5.11.26

பேத்தி வந்த கதை

பிறக்கும்வரை பேரனா பேத்தியா தெரியாது.  சொல்ல மாட்டார்கள்.  சில இடங்களில் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லி விடுவார்கள்.  ராமச்சந்திராவில் நிறைய தெரிந்தவர்கள் இருந்தாலும் சொல்லவில்லை.

நிறைய தெரிந்தவர்கள் என்றால் எப்படி?  ராகுல். அத்தை, மாமியார், கேஜி மாமா, விசு மாமா, என்று நிறைய உறவுகள் அங்கே சிகிச்சை எடுத்தபோது சென்று பழ(க்)கிக் கொண்டவர்கள்.

மாதா மாதம் ஸ்கேன் எடுக்கும்போதும் சாமர்த்தியமாக பேசி, போட்டு வாங்க முடியும் என்று மகனுக்கும் மருமகளுக்கும் சொன்னேன்.  ஆனால் அவர்களுக்கு அதில் விருப்பமில்லை.  சஸ்பென்சாக இருக்கவே விரும்பினார்கள்.  அப்படியே நினைத்தாலும் அவர்களுக்கு சாமர்த்தியமாக பேசி பதில் வாங்க முடியாது என்பதே என் எண்ணம்!

சென்ற செப்டம்பரில்தான் மருமகளின் அப்பா காலமாகி இருந்ததால் அவர்தான் வந்து பிறப்பார் என்று அவர்கள் நம்பினார்கள், ஆசைப்பட்டார்கள்.  அப்படி பிறந்தாலும் ஆணாகத்தான் பிறக்க வேண்டுமா என்ன என்பேன் நான்.   மகன், பாஸ், இளையவன் என்று எல்லோருமே ஆண் குழந்தைக்குதான் வோட்டு போட்டு காத்திருந்தார்கள்.

இதற்கு ஒரு விளையாட்டு வேறு வைத்தார்கள்.  வளைகாப்பு சீமந்தம் நிகழ்ச்சியில் வருபவர்கள் எல்லோரையும் என்னுடைய வோட்டு ஆண்/பெண் குழந்தைக்கு என்று அட்டையைப் பிடிக்கச் சொன்னார்கள்.  இதற்காக I Like Male  I PreferFemale,  இன்னும் வித விதமாய் கைப்பிடியுடன் அட்டை செய்து வைத்திருந்தார்கள்.   பெண் குழந்தைகளுக்கு பிங்க் நிற அட்டை.  ஆண் குழந்தைகளுக்கு நீலநிற அட்டை.  வருபவர்கள் தங்கள் ஆரூடம் அல்லது விருப்பம் அல்லது ஆரூடத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டும்.  இதிலும் ஒரு ஊழல் நடந்தது.  என் தங்கையின் ஒன்பது வயது பேத்தி வருபவர்கள் எல்லார் கையிலும் பிங்க் அட்டையையே எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்!  பிங்க் ஜெயித்தாலும் தோற்றவர்கள் கோர்ட்டுக்கு போகவில்லை!

அட்டைகள் இருக்கட்டும்.  நான் மனதளவில் பேத்தி என்று எழுதி வைத்து விட்டேன்.  இவர்கள் எல்லாம் சொல்வது போல பேரன்தானோ என்றும் தோன்றியது.  ஏனென்றால் என் ஆசை என்று நிறைவேறி இருக்கிறது!  இந்த முறை என் முறை என்று கடவுள் விஷ்லிஸ்ட் ரொட்டேஷனில் முடிவு செய்து வைத்திருந்தான்.  

ஸ்கேன் எடுப்பவர் வேண்டுமென்றோ, தன்னை மறந்தோ ஓரிருமுறை பாப்பா என்று வார்த்தை உபயோகித்திருந்தார்.  அப்புறம் அவரே அது காமன் நேமிங்கதான் என்றும் அவராகவே சமாளித்ததும் சந்தேகத்தைதான் ஏற்படுத்தியது.  ஆனாலும் நிச்சயமாய் சொல்ல முடியாதே..

,மகப்பேறு மருத்துவரே ஒருமுறை ஷீ என்று வாய் விட்டு விட்டு 'ஷீயா?' என்று மகன் கேட்டதும் அனாவசியமாக டென்ஷனாகி நான் உன் மனைவியைச் சொன்னேன் என்று சமாளித்தது கூட பரவாயில்லை, அப்புறம் குழந்தையைக் குறிப்பிட்டபோது 'ஹீ' 'ஹீ ' என்று உளறி மாட்டினார்.  மகன் என்னிடம் இதைச் சொன்னபோது அவர் ஹீ என்று உளறியதுதான் இன்னமும் உறுதிப்படுத்துவதாய் இருக்கிறது என்று நினைத்தேன்.   ஆனாலும் நிச்சயமாய் சொல்ல முடியாதே...  கண்ணால் பார்க்கும்வரை உறுதி இல்லையே..

மருமகள் பெண் என்றால்தான் தனக்குப் பிடிக்கும் என்று  சொன்னாலும் மகன் என்று முடிவு செய்து நிறைய ஆண் பெயர்கள் தெரிவு செய்து வைத்திருந்தார்கள் மகனும், மருமகளும்.  அந்த பெயர் தெரிவில் மருமகளும் கட்சி தாவினாள்!  நான் மட்டும் தனியாக நின்றேன்!!  எனக்குத் துணையாக என் தங்கையின் பேத்தி (!), என் அண்ணனின் மருமகள் இருந்தார்கள்.

சொல்லப்பட்ட நாளுக்கு அதாவது அக்டோபர் பத்து தேதிக்கு முன்னரே டெலிவரி ஆகிவிடும், வயிறு இறங்கி விட்டது, குவிந்து இருக்கிறது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  தலை திரும்பி விட்டது என்று மருத்துவர் முன்னரே சொல்லியிருந்தார்.  மருமகளும் ஒரு நாள் இரவு ஒரு False Pain அனுபவித்தாள்.  ஒவ்வொரு நாளும் இன்று என்ன நட்சத்திரம், நாளை என்ன நட்சத்திரம் என்று பேசியபடி கடத்தினோம். 

==========================================================================================

மனசாட்சியம் - 34 
KGY:  Raman

" விலை மதிப்பு "

அந்தக் காலத்தில் சவரன் விலை 98 ரூபாய் என்று சொல்லி ஆச்சரியப்படுவதில் ஒன்றும் பொருள் இல்லை. மீண்டும் மீண்டும் வேறு வேறு பொருள்களின் விலையைச் சொல்லி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்க கூடாது.

