18.6.26

நிம்மதியற்ற உறக்கத்தில்...

 

..........................  ஸ்பெஷல் வார்டு அறையில் படுத்த பத்து நிமிடங்களில் டாக்டர் வந்தார்.  

"மூன்று நாள் ஆன்டிபயாடிக் ஐவில போடுவோம்.  நடுல நடுல கொஞ்சம் டெஸ்ட் எடுத்துடுவோம்.  மூணு நாள்ல சளி உள்ள குறைஞ்சிருக்கான்னு பார்ப்போம்.  அப்புறம் அடுத்து என்னன்னு யோசிக்கலாம்"

"சளி நிறைய இருக்கா டாக்டர்?"

"ஆமாம்.  அதனால்தானே இந்த ட்ரீட்மெண்ட் எல்லாம்..  உள் சுவர் முழுக்க கெட்டியாக இறுக்கப் பிடித்திருக்கிறது.  அது கரையவேண்டும்.  பார்க்கலாம்" என்று சொல்லித் தலையாட்டிவிட்டு, மயக்கும் ஒரு புன்னகையுடன் கிளம்பிச் சென்றார்.

"என்னென்ன மாத்திரைகள் சாப்பிடுகிறீர்கள்?" என்று கேட்டார் நர்ஸ்.  

சொன்னேன்.  குறித்துக் கொண்டார்.

"வைத்திருக்கிறீர்களா?"

"இல்லை..  அட்மிஷன்னு தெரியாதே..   மத்தியானம் வொய்ஃப் கொண்டு வருவாங்க"

"ஓகே..  கொண்டு வந்ததும் சொல்லுங்க"  என்று சொன்னவர் BP பார்த்துச் சென்றார்.

மதியம் சாப்பாட்டுடன் வந்த பாஸிடம் "என் மருந்துகள் கொண்டு வந்துட்டே இல்ல..  "


"ஆமாம்..  ஆனால்.."

"இல்ல..  நர்ஸ் கேட்டாங்க..  அவங்க கிட்ட கொண்டு வந்துட்டேன்னு சொல்லிடு"

"தேவையில்லை..   அவங்க..."

நீ சொல்லலைன்னா நான் சொல்றேன்" என எழுந்தேன்.

"படுத்தாதீங்கப்பா...   பேச விடுங்க..  அவங்க வரும்போதே கேட்டு வாங்கி வச்சுட்டாங்க"

"வாங்கி அவங்க வச்சுட்டாங்களா?"

"ஆமாம்"

"என்ன?  ஏன்?"

"தெரியாது"

..................................

சரியாக உள்ளே வந்த நர்ஸ் சொன்னார் "ஸார்..  இனிமே நாங்கதான் உங்களுக்கு Tablets எடுத்துக் கொடுப்போம்.  நீங்களா எடுத்துக்கக் கூடாது"

"என் மாத்திரைங்க..  இத்தனை நாளா நான்தான் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்"

"இல்ல ஸார்..   ரூல் அப்படிதான்.  நீங்க கை வைக்கக் கூடாது..  நாங்கதான் எடுத்து உங்க கைல தருவோம்" 

விவாதம் தொடரவும் அவர் சென்று சற்றே பெரிய தலை ஒன்றை அழைத்து வந்தார்.  பேச்சு வார்த்தையில் உடன்படிக்கைக்கு உடன்பட்டேன்!

இன்னொரு நர்ஸ் உள்ளே வந்தார்.  ஒரு நக்கலான சிரிப்புடன் ஒரு பச்சை கவுனை வைத்து விட்டு "இதை மாற்றிக்குங்க" என்று விட்டு சென்றார்.

என்ன?  கவுனா?

நான் நிலை மாறாமல் இருந்தேன்.  பத்து நிமிடங்கள் கழித்து வந்த நர்ஸ் டென்ஷன் ஆனார்.

"இதைப் போட்டுக்கச் சொன்னேனே.."

"மாட்டேன்.  நான் ஊசி போட்டுக்கத்தான் வந்தேன்.  அதுவும் கைலதான் ஊசி போட்டுக்கப் போறேன்..  அதுக்கு இந்த கவுனெல்லாம் வேண்டாம்"

"ஹையோ..  என்ன ஸார் இது..  ஸார்..  இது ஆஸ்பத்திரி ரூல்!"

நான் அசையவில்லை.

மறுபடி இவரும் திரும்பிச் சென்று பெரிய நர்சுடன் வந்தார்.

விவாதம் நடந்தது.  இந்த முறை நான் விட்டுக் கொடுக்கவில்லை.  அது என் மானப்பிரச்னை.  என் கருத்தில் நான் உறுதியாக இருந்தேன்.

