4.11.26

நிச்சயதார்த்தத்துக்கும் திருமணத்துக்கும் நிறைய மாதங்கள் இடைவெளி இருப்பது நல்லதா?

 

கேள்வி பதில்கள் : 

நெல்லைத்தமிழன் : 

1.நிச்சயதார்த்தத்துக்கும் திருமணத்துக்கும் நிறைய மாதங்கள் இடைவெளி இருப்பது நல்லதா? அதிகபட்சம் எவ்வளவு இடைவெளி இருக்கலாம்? 

# திருமணம் நடத்துவதில் பல அம்சங்கள் பரிசீரிக்கப்படுகின்றன என்பதால் நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் இடைவெளி எவ்வளவு குறைவாக இருக்க முடியுமோ அவ்வளவுக்கு நல்லது. முகூர்த்த நாளுக்கு முதல் நாள் நிச்சயதார்த்தம் ஏன் வைத்துக்கொள்ளக்கூடாது என்று நான் பலமுறை யோசிப்பதுண்டு. ஒருவேளை இதர பஞ்சாங்க அம்சங்கள் சரிவர அமையாது என்பது காரணமாக இருக்கலாம்.

அதிகபட்சம் இடைவெளி எவ்வளவு இருக்கலாம் என்பது ஒவ்வொருவரின் கருத்துக்கு ஏற்ப மாறுபடும். என்னைக் கேட்டால் ஒரு மாதத்திற்குள் என்று சொல்வேன்.

2.உடலுழைப்பு இல்லாமல், வாழ்க்கையை அனுபவிப்பதை மாத்திரமே நோக்கமாக்க் கொண்டால் (மூணு நாட்கள் கொத்தனார், வயல் வேலை, கடைகளில் வேலை, சம்பாதித்த பணம் தீரும் வரை டாஸ்மாக்) வெளி மாநிலங்களிலிருந்து வேலைக்கு ஆட்கள் புலம் பெயர்ந்து வருவதைத் தடுக்க இயலாது அல்லவா? 

# இலவசங்களால் தீமைகள் அதிகமே தவிர,  நல்ல பயன் ஏதும் இல்லை என்பது என் திடமான கருத்து.

3.வாழ்க்கையில் நண்பர்களைச் சம்பாதிப்பது முக்கியமா இல்லை உறவினர்களோடு நெருக்கத்தை வளர்த்துக்கொள்வதுதான் முக்கியமா? 

# நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நடுவே ஏன் ஒரு போட்டி இருக்க வேண்டும் ? நண்பர்களைத் தரம் பார்த்து சேர்த்துக் கொள்ளலாம். உறவினர்கள் இறைவன் கொடுத்த வரம். ஆபத்துக்குக் கைகொடுக்கும் நபர்  நண்பரானாலும் உறவினரானாலும் சமம்தானே ?

4.அவரவர்க்கு சிறிய குடும்பம், உறவினர்களுக்குள்ளே திருமணம் செய்யாமை போன்றவற்றால் உறவுகளில் நெருக்கமில்லாமல், தான் தன் குடும்பம் என்ற மனோபாவம் அதிகமாகிவிட்டதா? 

# ஒரு தலைமுறையின் மனப்பான்மை மாறுவதற்கு ஒரு காரணம் மட்டுமே இருக்காது. மாற்றம் பல்வேறு காரணங்களின் பலதரப்பட்ட தாக்கத்தால் நிகழ்கிறது. உறவினர்களுடன் நெருக்கம் என்பதும் இது போன்ற மாற்றங்களுக்கு உட்பட்டதுதானே.

5.எனக்கு ரொம்ப வருடங்களாகவே இருக்கும் சந்தேகம்.. மக்களுக்கு இப்போது கிடைப்பது மாட்டுப் பால்தானா இல்லை கலப்படப் பாலா? இவ்வளவு மக்களுக்கும் பால் உற்பத்தி செய்யும் அளவு மாடுகள் இருக்கின்றனவா?

# எனக்கும் இதே சந்தேகம் அடிக்கடி வருகிறது. காரணம் அரசின் பால்பண்ணையில் இருந்து வரும் பாலில் கூட, பாலேட்டின் அடர்த்தியும் சுவையும் தினசரி மாறுபடுகிறது.  நாம் தயாரிக்கும் தயிர் ஒரே சீராக இருப்பதில்லை. ஏதோ ஒரு பொருளை சாமர்த்தியமாகக் கலக்கிறார்கள். அதன் மூலம் பாலின் அளவைக் கூட்டுகிறார்கள் என்கிற சந்தேகம் வலுக்காமல் இல்லை.

= = = = = = = = = = = = = = =

மன சாட்சியம்  - 33
K G Y Raman

" அளவான ஆசை"

" எல்லாம் யோசித்துப் பார்க்கையில் உண்ணுவதும் உறங்குவதுமாக முடியும் " என்று பாடியது பட்டினத்தாரா தாயுமானவரா என்று தெரியவில்லை .  ஆசைக்கோர் அளவில்லை என்று ஆரம்பித்து,  கடைசியில் உண்ணுவதும் உறங்குவதுமாக  முடியும்   என்று வந்து நின்றால் , ஏதோ ஆசைப்படுவது தவறு என்று சொல்லுகிறார் என்றல்லவா ஆகிறது ? ஆசைப்படாது யாராலும் வாழ முடியுமா ?

எல்லா வயதிலும் ஏதோ ஒரு ஆசை மிகத் தீவிரவாக ஒவ்வொருவருக்கும் இருக்கத்தானே செய்கிறது ? ஈசனோடு ஆகினும் ஆசை அறுமின் என்று சொல்பவருக்கு வேண்டுமானால் ஆசையை அறுப்பது எளிதாக இருக்கலாம். நமக்கெல்லாம் அப்படி இல்லையே !

மிக இள வயதில் மந்திரவாதிக் கதைகளாகக் கேட்டு நாமும் ஒரு மந்திரவாதியாக விட வேண்டும் என்ற தீவிரமான ஆசை எனக்கு இருந்தது. எனக்கு பத்து வயதாக இருந்தபோது பலமுறை தெருவோரத்தில் வித்தை காட்டுவோர் வந்து மந்திரத்தில் மாஞ்செடி வர வழைத்துக் காட்டுவதைப் பார்த்திருக்கிறேன். இன்னும் கூட எப்படிச் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியாத பல செப்பிடு  வித்தைகளை அந்த நாட்களில் பார்த்திருக்கிறேன். 

