வியாழன், 9 ஏப்ரல், 2020

உண்ணும் கலைபிப்ரவரி 24  திங்கள் பதிவில் மோர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ளும் விஷயங்கள் குறித்துப் பேசும்போது  அன்று செய்த கறி வகைகளைத் தொட்டுக் கொள்வோம் என்று நெல்லை சொல்லி இருந்தார்.

நன்றி இணையம்.


ஆனால் நான் மோர் சாதத்துக்கு எந்த வகையான (காய்)கறியையையும் தொட்டுக்கொள்ள விரும்புவதில்லை.  அன்று செய்த குழம்பு இருந்தால் கையில் ஒவ்வொரு வாய் சாதமாக எடுத்து நடுவில்  குழித்துக்கொண்டு ​சாம்பார் / வெந்தயக்குழம்பை நடுவில் ஊற்றிச் சாப்பிடுவதுண்டு.  

இல்லாவிட்டால் நார்த்தை இலைப்பொடி, முன்பெல்லாம் ஊறுகாய் தொட்டுக்கொண்டிருந்தேன்.  இப்போதெல்லாம் ஊறுகாய் எப்போதாவதுதான் மிக அதிசயமாய் உபயோகிக்கிறேன்.  எண்ணெய் உப்பு கூடாதே!

மோர் சாதத்துக்கு ரசம் தொட்டுக்கொள்ளும் பழக்கம் உண்டு எனக்கு.  அன்றைய ரசம் சிறப்பானதாய் அமைந்திருந்தால் அதையும் குழம்பு போல குழித்து நடுவில் ஊற்றியோ, தட்டிலேயே ஊற்றியோ சாப்பிடும் வழக்கம் உண்டு.

நன்றி இணையம்.

சின்ன வயதில் சின்ன வெங்காயம் (பெரிய வயதில் பெரிய வெங்காயம் என்று சொல்லப்போகிறேன் என்று நினைக்கவேண்டாம்!) உரித்துப் போட்டுக்கொண்டு வெடுக் வெடுக்கென்று கடித்துத் தொட்டுக் கொண்டதுண்டு. என் அம்மா மோர் சாதத்துக்கு பிஞ்சு பச்சை மிளகாயை எடுத்துக் கடித்துக் கொள்வார்.  நான் சின்ன வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும்நசுக்கிச் சேர்த்துத் தொட்டுக் கொண்டதுண்டு.  இதெல்லாம் பள்ளிக்கால நினைவுகள்! வெடுக் வெடுக் என்றதும் நினைவுக்கு வருகிறது.  மாவடு இருக்கும் காலங்களில் மாவடு -  இருப்பதிலேயே பொடி வடுவாய் எடுத்துத் தொட்டுக்கொள்வேன்.  மாவடுவை குழம்பு சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள ரொம்பப் பிடிக்கும்.  அப்போது சற்றே மீடியம் சைஸ் வடுவாய் செலெக்ட் செய்து கடித்துக்கொள்ள வேண்டும்.  அதுபோலவே மாகாளிக்கிழங்கு. நிறைய பேருக்கு இதன் வாசனை பிடிப்பதில்லை.  எனக்கும் ஆரம்ப காலங்களில் அப்படியிருந்தது உண்டு.   அப்புறம் பிடித்து விட்டது. மாகாளி ஊறிய மோரே போதும் மோர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள.

பிப்ரவரி மார்ச் மாதங்களில் தஞ்சாவூர்க் குடைமிளகாய் கிடைக்கும்.  அதை ஊற, ஊற போட்டுக்கொள்வது பிடிக்கும்.

என் அம்மா பூண்டையும், பட்டைமிளகாயையும், உப்பு சேர்த்து அப்படியே பச்சையாய் கல்லுரலில்போட்டு இடித்து வைப்பார்கள்.    அது ரொம்ப நாளைக்கு இருக்கும்.  முதலில் ஈரப்ப்பசையுடன் இருக்கும்.  பின்னர் சற்றே காய்ந்திருந்தாலும் மோர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள பிடிக்கும்.  இதை தோசைக்கும் தொட்டுக்கொள்வேன்.  அதாவது சற்றே நல்லெண்ணெய் விட்டுக் குழைத்துக்கொண்டு இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்வேன்.

சிலர் மோர் சாதத்துக்கு மாம்பழம் தொட்டுக் கொள்வார்கள். உதாரணமாய் என் அப்பாவைப் பெற்றெடுத்த என் பாட்டி.  எனக்கு மாம்பழத்தை அப்படி வீண் செய்யப் பிடிக்காது.  அதன் சுவையே தனி.  தனியாய்த்தான் சாப்பிடுவேன். சிலர் மோர் சாதத்துக்கு வெல்லம் - ஆம், வெல்லம் - தொட்டுக்கொள்வார்கள்.

என் அம்மா நான் ஸ்கூல் செல்லும் காலங்களில் மோர்சாதம் பிசையும்போதே சூடான சாதத்தில் சின்ன வெங்காயத்தை பொடியாய் நறுக்கிப்போட்டு, உப்பு அளவாய்க் கலந்து, பால் போட்டுப் பிசைந்து ஒரு ஸ்பூன் மோர் விட்டுக் டிபன்பாக்ஸில் கட்டித்தருவார்.  மதியம் சாப்பிடும்போது அதன் சுவை...    சூப்பராய் இருக்கும்.

நன்றி இணையம்.

நல்ல தயிராய்/ மோராய்  இருந்தால் அந்த சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள எதுவும் தேவையே கூட இருக்காது.  ஆனால் தயிர் சாதத்தில் திராட்சை போட்டு சாப்பிடுவது எனக்குப் பிடிக்காது!

அப்போது நிறைய நண்பர்கள் பேசினாலே பூண்டு வாசனையும், வெங்காய வாசனையும்தான் அடிக்கும்.   பள்ளிக்காலத்துக்கு அது சரிப்படும்.   அப்புறமும் சரிப்படுமா என்ன?

எனக்குப் பிடித்த கறி முன்பெல்லாம் சேப்பங்கிழங்கு ரோஸ்ட் ஆக இருந்தது.  இப்போதெல்லாம் அவ்வளவு இஷ்டமில்லை.  வீட்டில் கத்தரிக்காய் அவ்வளவாகச் செய்வதில்லை என்பதால் அபூர்வப்பொருள் ஆகி அதன்மேல் இஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.  வாழைத்தண்டு, வாழைப்பூ, காலிஃப்ளவர் போன்ற காய்கள் மட்டுமே பிடிக்கிறது.  வெண்டைக்காயை அரைவதக்கலாய் புரட்டினால் பிடிக்கும்.  ஆனால் மகன்களுக்கோ அதுவும் மொறுமொறுவென ரோஸ்ட் போல இருக்கவேண்டும் என்பதால் அதுவும் சாப்பிடப் பிடிப்பதில்லை.  நன்றாகஅமைந்திருந்தால்,    வெங்காயம் சேர்த்திருந்தால், உருளைக்கிழங்கு ஏதோ ஒன்றிரண்டு கிழங்கு போட்டுக்கொள்வேன்,.  முடிந்தவரைஅதையும் தவிர்த்து விடுவேன்.

ஆனால் எனக்கென்னவோ காயைத் தனியாகச் சாப்பிடவே இஷ்டமாயிருக்கிறது.  குழம்பு சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள என்று சாப்பிடுவதைவிட, காயை தனியாக அதன் சுவையை ரசிப்பதே மேல். பெரும்பாலும் காய் தயாரான உடனே சுடச்சுட கப்பில் போட்டு சாப்பிட்டு விட பிடிக்கிறது.  எனக்குப் பிடிக்காத காய் பீன்ஸ்!  பீன்ஸை என்ன செய்தாலும் பிடிப்பதில்லை!

ஆரம்ப காலங்களிலிருந்தே எனக்குப் பொரித்த அப்பளம் மேல் பெரிய விருப்பம் இதுந்ததில்லை.  திருமணங்களில், விருந்துகளில் அதைப் பரிமாற்ற வரும்போது கைநீட்டித்த தடுத்து விடுவேன்..  அரிசி அப்பளம் விதிவிலக்கு.  அதைக்கூட தனியாக சாப்பிடப் பிடிக்கும். எனவே ரசம் சாதத்துக்கு எதுவும் தொட்டுக்கொள்ள மாட்டேன்.

ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை இருக்கும்.   இதெல்லாம் என் ரசனை.  நீங்கள் எல்லாம் ஆரம்பத்திலிருந்தே சாப்பிடும் காய்களில் இன்றுவரை ரசனை மாறாமல் இருக்கிறீர்களா?   அல்லது உங்களுக்கும் அது முன்பு பின்பு மாறியிருக்கிறதா?   சிறுபிள்ளை முதல் இன்றுவரை மாறாத ரசனையுடன் சாப்பிடுவது எது? பெரும்பாலும் உருளைக்கிழங்கு என்றுதான் பதில் வரும் என்று நினைக்கிறேன்.

=========================================================================================================


பாலுமகேந்திரா மறைந்த சமயம் கமல் பேசியது என்று நினைவு.  இந்து நாளிதழில் வந்திருந்ததை 2014 இல் ஃபேஸ்புக்கில் எடுத்துப் போட்டிருந்தேன்...  அதில் கொஞ்சம் இங்கே தந்திருக்கிறேன்.   முழுதும் படிக்க லிங்க் க்ளிக்கிச் செல்ல வேண்டும். (லிங்க் வேலை செய்யவில்லை) 


நன்கு படித்த ஒரு மனிதன், கிராமத் துக்குத் திரும்புவதை போல அவர் திரும்பினார். அவருக்கு எந்த அம்சம் வலுவானது, எது தவறானது என்பது முழுமையாகத் தெரிந்திருந்தது. அவரது கணிப்பு சரியாகவும் இருந்தது. அப்படித் தான் நாங்கள் நண்பர்கள் ஆனோம்.

வித்தியாசமான பாணி

நாங்கள் பிரபலமாக ஆவதற்கு முன்பே, மிகுந்த தன்னம்பிக்கை உள்ள இளைஞனாக அவரைப் பார்த்து ஆச்சரியம் கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. "யார் இந்த ஆள்? இவரது எழுத்து நடையே வித்தியாசமாக உள்ளது" என்று கேட்டிருக்கிறேன். அவர் சம்பிரதாயமான முறையில் வேலை செய்யவில்லை.

ஷாட்களுக்கு அவர் ஒளியூட்டும் முறை எனக்கு மிகவும் பிடித்தமானது. புகழ்பெற்ற இயக்குநர் ராமு காரியத்துடன் பணியாற்றப் போகிறார் என்று என்னிடம் கூறப்பட்டது. அத்துடன் சேதுமாதவனோடு சேர்ந்து பணிபுரியலாம் என்றும் சொன்னார்கள்.

