6.7.26

"திங்க"க்கிழமை   :  காஞ்சீபுரம் இட்லி - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

காஞ்சீபுரம் இட்லி

கீதா சாம்பசிவம்

தேவையான சாமான்கள்:  சுமார் நான்கு பேருக்கு!

இட்லி அரிசி ஒரு கிண்ணம்

பச்சரிசி ஒரு கிண்ணம்

உளுத்தம்பருப்பு ஒரு கிண்ணம்

மூன்றையும் ஒன்றாகக் களைந்து ஊற வைக்கவும்.  குறைந்தது நான்கு மணி நேரம் ஊற வேண்டும். பின்னர் மிக்சி அல்லது கிரைண்டரில் போட்டுக் கொரகொரப்பாக அரைக்கவும்.  உப்புப் போட்டுக் கலக்கவும்.  இரவு ஒரு துண்டு சுக்கை நன்கு பொடி செய்து மாவில் கலந்து வைக்கவும்.

காலை இட்லி வார்க்கும் முன்னர் மாவில் சேர்க்க வேண்டியவை

ஒரு டேபிள் ஸ்பூன் நெய்

கடுகு

உளுத்தம்பருப்பு

கடலைப்பருப்பு வகைக்கு ஒவ்வொரு டீஸ்பூன்

மிளகு, ஜீரகம் உடைத்த பொடி 2 டீஸ்பூன்

பெருங்காயம் சின்னத் துண்டு

கருகப்பிலை, கொத்துமல்லி ஆய்ந்து நறுக்கியது

தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது 2 டேபிள் ஸ்பூன்


நெய்யை நன்கு காய வைத்துக் கடுகு , உ.பருப்பு, கபருப்பு, பெருங்காயம், கருகப்பிலை தாளித்து மாவில் போட்டுக் கலக்கவும்.  அந்தச் சட்டியிலேயே நறுக்கிய தேங்காய்களைப் போட்டுக் கொஞ்சம் சிவக்க வறுத்துச் சேர்க்கவும்.  முந்திரிப்பருப்பு இருந்தாலும் போடலாம்.  அவரவர் விருப்பம். கொத்துமல்லி நறுக்கிச் சேர்க்கவும்.  பின்னர் இட்லிப் பானையில் துணி போட்டோ  அல்லது இட்லி குக்கரில் உள்ள தட்டுக்களில் எண்ணெய் தடவியோ  இட்லி மாவைக் கரண்டி கரண்டியாக எடுத்து ஊற்றி வேக வைக்கவும்.  வெந்ததும் சட்னி, சாம்பார், கொத்சு  எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.  காஞ்சீபுரத்தில் தம்பளரில் எண்ணெய் தடவி மாவை விட்டு வேக வைப்பாங்க.  இங்கே நாம் வீட்டில் பண்ணுவதை விட அங்கே இன்னமும் உதிர் உதிராக இருக்கும். நான் ரொம்பக் கொரகொரப்பாக அரைப்பதில்லை.

வெந்த இட்லிகள்

சாம்பார் இட்லிக்குத் தொட்டுக்கொள்ளப் பண்ணியது.

இதோடு குழந்தைகள் சாப்பிட வேண்டி பச்சைப் பட்டாணி அல்லது ஊற வைச்ச பட்டாணியோ, வேர்க்கடலையோ, காரட் சீவியோ சேர்க்கலாம். இதை இட்லியாகச் செய்ததும் ஒரு வாணலியில் நல்லெண்ணையைக் காய வைத்துக் கடுகு தாளித்து இட்லிகளை நான்காக நறுக்கிப் போட்டு மிளகாய்ப் பொடியைக் கலந்து(தோசை மிளகாய்ப் பொடி தான் கலக்க வேண்டும்) கீழே இறக்கிக் கொத்துமல்லி தூவி, எலுமிச்சம்பழம் பிழிந்து சில்லி இட்லி என்று சாப்பிடலாம்.  பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயத்திலேயே எலுமிச்சைச் சாறைக்கலந்து அதையும் இந்த சில்லி இட்லி மேல் தூவிக் கொண்டு சாப்பிடலாம். பிடிக்கிறவங்களுக்குப் பிடிக்கும். :)

=====================================================================================




28 கருத்துகள்:

  1. காஞ்சீபுரம் இட்லி... எனக்கு மிகவும் பிடித்தது.

    இதில் பாரம்பர்யமான கோயில் செய்முறையில் கருவேப்பிலை, கொத்துமல்லி மற்றும் தேங்காய் சில்லு சேர்ப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.. அளவாய் சாப்பிடலாம் என்பது என் டேஸ்ட்!

      நீக்கு
    2. ஸ்வாமி நிவேதனத்தில் தேங்காய் சேர்க்கலாமே? கருகப்பிலை, கொத்துமல்லிப் பிரசாத இட்லிகளில் நானும் பார்த்தது இல்லை.