பி சி சர்க்கார் என்ற வங்காள மந்திரவாதி தாஜ்மஹாலையே மாயமாக மறைய வைத்துக் காட்டினாராம்.  பல வியக்கத்தக்க வித்தைகளைச் செய்கிற பல மந்திரவாதிகள் இதில் மந்திரமெல்லாம் ஒன்றுமில்லை என்று  சொல்லி நம்மைக் குழப்புவார்கள்.

இந்த மாதிரி மந்திரத்தில் மாஞ்செடி வரவழைக்கும் வித்தை நமக்குத் தெரிந்தால் கடலை மிட்டாய் முதல் பவுண்டன் பேனா தாண்டி ராலே சைக்கிள் வரை என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாமே என்று மனக்கோட்டை கட்டியிருக்கிறேன். அப்போதெல்லாம் சைக்கிள் என்பது இப்போதைய சொகுசுக்கார் மாதிரி.

கொஞ்சம் விவரம் தெரிந்ததும் மந்திரத்திலிருந்து ஆசை விடுபட்டு மாட்டு வண்டி ஓட்ட வேண்டும் என்று வந்து நின்றது. அந்த ஆசை நிறைவேறாமலே மறைந்துவிடவில்லை. ஊரில் கோடை விடுமுறையில் மாட்டு வண்டி சொற்ப நேரமே ஆனாலும் ஓட்டிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். 

மேலும் கொஞ்சம் வயதான பின் " ₹ 110 மாத சம்பளத்தில் வேலையில் சேர வேண்டும் " என்கிற மிகப்பெரிய ஆசை வந்தது.  " 100 ரூபாய் சம்பளக்காரன் " என்று உயர்த்திப் பேசுவார்கள் . விலைவாசி நிலவரம் அப்படி இருந்த காலம். 

வேலை கிடைத்ததே தவிர,  சம்பளம் 110 ரூபாய் ஆவதற்கு சில மாதங்கள் காத்திருக்க வேண்டியது ஆயிற்று. 

வேலையில் சேர்ந்த பின் ஒன்றன் பின் ஒன்றாக வெவ்வேறு ஆசைகள் ரயில் வண்டி போல வருவதும் நிறைவேறுவதும் நிறைவேறாமல் மறக்கப்படுவதுமாக ...

கவிஞரைப் பற்றிய கருத்து என்னவாக இருந்தாலும்,  " சின்னச் சின்ன ஆசை "  என்கிற சினிமாப் பாடல் வரிகளை நான் மிகவும் ரசித்துக் கேட்டிருக்கிறேன். ஏனென்றால் , அந்த பாடலின் அடிப்படையோடு கேட்பவர் ஒவ்வொருவரும் எளிதாக ஒன்றிப் போக முடிந்தது. இதுதான் சினிமாப் பாட்டின் மகத்தான வெற்றி.

பேஸ்புக், வலைப்பதிவு எழுதுபவர்களுக்கு அவர்கள் எழுதுவதை நிறைய பேர் பார்க்க வேண்டும், நிறைய கருத்துக்கள் வரவேண்டும் என்கிற ஆசை மிக தீவிரமாக இருப்பதை அறிய முடிகிறது. நானும் எழுதிய பின் யார் என்ன சொல்கிறார்கள் என்று ஆவலாகத் தான் பார்க்கிறேன். பாராட்டில் மகிழாதவர்கள் யார் ? பாராட்டு வந்தால் மகிழ்ச்சி அடையாதவர்களும் இருக்க முடியுமா என்ன ? எனக்கு பாராட்டுகளைத் தவிர அது பற்றி சொல்லப்படும் கருத்துகளுக்கு என்னிடம் என்ன மறுமொழி இருக்கிறது என்று யோசிப்பதில் ஆசை அதிகம்.

வயது முதிர்ந்த பின் முன் வரிசையில் இருக்கின்ற ஆசைகள் என்னென்ன ? எல்லாப் பற்களும் விழுந்து விடக்கூடாது, சாப்பிடுவது செரிக்க வேண்டும், நம்மோடு பத்து நிமிஷம் உட்கார்ந்து பேச இரண்டொரு நபர்களாவது அருகே இருக்க வேண்டும்.‌ கோபத்தை அறவே ஒதுக்கி சாந்தமாக வாழ வேண்டும். மேம்போக்காகப் பார்த்தால் இந்த ஆசைகள் நிறைவேறுவது ஒன்றும் பெரிய கஷ்டம் இல்லையே என்று தோன்றும். உண்மையிலும் அப்படித்தான் என்று சொல்பவர்கள் பாக்கியசாலிகள்.

======================================================================================

படமும் பதமும் : 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 


சென்ற ஞாயிறு(25.10.26) ஃபோரம் மால் - கோணன்குண்டே சென்றிருந்தேன். அங்கிருந்த பிரம்மாண்ட நடன மங்கை பொம்மை.

நெல்லைத்தமிழன் : 


ஒரு ஹோட்டல் மாஸ்டரின் உண்மையான திறமை, முழுமையான மதிய உணவில்தான் வெளிப்படும் என்பது என் எண்ணம். அதில்தான் நமக்குத் தேவையான சரிவிகித சத்துக்களும், பாரம்பரிய சுவையும் இருக்கிறது என்பது என் எண்ணம்.  தென்னிந்திய மதிய உணவு சூப்பரா இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றும் இரண்டு உணவங்கள் பெயர் என்ன என்ன? 90களின் சரவணபவன் ருசியை எந்த உணவகமும் எனக்குக் கொடுத்ததில்லை. அதன் பிறகு, பஹ்ரைனில், நான் தனியாக இருந்தபோது சங்கீதா உணவக மதிய உணவு மிக மிக ருசியாக இருக்கும். அதற்கு அங்கிருந்த இளம் செஃப்தான் காரணம் (அவர் பெயர் சட்னு நினைவுக்கு வரலை. ). நான் தினமும் மதிய உணவுக்கு அங்கு செல்வேன். பிறகு ஒரு நாள் அவருக்கு போஸ்ட் ஆஃபீசில் (தமிழகத்தில்) வேலை கிடைத்தது. இது பெர்மனண்ட், வாழ்க்கைக்கு நல்லது என்று நினைத்து அந்த ஹோட்டல் வேலையை ரிசைன் பண்ணிவிட்டார். எனக்கு மாத்திரம் நிறைய பணம் இருந்திருந்தால், நான் அவரை பார்ட்னராகப் போட்டு ஒரு ஹோட்டல் தொடங்கியிருப்பேன் (அமெரிக்க போன்ற இடங்களில்).  அவர் போனப்பறம் வேற ஆள் வந்தார். அவர் உணவு எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அத்துடன் தினமும் மதிய உணவு உட்கொள்ளும் வழக்கத்தையே நிறுத்திவிட்டேன். 