இயக்குனர் சுகதேவ் அலுவாலியா போன்றவர்கள், அவரது செட்டுக்கு வருவதைப் பார்த்து நான் ஆச்சரியமடைந் திருக்கிறேன். சுகதேவ் எனக்கு ஹீரோவைப் போன்றவர். அவரது விளம்பரப் படங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன். தனிப் பாணி கொண்டவை அவை. பாலுவுக்கு எப்படியான சகாக்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். நானும் அவரது நண்பனாக மாறிவிட்டேன்.

பாலு முதலில் ஒரு படத்தை இயக்க விரும்பியபோது, நான்தான் ஹீரோ என்று சொன்னார். வெறும் நட்பார்ந்த உறுதிமொழியாக அதைச் சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால், கோகிலா படம் எடுத்தபோது அவர் வார்த்தையை நிரூபித்தார்.

=====================================================================================================================

2015 இல் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்திருக்கிறேன்.  எங்கிருந்து எடுத்தேன் என்று குறிக்கவில்லை.  ஆனால் சுவாரஸ்யமான தகவல்.

1927-இல் சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பாடிய பெருமை மதுரை மணி அய்யருக்கு உண்டு. அவரது தந்தை ராமசாமி அய்யர் 72 மேளகர்த்தா ராகங்களைப் பற்றி விரிவுரையாற்ற, அதற்கு 15 வயது மதுரை மணி அய்யர் பாடிக் காட்டினாராம். அது மியூசிக் அகாதெமியின் முதல் இசை மாநாடும்கூட.

மதுரை மணி அய்யர் தனக்கு உடன்பாடு இல்லாத எதையும் செய்யமாட்டார். அவருக்கு ஜாதகத்தில் அதீத நம்பிக்கை உண்டு. நவக்கிரகங்கள்தான் நம்மை வழிநடத்துகின்றன என்று கருதுபவர்.

அதனால் "நவக்கிரகங்கள் நம்மை என்ன செய்யும்' என்று பொருள்படும்படியான "கிருஹபலமேமி' என்கிற சாகித்யத்தை பாடவே மாட்டார். அதேபோல, "நிதி பெரிதா, ராமா உனது சந்நிதி பெரிதா' என்று பொருள்படும்படியான தியாகய்யரின் "நிதி சால சுகமா' என்கிற சாகித்யத்தை அவர் பாடுவதில்லை. காரணம், பணம் வாங்கிக் கொண்டு கச்சேரியில் பாடுபவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக இந்த சாகித்யத்தை பாடக்கூடாது என்பதுதானாம். அதேநேரத்தில் வீட்டில் பாடும்போது இந்த சாகித்யத்தை நெகிழ்ந்து மனமுருகி பாடுவாராம்.

===================================================================================================

பொக்கிஷம்  :

"என்ன!  கல்கி தீபாவளி மலர் நான்கே ரூபாயா?"   "ஆமாம்...   அப்போதைய நான்கு ரூபாய்க்கு என்னென்ன வாங்கலாம் தெரியுமா?"  "ஆமாம்... எந்த வருஷம்?"  "தெரியவில்லையே...!"
சந்திரபாபு மறைந்து விட்டார் என்று தெரிந்ததும் மனோரமா அடைந்த அதிர்ச்சி...  அப்போது வந்த செய்தி...கீழ்க்கண்ட புதிருக்கு கீதா அக்கா விடை சொல்லக் கூடும்.  ஏனென்றால் அந்த பைண்டிங் புத்தகத்தில் 41 ஆம் பக்கத்தை எடுத்து பைண்ட் பண்ணவில்லை!


191 கருத்துகள்:


 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
  மிகச் சுவையான பதிவு. வித விதமான தொட்டுக்க
  லிஸ்ட்.
  அருமையான பல விதம். எல்லாமே எங்கள் வீட்டிலும் உண்டு.
  பூண்டு,மிளகாய் தவிர.
  பச்சை மிளகாய் ,உப்பு ,வெங்காயம் ...சின்னது
  நசுக்கி அப்பா சாப்பிடுவதைப்
  பார்த்திருக்கிறேன்.
  தோசை மிளகாய்ப் பொடி+நல்லெண்ணெய் கலந்து மோர் சாதத்துக்குத்
  தொட்டுக் கொள்ள ரொம்பப் பிடிக்கும்,

  ராத்திரி முக்கால்வாசி சுட்ட அப்பளாம், ரசம், மோர்சாதம் ,எலுமிச்சங்காய் ஊறுகாய்
  உண்டு.
  மாம்பழம், தயிர் சாதம் புக்ககத்தில் சாப்பிடுவார்கள்.
  எனக்கு ருசிக்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா..்். இனிய காலை வணக்கம். தளிகையுல் இதுவரை சுவைக்கும் வாய்ப்பு ஏற்பட்டதில்லை.

   நீக்கு
  2. வல்லிம்மா.... நானும் தளிகைக்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு மனைவியுடன் சென்றிருந்தேன். எங்களுக்கு ரசிக்கவில்லை. நம்ம வீட்டுல பண்ணும் அதே உணவை எதுக்கு வெளில சாப்பிடணும் என்பதுதான் காரணம்.

   சப்பாத்திக்குப் போட்ட குருமாவுக்கும் நாம் செய்யும் அவியலுக்கும் பெரிய வித்தியாசமில்லை. வெங்காயம் பூண்டு இல்லாத தளிகை நம்ம வீட்டிலேயே பெட்டரா சாப்பிடலாமே என்றுதான் தோன்றியது.

   நீக்கு
  3. தளிகை சம்பந்தமான உங்கள் கருத்துதான் எனக்கும் நெல்லை..

   நீக்கு
  4. தளிகை பற்றி ரேவதி எந்தக் கருத்தும் சொன்னதாய்த் தெரியலை. ஆனால் எங்கள் உறவினர் ஒருத்தர் பெண் கல்யாணத்துக்கு அவரைத் தான் கேடரிங் ஏற்பாடு செய்திருக்கார். இனி தான் சாப்பிட்டுப்பார்க்கணும்.

   நீக்கு
  5. அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் இந்த மாதிரி ஹோட்டல்களில் தளிகை சப்பென்றுதான் இருக்கும் என்பது என் சம்சயம்!

   நீக்கு

 2. படங்கள் அத்தனையும் பிரமாதம்.
  தளிகை ரெஸ்டாரண்ட் தயிர்சாதம் சூப்பராக இருக்கிறது. அங்கு சாப்பிட்டுப் பாருங்கள்.

  எனக்கு பள்ளிக்கு அம்மா முக்கால் வாசி ரசம்சாதம், பொரித்த வடாம்,
  ஒவ்வொரு நாள் புளிக்காய்ச்சல் கலந்து அருமையான புளியோதரையும் கிடைக்கும். கொடுத்துவிடுவார்.
  ஏழரை மணிக்கே நான் கிளம்பி விடுவதால்
  அனேகமாக பழைய சாதம், மோர்,வறுத்த மோர்மிளகாய் இருக்கும்.

  அந்த, விறகடுப்பு ,கரியடுப்பு இதில் வேறென்ன செய்ய முடியும் பாவம் அம்மா.
  பிடித்தது கத்திரிக்காய்,
  அவரை பீன்ஸ் எதுவும் பிடிக்காது.
  கொத்தவரங்காய் பருப்புசிலி மிகவும் சுவையாக அம்மா செய்வார்.
  பிறகு நானும் கற்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அம்மா... அப்போது விறகும் கரியும்தானே..்். ராஜபாளையம் ஸ்டவ் என்ற ஒன்று வாங்கி வைத்திருந்தோம். மண்ணெண்ணெய்தான். ஆனால் அடுப்பிலிருந்து சற்றே உயரத்தில் கேனோடு வைக்கவேண்டும். கேஸ் மாதிரி எரியும்!

   நீக்கு
  2. அட, எனக்குத் தெரியாதே. ராஜபாளையம் ஸ்டவ்வா. ப்ரபாத் ஸ்டவ் தெரியும் . ஜனதா
   ஸ்டவ்.
   கீழே உட்கார்ந்து கரி அடுப்பு விசிறிப் பற்ற வைத்து,அந்தச் சிகப்புத்தணலில்
   அம்மாவின் மூக்குத்தி பளபளப்பது பிடிக்கும்.

   நீக்கு
  3. ஆமாம் அம்மா... ஸ்டவ் கூட புஸ்புஸ் என்று அடிக்கும் வகை ஸ்டவ் என்று ஞாபகம். ஜனதா ஸ்டவ் கேள்விப்பட்ட ஞாபகம்.

   நீக்கு
  4. உம்ரா ஸ்டவ் என்று ஒன்று உண்டு. எங்கள் வீட்டில் காபிக்கு மட்டும் ஒரு உம்ரா ஸ்டவ் உண்டு. அவ்வப்பொழுது அதை சுத்தம் செய்து, எண்ணெய் போடுவார்கள். 70களில் டெல்லியிலிருந்து வருபவர்கள் நூதன் ஸ்டவ் என்று ஒன்றை எல்லோரும் வாங்கி கொண்டு வருவார்கள். அதில் இரண்டு வட்டங்களாக திரி இருக்கும். 

   நீக்கு
  5. என் கிட்டே உம்ராவ்,பிரபாத் பம்ப் ஸ்டவ், நூதன் ஸ்டவ், ஜனதா ஸ்டவ் எல்லாமும் உண்டு. ஆனால் இவற்றை நான் உபயோகிக்கத் தொடங்கி 3,4 மாதங்களில் எரிவாயு அடுப்புடன் சிலிண்டரும் முன் பணம் கட்டி வாங்கி விட்டார். ஆகவே அதிகம் ஸ்டவில் சமைத்தது இல்லை.

   நீக்கு
  6. என் அப்பா எரிவாயு அடுப்பு வாங்க ஆரம்பத்தில் ரொம்ப பயந்தார். விளையாட்டாக நான் போய் பதிவு செய்து விட்டு வந்தது இணைப்பு இரண்டு நாளில் கிடைத்தும் (எவ்வளவு குறைந்த பணம் தெரியுமா?) அந்த வாய்ப்பை நழுவ விட்ட அப்பா அப்புறம் கஷ்டப்பட்டு இணைப்பு வாங்கினார்.

   நீக்கு
  7. ஆமாம், ஸ்ரீராம், நாங்க வாங்கினப்போ சிலிண்டருக்கான முன்பணம், அடுப்பு, எரிவாயுவுக்கான பணம் எல்லாம் சேர்த்து 225ரூபாய்க்குள் தான். சிலிண்டர் தீர்ந்தால் மீண்டும் வாங்கப் பதினாறே ரூபாய் தான். அப்போ மண்ணெண்ணெய்ப் பற்றாக்குறை வந்தப்போ எரிவாயுவுக்கான தொகையைப் பத்தொன்பது ரூபாய் ஆக்கினாங்க. அக்கிரமம் எனப் பேசிக் கொண்டார்கள். என் அப்பாவும் நான் வைச்சிருக்கிறதைப் பார்த்துப் பயந்தார். மூடுவது வேறே அப்போல்லாம் திருகு மூடி. அதை இறுக்கமாக என் மாமியார் மூடிவிடுவார். திறக்கக் கஷ்டப்படும். ஒரு முறை திறக்கவே முடியாமல் மெகானிக் வந்து பார்த்துவிட்டு இதை எடுத்துச் செல்ல வேண்டும் என எடுத்துப் போய்விட்டார். மறுபடி சிலிண்டருக்குப் பதிந்து வர நான்கு நாட்கள் ஆயிற்று. எடுத்துச் சென்ற சிலிண்டரை அப்போத் தான் வாங்கி இருந்தோம். நான்கு நாட்கள் கூட உபயோகிக்கவில்லை. பணம் கூடுதலாகச் செலவானது தான் மிச்சம். :)))) எரிவாயு அடுப்புடன் பல வகையான மலரும் நினைவுகள் உண்டு.

