11.7.26

வாரம் ஒரு பாசுரம் பகுதி 28 AND நான் படிச்ச கதை

  

நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 28 

இராமானுஜர், கற்றுக்கொள்ளும் நிலையில் இருந்து, கைங்கர்யங்கள் செய்யும் நிலைக்கு மாறி, குடும்பஸ்தனாக இருந்து அதிலிருந்து சன்னியாசியாக மாறிய நிலையைப் பார்த்தோம். தன் இருப்பிடமான காஞ்சீபுரத்தை விட்டுவிட்டு திருவரங்கம் நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டார். இனி பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் தருணம். அவருடன் திருவரங்கம் சென்றது, கூட்டிக்கொண்டு வரச் சென்றிருந்த திருவரங்கப் பெருமாள் அரையர், கூடவே சீடர்களாக இருந்த கூரத்தாழ்வான் மற்றும் முதலியாண்டான், மற்றும் சிலர். 

அவர் குழாம் வடதிருக்காவிரியை கொள்ளிடக் கரையில் அடைந்து காவிரி ஸ்நானம் செய்து தயாராக இருக்கும் சமயம், திருவரங்கம் கோயிலிலிருந்து பெரிய நம்பியும் பிற பெரியவர்களும் மேள வாத்தியத்துடன் இராமானுஜரை காவிரிக் கரையில் எதிர்கொண்டு அழைத்தார்கள். இராமானுஜர் பெரிய நம்பியை எண்சாண்கிடையாக வணங்கினார். பிற பெரியவர்களையும் வணங்கினார். 

இராமானுஜர் குழாம், வடதிருக்காவிரியில் திருக்கரம்பன்துறை என்று சொல்லப்படும் ஆளவந்தார் படித்துறை  வழியாக எழுந்தருளி, கிழக்குக் கோபுர வாசல் வழியாக திருவரங்கப் பெருநகருக்குள் எழுந்தருளினார். அவர் சித்திரைவீதி என்று சொல்லப்படும் கலியுகராமன் திருவீதி நுழைந்து பிரதட்சணமாக எழுந்தருளி, உள்துறை வீதியாகிய உத்தரவீதி (திரிவிக்கிரமன் திருவீதி) வலம் வந்து தற்போதைய திருப்பாணாழ்வார் சன்னிதிக்கு எதிரிலுள்ள பெரிய பலிபீடத்தை வணங்கி, ஆழ்வார்களைச் சேவித்து, ஸ்ரீ ரங்கநாயகி தாயாரை சேவித்து, சந்திர புஷ்கரிணியில் தீர்த்தத்தை ப்ரோட்சித்துக்கொண்டு, பரமபதநாதன் சன்னிதியில் எழுந்தருளியிருக்கும் ஆழ்வார் கோஷ்டியைத் தொழுது அணியரங்கன் திருமுற்றத்தை அடைந்து,  ப்ரணவாகார விமானத்தைக் கண்டு கைதொழுது, சேனை முதலியாரையும் சேவித்து அழகியமணவாளன் திருமண்டபத்தில் (சந்தன மண்டபம்) எழுந்தருளினார். அங்கே நம்பெருமாளை கைத்தலத்தால் எழுந்தருளிப்பண்ணிக்கொண்டு வந்தார்கள். அவரைச் சேவித்த பிறகு இராமானுஜர் பெரிய பெருமாளை அடி முதல் முடிவரை அமனலனாதிபிரான் பாசுரம் சேவித்து தரிசனம் செய்தார். (ஸ்ரீரங்கம் கோயில் அமைப்பு நன்றாகத் தெரிந்திருந்தால் இராமானுஜர் கோயிலுக்குள் எந்த வழியாக எந்த வரிசையில் சேவித்துக்கொண்டு வந்தார் என்பது புரியும்) 

அப்போது நம்பெருமாள், திருவரங்கம் கோயில் காரியத்தையெல்லாம் ஆராய்ந்து நடத்தும் என்று அருளிச்செய்தார். நீர் உபய விபூதியையும் உடையவர் என்று தம் திருவாக்கினால் இராமானுஜரைப் பார்த்துக் கூறினார். இராமானுஜர், பெரிய நம்பியைப் பார்த்து, உங்களால்தான் எனக்கு இத்தகைய பயன் வாய்த்தது என்று நன்றி பாராட்டினார். பெரிய நம்பி இராமானுஜரைத் தன் மார்போடணைத்து, அரங்கத்தரவினணையான் கட்டளையால் நீர் உடையவர் ஆனீர், இன்றுமுதல் யாவரும் உம்மை உடையவர் என்ற திருநாமத்தால் சிறப்பிக்கட்டும் என்று கூற, அதிலிருந்து இராமானுஜருக்கு ‘உடையவர்’ என்ற திருநாமமும் வழங்கப்படலாயிற்று. 

கோயில் பெரியவர்கள் இராமானுஜரை உத்தரவீதியில் வடக்கு மாடத் தெருவில், முதல் மனையான சேரன் மடத்திலே விட்டுவிட்டு வந்தார்கள். இதுவே இராமானுஜர் திருவரங்கத்தில் தங்கியிருந்து காரியங்கள் செய்த மடம். தற்போது ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடம் என்று அழைக்கப்படுகிறது. 

அனைவருக்கும் திருவரங்கப் பெருமாள் அரையர், இராமானுஜரை காஞ்சியிலிருந்து திருவரங்கத்துக்குக் கொண்டு வந்ததை நினைத்து மிகவும் மகிழ்ந்தனர். 

இராமானுஜர், தம் மடத்திலிருந்து சமய சம்பந்தமான, சாஸ்திர சம்பந்தமானவற்றை ஆராய்ந்து செம்மைப் படுத்துவதற்கும் புதிதாக கிரந்தங்கள் எழுதுவதற்கும் கூரத்தாழ்வானைத் துணையாகக் கொண்டார். திருவரங்கம் கோயில் நிர்வாகத்தைச் சீர் செய்ய முதலியாண்டானைத் துணையாகக் கொண்டார். 

கோயிலுக்குள்ள விளைநிலம், தோட்டம், நந்தவனம், வரவு செலவு ஆகியவற்றைச் சீர் செய்யத் துவங்கியதும் இராமானுஜருக்கு அவற்றை ஏகபோகமாக அனுபவித்து வந்தவர்களிடமிருந்து கருத்து வேறுபாடுகளும் எதிர்ப்பும் துவங்கின. (இந்தக்காலகட்ட த்தில் இராமானுஜர் திருவரங்கத்திலிருந்து நீங்கி இரண்டு வருடங்கள் திருவெள்ளரை என்ற திவ்யதேச த்தில் வசித்த தாகச் சொல்லுவார்கள்). இருந்தாலும் ஸ்தலத்தார், இராமானுஜர் சொன்ன சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். 

கோயில் காரியங்களுக்குப் பொறுப்பாக, மஹாவித்வானாக இருந்த பெரியகோயில் நம்பி என்பார் (இவருடைய பெயர் அமுதன் என்கிறார்கள்), அந்தப் பகுதி அரசனாலும் விரும்பப்பட்டவராக, கோயிலுக்கு ஏகபோக உரிமையாளராக (அதாவது கோயிலில் தினமும் நடக்கும் நிகழ்வுகளுக்கு) இருந்தார். இராமானுஜர் கோயில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஆரம்பித்தபோது, எனது கோயிலில் நீர் சீர்திருத்தம் செய்யவேண்டாம் என்று ஆட்சேபம் தெரிவித்தார். இதுபற்றி வருத்தமுற்ற இராமானுஜர், அரங்கத்தரவணையானிடம் விண்ணப்பம் செய்தார். (அதாவது பெருமாளிடம் தெரிவித்தார்). அன்று இரவு இராமானுஜர் கனவில் நம்பெருமாள், பெரியகோயில் நம்பி நம்மிடம் வெகுகாலமாகவே பக்தி செய்துகொண்டு இருக்கிறார். அவருக்கு இடையூறு செய்யாமல் மற்ற விஷயங்களில் நீ உம் மனம் போன போக்கில் சரி செய்துகொள்ளும் என்றார். 

மறுநாள் விடிந்ததும், இராமானுஜர், கூரத்தாழ்வானிடம் நடந்ததைக் கூறி, பெருமாள், பெரியகோயில் நம்பி பக்கல் அனுகூலமாக இருந்தால் நாம் எப்படி சீர்திருத்தம் செய்வது, பேசாமல் காஞ்சீபுரத்திற்கே செல்லவேண்டியதுதான் என்று வருத்தப்பட, அதற்கு கூரத்தாழ்வான், பெருமாளுக்கு பெரிய கோயில் நம்பியிடம் ஆசை இருக்குமானால், அவரைத் திருத்தி உங்கள் திருவடிகளில் சேர்க்காமல் இருக்கமாட்டார். அதனால் நீங்கள் கவலைப்படாமல் மற்ற வேலைகளைப் பார்க்கலாம் என்று சொன்னார். அப்படியானால் ஆழ்வானே, நீரே அவரைத் திருத்தும் பணியை ஆரம்பிக்கலாமே என்று இராமானுஜர் கூறினார். 

கூரத்தாழ்வானும் தினமும் பெரிய கோயில் நம்பியைப் பார்த்து, விசிஷ்டாத்வைதத்தின் மாண்பைப் பற்றியும், இராமானுஜரின் பெருமைகளைப் பற்றியும் பேசி, மெதுவாக பெரிய கோயில் நம்பியை இராமானுஜர் பக்கம் திருப்பினார். பெரியகோயில் நம்பிக்கும் கூரத்தாழ்வான் பெயரில் வெகுவாக மரியாதை ஏற்பட்டது. தன் ஆச்சார்யார் என்றே அவரைக் கருதலானார். 

இப்படி இருக்கும்போது, பெரிய கோயில் நம்பியின் தாயார் காலகதி ஆகிவிடுகிறார் (மறைந்துவிடுகிறார்). அவருக்கு உரிய உத்தரக் கிரியைகளை சாஸ்திர பூர்வமாகச் செய்த பெரிய கோயில் நம்பி, பதினோராம் நாள் “ஏகாஹம்” என்ற சிராத்த காரியத்தில் உணவருந்த கூரத்தாழ்வானை அழைத்தார். (ஏகோதிஷ்டம் என்று அழைக்கப்படும் இந்தச் சடங்கில் உயர்ந்த ஒருவரை அழைத்து, இறந்த ஆன்மாவாக அவரைப் பாவித்து உணவளிப்பர். அவருக்கு அளிப்பது, இறந்த ஆன்மாவுக்கே அளிப்பதாகும்). உணவு உண்ட பிறகு, திருப்தியா என்று கேட்பார்கள். அவர் திருப்தி என்று சொன்னால், இறந்த ஆன்மாவே சொல்லுவதாக அர்த்தம். கூரத்தாழ்வானைப் பரத்து, முழுத் திருப்திதானே என்று பெரிய கோயில் நம்பி கேட்கவும், கூரத்தாழ்வான், திருப்தியில்லை என்று சொல்லிவிட்டார். அப்படியானானால் தங்களுக்கு திருப்தி ஏற்பட நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்க,  நீர் உமக்கு பெரியகோயிலில் உள்ள உரிமைகளை எல்லாம் எனக்கு தானமாகக் கொடுத்தால்தாம் எனக்கு மனநிறைவு ஏற்படும் என்று கூரத்தாழ்வான் சொன்னார். பிராம்மணரை திருப்தி செய்தாகவேண்டும்.  இதற்கு வேறு வழி கிடையாது என்பதால், தமக்கு கோயிலில் உள்ள உரிமைகளை  தான சாசனமாக எழுதி கூரத்தாழ்வானுக்குக் கொடுத்தார். இப்படி பெரியகோயில் நம்பியின் கோயில் உரிமைகள் இராமானுஜர் வசம் வந்து சேர்ந்தது. 

