திங்கள், 23 ஜனவரி, 2023

'திங்க'கிழமை : அ மா உம்மா - கௌதமன் ரெஸிபி

 

இன்றைய பதிவில் எனக்கு மிகவும் பிடித்த அரிசி மா உருண்டை (உப்புமா) செய்வது எப்படி என்று எழுதுகிறேன்.

இந்த உணவிற்கு உப்புமா என்று பெயர் வைத்தவர் என் கையில் சிக்கினால் அவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவேன்.

தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை உப்புமா!

போகட்டும் நாம் வேறு ஏதாவது நல்ல பெயர் சூட்டுவது பற்றி பிறகு யோசிப்போம்.

அ மா உம்மா (ஹி ஹி ) செய்ய தேவையான பொருட்கள் :

அரிசி மாவு 100 கிராம் (ஒரு நபருக்கு)

மோர் மிளகாய் வற்றல் – 1

கடுகு ½ டீஸ்பூன்

உளுந்து 1 டீஸ்பூன்

கடலை எண்ணெய் : குறைந்தபட்சம் 100 மி லி

பெருங்காயத் தூள் : ஒரு சிட்டிகை

பொடி உப்பு : 1/8 டீஸ்பூன்

புளித்த கெட்டித் தயிர் : ஒரு கப்.

செய்முறை :

நான் உபயோகித்தது Mannaa அரிசி மாவு. அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

அந்த மாவில், உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.

அதன் பின், அந்தக் கலவையில் சிறிது சிறிதாக தயிர் சேர்த்துப் பிசையவும். இந்தக் கலவை இட்லி மாவு பதத்திற்கும், தோசை மாவு பதத்திற்கும் இடையில் உள்ள பதத்தில் வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை ஏற்றி, எண்ணெய் ஊற்றவும். (வாணலியில்தான்!)

எண்ணெய் காய்ந்ததும், கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், உளுந்து, உடனேயே மோர் மிளகாயை ஐந்து துண்டுகளாக்கி போடவும். 

மிளகாய் பொன்னிறம் வந்ததும், எண்ணெயில் மாவு கலவையை தடி தோசை போல வார்க்கவும்.

தோசையின் கீழ்ப் பகுதி பொன்னிறமாக வெந்ததும், தோசையைத் திருப்பவும்.

தோசையின் இரண்டு பக்கங்களும் பொன்னிறமாக ஆனதும், தோசைத் திருப்பியைக் கையில் எடுத்து, அந்த தோசையை (உங்கள் மனதுக்குள் மாமியார் அல்லது மாமனாரை நினைத்தபடி – பல்லைக் கடித்துக் கொண்டு ) கண்ட துண்டமாக வெட்டு வெட்டு என்று வெட்டுங்கள்.

நன்றாகப் புரட்டிப் புரட்டி இப்படிக் கண்ட துண்டமாக வெட்டினால் நமக்குக் கிடைப்பது சுவையான அமா உம்மா !!

இதில் மோர் மிளகாய் சேர்த்திருப்பதால் வேறு ஸைட் டிஷ் எதுவும் தேவை இல்லை.

செய்து பாருங்கள், சுவைத்து மகிழுங்கள்!. 

= = = = =


33 கருத்துகள்:

 1. இந்நாளும் இனிய நாளே..

  எல்லாருக்கும் இறைவன் நல்லருள் புரியட்டும்..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 2. அன்பின் கௌதமனின் கை வண்ணம் அருமை..

  இப்படியும் ஒரு எளிய சமையல் குறிப்பு!..

  வாழ்க உப்புமா..

  பதிலளிநீக்கு
 3. கௌ அண்ணா சுவையோ சுவை....மிகவும் பிடித்த பதார்த்தம் எனக்கு...மோர்க்கூழு செய்வதின் அடுத்த பருவம் இது!!!

  கீதா'

  பதிலளிநீக்கு
 4. இதிலேயே தயிர்/மோருக்குப் பதில் புளித் தண்ணீர் சேர்த்து கொத்துப் பரோட்டா மாதிரி கிண்டினா...புளி உப்புமா!!! அதுவும் என் ஃபேவரைட்!

  கீதா

  பதிலளிநீக்கு
 5. கௌ அண்ணா ரொம்ப நல்லா ருக்கு படங்கள் மட்டுமில்ல நீங்க செய்தவிதமும்..

  கீதா

  பதிலளிநீக்கு
 6. ஹிஹிஹி! மேற்கண்ட சுட்டியில் நான் இடியாப்பம் செய்யப் போய்ப் புளி உப்புமாக் கிண்டிய கதை(திப்பிசம்) சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பச்சைமாவுப் பொடி உப்புமாவும் தயிர் கடையும் அன்னிக்குப் பண்ணுவேன். இந்தத் தரம் அமாவாசை அன்று புளிச்ச மோர் விட்ட உப்புமா தான் இரவுப் பலகாரம். ஆனால் அரிசி மாவுக்குப் பதிலாக ரவையில் பண்ணினேன்.

  பதிலளிநீக்கு
 7. இந்த உப்புமாவுக்கு நான் நல்லெண்ணெய் தான் சேர்ப்பேன். பொதுவாக அரிசி உப்புமா எனில் தே.எண்ணெயிலும் மற்ற உப்புமாக்கள் நல்லெண்ணெயிலும் பண்ணுவேன்.

  பதிலளிநீக்கு
 8. அ மா உம்மா செய்முறை நன்றாக இருக்கிறது .
  கோபத்தை காட்ட பாவம் மாமனார், மாமியாரா?


  கொத்து பரோட்டோ போல தோசையை கொத்தி உதிர் உதிராக எடுங்கள் என்று சொல்லி இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமையாக உள்ளது. அழகான படங்களுடன் மோர் மிளகாயுடன் சேர்ந்த அரிசி மாவு உப்புமா கமகமவென்ற வாசத்துடன் நன்றாக வந்துள்ளது. நானும் இப்படித்தான் செய்வேன். சமயங்களில் புளியை கரைத்து விட்டு உதிர்ப்பேன். அதற்கு கண்டிப்பாக மாமியார், மாமனார் உதவி வேண்டும். ஹா ஹா ஹா. இதற்கு வேறு சுற்றங்களை நினைத்தாலே போதும். :))) சுவையான உப்புமாவுக்கு மிக்க நன்றி. நாளைக் காலை டிபன் எங்கள் வீட்டில் இதுதான் என நேற்றே நேயர் விருப்பங்கள் வந்து விட்டன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. ரசனையான பகிர்வு. சுவையாகவும் இருக்கும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!