   நீக்கு
 3. பாலு மகேந்த்ரா கமல் அனுபவம் அருமையாகச் சொல்லி இருக்கிறார்.
  அந்த ஷார்ட் ஹாண்ட் கொஞ்சம் தான் தெரியும்.
  கீதா வந்து சொல்லட்டும்.
  இப்போது கல்கி ஆன்லைனில் படிக்கலாமாமே.
  அதையும் பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். கல்கி பழைய இதழ்கள் கூட ஆன்லைனில் படிக்க அமிர்தம் சூர்யா சௌகர்யம் பண்ணிக் கொடுத்திருக்கிறார்.

   நீக்கு
  2. நான் வரலை இந்த ஆட்டைக்கு! உட்கார்ந்து படிக்க நேரமே இல்லை! :(

   நீக்கு
  3. ஹா... ஹா... ஹா... எனக்கும் கணினி, மொபைலில் படிக்க அவ்வளவு பிடிப்பதில்லை.

   நீக்கு
 4. மனோரமாவின் சிந்தனை சந்திரபாபு பற்றியது. வருத்தமாக இருக்கிறது. நல்லபடியாக அந்த மனிதனைப் புரிந்து வைத்திருக்கிறார்.
  அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்திரபாபு வித்தியாசமான மனிதர்தான் இல்லையா?

   நீக்கு
 5. மணி ஐயர். எத்தனை பெரிய வித்வான். அவரது இசைத்தட்டு பாட்டி வீட்டில் இருந்தது. நாத தனுமனிசம் அதில்தான் கற்றுக்கொன்டேன்.
  அவரது குணமும் நிறைகுணமாக இருந்திருக்கிறது. எத்தகைய உயரிய பெரியோர்கள் நம் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள்.
  மிக மிக நன்றி ஸ்ரீராம். மனதுக்கு மிக நிறைவாக இருந்தது.
  மீண்டும் பார்க்கலாம்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு மதுரை மணி ரொம்பப் பிடிக்கும். யாருக்குதான் பிடிக்காது என்கிறீர்களா?!!

   நீக்கு
  2. யாருக்குதான் பிடிக்காது என்கிறீர்களா?!! ஆமாம். யாருக்குத்தான் பிடிக்காது? எனக்கு சாஸ்திரீய சங்கீதத்தில் ஆர்வம் வந்தது மதுரை மணி ஐயர் பாட்டைக் கேட்டுத்தான். ஆனால் அவருடைய கச்சேரியை லைவாக கேட்கும் பாக்கியம் எனக்கில்லை. 

   நீக்கு
  3. நான் நிறையக் கேட்டிருக்கேன் நேரிலேயே! என் மாமனார் மதுரை மணி ஐயர் என்று தெரியாமலேயே கச்சேரியை முழுவதும் கேட்டுவிட்டுப் பின்னர் பெயர் தெரிந்தது,"ஐயய்யே, இவனா!" என்பார்! அதே போல் மதுரை சோமு, சீர்காழி போன்றவர்களுக்கும்! :)))))

   நீக்கு
  4. மதுரை மணி கச்சேரி நேர்லயே கேட்டிருக்கீங்களா? அட...

   நீக்கு
  5. ஆமாம், அதுவும் காக்காத் தோப்புத் தெருவிலேயே, ஶ்ரீராமநவமி உற்சவத்தின் போது, அதன் பின்னர் ஒரு தரம், மீனாக்ஷி கோயிலில் ஒருதரம், அநேகமா எம்.எஸ்.எம்.எல்.வி. வீணை சிட்டிபாபு, சீர்காழி, எல்லோருடைய கச்சேரியும் கேட்டிருக்கேன். அம்பத்தூரில் இருந்தப்போக் கல்யாணம் ஆன புதுசிலே எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.எஸ். மெல்லிசைக்கச்சேரி வைத்திருந்தார்கள். எங்கள் பொழுதுபோக்குச் சங்கம் மூலமா அனுமதிச் சீட்டு கிடைத்துப் போயிட்டூ வந்திருக்கோம்.

   நீக்கு
  6. ஸ்வாமி ஹரிதாஸ்கிரி பஜனை மதுரையில் அறுபதுகளில் கேட்காத நாளே இல்லை எனலாம். மேலாவணி மூலவீதியில் இருந்த ஒன்றாம் நம்பர் வீட்டில் கோபாலசாமி ஐயர் வீடு, அவர் மகன் தான் மதுரை ஜி.எஸ்.மணி அங்கே தான் ஸ்வாமிகள் தங்குவார். அவருடனேயே பின்னாலேயே ஓடுவோம்.

   நீக்கு
  7. காக்காத் தோப்புத் தெருவிலும், மேல அனுமந்தராயர் கோவில் தெருவிலும் அப்பா, அண்ணன் குடும்பம் 90 களில் குடி இருந்தது.

   நீக்கு
 6. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் இறைவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. காலை வணக்கம் அனைவருக்கும்.

  வியாழன் கதம்பம் ஒரு டெம்ப்ளட்டில் ஒரேவிதமான டாபிக்குகள் இல்லாமல் ஓரளவு வித்தியாசமாக ஒவ்வோரு வாரமும் வருவது சிறப்பாக இருக்கிறது. ஶ்ரீராமின் எழுத்தும் ரசித்துப் படிக்கக்கூடியதாகவும், நமக்கு ரிலேட் செய்து அசைபோடக்கூடியதாகவும் இருக்கிறது. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நெல்லை.. வணக்கம். பாராட்டுகளுக்கு நன்றி.

   நீக்கு
 8. மோர் சாதத்துக்குத் தொட்டுக்க எது நல்லா இருக்கும்? மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.

  எனக்குப் பிடித்தது, பஜ்ஜி-வெங், குனுக்கு. கரைச்ச மா தோசை-மி.பொடி காம்பினேஷன், புது மாங்காய் ஊறுகாய், பொரித்த அப்பளாம். அப்புறம் எங்க அம்மா பண்ணிப்போட்ட கொத்தமல்லி இடித்தது-புளி பருப்பு போட்டு தண்ணீர் விடாமல் இடித்தது, அம்மா செய்த புளிக்காய்ச்சல். நனைந்த சாதத்திற்கு-தயிர் விட்டது வாழைக்காய் பொரிச்ச குழம்பு இல்லைனா வெந்தயக்குழம்பு வகைகள், மணத்தக்காளி வற்றல் குழம்பு - ஆனா யாரேனும் நான் சாதத்தைக் கையில் எடுத்துக் குவித்துக்கொண்டால், அதில் குழம்பு விடவேண்டும்.

  வெகு சமீபத்தில் என் மனைவி செய்த தக்காளி-வெங் போட்டுச் செய்த தொக்கு ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. (அபூர்வமா வெங் உபயோகித்தாள்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பஜ்ஐஇ எல்லாம் நான் தொட்டுக்கொள்ள மாட்டேன் நெல்லை.. வாழைக்காய் பொரிச்ச குழம்பு? இதுவரை செய்ததுமில்லை, சுவைத்ததுமில்லை. மற்றபடி சாம்பார், வத்தக்குழம்பு, வெந்தயக் குழம்பெல்லாம் ஓகே!

   நீக்கு
  2. பஜ்ஜி, குணுக்கு எல்லாம் ரசம் சாதத்துக்கு ஓகே! பழைய சாதத்துக்கு எங்க அம்மா பச்சைமிளகாயை நசுக்கி உப்புப் போட்டுச் சின்னவெங்காயம் ஒன்றிரண்டாகத் தட்டிச் சேர்த்துத் தொட்டுக்கத் தருவார். நாங்க ஆர்வமாச் சாப்பிடுவோம். அப்பாவுக்குக் கோபம் வரும் அதைப் பார்த்தால்! :)))) கண்டதை எல்லாம் தின்னறீங்களேனு திட்டுவார்.

   நீக்கு
 9. உருளை ரோஸ்டும் தயிர் சாதமும் எனக்கு ரொம்ப இஷ்டமாக இருந்தது. பொதுவா வதக்கின காயும் மோர் சாதமும் நல்லாத்தான் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு பொதுவாக காய்களை வெறுமனே சாப்பிட்டு விடுவேன். இதோ இப்போ கூட பாகற்காய் வதக்கல் கப்பில் போட்டு கையில்!

   நீக்கு
  2. உ.கி. வதக்கலும், பாகற்காய் வதக்கலும் தயிர் சாதத்தோடு நன்றாக இருக்கும் என்றாலும் என் ஓட்டு மாங்காய்த் துண்டங்களாக அரிந்த ஊறுகாய்க்கே.

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  சுவையான கதம்பம். மோர் சாதத்திற்கு என்னவெல்லாம் தொட்டுக்கொள்ளலாம் என்ற பட்டியல் சுவையாக இருக்கிறது. மிக அழகாக பொறுமையாக விளக்கி சுவைபட எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  எங்கள் வீட்டிலும் இந்த பூண்டைத்தவிர்த்து நீங்கள் கூறியபடி அனைத்தும் தொட்டு சாப்பிட்டுள்ளோம். நீங்கள் சொன்னபடி நல்ல தயிரோ. கெட்டியான மோரோ, கொஞ்சம் பாலுடன் சேர்த்து செய்யப்படும் தயிர்/மோர்சாதம் எதையும் தொட்டுக் கொள்ளாமல் சாப்பிட்டு விடலாம். அதற்கு துணையே தேவையில்லை.

  மாம்பழம் கிடைக்காத பட்சத்தில் வாழைப்பழமும் எனக்கு மோர் சாதத்துக்கு நன்றாக இருக்கும். எங்கள் புகுந்த வீட்டில் பொதுவாக மோர் சாதம் சாப்பிடும் போது பழத்தையோ, படசணங்களையோ தவறுதலாக அறியாமல் தட்டில் போட்டால், உடனே எனக்கு பயங்கர திட்டுக்கள் விழும். பிறந்த வீட்டில் இதையெல்லாம் உடன் போட்டுக் கொண்டு சாப்பிட்டு எனக்கு சகஜம். அந்த பழக்கத்தில் திருமணமாகி வந்தவுடன் பரிமாறும் போது ஓரிரு தடவை போட்டு விட்டேன். பிறகுதான் புரிந்தது. ஒவ்வொருத்தரும் உண்ணும் ரசனையில் ஒவ்வொரு விதம்.