மதுரையில் சூப்பர் அல்வா மற்றும் ஜாங்கிரிக்கு பிரேமா விலாஸை விட்டால் வேறு கிடையாது என்பது என் எண்ணம் (ஹேப்பிமேன் என்று சிலர் விளம்பரப்படுத்துவார்கள். அதெல்லாம் சரிப்பட்டு வராது). இங்கு ஜாங்கிரி (அதாவது மெட்ராஸ் ஜிலேபி) நிறமி எதுவும் சேர்க்காமல் அவ்வளவு ருசியாக இருக்கும் (2025 டிசம்பரில் கால் கிலோ 100 ரூ). என்னவோ வாங்காமல் வந்துவிட்டேன். நாங்கள் அல்வா வாங்குவதையும் நிறுத்திவிட்டோம். அதற்குப் பதிலாக நெல்லை அல்லது மதுரை செல்லும்போது வாழை இலையில் 50 கிராம் அல்வா கொடுப்பார்கள். 20 ரூ என்று நினைவு. அதை வாங்கிச் சாப்பிடுவோம். ரொம்ப ஆசையாக இருந்தால் இன்னும் ஒன்று வாங்குவோம். மற்றபடி கால்கிலோ, அரைகிலோ என்றெல்லாம் வாங்குவதை கடந்த நான்கு வருடங்களாக நிறுத்திவிட்டேன்.

குறிப்பு: முதல் படம்..ஹோட்டல் ஜானகிராம் நெல்லை ஜங்கஷன் மதிய உணவு. 

= = = = = = = = = = = =

KGG பக்கம். 

காலை எழுந்தவுடன் தவளை! 

நான் சேமித்து வைத்திருக்கும் புத்தகங்களில் ஒரு தலைப்பு இது. 

காலை எழுந்தவுடன் படிப்பு - பிறகு கனிவு தரும் பாட்டு என்று கேள்விப்பட்டுள்ளோம். 

சிலர் காலை எழுந்தவுடன் காபி என்று சொல்வார்கள். 

சிலர் காலை எழுந்தவுடன் காலைக்கடன் கழிக்கச் செல்வார்கள். 

இது என்னடா காலை எழுந்தவுடன் தவளை! - என்று வியந்தேன். பிறகு விவரங்கள் தெரிந்துகொண்டேன். 








பொருளடக்கம் : 


மேலும் சில விவரங்கள் அடுத்த வாரம். 

= = = = = = = = = = = =

85 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாகட்டும்.

    பதிலளிநீக்கு
  2. காலை எழுந்தவுடன் தவளையா.? ஆஹா. நல்லதொரு 21 பாயிண்ட் ப்ளான்!!!

    பதிலளிநீக்கு
  3. மதுரை பிரேம விலாசில் 2003இல் தங்கி இருந்தோம். நாகப் பட்டணம் ஹல்வாவுக்குப் பிறகு ருசித்தது இங்கே தான். திரு நெல்வேலி ஜானகிராம் நல்ல விடுதி. காலை உணவில் சூப்பர் இட்லி சட்டினி சாப்பிட்டோம்.

    பதிலளிநீக்கு
  4. திருமதி பானு வெங்கடேஸ்வரனின் பங்களூர் மால் படம் அருமை. பிரம்மாண்டம்.

    பதிலளிநீக்கு
  5. ''சாப்பிடுவது செரிக்க வேண்டும், நம்மோடு பத்து நிமிஷம் உட்கார்ந்து பேச இரண்டொரு நபர்களாவது அருகே இருக்க வேண்டும்.‌ கோபத்தை அறவே ஒதுக்கி சாந்தமாக வாழ வேண்டும். மேம்போக்காகப் பார்த்தால் இந்த ஆசைகள் நிறைவேறு'' இவைதான் எனக்குப் பொருந்தும். செரிமானம் இல்லாமல் சிரமப்படும்போது அதுவும் இரவு வேளையில் என்ன செய்வதென்றே தெரியாது. அதுவும் எதைச் ச்ப்பிட்டதால் இந்த எரிச்சல் வருகிறது என்றும் புரியவில்லை:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோல் சீவிய இஞ்சி சாறு + வெல்லப்பாகு+ஏலக்காய் தூள் = இஞ்சி முரப்பா இதற்கு கண் கண்ட மருந்து. செய்து வைத்துக் கொள்ளுங்கள். உருட்டிய குட்டி உருண்டை ஒன்றுசாப்பிட்டு இரண்டு ஏப்பம் வந்தால் செரிமான கோளாறெல்லாம் மாயாமாய் மறைந்து விடும். (ஹி..ஹி.. உங்களுக்கு தெரியாததா? . சும்மா ஞாபகப் படுத்தினேன். அம்புட்டுத்தான். ) :))

      நீக்கு
    2. ஜிவி அவர்கள் சொல்லும் வைத்தியத்தை செய்து பாருங்கள். கமென்ட் முக்கு நன்றி.

      நீக்கு
    3. @Revathi ஆங்கில மருத்துவத்தில் இந்த "பான்" மாத்திரைகள் அசிடிடிக்குச் சிறந்த சேவை பண்ணுதே. நம்ம ரங்க்ஸுக்கும் இப்படித்தான் அசிடிடிப் பிரச்னை ரொம்பவே அதிகமாய்ப் போகச் சாப்பிடவே முடியாமல் இருந்தது. பின் ஸ்ரீரங்கத்திலேயே ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருந்த உள்ளூர் வயசான மருத்துவர் ஒருத்தரின் ஆலோசனையின் பெயரில் Pantacid மாத்திரைகள் வாங்கி வைச்சுண்டுக் காலை வெறும் வயிற்றில் கொடுக்க ஆரம்பிச்சப்புறமாப் பிரச்னை இல்லை. ஒரு நாளைக்கு ஒண்ணு தான். காலை மட்டும் வெறும் வயித்தில். எனக்கும் இப்போ அந்த மாதிரி ஒரு அசிடிடி மாத்திரையைத் தான் ஆர்த்தோ சர்ஜன் எழுதிக்கொடுத்திருக்கார். RAZO 20 என்று பெயர். தினம் காலை வெறும் வயித்தில் ஒண்ணு எடுத்துப்பேன். ஒரு மணி நேரம் கழிச்சுத் தான் எதுவும் சாப்பிடலாம். அதோடு இரவு உணவை எப்போவும் சாயங்காலம் ஆறரைக்குள் முடிச்சுடுவோம் இரண்டு பேருமே. இப்போவும் நான் என் இரவு உணவை ஆறரை ஆறே முக்காலுக்குள் முடிச்சுடுவேன். அதான் வசதியா இருக்கு. உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. என்றாலும் இதை யாராவது மருத்துவர் ஆலோசனையுடன் செயல்படுத்த முடியுமானு பாருங்க. சாயங்காலம் காஃபி, அல்லது தேநீரை அநேகமாத் தவிர்த்துடுவேன். என்னிக்கானும் குடிப்பது தான்.