இராமானுஜர், கூரத்தாழ்வானை வைத்து பெரிய கோயில் நம்பிக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து, அவருக்கு திருவரங்கத்து அமுதனார் என்ற பெயரும் கொடுத்தார். பிறகு கோயிலில் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட வைகானச ஆகம முறையை மாற்றி எப்போதும்போல பாஞ்சராத்ர ஆகம முறையை இராமானுஜர் ஏற்படுத்தினார். 

(வைகானச ஆகமமுறை என்பது வைகானச முனிவரால் ஏற்படுத்தப்பட்டது. வைகானசம், வேத மந்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த யாக வடிவில் வழிபாடுகளை நடத்துகிறது. வைகானச அர்ச்சகர்கள் மாத்திரமே மூலவர் சன்னிதியில் பூஜை செய்ய முடியும். வைகானசகர்கள் சந்திரமானத்தை நாட்காட்டியாகப் பின்பற்றுகின்றனர். பாஞ்சராத்ர ஆகம முறை, திருமாலால் ஐந்து ராத்திரிகளில் அருளப்பட்டது என்று சொல்கின்றனர். இது ஆகம மந்திரங்களுடன் கூடிய விரிவான வழிபாட்டு முறை.  இவர்களது நாட்காட்டி சூரியமானத்தை பின்பற்றுகிறது.  திருப்பதி திருமலை போன்றவை வைகானச ஆக முறையைப் பின்பற்றுகிறது திருவரங்கம், காஞ்சீபுரம், மேல்கோட்டை மற்றும் பல கோயில்கள் பாஞ்சராத்ர ஆகம முறையைப் பின்பற்றுகின்றன) 

கோயிலொழுகு, என்ன என்ன சீர்திருத்தங்கள் பண்ணப்பட்டன என்று விளக்குகிறது. 

திருமங்கயாழ்வார் காலத்தில் ஐந்து பிரிவாக இருந்து கோயில் காரியங்களைச் செய்துவருகின்றவர்களை பத்துப் பிரிவுகளாகப் பிரித்து, ஸ்தலத்தார், திருப்பணி செய்பவர்கள், பாகவத நம்பிகள், உள்ளூரார், பட்டாள், ஆரிய பட்டாள் என்று மொத்தம் பத்து பிரிவுகள். (ஆரியபடாள் வாசல் என்று ஒன்று உண்டே.. நினைவுக்கு வருகிறதா?). பல வகுப்புகளிலிருந்தும் (சமூகத்திலிருந்தும்) கோயில் காரியங்களைப் பார்ப்பவர்களைத் தேர்ந்தெடுத்தார். 

பெருமாளுக்கு தளிகைக்கு என்ன என்ன அளவில் செய்யவேண்டும் என்பதையும், கறியமுதுக்கு செடிகளில் விளைந்த காய்கறிகள் ஐந்தும் கொடியினில் விளைந்த அகய்கள் ஐந்தும் சேரவும், நறுமண வேர்கள், பல்வகைப் பழங்கள், பாலமுது, சர்க்கரை, நெய் என்ன என்ன உபயோகிக்கவேண்டும் என்றெல்லாம் சீர்திருத்தினார். 

திருவரங்கம் கோயில் கருவறையின் முன் காயத்ரி மண்டபம் உண்டு (அங்குதான் உண்டியல் இருக்கும்). துவார பாலகர்களுக்கு முன் இருக்கும் மண்டபம் முன் பண்டபம் என்றாலும் அதன் பெயர் சந்துனு மண்டபம். அங்குதான், தினமும் விஸ்வரூப தரிசனத்தின்போது பசுமாடும், யானையும் நிற்கும். அரங்கன் தெற்கு நோக்கிப் பள்ளிகொண்டிருக்கிறான். சந்துனு மண்டபத்தின் கிழக்குப் படிகளில் இறங்கினால், அந்த இடத்தில் ஒரு வெள்ளைக்கல் பதிக்கப்படிருக்கும். அதற்கு வடக்கே சுவற்றில் தேவப்பெருமாள் கருடாரூடராய் சேவை சாதிப்பதைக் காணலாம். இந்த இடத்தை தேவராஜன் குறடு என்பர். இங்கிருந்துதான் கோயில் காரியங்களை உடையவர் விசாரிப்பாராம்.  பெருமாளுக்கு திருவமுது செய்ய கொண்டு செல்லப்படும் பிரசாதங்களையும், திருவமுது செய்து பிறகு வருகின்ற பிரசாதங்களையும் இந்த இடத்தில் இருந்துதான் தினமும் பார்ப்பாராம். அவர் இல்லாதபோது முதலியாண்டானை இந்தப் பணியைச் செய்யுமாறு செய்திருந்தாராம். 

(ஒரு தடவை பெருமாளுக்கு தயிர்சாதமும், நாவல் பழங்களும் கண்டருளப் பண்ணச் செய்தபோது, முதலியாண்டானிடம் இப்படி குளிர்ச்சியான இரண்டை பெருமாளுக்கு கண்டருளப் பண்ணலாமா? அவருக்கு இன்று கஷாயமும் அமுது செய்யப் பண்ணியருளும் என்றாராம். அதற்கு முதலியாண்டான், பழங்களுடன் கூடிய எல்லாமே நல்ல உணவு அன்றோ எனக் கூற, கண்டருளப் பண்ணுவது பகவானுக்கு ஏற்றதா என்ற எண்ணம் நமக்கு இருக்கவேண்டும் என்பாராம். இதை எழுதும்போது, நடாதூர் அம்மாள் என்ற ஆச்சார்யரின் வரலாறு நினைவுக்கு வருகிறது) 

நடாதூர் அம்மாள்: இவர் காஞ்சீபுரத்தின் அருகிலிருந்த நடாதூர் கிராமத்தில் பிறந்தவர். இயற்பெயர் வரதராஜன். கிபி 1165-1275 வரை வாழ்ந்தவர்.  இராமானுஜரின் நேரடி சீடரான எங்களாழ்வானின் சீடர் இவர். ஸ்ரீபாஷ்யத்திற்கு வியாக்கியானம் எழுதியதால், வியாக்கியான சிம்ஹம் என்று போற்றப்பட்டவர். இவருடைய சீடர்கள் சுருதப்பிரகாசிகா பட்டர் (இயற்பெயர் சுதர்சன சூரி), கிடாம்பி அப்புள்ளார் போன்ற பலர்.  கலாபக் காலத்தின்போது, பிள்ளைலோகாச்சாரியார் (கிபி 1205-1311), நம்பெருமாளையும் அவரது அணிகலன்கள் உடையையும் எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கிச் சென்றபோது, வேதாந்த தேசிகர், (கிபி 1268-1369) ஸ்ரீபாஷ்யத்துக்கான விளக்க உரையையும், சுருதப்பிரகாசிகா பட்டரின் இரண்டு சிறு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு சத்தியமங்கலம் காடுகள் வழியாக கர்நாடகாவை அடைந்து சத்யாகாலத்தில் பல வருடங்கள் இருந்தார். இது பற்றி வேதாந்த தேசிகர் வரலாறு எழுதும்போது வரும். வடகலை சம்ப்ரதாயத்துக்கு வேதாந்த தேசிகர். தென்கலை சம்ப்ரதாயத்துக்கு ஸ்வாமி மணவாள மாமுனிகள் (கிபி 1370-1443), வேதாந்த தேசிகர் காலத்துக்கு நூறு வருடங்கள் பிற்பட்டவர். வரதராஜன் (நடாதூர் அம்மாள்) காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு திருவாராதனம் செய்யும்போது, பாலமுது, சூடாக இருக்கிறதா என்று தன் விரலை வைத்துப் பார்த்து, பெருமாளுக்கு ரொம்ப சுட்டுவிடக் கூடாதே என்று பார்த்துப் பார்த்து கண்டருளப் பண்ணுவதால் அவரை வரதராஜப் பெருமாள், என் அம்மாவோ என்று சொன்னாராம். அதனால் அவருடைய பெயர் நடாதூர் அம்மாள் என்று ஆகிவிட்டது. நம் எண்ணம்தான் நாம் செய்யும் காரியத்துக்கான பலனை முடிவு செய்கிறது. பெருமாளின் பேரில் எத்தகைய பரிவும் அன்பும் கொண்டிருந்தார் இராமானுஜர், நடாதூர் அம்மாள் போன்றோர் என நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 

இதனை எழுதும்போது காஞ்சி பரமாச்சார்யார் வாழ்வில் நடந்த (அதாவது அன்பர்கள் அனுபவம்) நிகழ்வைப் படித்தது நினைவுக்கு வருகிறது. ஒரு அன்பர், பரமாச்சார்யார் பட த்திற்கு வீட்டில் தினமும் பிரசாதங்கள் கண்டருளச் செய்வார். ஒரு முறை, அவசர அவசரமாக வெளியில் செல்லவேண்டும் என்பதால் சூடான பாலைக் கண்டருளச் செய்தார். மறுநாளோ இல்லை ஒரு சில நாட்களில் பரமாச்சார்யாரைத் தரிசிக்கச் சென்றபோது, அவர், சூடான பாலினால் தன் நாக்கு பொத்துப் போய்விட்டது என்று சொன்னாராம். இதை அந்த அன்பர் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். 

இராமானுஜர், கோயிலின் திருமடைப்பள்ளி திருமண்டபங்கள், கருவூலங்கள் போன்றவற்றைச் சீர் செய்தார். 

கோயிலின் உள்ளே முக்கியப் பணிகள் செய்பவர்களுக்கு, அவர்களது இல்லம் திருமதிளுக்குள்ளே இருக்கவேண்டும் என்பதால், அதற்கு அனுகூலமாக பரிசாரகர்கள், அர்ச்சகர்கள் மற்றும் கைங்கர்யபரர்களுக்கு இந்தத் திருவீதியில் திருமாளிகைகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த வீதி, உள்துறை வீதி என்று அழைக்கப்பட்ட து (இப்போது உத்தரவீதி என்று மருவி விட்டது). இராமானுஜர் காலத்தில், குறிப்பிடத்தக்க ஆசார்ய புருஷர்களைத் தவிர மற்றையோர், அடையவளைந்தானுக்குக் கிழக்கே வெளித் திருமுற்றத்திலும், ஆதிகேசவப் பெருமாள் மாடவீதிகளிலும் வாழ்ந்துவந்தனர்) 

இப்படிப் பல்வேறு சீர்திருத்தங்களை திருவரங்கம் கோயிலில் செய்தார் இராமானுஜர்.