"ஸார்..   இப்போ எக்ஸ்ரே எடுக்கப் போகணும்..   அது அடுத்த 'பே' ல இருக்கு.  பேஷண்ட்டை இந்த ட்ரெஸ்லதான் நாங்க அழைச்சுக்கிட்டு போகணும்.  அது ரூல்..  இல்லைன்னா எங்களைத்  திட்டுவாங்க"

"என்னது வெளில போகும்போது இந்த கவுனா?"  எனக்கு ஏண்டா அட்மிஷனுக்கு ஒத்துக் கொண்டோம் என்று இருந்தது.

"ஸார்..  படுத்தாதீங்க ஸார்..."என்று தொடங்கியவரை இடைமறித்தேன்.  

"யார் படுத்தறது?  நீங்களா நானா?  சாதாரண சளிக்கு ஊசி போட்டுக்கொள்ள வந்திருக்கேன்.  அதுவும் கைல ஐவி.  கவுன் எதுக்கு?  எக்ஸ்ரே எடுக்க இப்படியே வர்றேன்"  

கலர் வேஷ்டியும் டீ ஷர்ட்டும் போட்டிருந்தேன்.

"ஸார்..  நாங்க எல்லோருக்கும் பதில் சொல்லி ஆகணும்.  நீங்க இதைப் போட்டுக்குங்க..  வீல் சேர் வரும்.."

"என்னது வீல் சேரா?  எனக்கா?  என்னால நடக்க முடியுமே"

"அதுக்குமா கேள்வி?  ஹையோ ஸாருக்கு யாராவது சொல்லுங்களேன்..  பேஷண்ட்டை நடக்க வைக்கக் கூடாது ஸார்..  ரூல்"

"என்னம்மா பேஷன்ட் பேஷன்ட் என்று என்னை ரொம்ப பலகீனமா நினைக்க வச்சுடுவீங்க போலிருக்கு"

சட்டென்று தீர்மானித்த நர்ஸ் என்னை நோக்கி கையமர்த்தி "இதைப் போட்டுக்குங்க..  இருங்க பேசாதீங்க..  நான் சொல்றேன்..  உங்களை ஸ்ட்ரெச்சர்ல வச்சு ("என்ன சிஸ்டர்//  ஸ்ட்ரெச்சலயா"  வீல் சேர்னீங்க..  ஸ்ட்ரெச்சர்க்கு வந்துட்டீங்க" என்ற என் இடைக்கேள்வியை லட்சியம் செய்யாமல் நீட்டிய கைகளை நீட்டியபடி சொன்னார் அவர்) அதுல படுத்துக்குங்க..  (Bed ல் இருந்த பெரிய வெள்ளைப் போர்வையைக் காட்டி) மேல இந்தப் போர்வை  போட்டு மூடி கவுன் தெரியாம அழைச்சுட்டு போகச் சொல்றேன்" என்றுவிட்டு வெளியே சென்று விட்டார்.

பேசாமல் உட்கார்ந்திருந்தேன்.  லேசாக கதவு திறந்து ஸ்ட்ரெச்சருடன் ஸ்ட்ரெச்சர்வாலா ஒருத்தன் தோன்றினான்.  உடனே அவன் தலை மறைந்தது.
 
நான் வேறு வழியில்லாமல், மேற்கொண்டு விவாதம் செய்யாமல் பச்சை கவுனை எடுத்து பின்பக்கம் பட்டன் வைத்த ரவிக்கையை மாட்டுவது போல மாட்டிக் கொண்டேன்.  இரண்டு கடுப்பு அதில்.  முதுகுப் பக்கம் முடிச்சுப் போட சரியாக நாடா இல்லை.  பின்னாலிருந்து பார்த்தால் மலையாளப்பட கற்பழிப்பு நாயகி போலிருக்கும்.  மூன்றாவதும் இருந்தது.  அதாவது அது முழங்கால் வரைதான் வந்தது.

உள்ளே எட்டிப் பார்த்த ஸ்ட்ரெச்சர்வாலா "இன்னர்ஸை கழட்டிடுங்க" என்றான்.

எனக்கு ஹார்ட் பீட் எகிறியது. அனலானேன்.

"என்னது  ஹலோ..  அதெல்லாம் வேணாம்.. எனக்கு எக்ஸ்ரே மார்பில்தான் எடுக்கப்போறாங்க..  இன்னர்ஸ் ரிமூவ் பண்ண முடியாது"

"இருங்க..  நர்சம்மாவ அழைச்சுக்கிட்டு வர்றேன்" என்று விட்டு சென்றான்.

"யாரை வேணா அழைச்சுக்கிட்டு வாங்க" 

கதவு வெடித்துத் திறந்தது.  இரண்டு மூன்று நர்ஸ்கள் உள்ளே வந்தார்கள்.

"ஸார்..  என்ன ஸார் எல்லாத்துக்கும் பிரச்னை பண்றீங்க?"

"நானா பிரச்னை பண்றேன்?  மார்ல எக்ஸ்ரே எடுக்க இன்னர்ஸை எதுக்கு கழற்றணும்?"