என்றாலும் ஒரு சிறு தகவல் - இதற்குத் தொடர்புடைய ஒரு விஷயம். 1961. என் பிரிவுச் செயலாளர் ஒரு சுவாரசியம் சொன்னார்.  அப்போது
 அவர் பொள்ளாச்சியில் வசித்து வந்தாராம். பக்கத்திலேயே பாலக்காடு. நான்கைந்து வீட்டவர்களாக ஒன்று சேர்ந்து, ஒரு மாட்டு வண்டியை வாடகைக்கு எடுத்துக்  கொண்டு (ஒரு ஆள் மட்டும்) பாலக்காடு போய் , எட்டு பத்து  டின் கேரளா தேங்காய் எண்ணெய் வாங்கி வருவாராம். கேரளா தேங்காய் எண்ணெய் பொள்ளாச்சியிலேயே கிடைத்தாலும் அதன் விலை அப்போது ஒன்றே முக்கால் ரூபாய். (சின்ன டின் தான் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.) அதுவே பாலக்காட்டில் ஒன்றே கால் ரூபாய்க்குக் கிடைக்குமாம். ஆனால் கையில் காலி டின் எடுத்துச் செல்ல வேண்டும்.  ( இந்த சலுகையை ஏன் பொள்ளாச்சி வியாபாரிகள் கொடுக்கவில்லை என்பது தெரியவில்லை)  இந்த மகத்தான லாபத்துக்காக 10 , 12 தே எ டின்களை வாங்கி வண்டியில் அடுக்கிக்கொண்டு பொள்ளாச்சி வருவார்களாம்.  இது எப்படி இருக்கு ? 

விலைவாசி, செலவு செய்தல், வரதட்சணை நியாயம் இவை யாவும் கலந்த ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. எந்த வருடம் , எந்த ஊர் என்று சொல்லாமல் சொல்கிறேன். 

ரங்காச்சாரி என்று ஒரு பிரபல வக்கீல் என்று ஞாபகம் -  ஆடிட்டர் ஆகவும் இருக்கலாம். அவருக்கு ஒரே பெண். அவளுக்கு ஒரு வரன் பார்த்து, பையன் வந்து பெண்ணைப் பார்க்கிறான். வரவேற்பு உபசாரங்கள் எல்லாம் திருப்தியாக முடிவடைந்தன. பையனுக்கு பெண்ணைப் பிடித்துப் போயிற்று. பெண்ணின் விருப்பத்தை யாராவது கேட்டார்களா என்று தெரியவில்லை. பையன் பர்ஸ்ட் லுக் பாஸ் ரகத்தில் இருந்ததால் பெண்ணுக்கும் பிடித்துத் தான் இருந்திருக்க வேண்டும் .  எல்லாரும் சாவகாசமாக நிறைமனதுடன் அந்த காலத்து வழக்கப்படி லௌகீகம் பேச முற்பட்டார்கள்.

இங்கேதான் வந்தது சனியன். பையனுக்கு இந்த செலவு செய்தோம் அந்த செலவு செய்து படிக்க வைத்தோம் என்கிற ரீதியில் பையனோடு கூட வந்த உறவினர் ஒருவர் பேச ஆரம்பித்தார்.  ரங்காச்சாரி ஒரே பெண் என்பதால் தன் எல்லா ஆஸ்திகம் அவளுக்கு தான் என்பதை சூசகமாகச் சொல்லியும் கூட அந்த உறவினர் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை.‌ அவர் பாட்டுக்கு அதே ரீதியில் மேலே மேலே பேசிக் கொண்டே போனார். ஊரின் பெரிய மனிதராக வாழ்ந்துவந்த  ரங்காச்சாரியார் அவர்களுக்கு இது சற்றும் பிடிக்கவில்லை. அதுவுமன்றி, அந்த உறவுக்கார நபர் பேசுவதைக் கேட்டுக்கொண்டு பையனின் அப்பா அம்மா சும்மா இருந்ததை அவரால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

திடீரென்று ரங்காச்சாரி எழுந்து நின்று அந்த உறவுக்காரைப் பார்த்துச் சொன்னதை என் சொற்களில் தருகிறேன்.

" எல்லாம் சொன்னீர்கள்,  பையன் சிறு குழந்தையாக இருந்த போது லாக்டோஜன் ஹார்லிக்ஸ் எல்லாம் வாங்கி இருப்பார்களே அதைப் பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே. அதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாமா ?  தாய்ப்பாலுக்கு தான் விலை இல்லை. பால் பவுடர் அப்படி இல்லையல்லவா ?" 

உறவு திக் பிரமை பிடித்து மௌனமானது.

ரங்காச்சாரியாரின் பார்வை இப்போது பெற்றோர்கள் பக்கம் திரும்பியது.

" எனக்கு ஒரே பெண். என் ஆஸ்தி எல்லாமே அவளுக்குத் தான் வரும். இதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. என்றாலும் ஒரு முறை இங்கேயே இப்போதே சொன்னேன். இதற்கு மேலும் இந்த ஆள் அப்படியே பேசிக்கொண்டு போகிறார், நீங்களும் கேட்டுக் கொண்டு சும்மா இருக்கிறீர்கள் !  இந்த சம்பந்தத்தில் எனக்கு இஷ்டம் இல்லை . நீங்கள் போகலாம்." 

அந்த காலத்தில் இப்படி ஒருவர் பேசுவது அதிசயத்தில் அதிசயம். நாங்கள் பல நாட்கள் இதை வியந்து பேசிக் கொண்டிருந்தோம். அதே சமயம் , " இப்படி எல்லாம் அடாவடியாகப் பேசுற ஒருத்தர் வீட்டிலே யார் பொண்ணு எடுப்பா " என்று எதிர்மறையாகப் பேசியவர்களும் உண்டு. 

நல்ல வேளையாக , இறை அருளால் அந்தப் பெண்ணுக்கு நல்ல வரன் வெகு சீக்கிரம் அமைந்தது. பெண் பார்த்துவிட்டுப் போன மறுநாளிலிருந்தே  மாப்பிள்ளைப் பையன் பொண்ணுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்து விட்டான் என்பது மட்டுமல்ல,  ஒவ்வொரு கடிதத்திலும் " இந்தக் கடிதத்தை உன் அப்பாவிடம் காட்டவும் "  என்று அவன் சொல்லவும் மறக்கவில்லை.  

