சனி, 7 ஜனவரி, 2023

தனக்கே வீடில்லாதபோதும்...  மற்றும் நான் படிச்ச கதை (JKC)

 
=============================================================================================================
===========================================================================================================
=======================================================================================================

 

நான் படிச்ச கதை (JK)

 

நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதை, கதையின்  ஆசிரியர் உங்கள் எல்லோருக்கும் பரிச்சயமானவர் தான். மிகவும் பிரபலமானவர். ஆசிரியர் யார் என்று கண்டு பிடிப்பவருக்குப்  பரிசு ………………………………………ஒன்றும் இல்லை.

 கிளிக்கதை 

எண்ணூறு வருஷங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் மிளகாய்ப்பழச்சாமி என்றொரு பரதேசி இருந்தான். அவன் நாள்தோறும் இருபது மிளகாய்ப்பழத்தைத் தின்று ஒரு மிடறு தண்ணீரும் குடிப்பான். அவனிடம் ஒரு கிளியுண்டு. மடத்துக்கு வரும் ஜனங்களிடம் ஸ்கந்த புராணம் சொல்லிப் பிரசங்கம் செய்வது அந்தப் பரதேசியின் தொழில். பிரசங்கம் தொடங்கு முன்பு பரதேசி கிளியை நோக்கி:

"முருகா, முருகா, ஒரு கதை சொல்லு" என்பான்

 உடனே கிளி ஏதோ கங்கா மங்கா வென்று குழறும். பரதேசி     சொல்லுவான்:

"அடியார்களே இங்கிருப்பது கிளியன்று. இவர் சுகப் பிரம ரிஷி. இவர் சொல்லிய வசனம் உங்கள் செவியில் தெளிவாக விழுந்திருக்கும். சிறிது கவனக் குறைவாக இருந்தாலும் நான் அவர் சொல்லியதை மற்றொரு முறை சொல்லுகிறேன்.


கங்கா மங்கை மைந்தன்

பாம்பைத் தின்றது மயில்

மயிலின் மேலே கந்தன்"


இதன் பொருள் என்னவென்றால்......" இவ்விதமாகத் தொடங்கிப் பரதேசிக் கந்த புராணம் முழுவதையும் நவரஸங்களைச் சேர்த்துச் சோனாமாரியாகப் பொழிவான். ஜனங்கள் கேட்டுப் பரவசமடைந்து போய் பொன் பொன்னாகப் பாதகாணிக்கை குவிப்பார்கள். அவன் அந்தப் பணத்தை எவ்விதமாகச் செலவழிப்பானோ யாருக்கும் தெரியாது. அது தேவர் மனுஷ்யர் அசுரர் மூன்று ஜாதியாருக்கும் தெரியாத ரகஸ்யம்.

இருந்தாலும் ஊரில் வதந்தியெப்படியென்றால், இவன் மேற்படி பொன்னையெல்லாம் மலையடிவாரத்தில் ஏதோ ஒரு குகைக்குள் பதுக்கி வைத்திருப்பதாகவும், இருபது வருஷத்துக்குப் பிறகு அத்தனை பொன்னையும் எடுத்துப் பெரிய கோவில் கட்டப்போவதாகவும் சொல்லிக் கொண்டார்கள்.

இப்படியிருக்கும் போது ஒருநாள், திடீரென்று மிளகாய்ப் பழச்சாமி மறைந்து போய்விட்டான். பொழுது விடிந்து தூப்பு வேலை செய்யும் கிழவி வந்து பார்க்கும்போது மடம் திறந்து கிடந்தது. உள்ளே போய்ப் பார்த்தால், சாமியார், கூடு, கிளி, தடி, புஸ்தகம், திருவோடு முதலிய யாதொரு வஸ்துவுமில்லை. கிழவி கூவி விட்டு வீடுபோய்ச் சேர்ந்தாள். ஊரதிகாரிக்குத் தெரிந்தது. பொன்னை ஒரு வேளை பரதேசி மறந்துபோய் வைத்துவிட்டுப் போயிருக்கக் கூடும். அதையெடுத்து யாதேனும் ஓர் தர்மம் பண்ணலாமென்ற தர்ம சிந்தையினால் அதிகாரி சேவகரை விட்டு மலையிலுள்ள பொந்து முழுவதையும் துளை போட்டுப் பார்க்கச் சொன்னான். சிற்சில இடங்களில் ஓரிரண்டு பொன் அகப்பட்டது. தேடப்போனவர்களில் பலரைத் தேள் கொட்டிற்று. அநேகரைப் பாம்பு தீண்டிற்று. அதிகாரி தேடுவதை நிறுத்திவிட்டான். சில தினங்களுக்கப்பால் வாழைப்பழச் சாமியாரென்ற மற்றொரு பரதேசி ஒரு கட்டுக் கட்டிவிட்டான். அதெப்படியென்றால், மிளகாய்ப் பழச்சாமி பொற்குடத்துடன் ஆகாயத்தை நோக்கிப் பறந்து போய் மேகமண்டலத்துக்குள் நுழைந்ததை, தான் பக்கத்திலேயிருந்து பார்த்ததாகவும், தானேயிருந்து வழியனுப்பினதாகவும், புரளி பண்ணினான்.