      நீக்கு
  6. அந்தக்காலத்தில்(:) திருமணங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்டன. நிறைய இடைவெளி இப்போது தேவையில்லை என்றே நினைக்கிறேன். choices and chances plenty now.

    பதிலளிநீக்கு
  7. லேசாக யோசித்துப் பார்த்தாலே தெரியும். ஒன்றை செயல்படுத்த வேண்டும் என்ற ஆசையே நம் எல்லா வெற்றிக்கும் காரணம் என்பது தெரியும். ஆர்க்கிமிடீசைக் கேட்டால் இது பற்றி நிறைய சொல்வார்.

    வாழ்க்கையின் வெற்றிப் பாதைக்கு முதல் படிக்கட்டு ஒன்றின் மீதாக நாம் கொள்ளும் ஆசை தான் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களோ, தெரியவில்லை. பின் திருமூலர் ஏன் அப்படி ஆசை அறுமின் என்று சொன்னார்?
    நமது எல்லா ஆசைகளும் வெற்றி பெறுவது இல்லை; அவை நிராசையில் முடிந்து விடக்கூடாது என்பதற்காக சொல்லியிருப்பாரோ? யோசனை ஓடுகிறது.
    ஆசைக்கும் ஆர்வத்திற்கும் வித்தியாசம் தெரியுமா என்று யாரோ முணுமுணுப்பது தேசலாகக் கேட்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
    2. விருப்பம் இல்லாமல் நடவடிக்கை இராதல்லவா ? ஆசை இருக்கக் கூடாது என்று சொல்லுவது ஞானமார்க்கத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் - நமக்கு இன்னும் அந்தப் பக்குவம் வரவில்லையே , என்ன செய்வது ?

      நீக்கு
    3. ஞான மார்க்கம் இப்பொழுது இருக்கிற வாழ்க்கையை செப்பனிட முடிந்தால் ஓ.கே. இல்லாபட்சத்தில் இன்று அவரவருக்கு கிடைத்திருக்க்ற வாழ்க்கை நேர்த்தியே வரம் என்ற திருப்தியோடு போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான்.

      நீக்கு
  8. எனக்கும் என் தோழிகளுக்கெல்லாம் பெண் பார்த்து முடிவு செய்தால் பாக்கு வெத்திலை மாற்றின மாதிரிதான். திருமணங்கள் தை மாதம், பங்குநி, சித்திரை, வைகாசி ஆவணி இது போல மாதங்களில் நடக்கும். இப்போது அவசர யுகம்:) அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். அபிப்பிராயம் மாற சந்தர்ப்பங்கள் உண்டு. அதனால சுபஸ்ய சீக்கிரம் தான் நல்லது.

    பதிலளிநீக்கு
  9. இருபத்திரண்டு வருஷங்களுக்கு முன் ,ஏன் முப்பது வருஷங்களுக்கு முன் கூட நிச்சயம் வரை வந்து நின்ற திருமணங்கள் உண்டு. பெண் வீட்டாரைப் பார்த்தால் மிகப் பரிதாபமாக இருக்கும். இப்பொழுதும் மாற்றுக் கருத்துள்ளவர்களை இணைப்பது எத்தனை கெடுதலோ அத்தனை கெடுதல்
    காலம் தாழ்த்துவதிலும் இருக்கிறது. நிறையப் பேசி விட்டேனோ:)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களுக்கு நன்றி

      நீக்கு
    2. வல்லிம்மா ஆயிரத்தில் ஒரு வார்த்தை

      என் மகள் என்னை educate பண்ணிக்கொண்டிருப்பாள். சேர்ந்து வாழ்வது பெண்ணும் பையனும். அதனால் திருமணத்தில் அவங்க விருப்பம்தான் முக்கியம். மத்தவங்க ஒபினியனுக்கு அங்கு இடமில்லை. கல்யாணம் ஆனப்பறம் இருவருக்கும் இடைல பிரச்சனை வந்தால் பெற்றோரிடமா பஞ்சாயத்துக்கு வரமுடியும்? என்பாள்

      நீக்கு
  10. ''எல்லா வயதிலும் ஏதோ ஒரு ஆசை மிகத் தீவிரவாக ஒவ்வொருவருக்கும் இருக்கத்தானே செய்கிறது ? ஈசனோடு ஆகினும் ஆசை அறுமின் என்று சொல்பவருக்கு வேண்டுமானால் ஆசையை அறுப்பது எளிதாக இருக்கலாம். நமக்கெல்லாம் அப்படி இல்லையே !''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
    ஆசைப் படுவதை நிறுத்துவது கடினம் தான். வயதான பிறகு நம் ஆசைகள் நல்ல உடல் ,நலம், நிம்மதியான வாழ்க்கை. நாவடக்கம்,.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. கேள்விகளும் , பதில்களும் அருமை

    பதிலளிநீக்கு
  13. ஆசைக்கு எப்போதும் அளவில்லை. உணவு உடை இருப்பிடப் பிறகு மத்தவங்களைவிட நல்லா இருக்கணும், ...

    எதுக்கு ஆசைப்படக்கூடாது என்றால் அதீத ஆசை கூடாது. சிலருக்கு திருமண வீடுன்னா தானே மாப்பிள்ளையாயிருக்கணும் இழவு வீடுன்னா பிணமா இருக்கணும், அத்தனை முக்கியத்துவம் தனக்குக் கிடைக்கணும்னு நினைப்பாங்க. அதீத ஆசை உடம்புக்கு ஆகாது

    பதிலளிநீக்கு
  14. கதையைக் காணோமே கற்பனை வரண்டுலிட்டதா இல்லை நல்ல அழகி படம் கிடைக்கலையா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை முடிந்துவிட்டதே!