என்னை கவுன் போடச்சொன்ன சின்னப்பெண் நர்ஸ் மூன்று பெரிய, நடுத்தர நர்ஸுகளுக்குப் பின்னே நின்று கிண்டல் கலந்த வெற்றிப் புன்னகையுடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"அதோட...   இங்க பாருங்க..  கவுன் முழங்காலை தொடவே யோசிக்குது.  முழுசா வேணாம், கணுக்கால் வரைக்கும்?  அட அதுகூட வேணாம் முழங்காலைத் தாண்டி இருக்கக் கூடாதா?"

பேச முடியாமல் நெற்றியில் கைவைத்து கொஞ்சம் யோசித்தவர் "சரி ஸார்..  இன்னர் ரிமூவ் செய்ய வேண்டாம்..  கவுன் போட்டுகிட்டீங்களே அதுவே போதும்.  அதை (இன்னர்ஸ்) யாரும் பார்க்க மாட்டாங்க..  போர்வை போட்டு மூடிடலாம்" என்று சொல்லிவிட்டு ஸ்ட்ரெச்சர்வாலாவிடம் என்னை அழைத்துப் போகச் சொன்னார்.  (யம்மா..  ஏற்கனவே மூடிதான்மா இருக்கு!)

நான் அவர்கள் வெளியே போகும் வரை காத்திருந்து, தொடைகளில் கவுனை அழுத்திப் பிடித்தபடி உயரமாக காலை ஆளில்லா பக்கமாக ஒரு பக்கமாக வைத்து ஸ்ட்ரெச்சரில் ஏறிப் படுத்தேன்.  நடந்தது எல்லாவற்றையும் ஒன்றும் பேசாமல், ஒன்றும் செய்ய முடியாமல், தலையிடாமல் பார்த்துக் கொண்டிருந்த பாஸிடம் கட்டிலில் இருந்த போர்வையை எடுத்து என்னை காலிலிருந்து இடுப்பு வரை போர்த்தச் சொன்னேன்.

முழு உணர்வுடன் உடம்புக்கு எதுவுமில்லாமல் - அட ,வியாதியைச் சொல்றங்க  -  ஆஸ்பத்திரியின் அந்தப் பெரிய ஹாலில் படுத்த வாக்கில் கடப்பது சற்று விநோதமாகத்தான் இருந்ததது.  பக்கவாட்டு படுக்கை வாலாக்களும், நடந்து கடப்பவர்களும் என்னையே பார்ப்பது போல பிரமை.   'பார்க்க நல்லாத்தான் இருக்கான், முழிச்சுப் பார்க்கறான்..  ஸ்ட்ரெச்சர்ல படுத்துகிட்டு போறான் பாரு' என்று அவர்கள் நினைப்பது போல பிரமை!

லிஃப்டில் ஒரு பச்சை உடை பணியாளப் பெண் என்னைப் பார்த்தார்.  மறுபடி பார்த்தார்.  நாம் பார்க்கும்போது மாராப்பை சரிசெய்து கொள்ளும் பெண்மணி போல நான் கால்களை 'சரியாக இருக்கிறதா' என்று இழுத்து விட்டுக் கொண்டேன்.............................

==========================================================================================

நேற்று என் உறவில் ஒரு ஜோடி 25 ஆவது திருமணநாளைக் கொண்டாடியது.  அவர்களுக்கு நான் அனுப்பிய வசனம்...


மறந்து போன மகிழ்ச்சி நாட்களை, 
கடந்து போன காதல் நாட்களை, 
மனக்கண்ணில் ​ஓட்டி ஓட்டிப் பார்க்கிறான் 
கதைகள் நூறு சொல்கிறான் 
கண்கலங்கி நிற்கிறான்
​தாளமுடியாத காதலில் தவிக்கிறான் 
அளவுகடந்த அன்பின் ஆழத்தில் 
அன்றுதான் 
அவளை புதிதாகக் கண்டவன்போல் 
​அன்பில் தோய்ந்த வார்த்தைகளை 
அளவில்லாமல் பேசுகிறான் 
அவளையே சுற்றிச் சுற்றி 
வருகிறான் 
கையைக் கையை  பிடிக்கிறான் 
கன்னம் தொட்டு கொஞ்சுகிறான் 
கண்ணோடு கண்நோக்கி 
விழிகளின் கலப்பில் விதிர்த்து நின்று 
தன் மொத்த அன்பையும் காட்ட 
 மொழியின்றி தவிக்கிறான் 

தாங்கி நின்றவள் மலர்ந்து சிரிக்கிறாள் 
மனதில் நிறைந்து மயக்கம் தருகிறாள் 
நடுவில் சிலநாள் நிலை மாறினாலும் 
திரும்பி வரும் வசந்தம் என்று 
அறிந்தே இருக்கிறாள் 