அதிகாரி அடியார் விசுவாச முள்ளவனாகையால் அந்தப் பரதேசி சொன்னதை நம்பி, அவர் பொன்னை, தான் தேடப்போனது குற்றமென்று நினைத்து, மேற்படி மிளகாய்ப் பழச்சாமிக்கு வருஷந்தோறும் மேற்படி மடத்தில் குருபூஜை நடத்தி வைப்பதாகவும், மடத்தை வாழைப்பழச் சாமி வைத்துக் கொண்டு கந்த புராணப் பிரசங்கம் செய்து வந்தால் திருவிளக்குச் செலவு, தான் கொடுத்து விடுவதாகவும் சொன்னான். வாழைப்பழச்சாமி சம்மதம் கொண்டு மடத்தை ஒப்புக்கொண்டான்.

இவனுடைய விசேஷம் என்னவென்றால், இவன் நாளொன்றுக்கு இருபது வாழைப்பழம் தின்று ஒரு மிடறு தண்ணீர் குடிப்பான். அதன் பிறகு ஜலபானம் கிடையாது.

இவனும் ஒரு கிளி வளர்த்தான். அதற்கும் கங்கா மங்கா என்று கற்றுக்கொடுத்து, அதையும் சுகப்பிரம ரிஷியென்று சொன்னான். ஆனால் பிரசங்கம் செய்வதில் பழைய சாமியாருக்குள்ள திறமையில் நூற்றிலொரு பங்கு கூட இவனிடம் கிடையாது. ஆகையால் இவனுக்குப் பழைய வரும்படியில் நூறிலொரு பங்குகூடக் கிடையாது. இருந்தாலும் சொற்பத்தைக் கொண்டு ஒருவாறு வாழைப்பழச் செலவை நடத்தி வந்தான். இப்படியிருக்கையில் ஒருநாள் நாலைந்து புதிய சீடருக்குக் கந்தபுராணம் சொல்லத் தொடங்கி வாழைப்பழச்சாமி தனது சுகப்பிரம்ம ரிஷியிடம் கேள்வி போட்டுக் கொண்டிருக்கையிலே, திடீரென்று மடத்துக்குள் பழைய மிளகாய்ப்பழச்சாமி தனது கிளிக்கூடு சகிதமாக வந்து தோன்றினான், சாமிக்கும் சாமிக்கும் குத்துச் சண்டை. மிளகாய்ப் பழச்சாமி காலை வாழைப்பழச்சாமி கடித்துக் காலிலே காயம். வாழைப்பழச்சாமிக்கு வெளிக்காயம் படவில்லை. உடம்புக்குள்ளே நல்ல ஊமைக் குத்து. அப்போது வந்த ஜ்வரத்தில் ஆறு மாசம் கிடந்து பிழைத்தான். குத்துச் சண்டையின் போது கிளியும் கூட்டுக்குள் இருந்தபடியே ஒன்றுக்கொன்று கங்கா மங்கா என்று அம்பு போட்டதுபோல் தூஷணை செய்து கொண்டன. அந்தச் சமயத்தில் ஊர்க்கூட்டம் கூடி, அதிகாரியிடமிருந்து சேவகர் வந்து இரண்டு பரதேசிகளையும் பிடித்துக்கொண்டு போய் நியாய ஸ்தலத்தில் விட்டார்கள்.

வாழைப்பழச்சாமியை ஊரை விட்டுத் துரத்திவிடும்படிக்கும், மிளகாய்ப்பழச்சாமி மடத்தை எடுத்துக் கொள்ளும் படிக்கும், இனிமேல் கந்த புராண உபந்யாஸத்தில் வரும் பொன்னில் ஆறிலொரு பங்கு கோயிலுக்கும், நாலில் ஒரு பங்கு அதிகாரிக்கும் செலுத்தி விடும்படிக்கும் நியாய ஸ்தலத்தில் தீர்ப்புச் செய்யப்பட்டது.