உடையவர் திருமாளிகை, திருவரங்கம் (இப்போது ஸ்ரீ ரங்கநாராயண ஜீயர் மடம்) 

இராமனுஜர் காலத்தில் இதன் பெயர் சேரன் மடம். பிறகு இராமானுஜர் மடம். தற்போது ஸ்ரீ ரங்க நாராயண ஜீயர் மடம்.

திருவரங்கம் கோயில் தோற்றம் (பறவைப் பார்வையில்)

திருவரங்கம் கோயிலும், அதைச் சுற்றியுள்ள திருவீதிகளும் தெரியும் படம். தங்க விமானம் தெரிகிறதா? அதைச் சுற்றி ஒரு உள்சுற்று இருக்கிறதா? அதற்கு பொதுமக்களுக்கும் பிறருக்கும் அனுமதி கிடையாது. கோயிலுக்குள் தெரியும் குளம்தான் சந்திர புஷ்கரணி.

இராமானுஜர், திருவரங்கம் கோயிலைச் சேர்ந்துவிட்டார். அதற்கு ஏற்ற மாதிரி நாம் இராமானுஜர் அனுபவித்த அந்த அரங்கனை அனுபவிக்க வேண்டாமா? 

திருவரங்கத்துக்கு மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற எல்லோரும் பாசுரங்கள் பாடியிருக்கின்றனர். இடம் கருதி, இன்று தொண்டரப்பொடி ஆழ்வார் அருளிய திருமாலை பிரபந்தத்திலிருந்து இரண்டே இரண்டு பாசுரங்களை எடுத்துக்கொண்டுள்ளேன். 

பச்சை மாமலைபோல் மேனி* பவளவாய் கமலச் செங்கண்*

அச்சுதா! அமரர் ஏறே!* ஆயர் தம் கொழுந்தே! என்னும்,*

இச்சுவை தவிர யான்போய்* இந்திர லோகம் ஆளும்,*

அச்சுவை பெறினும் வேண்டேன்* அரங்கமா நகர் உளானே!                      

இந்தப் பாசுரம், தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச் செய்த திருமாலை பிரபந்த த்தின் இரண்டாவது பாசுரம். அரங்கநாதப் பெருமாளின் அழகையும் பெருமையையும் சொல்கிறது. 

பொருள்: திருவரங்கத்தில் உறைபவனே, பச்சை நிறம் கொண்ட பெரிய மலையைப் போன்ற திருமேனியையும், பவளம் போன்று சிவந்த அதரங்களையும், தாமரை போன்று சிவந்த கண்களையும் கொண்டவனே, உன் அடியவர்களைக் காப்பவனே, தேவர்களுக்குத் தலைவனே, ஆயர் குலத்தில் பிறந்த அரும்பு போன்றவனே, உன்னைப் போற்றித் துதிக்கும் இன்பத்தைத் தவிர எனக்கு இந்திர உலகத்தை ஆளக்கூடிய பதவி கிடைப்பினும் வேண்டாம். 

விளக்கம்: ஏறு-தலைவன், சிம்மம்  அச்சுதன் – அழிவற்றவன், வீழ்ச்சியடையாதவன். தன்னைச் சரணடைந்த பக்தர்களைக் கைவிடாதவன். அச்சுவை-இந்திரனாக ஆகக்கூடிய அந்தப் பெருமை  கொழுந்து-குலக் கொழுந்து என்ற பொருளில், சிறு குழந்தை 

குடதிசை முடியை வைத்துக்* குணதிசை பாதம் நீட்டி,*

வடதிசை பின்பு காட்டித்* தென்திசை இலங்கை நோக்கி,*

கடல்நிறக் கடவுள் எந்தை* அரவணைத் துயிலுமா கண்டு,*

உடலெனக்கு உருகுமாலோ* என்செய்கேன் உலகத்தீரே!  

இந்தப் பாசுரம் திருமாலை பிரபந்தத்தில் வரும் பத்தொன்பதாம் பாசுரம். 

பொருள்: மேற்குத் திசையில் திருமுடியை வைத்துகிழக்குத் திசையில் பாதங்களை நீட்டிவடக்குத் திசைக்குத் தன் முதுகைக் காட்டிதெற்குத் திசையில் இலங்கையை நோக்கிஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கும் நீல நிறஎன் தந்தையான இறைவனைக் கண்டு என் உடல் அன்பினால் உருகுகிறதுநான் என்ன செய்வேன்? 

விளக்கம்குட-மேற்குகுண-கிழக்குவட-வடக்குதென்தெற்குஇலங்கை நோக்கி- இலங்கையில் பிரதிட்டை செய்வதற்காகக் கொண்டு சென்ற பிரண்வாகார் விமானத்துடன் கூடிய மூலவர், தன் இருப்பிடமாக திருவரங்கத்தை வைத்துக் கொண்டுவிட்டாலும் விபீடணனின் ஆசையைப் பூர்த்தி செய்யும் விதமாக இலங்கையை நோக்கிப் பள்ளி கொண்டுள்ள தலை. கடல் நிறக் கடவுள்–இறவனின் நிறமாக கடல் போன்ற ஆழ் நீல நிறம், மணி போன்ற நீல நிறம், தண்ணீரைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டுள்ள கருப்பு மேகம் என்றெல்லாம் பல பாசுரங்களில் சொல்லப்படுகிறது.  

இனி அடுத்த வாரம் தொடர்வோம்.

===============================================================================

நான் படிச்ச கதை - JKC

பாலம்

கதையாசிரியர்: மாயாவி

 மாயாவி - Tamil Wiki

மாயாவி - Tamil Wiki

தின/வார இதழ்: கலைமகள்

(1948ல் வெளியான சிறுகதை)

என்னுரை.

மாயாவியின் இயற்பெயர் எஸ். கே. ராமன். ஆசிரியர் பற்றிய விவரங்களை மேலே சுட்டியில் சென்று அறியலாம்.

கதை என்பதா, கட்டுரை என்பதா, அனுபவம் என்பதா, பாலத்தின் சரித்திரத்துணுக்கு என்பதா; தெரியவில்லை.

மாயாவி ஒரு பெரிய எழுத்தாளர்.  கலைமகள் மலருக்கு கதை வேண்டும் என்ற  கோரிக்கைக்கு அவர் எழுதிய கதை இது என்று புரிகிறது. அவர் பம்பாயில் வசித்த காலம். மாதுங்காவின் இரு பகுதிகளையும்  இணைக்கும் ‘Z’ பாலத்தின் மேல் செல்லும்போது கற்பனை சிறகடித்திருக்கலாம். அந்த பாலத்தையே ஒரு பாத்திரமாக்கி அன்றைய காலகட்டத்தில் இருந்த பம்பாய், பம்பாய் தமிழர் பற்றி எழுத ஒரு கதை உருவாகி இருக்கலாம். கதையின் முக்கிய கருத்து ‘திரைகடலோடியும் திரவியம் தேடு, யாதும் ஊரே யாவரும் கேளிர், உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பவையே.

தமிழர்கள் புலம் பெயர்ந்து சென்று திரவியம் தேடி உழைத்தவர்கள். சோழ மன்னர்கள் ஆண்ட காலத்தில் ஸ்ரீவிஜயம், கடாரம், காம்போஜம், இலங்கை ,போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியேறினர் என்றால் ஆங்கிலேய ஆதிக்கத்தில், அவர்கள் ஆட்சிக்குட்பட்ட பிஜி, மலேயா, சிங்கப்பூர், இலங்கை,  மேற்கு இந்திய தீவுகள், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் குடியேறினர், காரணம் அவர்களுடைய முதலாளிகள் மேல் இருந்த ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்ற கொள்கை தான். (தற்போது அவர்கள் தேர்ந்தெடுப்பது அமெரிக்கா, கனடா, திரவியம் தேட  மட்டும்,  வளைகுடா நாடுகள்). 1940-70 கால கட்டத்தில் வேலை வாய்ப்புகள் நிறைய கிடைத்ததால் பம்பாய்க்கு படை எடுத்தனர். 

பாலம் என்ற இக்கதை ஒரு மத்திய வர்க்க தமிழருக்கும் அடுத்த வேளை  உணவின்றி தவிக்கும் ஒரு புலம் பெயர்ந்த தமிழனுக்கும் இடையில் ஏற்படும் ஒரு ‘பாலம்’ பற்றியது. மாதுங்கா ‘Z’ பாலம் அந்த கற்பனைப் பாலத்தை உருவாக்கம் செய்கிறது.

கதை மணிக்கொடி காலத்து கதை. கதை நீளம் அதிகம். சுருக்கலாம் தான். ஆனால் அந்தக்காலத்து அணா பைசா, மைல், கஜம், மாதுங்காவின் தனித்தன்மை போன்ற விவரங்களை, விவரணங்களை  இழக்க விரும்பவில்லை. ஆகவே சுருக்கவில்லை. கதை வழக்கம் போல் sirukathaigal.com இலிருந்து எடுக்கப்பட்டது.

பாலம்    

அந்த நீண்ட பாலத்தின் மீது தனியே நடக்கும் போதெல்லாம் என்னை அறியாமல் ஓர் அச்சம் ஏற்படும்; பைத்தியக்கார எண்ணங்கள் பல தோன்றி மறையும்: ‘திடீரென்று யாராவது திருடர் இடைமறித்து, ஒன்றும் கிடைக்காத கோபத்தில் முதுகைப் பதம்பார்த்து விடுவார்களோ? அல்லது சமீபமாகப் பம்பாயில் நிரந்தரமாகிவிட்டிருந்த கலவரத்தின் எதிரொலி இங்கும் தோன்றி என்னைப் பலி கொண்டு விடுமோ?’

(முதலில் இருப்பது பழைய பாலம்.  பழுது பட்டதால்  இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டப்பட்டது. படம் உதவி இணையம்.)

சில வழிப்பறிகளும், இரண்டொரு கத்திக் குத்துகளும் இடையே அங்கு நிகழ்ந்திருந்த போதிலுங்கூட, இன்றுவரையில் ஆபத்து எதுவும் இன்றி அதை நான் கடந்துகொண்டுதான் வந்தேன். ‘ஒவ்வொரு தடவையும் பாலத்தைத் தாண்டியதும், என் தைரிய மற்ற தன்மையை எண்ணி வெட்கப்படுவேன். ஒரு முறையாவது இத்தகைய பயங்கர எண்ணங்கள் மனசில் எழாமல் அதைக் கடந்துவிட வேண்டுமென்று முயன்றிருக்கிறேன்; ஆனால், அதில் நிரந்தர வெற்றியை என்னால் காணவே முடியவில்லை.