  பொக்கிஷங்கள் தீபாவளி மலர் வியப்பூட்டுகின்றன. சந்திரபாபு சிறந்த நடிகர். இன்னமும் அவர் நகைச்சுவைக் ரசிக்கின்றன. 41ம்பக்கத்தின் விபரமறிய நானும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. தங்கள் கணினி சரியாகி விட்டதா?

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமலா அக்கா... நானும் கிட்டத்தட்ட உங்கள் புகுந்த வீட்டுச் சுவைதான். ஹா... ஹா... ஹா...

   நீக்கு
  2. எங்க மாமனார், மாமியார் மற்றும் எல்லோரும் நம்ம ரங்க்ஸைத் தவிர்த்துக் குழம்பு சாதத்துக்கு வெல்லம் நிறையப் போட்டு மாங்காய்ப் பச்சடி, மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம்னு தொட்டுப்பாங்க. மாமனார் ஒவ்வொரு சமயம் வாழைப்பழத்தோடு சர்க்கரை சேர்த்து மோர் சாதத்துக்குத் தொட்டுப்பார். அங்கே சாம்பார், குழம்பு, ரசம் எல்லாத்துக்கும் புளி எவ்வளவு எடுக்கிறோமோ அவ்வளவு வெல்லமும் போடணும் என்பார்கள். இப்போக் கூடப் போன வாரம் என் கடைசி நாத்தனார் சமைக்க வெல்லம் கேட்டார். வெல்லமெல்லாம் நான் சேர்த்துச் சமைப்பதில்லை என்றேன். அவங்களுக்கு முகம் வாடி விட்டது. :))))

   நீக்கு
  3. சுகுமார் எனக்கு வெல்லம் போடுவது பற்றி சொல்லிக் கொடுத்தார். சில சமயங்களில் வத்தக்குழம்பு, வெந்தயக் குழம்பில் கொஞ்சமாய் வெல்லம் காட்டும் செய்திருக்கேன்!

   நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  5. போட்டும் என படிக்கவும்.

   நீக்கு
  6. நான் தோசை மிளகாய்ப் பொடிக்கும், எப்போவானும் புளிக்காய்ச்சலுக்கும் கொஞ்சம் போல் வெல்லம் சேர்ப்பேன். பாகற்காய்ப் பிட்லைக்கும் அதே போல்.

   நீக்கு
  7. நாங்களும்! ஆனால் பிட்லைக்கு ஒருமுறை கூட போட்டதில்லை.

   நீக்கு
 11. பள்ளிகால நினைவலைகள் ரசிக்க வைத்தது ஜி

  பதிலளிநீக்கு
 12. // 2014 இல் ஃபேஸ்புக்கில் //

  இணைப்பு (https://www.blogger.com/) செல்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அச்சச்சோ... கணினி இல்லாத நிலையில் இப்போது என்னால் சரிபண்ணக்கூட முடியாதே...

   நீக்கு
 13. சிறப்பு நள பாகம்!..
  இன்றைக்கு என்ன விசேஷம்?..

  பதிலளிநீக்கு
 14. இப்போது தஞ்சாவூரில் குடை மிளகாய் சீசன்..

  பழைய சோறு/ மோர் சோறு இவற்றுக்காகவே அவதரித்தது குடமிளகாய்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சீஸன் முடிந்திருக்குமே...

   நீக்கு
  2. இல்லையில்லை...

   தாமதிக்கப்பட்ட நீதி போல
   ஆற அமர பூத்துக் காய்த்த மிளகாய்க் குட்டிகள் எல்லாம் சந்தைக்கு வந்திருக்கும்.

   குட்டிக் குடை மிளகாய்!?...

   நீக்கு
  3. அடடா... வாய்ப்பு கிடைக்குமா வாங்குவதற்கு? நம்பிக்கை இல்லை எனக்கு.

   நீக்கு
  4. இன்னிக்குக் கஞ்சிக்குப் புளியில் ஊறிய குடைமிளகாய்கள், நல்லெண்ணெயில் வறுத்தவை தொட்டுக்க.

   நீக்கு
 15. மோர் புராணம் பல்சுவை...

  சுவாரஸ்யமான தகவலின் நம்பிக்கை வியப்பு...!

  பெண் சிவாஜியின், மதுவிற்கு அடிமையான மகன், அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் சமீபத்திய தகவல்...

  டாஸ்மாக் கடைகள் மூடியிருப்பதால் தினமும் 80 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு.

  அமைச்சர் தங்கமணியின் இன்றைய தகவல்...

  பதிலளிநீக்கு
 16. தயிர் சோற்றுக்கு மாம்பழம்...

  ஆகா!...

  இதுக்காகத் தானே
  கயிலாயம் விட்டு காரைக்காலுக்கு வந்தது - பரமசிவம்!....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...

   இந்தக் கருத்தினை எழுதிய சில நிமிடங்களில் எனது மைத்துனரிடமிருந்து வாட்ஸாப்பில் வந்த செய்தி -

   இன்றைக்குப் பங்குனி ஸ்வாதி...
   காரைக்கால் அம்மையார் திரு ஆலங்காட்டில் முக்தி எய்திய நாள் - என்று..

   சிவ சிவ...

   நீக்கு
  2. நான் மாம்பழத்தை(யும்) தனியே ருசித்தே பழக்கம்.

   காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்த தினமா? சிவசிவ...

   இன்று நாகூர் ஹனிபா மறைந்த நாளும் கூட..

   நீக்கு
 17. இனிய காலை வணக்கம்.

  தயிர் சாதத்துடன் மோர் மிளகாய் கூட நல்ல காம்பினேஷன்! நிறைய விதமான தொட்டுக்கைகள் சொல்லி இருக்கிறீர்கள். சிலர் வாழைப்பழம் தயிர் சாதத்துடன் சாப்பிடுவார்கள். ஒரு சில முறை கீதாம்மா கூட அதைப் பற்றி சொல்லி இருக்கிறார் என நினைவு. இங்கே மிக்ஸ் வெஜிடபிள் ஊறுகாய் கிடைக்கும் - அதுவும் மோர் சாதத்துடன் நன்றாகவே இருக்கிறது.

  சந்திரபாபு - எத்தனை திறமை அவரிடம். இப்பொழுதும் சில நாட்களில் அவரது பாடல்களை கேட்பதுண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வெங்கட். என்னைப் பொறுத்தவரை மோர் சாதத்துடன் தித்திப்பு சமாச்சாரமே ஆவதில்லை!

   நீக்கு
 18. தயிர் சாதத்தில் இருக்கும் பச்சை மிளகாயை தேடிப்பிடித்து மாமா சாப்பிடுவார்.

  நானும் உங்களைப்போல காரக்குழம்பு இருந்தால் தயிர்சாதத்தில் பள்ளம் பறித்து ஊற்றி சாப்பிடுவேன்.

  பதிலளிநீக்கு
 19. என்னுடைய சுருக்கெழுத்து நாள்களை நினைவுபடுத்தியது அந்த கடைசிப் பதிவு....

  பதிலளிநீக்கு
 20. //"ஆமாம்... எந்த வருஷம்?"//

  1962 என்று கீழே உள்ளதே  
  எனக்கு பிடித்த மோர்சாத காம்பினேஷங்கள்.  மாம்பழம். மோர் மிளகாய், வத்தல் குழம்பு, நார்த்தங்காய் ஊறுகாய், வாற்றல்மிளகும் புளியும் சேர்த்து இடித்த சம்பல், மிக்ஸ்சர். ஆமாம். மோர் சாதத்தில் மிக்ஸரை தூவி சாப்பிடுவது பிடிக்கும். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதனை நானும் மறந்துட்டேன். திருநெவேலி சாந்தி ஸ்வீட்ஸ் மிக்சரும், மோர் சாதமும்... மிக நல்ல காம்பினேஷன்.

   ஆனால் வாழைப்பழம், மாம்பழம் தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள் என்பதே எனக்கு ஒரு மாதிரித்தான் இருக்கு. ஹா ஹா

   நீக்கு
  2. 1962.... ஆமாம் ஜெ சந்திரசேகர் ஸார்.. கவனிக்க மறந்து விட்டேன்.

   மோர்சாதத்தில் மிக்சர் ஓகே... ரசிக்கலாம். :))

   நீக்கு
 21. //இதெல்லாம் என் ரசனை// - ஒரு வீட்டில் common ரசனை இல்லாமல், ஒவ்வொருவருக்கும் விருப்ப உணவுகள், பிடிக்காதவைகள் இருந்தால், செய்பவர் பாடுதான் கஷ்டம். பீட்ரூட் பிடிக்காது, இன்னொருவருக்குப் பிடிக்கும், பீன்ஸ் பிடிக்காது, ஒருத்தருக்கு கோவைக்காய் பாகற்காய் இஷ்டம் என்றெல்லாம் இருந்தால், என்னதான் பண்ணுவது? ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் பாஸ் அடிக்கடி சொல்லி கடுப்படிப்பதும் இதைதான் நெல்லை...எதைக் கேட்டாலும் பிடிக்காது என்கிறேன் என்று அபாண்டமாய் குற்றஞ் சொல்லுவார்.

   நீக்கு
 22. ’உண்ணும் கலை’யா? பெயரை ’ஸ்ரீஸ்ரீ ராம்’ என்று எப்போதிலிருந்து மாற்றிக்கொண்டீர்கள்?

  பதிலளிநீக்கு
 23. ஆஹா ஸ்ரீராம் மதிய வணக்கத்துடன் தொடங்குகிறேன்....

  முதல்ல பதிவு பார்த்ததும் அதுவும் முதல் படம் பார்த்ததும் ஆ இன்று திங்களோ? ந்னு நினைத்துவிட்டேன். ஹா ஹா ஹா அப்புறம் தான் இன்னிக்கு வியாழன் பதிவுதான்ன்னு விளங்கிடுச்சு!!

  படம் அட்டகாசம். அதுவும் நீங்க வேற //அன்று செய்த குழம்பு இருந்தால் கையில் ஒவ்வொரு வாய் சாதமாக எடுத்து நடுவில் குழித்துக்கொண்டு ​சாம்பார் / வெந்தயக்குழம்பை நடுவில் ஊற்றிச் சாப்பிடுவதுண்டு.//

  இப்படிச் சொல்லிட்டீங்களா பசிக்கத் தொடங்கிடுச்சு. எனக்கு ரொம்பப் பிடிக்கும் இப்படிச் சாப்பிடுவது. பாட்டி சின்ன வயசுல இப்படித்தான் கைல சாதம் போட்டு அன்றைய குழம்பை நடுல குழிச்சு விடுவாங்க...அமிர்தம். நான் எங்க மாமியார் வீட்டுல குழந்தைகள் அத்தனை பேரும் ரவுன்ட் கட்டி உக்கார கைல இப்படித்தான் போடுவேன்...ஹையோ என்ன அமர்க்களம் செய்யும் தெரியுமா ஒவ்வொண்ணூம். டிவி பார்த்துட்டே சாப்பிடக் கூடாதுன்னு நான் கண்டிஷன் போட்டுருவேன். கதை சொல்லி...பொற்காலம். இப்ப எல்லாம் வளர்ந்து கல்யாணம் ஆகி, ஆகும் வயசுல...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா... கற்சட்டி மேட் குழம்பாயிருந்தால் இன்னும் விசேஷம்.