=========================================================================================

சமீபத்தில் எனக்கும் KGY மாமாவுக்கும் அதிகாலை ஐந்து மணிக்கு ஒரு டெக்ஸ்ட் உரையாடல் நடந்தது.  "எழுந்துட்டியா, சீக்கிரம் எழுந்துடுவியா, நானும்தான் போன்ற சம்பிரதாய உரையாடலுக்குப் பின் காஃபி குடிச்சாச்சா என்று கேட்டார்.  குடிச்சுட்டேன்.  நானே போட்டு குடிச்சுடுவேன் என்று சொல்லி விட்டு அவரையும் காபி குடிக்க சிபாரிசு செய்தேன்.  பிறகு வந்த வரிகள்...

ஸ்ரீராம்  :  காபி குடியுங்கள்.. கொண்டாடுங்கள்!

KGY   :  நான் காஃபி குடிப்பதில்லை தெரியுமோ ? இரண்டு ஸ்பூன் பாலில் ஒரு கப் ரெட் லேபிள் டீ.  சில சமயம் பால் இன்றி 


" கரு வண்ணமல்ல வது கருஞ்சிவப்புமல்ல

ஒரு ஏலம்,  மிகச்சொற்பம் தேயிலைத் தூள், இருந்தால் சுக்குப் பொடி

குவளை நிறைந்திருக்கும் கொதிக்கும்,  ஆவி வரும்


கண்ணாடி போல் திரவம் கண்ணைக் கவர்ந்திழுக்கும்

அளவாய் இனிப்பூட்டி அருமையான பிஸ்கெட் டுடன்

(பார்லே ஜி மூன்று நன்னாள்* எனிலிரண்டு)

அதிகாலை பருகிடவே, அன்றைய நாள் சிறப்புறும்.

*நன்னாள் - Good Day biscuit (Cashew)

=========================================================================================

தாஸ்தாவ்ஸ்கியின் 'வெண்ணிற இரவுகள்' பற்றிய எஸ் ராவின் சுவாரஸ்யமான பேச்சு.  இது நான் படிச்ச கதைக்கு சமம்.

=======================================================================================

குஷ்வந்த் சிங் தொகுத்த ஜோக்ஸ் புத்தகத்திலிருந்து ஒன்று..


இருவர் சொர்க்கத்தில் சந்தித்துக்கொண்டனர். அவர்களில் ஒருவர், "நீங்கள் எப்படி இறந்தீர்கள்?" என்று கேட்டார். 

அதற்கு மற்றவர், "நான் கடும் குளிரால் இறந்தேன். நீங்கள் எப்படி இறந்தீர்கள்?" என்று கேட்டார். 

அதற்கு அவர், "நான் வேலையிலிருந்து வீடு திரும்பியபோது, என் மனைவி ஒரு அந்நியருடன் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டேன். வீட்டிற்குள் நுழைந்து, வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தேடிப் பார்த்தேன், ஆனால் யாரையும் காணவில்லை. என் நடத்தையைப் பற்றி எனக்கு மிகுந்த குற்ற உணர்ச்சி ஏற்பட்டது; அதனால் என் இதயம் செயலிழந்துவிட்டது" என்று கூறினார். 

இதைக் கேட்ட மற்றவர், "நீங்கள் குளிர்சாதனப் பெட்டியைத் (Fridge) திறந்து பார்த்திருந்தால், நம்மில் இருவருமே இறந்திருக்க மாட்டோம்" என்று கூறினார். - எம். எம். கபூர், புது தில்லி

==========================================================================================

பேஸ்புக்கிலிருந்து....