      நீக்கு
    2. ?????????????????????????????????என்னாது? கதை முடிஞ்சுடுத்தா? எப்போ?? கடைசியா எழுதினதுலே சேலத்து வில்லனைப் பிடிக்கப் போறாங்கனு நினைச்சேனே! அப்புறமா என்ன ஆச்சு? பாபாவுக்கும் விமலாவுக்கும் கல்யாணம் ஆச்சா? வீணா ஆனந்தைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாங்களா? பாவனாவுக்கு என்ன நடந்தது? பனானா ஏஜென்சீஸ் வெற்றிகரமாக நடக்குதா? இது எதுவுமே தெரியாமல் , புரியாமல் முழிச்சுட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா கதையே முடிஞ்சாச்சுனு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டீங்களே!

      வேணும்னா ஒண்ணு செய்ங்க. நீங்க விட்ட இடத்தில் இருந்து யாரையானும் தொடரச் சொல்லுங்க. நெல்லையையோ அல்லது பா.வெ./கீ.ரெ. இருவரையுமோ எழுதச் சொல்லுங்க. துரை செல்வராஜையும் எழுதச் சொல்லலாம். ஆனால் அவர் கொஞ்சம் கிராமத்துக் கதாநாயக, நாயகியரைக் கொண்டு வருவார். ஆன்மிகம் தூக்கலாகவும் இருக்கும். வேறே யார்னு யோசிக்கணும். ஜேகேசி இருந்திருந்தாரானால் ஏதானும் உபாயம் சொல்லுவார். :(

      நீக்கு
  15. வயதான பிறகு நம்முடன் பேச..... இது சுலபமல்ல. நாம ஒரே டாப்பிக் பேசக்கூடாது இளையவர்கள் சொல்றதைக் கேட்கணும் ஜட்ஜ் பண்ணக்கூடாது... னு பல கூடாதுகள் இருக்கு. அவையெல்லாம் கடினமானவை

    பதிலளிநீக்கு
  16. பால் பற்றி கேள்வி கேட்டால் அதே கேள்வி திரும்ப வருது... மத்தவங்களும் பிசியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பால் பற்றிய சந்தேகம் எனக்கும் உண்டு.

      நீக்கு
  17. ஆசைக்கோர் அளவில்லை அகிலமெலாம் கட்டிஆள
    ஆளினும் கடல்மீதிலே ஆணைசெலவே நினைவர்
    அளகேசன் நிகராக அம்பொன்மிக வைத்தபேரும்
    நேசித்து ரசவாத வித்தைக்கலைந்திடுவர்
    நெடுநாளிருந்த பேரும் நிலையாகவே இன்னும்
    காயகற்பந்தேடி நெஞ்சுபுண்ணாவர்
    எல்லாம் யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
    உறங்குவதுமாக முடியும்
    உள்ளதே போதுமென்ற மனமே நலம்செய்
    உன்னத குணமடைந்தோர்க்கு சாசுவத சாந்தமுண்டாகுமே.

    -தாயுமானவர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை பதிவில் திருமந்திரம் கோமதி சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன் என்று சொன்னாதால் தேடி படித்து பகிர்ந்தேன்.

      நீங்கள் பார்த்தீர்களா தெரியவில்லை, நெல்லையும் பார்க்கவில்லை.
      இந்த பதிவில் திருமந்திர பாடலை படித்து விட்டீர்கள்.
      நன்றி கீதா.

      நீக்கு
    2. நீங்க நெல்லை பதிவில் சொன்ன பதிலையும் பார்த்துவிட்டேன் கோமதி அரசு. பதில் சொல்லலை. இன்னிக்கும் பார்த்தேன். அதைக் குறிப்பிடணும்னு நினைச்சுட்டு மறந்திருக்கேன். மிக்க நன்றி. நெல்லை பார்த்தாரா இல்லையானு தெரியாது.

      நீக்கு
  18. //ஆசைப்படாது யாராலும் வாழ முடியுமா ?//

    வாழ முடியாதுதான். ஆசையை சீர் அமைக்க வேண்டும் என்பார் வேதாத்திரி மகரிஷி.

    ஆசையை அடக்க நினைத்தால் அலையும்,
    அறிய நினைத்தால் அடங்கும்"

    //ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
    ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
    ஆசைப் படப் பட ஆய் வரும் துன்பங்கள்
    ஆசை விட விட ஆனந்தம் ஆமே."//
    திருமூலர் திருமந்திரம்
    நீங்கள் சொன்னது போல சித்தர்களுக்கு ஆசையை அறவே விட முடியும்.
    நமக்கு முடியாதுதான்.

    //ஊரில் கோடை விடுமுறையில் மாட்டு வண்டி சொற்ப நேரமே ஆனாலும் ஓட்டிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். //

    ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி.

    எழுதுபவர்களின் ஆசையை சொன்னது உண்மைதான்.
    எல்லோரும் படிக்க வேண்டும் , கருத்து சொல்ல வேண்டும் என்பது ஆசைதான்.

    உங்கள் சிறு வயது ஆசைகள் அருமை.
    ஆசையே அலை போல நான் எல்லாம் அதன் மேலே! பாடல் நினைவுக்கு வருகிறது. புது புது அலைகள் வந்து கொண்டே இருக்கும், அது போல புது புது ஆசைகள் வருவதை முறை படுத்தி சீர் படுத்தி கட்டுக்குள் வைத்துக் கொண்டால் நிம்மதி.

    பதிலளிநீக்கு
  19. //வாழ்க்கையில் நண்பர்களைச் சம்பாதிப்பது முக்கியமா இல்லை உறவினர்களோடு நெருக்கத்தை வளர்த்துக்கொள்வதுதான் முக்கியமா? //

    இரண்டும் முக்கியம் தான். இருந்தாலும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் நட்பு மிக முக்கியம் . அவசரம், ஆபத்து என்றால் உறவுகளுக்கு சொல்லி விட்டு வருவதற்குள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவிதான் முதலில் வேண்டும்.

    நட்பும் அளவோடு இருத்தல் அவசியம். "என் அம்மா சொல்வார்கள் கடும் உறவு கண்ணை கெடுக்கும்" என்று. காலத்தில் கை கொடுப்பதும் நட்புதான்.

    பதிலளிநீக்கு
  20. பானு பகிர்ந்த படம் நடன மங்கை பொம்மை , மால் இரண்டும் அருமை.
    நெல்லைத்தமிழன் பகிர்ந்த மதிய உணவு படமும், ஓட்டல் ஆரம்பிக்கும் ஆசை ஏற்பட்ட காரணமும் அருமை.

    //எனக்கு மாத்திரம் நிறைய பணம் இருந்திருந்தால், நான் அவரை பார்ட்னராகப் போட்டு ஒரு ஹோட்டல் தொடங்கியிருப்பேன் (அமெரிக்க போன்ற இடங்களில்). //

    இங்கு எத்தனை ஓட்டல் ஆரம்பித்தாலும் நன்றாக ஓடும்.