பம்பாய்க்கு வந்து போகும் தென்னிந்தியர் எவருக்கும், மாதுங்கா வில் இருக்கும், ஜி. ஐ. பி. ரெயில்வேத் தொழிற்சாலையின் மீது போடப் பட்டிருக்கும் அந்த நீண்ட பாலத்தைப்பற்றித் தெரியாதிருக்க முடியாது. ‘ஜி.ஐ.பி.மாதுங்கா ‘, ‘பி. பி. அண்டு ஸி.ஐ.மாதுங்கா (சுருக்க மாக ‘பி. பி. மாதுங்கா’) என்று தபால் இலாகாவாலும் ரெயில்வேக் கம்பெனியாராலும் பிரிக்கப்பட்டிருக்கும் மாதுங்காவின் இரு பகுதிகளையும் இணைக்கும் கால் மைல் நீளமுள்ள பாலம் அது. வண்டிகள் ஒடும் பாலம் அல்ல; இரு மாதுங்காக்களுக்கும் இடையே ஜி.ஐ.பி. ரெயில்வேக் கம்பெனியாரின் பிரம்மாண்டமான தொழிற்சாலை வழி அடைத்து அமைக்கப்பட்டிருக்கிறது. ‘வண்டிகளைப்போல ஜனங்களும் அத் தொழிற்சாலையைச் சுற்றிக்கொண்டு ஒரு மாதுங்காவிலிருந்து மற்றொரு மாதுங்காவுக்குப் போக வேண்டாம்; குறுக்கேயே போகட்டும்’ என்ற ரெயில்வேக் கம்பெனியாரின் காருண்ய நினைவின் சின்னமாக அது எழுப்பப்பட்டிருந்தது.

(G I P : Great Indian Peninsular;   B & B & C I : Bombay Baraoda central India 

பாலம் மிகவும் குறுகலானது. சுமார் எட்டடி அகலங்கூட இராது. அதிலும் இரு புறத்திலும் ஆள் உயரத்திற்கு வேலி பிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டிருந்ததால், புதிதாக அதன் வழியே நடப்பவர்களுக்கு, இரு மலைகளினூடே செல்லும் ஒரு குறுகிய கணவாயைக் கடப்பது போன்ற உணர்ச்சி தோன்றும். இரு மாதுங்காக்களின் தனித்தனி ரெயில் நிலையங்களை ஒட்டி அந்தப் பாலம் போடப்பட்டிருந்ததால், ஜன நடமாட்டத்திற்குக் குறைவே இல்லை. அதிகாலையிலிருந்து இரவு முன்னேரம் வரையில் அதன் வழியே நடந்து செல்வது கூடச் சற்றுக் கஷ்டமாகவே இருக்கும். ஆயினும், இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டால், அதில் செல்பவர்களுக்குச் சிறிது பயம் தோன்றவே தோன்றும். பகலில் ஜீவகளை ததும்பி நின்ற பாலம் இரவில் உயிரிழந்து, தனக்குத் துணை தானாக நின்று கொண்டிருக்கும்.

யுத்தம் ஆரம்பிக்கு முன், பம்பாயில் தென்னிந்தியரின் ஜனத்தொகை ஒரு வரையறைக்குள் இருந்தது. அதனால் அன்று அவர்கள் ஜி. ஐ. பி. மாதுங்காவையே தங்கள் ஏகபோகமாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், சண்டையின் போதும், அதன் பின்னும் தென்னிந்தியரின் வருகை படிப்படியாக அதிகரிக்கவே, மாதுங்காவின் வயிறு பிதுங்கும் வரையில் அதை அடைத்த பிறகு, நம்மவர்கள், ‘ஜி. ஐ. பி. பி. பி.’ ரெயில் பாதைகளை ஒட்டிய பம்பாயின் சுற்றுப் படுகைகளில் இடம் பிடிக்கலாயினர், அதிருஷ்டமோ, துரதிருஷ்டமோ, ‘பி. பி.” ரெயில் பாதையை ஒட்டிய படுகைக் கிராமவாசியாக நான் இருந்தேன்.

படுகைவாசிகள் சிதறி வசித்தார்கள். அவர்களின் தொகையும் குறைவு. ஆகவே கூட்டுறவை விரும்பியோ, நண்பர் சுற்றத்தாரைக் காணவோ , தமிழ் மணத்தை நுகரவோ, ஏதாவது ஒரு காரணங்கொண்டு அவர்கள் ஜி. ஐ. பி. மாதுங்காவுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாக இருந்தது. தினந்தோறும் இல்லா விட்டாலும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறைத் தினத்திலாவது, அவர்களுக்கு மாதுங்காப் பிரயாணம் நிச்சயமாக இருந்தே தீரும்.

அதிலும் என்னைப் போன்ற இலக்கியப் பித்துக் கொண்டவனை மாதுங்கா ஆகர்ஷித்தது வியப்பே அல்லது நண்பர்களைச் சந்திப்பதோடு இலக்கியக் கழகங்களில் பங்கெடுத்துக் கொள்ளவும். ஒவ்வொரு நாளிலும் மாலைப்பொழுதில் என்னை மாதுங்காவில் காணலாம். ஆகவே ஜி. ஐ. பி. ரெயில்வேத் தொழிற்சாலைப் பாலத்தோடு எனக்கு மற்றவர்களை விட அதிகத் தொடர்பு இருந்தது என்று கூறினால் தவறாகாது.

இரண்டு மாசத்திற்கு முன் இப்படித்தான் ஒரு நாள் மாதுங்காவிற்குப் போயிருந்தேன். நான் அதிகமாகப் பழகும் சங்கத்தில் ஒரு விழா. பிரபல ஆசிரியர் ஒருவர் தென்னாட்டிலிருந்து விழாவிற்குத் தலைமை வகிக்க வந்திருந்தார். அவர் பிரசங்கத்திலும் விழாவின் கோலாகலத்திலும் என்னை மறந்து இருந்துவிட்டு, இரவு பன்னிரண்டு மணிக்குப் பிறகு படுகையிலுள்ள என் வீட்டிற்குக் கிளம்பினேன்.

வழக்கமாகப் பாலம் வரையில் வந்து என்னை வழியனுப்புவதைக் கடமையாகச் செய்து வந்த நண்பர் அன்றும் என்னுடன் வந்திருந்தார். “என்ன, இந்த நடுராத்திரியில் வீட்டிற்குப் போக வேண்டும் என்கிறீர்களே! இங்கே படுத்திருந்து விட்டுக் காலையில் போனால் போதாதா?” என்றார் அவர்.

நாங்கள் பாலத்தருகே வந்து கொண்டிருந்தோம். என் கண்கள் ஒரு முறை பாலத்தை ஊடுருவி நோக்கின. அதன் நீண்ட வெறிச் சென்ற தோற்றம் வழக்கமான் பயங்கர நினைவுகளை உடனே என்னுள் கிளப்பிவிட்டது. இருந்தாலும் தைரியசாலியைப் போன்று, “எனக்கென்ன ஸார் பயம், ஆண்பிள்ளைக்கு?” என்று அந்த நண்பரிடம் சொன்னேன்.

“ஆமாம்; நடுவழியில் எவனாவது இடைமறித்து நாலு போடு போட்டானென்றால், உங்கள் தைரியமெல்லாம் தெரியும். போன வாரம் ஒருவரிடம் இருந்ததையெல்லாம் பிடுங்கிக்கொண்டு கைகால்கள் ஓடிய அடித்து விரட்டி விட்ட செய்தியாவது உங்களுக்குத் தெரியுமா, இல்லையா?”

அந்த நண்பர் வேண்டுமென்றே என்னைப் பயமுறுத்த எண்ணினாரோ. அல்லது அவர் கூறிய செய்தி உண்மையே தானோ. எனக்குத் தெரியாது. ஆனால் அப் பேச்சால் அவர் என் மனத்தின் உள்பாகத்தில் பெரிய திகிலையும், வெளியே வீறாப்பையும் கிளப்பி விட்டு விட்டார் என்பது மட்டும் உண்மை. இருந்தாலும், விட்டுக் கொடுக்காமல் அவருக்குப் பதில் அளித்தேன். “ஆமாம், கையாலாகாத மனிதர் அகப்பட்டால், சும்மா தெருவோடு போய்க் கொண்டிருப்பவன் கூட நாலு கொடுத்தனுப்பத் தான் நினைப்பான்’ என்றேன்.

“அதற்காகச் சொல்லவில்லை ராமு; கால நிலை சரியாக இல்லாத போது எதற்காக இந்த நடு ராத்திரியில் இப்படித் தனியே போக வேண்டும்? நான் சொல்கிறேன் : இனிமேல், ஒன்று : மாதுங்கா வேலைகளை இரவு முன்னேரத்தில் முடித்துக்கொண்டு ஜன நடமாட்டம் இருக்கும்போதே வீடு திரும்பிவிடுங்கள்; இல்லாவிட்டால், இரவு இங்கேயே தங்க ஏற்பாடு செய்து கொண்டு வாருங்கள்.”

“இனிமேலுள்ள காரியங்களைப்பற்றிப் பிறகு. ஆலோசித்துக் கொள்ளுவோம்: இப்பொழுது நான் போய் வருகிறேன்’ என்று கூறிப் புறப்பட்டேன்.

“கட்டாயம் வீட்டிற்குப் போய்த்தான் ஆகவேண்டுமென்றால் வாருங்கள்; பாலத்துக்கு அப்புறம் வரையில் உங்களைக் கொண்டு விட்டு வருகிறேன்” என்றார் அவர்.

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். இந்தப் பாலத்தை இப்படி அவ வேளையில் கடப்பது எனக்கு ஒன்றும் புதிதல்ல. நீங்கள் கவலைப்படாமல் வீட்டுக்குப் போங்கள்” என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.

நண்பர் சற்று வருத்தத்துடனே வீடு திரும்பினார். நான் பெரிய தைரியசாலியைப் போன்று பாலத்தில் ஏறினேன். ஆனால், அந்தத் தைரிய நிலை ஒரு நிமிஷத்திற்குக்கூட என்னிடம் நிற்கவில்லை. முன்னால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் நீண்டிருந்த வெறிச்சென்ற பாதையை மறுபடியும் நோக்கியபோது என் உடம்பு வழக்கத்திற்கும் அதிகமாக ‘வெடவெட’ வென்று நடுங்கிற்று.

கால்கள் என்னவோ உணர்ச்சியின்றி நடந்து கொண்டு தான் இருந் தன. ஆனால் மனம் விபரீத உணர்ச்சி அலைகள் மோதத் துடித்துக் கொண்டிருந்தது. ‘அவர் அவ்வளவு வருந்தி அழைத்தபோது பேசாமல் திரும்பாமல் இருந்தேனே!’ என்ற வரையில் என் ஆலோசனைகள் வந்து விட்டன.

எப்படியோ, பலத்தில் பாதி தூரம் வந்து விட்டேன். ஊசி விழுந்தால் கூட ஓசை கேட்குமாறு நிச்சப்தம். பெரிய பம்பாய் நகரமே உறங்கிவிட்டது. ஏன்? உலகமே உறங்கிவிட்டது. நான் மாத்திரம் கொழுப்பேறி நடந்துகொண்டிருந்தேன்.