வில்லனை போலீஸ் இழுத்துச் செல்ல ரஜினிக்கு மனமில்லை... அமைதியான முடிவு வேண்டாம் என்ற கமல்! நடிகர்களின் ஒரு முடிவால் மாறிய இரண்டு கிளைமாக்ஸ்கள்
🙏
ஒரு திரைப்படத்தின் கிளைமாக்ஸை இயக்குநரும் எழுத்தாளரும் முன்கூட்டியே தீர்மானித்துவிட்டால், படப்பிடிப்பில் அதை மாற்றுவது சாதாரண விஷயம் அல்ல. அதிலும் கதையின் கடைசி சில நிமிடங்கள் மாறினால், ரசிகர்கள் அந்தப் படத்தையே நினைவில் வைத்திருக்கும் விதமும் மாறிவிடலாம்.
1980-ல் வெளியான ‘முரட்டுக்காளை’ மற்றும் 1982-ல் வெளியான ‘மூன்றாம் பிறை’ ஆகிய இரண்டு படங்களின் இறுதிக் காட்சிகளுக்கும் இப்படியான மாற்றங்கள் நடந்துள்ளன. ஒன்றில் ரஜினிகாந்தின் சக நடிகர் மீதான மரியாதை காரணமாக முடிவு மாறியது; இன்னொன்றில் கமல்ஹாசனின் யோசனை படத்தின் மிகப்பெரிய உணர்ச்சிகரமான காட்சியாக மாறியது.
1980-ல் ஏ.வி.எம் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘முரட்டுக்காளை’, ரஜினியை முழுமையான வணிக கதாநாயகனாக உறுதிப்படுத்திய முக்கியமான படங்களில் ஒன்று. இதில் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் கதாநாயகனாகவும் ‘ஜேம்ஸ் பாண்ட்’ பாணி நடிகராகவும் புகழ்பெற்ற ஜெய்சங்கர், வில்லன் சுந்தரவேலுவாக நடித்திருந்தார். இதுவே ஜெய்சங்கரின் திரைப்பயணத்தில் முக்கியமான மாற்றமாக அமைந்தது. ஒருகாலத்தில் ஹீரோவாக பார்த்த மனிதரை ரஜினிக்கு எதிரான வில்லனாக ரசிகர்கள் பார்க்க வேண்டியிருந்தது.
படத்தின் முதலில் திட்டமிடப்பட்ட கிளைமாக்ஸில், ரஜினியின் காளையன் சுந்தரவேலுவை தோற்கடித்த பிறகு போலீசார் வந்து ஜெய்சங்கரின் கதாபாத்திரத்தை பிடித்து இழுத்துச் செல்வது போல அமைக்கப்பட்டிருந்ததாக எஸ்.பி.முத்துராமனின் நினைவுப் பதிவுகள் கூறுகின்றன. ஆனால் அந்தக் காட்சியைப் பற்றி ரஜினிக்கு ஒரு சங்கடம் இருந்திருக்கிறது. தன்னைவிட மூத்தவர், பல ஆண்டுகள் கதாநாயகனாக நடித்தவர் ஜெய்சங்கர்; அவரை அடித்து வீழ்த்தி போலீசார் இழுத்துச் செல்வதை திரையில் பார்க்க மனம் வரவில்லை என்று அவர் தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் கிளைமாக்ஸே மாற்றப்பட்டது. போலீசார் கைது செய்து அழைத்துச் செல்லும் முடிவுக்கு பதிலாக, தப்பிக்க வழியில்லை என்பதை உணரும் சுந்தரவேலு தானாகவே தனது முடிவைத் தேடிக் கொள்வது போல காட்சி அமைக்கப்பட்டது. இதன் மூலம் ரஜினி வில்லனை வென்றதாக கதையும் முடிந்தது; அதே நேரத்தில் ஜெய்சங்கரை அவமானகரமாக இழுத்துச் செல்லும் காட்சியும் தவிர்க்கப்பட்டது. ஒரு கதாநாயகன் தனது ஹீரோ இமேஜை பெரிதாக்குவதற்குப் பதிலாக எதிரே நடித்த மூத்த நடிகரின் திரை மரியாதையை நினைத்த சம்பவமாக இது பின்னாளில் பேசப்பட்டது.
இதேபோல இரண்டு ஆண்டுகள் கழித்து ‘மூன்றாம் பிறை’ படத்தின் கிளைமாக்ஸும் ஆரம்பத்தில் நாம் இன்று பார்க்கும் வடிவத்தில் இல்லை. பாலுமகேந்திராவின் அடிப்படை எண்ணம் மிகவும் அமைதியானது. நினைவு திரும்பிய ஸ்ரீதேவி, தன்னைக் காப்பாற்றிய சீனுவை நினைவில் கொள்ளாமல் சென்றுவிடுவார்; கமல் அதை பார்த்துக்கொண்டே நிற்பதுடன் படம் முடியும் வகையில் அவர் யோசித்திருந்ததாக கமல்ஹாசன் பின்னாளில் கூறியுள்ளார். பாலுமகேந்திராவின் இயல்பான, குறைந்த வெளிப்பாடு கொண்ட சினிமா பாணிக்கு அந்த முடிவு சரியாகவே பொருந்தியது.
ஆனால் கமல்ஹாசனுக்கு கிளைமாக்ஸ் இன்னும் வலுவான உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று தோன்றியது. ரயில் நகரும்போது சீனு ஓடி வந்து, பகவதிக்கு தன்னை நினைவுபடுத்த அவள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் செய்த குரங்கு சேட்டைகளை மீண்டும் செய்து காட்டுவது போன்ற யோசனையை அவர் முன்வைத்தார். தன்னை காப்பாற்றிய மனிதன் யார் என்பதை அறியாமல் ஸ்ரீதேவி சாதாரணமாக அவரைப் பார்த்துவிட்டு சென்றுவிடுகிறார். ஆனால் அவளை உயிராக நேசித்த மனிதன், ரயிலின் பின்னால் ஓடி தனது கடந்த காலத்தையே சில நிமிடங்களில் மீண்டும் நடித்துக் காட்டுகிறான்.
அந்தக் காட்சியின் உடல் உழைப்பும் சாதாரணமானதல்ல. தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நினைவுகூர்ந்தபடி, கிளைமாக்ஸில் கமல் டூப் பயன்படுத்த மறுத்து நேரடியாக ஓடி விழுந்தார்; வாகனத்தின் அருகே விழுவது, கம்பத்தில் மோதுவது போன்ற செயல்களையும் உணர்ச்சி இயல்பாக தெரிய வேண்டும் என்பதற்காக செய்தார். இன்று ‘மூன்றாம் பிறை’ என்று சொன்னவுடன் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அந்த ரயில் நிலையக் காட்சிதான். ஆரம்பத்தில் பாலுமகேந்திரன் நினைத்த அமைதியான முடிவு இருந்திருந்தால், படம் சிறப்பாக இருந்திருக்கலாம்; ஆனால் அதன் நினைவுச் சின்னமாக அந்த கிளைமாக்ஸ் உருவாகியிருக்குமா என்பது சுவாரசியமான கேள்வி.
இரண்டு படங்களிலும் நடிகர் கிளைமாக்ஸை மாற்றச் சொன்னார் என்ற ஒரே ஒற்றுமை இருந்தாலும் காரணம் முற்றிலும் வேறு. ‘முரட்டுக்காளை’யில் ரஜினி தனது கதாபாத்திரத்தை இன்னும் வீரமாக காட்ட வேண்டும் என்பதற்காக மாற்றம் கேட்கவில்லை; எதிரே நடித்த ஜெய்சங்கரின் மரியாதை காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணமே முக்கியமாக இருந்ததாக பதிவுகள் கூறுகின்றன. ‘மூன்றாம் பிறை’யில் கமல், தனது கதாபாத்திரத்தின் வேதனையை ரசிகர்கள் முழுமையாக உணர வேண்டும் என்று நினைத்தார். ஒன்று சக நடிகருக்கான மரியாதையால் மாறிய கிளைமாக்ஸ்; மற்றொன்று ரசிகரின் மனதில் தாக்கத்தை அதிகப்படுத்த மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்.
இதன் விளைவுகளும் இரண்டு விதமானவை. ‘முரட்டுக்காளை’ ரஜினியை கிராமத்து அதிரடி ஹீரோவாக மேலும் வலுப்படுத்தியதுடன், ஜெய்சங்கருக்கும் வில்லன் கதாபாத்திரங்களில் புதிய வாழ்க்கையைத் திறந்தது. ‘மூன்றாம் பிறை’ கமலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்ததுடன், அதன் இறுதிக் காட்சி இந்திய சினிமாவின் அதிகம் நினைவுகூரப்படும் சோகமான கிளைமாக்ஸ்களில் ஒன்றாக மாறியது. ஒரே ஒரு இறுதிக் காட்சியின் வடிவமைப்பு, ஒரு நடிகரின் நடிப்பையே பல தலைமுறைகளுக்கு நினைவில் வைத்திருக்கச் செய்ய முடியும் என்பதற்கு இது உதாரணம்.
சினிமாவில் இயக்குநரே கேப்டன் என்று சொல்வார்கள். ஆனால் சிறந்த படப்பிடிப்பு தளங்களில் நடிகரின் அனுபவமும் கதையின் ஒரு பகுதியாக மாறிவிடும் என்பதையும் இந்த இரண்டு சம்பவங்கள் காட்டுகின்றன. எஸ்.பி.முத்துராமன் ரஜினியின் எண்ணத்தை ஏற்றுக்கொண்டார்; பாலுமகேந்திரா தனது மிகவும் கட்டுப்பாடான சினிமா பாணிக்குள் கமலின் தீவிரமான கிளைமாக்ஸ் யோசனைக்கும் இடம் கொடுத்தார். இயக்குநர் தனது முடிவை மாற்றியது பலவீனம் அல்ல; கதைக்கு நல்லதாக இருக்கும் யோசனை எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் திறனும் சினிமாவின் ஒரு பகுதி.
1980-ல் ஜெய்சங்கரை போலீசார் இழுத்துச் செல்லக்கூடாது என்று நினைத்த ரஜினி ஒரு கிளைமாக்ஸை மாற்றினார். 1982-ல் ஸ்ரீதேவி அமைதியாக சென்றுவிடுவதை மட்டும் பார்த்துக்கொண்டு நிற்க வேண்டாம் என்று நினைத்த கமல் இன்னொரு கிளைமாக்ஸை மாற்றினார். இரண்டு நடிகர்களின் காரணங்கள் வேறு; இரண்டு படங்களின் உலகமும் வேறு. ஆனால் இன்று நாம் நினைவில் வைத்திருக்கும் அந்த இரண்டு படங்களின் கடைசி சில நிமிடங்களுக்குப் பின்னால், படப்பிடிப்பின் நடுவே எடுக்கப்பட்ட ஒரு முடிவு இருந்தது.
சில நேரங்களில் ஒரு படத்தின் வரலாற்றையே மாற்றுவதற்கு முழுக் கதையையும் மாற்ற வேண்டியதில்லை. கடைசி ஐந்து நிமிடங்களை மட்டும் மாற்றினாலே போதும்.