   நீக்கு
 24. நார்த்தை இலைப்பொடி, //

  ஹையோ ஒரு வரி முடிச்சு வரதுக்குள்ள அடுத்ததும் நாக்குல தண்ணீ ஊற வைக்குதே....ஹா ஹா ஹா....

  எனக்கும் ஊறுகாய் ரொம்பப் பிடிக்கும் தான் ஆனால் அதெல்லாம் 144 போட்டு வருஷக் கணக்காச்சு. என்றைக்காவது சாப்பிட ஆசைப்பட்டு கொஞ்சமே கொஞ்சம் ரொம்ப அபூர்வமாகச் சாப்பிடுவதுண்டு. அதுவும் வீட்டுல போட்டதுனா.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊறுகாய் நல்லபடி அமையணும் கீதா... அந்தக் காலத்துல TSR Company காரன் ஒரு மிக்ஸட் வெஜிடபிள் ஊறுகாய் போடுவான்.. அப்படி ஒரு டேஸ்ட். மேலும் எனக்கு ஊறுகாயில் வினிகர் போட்டால் பிடிக்காது!

   நீக்கு
 25. இதென்னப்பா அடுத்து மூணாவதும் இப்படி தூண்டுதே...ஹைஃபைவ் ஸ்ரீராம்....ரசம் ஆஹா...இதுவும் தொட்டுக் கொண்டு நீங்கள் சொன்னபடியே சாப்பிடுவதுண்டு. தனியா கிண்ணத்துல எடுத்து வைச்சு ஒரு கரண்டி போட்டு...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அடுத்த படம் வேற தூண்டுது. திங்க பதிவு மாதிரி ஆகிடுச்சே!! ஹா ஹா ஹா ஹா

  இன்னொண்ணு சாப்பிட்டுருப்பீங்களே. சி வெ + ப மி சும்மா தட்டிப் போட்டு. எங்க வீட்டுல அது ரொம்ப பிடிக்கும் அதுவும் எனக்கும் என் பையனுக்கும். சில சமயம் தட்டி தயிர் சாதம் கலக்கும் போது கூடப் போட்டுருவேன். இந்த ரெண்டும் போட்டு ஒரு உப்புக் கல் போட்டு அம்மில ஓட்டி அதுவும் வைச்சுப்போம்...செம டேஸ்ட்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசத்தை மோருக்கு ஊற்றிக்கொண்டு சாப்பிடும் வழக்கம் எனக்கும் உண்டு. எங்க வீட்டில் எங்க பையர், என் அண்ணா பையர், மற்றும் அப்பு ஆகியோருக்கும் இந்தப் பழக்கம் இருக்கு! மரபணுக்களின் வேலைனு எங்க பொண்ணு சொல்லுவா. அதே போல் எனக்கும் எங்க கசின்ஸ் எல்லோருக்கும் மோர்க்குழம்பு+கத்திரிக்காய்க் கூட்டு என்றால் சொர்க்கம்

   நீக்கு
 26. ஆஹா சி வெ, ப மி, மாவடு எல்லாம் வரலையோ ந்னு பார்த்தா வந்துருச்சே!!!!!!

  //மாவடுவை குழம்பு சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள ரொம்பப் பிடிக்கும். அப்போது சற்றே மீடியம் சைஸ் வடுவாய் செலெக்ட் செய்து கடித்துக்கொள்ள வேண்டும். அதுபோலவே மாகாளிக்கிழங்கு.//

  ஹையோ ஸ்ரீராம் ஹைஃபைவ்!! மாகாளிக் கிழங்கும் ரொம்பப் பிடிக்கும். எனக்கு எங்க ஊர்ல இது பழக்கமில்லை. நாகர்கோவில் திருவனந்தபுரம் ல அப்பல்லாம் கிடைக்காது. இப்ப கிடைக்குதா தெரில. சென்னை வந்த பிறகு மாமியார் வீட்டுலதான் பழகிச்சு. மாமியார் போட்டு, நான் சாப்பிட்டுப் பிடித்து அப்புறம் வருஷா வருஷன் போடுவேன். இங்க பங்களூர் வந்துதான் போடலை. மாகாளி ஊறின மோர் செம டேஸ்டா வாசனையா இருக்கும்.

  எங்க வீட்டுல நான் மட்டும் தான் குழம்பு சாதத்துக்கும் மாவடு தொட்டுக்குவேன். எல்லாரும் என்ன இதுன்னு கேப்பாங்க...அதெல்லாம் யார் கண்டுக்குவாங்க. ஆனா இப்ப ஊறுகாயே தடா போட்டு பல வருஷம் ஆனப்புறமும் மாவடு மட்டும் இருந்துச்சுனா எடுத்து எப்பாவாச்சும் சாப்பிடுவேன் இப்படித் தொட்டுக் கொண்டு.

  எங்க பாட்டி, மாமியார் வீட்டுலயும் சரி குழம்பு சாதம், மோர் சாதத்துக்கு மாம்பழம் வைத்துக் கொண்டும் சாப்பிடுவாங்க. அதைப் பார்த்து எனக்கும் அந்தப் பழக்கம் வந்து பிடிச்சுப் போச்சே. எனக்கு எல்லாமே பிடிச்சுப் போகுதே...என்ன செய்ய. ஹா ஹா ஹா...

  அது போல என் திருநெல்வேலி அத்தை வற்றல் மிளகாயையும் பூண்டையும் உப்பையும் அம்மில போட்டு ஓரு ஓட்டு ஓட்டித் தருவாங்க சில சமயம் அதோடு கறிவேப்பிலையும் போட்டு ஓட்டி தருவாங்க செம செம டேஸ்டா இருக்கும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாவடுவெல்லாம் வத்தக்குழம்பு சாதத்தோடு சரி. மோர் வரைக்கும் பிடிக்காது. மாகாளிக்கிழங்கு எண்பதுகள் வரை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்புறமா அது ஒத்துக்காமல் போச்சு. விட்டுட்டேன். அம்மா எனக்கு மட்டும் கொடுப்பாள். அதைப் போட்டுக்கொண்டு நான் சாப்பிடும்போது கூடச் சாப்பிடும் மாமியார், நாத்தனார்கள் வாந்தி வருவதாகச் சொல்வார்கள். ஆகவே தனியாகவே சாப்பிடுகையில் போட்டுப்பேன்.

   நீக்கு
  2. மோர் சாதத்தை விட குழம்பு சாதத்துக்குதான் மாவடு பொருத்தம்.

   நீக்கு
 27. ஆஹா நான் சொல்லி வந்தது எல்லாமே இருக்கே நீங்களும் சொல்லிருக்கீங்களே....

  அடுத்து அத்தை செய்வது நல்லெண்ணை போட்டு இட்லி தோசைக்கும் தருவாங்கனு சொல்ல வந்ததை நீங்க சொல்லிட்டீங்களே.. // இதை தோசைக்கும் தொட்டுக்கொள்வேன். அதாவது சற்றே நல்லெண்ணெய் விட்டுக் குழைத்துக்கொண்டு இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்வேன்.//

  அதே போல உங்க அம்மா சூடான மோர் சாதத்துல சி வெ கட் செய்து போட்டு ...ஆஹா அதுவும் மேலே சொல்லிட்டேன்...மாம்பழம் உட்பட ...ஹா ஹா ஹா

  //சிலர் மோர் சாதத்துக்கு வெல்லம் - ஆம், வெல்லம் - தொட்டுக்கொள்வார்கள்.//

  இது மட்டும் நான் இதுவரை கேட்டதில்லை. நானும் சாப்பிடதில்லை... ஹப்பா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெல்லம் தொட்டுக்கிறது இல்லை...

   நறுக்கடி..ந்னு கடிச்சிக்கிறது...

   ஆகா!...

   காய்ச்சப்பட்ட கருப்பஞ்சாறு வெல்லப்பாகு என இறுகும் முன் இளகி நிற்கும் பாருங்கள்...

   அதை தோசையுடனும் அந்தக் காலத்தைய இட்லியுடனும் புரட்டிக் கொண்டு சாப்பிட்டால்....

   அந்தப் பசுமையான நாட்கள் எல்லாம் நெஞ்சை வதைக்கின்றன...

   நீக்கு
  2. ஆஹா... வெள்ளமாய் ஜொள்ளு வடிக்கும் இதோ ஒரு வெல்ல ரசிகர்!

   நீக்கு
  3. அடைக்கு வெல்லப்பாகு, வெண்ணெய் போட்டுச் சாப்பிடுவோம். சுகமாக இருக்கும். மோர் சாதத்துக்கு அச்சுவெல்லம் மாமனார் தொட்டுப்பார். அவருக்கு எல்லாம் தித்திப்பாகவே இருக்கணும்.

   நீக்கு
  4. நானும் அடைக்கு வெல்லம் தொட்டுப்பேன்.

   நீக்கு
 28. வர வர எல்லாக் கிழமையுமே திங்கற கிழமையாப்போச்சு! லாக்டவுனில் வேறு எதயும் சிந்திப்பது கஷ்டமாக இருக்கிறதோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி இல்லை... ஒரு உண்மை சொல்லவா?

   நீக்கு
  2. சொல்லி இருக்கணுமே இத்தனை நாழி!

   நீக்கு
  3. புரிஞ்சிருக்கணுமே இத்தனை நாழி!

   நீக்கு
  4. என்னை மாதிரி ம.ம.வுக்கா? ம்ஹூம், வாய்ப்பே இல்லை.

   நீக்கு
  5. அதாவது... பதிவு ஷெட்யூல் செய்யப்பட்டு ஒன்றரை மாதமாவது இருக்கும்!!! ஹி... ஹி...ஹி... சில ரகசியங்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது!

   நீக்கு
 29. மோர் சாதம் பல சமயம் எதுவுமே தொட்டுக் கொள்ளாமலே சாப்பிடுவதும் உண்டு. அதுவும் பிடிக்கும்.

  நானும் காயைத் தனியாகச் சாப்பிடுவது உண்டு. எங்க வீட்டுல இது எல்லோருமே செய்வது. தொட்டுக் கொள்ள என்பதை விட தனியாகச் சாப்பிடுவதுண்டு..

  நீங்கள் எல்லாம் ஆரம்பத்திலிருந்தே சாப்பிடும் காய்களில் இன்றுவரை ரசனை மாறாமல் இருக்கிறீர்களா? //

  மாறவே இல்லை ஸ்ரீராம். பார்க்கப் போனா எங்கள் ஊரில் அப்போது கிடைக்காத காய்கள் சென்னை வந்தபிறகு சாப்பிடக் கிடைக்க அதுவும் பிடித்துப் போக அப்புறம் நானாக பல வட இந்தியப் பரிச்சயத்தில் பல காய்கள் உட்பட, செய்முறை எல்லாம் கற்றுக் கொண்டது என்று தான் அல்லாமல் முன்பு பிடித்து இப்போது பிடிக்காமல் என்று ஆனது இல்லை.

