சுஜாதா Vs சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுஜாதா Vs சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3.6.13

சுஜாதாவைப் பிரிய நினைத்த சுஜாதா - படித்ததன் + எண்ணங்களின் பகிர்வு

           
லேசான, மிக லேசான திடுக்கிடலை ஏற்படுத்திய கட்டுரை. 2/6/13 தேதியிட்ட தினகரன் நாளிதழின் இணைப்பான வசந்தத்தில் ப்ரியா என்பவரால், பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் மனைவியை - ஒரிஜினல் சுஜாதாவை - எடுத்த பேட்டி.

                                        
 
'இவருமா' என்று நினைக்க வைத்தது. சொன்னவரையும் சொல்லலாம். சொல்லப் பட்டவரையும் சொல்லலாம்.

குறைகள் பட்டியலால் அல்ல. அவற்றை அம்பலத்தில் விட்டதால்!  யாரிடம் குறையில்லை..  மஹாகவி பற்றிகூட இப்படிச் சில செய்திகள் உண்டு.  குறைகள் வெளியே தெரியாமல் மறைக்கப் படவேண்டும் என்று சொல்லவில்லை. இந்த உணர்வுகள் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் இருக்கும். ஒரு பிரபலத்தின் குறைகளை பொதுவில் பேச இப்போது என்ன தேவை வந்தது என்ற கேள்வி வந்தது.

(ஆனால் ஒன்று. ஒரு செய்தியைத் தரும்போது 'அழுதான்' என்று சொல்லலாம். 'நீண்ட நேரம் அழுத்கொண்டே இருந்தான்' என்று சொல்லலாம். 'கண்ணீர் விட்டுக் கதறி 'கோ' என்று அழுதான்' என்று சொல்லலாம். ப்ரெசென்ட் செய்வதில் இருக்கிறது சூட்சுமம். சில பேட்டிகளில் சில குறிப்பிட்ட வரிகளை பரபரப்புக்காக 'ஹைலைட்' செய்திருப்பார்கள்)


நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. சுயத்தை இழக்கும் மனைவிகள், தங்கள் திறமைகளை, தங்கள் சந்தோஷங்களை, கணவர்களுக்காகத் தியாகம் செய்கிறார்கள். எந்த அளவு என்று நம்முடைய பெண் வாசகர்கள் பகிர நினைத்தால், பகிர்ந்து கொள்ளலாம்.


கணவர்கள் இழப்பதில்லையா? விட்டுக் கொடுப்பதில்லையா?


இருபக்கமும்  உண்டு.
  நினைக்கும் எல்லாவற்றையும் பகிரவும் முடியாது!

மனைவியின் திறமைகள் கணவர்களுக்கு லேசான பொறாமையைக் கொடுக்குமோ... மற்றவர்கள் அவர்களைப் பாராட்டினால் தாங்கிக் கொள்ள முடியாமல் போகுமோ..? சமீபத்திய பிரபல பாடகியின் கணவர் தற்கொலை நினைவுக்கு வருகிறது.

சமீபத்தில் என்னுடன் பேசிக் கொண்டிருந்த ஒரு உறவினர் தன அம்மா தங்களுக்கெல்லாம் பார்த்துப் பார்த்துப் பரிமாறி, சாப்பாடு போடும் அம்மா, என்ன சாப்பிடுகிறார் என்று தெரியாமல் போனது, பாதிநாள் அவர்கள் சரியாகவே சாப்பிட்டதில்லை போல என்று இன்று தெரிகிறது' என்றார். அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதே அருகிலிருந்த என் மனைவி, 'மனைவிகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று கணவர்கள் பார்க்கிறார்களா' என்று கேட்டார். 'நாமல்லாம் சேர்ந்துதானேப்பா சாப்பிடறோம்?' என்றேன். 'லஞ்ச் சரி, நைட்டு?' என்று யோசிக்க வைத்தார்.

 
பிரபலமானவர்களின் மனைவிகள் இழப்பது சற்று அதிகமோ? அல்லது, பிரபலங்கள் என்பதாலேயே இவை அதிகம் கவனிக்கப் படுகின்றனவோ........