பின்னுரை

கிளிக்கதை என்ற தலைப்பு எப்படி இந்தக் கதைக்குப் பொருந்தும்.  கிளிகளுக்கு ஒரு முக்கியத்துவமும் இல்லாமல் இருக்கிறதே என்று ஒரு நிரடல் தோன்றியது. அப்போது தான் கிளி விரும்பி சாப்பிடும் மிளகாய், வாழைப் பழம் போன்ற பெயர்களை சாமியாருக்கு வைத்து கிளிக் கதை என்று சரி செய்து விட்டார் என்று தோன்றுகிறது.

இந்தக் கதையைப்  படிக்கும்போது சில வருடங்களுக்கு முன் யாகவா முனிவர் என்பவரும், சிவ சங்கர பாபா  என்பவரும் தொலைக்காட்சியில்  துண்டை வீசி அடித்துக் கொண்ட காட்சி மனத் திரையில் ஓடியது. யுட்யூப் சுட்டி 


இக்கதையைப் பற்றி ஒருவர் எழுதிய விமரிசனம்….. கொஞ்சம் காரம் தான்.

வாழைப்பழச்சாமி மிளகாய்ப்பழச்சாமி என்று ஒரு கதை. முதலிலிருந்து கடைசி வரை சுவையோ பொருளோ அற்ற அசட்டுத்தனத்தில் தாளித்து மூடநம்பிக்கையை முந்திரியாய் தெளித்து  வைத்த கதை. முழுவதும் முட்டாள்தனமாகவே இருந்தது. இது கதையே இல்லை, இதை எப்படி மக்கள் ரசிக்கிறார்கள்?

இது தமிழின் முதல் சிறுகதையாக அமைய வேண்டியது. ஆனால் சிறுகதைக்கு என்று வகுக்கப்பட்ட விதிகளுக்குப் பொருந்தவில்லை என்று நிராகரிக்கப்பட்டது.

மேற்க்கூறிய கருத்துக்களை நான் ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்யவில்லை

தமிழில் முதல் சிறுகதை என்று போற்றப்படும் வே சு அய்யரின்குளத்தங்கரை ஆலமரம்அடுத்த வாரம்

கதை ஆசிரியர் (சுட்டி)

ഭാരദി 

17 கருத்துகள்:

 1. // துண்டை வீசி அடித்துக் கொண்ட காட்சி மனத்திரையில் ஓடியது//

  மனச்சிறையில் சிக்கிக் கொண்டது தான் மனத்திரையில் காட்சியாய் ஓடும். என்ன சொல்கிறீர்கள் ஜேஸி ஸார்? உங்கள் மனச்சிறையுண்ட எது பற்றியானும் செவ்வாய்க் கிழமைக்கு சிறுகதையாய் எழுதுங்களேன். எபியில் செவ்வாயிலும் உங்களைப் பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 2. மஹாகவியின் கதைகள்
  காலத்தின் கண்ணாடியாய் முகம் காட்டும். இந்தக் கதையின் முகமும் அப்படித்தான். பிற்கால
  புதுமைப் பித்தனின் கதைகளிலும் இதே சாயல் தென்படுவதை ஓர்ந்து பார்த்தால் உணரலாம்.

  பதிலளிநீக்கு
 3. பாரதியாரின் கதைகள் - பன்முக நோக்கு என்றொரு ஆய்வு நூல் வாசித்திருக்கிறேன். ஆய்வு செய்தவரின் பெயரும் சுப்பிரமணியன் என்று நினைவு. காவ்யா வெளியீடு.

  பதிலளிநீக்கு
 4. பாசீடிவ் செய்திகள் அனைத்தும் மனிதநேயத்தை சொல்கிறது.
  அனைவருக்கும் பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. கதை எழுதியவர் பாரதியார். முன்பு படித்து இருக்கிறேன்.
  பகிர்வுக்கு நன்றி.
  கழுகுமலையில் மிளகாய்பழசித்தர் ஜீவ சமாதி இருக்கிறது அங்கு போய் வந்து , அவரைப்பற்றி பதிவு போட்டு இருக்கிறேன்.

  வ வே சு அய்யரின் “குளத்தங்கரை ஆலமரம்” படித்து இருக்கிறேன்.
  ஆலமரம் கதை சொல்லும்.