அந்த நண்பர் கூறியது போல, பம்பாயில் அமளி அச்சமயம் சற்றுப் பரவித்தான் இருந்தது. நான் நடந்து கொண்டிருந்த அப் பாலத்தில், இரண்டொரு மாசங்களுக்கு முன்பு ஒரு கத்திக்குத்து நடந்திருந்தது. இப்பொழுது பார்த்து அச்சம்பவம் என் நினைவுக்கு வந்தது. அது சற்று முன்பே நினைவுக்கு வந்திருந்தால் நண்பருடன் திரும்பியிருந்தாலும் இருப்பேன். இனி என்ன செய்வது? வருவது வரட்டுமென்று நடக்க வேண்டியது தான். இது வரையில் நினைத்திராத தெய்வங்களையெல்லாம் நினைத்துப் பிரார்த்தித்துக் கொண்டே நடந்தேன்.

அப்பாடா! ஒரு மட்டும் பாலத்தின் கோடி வந்தது. படிகளிலும் இறங்க ஆரம்பித்துவிட்டேன். இன்னும் சில கஜங்கள் சென்றுவிட்டேனானால் ‘பி.பி.’ மாதுங்கா ஸ்டேஷன். இனிப் பயம் இல்லை. இங்கிருந்து கத்தினால் கூட ஸ்டேஷனுக்குக் கேட்காமல் இராது. அங்கே யாராவது இல்லாமலா போய்விடப் போகிறார்கள்?

சிறிது சாதகமான சமாதானம் கிடைத்துவிட்டால், மனசு அசாதாரணத் தைரியம் கொண்டு விடுகிறது. இல்லாவிட்டால், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பாலத்தைத் தாண்டி வந்த நான், இறங்கிக் .. கொண்டிருந்த படிக்கட்டின் அடியில் குசுகுசுவென்ற பேச்சுக் குரல் . கேட்ட போது, அவ்வளவு தைரியத்துடன் நின்று, “யார் அங்கே?” என்று கேட்டிருக்க மாட்டேன்.

“நான் தானுங்க; வழிப்போக்கனுங்க” என்ற பதில் தமிழில் வந்ததும் என் தைரிய நிலை உச்சியை எட்டிற்று.

“யாரது? இப்படி வெளியே வா, வெளிச்சத்திற்கு” என்று ஒரு வீரனைப் போல அதட்டினேன்.

கறுத்துத் தடித்த, ஆனால் வலு குன்றிய ஓர் ஆண் மகன் பாலத்தடியிலிருந்து வெளியே வந்தான். திடகாத்திரமான சரீரம்; இருந்தாலும் சோர்வுற்றுக் காணப்பட்டான். இடையில் ஓர் அழுக்குத் துணியையன்றி உடம்பை எதுவும் மூடியிருக்கவில்லை. கிராப்புத் தலை எண்ணெய் வாசனை அறியாது மறந்து கொண்டிருந்தது. மீசையும் தாடியும் முகத்தை மறைத்திருந்தாலும், வாலிபப் பருவத்தில் இருப்பவன் என்பதை அறிவுறுத்தின.

“சாமி” என்று கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டு நான் நின்ற ராந்தல் கம்பத்தடிக்கு வந்தான்.

“யாரப்பா நீ? பாலத்தடியில் என்ன செய்கிறாய்?” என்று கேட்டேன்.

“சும்மா இங்கே படுத்து ராப்பொளுதெத் தள்ளிப் போடலாமின்னு வந்தேனுங்க” என்றான் அவன்.

“பேச்சுக் குரல் கேட்டதே? கூட யாரங்கே? அவனையும் வெளியே கூப்பிடு; பார்க்கலாம்.”

“அவன் இல்லேங்க; அவளு..அவளு…” அவன் தயங்கினான்.

“ஏன் தயங்குகிறாய்? இங்கே கூப்பிடு; அந்த அவள் யாரென்று பார்க்கலாம்!”

என் மனசில் லேசாக ஒரு சந்தேக ரேகை எழுந்தது. முன்பு அந்தப் பாலத்தின் எதிரே இருந்த குப்பைமேட்டில், பிச்சை எடுப்பதையே தொழிலாகக் கொண்ட பாமரத் தமிழரின் கூட்டம் ஒன்று நிரந்தரமாக மனைவி குழந்தைகளுடன் குடிசை போட்டுக்கொண்டு தங்கியிருந்தது. சமீப காலத்தில் அந்த வட்டாரத்தில் நடந்த சில திருட்டுகளுக்கு இந்த மக்களே காரணமாக இருக்கலாமென்று சந்தேகித்த போலீசார் அவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டார்கள். இப்பொழுது பாலத்தடியில் அந்தக் கோஷ்டியைச் சேர்ந்தவன் போலத் தோன்றிய ஒருவனைக் கண்டதும், ‘இவனும் அத்தகைய செய்கையில் எதிலாவது ஈடுபட இங்கே வந்து பதுங்கியிருப்பானோ? கூட இருப்பது பெண் என்றால், அவன் மனைவியாக இருப்பாள் என்று நினைத்துக் கொண்டு நான் பேசாமல் போய் விடுவேன் என்று சொல்லியிருப்பானோ?’ எனச் சந்தேகித்தேன்.

ஆனால், அவன் பாலத்தடிக்குச் சென்று, “ஏ முத்தம்மா; இந்தா. இப்படிச் செத்தே வந்திட்டுப் போ; யாரோ நம்ம தமிழ் ஐயா வந்திருக்கிறாரு, பாரு” என்று கூப்பிட்டதும், உண்மையாகவே ஒரு வாலிபப்பெண் வெளியே வந்தாள். “கும்பிடறேனுங்க” என்று அவள் என் எதிரில் வந்து நாணிக் கோணி நின்றாள்.

கன்னங்கறேலென்ற இளமையோடிய தேகத்தை முழுவதும் மூட ஆடையின்றி, ஏதோ கிடைத்த கந்தலை அங்கொன்றும் இங்கொன்று மாகச் சுற்றிக்கொண்டிருந்தாள். யௌவனத்தின் சோபை முகத்தில் காணப்பட்டாலும், நீண்ட அயர்வின் சாயலும் அதில் தென்படாமல் இல்லை .

என் மனசில் இருந்த சந்தேகம் இப்பொழுது விலகிப் போயிற்று. அவர்கள் கோலம் என் மனசைக் கனிய வைத்தது. ‘இங்கே ஏனப்பா வந்து தங்கியிருக்கிறீர்கள்?’ என்று இரக்கம் தோன்றக் கேட்டேன்.

“நாங்க இந்த ஊருக்குப் புதுசுங்க; பொளுது சாயுறப்போதான் இங்கே வந்தோமுங்க” என்றான் அவன்.

“நீங்க எந்த ஊரு?”

“எங்க ஊரு திருநெல்வேலியுங்க; ஆனா அதை வுட்டு வந்து ரொம்ப நாளாச்சுங்க.”

“எந்த ஊரில் இவ்வளவு நாளாக இருந்தீர்கள்?”

“கராச்சியிலேங்க.”

‘கராச்சி’ – அந்த ஒரு வார்த்தை என் மன நிலையை எவ்வளவு தூரம் மாற்றிவிட்டது? சமீபமாக அங்கிருந்து வந்திருந்த நம் அகதிகளில் சிலரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அங்கு அநுபவித்த கஷ்டங்களை அவர்கள் விஸ்தரித்தபோது என் கண்களில் நீர் சுரந்தது. நான் நினைத்தேன்: ‘அவர்கள் படித்தவர்கள்; வாக்கு வன்மை உடையவர்கள். அவர்களே அத்தகைய கஷ்டங்களை அனுபவித்திருந்தால், என் முன் நிற்பவனைப்போன்ற பேச்சுரிமையற்ற ஜீவன்கள் எவ்வளவு துன்பத்திற்குள்ளாகியிருக்க வேண்டும்?’

“உன் பெயர் என்னப்பா?” என்று அவனைக் கேட்டேன். “சம்முகமுங்க” என்றான் அவன். “அது சரி; ஏதாவது சாப்பிட்டீர்களா இன்று?”

“சாப்பாடேது ஒண்ணேது சாமி? மூணு நாளாக் கொலைப் பட்டினி. எப்படியாவது உயிர் பொளைச்சாப் போதுமின்னு ரெயிலேறிப்புட்டோம். உசிரைக் காப்பாத்திக் கொண்டாந்துட்டோம். இனிமேத்தான் சாமி, சாப்பாட்டைப் பத்தி நினைக்கணும்.”

நான் சட்டைப் பைகளைத் தடவினேன். நல்ல வேளையாக அதில் சிறிது பணம் இருந்தது. நடு இரவாகிவிட்டபோதிலும், ஸ்டேஷன் பிளாட்பாரத்திலிருந்த ஹோட்டல் திறந்தே இருக்கும். ‘பாவம்; மூன்று நாட்களாய்ப் பட்டினி!’ நினைப்பதற்கே பயமாக இருந்தது. அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு ஸ்டேஷனுக்கு நடந்தேன்.

பசி ஆறியதும், அவர்கள் மறுபடியும் நன்றி தோன்ற என்னைக் கையெடுத்துக் கும்பிட்டார்கள். ஷண்முகம் அந்த ஸ்திரீயிடம் திரும்பி,

“இந்தா முத்தம்மா; செத்தெ முந்தி என்னமோ சொன்னியே? இப்போ பாத்தியா? அதுதான் நான் சொல்லலே: ‘நம்ம மனுசங்க எவுங்களாவது கண்ணிலே பட்டா, நம்ம பசி ஆறிப்போவு’ மின்னு ; சரியாப் போச்சா?” என்றான்.

“என் மவராசா, சாமி! புள்ளே குட்டியோடு நூறு வருசம் மவா ராசா மாதிரியே வாளணும்!” என்று என்னை வாழ்த்தினாள் முத்தம்மாள்.

நான் கடிகாரத்தைப் பார்த்தேன். கடைசி ரெயில் வருவதற்கு இன்னும் கால் மணி நேரம் இருந்தது. ஆகவே பேச்சைத் தொடர்ந்தேன்: “என்னப்பா ஷண்முகம், உங்களுக்குக் குழந்தை எதுவும் இல்லையா?”

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். “என்ன புள்ளே, சொல்லிப் போடட்டுமா?” என்று முத்தம்மாளிடம் கேட்டான் ஷண்முகம்.

“அடி ஆத்தே, என்னைப் பயங்காட்டுறியாங் காட்டியும்? சொல்லிப் போடேன்.

“ஆமாம்; நம்ம வவுத்துக்குச் சோறு போட்ட மவராசா முன்னாலே சொல்லிப் போடுறேன். அப்புறம் ‘ஞஞ்ஞமுஞ்ஞா’ இன்னியானா?”

அவர்கள் பேச்சின் உள்ளர்த்தத்தைத் தெரிந்து கொள்ள முடியாமல் நான் திகைத்த போது ஷண்முகம் சிறிது வெட்கம் கலந்த தொனியில் சொன்னான்: “இல்லீங்க; நாங்க இனிமேத்தான் கலியாணம் கட்டிக் கிடணம்.”

“இவளுக்கு அப்பன் அம்மா யாரும் இல்லையா?”

“இருந்தாங்க சாமி; எல்லாரையும் பாவி துலுக்கங்க பத்து நாளைக்கு முன்னே கொன்னுப்போட்டாங்க.”