கைப்பிடித்த நாளல்லவா -அதிலும் 
வெள்ளிவிழா வருடம் 

கண்ணாளனின் கண்களிலும் நெஞ்சத்திலும் 
எண்ணங்களிலும் நிறைந்திருப்பது 
என்றென்றும் தான்தான் என்றறிந்து 
நெகிழ்ந்து நிற்கிறாள் 
கண்ணும் கண்ணும் கலந்தபின், 
மனத்தை  மனம் படித்தபின் 
வார்த்தைகளுக்கு வேலையில்லை
வாழ்த்துவோம் நாமும் வாழ்க பல்லாண்டு 

வாழையில் கொடி படர்ந்து நான் பார்த்ததில்லை.  கவனிக்கவும், நான் பார்த்ததில்லை.  சேலத்தில் அப்படி ஒரு வாழை மரத்தில் படர்ந்திருந்த கொடியைக் கண்டதும் வண்டியிலிருந்தே ஒரு க்ளிக் செய்து கொண்டேன்.  இறங்கிச் சென்று எடுத்திருந்தால் இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம்!  அதற்கு நான் எழுதிய வசனம் இதோ..


தன்மேல் படர்ந்த கொடியை,
'வாழையுடன் கொடி
சேர்வதில்லை' என்றோ,
'வழக்கமில்லை' என்றோ,
தள்ளி
பிரித்து விடுவதில்லை
வாழைமரம்

================================================================================

பொதுவாக எல்லோரும் சொல்லும் புகார். 'எனக்கு தூக்கமே வரமாட்டேன் என்கிறது'.

கொஞ்ச நாட்களாக என்னுடைய பிரச்னை தூங்கி எழுந்து இரண்டு மணி நேரங்களிலேயே மறுபடி தூக்கம் வருகிறது. கடும் வெயில் காரணமா, உடல் களைப்பா, மனக் களைப்பா...

ஏதோ காரணம்..

பார்ப்பவர்களுக்கு கடுப்பு வரும்படி எல்லா நேரங்களிலும் அடிக்கடி தூங்குகிறேன்! படிக்க முடிவதில்லை. படம் பார்க்க முடிவதில்லை!

தூக்கம் வரும்போது அந்த அனுபவத்தை உணர்ந்திருக்கிறீர்களா.. கட்டுப்படுத்தினாலும் கண்கள் சொருகி, இமைகள் கனமாகி ஏதோ ஒரு உலகத்துக்குள் நம்மை இழுக்கும் இன்ப அனுபவம். மயக்க நிலை. எனக்கு சமீபத்தில் இது கொடுத்த ஒரு அனுபவம் வேறுவகைக் கொடுமையானது!

தூக்கம் பற்றி இப்போது நான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தில் படித்த சில வரிகள்..

ஆனால், உலகிலுள்ள எல்லா விஷயங்களும் ஒரு முடிவுக்கு வந்துதானே ஆகவேண்டும். பதினைந்து மணிநேரம் பட்டினி கிடந்த மக்களின் பசிகூட! எங்கள் பசி தீர்ந்ததும், அடுத்ததாக தூக்கம் எங்களுக்கு உடனடித் தேவையாக இருந்தது. எங்கள் உயிருக்குப் போராடிய அந்த முடிவற்ற இரவுக்குப் பிந்தைய இயற்கையான களைப்பு.

கடவுளே, இப்போது நன்றாகத் தூங்கப்போகிறேன்' என்றான் கான்ஸீல்.

ஒரு விளக்கு அணைவது போலத் தூங்கப் போகிறேன்' என்றார் நெட் பதிலுக்கு.

என் இரு நண்பர்களும் கீழே விரிக்கப்பட்டிருந்த விரிப்பின் மீது படுத்து சீக்கிரமே உறங்கிப் போனார்கள்.

என்னால் இவ்வளவு விரைவில் உறங்க முடியவில்லை. அநேக எண்ணங்கள் என் மனதில் அலை மோதின; விடை காணமுடியாத பலகேள்விகள் எழும்பின. அநேக காட்சிகள் என் கண்களை மூடவிடவில்லை. நாம் எங்கே இருக்கிறோம்? எந்த விநோதமான சக்தி எங்களைத் தூக்கிச் செல்கிறது?

அப்போது அந்த நீர்மூழ்கிப் படகு நீர் மட்டத்தின் கீழே அமிழ ஆரம்பித்தது. பயங்கரமான கனவுகள் என்னை முற்றுகையிட்டன. இந்தக் கடல் சரணாலயங்களில் எனக்குத் தெரிந்திராத ஏராளமான ஜீவராசிகளைப் பார்த்தேன். இப்படகு உயிர் வாழ்வது, மூச்சு விடுவது, பயங்கரமான தோற்றம் எல்லாவற்றிலும் அவற்றுடன் ரத்த சம்பந்தம் உடையது போல் காணப்பட்டது. பிறகு என் மனம் அமைதி அடைந்தது. என் கற்பனை, தூக்கக் கலக்கத்தில் கரைந்தது. நான் ஒரு நிம்மதியற்ற உறக்கத்தில் ஆழ்ந்தேன்.

==================================================================================

இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடல்தான். SPB எந்த அளவு பிடிக்குமோ அந்த அளவு ஜெயச்சந்திரனும் பிடிக்கும். போதாதற்கு இளையராஜா.