    பதிலளிநீக்கு
  21. பிரேமா விலாஸ் ஸ்வீட் காரம் நன்றாக இருக்கும். என் மருமகளுக்கு அந்த கடை பலகாரம் தான் பிடிக்கும் இங்கு வரும் போது எல்லாம் அங்கு இருந்து வாங்கி வருவோம்.
    ஜானகி ராம் ஓட்டலில் மதிய சாப்பாடு நன்றாக் இருக்கும் .

    பதிலளிநீக்கு
  22. கதை என்னாச்சு? போனா வாரம் கதையை கேட்டவர்களை ஒன்று, இரண்டு என்று எண் கொடுத்தீர்கள் பதிலாக.
    இந்த தடவை நேரமேலாண்மையை பற்றி தவளை சொல்வதை பகிர்ந்து இருக்கிறீர்கள்.

    14 நம்பர் சொல்வது போல நம் வேலையை செய்ய ஆர்ம்பிக்கும் முன் மனதை தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தி தான் வேலை வாங்க வேண்டி உள்ளது இப்போது இந்த கால கட்டத்தில்.

    விரைவில் எழுதி முடியுங்கள் கதையை மறந்து விட போகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை முடித்துவிட்டேன் என்று நினைத்திருந்தேன். கடைசி சில வரிகள் விடுபட்டுப் போய்விட்டது.

      நீக்கு
    2. கதையின் போக்கைத் தெரிந்து கொள்ள நானும் ஆவலாகத்தான் இருக்கிறேன். கதை தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.

      நீக்கு
  23. எனக்கு ஒரு சந்தேகம். தளத்துக்கு வருபவர்கள் பதின்ம வயதினர் இல்லை. இனிமே தவளைலாம் படித்து தங்களை மாற்றிக்கொள்வார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தேகம்தான். படிப்பவர்கள் பதின்ம வயதினரிடம் பகிர்ந்து கொள்ளலாமே!

      நீக்கு
  24. நட்புகளும், உறவுகளும் இரண்டுமே வேண்டும்.

    'ஆசை அளவுடன் இருந்தால் நன்றே 'என்று சொல்லிவிட்டார்கள் . இதை கடைப்பிடிப்பதுதான் எமக்குள்ள சவால்.

    பெரிய பொம்மை படம் அழகாக உள்ளது.

    இந்திய விஜயத்தில் சரவணபவன், சங்கீதா இரண்டு உணவுகளும் சுவைத்திருக்கிறேன் நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  25. எழுத ஆரம்பிச்சாக் கதையாய்ப் போயிடுமோனு தோணுது. எனக்கெல்லாம் பெண் பார்த்தது ஏப்ரல் கடைசியில். நிச்சயம் பண்ணினது 1971 மே 2 ஆம் தேதி ஞாயிறு அன்னிக்கு. கல்யாணம் 1971 மே 17 ஆம் தேதி திங்கள் அன்று. குடித்தனம் தீபாவளிக்குப் பின்னர் தான்னு சொல்லிட்டுப் புனேயில் லீவ் முடிஞ்சு ட்யூடியில் சேர நம்ம ரங்க்ஸ் கிளம்பிப் போனார். புனே போக ரயிலில் ஏறும்போதே சென்னைக்கு மாற்றல் நு தகவல் வந்தாச்சாம். ஆகவே புனே போயிட்டு ஒரே வாரத்தில் திரும்பும்போதே சென்னை வில்லிவாக்கத்தில் வீடும் பார்த்துட்டு வந்துட்டார். ஜூன் பத்தாம் தேதியோ என்னமோ திங்கட்கிழமை பால் காய்ச்சினோம். உடனேயே ஜூலையில் அம்பத்தூரில் வேறே வீடு பார்த்தும் போயாச்சு. ஏன்னா அடுத்து ஆடி மாதம் வந்ததே. குடி போகக் கூடாது என்பதால் ஆனி மாதக் கடைசியிலேயே போயாச்சு. எல்லாம் ஜெட் வேகம் தான்.

    பதிலளிநீக்கு
  26. எங்க பையருக்குத் தான் நிச்சயம் முடிஞ்சு கிட்டத்தட்ட ஒன்பது மாசம் கழிச்சுக் கல்யாணம். அதுவே எங்களுக்கு ஒரு மாதிரியாத் தான் இருந்தது. ஆனால் வேறே வழி இல்லை. அம்பேரிக்காவில் இருந்ததால் டிசம்பரில் தான் கல்யாணம்.

    இப்போ மாதிரி பேசிப் பழகனு எல்லாம் இல்லை. அப்போ இம்மாதிரியான நடைமுறைகள் அவ்வளவாய்ப் பழக்கத்துக்கு வரலை. என்றாலும் இமெயிலில் இருவரும் தொடர்பில் இருந்தார்கள். பெண்ணோ மாப்பிள்ளை கூப்பிட்டுப் பேசணும்னு சொன்னப்போவும் மறுத்துவிட்டாள் இப்போப் பேச ஒண்ணுமே இல்லைனு சொல்லிட்டா.

    பதிலளிநீக்கு
  27. இந்த உறவுமுறைத் திருமணம் என் மாமனார்/மாமியார் வீட்டில் அதிகம். அதிலும் மாமனார் பக்கம் அநேகமாகப் பலரும் பெண் கொடுத்துப் பெண் வாங்குபவர்களே. நான் ஒருத்திதான் அங்கே முற்றிலும் புதிய முகம், புது ஊர், புதுப் பழக்க வழக்கங்கள். நான் சின்ன வயசில் இருந்தே பல உறவினர்களுடன் இருந்ததாலும் அதிகம் மாமா வீடு/மாமிகள், சித்தி வீடு/சித்தப்பாக்கள் வழி உறவுகள் எனப் பழகியதால் என்னோட பழக்கம் கொஞ்சம் எல்லோரையும் தெரிந்து வைத்துக் கொண்டதாய் இருந்தது. அதுவே + பாயின்டாகவும், -- பாயின்டாகவும் அமைந்து விட்டது.

    நண்பர்களைச் சம்பாதிப்பது என்பதோடு இல்லாமல் அதை நாம் தொடரவும் வேண்டும். எவ்வளவு பேரால் முடிகிறது? ரொம்பக் கஷ்டம். இந்த விஷயத்தில் எனக்கு இந்த கம்யூனிகேஷன் கொஞ்சம் தகராறு தான். நம்மவருக்குச் சுத்தமாய் வராது. அதே அவர் பெரிய தம்பியும் சரி, என் கடைசி நாத்தனாரும் சரி எல்லோரையும் அவங்க வளையத்துக்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்பதோடு அவங்க சொல்லுவது தான் வேத வாக்கு/உண்மை என்றும் ஆயிடும். அதிலும் தன்னைச் சுற்றி ஒரு AURA போட்டுக் கொண்டு அந்த வட்டத்தை விட்டு வெளியே வராமல் வட்டத்துக்கு உள்ளே எல்லோரையும் இழுப்பது என்பது எல்லோருக்கும் கைவராது.