=============================================================================

கதாநாயகர்கள் தங்களை விட வயதில் மிகவும் குறைந்த நடிகைகளுடன் நடித்துப் பார்த்திருக்கிறோம். 57 ல் பிறந்த ஜெயசித்ரா தனக்கு ஜோடியாக 67 ல் பிறந்த ரகுமானை தயாரித்து இயக்கிய படம் புதிய ராகம். இளையராஜா இசையில் 1991 ல் வந்தது. கணவராக நடிக்கும் ரகுவரன் கூட ஒரு வயது இளையவர்!

மனோ குரலில் அந்தப் படத்திலிருந்து ஒரு பாடல். "ஓ ஜனனி.. என் ஸ்வரம் நீ '

இந்தப் பாடலின் சரணங்கள்தான் ரொம்ப விசேஷம். இளையராஜா பிரமாதமாக அமைத்திருப்பார். பாடலை எழுதியவர் கண்ணதாசன் மகன் கண்மணி சுப்பு.


===========================================================================================

நிலா கவிதைகள் 


விடை தர மறந்து 
வீட்டினுள் சென்று விட்டாய் 
விலகாமல் காத்திருக்கிறேன் 
விரைந்து வா 
வேலை நேரம் முடிந்தது 
உலா போகாமல் 
நிலா நான் காத்திருக்கிறேன் 

என்னடி கோபம் என்மேல் 
வெளி வர மறுக்கிறாய்?
ஒளியிழந்து களையிழந்து 
காத்திருக்கிறேன் இன்னும் நான் 
உன் பூ முகம் காண 
வா வெளியே 
இன்று போய் நாளை 
வர வேண்டும் நான் 
உன் முகம் பார்த்ததும் 



வெளியில் வாயேன் கொஞ்சம் 
ஜன்னல் பெண்ணே 
உன் முகம் பார்த்து 
ஒளி பெற வேண்டும் நான் 

=============================================================================================\

OTT யில் பார்த்த படம்  - பத்தா -  NetFlix -  தமிழ் 

\

விஜய் சேதுபதி ஊரையே மிரட்டும் ரௌடி.  அவர் ஏன்  விடுமுறையில் ஸ்கூலில் உள்ள ரெஸ்ட் ரூமுக்கு போனார் என்பதை சொல்ல மறுக்கிறார்.  அங்கு  பூட்டப்படுகிறார்.  ஆத்திரப்படுகிறார்.  ஆவேசப்படுகிறார். கதவருகே சத்தம் கேட்டதும் உறுமுகிறார் கதவைத் திறந்து விடச்சொல்லி.  எட்டு நாட்கள் உள்ளேயே அடைபட்டு கிடைக்கும் அவருக்கு தினசரி எட்டணாவுக்கு பொறை மட்டும் தரப்படுகிறது, கதவிடுக்கு வழியே.  கொஞ்சம் கொஞ்சமாக கோபம் குறைந்து ஆத்திரம் மறைந்து கெஞ்சும் நிலைக்கு வருகிறார் விஜய் சேதுபதி.  அகம்பாவம் எல்லாம் மறைந்து அழாத குறை.  அப்போது விடுதலை கிடைக்கிறது.,  ஆனால்  பாம்பு கடித்து உயிருக்கு போராடி பிழைக்கிறார்.  அவரை அங்கு பார்த்து காப்பாற்றிய சிறுவனைக் கொண்டாடுகிறார்.  அவன்தான் அவரை உள்ளே வைத்து பூட்டியவன் என்பது தெரியாமல்.  பையனுக்கு மனசாட்சி உறுத்துகிறது.  உண்மையைச் சொல்ல துடிக்கிறான்.  சொல்கிறான்.   என்ன ஆகிறது என்பதுதான் கதை.

வித்தியாசமான கதை.  எட்டு வயதுச் சிறுவன்தான் ஹீரோ.ஒருமுறை பார்க்கலாம்.
 

மகளைப்பற்றி சாய் அப்யங்கர் (அவர்தான் இசை அமைப்பாளர்)
பாடும் பாடல் இனிமையாக இருக்கிறது.


===========================================================================================


சாரதி சொன்னது: "நான் அனுபவத்தைக் கண்டு அதனுள் நுழையும்பொழுது நான் ஏதோ ஒன்றின் பிரதிபலிப்பு என்பதை உணர்கின்றேன். ஆனால், எனக்கு ஒரு ஸ்வஸ்ரூபம் இருப்பதாகவும் உள்ள ஒரு பிரக்ஞை என்னிடமிருந்து எப்பொழுதும் விலகுவதில்லை."
நவீனன் டைரியிலிருந்து.


சென்ற வருடம் இந்த 77 பக்க நாவல் பற்றி சுஜாதா எழுதி இருந்த 'நான் படிச்ச கதை' வடிவம் போன்ற கட்டுரையைத் தந்திருக்கேன்.  இப்போது அந்தப் புத்தகத்தில் நகுலனின் முன்னுரையும், சு ராவின் முன்னுரையும்....