1980 ல் வெளிவந்த 'ஒரே முத்தம்' என்கிற படத்திலிருந்து பாடல். படம் பற்றிய எந்த பெரிய விவரமும் இல்லை. தேவையும் இல்லை. ஜெய்கணேஷ், ஸ்ரீகாந்த், சுமித்ரா நடித்திருக்கிறார்கள் என்பதும் முகிலன் என்பவர் இயக்கம் என்பதும் தெரிகிறது. இன்றைய இந்தப் பாடல் படத்தின் ஒரே ஹைலைட்.

அடுத்து ஒரு சுமாரான பாடல் உண்டு. அதுவும் ஜெயச்சந்திரன், 'பாவையர்கள் மான் போலே காவிரி நீர் போலே' என்னும் கவாலி வகைப் பாடல்.

"ராஜாப்பொண்ணு.. அடி வாடியம்மா.. கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி.. நதியினில் ஆடடி.. குலுங்க குலுங்க ஆடடியோ..." பாடல் கண்ணதாசன்.


=================================================================================================


லண்டன்: உலகளவில் கைவிடப்படும் கப்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதில் இந்திய மாலுமிகளே பெரிதும் பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.  நிறுவனங்கள் நஷ்டமடையும் போதோ அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு கப்பல் உரிமையாளர்கள் கைதாகும் போதோ, அந்தக் கப்பல்கள் நடுக்கடலில் அப்படியே கைவிடப்படுகின்றன.  அந்த வகையில், கடந்த ஆண்டு, 410 கப்பல்களும், அதில் பயணித்த, 6,223 மாலுமிகளும் கைவிடப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  இந்தப் பட்டியலில் இந்திய மாலுமிகளே அதிகம் உள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 1,125 இந்தியர்கள் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட, 32 சதவீதம் அதிகமாகும்.  பிலிப்பைன்ஸ், சீனாவிற்கு அடுத்தபடியாக உலகிற்கு அதிகப்படியான மாலுமிகளை வழங்கும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா இருக்கும் சூழலில், இந்தத் தகவல் இந்தியக் கடல்சார் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சமீபத்திய உதாரணமாக, மங்கோலிய கொடியுடன் பயணித்த 'அஸ்ரா சி' என்ற சரக்கு கப்பல், துருக்கியின் இஸ்தான்புல் கடல் பகுதியில் கைவிடப்பட்டது. அதில் இருந்த, 4 இந்திய மாலுமிகள், 10 மாதங்களாக பசி, பட்டினியுடன் தவித்து வந்தனர்.
அந்தக் கப்பலின் உரிமையாளர்கள் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதால், மாலுமிகளின் கதி கேள்விக்குறியானது. தீவிர போராட்டத்திற்குப் பின், அவர்கள் சமீபத்தில் தான் மீட்கப்பட்டனர்.
இதையடுத்து, மாலுமிகளை தொடர்ந்து ஏமாற்றும் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடும் கப்பல்களை, மத்திய அரசு அதிரடியாக கருப்புப் பட்டியலில் சேர்த்து வருகிறது.

==================================================================================================================================================

இன்னொரு செய்தி ரிமைண்டர் போல...


சென்ற வாரம் மருத்துவக் காப்பீடு பற்றி எழுதி இருந்தேன்..   இந்தச் செய்தி இப்போது வந்திருக்கிறது.  பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் ஒருமுறை படிக்கலாம்!


ஒரு டாக்டர் ஒரு தடவை விசிட் செய்தால் ஆயிரக்கணக்கில் அவருக்கு கட்டணம்!  இது பற்றிய ஒரு ஊழல் கூட சேலம் ஆஸ்பத்திரி பற்றி சமீபத்தில் ரீல்ஸில் பார்த்தேன்.    தேவை இருக்கிறதோ இல்லையோ, ஏதாவது ஒரு மருத்துவர் ஒரு குட்டிப் புடைசூழ வந்து உங்களை பார்த்து  சென்றால் அவருக்கு ஒரு கட்டணம்.  மறுபடி மாலை அவரே வந்து பார்த்தால் அதற்கும் கட்டணம்.

பேசாமல் பல் மருத்துவர் போல மொத்தத் தொகையாக முதலிலேயே பேசி பிக்ஸ் செய்து விடலாம்.  எத்தனை சிட்டிங் இருந்தாலும் அதே முதலில் பேசிய காசுதான்!



=====================================================================================================================================



செட்டில் பாலச்சந்தர் எவ்வளவு கோபக்காரர் என்பதை ஓரளவுக்கு இயல்பாக சொல்லிக் கொண்டிருந்தார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.  கேபியிடம் உதவி இயக்குநரகா இருந்தவர். 

சிந்து பைரவி படம் பற்றி பேசும்போது நிறைய விஷயங்கள்   .கேபியின் எந்தப் படம் பற்றிச் சொன்னாலும் எக்ஸ்ட்ராடினரி என்று உணர்ச்சி வசப்பட்டார்.