                                                  
 
மனதின் மேல் படியில் இருந்தவர், ஒரு படி கீழே இறங்கி விட்டாரோ என்று தோன்றும்போதே அவர் எழுத்துகளுக்கு என்றும் நான் ரசிகன்தான், சொந்த வாழ்க்கை பலவீனங்களைப் பார்க்கக் கூடாது என்றும் தோன்றுகிறது! எல்லோருக்குமே ஒரு மறுபக்கம் உண்டு என்று இன்னும் நன்றாகத் தெரிகிறது. எல்லார் வாழ்விலும் இது சகஜம். குறைகள் இல்லாத மனிதர் யார்? நாளை இதே கட்டுரைக்கு ஒரு மறுப்பு வந்து விடக்கூடும்... 'நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை' என்று!

எழுத்தாளர்கள் பிரபலமானவர்கள் என்றில்லை, எல்லாக் கணவர்களும் யோசிக்க வேண்டிய நேரம் இது.


அந்தக் கட்டுரையின் முக்கியப் பகுதிகள் இங்கே...(அங்கே படிக்காதவர்களுக்காக - இணையத்திலேயே
தினகரன் நாளேடு, வசந்தம் படிக்க முடிகிறது)


" ............................................... பொதுவா கலை உலகைச் சேர்ந்தவர்கள் வேற உலகத்துல வாழ்வாங்கன்னு சொல்வாங்க. அதை என் கணவர் விஷயத்துல கண்கூடாப் பார்த்தேன். அவரோட மனநிலை எப்ப, எப்படி மாறும்னு யாருக்கும் தெரியாது. தன்னோட அந்தரங்கத்துக்குள்ள அவர் யாரையும் அனுமதிச்சதில்லை. எப்பவும் எழுதறது, படிக்கறது, ஸ்டோரி டிஸ்கஷன் என்று ஒரு வட்டத்துக்குள்ளையே இருப்பார். மனைவி, குழந்தைங்க பத்தின சிந்தனை அவருக்குக் கிடையாது. சுருக்கமாச் சொல்லணும்னா பசங்க என்ன படிச்சாங்க, எப்படிப் படிச்சாங்கன்னு கூட அவருக்குத் தெரியாது. பசங்களாப் படிச்சாங்க....  அவங்களா வேலையைத் தேடிகிட்டாங்க... அவங்களா பிடிச்ச பெண்ணைத் திருமணம் செய்துகிட்டாங்க... மத்தபடி அப்பாவா அவர் எந்த ஸ்டெப்பும் எடுத்ததில்லை.

இந்த மனநிலையை மனைவியான என்னிடமும் செலுத்தினார். நான் சாப்பிட்டனா....தூங்கினனா...
எனக்கு என்ன வேணும்... எதையும் அவர் கேட்டதில்ல...செஞ்சதில்ல..அவர் எழுதினதை நான் படிச்சா அவருக்குப் பிடிக்காது. ........

குடும்பத்தைத் தாண்டிப் பெண்கள் வெளில வரக்கூடாதுனு நினைப்பார். இதுக்குக் காரணம், அவர் வளர்ந்த விதம்.

அவரோட உலகம் ரொம்பச் சின்னது. ஸ்ரீரங்கத்ல பாட்டி வீட்லதான் வளர்ந்தார். அந்த அக்ரஹாரம்தான் அவருக்கு எல்லாம். அதைத் தாண்டி அவர் சின்ன வயசுல வந்ததில்லை. வளர்ந்தபிறகு கூட மனதளவுல அந்த அகரஹாரப் பையனாத்தான் இருந்தார்.


ஆனா எங்க வீட்ல அப்படிக் கிடையாது. பெண்களுக்கு எல்லா உலக விஷயமும் தெரியணும், அவங்களும் படிக்கணும்னு நினைச்சாங்க. அப்படித்தான் என்னை வளர்த்தாங்க. எங்க தாத்தா ஆங்கிலேயர் கிட்ட வேலை பார்த்தவர். அதனால எங்கம்மாவுக்கு ஆங்கிலத்தையும், அறிவியலையும் தாத்தா ஸ்பெஷலா ஒரு ஆங்கிலோ இந்திய டீச்சரைப் பிரைவேட்டா நியமிச்சு படிக்க வச்சார்.