“அட பாவமே! அப்படியானால் இவளை உனக்கு முன்பே தெரியுமா?”

“ம்ஹும்; தெரியாதுங்க; அன்னிக்குக் கலகத்திலே, இவ ஐயா ஆத்தாவைக் கொன்னுப்போட்டு, இவளைக் குண்டுக்கட்டாக் கட்டித் தூக்கிக்கிட்டுப் போனாங்க. ‘குய்யோ முறையோ’ன்னு கத்திக்கிட்டிருந்தா இவ. கலகத்துக்குப் பயந்து நான் ஓடியாந்து கிட்டிருந்தேன்; நம்ம பாஷை காதிலே விளுந்ததும் பார்த்தேன். இவளை ரோட்டிலே போட்டுட்டுக் கலகக்காரங்க ஒரு கடைக்குள்ளே கொள்ளையடிக்க ஓடிக்கிட்டிருந்தாங்க. அப்பிடியே ஒரு எட்டிலெ அந்தக் கட்டோடே தூக்கிக் கிட்டு ஓடியாந்துட்டேன்.”

”ஆமாங்க; என் உசிரு , என் மானம் எல்லாத்தையும் காப்பாத்தி, இங்கே கூட்டியாந்திட்டு, இப்போ, ஒன்னெ ரயிலேத்தி விட்டுடுறேன், ஊருக்குப் போயுடு இங்கிறாரு. இது நாயங்களா?” என்று முத்தம்மாள் தொடர்ந்தாள்.

“ஏன் புள்ளே? நானா ஒன்னே ரயிலேத்தி விட்டுடுறேனின்னேன்? இந்தாங்க சாமி; இது பேச்சை நம்பாதேங்க. அதுவே என்னை ரயிலேத்தி விட்டுடூன்னிட்டு, இப்பொ எம் மேலே பளியெப் போடுது பாத்திங்களா?”

“பின்னே என்ன சாமி? பசி கொடலெத் திங்குது. ஒரு நேரம் சோத்துக்கு வளியெக் காணோம்; அப்ப வந்து, நீ என்னைக் கலியாணம் கட்டிக்கிடுன்னு கேட்டாரின்னா, என்ன சாமி சொல்லுது!”

“பாத்திங்களா சாமி, பளையபடியும் இது பொய் சொல்லுதே? என்னைக் கலியாணம் கட்டிக்கிடூன்னா இவளைக் கேட்டேன்? ‘ஆயுடுச்சு, உசிரெக் காப்பாத்திக்கிட்டோம்; இனிமே பொளைப்புக்கு ஒரு வளி பாக்கணு’மின்னேன். அதுக்கு இவ சொன்னா: ‘ என்னாலெ நீங்க கயிட்டப் படவேண்டாம். என்னை ஊருக்கு ரயில் ஏத்தி விட்டுடுங்களி’ ன்னா. ஊரிலே இவளுக்கு யாருமில்லேன்னு இவதான் ரெயிலிலே வந்துக்கிட்டிருக்கையிலே சொன்னா. ‘ஊரிலே யாரு நீ வரலியேன்னு காத்திருக் காங்களாம்? நீ பேசாம என்னோடே இரு. நான் எப்படியாச்சும் ஒரு வேலை தேடிக்கிட்டு ஒன்னைக் காப்பாத்திக்கிடுறேன்.’ இதுதானுங்க நான் சொன்னேன். இதெத்தான், கலியாணம் கட்டிக்கிடக் கேட்டேனிங்கறா.”

அவர்கள் ஊடல் பேச்சை நான் மிகவும் ரசித்தேன். கதை எழுதும் போது சில சமயங்களில், மிகவும் கஷ்டமான நிலைக்கு வருவதுண்டு; காதலனையும் காதலியையும் சந்திக்கச் செய்துவிடுவேன். பிறகு இரு வரும் தங்கள் காதலைச் சொல்லாமல் சொல்லி வெளிப்படுத்த வேண்டும். இந்த இடத்தில் சம்பாஷணையை எப்படிக் கொண்டுபோவது என்று நான் மண்டையை உடைத்துக்கொள்ளுவேன். அதுபோன்ற ஒரு கட்டம் இப்பொழுது என் முன் எளிதாக விடுபட்ட விதத்தை நான் வியந்து கொண்டிருந்தேன்.

ஷண்முகம் தொடர்ந்து கேட்டான்: “சாமி, எங்கேயாச்சும் ஒரு வேலை பார்த்துக் கொடுக்க மாட்டீங்களா?”

“ஆமாம் சாமி, ஒங்க சோத்தைத் திண்ணு ஒங்க முன்னாலேயே இன்னிக்கு ஒன்னாயிட்டோம். இனிமேலும், என்னென்னிக்கும் ஒங்க உப்பையே தின்னு ஒன்னாயிருக்கிற மாதிரி இவருக்கு ஒரு வேலை போட்டுக் குடுத்திடுங்க” என்று குழைவோடு கெஞ்சினாள் முத்தம்மாள்.

“கராச்சியிலே நீ என்ன வேலை செய்து கொண்டிருந்தாயப்பா?” என்று ஷண்முகத்தைக் கேட்டேன்.

“மில்லிலே இருந்தேனுங்க. இங்கேயும் எதினாச்சும் அதுபோல ஒரு வேலை கெடச்சிச்சின்னா…”

ரெயில் பிளாட்பாரத்துக்குள் வந்து கொண்டிருந்தது. மேலே பேசிக் கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை. பையில் மிகுந்திருந்த பத்து அணாவையும் அவனிடம் கொடுத்து, “இதை வைத்துக்கொண்டு நாளைக்குப் பகல் பொழுதைத் தள்ளுங்கள். சாயங்காலம் நான் இங்கே வரு வேன். அப்பொழுது உனக்குத் தகுந்த வேலை ஏதாவது கிடைக்குமா என்று விசாரித்துக்கொண்டு வருகிறேன்” என்று கூறி அவர்களை அனுப்பி விட்டு ரெயிலேறினேன்.

மறுநாள் மாலையில் என்னை எதிர்நோக்கிப் பாலத்தடியில் காத்து நின்றான் ஷண்முகம். என்னைக் கண்டதும், “எதினாச்சும் அகப்பட்டுதுங்களா?” என்று ஆவலுடன் கேட்டான்.

“வேலை நாம் நினைத்ததும் கிடைத்துவிடாதப்பா; சிநேகிதர்களிடம் சொல்லியிருக்கிறேன். எங்கேயாவது வந்தால் தெரிவிப்பார்கள். நான் உனக்கு வந்து சொல்லுகிறேன்” என்றேன்.

“எதினாச்சும் பாருங்க சாமி. இத்தனை பெரிய ஊரிலே இருந்துக்கிட்டு, பிச்சையெடுத்தா பொளைக்கிறதுங்க?”

அவன் ஆண்மகன். சோம்பேறியல்ல. தன் தேகத்தை ஓடாய்த் தேய்க்கவும் தயாராக இருந்தான். ஆனால் சும்மா எவரிடமும் கை நீட்ட விரும்பவில்லை. இருந்தாலும் வெளி உலகமோ, நான் அவனுக்கு வேலை கொடுக்கும்படி கூறிய நண்பர்களோ அதை உணர்ந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு அரை வயிற்றுக்கேனும் நிரந்தரமாகக் கஞ்சி வார்க்கும் சக்தி எனக்கு இருந்திருந்தால், நானே அவர்களை என்னுடன் அழைத்துப் போயிருப்பேன். அந்த நிலை எனக்கு இல்லையே! கடவுள் ஏழைகளின் வாழ்க்கையை நிலை நிறுத்தும் பணியை ஈவிரக்கமற்ற பணக்காரர்கள் கையில் அல்லவா ஒப்படைத்திருக்கிறார்? அதனால் தானோ என்னவோ நான் இரண்டு மாசங்களாக எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த எளியோனுக்கு ஒரு வேலை தேடிக்கொடுக்க முடியவில்லை.

அந்த இரண்டு மாசங்களிலும் ஒரு வேளை கூட அவன் பிச்சை யெடுத்து வயிற்றை நிரப்பவில்லை. இரண்டொரு தடவை நான் மனம் உவந்து கொடுத்த சிறு பணத்தைக்கூட வாங்க மறுத்துவிட்டான். “சாமி, நிலையான வேலை கெடைக்கலையின்னாலும் எங்க வவுத்துக்கு ஏதோ கெடைச்சிக்கிட்டுத்தான் இருக்குதுங்க. ரெயிலடியிலே போய் நிக்கறேன். நாலு பேரு நாலு சாமானெக் கொடுத்து, சுமக்கச் சொல்லுறாங்க. ஏதோ கொஞ்சம் கெடைக்குது. எங்க பாடும் ஒரு வளியாக் களிஞ்சு போயிடுது. ஆனாலும் சாமி, ஒங்க முன்னாலே அன்னிக்கு எங்க சேர்க்கைக்கு ஒரு பாலம் போட்டுக்கிட்டோம். அந்தப் பாலத்தை, இதோ இந்தப் பாலத்தைப்போலே நெலையா நிறுத்த ஒரு வேலை பார்த்துக் கொடுத்தேங்கன்னா, எங்க தலைக் கொளந்தைக்கு ஒங்க பேரு போட்டிடுவோமுங்க” என்றான் அவன்.

அவன் வேண்டுகோள் என் உள்ளத்தைத் தொடும். ‘இந்தச் சாதுவின் பிழைப்புக்கு ஒரு நிரந்தர வழி காட்ட முடியவில்லையே!’ என்று நொந்துகொண்டே போவேன்.

ஒரே ஒரு வேளைதான் அவன் பசியை ஆற்றினேன். அந்த நன்றியறிதலை அவன் வெறும் வார்த்தைகளால் மட்டிலுந்தானா காட்டினான்? இல்லை; செய்கையும் அதைத் தொடர்ந்தது. ஒவ்வொரு நாளும் வயிற்றுப் பிழைப்புக்கான தொழிலையும் பொருட்படுத்தாது என் வருகையை எதிர்நோக்கிப் பாலத்தடியில் நிற்பான். என்னைத் தொடர்ந்து பாலத்தின் எதிர்க் கோடி வரையிலும் வருவான். இரவு எவ்வளவு நேரமானாலும் சரி; நான் திரும்ப வரும் வரையில் அதே இடத்தில் காத்திருந்து, என்னைப் பத்திரமாகப் பாலத்தைக் கடக்கச் செய்து, ஸ்டேஷனில் கொண்டு ரெயிலேற்றி விட்டு தான் திரும்புவான்.

“நீ எதற்காக அப்பா, நாலு கூலி வருகிற மாலை நேரத்தை எனக்காகக் காத்திருந்து வீணடிக்கிறாய்?” என்று கேட்டால், சொல்லுவான்: “இந்தப் பாலத்தைப்பத்தி ரொம்பக் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேனுங்க. நீங்க ராவுலே தனியே வருகிறீங்க; ஒங்களுக்கு எதினாச்சும் வந்துதுன்னா அது எனக்கு வந்ததுபோல இல்லீங்களா?”