இரண்டு முன்னுரையும் படித்தால் நாவலைப் படிக்கும் ஆவல் வருகிறதா?


இந்த நாவலைப்பற்றி 

இது பிரசுரமாகும் என் முதல் நாவல்.

நண்பன் கிருஷ்ணன் நம்பியுடன் ஒருமுறை இலக்கியத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், "நீங்கள் இன்னொரு நாவலை எழுதுங்கள்" என்றார்.

நான், "இன்னொரு நாவலா? இதற்குமுன் ஒரு நாவல் எழுதியதாக எனக்கு ஞாபகமில்லையே!" என்று பதில் கூறினது, இது எழுதுகையில் நினைவிற்கு வருகிறது.

"சரி, வாய்தவறிச் சொல்லிவிட்டேன். ஒரு நாவலை உடனடியாக எழுதுங்கள்.”

இதன்பிறகு சற்று ஆலோசித்துவிட்டு, “உங்களைப் பற்றியே எழுதுங்கள்” என்றார். பிறகு அவர் நாகர்கோவில் போய்ச் சேர்ந்தார்.

--இந்தச் சமயத்தில் அவர் 'நீலக்கடல்' கதைத் தொகுதி வந்தது. அதில் பலர் கவனத்தைக் கவர்ந்த நான் கதை முழுவதையும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் 'எனக்கு ஒரு வேலை வேண்டும்' என்ற கதையில் அவர் சூசகமாகக் குறிப்பிட்டிருந்த தகப்பன் பிள்ளை உறவைத் தொடர்ந்து ஒரு பரிசீலனை செய்தால் என்ன என்ற என் அபூதமான மனஉணர்வின் ஒரு விகிதாம்சமான பிரதிபலிப்பு - 'நிழல்கள்.' எனவே, இந்த நாவலின் ஜனனத்திற்கு ஒருவகையில் காரணகர்த்தா நண்பர் நம்பி. இந்தச் சமயத்தில் இதை ரேகைப்படுத்துவது என்பது என்னைப் பற்றியவரை ஒரு நிர்ப்பந்தமான விஷயம்.

இன்னுமொரு கேள்வி: "இந்த நாவலின் மையம் என்ன?”

பதில்:  மனம்தான் மதத்தைவிட முக்கியம் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இந்தியன் என்ற வகையில் ஒரு மையத்தை நினைவு கூர்கையில் மற்ற எல்லா மையங்களும் வெறும் நிழல்கள். இன்னொரு வகையில் கதையின் ஒரு முக்கிய மையம், "நான் ஒரு ஐயங்கார்ப் பையன்” என்று சாரதி சொல்வதில் சென்று முடிகிறது.

இந்த நாவலுக்கு ஒரு முன்னுரை அவசியமா?

கொஞ்ச காலமாக எனக்கு நண்பர் சுந்தர ராமசாமியுடன் இலக்கிய சர்ச்சை செய்வது என்பது ஒரு லாபகரமானதும் உவப்பையூட்டுவதுமான விஷயமாகவும் இருந்து வருகிறது. திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு 42 மைல். பஸ் பிரயாணத்தில் இரண்டரை மணி கழிக்கவேண்டும். பலமுறை அவருடன் இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதற்கு என்றே சென்றிருக்கிறேன். இந்த அனுபவத்தினால் இந்த நாவலைப் பற்றி அவர் என்ன சொல்லுவார் என்று அறிந்துகொள்ள வேண்டும் என்ற முற்றிலும் சுயநலத்தினால் தூண்டப்பட்டு அவரை ஒரு முகவுரை எழுதித் தரக் கேட்டுக்கொண்டேன். அவர் மனம் இசைந்து முகவுரை தந்ததற்கு என் நன்றி.

இந்த நாவலை நல்ல முறையில் வெளியிட முன்வந்த தமிழ்ப் புத்தகாலயத்தார்க்கு நான் என் வந்தனத்தைக் கூறுவதும் எனக்கு மிகவும் உவப்பான விஷயம்.

"மிகக் குறைந்த பக்கங்களில் ஒரு நாவல்; அதற்கு ஒரு முன்னுரை; அந்த முன்னுரைக்கு ஒரு முன்னுரை - ஏன் இந்த சேஷ்டை?” என்று ஒரு குரல் பின் நின்று ஒலிப்பதால் இந்தப் பீடிகையை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

திருவனந்தபுரம்
13.4.65
நகுலன்



அறிமுகம் 

இந்த நாவலைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் மிகுந்த சந்தோஷமும் திருப்தியும் அடைகிறேன்.

ஸ்ரீ நகுலனின் எழுத்து மிகவும் அயனான சரக்கு. புத்தம் புதிசாய் மிளிரும் சிருஷ்டி ஒவ்வொன்றும் நமக்கு முதலில் வேற்றுமை உணர்ச்சியையும், சில சமயம் ஏமாற்றத்தையும் அளித்துவிடுகிறது. நம்முடைய எதிர்நோக்குதல்களைப் பூர்த்தி செய்யும் உத்தேசம் அவற்றிற்கு அநேகமாய் இருப்பதில்லை. ஒரு கலைஞன் பிறரை மறந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் முயற்சியாகவே பெரிதும் அது அமைகிறது. 

இது போன்ற முயற்சிகளிலிருந்துதான் புதிய சம்பத்துக்கள் எனக் கருதத் தகுந்த சிருஷ்டிகள் ஒரு பாஷைக்கு லபிக்கின்றன. 'நிழல்'களில் வெளிப்படுவது நாம் இன்று வரையிலும் பரிச்சயப்பட நேராத ஒரு புதுக்குரலாகும். வாசகர்கள் போதிய அனுதாபத்துடன் இந்நாவலை ஒன்றுக்கு இரண்டு முறை படித்துப் பார்க்கும் சிரமத்தை மேற்கொள்வார்கள் என்றால், சுகந்தமான இலக்கிய இன்பம் அவர்களுக்குக் கிடைக்குமென்று நம்புகிறேன்.