  என்னவோ எனக்கு எல்லா சாப்பாடும்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா... நிறைய ஒரே மாதிரி ரசனைகள்!

   நீக்கு
  2. எனக்கு அன்றிலிருந்து இன்றுவரை மாறாமல் இருப்பது முன்னே சொன்ன மோர்க்குழம்பு+கத்திரிக்காய்க் கூட்டு. பாகற்காய்ப் பிட்லை+மோர்க்குழம்பு, மற்றபடி எத்தனையோ ரசனைகள் மாறி விட்டன. ஒரு காலத்தில் ரசம் சாத்தில் உளுந்து/அரிசி அப்பளம் சுட்டுப் போட்டு அதில் நெய் ஊற்றிக்கொண்டு சாப்பிடுவேன். இப்போதெல்லாம் அப்பளமே என்னிக்காவது தான்.

   நீக்கு
  3. மோர்க்குழம்பு, கத்தரி புளிக் கூட்டு - இரண்டும் சுடச் சுட இருக்கணும். சாதமும் சூடா இருக்கணும். உண்மையிலேயே நல்ல காம்பினேஷன் கீசா மேடம். ஆனால் பாகல்காய் பிட்லை மோர்க்குழம்புடனா?

   நீக்கு
  4. என் பிறந்தகத்தில் பிட்லை எனில் இப்போல்லாம் எல்லோரும் வைக்கிறாப்போல் சாம்பார் மாதிரி நீர்க்கவெல்லாம் வைக்க மாட்டார்கள். இப்போதும் பிட்லை எனில் அது கெட்டியாகவே நிறையத் தான்களுடன் இருக்கும். ஆகவே பிசைந்து சாப்பிட மோர்க்குழம்பு இல்லாமல் பிட்லை பண்ணினதே இல்லை. எப்போவானும் இங்கேயும் நான் பண்ணுவேன். அன்னிக்குச் சமையல் அவருக்கு ருசிக்காது! :))) எனக்கு சொர்க்கம்.

   நீக்கு
 30. //சிறுபிள்ளை முதல் இன்றுவரை மாறாத ரசனையுடன் சாப்பிடுவது எது? பெரும்பாலும் உருளைக்கிழங்கு என்றுதான் பதில் வரும் என்று நினைக்கிறேன்.// ஒரே ஒரு பொருள் அது நேந்திரங்காய் சிப்ஸ் :)
  ஹாஹாஆ அப்புறம்  உருளை ரோஸ்ட் ,சேம்பு ரோஸ்ட் ,சேனை ரோஸ்ட் இதெல்லாம் சாம்பார் சாதத்துடன் சாப்பிட பிடிக்கும் தயிருடன் உருளை சிப்ஸ் ,மிக்ஸர் ,,மோர்சாதம் மாவடு மாங்காய் தொக்கு ,மோர்க்குழம்பு கலாக்காய்ஊறுகாய் ,ரசம் சாதம் தயிர்சாதம் இவற்றுடன் நேந்திரங்காய் சிப்ஸ் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏஞ்சல்.்். நிறைய விஷயங்கள் டேஸ்ட் மா(ற்)றாமல் சாப்பிடறீங்க போல... எனக்கும் நேந்திரங்காய் சிப்ஸ் ரொம்பப் பிடிக்கும் - ஆனா தனியா சாப்பிட!

   நீக்கு
 31. கமல்ஹாசன் அடிக்கடி என் பார்வையில் வரார் :)சந்திரபாபு அவரைப்பற்றி ஆச்சி மனோரமாக்கு  எதேச்சையாக அமைந்தது நிறைய அனுபவம் இருக்கு எனக்கும் .ஷார்ட் ஹேண்ட் விவரம் ..வெயிட்டிங் :) கீதாக்கா வந்து சொல்லுங்க 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா... ஹா... ஹா... நேற்று கமல. பற்றி அதிகம் கேள்வி கேட்கறீங்கன்னு யாரோ சொன்னாங்க போலிருக்கே...! நீங்க ஷார்ட் ஹேன்ட் பணிச்சதில்லையா ஏஞ்சல்?!

   நீக்கு
 32. யாரையாவது விருந்திற்கு அழைத்தால், அவர்கள் ரசனை தெரியாதே,நாம் சமைத்திருப்பது அவர்களுக்கு பிடிக்குமோ? பிடிக்காதோ?என்று கவலையாக இருக்கும். ஸ்ரீராமை அழைத்தால் அந்த கவலைப்பட வேண்டாம், எனக்கு பிடித்தவைகளை செய்து விடலாம். சாம்பர் சாதத்திற்கு வடுமாங்காய், மாகாளிக் கிழங்கு, அதே அதே! இந்த வருடம் சிவாஜி நகர் மார்க்கெட் சென்று மாவடு வாங்க நானும் கீதாவும் திட்டம் போட்டோம். இந்த பாழாய்ப்போன கொரோனா வந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டது. இந்த வருடம் எனக்கு மாகாளிக்கிழங்கும் கிடைக்கவில்லை:((  பொரித்த அப்பளத்தை விட சுட்ட அப்பளத்திற்குத்தான் என் ஒட்டு. எங்கள் வீட்டில் எங்கள் அப்பா தொடங்கி எல்லோருக்கும் மோர் சாதத்திற்கு தொட்டுக்க கொள்ள எதுவும் தேவையில்லை. என் கணவர் சாம்பார், குழம்பு என்று எது இருக்கிறதோ அதை  தொட்டுக் கொண்டு விடுவார். என் மகனுக்கு மிகச்சிறிய வயதிலிருந்தே ஊறுகாய் வேண்டும். அதுவும் நல்ல காரமாய். அவனுக்காக போடும் ஊறுகாய்களை அவ்வப்பொழுது  தொட்டுக்கொள்வேன்.  மிகவும் பிடித்தது நார்த்தங்காய் ஊறுகாய். சிறு வயதில் தேங்காய் போட்ட பொரியல்கள் மோர் சாதத்திற்கு தொட்டுக்க கொண்டிருக்கிறேன். மோர் புளிப்பாக இருந்தால் மிக்ஸரோடு சாப்பிட பிடிக்கும். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... நான் எல்லாத்தையும் புட்டுப்புட்டு வைச்சிட்டேன்னு சொல்லப் போறீங்கன்னு நினைச்சேன் பானு அக்கா...! உங்க டேஸ்டோட ஒத்துப் போகுதா? கடைல வாங்கற ஊறுகாய்கள்ல காரத்தை விட உப்புதான் அதிகம் இருக்கும். வீட்டுலயே கார ஊறுகா போட்டு நாளாச்சு... போடணும்!

   நீக்கு
  2. இங்கே நான் போட்டிருந்த/போட்டிருக்கும் மாவடுவுக்கும், மாங்காய் ஊறுகாய்க்கும் (ஆவக்காய்க்குத் தங்கை) ஏகப்பட்ட ரசிகர்கள். மைத்துனர் சப்பாத்திக்குத் தொட்டுக்கத் தனியாக அந்த ஊறுகாய் எடுத்துக் கொண்டு போனார். மாவடுவுக்கு இப்போ நம்மவர் மட்டுமே ரசிகர். நான் எப்போவானும் வத்தக்குழம்புக்குத் தொட்டுப்பேன்.

   நீக்கு
  3. நாங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைச்சால், முதலில் அவர்களிடம் கேட்டு விடுவோம், என்ன என்ன பிடிக்கும், எதுவெல்லாம் பிடிக்காது என.. அப்படித்தான் எப்பவும் .. இனிமேல் அப்படிக் கேட்டுச் சமையுங்கோ பானு அக்கா, அதில தப்பேதும் இல்லை..

   நீக்கு
  4. நாங்களும் கேட்டுடுவோம் பிஞ்சு. ஏனெனில் சிலர் கொத்தவரை சாப்பிட மாட்டார்கள். பலர் புடலை சாப்பிடுவதில்லை. ஒரு தரம் ஓர் வைதிக சாப்பாட்டின் போது பாகற்காய்ப் போட்டுப் பிட்லை செய்தால் 2 வைதிகர்கள் அதைத் தொடவே இல்லை. நல்லவேளையா மோர்க்குழம்பு இருந்ததால் சரியாப் போச்சு! ஆகவே கேட்டுவிட்டுத் தான் செய்வோம்.

   நீக்கு
  5. ஆமாம். கேட்டு விடுவதே நல்லது. இல்லாவிட்டால் தர்மசங்கடமாகி விடும்.

   நீக்கு
 33. தயிர் சாதத்திற்கு குழம்புகள் வத்தக்குழம்பு,சாம்பார் , ஊறுகாய்கள் எலுமிச்சை, மாகாளி கிழங்கு ஊருகாய் தவிர மற்ற ஊருகாய்கள் பிடிக்கும்.

  பச்சைமிள்காய் பூண்டு வைத்து கட்டியாக அரைத்த துவையலில் ந்ல்லெண்ணெய் விட்டு பதோசைக்கு தொட்டுக் கொள்ள பிடிக்கும். தயிர் சாதத்திற்கு சாப்பிட்டது இல்லை.

  மாம்பழ சீஸனில் மாம்பழம் உண்டு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோமதி அக்கா... பூண்டுடன் பச்சை மிளகாய்..? நாங்கள் பட்டை மிளகாந்தான்!

   நீக்கு
  2. எங்க வீட்டில் இந்தப் பூண்டு+வற்றல் அல்லது பச்சை மிளகாய் போட்டுத் துவையலோ சட்னியோ அரைத்ததில்லை. பூண்டுவிற்குத் தடா! ஆனால் மதுரையில் ஓர் இட்லி மாமா இந்த மாதிரித் துவையல் செய்து அதைக் கொஞ்சம் காய்ந்தாற்போல் வைத்துக் கொண்டு நல்லெண்ணெய் விட்டுக் குழைத்து இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொடுப்பார். ஒரே ஒரு முறை ஆசைக்குச் சாப்பிட்டேன். பின்னர் அது ஒத்துக்கொள்ளவில்லை. என் தம்பி எல்லாம் சாப்பிடுவார். அந்த மாமா மதுரையில் கருகப்பிலைக்காரத் தெருவில் ஒரு பெரிய ஸ்டோரில் இருந்தார். அப்போல்லாம் ஓர் இட்லி ஐந்து பைசா. எனக்குத் தெரிந்து 2 இட்லி 5 பைசாவாக இருந்து பின்னர் விலை ஏறியது. எனக்குக் கல்யாணம் ஆனப்போ ஒரு இட்லி நாலணாவுக்கு விற்றார்.

   நீக்கு
  3. கீதா அக்கா..்். சட்டுனு சுருக்கமா இஞ்சித் துவையல் எப்படின்னு சொல்லுங்க...!