தமிழ் அபூர்வராகங்களை ஹிந்தியில் ஏக் நய் பஹேலி என்று எடுத்தார் கேபி.  ஹிந்தி நடிகர்களின் சோம்பேறித்தனமான ஷெட்யூல் கேபிக்கு ஒத்துவரவில்லை.  நம்மூர் ஹேமமாலினியும் அதே மாதிரிதான் பழகி இருந்தார் என்று தெரிகிறது.

தமிழில் மேஜர் நடித்த பாத்திரத்தில் ஹிந்தியில் ராஜ்குமார் நடித்தார்.  ஒரு காட்சியில் டைனிங் டேபிளில் பாத்திரங்கள் மூடி இருக்க, ஒவ்வொன்றாய் திறந்து பார்த்தால் ஒவ்வொன்றிலும் சிறு காய் போல இருக்கும்.  என்னவென்று கோபத்துடன் ராஜ்குமார் அல்லது மேஜர் கேட்கும்போது 'உங்களுக்கு டயாபட்டீஸ்..  இப்படிதான் சாப்பிடவேண்டும் என்று தமிழில் ஜெயசுதா மேஜரிடம் சொல்வது போல ஹிந்தியில் பத்மினி கோலாபுரி ராஜ்குமாரிடம் சொல்லவேண்டும்.  

ஆனால் ராஜ்குமார் அந்தக் காட்சியில் டயாபடீஸ் என்று வருவதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டாராம்.  அவர் ரசிகர்களிடம் அவர் இமேஜ் போய்விடும் என்றாராம்!  அதை அவர் உதவியாளர்கள் கேபியிடம் சொல்லி இருக்கிறார்கள்.  கேபி ஒத்துக்கொள்ளவில்லை.  'முடியாது என்று சொல்லு' என்று சொல்லி அனுப்பி விட்டார்.

ஆனாலும் அவர் உதவியாளர்கள் மூலம் மறுபடி மறுபடி ஜாடைமாடையாக சொல்லிப் பார்த்திருக்கிறார்.  டேக் ரெடியானது.  வழக்கமாக ஒரு டேக்கில் ஓகே செய்யும் ராஜ்குமார் பத்து டேக் வாங்கி இருக்கிறார்.  கேபி பொறுமையாகவே இருந்திருக்கிறார்.  பத்தாவது டேக் ரீடேக் ஆகும்போது கேபி ஒரு பீங்கான் தட்டை எடுத்து முழுவேகத்தில் தரையில் எறிந்தாராம்.   சத்தத்துடன் தட்டு சுக்கல் சுக்களாக உடைய, கேபி கோபத்துடன் உரத்தக்குரலில் ஆங்கிலத்தில் "மிஸ்டர் ராஜ்குமார்.  இது இந்தக் காட்சிக்கு மிக முக்கியம்.  தமிழில் அப்படிதான் இருந்தது.  இங்கும் அப்படிதான் இருக்க வேண்டும். நீங்கள் கட்டாயம் இதன்படி நடிக்கத்தான் வேண்டும் " என்று சத்தம் போட்டாராம்.

இதுவரை இந்த மாதிரி ஒரு ரீயாக்ஷனை பார்த்திராத ராஜ்குமார் சட்டென்று ."ஓகே ஓகே குருஜி...   ஏன் டென்ஷன் ஆகிறீர்கள்?  நான் நடித்து விடுகிறேன்" என்று நடித்துக் கொடுத்தாராம்.

- சுரேஷ்கிருஷ்ணா மைல்கல். என்ற சேனலுக்கு கொடுத்த பேட்டியில் 

கேபி கெட்டவார்த்தையில் சரளமாக திட்டுவாராம்.

==============================================================================================================
போட்டியில் கலந்து கொள்கிறீர்களா?



====================================================================================================

பழைய நினைவுகளுக்கு போவோமா...   எஸ் ஏ பியின் இந்தக் கதை படித்திருக்கிறீர்களா?  என்ன கதை என்று யோசிக்கிறீர்களா?  இந்த முன்கதையைப் படித்தால் நினைவுக்கு வருகிறதா என்று பாருங்களேன்...



குமுதம் விலை நாலணா!


அதென்ன "உயர்தர ஹாஸ்யம்"?  உயர்தர சைவ சிற்றுண்டி சாலை மாதிரி!


"நம்புகிறாள்"  மரியாதையை கவனிக்கவும்!!  1955-56 ஆம் வருடமா?  இந்த விளம்பரத்துக்கு அவர் பெயரையும், புகைப்படத்தையும் உபயோகித்துக்கொள்ள எவ்வளவு பணம் கொடுத்திருப்பார்கள்?  1,000 ரூபாய்?

சீட்டு கட்டியிருக்கிறீர்களா?  சீட்டு தள்ளி எடுத்திருக்கிறீர்களா?

