தஞ்சாவூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தஞ்சாவூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.5.14

தஞ்சாவூர்



கல்யாணமகாதேவி வேலைகள் முடிந்தபின் அங்கிருந்து நேராக தஞ்சாவூர் என்றபோதே ஒரு மகிழ்ச்சி பரவியது மனதில்! "பள்ளி சென்ற கால முல்லைகளே" என்று பாடல் வரிகளை முணுமுணுத்தது உதடுகள்!

                                                 


எங்கள் குழுவில் ஒவ்வொரு ஊரிலும் வழி சொல்ல ஒருவர் இருந்தாலும் தஞ்சை பற்றி யாரும் அறியவில்லை என்பதால் வழி தேட அலைபேசியில் பேசத் தொடங்கியவர்களை இடைமறித்தேன். "இனி வழிக்கு நான் பொறுப்பு" என்றேன்! இத்தனைக்கும் நாற்பது வருடங்களுக்கு முன் தஞ்சையை விட்டுச் சென்றது.

பெரிய மாற்றமில்லை. பைபாஸ் ரோடிலிருந்து திரும்பிய இடம் நாஞ்சிக்கோட்டை ரோட் என்று அறிந்ததும் முதல் மகிழ்ச்சி. நான் படித்த பள்ளியைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். 


பள்ளியின் மேரிஸ் கார்னர் காம்பவுண்ட் கண்ணில் பட்டபோது சந்தோஷம் பொங்கியது! அந்த அருள் தியேட்டர் இன்னும் அங்கே! "நினைத்தாலே இனிக்கும்" பல லாரல் ஹார்டி நினைவுகளை உண்டாக்கியது அந்தத் தெரு.
இந்த சர்ச்சுக்குள் எத்தனை முறை சென்று வந்திருப்பேன். இந்த கேட்டுக்கு அருகில் எத்தனை குச்சி ஐஸ், பால் ஐஸ் சாப்பிட்டிருப்பேன்!
                    
உள்ளே சென்று திரும்பினேன்.

                


அங்கு நின்றிருந்தவரிடம் 'நீங்கள் இங்கு வேலை பார்க்கிறீர்களா?' என்று கேட்டபோது, மறுத்து, தான் ப்ளஸ் டூ பேப்பர் வேல்யுவேஷனுக்காக வந்ததாகச் சொன்னார்.


பள்ளிக்குள் சென்று புகைப்படம் எடுத்ததும், ப்ளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றதால் அங்கிருந்த வெளி அலுவலர் ஆயுதம் தாங்கிய காவலருடன் வந்து மிரட்டியதும், என் உணர்ச்சிவசப்பட்ட நிலை கண்டு, என் தோளைத் தட்டிக் கொடுத்து விலகியதும்...

என்னுடைய ஆசிரியர்கள் என்று நான் நினைவு கூர்ந்த தொண்ணூறு சதவிகித ஆசிரியர்கள் காலமாகி விட்டதாக அலுவலக உதவியாளர் சொன்னபோது கஷ்டமாக இருந்தது. பின்னே இத்தனை வருடங்கள் இருப்பார்களா என்ன என்ற எண்ணமும் எழுந்தது.
                         

வசித்த ஓல்ட் ஹவுசிங் யூனிட், மருத்துவக்கல்லூரி சாலை, வ வு சி நகர் என்று தாண்டிச் செல்லத்தான் நேரம் இருந்தது. 
               

அந்தக் கலை அரங்கத்தில்தான் எத்தனை நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறேன்... என் நண்பன் கலந்து கொண்ட மாறுவேடப் போட்டி முதல், எங்கள் பள்ளி ஆசிரியர் பாடிய இசை நிகழ்ச்சி வரை... அந்த உடைந்த பின் ஜன்னல் கூட சரி செய்யப்படவில்லை! இதன் நேர்பின்னே என் வீடு!

இத்தனை வருடங்கள் கழித்தும் நிறம் மாறாத, கூரை மாறாத பாலர்பள்ளி, அருகிலேயே லைப்ரேரி... இந்த லைப்ரேரி எத்தனை நினைவுகளை மீட்டெடுக்கிறது எனக்குள்! நானே லைப்ரேரியைப் பார்த்துக் கொண்ட நாட்கள், கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திய நாட்கள்...இன்னும் இன்னும்...

              


மருத்துவக்கல்லூரி சாலையில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் மறுநாள் அதிகாலை சென்றால், அங்கு ஏற்கெனவே காத்திருந்த பக்தர்கள், கோவில் இன்னும் திறக்கவில்லை, இன்னும் அரைமணி நேரம் ஆகலாம் என்றனர். நான் இருந்தபோது சாலைகள் மிகவும் குறுகலாக இருக்கும். இப்போது நல்ல முறையில் இருந்தது. இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கும், அருகிலேயே இருக்கும் மசூதிக்கும் அடிக்கடி வருவோம். இரண்டுக்கும் இடையேதான் எங்கள் ரேஷன் கடை இருந்தது. அந்தக் கடையை ஒட்டி சந்தில் நடந்தால் ராஜேந்திரா (டூரிங்) டாக்கிஸ் வரும்!
           



கொஞ்சம் அஜாக்கிரதையாக சைக்கிள் ஓட்டினால் ஓரத்தில் இருக்கும் சரிவில் விழுந்து கீழே சென்றுவிடும் அபாயமாக இருந்த மேம்பாலம் இப்போது நான்கு வழிச்சாலையாக அழகாக இருந்தது. எங்கள் 'வெண்சங்கு' பஸ் ஒருமுறை இந்த மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்து விழுந்திருக்கிறது!

                                        


மேலவீதியில் நண்பரைப் பார்க்க சங்கர மடம் சென்றபோது காமாட்சி அம்மனின் அற்புதத் தரிசனம் கிடைத்தது. 


மேம்பாலம் கிட்டத்தட்ட ராணி பேரடைஸ் தியேட்டர் தாண்டி முடிவைடைகிறது. பெரிய கோவிலைச் சுற்றி வந்தோம். மாலை 6.30 மணிக்கு மேல் ஆகி விட்டதால் நிறைய புகைப்படங்கள் இங்கு எடுக்க முடியவில்லை.

                            



சிவகங்கைப் பூங்கா செல்லும் ஆசையும் நேரமின்மை காரணமாக முடியாமல் போனது. சென்ட்ரல் லைப்ரேரி, திருவள்ளுவர் தியேட்டர் வழியாக (ஓல்ட்) பஸ் ஸ்டேண்ட் சென்று திரும்பி கும்பகோணம் செல்லும் சாலையைப் பிடித்தோம்.




முன்பு சாந்தி ஸ்டோர்ஸ் எதிரே, ஆனந்தபவன் அருகே இருந்த ரயில்வே ஸ்டேஷன், இப்போது மேரிஸ் கார்னரில் இருந்தது ஆச்சர்யம். அந்தப்பக்கமாகச் சென்று ஈவினிங் பஜார், சாந்தப்பிள்ளை கேட், யாகப்பா தியேட்டர், ஞானம் தியேட்டர் (இப்போது ஹோட்டலாக மாறியிருக்கிறதாம்) ராஜா கலையரங்கம் தியேட்டர், மங்களாம்பிகா ஹோட்டல், மணிக்கூண்டு இவற்றை மனக்கண்களால் பார்த்தபடியே கும்பகோணம் சாலையில் விரைந்தோம்!


"தஞ்சைக்கு மறுபடி வரவேண்டும்"