    பதிலளிநீக்கு
  28. நல்லவேளையாக இந்தப் பால் விஷயத்தில் நாங்க/நான் இப்போ ஸ்ரீரங்கம் போனாலும் கூடப் பால்காரரிடம் முதல்நாளே தொலைபேசி மூலம் சொல்லிட்டுப் பால் கொண்டுவரச் சொல்லி வாங்கிக்கிறேன். இங்கே கூடப் பால் வாங்கறாங்க. அது பசும்பால்னு தான் போட்டிருக்கு. ஆனாலும் பதப்படுத்தப்பட்ட பால் தான். காஃபி நானே தான் போட்டுக்கறேன் என்றாலும் சுமார் தான். அம்பேரிக்காவில் என்றால் இந்த ஹாஃப் அன்ட் ஹாஃப் பாக்கெட் சுமார் ஐநூறு மில்லிக்குள் இருக்கும். அது ஒண்ணு வாங்கினால் சுமார் பத்து நாட்களுக்கு வந்துடும். காஃபி மேக்கரில் டிகாக்ஷன் போட்டுவிட்டு அந்தப் பாலில் ஓரிரண்டு சொட்டு விட்டுக் கலந்து மைக்ரோவேவில் சூடு பண்ணிட்டுச் சாப்பிட்டால் காஃபி உண்மையாகவே நல்லா இருக்கும். இந்த முறையில் அம்பேரிக்காவில் காஃபி போடச் சொல்லி என் தம்பி (சித்தி பிள்ளை. அட்லான்டாவில் இருக்கார்) சொல்லித் தான் போட ஆரம்பிச்சேன். அடுத்து ஸ்டார் பக்ஸ் காஃபி கொஞ்சம் பரவாயில்லை ரகம். வெளியே போனா அங்கே டிகாக்ஷன், ஹாஃப் அன்ட் ஹாஃப் சாஷேக்கள் வாங்கிக் கொண்டு காஃபி சாப்பிடுவோம்.

    பதிலளிநீக்கு
  29. நெல்லை சொன்னப்புறமா இந்த லெபான் மோர் வாங்க ஆரம்பிச்சதுமா மோர் சாதம் சாப்பிடுவதற்குக் கொஞ்சம் நல்லா இருக்கு. தயிர் என்னமோ கொழகொழவெனக் கரண்டியால் எடுத்தால் நூல் கோர்த்தாப்போல் வரும். பார்க்கவே பிடிக்காது. எங்கேருந்து சாப்பிடறது? ஆயிரம் தான் இருக்கட்டும். இந்தியாவைப் போன்ற சொர்க்க பூமியைத் தேடித்தான் பிடிக்கணும். :(

    பதிலளிநீக்கு
  30. பானுமதியின் இந்த நடன சிங்காரி நம்மவர் புனேயில் இருந்தப்போ அறை அலங்காரத்துக்கு வைச்சிருந்தார். கல்யாணம் ஆனப்புறமாக் குடித்தனத்தில் இதான் அலங்கார பொம்மையாய் இருந்தது. பையர் பிறந்து தான் அதை உடைச்சார். இம்மாதிரி மாலெல்லாம் போனதே இல்லை. சென்னையிலே கூட ஸ்பென்ஸர் ப்ளாஸா போனால் நானெல்லாம் ஒரு நல்ல இடமாகப் பார்த்து உட்கார்ந்துடுவேன். அவங்கலலம் போய் ஷாப்பிங் பண்ணிக் கொண்டு சாப்பிடக் கிளம்பும்போது என்னை வந்து கூட்டிப் போவாங்க.

    திருநெல்வேலி ஜானகிராமன் ஓட்டல்லே நாங்க மதியம் சாப்பிட்டப்போ எல்லாம் நுனி இலை தான் போட்டாங்க. இந்த மாதிரித் தட்டில் வைச்சுக் கொடுக்க ஆரம்பிச்சது எப்போனு தெரியலை. ஏனெனில் எங்களுக்கெல்லாம் தூக்கு வாளியில் கொண்டு வந்து கேட்டுக் கேட்டுப் போட்டுத் தான் சாப்பிட்டோம். மதுரை பிரேமவிலாஸெல்லாம் போனதில்லை. நான் மதுரையை விட்டு வந்தப்புறமா வந்திருக்குப் போல.

    பதிலளிநீக்கு
  31. மனசாட்சியத்துக்கும் கேஜிஜிக்கும் பின்னர் வரேன். இப்போ வேலை இருக்கு. ஏற்கெனவே நேரம் ஆச்சு. :(

    பதிலளிநீக்கு
  32. திரு ராமன் அவர்கள் இங்கே ஆசையே வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கார். ஆனால் யாரோ ஒரு ஸ்வாமிஜி சத்குரு வாசுதேவ் ஈஷா மையம் நு நினைக்கிறேன் "எல்லாத்துக்கும் ஆசைப்படு!" எனச் சொன்னதாக நினைவு. அவர் சொல்லுவது இது நம்மை நேர்மறைச் சிந்தனைகளுக்கு உட்படுத்தும் என்கிறார். அவரோட பார்வையில் பிரபஞ்சத்துக்கே நம்மகிட்டே உள்ள ஆசையால் தான் நம்மை விடாமல் புவி ஈர்ப்பு விசையைச் செலுத்தி நம்மை இயக்கித் தன்னோடு வைச்சுக்கிறது என்கிறார். சூரிய சந்திர, நகஷத்திர, கிரஹங்கள் உட்பட ஆசையில் தான் இயங்குகின்றன என்கிறார்.