33 கருத்துகள்:

  1. என்ன... வர வர எட்டு மணி ஆனாலும் ஒருவரையும் காணோமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை்.... எனக்கும் அதே கேள்விதான்!

      நீக்கு
  2. பழைய குமுதம் இதழ்கள் பிடிஎஃப்பில் படிக்க ஆசை. கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி கிடைக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

      நீக்கு
  3. காலையில் (நேற்று நள்ளிரவுக்கு மேல் படுத்ததால் எழ இவ்வளவு தாமதம். சென்ற பயணம் முடிந்தது) முதல் பகுதியே டிப்ரெஷனை உண்டாக்கும் போலிருக்கு.. என்ன ரூல்களோ.. அங்கெல்லாம் மாட்டிக்கொண்டால், அடுத்த கிராக்கி அகப்படும் வரைக்கும் நம்மை வெளீல விட மாட்டாங்க. ஒருவேளை நாமே பிடித்துக்கொடுத்தால் நம்மை விட்டுடுவாங்களோ.. இட்லிக்கு ஒரு கோடி ரூபாய்னு பில் போடறவங்களாச்சே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான் என் முதல் ஆஸ்பத்திரி அட்மிஷன் அனுபவம். இதற்கு முன்னால் ஒரே நாள் அதாவது சிறுநீரக கல் காரணமாக இருந்திருக்கிறேன். நீண்ட அட்மிஷன் என்பது இதுதான் முதல்.

      நீக்கு
  4. சமீபத்தில் படித்தது ஒரு ஸ்ட்ரிப் மாத்திரை அமெரிக்காவில் 90,000 ரூ. (இந்திய தயாரிப்புனுநினைவு). கனடா மூலமாக போஸ்டில் இந்தியாவிலிருந்து தருவித்தது பத்தாயிரம்கூடக் கிடையாதாம்.

    இந்தியர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பது மேற்கத்தைய நாடுகளில் வாழ்ந்தால்தான் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த விலை வித்தியாசங்கள் பற்றி நானும் படித்திருக்கிறேன். பயமுறுத்தும் விவரங்கள்.

      நீக்கு
  5. கைவிடப்படும் கப்பல்கள் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் நீண்டநாள் தாங்கும் டின் உணவுகளோடு கைவிடப்பட்டால் தப்பிப்பாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை மீறியும் தான் உயிரிழந்திருக்கிறார்கள். எத்தனை நாளுக்கு தாங்கும் அவை!

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  7. வாழையில் கொடி படர்ந்து.... படத்தில் சரியாகத் தெரியவில்லை.

    சமீபத்தில் பழைய (நூறு வருடங்களுக்கு மேல்) பில்டிங்குகளில் முழுமையாக வேர்களுடன் பின்னிப் பரவி இருக்கும் மரங்களோடு பல சிதைந்த கட்டிடங்களைப் பார்த்தேன். அவை பற்றி எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நான் கீழே இறங்கி கொஞ்சம் கிட்டே சென்று படம் எடுத்திருக்க வேண்டும்.

      நீக்கு
  8. தூக்கம் சிலருக்கு வரம். அலுவலக பாஸ் சொல்லுவார்.. அவர் படுத்தால் அடுத்த நிமிடம் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுவிடுவாராம்.

    எனக்குதொலைக்காட்சியில் எதைப் பார்த்தாலும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் தூங்கிவிடுவேன். எவ்வளவு அருமையான நிகழ்ச்சியோ படமோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு வரும் தூக்கம் வரமா

      நீக்கு
    2. எனக்கு வரும் தூக்கம் வரமா சாபமா என்று சமயங்களில் புரிவதில்லை

      நீக்கு

  9. ​​'அனுபவம் புதுமை' என்று ஆசுபத்திரி அனுபவம் எரிச்சலை உண்டாக்கி இருக்கிறது. நல்ல வேலை கதீட்டர் போடாமல் விட்டார்களே. சாதாரணமாக tube வழி சளியை வாக்குவம் கிளீன் செய்வார்கள்.

    ஆசுபத்திரியும் ஜெயிலும் ஒன்று தான். கூறிய அனுபங்களை நானும் அனுபவித்திருக்கிறேன்.

    நிறைய தூக்கம் வருவதற்கு மருந்துகளும் காரணமாக இருக்கலாம்.


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜே கே சி சார்! இது டியூப் வழி உறிஞ்சப்படும் சளியல்ல. முள் கரண்டி வைத்து சுரண்டி எடுக்கப்பட வேண்டியது. அதுதான் சிரமம். இன்னும் போகப் போக சொல்கிறேன்.

      நீக்கு

  10. ​பொதுவாக சளி தொந்தரவுக்கு கொடுக்கப்படும் antihistamine தூக்கத்தை வரவழைக்கும். பலருக்கும் anithistamine இல்லாமல் தூங்க முடியாத நிலையும் ஏற்படும். எனக்கு அப்படித்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரியாதா என்ன!! நான் ஆன்ட்டிஹிஸ்டமைன் எடுப்பதில்லை. மேலும் போன வருடம் சாப்பிட்ட மாத்திரைக்கு இந்த வருடம் தூக்கம் வருமா என்ன!!

