
  12. புதுமைப்பித்தனின் காஞ்சணை போன்று உள்ளது.

    ஜெயகுமார்

    பதிலளிநீக்கு
  13. அருமையான பதிவு
    சிறந்த கைவண்ணம்
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  14. முதலில் முடிவைத் தீர்மானித்து விட்டீர்கள் போலிருக்கு. அதற்கேற்ப எழுத வேண்டும் என்று ஆரம்பித்தது, பிரமாதமாக அமைந்து வேறொரு கிளாஸிக் முடிவுக்காக ஏங்கியிருக்கிறது. முதலில் தீர்மானமான முடிவை வைத்து முடித்ததும் பிரமாதமாக அமைந்த கதைப்பகுதி சப்பிட்டுவிட்டது.

    தலைப்பு, வழக்கமான 'உங்கள் தலைப்பு' இல்லை என்றாலும் பார்த்தவர்களை இழுத்து வந்து படிக்க வைக்கும் கவர்ச்சி வேண்டியதற்கு மேலேயே இருக்கிறது. வேறு முடிவுக்கு கொஞ்சமே சிரமபட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  15. வித்தியாசமான கதை! முடிவு கொஞ்சம் மாறியிருக்கலாம் என்று தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  16. முடிவை ஊகிக்க முடிந்தது தான் என்றாலும்.. அதகளம் பண்ணியிருக்கிறீர்கள். தலைப்பு 'தந்தி' ரகம்...

    பதிலளிநீக்கு
  17. ஹாஹாஹா இது மீண்டும் தொடரும் போல இருக்கின்றதே.....
    தற்கொலைதானா ? இல்லை வேற ஏதாவது......

    பதிலளிநீக்கு
  18. நல்ல முடிவை கொடுக்காத கதாசிரியர்களுக்கு எல்லாம் இந்த முடிவதானா?

    பதிலளிநீக்கு
  19. தன் மனதுக்கு ஒவ்வாததை எழுதுவதும் சிரமம்தான் புரிந்து கொள்ள முடிகிறது ஸ்ரீ

    பதிலளிநீக்கு
  20. நல்ல கற்பனை. முடிவு யூகிக்க முடிந்தது என்று சொன்னாலும், இக்கதைக்கு வேறு முடிவோடு கதை எழுத சில பதிவர்களை அழைக்கலாமே.... குறிப்பாக கதைகள் எழுதும் பதிவர்களை....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!