    அவர் கருத்துப்படி ஆசை பெரிசா இருக்கணும். அப்படிப் பார்த்தால் திருமூலர் சொன்ன "ஈசனோடு ஆயினும் ஆசைகள் அறுமின்!" என்பதற்கே அர்த்தம் இல்லாமல் போயிடும். எனக்கு என்னமோ இந்த ஆசைகளை அறுப்பது என்பதே ஓர் பேராசை எனத் தோன்றுகிறது. ஆனால் பேராசை என்பது பொருளாதாரப்படி பார்க்கின்ற ஒன்று. அனைவருமே பொருளாதார அளவுகோலில் தான் பார்க்கின்றனர். இதில் மனம் வெகு எளிதில் திருப்தி அடையாது. இன்னம், இன்னமும், இன்னும் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டே இருக்கும். நமக்கு அந்த ஆசை எல்லாம் வேண்டாம். ஏனெனில் அப்படிப் பார்த்தால் நமக்கு சாதாரணமா ஒரு கார் வேணும்னா மத்தவங்க அதிலேயே சிறந்த விலை உயர்ந்த காருக்கு ஆசைப்படுவாங்க. இப்போல்லாம் கையில் கட்டிக்கிற கடிகாரங்களே லக்ஷ ரூபாய்க்கும் மேல் என்கின்றனர். நமக்கு அப்படி எல்லாம் ஆசை வேண்டாம். நம் ஆசைகள் வெகு எளிதானவை. அவற்றோடு நாம் திருப்தி அடைந்து கொண்டு அந்தக் கடவுள் அருளால் நமக்கு இதுவானும் கிட்டி இருக்கே என நினைத்துக் கொண்டு அதிலேயே மனம் மகிழ்ச்சி அடைந்தால் உண்மையிலேயே நமக்கு ஆசைகள் அறுபட்டு இருக்கும் என்பது நிச்சயம். பணம், பதவி, சொத்து, நகை நட்டு இவற்றிலெல்லாம் இல்லாத சந்தோஷம் மனத் திருப்தியிலும் போதும் என்ற மனத்திலும் தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  33. சந்தோஷம் என்பது, ஆசை என்பது பொருள் சேகரிப்பிலோ, உயர் பதவிகளிலோ, பெரிய மாளிகைகளில் வசிப்பதாலோ கிடைப்பதில்லை. நம் உள்ளே உள்ள ஈசனே திருப்தியின் வடிவம். அவன் உள்ளே உறைந்து இருப்பதைப் புரிந்து கொண்டு விட்டோமானால் நமக்கு ஆசைகள் உண்மையிலேயே அறுபட்டுப் போயிருக்கும். நம்முடன் யாராவது பேசினாலும் சரி, பேசலைனாலும் சரி பொருட்படுத்த மாட்டோம். எல்லாவற்றையும் நம்மிலிருந்து வெளியே வந்து பார்த்து ரசிக்கும் மன நிலை வந்திருக்கும். கோபம் அடங்கி இருக்கும்.

    பதிலளிநீக்கு
  34. கேஜிஜி சொல்லி இருக்கும் தவளை வைத்தியம் எல்லோராலும் ஜீரணிக்க முடியுமா தெரியலை. நானும் பல சமயங்களில் இப்படி எல்லாம் அட்டவணை போட்டுப் பார்த்து எதுவும் நடக்கலை. நடக்கிறபடி நடக்கட்டும் நாராயணானு விட்டுட்டேன் இப்போல்லாம். முன்னெல்லாம் ரொம்பப் பெர்ஃபெக்ட். எல்லாமும் சரியா இருக்கணும், இருக்கும். ஆனால் நாளாவட்டத்தில் மனம் எல்லோரிடமும் இதை எதிர்பார்க்கத் தொடங்கவே பிரச்னைகள் ஆரம்பம் ஆக ஆரம்பித்தன. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாத் தளர்த்திட்டு இப்போ அதிகமாப் பின்பற்றுவது என் சொந்த அன்றாட வேலைகளில் மட்டுமே. மற்றவற்றில் இந்த நியமங்களைக் கடைப்பிடித்தால் அவங்களோட நியமங்கள் அது சரியோ தப்போ அவங்களுக்கு அதான் சரி. அவற்றுக்கு ஊறு விளைவிக்கும்படி ஆயிடும். ஆகவே என் வரையில் தான் இப்போல்லாம் தவளை. அதாவது பெர்ஃபெக்ட் எல்லாம். :)))))) அடுத்த வாரம் வேறே தொடரும்னு சொல்லி இருக்காரே?

    பதிலளிநீக்கு
  35. என் மாமனார் வீட்டிலே மாமனார், நம்ம ரங்க்ஸ் மற்றும் அவர் பெரிய தம்பி ஆகியோர் வண்டி ஓட்டுவார்கள். மாமனாரும், நம்மவரும் மாட்டை அதிகம் விரட்ட மாட்டார்கள். ஆனால் மைத்துனரோ அவர் வண்டியில் ஏறப்போகும் முன்னரே பார்த்துட்டு மாடு, "அம்மா"னு கத்திண்டு பயத்துடன் வாலைக் குழைத்துக் கொண்டு ஒதுங்கும். அங்கெல்லாம் அதாவது கும்பகோணம் பக்கமெல்லாம் வண்டி மாடுகளுக்குக் கொம்பே இருக்காது. முதல்லே ஆச்சரியமா இருந்தது. அப்புறமாப் பழகிப் போச்சு. தஞ்சை ஜில்லா முழுசுமா அல்லது கும்பகோணம் பக்கம் மட்டுமானு தெரியலை.

    பதிலளிநீக்கு
  36. //அப்புறம் ஆனந்த் வீணா கல்யாணம். அதன்பின் பாபா விமலா கல்யாணம். சுபம் ! ஓ கே யா? "//

    இப்படி கதையை சுபம் போட்டு நிறைவு செய்து விட்டீர்களா?
    மீண்டும் படித்து அறிந்து கொண்டேன்.
    வேறு கதை எழுதுங்கள் சார்.

    பதிலளிநீக்கு
  37. சிந்திக்க வைக்கும் கேள்விகள்... சிறப்பான பதில்கள்.

    மதிய உணவின் படம்... அப்பளம் பார்க்கும்போது கொஞ்சம் சிவக்க வைத்துவிட்டார்களோ என்று தோன்றியது :) எனக்கு உளுந்து அப்பளத்தை விட அரிசி அப்பளம் தான் பிடிக்கும்!

    ஃபோரம் மால் - நன்று. இங்கே திருச்சியில் சென்னை நெடுஞ்சாலையில் புதியதாக Bharat Mall என்று கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எப்படி இருக்கப் போகிறது என்பது திறந்த பின்னரே தெரியும். பார்க்கலாம்.

    இனிப்பு சாப்பிடுவதை நிறையவே குறைத்துவிட்டேன். பொதுவாகவே வெளியே சாப்பிடுவது குறைந்து கொண்டே வருகிறது.

    Eat that Frog நூல் கொஞ்சம் படிக்க ஆரம்பித்து விட்டு விட்டேன். வாசிக்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!