நமக்கு ரொம்பவும் பழக்கமான, வக்கணையான கதைப் பிண்டம் இந்நாவலில் இல்லை. சுய அனுபவத்திலிருந்து திராணியான கலையை உருவாக்குவதாக கற்பனை செய்துகொண்டு, இறக்கை கட்டி மேலே சென்று, கனவு கலைந்துவிடாமல், நிஜத்தின் நிழல்படாத அண்டப்புளுகுகளை வாரி இறைத்துச் செல்லும் சிறுமை இங்கு இல்லை. இங்கு அனுபவம் குறைந்தபட்ச மாற்றங்களுடன் கலை வடிவம் பெற்று, அந்த அனுபவத்திற்கே செழுமை ஊட்டி, மன நிறைவையும் முழுமை உணர்ச்சியையும் அளித்துவிடுவது ஆசிரியரின் கலைத்திறனுக்குப் போதிய சான்றாகும்.

மிகச் சிறிய நாவல் இது. எனினும் இதைப் படித்து முடித்தபின், அனுபவத்தின் நானாவிதமதி சஞ்சாரங்களைத் தாண்டி வந்தபின், சற்று கனமான புத்தகம் ஒன்றைப் படித்து முடித்த பிரமை தட்டுகிறது. சுருக்கமாகக் கூறினாலும், விரிவான அனுபவங்களுக்கு நம்மை ஆளாக்கிவிடுகிறார் ஆசிரியர். பாத்திரங்கள் அநேகமாக எல்லோருமே - மிக நன்றாக உருவாகியிருக்கிறார்கள் என்று சொல்லலாம். 

ஆசிரியர் இவர்களை நேர்ப் போக்கில் பிரஸ்தாபித்துக்கொண்டு போகையிலேயே, நாமும் அவர்களை இனங் கண்டுகொண்டு தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறோம். இரண்டொரு வரிகளில் பாத்திரங்களின் ஜீவ களையைப் பிடித்துவிடமுடிகிறது ஆசிரியரால். சாரதியின் தகப்பனார், சமூக சேவகி சாரதா, பராங்குச நாயுடு, வேதவல்லி போன்றவர்கள் மட்டுமல்ல, ஒரு கணம் தோன்றி மறையும் ஹோட்டல் வெங்கு அய்யர்கூட -டிபன் அளிப்பதற்குமுன் துட்டைக் காட்டச் சொல்வதன் மூலம்-தன் முகத்தையும் காட்டிக்கொண்டு விடுகிறார்.

கதை கூறும் முறையிலும், பேசுவதுபோல் அனாயாசமாய் எழுதிக்கொண்டு செல்வதிலும் வெளியாகும் ஆசிரியரின் ஒரு அபோதமான, கட்டற்ற தன்மை மிகுந்த அழகாகப்படுகிறது. மனசின் முடுக்கத்திற்குப் பேனா விரைந்தோடிவிட்ட அழகு படைப்பின் திட்டங்களும், ஓரம் செதுக்கிய விளிம்புகளும், உத்தியின் நகாசுகளும், கருத்துத் திணிப்புகளும் பார்த்துப் பார்த்து அலுத்துப் போன மனசுக்கு - மிகுந்த சந்தோஷத்தைத் தருவதாய் அமைந்துவிட்டது.பழைய தலைமுறை, புதிய தலைமுறையைத் தங்களுடைய மனோ அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் கருவிகளாக உருவாக்க முயல்வதும், புதிய தலைமுறை தங்களுடைய சொந்த இச்சைகள் நிறைவேறத் தும்பு அறுத்துக்கொள்ளப் பிரயாசைப் படுவதும், குடும்பம் எனும் விவேக அமைப்பு - அல்லது தளை, உருவான காலத்திலிருந்தே எழுந்த பிரச்சனைகளாகவே இருந் திருக்க வேண்டும். அந்த அவஸ்தையையும், ஆத்மீக வேதனை யையும் - வீட்டிலும், வெளியிலுமாக - ஆசிரியரால் சோடை தட்டாமல் சொல்ல முடிந்திருக்கிறது. மகனுக்கு அப்பா, அப்பாக் குரங்கு ஆகிவிடுவதும், அப் பிரிவுக்காக அவனே மனம் கலங்குவதும் - இரண்டுமே தவிர்க்கமுடியாத மன நிலைகளாகவே இருக்கின்றன.

கடைசியில் வேதவல்லியின் வருகை மிகுந்த ஆசுவாசத்தை அளிப்பதாக இருக்கிறது. 'உங்களுடைய ஆயிரம் மனக்கோணல்களை என்னால் தனியாக நின்று சமாளித்துக்கொள்ள முடியும்' என்று அவள் சொல்லிவிட்டதுபோல், கதை முடிவில், அலுப்புக்குப் பின் மீண்டும் வாழ்வின் மீது நாம் கொள்ள விழையும் நம்பிக்கையை அவள் மீது குவிக்கிறோம்.

நகுலனின் கலைஊற்று மிக வளமானது எனும் நம்பிக்கையை இந்நாவல் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் தமிழின் இலக்கியத்தரமான நாவலாசிரியர்களின் வரிசையில் இடம் பிடித்துக்கொள்ளும் இவ்வாசிரியர், எதிர்காலத்தில் நாம் எண்ணிப் பெருமைப்படத்தகுந்த சிருஷ்டிகளைப் படைத்துவிட்டார் என்றால், நான் ஆச்சரியம் அடையமாட்டேன். என் நம்பிக்கை பலித்துவிட்டதை எண்ணித் திருப்திப்படுவதே அப்பொழுது என்னுடைய காரியமாக இருக்கும்.

நாகர்கோவில்
9.6.1965
சுந்தர ராமசாமி

============================================================================================

1982 ல் வந்த 'டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்திலிருந்து  ஒரு பாடல்.  SPB குடும்பமே பாடி இருக்கிறது!  குருவிக்கரம்பை ஷண்முகம் பாடலுக்கு இசை சங்கர் கணேஷ்.

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்...


============================================================================================


தன்னைவிட 5 வயது இளையவரான சதா மாஸ்டரை தனது மூத்த சகோதரர் போலவே நடத்தினார் ராஜா. இந்த மரியாதைக்கு மிகப் பெரிய ப்ளாஷ்பேக் உண்டு.

சதா மாஸ்டரின் தந்தை சுதர்சனம் 1940 60கள் வரை புகழ்பெற்ற இசையமைப்பாளர். ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர். 

குறிப்பாக, நாம் இருவர் (1947), வாழ்க்கை (1949), பராசக்தி (1952) ஆகிய படங்கள் அவரது இசைப் பயணத்தில் குறிப்பிடத்தக்கவை.

சதா மாஸ்டர் குறித்து இசை நிகழ்ச்சி மேடைகளில் பெருமையுடன் குறிப்பிடும் ராஜா, தான் வாய்ப்பு

தேடிய காலங்களில் பலமுறை சதா மாஸ்டரின் இல்லத்தில் உணவு உண்டதை நெகிழ்வுடன் பகிர்ந்திருக்கிறார்.