“எனக்காகவே, அவன் வேறு வேலைக்கு யத்தனிக்காது இப்படி அந்தப் பாலத்தடியிலே குடி புகுந்துவிட்டானோ?” என்றுகூட எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. இந்த எண்ணம் தோன்றியதிலிருந்து மனச்சாட்சி என்னை வருத்திக் கொண்டிருந்தது. ‘உன்னால் எவ்விதப் பலனையும் அடையாத ஓர் ஏழையின் பிழைப்பை நீ வேண்டுமென்றே கெடுத்து விடுகிறய்’ என்றது இது.’இந்த நினைவு நாளுக்கு நாள் வலு அடைந்தது காரணமாகச் சென்ற மூன்று நாட்களாக மாலையில் மாதுங்கா செல்லும்’வழக்கத்தைச் சட்டென்று நிறுத்திவிட்டேன்.

ஆனால் மாதுங்கா நண்பர்கள் இதைக் கண்டார்களா? அவர்கள் ஏதேதோ விபரீதக் கற்பனை செய்து கொண்டு எனக்கு டெலிபோன் செய்த வண்ணமாக இருந்தார்கள். “வீட்டில் மனைவி குழந்தைகளெல்லாம் சௌக்கியந்தானே? பின் ஏன் உங்களை இரண்டு மூன்று நாட்களாகக் காணவில்லை?” என்று வியப்புடன் கேட்டார் ஒரு நண்பர்.

இன்னொருவர் அதிலும் ஒரு படி முன்னேறி எனக்கே உடல் கோளாற்றைக் கற்பித்துக் கொண்டார். இவர்கள் எல்லோரையும் விடப் பெரிய போடாகப் போட்டார், என்னை வழக்கமாக வழியனுப்ப வரும் நண்பர். டெலிபோனைக் கையில் எடுத்ததும், “என்ன ஸார்? ராமுவா பேசுகிறது? இருக்கிறீர்களா?” என்று கேட்டார் அவர்.

“இல்லாமல் என்ன?” என்றேன்.

“இல்லை ; திங்கட்கிழமை இரவு விடை பெற்றுக்கொண்டவரை வழக்கத்திற்கு மாறாக மறுபடி காணவும் இல்லை; தகவலும் இல்லை என்றபோது. நாள்தோறும் தனக்கு நித்திராபங்கத்தை ஏற்படுத்தி வந்த மனிதரைக் கடைசியில் பாலம் தண்டித்து விட்டதோ என்று நினைத்தேன்” என்று கூறிச் சிரித்தார்.

விஷயத்தைக் கூறியபோது அவர் இன்னும் கேலியாகச் சிரித்து விட்டு, பைத்தியமாயிருக்கிறதே உங்கள் முடிவு? யாரோ ஒரு வழிப் போக்கனுக்காக நண்பர்களோடு அளவளாவுவதையே தியாகம் செய்யத் துணிந்து விட்டீர்களே! மிக அழகுதான், போங்கள். அதிருக்கட்டும்; இன்று இரவு கட்டாயம் மாதுங்காவுக்கு வாருங்கள். முருகதாசர்’ என்றொரு பக்தர் பஜனை ஸமாஜத்திற்கு வந்திருக்கிறார். தெரியுமோ, இல்லையோ? மிகவும் அற்புதமாகப் பாடுகிறார். பக்தி ரசம் பொழிகிறது அவர் பாடல்களிலே. உங்களுக்குப் பக்தி கிக்தியிலெல்லாம் அவ்வளவு சுவாரஸ்யம் கிடையாதென்பது தெரியும். இருந்தாலும் சங்கீதமாவது. நண்பர்களைப் போலப் புறக்கணிக்கத் தக்கதாயிருக்காது என்று நினைக் கிறேன்” என்று தாக்கினார்.

ஷண்முகத்திற்கு வேலை தேடிக் கொடுத்து அவனைப் பாலத்தடியி லிருந்து கிளப்பும் வரையில் மாதுங்காவிற்குப் போவதில்லை என்று தான் சங்கற்பித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த நண்பரின் தாக்குதல் என் சங்கற்பத்தையும் ஒருவாறு தாக்கிவிட்டது. அதோடு இலக்கியப்பித்தைப் போலச் சங்கீதப்பித்தும் எனக்கு நிறைய உண்டு. ஆகவே அன்று மாலை காரியாலயத்திலிருந்து போகும் வழியிலே, மாதுங்காவில் இறங்கி விட நிச்சயித்தேன்.

ரெயில் வரும் போது மற்றொரு நண்பரைப் பார்த்தேன். “என்ன ‘ஸார். உங்கள் பாலத்தடி ஆசாமி பெரிய பைத்தியமாயிருப்பான் போலிருக்கிறதே?” என்றார் அவர் என்னைக் கண்டதும்.

“ஏன்? என்ன ?”

“‘நீங்கள் முன்பே சொல்லியிருந்தீர்கள் அல்லவா, அவனைப்பற்றி? எங்கள் மில்லில் ஒரு வேலை காலி வந்தது. உங்களுக்கு டெலிபோன் செய்யலாமென்று இருந்தேன். அதற்குள் அவனையே யதேச்சையாக ஸ்டேஷனில் சந்தித்துவிட்டேன். விஷயத்தைச் சொல்லி முந்தா நாள் மில்லுக்கு வரச் சொன்னேன்; வந்து வேலையை ஒப்புக்கொண்டான். அது சரிதான்; ஆனால் எங்கள் மில்லின் வேலைக்காரர்களுக்கெல்லாம், மில் காம்பவுண்டுக்குள்ளே வாடகையின்றி வீடு கொடுக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமே; அதைச் சொல்லி அவனுக்காக ஒதுக்கி வைத்திருந்த வீட்டின் சாவியைக் கொடுத்தேன். அவன் வீடு வேண்டாமென்று சொல்லிச் சாவியைத் திருப்பித் தந்துவிட்டான். பாலத்தடியில் வசிப்பது தான் அவனுக்குச் செளகரியமாயிருக்கிறதாம். எப்படி இருக்கிறது இந்தப் பைத்தியம்? உங்களிடம் கேட்டுக்கொண்டு பிறகு சாவியை ஆபீஸில் திருப்பிக் கொடுத்து விடலாமென்று என்னிடமே வைத்துக் கொண்டிருந்தேன்” என்று அந்த நண்பர் அதை என்னிடம் கொடுத்தார்.

நான் மாதுங்கா ஸ்டேஷனில் இறங்கினேன். ஷண்முகம் வழக்கம் போல் நின்று கொண்டிருந்தான். “ஏனுங்க, மூணு நாளா இந்தப் பக்கம் காணுமே?” என்று கேட்டான்.

அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல், “உனக்கு வேலை கிடைத்து விட்டதாமே?” என்றேன்.

“எல்லாம் நீங்க காட்டிய கருணையுங்க.”

“அது சரி; ஆனால் நீ ஏன் மில்லுக்காரர்கள் கொடுத்த ஜாகையை வேண்டாமென்று சொல்லிவிட்டாயாம்?”

“அது என்னாத்துக்கு எனக்கு? நான் இங்கேயிருந்து பரேலுக்குப் போயுட்டேனின்னா உங்களை எப்படியுங்க தினமும் பார்க்கிறது?”

“என்னைப் பார்க்க வேண்டுமானால் வீட்டு விலாசம் தருகிறேன். விடுமுறை நாட்களில் அங்கே வா; அதற்காகச் சும்மா கிடைக்கிற ஜாகையை வேண்டாமென்கிறாயே, பைத்தியக்காரா!”

“அதுக்கில்லீங்க; நான் என் பாட்டைப் பார்த்துக்கிட்டுப் போயிட்டேனின்னா, நடுச் சாமத்திலே இந்தப் பாதையிலே வருகிற உங்களுக்கு யாருங்க துணை வருவாங்க?”

என் சந்தேகம் சரியாகவே இருந்தது. உலகத்தில் நன்றியறிதல் சிறிதேனும் இருந்தது என்றால் அது அவனைப்போன்ற ஏழைகளிடமே இருந்தது. நேற்று அந்தப் பாலத்தடியிலிருந்து அவர்களைக் கிளப்பி மில் வீட்டுக்கு அனுப்புவதற்குள் எனக்குப் போதும் போதும் என்று ஆகி விட்டது.

தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் பரேலுக்கு ரெயிலேறும்போது ஷண்முகத்தின் கண்களில் நீர் ததும்பிற்று. “சாமி, இனிமேலாவது ராவு முன்னேரத்திலே வீட்டுக்குத் திரும்பிடுறேனின்னு சொல்லுங்க” என்ற போது உணர்ச்சிப் பெருக்கால் அவன் தொண்டை கம்மிற்று.

“ஆகட்டும்” என்று அவனை அனுப்பிவிட்டேன். ஆனாலும் இரவு வீடு திரும்புகையில் பழையபடி நடுராத்திரியில் தன்னந்தனியே தான் அந்தப் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தேன்.

– ஜனவரி, 1948

– கலைமகள் கதம்பம் (1932-1957), வெள்ளி விழா வெளியீடு, முதற் பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை

மணிரத்னத்தின் பம்பாய் திரைப்படம் நினைவில் வந்தது

//சாமி, ஒங்க முன்னாலே அன்னிக்கு எங்க சேர்க்கைக்கு ஒரு பாலம் போட்டுக்கிட்டோம். அந்தப் பாலத்தை, இதோ இந்தப் பாலத்தைப்போலே நெலையா நிறுத்த ஒரு வேலை பார்த்துக் கொடுத்தேங்கன்னா, எங்க தலைக் கொளந்தைக்கு ஒங்க பேரு போட்டிடுவோமுங்க” என்றான் அவன்.

32 கருத்துகள்:

  1. ராமானுஜர் ஸ்ரீரங்கம் பிரவேசித்ததை படிப்படியாக பார்த்தது போல சொல்லி இருக்கிறீர்களே..  அப்படியே புத்தகத்தில்அல்லது வேறு எங்காவது  இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஶ்ரீராம். குரு பரம்பரை புத்தகங்கள், ஆச்சார்யார் வரலாற்றுப் புத்தகங்கள் உள்ளன. இது தவிர, வியாக்கியானப் புத்தகங்களில், நிகழ்வுகளும் ஐதீகங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.

      நீக்கு
    2. ​கலைஞர் டிவியில் தினமும் மாலை 6:30 க்கு வரும் மறு ஒளிபரப்பு ராமானுஜர் சீரியல் பார்க்கிறீர்களா?

      Jayakumar

      நீக்கு
    3. வாங்க ஜெயகுமார் சார். பார்ப்பதில்லை, பார்த்ததில்லை. ஒன்று, திரிக்கப்பட்டிருக்கும் என்று எண்ணியதால் (கருணாநிதி காலத்தது). இரண்டாவது authentic புத்தகங்கள் தரும் உணர்வை நாடகங்கள் தராது என்பதால்.