      நீக்கு
  11. பின்னாலிருந்து பார்த்தால் மலையாளப்பட கற்பழிப்பு நாயகி போலிருக்கும். மூன்றாவதும் இருந்தது. //

    ஹாஹாஹா....ஸ்ரீராம் சிரித்துவிட்டென்

    ஆனால் முழுவதற்கும் உங்களுக்கு டிட்டோதான் நானும். அதாவது நம்மை ஒரு நோயாளியாகவே ஆக்கிவிடுகிறார்கள்.

    ஆனால் இதில் நான் கொஞ்சம் அதிர்ஷ்டம் படைத்தவளோ? இசபெல்லாவில் 13 வருடங்களுக்கு முன் அட்மிட் ஆனப்ப, அந்தப் பெண் மருத்துவர் வயதானவர் நல்ல அனுபவமும் தன்னம்பிக்கை ஊட்டுபவராகவும்....ஆப்பரேஷனுக்குக் கூட்டிக் கொண்டு செல்லும் போதுதான் கவுன். ஆப்பரேஷன் ஆன மூன்றாவது நாளே, நானே இறங்கி இறங்கி கழிவறை செல்ல வேண்டும் என்று நினைத்திருக்க மருத்துவரும் கழிவறைக்குப் போகணும் நானாகவே என்று.சொல்லிட...மகன் தான் கூட இருந்தான் அவனும் அப்படியான ஆள் என்பதால் எனக்குப் பிரச்சனை இருக்கவில்லை.

    ஆனால் வேறொரு மருத்துவமனையில் அப்படி இல்லை அதனாலேயே அங்கு போவதை நிறுத்திவிட்டேன் எதற்கெடுத்தாலும் அட்மிஷன்...ஒரு நாளேனும் ட்ரிப்ஸ் என்று படுத்தி....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா இந்த கவுன் சமாச்சாரம் எல்லாம் இப்ப சமீபத்தில் தான் ரொம்ப அதிகமா இருக்குன்னு நினைக்கிறேன்

      நீக்கு
  12. எனக்கும் இந்த கவுன் தரும் அசௌகரியத்தைச் சொல்லிட முடியாது....

    நாமெல்லாம் ரொம்பக் "கூஊஊஊஊஊஊஊஊஊச்ச சுபாவம்"அந்த டோன்!!! புரிஞ்சுச்சா ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூச்ச சுபாவம்... புரிகிறது.. புரிகிறது. அந்த தங்கையும் அண்ணனும்!! பாவம் அந்த அண்ணன்.

      நீக்கு
  13. ஸ்‌ரீராம், உங்கள் வாழ்த்து மடல் நல்லாருக்கு ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. ஓ இப்ப கவிதைன்றதை வசனம் என்றாக்கிவிட்டீங்களா!!!!!ஹாஹாஹா

    ஒரு பலத்த மழையைத்
    தாங்கிட
    வலுவில்லையென்றாலும்
    தன்னருகே வளரும் கொடி
    தன்னைவிட மெலிதென்று
    கை கொடுக்கும் கை போல
    தன் மீது படர
    இடம் கொடுத்தது!
    மெல்லிய வாழைமரம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் வசனம் எழுதிப்புட்டோம்ல!!!!

      கீதா

      நீக்கு
    2. சூப்பரா இருக்கு உங்க கவிதை. ச்சே.... உங்க வசனம் ரொம்ப சூப்பரா இருக்கு.

      நீக்கு
  15. உடல் களைப்பா, மனக் களைப்பா... //

    முதல் காரணம் மனக்களைப்பு (அநேக எண்ணங்கள் என் மனதில் அலை மோதின;- காரணமாக இருக்கலாம் உங்களுக்கும் ஸ்ரீராம்....உங்களுக்குத் தெரியாமலேயெ கூட)அதனால் உடல் களைப்பு!!!

    நல்ல பொருத்தம் சாகஸப் பயணம்! இப்ப உங்க மனமும் ஏதோ ஒரு சாகஸப் பயணத்தில் இருக்கும் போல!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வகைப்படுத்துவதும், வரிசைப்படுத்துவதும் ரொம்ப சிரமம் கீதா. சரிப்படுத்திக் கொள்வதும் அதேபோல தான்.

      நீக்கு
  16. ஒரே முத்தம் - படமா கேட்டதில்லையே!

    பாட்டின் ஆரம்ப இசை செம...பாட்டு கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம்! ஆரம்ப இசை கொஞ்சம் "சித்திரை செவ்வானம்" பாட்டுக்கு போல இருந்தது ஆனால் கிட்டத்தட்ட இரட்டைச் சகோதரிகள் போலதான்...

    பாட்டு சுத்ததன்யாஸி! பேஸ்.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!