இந்த நீண்ட கால நட்பு ஒருபுறமிருக்க, ராஜா கொடுத்த மிகக் கடினமான நொட்டேஷன்களைக் கூட அநாயசமாக, அதே சமயம் அதிவேகமாக வாசிக்கும் திறன் கொண்டவர் சதா. கிடாரில் எத்தனை வகையுண்டோ அத்தனை கருவிகளையும் வாசிப்பதில் மிகப் பெரிய எக்ஸ்பர்ட் இந்த சதா மாஸ்டர்.
ராஜாவிடம் பணியாற்றிய கலைஞர்களில் பலர் அவரை விட்டுபிரிந்து சென்று பணிபுரிய விரும்புவதேயில்லை. "என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்" என்று ராஜா பாடினால், இவர்களது எசப்பாட்டு "உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்" என்பதாகவே இருக்கும். அதில் மிக முக்கியமானவர் சதா. இந்த 50 ஆண்டுகளும் ராஜாவின் நிழல்போலவே தொடர்ந்தவர் சதா.

ராஜாவின் இசைக் கச்சேரிகளும் இவர் இல்லாமல் நடைபெறாது.
ராஜா இதுவரை இசையமைத்திருக்கும் எட்டாயிரத்துச் சொச்ச பாடல்களில் பாதிப்பாடல்கள் கிடார் இசைத்துணுக்குகள் அதிகம் கொண்டவை. அதில் 90 சதவிகித பாடல்கள் சதா மாஸ்டர் வாசித்தது. இதை ராஜாவே பல மேடைகளில் பெருமிதம் பொங்கப் பகிர்ந்திருக்கிறார். ராஜாவின் பின்னணி இசைகளிலும் பெரும் பங்களிப்பு செய்தவர் சதா. "மவுன ராகம்" படத்தின் தீம் மியூசிக்கை சதாவை வாசிக்கச் சொல்லி மேடைகளில் கைதட்டி ரசிப்பார் ராஜா.
மிகச் சமீபகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தன்னிடம் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தபடியே இருந்த சதா, யூடியூப் தளங்கள் மூலமாகவும் வகுப்பு எடுத்து தனது கலையை மற்றவர்களுக்கும் கடத்தினார். அந்த கற்றுக்கொடுத்தலில் பொறுமையின் உச்சத்தைப் பார்க்கலாம்.

அந்த வகுப்புகளில் அவர் அதிகம் நேசித்து வாசிக்கும் பாடல்கள்

பூவே செம்பூவே [ சொல்லத்துடிக்குது மனசு]

தென்றல் வந்து என்னைத் தொடும் [படப்பெயரும் அதே]

ஆகாய வெண்ணிலாவே [அரங்கேற்ற வேளை ]

இந்த மான் உந்தன் சொந்தமான் [கரகாட்டக்காரன்]

என் இனிய பொன் நிலாவே [மூடு பனி ]

இளையநிலா [பயணங்கள் முடிவதில்லை]

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் [புன்னகை மன்னன்]

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு [மண் வாசனை]

வானெங்கும் தங்க விண்மீன்கள் [மூன்றாம் பிறை]

ஆனால் இப்பாடல்களையெல்லாம் தாண்டி அவர் அதிகம் நேசித்து, அடிக்கடி வாசித்துக் காட்டும் பாடல் "பன்னீர் புஷ்பங்கள்" படத்து கோடைகாலக் காற்றே" பாடலை.

அப்பாடலை மீட்டிய மெல்லிய விரல்கள் அதே கோடைகாலக் காற்றில் கலந்து கரைந்துவிட்டன. இசைஞானி ராஜாவின் தளபதியாக, அவரது இடது கரமாக, சுரமாக இருந்த மாஸ்டரின் இழப்பு பேரிழப்புதான். ஆனால் காற்றின் தேசமெங்கும் அவரது கிடார் இசை காலம்தோறும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

- தினமலரிலிருந்து....


===========================================================================================




============================================================================================










ஜோக்தான் ஆனால் விளம்பரம்!

10 கருத்துகள்:

  1. இத்தனை நீளமா ஒரு பதிவு!!!!!! இனிய காலை வணக்கங்கள். அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான ஜோக் மற்றும் விளம்பரம்.பாத்திரங்களை எறியும் கணவரா? கடவுளே!!!! கிராமத்தில் தான் இப்படி நடக்கும் என்று கி ராஜ நாராயணன் எழுதுவார்:)

    பதிலளிநீக்கு
  3. கோலம் போட்ட மாமா. இது கொஞ்சம் டூ மச்:)

    பதிலளிநீக்கு
  4. தபால் தாமதமா? தலை தீபாவளி மாப்பிள்ளை வேகமா:)

    பதிலளிநீக்கு
  5. மாப்பிள்ளை மச்சினன் ஹாஹாஹா!!! இன்னும் செங்கல் மைசூர்ப்பாகு ஜோக் தான் வரவில்லை:)

    பதிலளிநீக்கு
  6. சாமா சாரின் புடவை ஜோக் சூப்பர். புத்திசாலிப் பெண்மணி.

    பதிலளிநீக்கு
  7. சாயாஜி ஷிண்டே நிஜ பாரதியாகிவிட்டார்.இத்தனை பெரிய நல்ல காரியத்தை செய்திருக்கிறாரே. 5000 மரங்கள் என்றால் எவ்வளவு பெரிய ஈடுபாடு. நடிகர் விவேக் நினைவுக்கு வருகிறார். நம் ஊர் பாட்டி சின்னம்மாவும் தான். நலமோடு இருக்க வேண்டும். நல்ல செய்திக்கு நன்றி மா .

    பதிலளிநீக்கு
  8. புத்திசாலி சாரதி. குடை வக்கீலுக்கு நல்ல பதில் சொன்னார்.

    பதிலளிநீக்கு
  9. சதா மாஸ்டர் சூப்பர் மாஸ்டர்.மௌன ராகம் இந்த உலகத்தைத் தாண்டியது. விரல்களைத் தாண்டி வளர்ந்த நகங்களை நறுக்கலாம். விரல்களால் கவிதை எழுதியவரை மறக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  10. பேத்தி பிறந்துள்ளதற்கு வாழ்த்துகள். தலைப்பைப் பார்த்து உள்ளே வந்தேன். ஒரே பதிவில் எவ்வளவு சுவாரசியமான தகவல்கள். அனைத்தையும் ரசித்தேன். :)

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!