என் தங்கை டாக்டருக்குப் படிச்சுட்டு அமெரிக்காவுல இருக்கா. ஒரு தம்பியும் அமெரிக்கால செட்டிலாயிட்டான். இன்னொரு தம்பி சென்னைல நல்ல வேலைல இருந்து ரிடையர் ஆகியிருக்கான்.


இப்படிப்பட்ட குடும்பத்துலதான் 20 வருஷங்கள் வளர்ந்தேன். திடீர்னு கல்யாணமாகி வேறொரு சூழல் அமைந்சதும் முதல்ல ஒண்ணும் புரியலை. கிட்டத்தட்ட பத்து வருஷங்கள் ரொம்பச் சிரமப் பட்டேன். அப்புறம் என் கணவரோட உலகம் எனக்கு பழகிடுச்சு. அவரோட உலகத்துக்குத் தகுந்த உயிரினமா வாழ ஆரம்பிச்சேன்.

பலநாட்கள் அம்மா மடில படுத்து அழுதிருக்கேன். திரும்பி வந்துடறேன்னு கதறிருக்கேன். ஆனா, குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழ முடியாது அட்ஜஸ்ட் பண்ணிக்கன்னு சொன்னாங்க. அந்த காலகட்டம் அப்படி. அதுவே இன்றைய சூழ்நிலையா இருந்திருந்தா எங்கம்மா கிட்ட யோசனை கேட்டிருக்க மாட்டேன். குழந்தைகளோட தனியா வந்திருப்பேன்...


அவருக்கு மனைவி குழந்தைகள் மேல அன்பு இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனா, அதை வெளிப்படுத்தத் தெரியாது. வெளிப்படுத்தாத அன்பால யாருக்கு என்ன பயன்? உறவுன்கர சக்கரம் சுழல அன்புதானே அவசியம்? அவரை முழுசாப் புரிஞ்சிக்க எனக்குப் பத்து வருஷங்களாச்சு. அதுக்குப் பிறகு, என்னோட சுயத்தை விட்டுட்டு, அவருக்காகவும், பிள்ளைகளுக்காகவும் வாழ ஆரம்பித்தேன். அவருக்கு ரெண்டு பைபாஸ் சர்ஜரி நடந்தது. அதனால அவரால எங்கயும்  போக முடியாது. துணையா நான் இருந்தேன்.....


எங்களுக்கு ரெண்டு பசங்க. ரெண்டு பேருமே அமெரிக்காவுல வேலை பார்த்துகிட்டு இருந்தாங்க. அவர் காலமானதும் பெரியவன் சென்னைக்கு வந்துட்டான். சின்னவன் அமெரிக்காவுலதான் இருக்கான். எனக்கு வர்ற மருமகள் தமிழ்ப்பெண்ணா இருக்கணும்னு ஆசைப் பட்டேன். அது நடக்கலை. பெரியவன் பஞ்சாபிப் பெண்ணையும், சின்னவன் ஜப்பானியப் பெண்ணையும் விரும்பிக் கல்யாணம் செஞ்சுகிட்டாங்க. ஆனா ரெண்டு மருமகள்களுமே தங்கமானவங்க.. என்னைக் கைல வச்சுத் தாங்கறாங்க.....


இதுவரைக்கும் கணவன், மாமனார், மாமியார், அம்மா, அப்பா, பிள்ளைகள்னு மத்தவங்களுக்காகவே வாழ்ந்துட்டேன். இப்பதான் எனக்காக வாழ ஆரம்பிச்சுருக்கேன். கோயில், யாத்திரைகள்னு பொழுது போகுது. அமெரிக்காவுல இருக்கற சின்னவன் வீட்டுக்கும், தம்பி, தங்கைகள் வீட்டுக்கும் போய் வர்றேன்...விருப்பப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். என்னோட நேரங்கள் எனக்கானதா செலவாகுது. பெரிய எதிர்பார்ப்புகள் எனக்குக் கிடையாது. அதனாலேயே சந்தோஷமா இருக்கேன். ஏன்னா, எதிர்பார்ப்பு இருந்தாதான் ஏமாற்றம் ஏற்படும். என் வாழ்க்கை எனக்குக் கத்துக் குடுத்த பாடம் இது..."


என்று சொல்லும் திருமதி சுஜாதா கடைசிவரை யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம். இவர் விலங்கியல் துறையில் பட்டப் படிப்பு முடித்தவராம்.