      நீக்கு
  2. இந்த இட்லிக்கு மி பொடிதான் தக்க துணை.

    காஞ்சீபுரம் செல்வதற்கு ஒரு நாள் முன்பு அங்கு பாரம்பர்யமாகத் தயாரிப்பவரிடம் சொல்லி 400 ரூபாய்க்கு ஒரு குடலை இட்லி வாங்கினோம். கையோடு மி பொடி எண்ணெய் எடுத்துப்போயிருந்தோம்.

    கா.இ சாப்பிடுவதற்கு முன் அருகில் தண்ணீர் தயாரா இருக்கணும். இல்லைனா மென்னைப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சமாய்  மெதுவாய்  எடுத்து சவைத்து சுவைத்து சாப்பிட்டால் தண்ணீருக்கு வேலை இல்லை!

      நீக்கு
    2. காலம்பர முதல் கால பூஜைக்குப் போனாலே இட்லிப் பிரசாதம் கிடைக்கும், முன்னெல்லாம். இப்போக் காஞ்சிபுரம் எல்லாம் போயே பத்து வருடங்களுக்கும் மேல் ஆச்சு.

      நீக்கு
  3. சமீப யாத்திரையின்போது இரயிலில் கா்இட்லி கொடுத்தார்கள். தொட்டுக்க தக்காளி காரத் தொக்கு. அதுவும் நல்லாத்தான் இருந்தது.

    சாம்பார்்இதற்கு சரிப்பட்டு வருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தக்காளி தொக்கு ஆப்ட். கொஞ்சம் கிரேவி டைப்பிலும் இருக்க வேண்டும். சாம்பாராக இருக்கக் கூடாது. ஆனால் இதெல்லாம் அவரவர் விருப்பம், டேஸ்ட் இல்லையா!

      நீக்கு
    2. கொத்சு கூடப் பண்ணி இருக்கேனாக்கும். நன்றாகவே இருந்தது. அதாவது எங்களுக்குப் பிடிச்சது. தக்காளித் தொக்கும் ஓகே தான்.

      நீக்கு
  4. குடலை இட்லியை, அரை வட்டமாக, ஒரு சென்டிமீட்டர் அகலத்தில் கட் பண்ணி வைப்பார்கள்.

    வீட்டில் செய்யும்போது டம்ளர், அல்லது இட்லித் தட்டை உபயோகிக்கலாம். யம்மி

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் செய்முறையான காஞ்சிபுரம் இட்லி படங்களுடன் நன்றாக உள்ளது. செய்முறை பக்குவம் அருமை. சரிக்குசரி பச்சரிசி சேர்ப்பதே இந்த இட்லியின் சிறப்பு. நான் சாதாரணமாகவே இட்லிக்கு அரைக்கும் போது நான்குக்கு ஒன்றாக பச்சரிசி சேர்ப்பேன். இட்லி மாவை உளுந்தின் தரத்தைப் பொறுத்து அதிகம் பொங்கி நீர்த்து விடாமல் காப்பாற்றும். இன்றைய கா. இட்லி பக்குவங்கள் நன்றாக உள்ளது. இதே பக்குவத்தில் இனி காஞ்சிபுரம் இட்லி செய்து கொள்கிறேன்

    தொட்டுகையாக என்னவாக இருந்தாலும், காலை நல்ல பசிக்கு இட்லி சுவையான சிற்றுண்டிதான். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இட்லி மாவில் நாங்கள் பச்சரிசி சேர்ப்பதில்லை என்கிறார் பாஸ்.

      நீக்கு
    2. இது!இது! இந்த பதிலைத் தான் யாரானும் சொல்லுவாங்களானு எதிர்பார்த்துட்டு இருந்தேன். எங்க வீட்டில் அல்லது பொதுவாக தென் மாவட்டங்களிலேயே இட்லி, தோசைக்கு அரைச்சால் புழுங்கலரிசியோடு ஒரு கைப்பிடியாவது பச்சரிசி சேர்ப்பது வழக்கம். இட்லி ஒட்டாமல் வருவதற்கும், தோசை முறுகலாக வருவதற்கும் போடணும் என்பார்கள். எனக்கு அப்படியே போட்டுப் பழக்கம். ஆனால் கல்யாணம் ஆகி வந்தப்புறமாத் தான் தெரியும் இவங்கல்லாம் பச்சரிசி போட மாட்டாங்கனு. இது ஒரு பெரிய பிரச்னையாக ஆகி நாங்க 88 ஆம் ஆண்டில் இரண்டாம் முறை ராஜஸ்தான் போற வரைக்கும் எங்க தெருவிலும் சரி, உறவினர் வீடுகளிலும் சரி, நான் இட்லி, தோசைக்குப் பச்சரிசி சேர்ப்பது தான் தலைப்புச் செய்தியாக இருந்தது. :))))