      நீக்கு
  2. பெருமாளே சிபாரிசு செய்தும் பெரிய கோவில் நம்பியை பிளாக்மெயில் செய்து கூரத்தசழ்வான் இப்படி உரிமையைப் பெற்றது நியாயமான செயலாகுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது இராமானுஜர் சொல்லிச் செய்தது. இதன் மூலம் சம்பிரதாயத்துக்கு மட்டுமல்ல, பெரியகோயில் நம்பிக்கும் தீராப் பெருமையும் கௌரவங்களும் கிடைக்கப்பெற்றன.

      புதிதாக சில விஷயங்களையும் படிப்பேன். ஆனால் வரலாற்று நிகழ்வை முன்பே எழுதிவிட்டதால் அதனை எழுதச் சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை. ஏகோஹத்தில் கூரத்தாழ்ஒஆன் அமர்ந்ததால் அவருக்கு பொருள்களும் (குளபாத்திரம், வேஷ்டி உத்தீர்யம், பணம் போன்று) பெரியகோயில் நம்பி கொடுத்தார். அதனை, அவர் வீட்டைவிட்டு வெளியில் வரும்போதே பிறருக்கு தானம் செய்துவிட்டார் கூரத்தாழ்வான்.

      மடத்திற்கு வந்து இராமானுஜரிடம் கோயில் சாவியை ஒப்படைத்தபோது, இராமானுஜர், அர்த்தம் கொண்டுவரவில்லையா என்றார் (அர்த்தம்-பொருள்கள், தானமாக்க் கொடுக்கப்பட்டவை). அதற்கு கூரத்தாழ்ஒஆன், ஶ்ரீவைஷ்ணவனுக்கு அர்த்தம் அனர்த்தம் என்பதால் (பொருள் சேர்த்து வைத்துக்கொள்ளக் கூடாது என்ற விதிப்படி) அவற்றை விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்கிறார்.. இதையெல்லாம் படிக்கும்போது, எல்லோரும் கூரத்தாழ்வானாகிவிட முடியுமா? ஶ்ரீவைஷ்ணவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும்... எனத் தோன்றியது

      நீக்கு
    2. //இதையெல்லாம் படிக்கும்போது, எல்லோரும் கூரத்தாழ்வானாகிவிட முடியுமா? ஶ்ரீவைஷ்ணவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும்... எனத் தோன்றியது// கூரத்தாழ்வானின் குரு பக்தி வியக்க வைக்கும்!

      நீக்கு
    3. ஆச்சார்யர்கள், அவர்களின் சீடர்கள் குருபக்தி மிக மிக வியக்கவைக்கும். நம்மால் நினைத்துப் பார்க்கத்தான் முடியும். வரும் பகுதிகளில் நாம் எண்ணிப் பார்க்க இயலாத குருபக்தி சம்பவங்கள் வரும்.

      நீக்கு
  3. நடாதூர் அம்மாள்.  ஆனால் பெயர் வரதராஜன்.என்று படித்து புருவங்கள் உயர்ந்தபோதே பின்னால் வந்த விளக்கம் புருவங்களை கீழே இறக்கியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர் வடகலை சம்பிரதாயத்தில் மிக முக்கியமான ஆச்சார்யர்.

      நீக்கு
  4. இன்றைய இரண்டாவது பாசுரம் வெகு பிரபலம் என்பதால் கூ டவே பாட முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பாசுரமும் பிரபலம்தான். என் அம்மா, தூங்குவதற்கு முன் இரண்டாவது பாசுரத்தைச் சொல்லிவிட்டுப் படுக்கணும் என்பார். இருக்கும்போது இருந்ததைவிட அம்மா அப்பா இல்லாதபோது அவர்கள் நினைவு அடிக்கடி வரும். கையில் இருக்கும் வைரம், தொலைந்தபின் அதன் மதிப்பை எண்ணி உருகுவது போல

      நீக்கு
  5. ஸ்ரீ ராமானுஜர் பற்றி நல்ல விவரங்கள்...
    உடையவர் திருவடி சரணம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார்... செந்தூர் முருகன் உங்களுக்கு அருள் புரியட்டும்.

      இராமானுஜர் வரலாற்றில் நிறைய நிகழ்வுகள் வரும்.

      நீக்கு
  6. கங்கையிற் புனிதமாய காவிரி தழுவும்
    திரு அரங்கமே போற்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவரங்கம் பற்றி 4ம் நூற்றாண்டு சிலப்பதிகாரத்தில் வருகிறது.

      நீக்கு
  7. ஆனாலும்
    இன்று நெல்லை அவர்களது கைவண்ணம்
    சற்றே விரிவு...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு மூன்று பக்கங்கள் எழுதுவேன்... இப்போதெல்லாம் நான்கு பக்கங்களுக்கு மேல். குறைத்தால் ஜவ்வு மாதிரி இழுக்கறேனோ என்ற எண்ணம் வருகிறது. உங்கள் அபிப்ராயம் சொல்லவும்.

      நீக்கு
  8. ராமானுஜர் கதையே அலாதி! படிக்கப் படிக்க ஆவலூட்டும்.
    திருக்கோஷ்டியூர் போயிருக்கிறீர்களா? பத்துப் பனிரெண்டு வருஷம் முன்பு போயிருந்தேன். கதைகளைக் கேட்டேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் சார்... இறைவன் அருளால், 106 வைணவ திருப்பதிகளும் குறைந்தபட்சம் இருமுறை போயிருக்கிறேன். குணசீலம் பலமுறை சென்றிருக்கிறேன். முதன் முறை சென்றது 91 மகாமகத்தின்போது. நாங்கள் குளத்தில் நீராடிவிட்டு பிறகு கும்பகோணத்தைவிட்டு விலகி நடந்துசென்றுகொண்டிருந்தபோதுதான், ஜெ. ஹெலிகாப்டர் சென்றது.

      நீக்கு
  9. மாயாவியின் பாலத்தில் இன்னும் ஏறிப்பார்க்கவில்லை! வருகிறேன்.. மெல்ல!

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    அப்பப்பா... என்ன சொல்ல? ராமானுஜர் திருவரங்கம் வந்து சேர்ந்ததும், அங்கே மாற்றங்களை மேற்கொண்டதும் என ஒவ்வொன்றும் சிறப்பு. தெரிந்த சில விஷயங்கள் இருந்தாலும், மீண்டும் படித்து இன்புற்றேன். வாழ்த்துகளும் பாராட்டுகளும் நெல்லைத் தமிழன்.

    மாயாவி அவர்களின் கதை இனிமேல் தான் படிக்க வேண்டும். கடமைகள் அழைக்கின்றன. பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட் நாகராஜ். பல வெர்ஷன்கள் மற்றும் பலரின் வரலாறுகளைப் படிக்கும்போது புதிய விஷயங்கள் அறிந்துகொள்கிறேன். நன்றி

      நீக்கு
  11. ராமானுஜர் நான் வியந்து போற்றும் ஒரு ஆன்மீகத் தலைவர் என்பதாலும், ஸ்ரீரெங்கத்தில் வசித்ததாலும் இந்த வார குரு பரம்பரை கதையை மிகவும் ரசித்து ரசித்து வாசித்தேன். அந்தக் காலத்தில் ஸ்ரீரங்கம் எப்படி இருந்திருக்கும்? என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். நேற்று திருவரங்கம் கோயில் பற்றி எழுதுவதற்காக புத்தகம் ஒன்றை (பழைய) படித்துக்கொண்டிருந்தேன். அந்த ஊர், அடையவளஞ்சான் வீதி வரை.. எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்று பார்த்தால் அவ்வளவு வித்தியாசம். இராமானுஜர் முதலில் தங்கிய மடம் சேரமான் மடம் என்று அழைக்கப்பட்ட இடத்தில். ஒவ்வொரு அரசர்களோ இல்லை அரசுக்கு நெருக்கமான அமைச்சரோ கோயிலுக்குள் சிறிய கோயில், சன்னிதிகளை அமைத்திருக்கிறார்கள். வீதிகளில் உள்ள பல வீடுகளின் சுவர்கள் அந்தக்கால கற்சுவர்கள் என படிக்கப் படிக்க தகவல்கள்.

      நீக்கு
  12. கதைக்கு நாளைதான் கருத்திட வேண்டும், இப்போது தூக்கம் வருகிறது. இதில் என்ன பிரச்சனை என்றால் நாளை நான் வந்து பின்னூட்டம் இடும் பொழுது இந்தியாவில் மாலை ஆகி விடும். யார் பார்ப்பார்கள் என்று தோன்றுகிறது.
    வியாழக்கிழமை பதிவில் ரதி அகினிஹோத்ரி பற்றி படித்த பொழுது, அவர் திருச்சியில் அப்போது சாரதாஸ் எதிரே இருந்த கீதாஸ் என்னும் ஜவுளிக்கடை விளம்பரத்தில்தான் முதலி நடித்தார்.'வானவில்லும் மெய் சிலிர்க்கும் எதனிக் கண்டு? வண்ண வண்ண கீதா சேலைகளின் அழகைக் கண்டு..." என்ற பாடல் யாருக்காவது நினைவில் இருக்கிறதா?' என்று கேட்டால் யார் பதில் சொல்லுவார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவில்லை என்று பதில் சொல்லுவேன்.

      நீக்கு
    2. ரத்னி அக்னிஹோத்ரியையே தம்தனதம்தன பாடல் இல்லாவிட்டால் நினைவிருக்காது.

      அக்னிஹோத்ரி என்பது தினமும் அக்னி வளர்க்கும் பரம்பரை என்று பெயர். த்விவேதி, த்ரிவேதி, சதுர்வேதி என்று இருப்பவர்களைப் போல (வடநாட்டில் பிராமணர்களில் பலருக்கு இந்த பெயர் உண்டு) ஆனால் சென்ற தலைமுறையிலிருந்து அது வெறும் குடும்பப் பெயராகிவிட்டது

      நீக்கு
    3. :)) முடிந்தால் தேடி எடுத்து போடுகிறேன்.
      விதி என்று ஒரு படம் பாலாஜி தயரிப்பில் சக்கை போடு போட்டதே.. அது ஒரு ஹிந்தி படத்தின் தமிழாக்கம்(பாலாஜி படம் என்றாலே ஹிந்தி ரீ மேக்தானே?) அதில் பூர்ணிமா ஜெயராம் நடித்த ரோலில் ரதிதான் நடித்திருந்தார். மோகன் பாத்திரம் மிதுன் சக்ரவர்த்தி. ரதி ஹிந்தி படங்களில் கணிசமாக நடித்தார். திருமணமாகி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அம்மா ரோலில் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

      நீக்கு
  13. வெள்ளி பதிவில் திருச்சிக்கு ஜவந்தீஸ்வரம் என்றும் ஒரு பெயர் உண்டு. ஜவந்தி காடுகள் நிறைந்திருந்ததால் அந்த பெயர். தாயுமானவருக்கு ஜவந்தீஸ்வரர் என்றுதான் திருநாமம், அம்பாள் சுகந்த(தி) கூந்தலாம்பாள் என்று பெயர். அதனால் திருச்சியில் சுகந்தா, சுகந்திகள் நிறைய உண்டு என்பதையும் பகிர்ந்து கொள்ள ஆசை. கொஞ்சம் லேட்தான், better late than never!

    பதிலளிநீக்கு
  14. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!