  பதிலளிநீக்கு
 6. இந்த நாளும் இனிய நாளே..

  எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

  நலமே வாழ்க..

  பதிலளிநீக்கு
 7. கதை, விமர்சகர் சொன்னது போல மூடநம்பிக்கை என்றுதான்.... தோன்றியது.

  பதிலளிநீக்கு
 8. உதவும் கரங்களை வாழ்த்துவோம்.

  'கிளிக்கதை ' 'சிறுகதைக்குள் அடங்கவில்லை என நிராகரிக்கப்பட்டது'என்று கூறியுள்ளீர்கள். படிக்கும்போது அது போல்தான் தோன்றியது.

  பதிலளிநீக்கு
 9. தவறு ஏற்பட்டது. நான் அரசமரம் என்று தான் எழுதியிருந்தேன். தங்களுடைய விமரிசனமும் படித்தேன்.

  பதிலளிநீக்கு
 10. பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் நன்று. குறிப்பாக மணியம்மாள் மற்றும் ரயில் விபத்தைத் தடுத்த சூரியா...

  கீதா

  பதிலளிநீக்கு
 11. உயர் பதவியில் இருந்தாலும் தன் கண் முன் கண்ட விபத்தில் சிக்கியவரைக் கண்டதும் உடனடியாக உதவிய நம் இறையன்பு அவர்களுக்கும் வணக்கங்கள் பாராட்டுகள்,

  கீதா

  பதிலளிநீக்கு
 12. பாரதியார் எழுதிய கதை என் நோக்கில் நல்ல நையாண்டி செய்திருப்பதாகத் தெரிகிறது. பகடி செய்திருப்பதாகத் தெரிகிறது. இதில் உள்ளர்த்தம் - என் சிறிய அறிவுக்கு எட்டியது -

  //அதிகாரி அடியார் விசுவாச முள்ளவனாகையால் அந்தப் பரதேசி சொன்னதை நம்பி, அவர் பொன்னை, தான் தேடப்போனது குற்றமென்று நினைத்து, மேற்படி மிளகாய்ப் பழச்சாமிக்கு வருஷந்தோறும் மேற்படி மடத்தில் குருபூஜை நடத்தி வைப்பதாகவும், மடத்தை வாழைப்பழச் சாமி வைத்துக் கொண்டு கந்த புராணப் பிரசங்கம் செய்து வந்தால் திருவிளக்குச் செலவு, தான் கொடுத்து விடுவதாகவும் சொன்னான். வாழைப்பழச்சாமி சம்மதம் கொண்டு மடத்தை ஒப்புக்கொண்டான்.//

  சாமியார், அடியார் என்றாலே அப்பக்கம் சாயும் அதிகாரிகள், ஆளுபவர்கள் இப்பவும் இருக்காங்களே! அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு...ஏன் அரசியலில் கூட சாமியார்கள் உண்டே! அதனால் விளைந்த பாதகங்கள் நம் எல்லோருக்கும் தெரிந்ததுதானெ.....பாரதியின் காலத்தில் அப்படி யாரேனும் இருந்தாங்களோ? அக்காலகட்டத்தை அறிந்தவர்கள் சொல்லலாம்...

  //ஆறிலொரு பங்கு கோயிலுக்கும், நாலில் ஒரு பங்கு அதிகாரிக்கும் செலுத்தி விடும்படிக்கும் நியாய ஸ்தலத்தில் தீர்ப்புச் செய்யப்பட்டது.//

  ஹாஹாஹா இப்போதைய நிலை அப்படியே!!!! சொல்லப் போனால் அப்ப ஆறிலொரு பங்கு கோயிலுக்குப் போச்சு...இப்ப?!!!!

  சிங்களத் தீவுனுக்கோர் பாலமைப்போம் என்று பாடியதை நாம் மெச்சுகிறோமே....அவன் கனவு என்று...அப்படி இக்கதையையும் நல்ல நையாண்டி, பகடி என்று சொல்லலாமே!

  பிதற்றும் சாமியார்கள் இல்லையா என்ன...ஜெ கே அண்ணா சொல்லியிருக்கும் இரு உதாரணங்கள் உட்பட....

  கீதா

  பதிலளிநீக்கு
 13. கௌ அண்ணா, ஏன் படம் போடவில்லை இக்கதைக்கு? நான் எதிர்பார்த்தேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 14. பாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

  நூறு வருடங்களுக்குப் பிறகு இப்போதையக் காலகட்டத்திற்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறது மகாகவியின் சிறுகதை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!