   நீக்கு
  4. மி.வத்தல்+இஞ்சி வறுத்துப் புளியோடு வைத்து அரைத்துக் கொண்டு நல்லெண்ணெயில் கடுகு, உபருப்பு தாளித்து அதில் அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறி எடுக்க வேண்டும். தேவையானால் வெல்லம் சேர்க்கலாம். நான் சேர்ப்பதில்லை.

   நீக்கு
  5. நன்றி. நிறைய இஞ்சி இருக்கிறது வீட்டில்.. அதுதான். செய்து ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கலாமோ...

   நீக்கு
  6. yessu!எங்க மாப்பிள்ளை இந்த இஞ்சித் தொக்கை ப்ரெட்டில் தடவிக்கொண்டு சான்ட்விச் மாதிரிச் சாப்பிடுவார்.

   நீக்கு
 34. வயிறு சரியில்லை என்றால் அம்மா தயிர் சாதம் சின்னவெங்காயம் சின்னதாக அரிந்தது, சுண்டைக்காய் வற்றல் தருவார்கள் அதுவும் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்கள் சுண்டை வற்றல் வறுத்மு சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடுவோம்!

   நீக்கு
  2. நான் இரண்டுமே சாப்பிடுவேன். ரெண்டும்! போத்!

   நீக்கு
  3. கூட மணத்தக்காளி வத்தலும் போட்டும்...

   நீக்கு
  4. குழம்புக்கே அநேகமா சுண்டை+மணத்தக்காளி இரண்டும் வறுத்துத் தான்!

   நீக்கு
  5. நாங்களும் சுண்டை வற்றல் வறுத்து பொடி செய்து சாதத்திற்கு போட்டு சாப்பிடுவோம். (வயிறு சரியில்லாசமயம் அப்புறம் குழந்தை பெற்ற வீட்டில் பத்திய சாப்பாடுக்கு சுண்டைவற்றல் பொடி சாதம் உண்டு.)

   நீக்கு
  6. அதான் அங்காயப் பொடி என்போம்.

   நீக்கு
 35. கிரஹபலமேமி பாடலை அவர் பாட மாட்டார் என்றும், காசு வாங்கி கொண்டு செய்யும் கச்சரிகளில் 'நிதிசால சுகமா?' பாடலை பாட மாட்டார் என்பதை அறியும் பொழுது அவர் மீது இருக்கும் மரியாதை அதிகரிக்கிறது.  

  பதிலளிநீக்கு
 36. ஆஅவ்வ்வ் எல்லோரும் வீட்டுக்குள் இருந்து சாபிடும் ஆவலைத் தூண்டவோ தயிர்ச்சாதப் படங்கள்.. நல்லவேளை முதல்ப்படம் ஸ்ரீராம் நேற்றுச் சாப்பிட்ட பிளேட் என நினைச்சு விட்டேன்..

  எனக்கு தயிர்ச்சாதம் நிறைய தாளிச்சு செய்தால், சைட் டிஸ் எதுவும் தேவையில்லை சும்மாவே சாப்பிடலாம்.. ஆனா நான் சாப்பிட்டு 7,8 வருடங்களாகுதென நினைக்கிறேன், எப்போவோ வீட்டில் செய்து சாப்பிட்டதுக்கு பின்பு செய்யவில்லை... இங்கு சாத வகைகள் பிடிப்பதில்லை என்னைத் தவிர ஆருக்கும், ஆனா கோயில் போனால் கிடைப்பதெல்லாம் சாப்பிடுவார்கள்.

  உங்கள் பாட்டிபோல, நாங்கள் புட்டுக்கு மாம்பழம் சேர்த்துச் சாப்பிடுவோம் சின்ன வயதில், எங்கள் வீட்டிலேயே நல்ல கற்கண்டு சுவை மாம்பழம் நிறையக் காய்க்கும்.. அப்போ எங்களிடம் இருந்த பப்பியாரின் பெயர் “டிக்கி”.. அவரும் மாம்பழமும் புட்டும் சூப்பராக சாப்பிடுவார்ர்.. அதனால நாங்கள் அவருக்குக் குடுத்த பெயர் “மாம்பழ டிக்கி” ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட... நாலு பலரும் ரசிப்பாரா? ஸூப்பர் அதிரா... தயிர் சாதம் தாளிப்பு நான் குறைந்த அளவே சாப்பிடுவேன்!

   நீக்கு
  2. குஜராத்தில் மாம்பழப் பருவத்தில் பூரியோடு தொட்டுக்கொள்ள ஆம்ரஸ் எனக் கொடுப்பார்கள். மாம்பழச் சாறில் சாட் மசாலா, கொஞ்சம் போல் உப்பு, ஜீரகப் பொடி, சர்க்கரை போட்டுக் கலந்து தருவார்கள். சுவையாக இருக்கும். நான் பூரியைத் தனியாக ஊறுகாயுடன் சாப்பிட்டுவிட்டு இதைத் தனியாகச் சாப்பிடுவேன். மாங்கோ லஸ்ஸியும் சுவையாக இருக்கும்.

   நீக்கு
 37. //ஆரம்ப காலங்களிலிருந்தே எனக்குப் பொரித்த அப்பளம் மேல் பெரிய விருப்பம் இதுந்ததில்லை. திருமணங்களில், விருந்துகளில் அதைப் பரிமாற்ற வரும்போது கைநீட்டித்த தடுத்து விடுவேன்.. //

  ஹா ஹா ஹா என் கணவருக்கு சைவ உணவெனில் எத்தனை கட்டு அப்பளம் எனினும் சாப்பிடுவார்ர்.... சின்னவரும் அப்படியே, ஆனா எனக்கும் தேவைப்படுவதில்லை, என்னைப்போல மூத்தவரும.
  அப்பளம் எனில் சும்மா பொழுது போக்குக்கு கடிப்பேன், மற்றும்படி உணவுக்கு தேவைப்படுவதில்லை.

  //நீங்கள் எல்லாம் ஆரம்பத்திலிருந்தே சாப்பிடும் காய்களில் இன்றுவரை ரசனை மாறாமல் இருக்கிறீர்களா? //
  அப்படித்தான் இருக்கிறேன் என நினைக்கிறேன், ஆனா புதுசுகளும் சேர்ந்திருக்கு பிடிச்ச உணவுகளில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..்். ஹா... ஹா..்். நீங்கள்
   உங்களைப் பற்றியே இன்னும் சரியாக அவதானிக்கவில்லை என்று நினைக்கிறேன்!

   நீக்கு
 38. //சிறுபிள்ளை முதல் இன்றுவரை மாறாத ரசனையுடன் சாப்பிடுவது எது?//

  எனக்கு சைவத்தில், அப்படியே பார்த்ததுமே அள்ளி சாப்பிடும் ஆசை வருவது..:-
  பயற்றங்காய்
  மரவள்ளிக்கிழங்கு
  வாழைப்பொத்தி- கறி, சுண்டல்
  குறிஞ்சா இலைச் சுண்டல்[எங்கு பார்த்தாலும், விலை பார்க்காமல் வாங்குவோம்]
  மைசூர் பருப்புக் கறி.

  ஆனா என்ன கொடுமை பாருங்கோ... மைசூர்ப்பருப்பு தவிர ஏனையவை இங்கு கிடைப்பதிலை, அதனால கனடாவிலிருந்து அனுப்பி விடுவினம் முன்பு, ஆனா இப்போ தமிழ்க் கடையில் கிடைக்கும், அது அடிக்கடி போக முடியாது கொஞ்சம் தூரம், போனால் வாங்கி வருவோம், இருப்பினும் பயத்தங்காய் குறிஞ்சா கிடைப்பதில்லை இங்கு எங்கள் தமிழ்க் கடையிலும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... மைசூர் பருப்புக் கறி என்றால்?

   நீக்கு
  2. அதுதான் ஸ்ரீராம் இந்தியாவில் மைசூரில் இருந்துவரும் பருப்பு.. மஞ்சளாக இருக்குமே... மைசூர் டால் எனத்தான் சொல்வோம், யெல்லோ ஸ்பிளிட் டால் எனவும் சொல்லுவார்கள்.

   நீக்கு
  3. மசூர் தால். கொஞ்சம் சிவந்த நிறத்தில் துவரம்பருப்பை விடச் சின்னதாக இருக்கும்.

   நீக்கு
  4. மஸூர் தால்-ஐத்தான் மைசூர் என்கிறார் பிஞ்சு! மஸூர் பிங்க்-காக பாசிப்பருப்புப்போலிருக்க்கும். (நார்த் இண்டியாவில் ஸ்டோர்களில் நிறையக் கிடைக்கும்). ஒருவேளை குழப்பம் அதிகமாகி மஞ்சள் என்கிறாரோ? அல்லது துவரம்பருப்பைத்தான் இப்படி மைசூர், பெங்களூர் என்கிறாரா? என்னவோ சொல்லி உள்ளே தள்ளட்டும்!

   நீக்கு
  5. Masoor thaan pinju mozhila mysore aagi ☺️☺️☺️☺️☺️🤠🤠🤠🤠🤠

   நீக்கு
 39. பாலுமகேந்திராவைப்பற்றி கமல் சொன்னது , மனோரமா சந்திரபாபு பற்றி சொன்னது எல்லாம் படித்தேன்.
  பொக்கிஷபகிர்வில் கல்கி தீபாவளி ம்லர் 1962 என்று இருக்கே!
  சுருக்கெழுத்து விவரம் கீதாசாம்பசிவம் அவர்கள் சொல்வதை படிக்க ஆவலாக இருக்கிறேன்.


  பதிலளிநீக்கு
 40. //சிறுபிள்ளை முதல் இன்றுவரை மாறாத ரசனையுடன் சாப்பிடுவது எது?//

  எனக்கு இவரின் முகம்கூட அவர் மறையும் காலங்களில்தான் பரிட்சயமாக தெரிஞ்சது, ஆனா சின்ன வயதிலிருந்தே அவரைப் பிடிக்கும், அவர் பற்றிய செய்திகள் படிச்சேன்.. அத்துடன்... “நானும் ஷோபாவும்” எனும் ஒரு தொடர்[அவர் எழுதிய சொந்தக் கதை] முன்பு வெளிவந்து, அது ஒரு புத்தமாக சேர்த்து எனக்கு யாரோ தந்து, படிக்க கிடைச்சது... அது கவலையாக இருந்தது, அதனாலோ என்னவோ அவரது பெயர் மனதில் நிலைத்திருந்தது...

  காலமாகிய பின்புதான் பல யூ ரியூப் வீடியோக்கள் பார்த்தேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாலு மகேந்திரா பற்றி நல்ல அபிப்ராயங்களும் உண்டு, வேறு அபிப்ராயங்களும் உண்டு!

   நீக்கு
  2. அவரது சினிமாவைப் பார்ப்பது நல்லது!

   நீக்கு
 41. எனக்குத் தெரிஞ்சு, ஒரு புத்தகம் வாங்கும்போது என்ன விலை இருந்ததென நினைவில்லை.