      நீக்கு
    3. மதுரை, திருநெல்வேலிப்பக்கங்களில் ஸ்ராத்தம் செய்வதற்கு முதல் நாள் இரவுப் பலகாரத்துக்குப் பச்சரிசி தோசை தான் பண்ணுவாங்க. தொட்டுக்கத் தக்காளி அல்லது தேங்காய்ச் சட்னி, மிளகாய்ப் பொடி, அன்னிக்கு சாம்பாரெல்லாம் தொட்டுச் சாப்பிடுவதில்லை. அல்லது பயத்தம் கஞ்சி.இந்தப் பச்சரிசி தோசைக்கு நாலு கிண்ணம் பச்சரிசிக்கு ஒரு கிண்ணம் உளுத்தம்பருப்பு, அரைக்கிண்ணம் வெந்தயம் சேர்த்துக் களைந்து அரைப்பார்கள். இப்போல்லாம் ஒரு சிலர் அவல் ஒரு கிண்ணம் ஊற வைச்சு தோசை மாவு அரைச்சு எடுக்கும்போது சேர்த்து அரைக்கிறாங்க. நான் முதல் நாள் ஊற வைச்சுட்டுக் காலையிலே எழுந்ததும் குளிச்சுட்டு அரைச்சு வைச்சுடுவேன். ராத்திரி வார்க்கச் சரியாக இருக்கும்.

      நீக்கு
  7. ​காஞ்சிபுரம் இட்லி செய்முறை பகிர்ந்ததற்கு நன்றி. மிளகு சீரகத்துடன் சுக்கு சேர்ப்பதாய் தற்போது தான் அறிகிறேன். அடுத்து திருப்பதி தயிர் சாதம் செய்முறை எழுதுங்கள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேயர் விருப்பம்!  சரி...  அவர் ஏற்கனவே நான்கைந்து வெவ்வேறு ரெசிப்பிக்கள் அனுப்பி இருக்கிறாரே....

      நீக்கு
    2. திருப்பதி தயிர்சாதம் ஒண்ணும் பிரமாதமில்லை ஸ்ரீராம். இன்னிக்கே எழுதி அனுப்பறேன். நாங்க (அம்மா வீட்டில்) எப்போவுமே இந்தத் திருப்பதிப் பிரசாத முறையில் தான் பண்ணுவோம். ஆகவே இது ஒண்ணும் கஷ்டமே இல்லை. நான் எப்போவுமே தயிர்சாதம் அப்படித் தான் பண்ணிட்டு இருக்கேன். வெண்ணெய் மாதிரி வழுக்கிக் கொண்டு தொண்டையில் இறங்கும்.

      நீக்கு
    3. காஞ்சிபுரம் இட்லிக்குச் சுக்கு முக்கியம். சுக்கு தான் தனியானதொரு ருசியைக் கொடுக்கும்.

      நீக்கு
  8. பாரம்பரிய உணவின் செய்முறை கண்டு
    மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி ஒரு தொற்று வியாதி.. எனக்கும் தொற்றிக் கொள்கிறது!

      நீக்கு
  9. இதே அளவு, இதே செய்முறைதான்...

    கொத்தமல்லியும் தேங்காய் கீறியும் சேர்ப்பதில்லை. கோவில் குடலை இட்லிம்பாங்க அதுல அவங்க இதைச் சேர்ப்பதில்லை என்று தெரிந்தது, திருமணமான புதிதில் காஞ்சிபுரம் கோயில் மாமா குடும்பத்துடன் நம்ம வீட்டில் வந்து தங்கியிருந்தாங்க. ஆனா நான் செய்வதை அவங்க சாப்பிடமாட்டாங்க. நம்ம சமையலறையில் நான் முடித்துக் கொண்டு அவங்களுக்குச் சுத்தம் பண்ணி கொடுக்கணும் அவங்க சமைச்சுக்குவாங்க இல்லைனா அவங்க முடிச்சப்புறம் நான் செய்துகொள்ள வேண்டும். அவங்க சமைக்கும் போது நான் உள்ளே செல்லக் கூடாது...

    அந்த மாமாகிட்டருந்து கற்றுக் கொண்டதுதான். கோயிலில் புழுங்கலரிசி பயன்படுத்தமாட்டாங்க. பச்சரிசிதான். அதனால்தான் அந்த இட்லி கொஞ்சம் சாப்பிடக் கஷ்டமாக இருக்கும். தொண்டையை அடைக்கும். ஆனா நாம பு அ போடுவதால் அவ்வளவு அடைக்காது.

    நான் வட்ட பாத்திரத்தில் விட்டு வேக வைத்து கேக் துண்டம் போடுவது போல கட் செய்துவிடுவேன் இல்லைனா கிண்ணங்களில்...

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!