  நம்ப மாட்டீங்கள், நேற்று “பூஸ் ரேடியோவில்” சந்திரபாபு அவர்கள் பற்றிச் சொன்னார்களே.. இன்று நீங்கள் போட்டிருக்கிறீங்க.. அவரின் ஏதும் தினமோ?..

  ரேடியோவில் பல கதைகள் சொன்னார்கள், அவரது வாழ்க்கை முழுவதும் சோகமும் கண்ணீரும்தானாம், கவலையுடனேயே காலமாகிவிட்டார். சின்ன வயதில் சாப்பாட்டுக்கே வழியில்லாத வறுமையாம், பின்னர் சினிமாவில் வந்து ஒரு படம் தயாரிச்சு அதுவும் படு தோல்வியாகி, பின்பு சாப்பிடவே எதுவுமில்லாமல், நண்பர்கள்கூட உதவாமல், கறண்டும் இல்லாமல், 3 நாட்கள் இருட்டு வீட்டில் பட்டினியாக இருந்திருக்கிறாராம்.. இப்படி அவரின் கொஞ்சக் கதைகள் சொன்னார்கள்.

  இப்போ மனோரம்மா
  சொல்லியிருப்பதையும் படிச்சு தெரிஞ்சு கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை அதிரா.. இந்தப் பக்கம் முன்னரே தயாரானது. கவனமிருக்கிறதா? என் கணினி ரிப்பேர்!

   நீக்கு
  2. கணினியால நீங்கள் இன்று வரமாட்டீங்கள், நிறைய வம்புக்கு இழுத்து சேஷ்டை பண்ணி:), உங்களை அவதிப்பட வைக்கலாம் என நினைச்சேன் ஆனா வந்திட்டீங்க ஹா ஹா ஹா..

   ஏன் ஸ்ரீராம், மொபைலில் கொமெண்ட்ஸ் எழுதலாம்தானே? போஸ்ட் எழுதுவதுதான் கஸ்டம், ஆனா கமலாக்கா அதிலதானே எழுதுறேன் என்றா.. தனிமரம் நேசனும் அப்படித்தான் மொபைல் மூலம் எழுதுவதாகச் சொன்னார்... என்னாலயும் போஸ்ட் எழுத முடியாது-பிடிப்பதிலை.

   நீக்கு
  3. கமெண்ட்ஸ் மொபைல் வழியாதானே போட்டுக் கொண்டிருக்கிறேன் அதிரா... போஸ்ட் எல்லாம் கஷ்டம்.

   நீக்கு
 42. //கீழ்க்கண்ட புதிருக்கு கீதா அக்கா விடை சொல்லக் கூடும். ஏனென்றால் அந்த பைண்டிங் புத்தகத்தில் 41 ஆம் பக்கத்தை எடுத்து பைண்ட் பண்ணவில்லை!//

  ஹா ஹா ஹா நானும் இடையில கொஞ்சக் காலம் விடுமுறையில், விழுந்து விழுந்து சோட்காண்ட் படிச்சு பாஸ் பண்ணியும் விட்டேன்- லெவல் வன்- எக்ஸாம், ஆனா இப்போ ஒரு எழுத்துக்க்கூட நினைவு வரவில்லையே கர்ர்ர்ர்:)). அது விரும்பிப் படிக்கவில்லை, அம்மாவின் ஆக்கினையால படிச்சேன்:)) அதனால மனதில் நிற்கவிலையோ என்னமோ:)) ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் நான்கு கிளாஸ் போயிருக்கிறேன். அப்புறம் சண்டையாகி போகவில்லை!

   நீக்கு
 43. ஆஆ அவ்ளோதானா முடிஞ்சிடுச்சா?:)) ஹா ஹா ஹா ஒவ்வொன்றாக இழுத்ஹூஊஊஊ இழுத்தூஊஊஊஊ படிச்சுப் பதில் போடும்போது, முடிவுக்கு வந்துவிட்டதைக் கவனிக்கவில்லை ஹா ஹா ஹா கவிதயும்:) அனுக்காவும் எங்கே ஸ்ரீராம்???:)

  பதிலளிநீக்கு
 44. அனுஷ் நம்ம ஏரியாவில்(தான்) இருக்காங்க அதிரா..்்!

  பதிலளிநீக்கு
 45. ஆஆஆஆ லொக்டவுன் எண்டதும் உங்கட ஏரியாவுக்கு வந்திட்டாவோ:)... ஹையோ வெளில போயிடாதீங்க ஶ்ரீராம்:)..
  ��‍♀️��‍♀️��‍♀️��‍♀️��‍♀️��‍♀️��‍♀️��‍♀️��‍♀️

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்ர்ர்....நம்ம ஏரியா ப்ளாக்.. பானு அக்கா கதை!

   நீக்கு
  2. ஓ... நம்ம ஏரியா இப்பவும் ஓடிக்கொண்டிருக்கோ ஹா ஹா ஹா சத்தியமாக என்னிடம் நோட்டிபிகேசன் வைக்காததாலும், ஒழுங்கா எங்கும் போக முடியாமையாலும்.. தெரியவில்லை ஸ்ரீராம்... இப்போ வீட்டில் நின்றாலும் நேரம் போதாதுபோல நல்ல பொழுது போக்காக இருக்குது..

   நீக்கு
  3. இப்போ பாருங்களேன். பானு அக்கா கதை.

   நீக்கு
 46. இந்த கோடையில்[சமரில்] வீட்டில் நிற்போம், அப்போ தமிழ்க்கடை போய் மிளகார், மாங்காய் வாங்கி வந்து ஊறுகாய் போடோணும் என நினைச்சிருந்தேன்.. விதி வலியது.. அங்கு போக முடியவில்லையே இப்போ, ஆனா நல்ல வெயில் ஆரம்பித்து விட்டது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதேதான்.. கடைகளிலிருந்து எதுவும் வாங்க முடியவில்லை!

   நீக்கு
  2. அந்த கதையில் ஒரு தவறு இருக்கிறது.அதை கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது என்று அறிவிக்கலாமா ஸ்ரீராம்?

   நீக்கு
  3. ஹி... ஹி... ஹி... நானே முதலில் கண்டு பிடிக்கணும் போல...!

   நீக்கு
 47. "நிதி பெரிதா, ராமா உனது சந்நிதி பெரிதா' என்று பொருள்படும்படியான தியாகய்யரின் "நிதி சால சுகமா' என்கிற சாகித்யத்தை அவர் பாடுவதில்லை. காரணம், பணம் வாங்கிக் கொண்டு கச்சேரியில் பாடுபவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக இந்த சாகித்யத்தை பாடக்கூடாது என்பதுதானாம். அதேநேரத்தில் வீட்டில் பாடும்போது இந்த சாகித்யத்தை நெகிழ்ந்து மனமுருகி பாடுவாராம்.//

  வாவ்!! வித்தியாசமான ஆனால் நல்ல சிந்தனை! மணி அய்யர் பற்றிய ஸ்வாரஸ்யமான தகவல்கள்.

  கமல் பேச்சு லிங்க் போக முடியலை வரமாட்டேங்குது எனக்கு. இங்கு நீங்கள் கொடுத்ததை மட்டும் வாசித்தேன். ஸ்வாரஸ்யமான தகவல்தான் இதுவும். கோகிலா தான் பாலுவின் இயக்கத்தில் கமல் நடித்த முதல் படமோ?

  கீதா

  பதிலளிநீக்கு
 48. மனோரமா சந்திரபாபு பற்றி சொல்லியிருப்பதும் தகவல். ஸ்வாரஸ்யம். இது போன்ற தகவல்கள் வாசிப்பதில் ஒரு சிறு சந்தோஷமும் ஸ்வாரஸியமும் கிடைக்கிறது. சந்திரபாபு நல்ல குரல் வளம்...அவர் பாடிய பாடல்கள் பிடிக்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆயிரம் கமேடியன்கள் வரலாம். ஆனால் ஒரே ஒரு சந்திரபாபுதான். ஜீனியஸ். பாடி நடிக்கத் தெரிந்த நடிகர், அதிலும் ஒரு தனித்துவம்.
   ‘ஒன்னுமே தெரியலே.. ஒலகத்திலே.. என்னமோ நடக்குது, மர்மமாய் இருக்குது..’ நினைவுக்கு வருகிறது.
   அவரைப்பற்றி ஜெயகாந்தன் ‘ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ நூலில் கொஞ்சம் சொல்லியிருக்கிறார்.

   நீக்கு
  2. உண்மை. ஆனால் எனக்கு நாகேஷையும் ரொம்பப் பிடிக்கும்.

   ஒரு தகவல்.்்்். காலச்சக்கரம் நரசிம்மா காதலிக்க நேரமில்லை படெடுத்த கதை என்று ஒரு இருபது எபிசோட் பேஸ்புக்கில் எழுதி அது ஸூப்பர் பிரபலம் ஆகிவிட்டது. செம சுவாரஸ்யம்.

   நீக்கு
 49. சிறிய வய்தில்டிருச்சியில் இருந்தோம் வீஇடு வேலையாள் ஒரு தூக்கு நிறைய சோற்றை வெறும் சோறு சில பச்சைமிளகாயோடு சாப்பிடுவது கண்டு ஆச்சரியப்பட்டதுண்டுஎன்க்கு சாப்பிடும்போது செய்ய தெரிந்த ஒரே பயிற்சி தலையை இடமும் வலமுமாக ஆட்டுவது தான் னாட் எ க்ரேட் ஈட்டெர் சந்திரபாபு அந்த நாட்களிலேயே லட்ச ரூபாய் சம்பளம்வாங்குவாராம் ஹாய் நானு மொரு சினிமா செய்தி சொல்லி இருக்கேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கே பி எஸ் பற்றி அப்பனி ணொல்வார்கள். சந்திரபாபுவுமா என்று தெரியவில்லை. நன்றி ஜி எம் பி ஸார்.

   நீக்கு
  2. "அப்படி சொல்வார்கள்" என்று படிக்கவும். மொபைல் டைப்பிங் கஷ்டமா இருக்கு.. கணினியிலேயே நான் ரொம்ப வள்ளல்..!

   நீக்கு
 50. கல்லூரிக் காலத்தில் சில மாதங்கள் சுருக்கெழுத்து வகுப்பிற்குச் சென்றேன்
  இப்பொழுது எல்லாம் மறந்துபோய்விட்டது

  பதிலளிநீக்கு
 51. டி.ஆர்.மஹாலிங்கம் கூட அந்த காலத்திலேயே லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார் என்பார்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தவுடனேயே அவர் ஊதியத்தை லட்ச ரூபாயாக உயர்த்தி விட்டாராம் அவர் அம்மா. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டி ஆர் மகாலிங்கம் கூடவா? இதுவும் தகவல்தான் எனக்கு.

   நீக்கு
 52. சந்திரபாபு ஏன் வாழ்க்கையில் கஷ்டப்பட்டார், அவரை ஏமாற்றியவர் யார் என்பதெல்லாம் சொன்னால்! :(

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!